Saturday, July 28, 2007

அன்னை - அவளே இசை வெள்ளத்தின் ஆதார ஊற்று

அன்னையின்றி யாரும் அவதரிப்பாரோ? அகிலம் முழுமைக்கும் அன்னையாம், அனைவருக்கும் அன்பெனும் அருளினால் காத்தருளும் உலகத்தாயின்றி யாரும் தரணியில் தவழ்வரோ? அவள் குழந்தைகள் அவளைப் பற்றி நினைக்கா விட்டாலும், அவர்களிடம் அவள் அன்பு என்றென்றும் குறைவதில்லை.

அழும் பிள்ளையாம் திருஞான சம்பந்தனக்கு ஒடிவந்து பாலூட்டிய அன்னை அவள்! இசையால் என் பிள்ளை அம்புலி புனையும் பெருமானைப் பாடித் துதிப்பான் என அன்னை அறிவாளன்றோ! - மதுரையில் மீனாட்சியாய், காஞ்சியில் காமாட்சியாய், காசியில் விசாலாட்சியாய் - அவள் தானே இட பாகத்தே வீற்றிருக்கும் உமையன்னை!

உயர் ஞானம் வேண்டி நிற்பார்க்கு புகலிடம் ஏது? வெள்ளைத் தாமரை மீதினில் வீற்றிருக்கும் , வேத ஞானம் யாவும் வித்தாய் விளைந்திருக்கும் கலையன்னை - ஞான சரஸ்வதி அன்றோ? இசை மீட்டிடும் அவள் கையில் தான் ஆதார ஸ்ருதி இழைத்திடும் வீணையன்றோ! - அவள் தானே இசை ஞானம் அருளும் வீணா வாணி, நாத ரூபிணீ!

மங்களம் தந்திடும் மலர் மகள், மாதவன் மார்பினில் வாசம் செய்யும் நில மகள் - அவள் அருள் இருந்தால் வறுமை ஏது, வாட்டிடும் பிணிகள் ஏது? துயர் விரட்டிட, தூக்கிய அவள் கைகளைத் நாம் தொழுதிட, வந்து சேராதோ வளம் யாவும்! - அவள்தானே திருவரங்கத்திலேயும் (நமக்கு) பக்கத்திலேயே இருக்கும் ஸ்ரீதேவி!

முப்பெரும் தேவியர் புகழினை இசையால் பாடிப் புகழாதவர் உண்டா? இசைப்பாடல்களிலும் அன்னையர் துதி பாடி ஆராதனை செய்யும் பாடல்கள் இல்லாமல் போகுமா? அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிட்டு பெறுவோமே இசை இன்பம்!

மலைமகள்:
ஜனனி ஜனனி
திரைப்படம் : தாய் மூகாம்பிகை
பாடகர் : இளையராஜா


கலைமகள்:
கை வீணையை
திரைப் படம் : வியட்நாம் காலணி
பாடகர் : பாம்பே ஜெயஸ்ரீ

Kai veenaiyai.mp3


அலைமகள்:
பாடல் : பாக்யதா ஸ்ரீ
பாடகர் : எம்.எல்.வசந்தகுமாரி
Bagyatha Sri.mp3


ஒரே பாட்டில் முப்பெரும் அன்னையரை பாரதி பாடுகிறான் இவ்வாறாக:

மாதா பராசக்தி வையமெலாம் நீ நிறைந்தாய் !
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே?
ஏதாயினும் வழி நீ சொல்வாய், எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே.

கலையன்னை:

வாணிகலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெல்லாங் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே !

அலையன்னை:

பொன்னரசி நாரணனார் தேவி, புகழரசி
மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்
அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி
தன்னிருபொற் றாளே சரண்புகுந்து வாழ்வோமே!

மலையன்னை:

மலையிலே தான்பிறந்தாள். சங்கரனை மாலையிட்டாள்
உலையிலே யூதி உலகக் கனல்வளர்ப்பாள்
நிலையி லுயர்த்திடுவாள், நேரே அவள்பாதம்
தலையிலே தாங்கி தரணிமிசை வாழ்வோமே!

பாடலை எஸ்.சௌம்யா பாடிட இங்கு கேட்கலாம்:

Maatha Parasakthi-...

Thursday, July 19, 2007

சினிமா காரம் காபி - பாகம் 5

தற்போது இருக்கும் இளம் இசை அமைப்பாளர்களிலேயே பெரும் மதிப்பும் நம்பிக்கையும் பெற்றிருக்கும் இசை அமைப்பாளர் யுவன் சங்கர ராஜா். தன் தந்தையின் நிழலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டு தனக்கென்று ஒரு தனி பெயரை நிலை நிறுத்திக்கொண்டு வருகிறார்.
அவரின் ஆரம்பகால படங்களான துள்ளுவதோ இளமை,நந்தா,தீனா,மௌனம் பேசியதே போன்ற படங்களிலேயே அவர் ஒரு திறமையான இசையமைப்பாளர் என்று எனக்கு தோன்றியது. சமீப காலம் வரை அவர் கூட காபி அடிப்பார் என்று எனக்கு தகவல் இல்லாமல் தான் இருந்தது.

இந்த தொடருக்காக சிறிது இணையத்தில் நோண்டி பார்த்த போது தான் இவரும் ஆங்காங்கே சில அட்டை காபிகளை செய்து வருகிறார் என்று தெரிந்து கொண்டேன். அதுவும் அவரின் தந்தையின் இசையமைப்பிலிருந்து அவர் புனைந்த சில இசை அமைப்புகள் பற்றி ஒரு தனி பட்டியலே உண்டு. குறிப்பாக 7G ரெயின்போ காலனியில் வரும் தீம் ம்யூசிக் ஜானி படத்தில் இறுதி காட்சியில் வரும் பிண்ணனி இசையை ஒத்து இருப்பதை பார்க்கலாம். இன்னொரு உதாரணமாக தாஸ் படத்தில் வரும் "வா வா வா,வராங்காட்டி போ போ போ" எனும் பாடல். இந்த பாடல் கேட்கும் போதே இது எங்கேயோ கேட்டாற்போல் உள்ளதே என்று நினைத்திருந்தேன்.பிறகு தான் தெரிந்தது இது "நீங்கள் கேட்டவை" படத்தில் வரும் அடியே!! மனம் நில்லுனா நிக்காதடி"" பாட்டின் காபி என்று. பாடலின் சில பகுதிகளை உன்னிப்பாக கவனித்தால் எப்படி அவை அச்சு அசலாக ஒத்து போகின்றது என்று பார்க்கலாம்.
ஆனால் நாம் இன்றைக்கு இதை பற்றி பார்க்கப்போகும் உதாரணம் "பாலா" படத்தில் இடம் பெறும் "தீண்டித்தீண்டித்தீயை மூட்டுகிறாயே" எனும் பாடல். இந்த பாடல் இவரின் தந்தை "மஹாதேவ்' எனும் இந்திப்படத்தில் இசையமைத்த "ரிம்ஜிம் ரிம்ஜிம்"(1942 லவ் ஸ்டோரி எனும் படத்தில் வரும் ரிம்ஜிம் பாட்டோடு இதை குழப்பிக்கொள்ள வேண்டாம்) எனும் பாடலின் காபி . நீங்களே சற்று கேட்டு பாருங்களேன்.

பாலா - தீண்டித்தீண்டித்தீயை மூட்டுகிறாயே




மஹாதேவ் - ரிம்ஜிம்





ஹ்ம்ம்ம்!!
இப்போ கொஞ்சம் வெளிநாட்டு காபியை பாக்கலாம். "காதல் கொண்டேன்" படம் செல்வராகவன்,தனுஷ்,சோனியா அகர்வால் என்று பல பேருக்கு தமிழ் திரையுலகிற்கு முகவரி அமைத்து கொடுத்த படம். நான் யுவன் சங்கரின் இசைக்கு தீவிர ரசிகனாவதற்கு இந்த படம் ஒரு முக்கிய காரணம். திரையில் இடம் பெற்ற பாடல்கள் தவிர "நட்பினிலே நட்பினிலே" போன்ற படத்தில் வெளிவராத சில பாடல்களும் அற்புதமாக அமைந்திருக்கும். ஆனால் இந்த படத்தில் புகழ் பெற்ற இரு பாடல்கள் அப்படியே ஈயடிச்சான் காபி அடிக்கப்பட்டவை.
படத்தில் வரும் "மனசு ரெண்டும் பார்க்க" எனும் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அந்த பாடலை எங்கிருந்து பிடித்திருக்கிறார் யுவன் என்று சற்று பாருங்கள்!! :-)

மனசு ரெண்டும் பார்க்க - காதல் கொண்டேன்



A rose in the wind - Anggun




படத்தில் இன்னொரு பிரபலமான பாட்டு "காதல் காதல் காதலின் நெஞ்சம்" என் தொடங்கும் பாடல். இது எங்கிருந்து எடுத்திருக்கிறார் என்று பார்க்கலாமா??

காதல் காதல் - காதல் கொண்டேன்




Raven - Hedningarna




இது தவிர இந்த படத்தில் வரும் ஒரு அழகான மெலடி "நெஞ்சோடு கலந்திடு" என தொடங்கும் பாடல். இந்த பாடல் Corrs இசைஇக்குழுவின் பாடலான "Runaway" எனும் பாட்டின் தொடக்கத்தின் இன்ஸ்பிரேஷன் என பட்டவர்த்தமாக தெரியும். இது முழுக்க முழுக்க காபி அடிக்கபடவில்லை என்பதால் இதை கூட சற்று ஏற்றுக்கொள்ளலாம். இந்த பாடலை பற்றி் நான் என்னுடைய வயலின் பதிவில் கூட குறிப்பிட்டிருந்தேன்.
நல்ல திறமையான இசையமைப்பாளராக இருந்தாலும் கூட சந்தர்ப்பவசத்தில் இன்ஸ்பயர் ஆகி அல்லது காபி அடிக்க வேண்டி வந்து விடுகிறது என்பதையே இது காட்டுகிறது. :-)

நன்றி:
http://www.itwofs.com/

Sunday, July 08, 2007

ராகம் என்ன ராகம்?

கொஞ்சம் நீட்டி இழுத்துப் பாடினால் போதும்... ராகமா பாடறாங்கன்னு சொல்வதைப் பார்க்கலாம்! அப்பறம் இந்த பாட்டு, இந்த ராகம், அந்தப் பாட்டு, அந்த ராகம் ஏதேதோ சொல்லறாங்க! அனேக பேருக்கு இது புரியாத விளையாட்டு போல இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

ராகம் என்றால் என்ன? எப்படிக் கண்டு பிடிப்பது?

எளிமையா சொல்லணும்னா, ஸ,ரி,க,ம,ப,த,நி போன்ற ஸ்வரங்களை எந்த வரிசையில் ஒரு பாட்டின் இசை அமைப்பில் இருக்கிறதோ அதைப்பொறுத்து அதன் ராகம் அமைகிறது.

உதாரணத்திற்கு: ஸ ரி க ப நி ஸ என்றால் ஹம்சத்வனி,
ஸ ரி ம ப த ஸ என்றால் சுத்த சாவேரி
என்பதுபோல வருமென சொல்லலாம்!

தொடக்கத்தில் ஸ்வர வரிசைகளைக் கொண்டு இந்த ராகம் இதுவென்று சொல்வது கடினமானதுதான்.

எளிதான வழி ஏதும் இல்லையா?


எளிதான வழி, பல பாடல்களைக் கேட்பதுதான்... ஒரு ராகம் தெரிந்த பாடலை கேட்டுவிட்டு, பின்னர் அதே சாயலில் இன்னொரு பாடல் கேட்கும்போது, இந்தப் பாடலும் அந்த பாடலின் ராகம்தான் என கண்டு கொள்வதுதான்!!!

இப்படி கண்டுபிடிப்பதுவே ஷெர்லாக் ஹோம்ஸ் கதை மாதிரி ஒரு அலாதி இன்பமான விஷயம். கண்டுபிடித்தை பின் கேட்பது அதிலும் ஆனந்தம்!

ஒரு சில ராகங்களை அவ்வளவு எளிதாக கண்டு பிடிக்க இயலாதென்றாலும், ஆரம்ப நிலையில் இந்த வழி நிச்சயம் கை கொடுக்கும்!

உதாரணத்திற்கு ஒரு சில பாடல்களைப் பார்ப்போமே!

முதலில் மனதை இளக வைக்கும் ஷ்யாமா(சாமா) ராகத்தில்

வருவரோ வரம் தருவாரோ....?
மனது சஞ்சலிக்குதையே....
எப்போது வருவரோ, வரம் தருவாரோ...?


என்ற கோபலகிருஷ்ண பாரதி பாடல், பாம்பே ஜெயஸ்ரீ பாடிட:

Varuvaaro - Sama_A...


இந்த பாடலை கேட்டுவிட்டு, பின்னர், முற்றிலும் வேறுபட்ட இன்னொரு பாடலை வயலினில் வாசிக்க கேளுங்கள்:

முதலில் பல்லவி :

Maanasa Sancharare...


பின்னர் அதே பாடலின் முதல் சரணம் :
Maanasa Sancharare...


இரண்டு பாடல்களும் ஒரே சாயலில் இருப்பது தெரிகிறதா?
குறிப்பாக சரணம் கேட்கும்போது,

முதல் கேட்ட பாடலின் (வருவரோ வரம் தருவாரோ) சரணம் -

திருவாரூர், தென்புலியூர், திருச்சிற்றம்பல நாதர்
குருநாதராக வந்து குறை தீர்க்க கனவு கண்டேன்


நினைவுக்கு வருகிறதா?

இதைக் கண்டுபிடிக்க முடிந்தால் போதும், உங்களுக்கு இசை ஞானம் இருக்கிறது என்று உங்கள் சட்டைக் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்!

இரண்டாவதாக கேட்ட பாடல் சதாசிவ பிரம்மேந்திரர் இயற்றிய,

மானச சஞ்சரரே
ப்ரஹ்மணீ மானச சஞ்சரரே


இரண்டாவது பாடலும் ஷ்யாமா ராகம்தான் என்று கண்டு கொள்ள இது போதாதா!

---------------------------------------------------------------------------------------------------

அடுத்ததாக, வராளி ராகத்தில்

கா வா வா கந்தா வா வா
என்னை கா வா வேலவா


என்ற பாபநாசம் சிவன் பாடலை தென்னிசைத் திலகம் சுதா ரகுநாதன் பாடக் கேட்கவும்:



இந்த பாடலின் சாயலில் இன்னொரு பாடல்:

மாமவ மீனாக்ஷி ராஜ மாதங்கி

என்று தொடங்கும் முத்துசாமி தீக்ஷிதர் பாடல்:

பாடலின் ஒரு பகுதியை வயலினில் லால்குடி ஜெயராமன் அவர்கள் வாசிக்கக் கேட்கலாம்:

MAMAVAMEENAKSHI-VA...


இந்தப் பாடலும் அமைந்திருப்பது வராளி ராகம் தான். வயலினில் மாமவ மீனாக்ஷி பாடலை வாசிக்க கேட்டாலும், உதடுகள் 'கா வா வா, கந்தா வா' என்று முணுமுணுக்கும் அதிசயம் இங்கே நடக்கப் பார்க்கலாம்!

---------------------------------------------------------------------------------------------------
மூன்றாவதாக, இன்னொரு ராகத்தையும் பார்ப்போம்:
இப்போது த்வஜாவந்தி ராகம்.

எங்கு நான் செல்வேன் அய்யா
நீர் தள்ளினால்...
எங்கு நான் செல்வேன் அய்யா?


என்ற பெரியசாமி தூரன் அவர்களின் பாடலில் ஒரு பகுதியை பாம்பே ஜெயஸ்ரீ பாடக் கேட்கலாம்:

Engu Naan - Dwijaw...


ஹிந்துஸ்தானியில் இருந்து கர்நாடக சங்கீதத்திற்கு வந்த இந்த ராகம், தமிழ் பாடல் வரிகளில் எப்படி மின்னுகிறது பாருங்கள்!

இந்த பாடலின் அதே சாயலில் அமைந்த இன்னொரு பாடல்:

அகிலாண்டேஸ்வரி ரக்க்ஷமாம்
ஆகம சம்பரதாய நிபுனே ஸ்ரீ
அகிலாண்டேஸ்வரி ரக்க்ஷமாம்


என்ற முத்துசாமி தீக்ஷிதர் பாடல், எம்.எஸ் அவர்களின் தெய்வீகக் குரலில்:





இந்த பாடலும் த்வஜாவந்தி ராகம்தான்!

இது வரை மூன்று ராகங்களும், ஒவ்வொன்றிலும் இரண்டு பாடல்களும் பார்த்தோம். ஆனால், இதை மட்டுமே வைத்துக்கொண்டு இந்த ராகங்களின் மொத்த அம்சங்களையும் இவ்வளவுதான் என்று சொல்லிவிட முடியாது. இது போல ஒரு சில பாடல்களில் தொடங்கி, அந்த ராகங்களில் ஏனைய பாடல்களையும் கேட்டு வந்தால், ராகங்களில் இதர குணங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

Friday, July 06, 2007

3 இன் 1 - மூன்று ஸ்வரங்களுக்குள்...



ரி



மூன்றே ஸ்வரங்களில் ராஜாவின் பாடல்:

பாடப் பிறந்தது பாட்டுத்தான் - என்
கூடப் பிறந்தது பாட்டுத்தான்!

வாழப் பிறந்தது பாட்டுத்தான் - என்
வாழ்க்கை முழுதும் பாட்டுத்தான்!

....



--------------------------------------

நீங்களே கேளுங்களேன்:
இளையராஜாவுடன், ஷ்ரேயா கோஷல் மற்றும் SP பாலா.



தவறாமல் பாடலை வயலினில் வாசிப்பதை கேட்டு மகிழுங்கள்!

Thursday, July 05, 2007

பாகவதர் வாயில் கொன்னக்கோல், திருடன் கையில் கன்னக்கோல்!

அது ஒரு மிகப்பெரிய வித்துவானின் கச்சேரி. யாரும் ஓசியில் உள்ளே நுழையக்கூடாது என்பதால் காரியதரிசியே வாசலில் நின்று கண்காணித்துக் கொண்டு இருந்தார்.
மிருதங்க வித்வான் மிருதங்கத்துடன் வந்தார் உள்ளே அனுப்பினார்.
பிறகு வயலின் வித்வானும் அவர் பின்னால் மற்றொருவரும் வந்தார். வயலினோடு வந்தவரை அனுப்பிவிட்டு பின்னால் வந்தவரை நிறுத்திவிட்டார் கையில் வாத்தியம் இல்லாத காரணத்தால்.

வந்தவர் சொன்னார் நான்தான் இன்று கச்சேரிக்கு கொன்னக்கோல் வாசிக்கப் போகிறேன் என்றார். எங்கே உங்கள் கொன்னக்கோல் வாத்தியத்தை காண்பியுங்கள் என்பதற்கு முழித்தார்.
பின்னால் வ்ந்த பாடகர் சொன்னார்....கொன்னக்கோல் கையில் வைத்திருக்கும் வாத்தியம் இல்லை. வாயால் சொற்கட்டுகளுடன் வாசிக்க வேண்டிய வாத்தியம் என்று.

அந்த நாள் கச்சேரியில் மதுரை சோமு, போன்றவர்கள் பக்கவாத்தியமாக கொன்னக்கோலை வைத்துக் கொள்வார்கள் வாத்தியங்களோடு!
கொன்னக்கோல் வாசிப்பவரும் தனி ஆவார்த்தனத்தின் போது சொற்கட்டுகளை வாயினால் மிருதங்கம், கடம் கஞ்சிரா போன்ற தோல்/மண் வாத்தியத்திற்கு இணையாக வாசிப்பார்.

நடன நிகழ்ச்சிகளிலும் கூட பாடுபவரைத் தவிர நட்டுவனாரும் அவ்வப்போது ஜதிகளை சொற்கட்டுகளாக கூறி அதற்கேற்ப நடனம் செய்பவரும் ஆடுவார்.
இதுவும் ஒருவகை கொன்னக்கோல்தான்


கொன்னக்கோல் வாத்தியம் வாசிப்பவர்களூக்கு பற்கட்டு நன்றாக இருக்கவேண்டும் அப்பொழுதுதான் சொற்கட்டுகள் நன்றாக வரும்.
அதுமாதிரி நல்ல தாள ஞானம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.முறைப்படி தாளவாத்தியக் கலைஞரிடம் கற்றுக்கொண்டு இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அவருடைய கலை பரிமளிக்கும்


காஞ்சிபுரம் திரு பச்சையப்ப பிள்ளை மற்றும் திரு. பக்கிரியாப்பிள்ளை கொன்னக்கோல் வாத்தியத்தில் சிறந்த விற்ப்பன்னர்கள்

இதோ மேற்க்கத்திய கலைஞர் ஒருவர் நம் கொன்னக்கோல் வாத்தியத்தை வாசிப்பதைக் கேளுங்கள் பாருங்கள்


திரு. டி ஹஎச் சுபாஷ் சந்தரன் கடத்திலும் கொன்னக்கோலிலும் நிபுணர்.
அவர் கடம் வாசித்து கொன்னக்கோலையும் உபயோகித்து அமர்களபடுத்துகிறார் பாருங்கள் கேளுங்கள்



திருவிளையாடல் படத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் திரு கே வி மஹாதேவன் இசையில் டி. எம் சௌந்திரராஜன் பாடிய பாட்டும் நானே பாவமும் நானே பாடலிலும் கொன்னக்கோல் வாத்தியம் பிரமாதமாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது பார்த்து கேட்டுப்பாருங்கள்

Wednesday, July 04, 2007

சாரங்கியிடம்் மனமிறங்கி

"7G ரெயின்போ காலனி" படத்துல "கனா காணும் காலங்கள்,கரைந்தோடும் மேகங்கள்"னு ஒரு பாட்டு வரும்.பாட்டோட ஆரம்பத்துலையே ஒரு மெல்லிய இசை நம் மனதை மயக்கிவிட்டு செல்லும். தேனில் குழைத்தால் போன்ற ஒரு இசைகருவியின் மெல்லிய ஒலி பாடலை இனிதே ஆரம்பித்து விட்டு நம்மை வேறு ஒரு உலகத்துக்கு எடுத்து சென்று விடும். பின்னர் ஹரிஷ் ராகவேந்த்ரா மற்றும் மதுமிதாவின் இனிய குரலில் நாம் நம்மை மறந்துவிடுவோம். நடு நடுவில் உஸ்தாத் சுல்தான் கானின் ஆலாபனைகள் வேறு பாடலுக்கு மெருகேற்றி விடும். இந்த உணர்ச்சிகரமான பாடலுக்கு எவ்வளவு அழகாக அந்த இசை கருவியின் ஒலி உறுதுணையாக இருந்தது பார்த்தீர்களா??
வேறு ஏதாவது இசைக்கருவியை உபயோகப்படுத்தி இருந்தால் இதே போன்ற உணர்வை அதனால் எழுப்ப முடியுமா???



சரி இன்னொரு பாட்டு பாக்கலாமா?? "எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்்" என்று வரும் ஒரு பாட்டு."நந்தா" படத்தில் இடம்பெறும் இந்த பாட்டில் ஆரம்பத்திலும் நெஞ்சை தொடும் ஒரு இசை இடம் பெறும். மிகச்சிறு வயதில் ஒரு கொலையை செய்து விட்டு ,சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அழைத்து செல்லபடுவான் ஒரு சிறுவன்.இப்படிப்பட்ட வேலையில் தன் மகனை ஏமாற்றத்துடனும் நிராசையுடனும் வெறித்துப்பார்ப்பாள் அவன் தாய். பயமும் குற்ற உணர்ச்சியும் மனதை கவ்வ தன் தாயை குழப்பத்துடன் பார்த்துக்கொண்டே வேனில் ஏறுவான் அச்சிறுவன்.இந்த காட்சியை நம் மனதில் நொடியில் பதித்து நம் ஆர்வத்தை கிளப்பி விட்டு விடும அந்த இசைக்கருவியின் ஒலி். பாடல் முழுவதும் அச்சிறுவன் படும் மன உளைச்சலையும் ,அன்னையை பிரிந்து தனிமையில் வாடும் சூழ்நிலையை மிக அழகாக வெளிக்கொண்டு வரும் இசை.


சரி இந்த இரண்டு பாடலகளிலும் நான் குறிப்பிட்ட இசைக்கருவியின் பெயர் என்ன தெரியுமா?? அந்த இசைக்கருவியின் பெயர் தான் சாரங்கி. உணர்ச்சிமயமான இசை என்றாலே அதில் கண்ணை மூடிக்கொண்டு சாரங்கியை போடு என்று கூறி விடலாம்.அதன் ஒலியை கேட்டாலே நம் மனதில் ஒரு வித உருக்கமான மனநிலை குடி கொண்டு விடும்
சாரங்கி எனும் வாத்தை இந்தியில் நூறு (சௌ) ,வண்ணங்கள் (ரங்) எனும் இரு வார்த்தைகளின் கலப்பு ஆகும். நூற்றுக்கணக்கான வண்ணங்களின் வனப்பும் இன்பங்களையும் தரவல்ல இசைக்கருவி இது என்று பொருள்படும்படி பெயர் வைத்திருக்கிறார்கள்.

இதன் வரலாறு பற்றி பெரியதாக குறிப்புகள் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை,ஆனால் பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூறாண்டுகளில் அரண்மனைகளில் ஆடல் பாடல் கேளிக்கைகளில் உபயோகப்படுத்தப்பட்ட கருவிகளில் சாரங்கி முக்கிய பங்கு வகித்தது. இதனாலேயே இதை கண்டால் மக்கள் ஒருவிதமான ஒவ்வாமையோடு ஒதுக்கி வந்திருக்கிறார்கள்.ஆனால் வட இந்திய தந்திக்கருவிகளில் சாரங்கி ஒரு மிகப்பிரபலமான கருவியாகவே இருந்து வருகிறது.வட இந்திய பாணியில் அமைந்த இசைக்கச்சேரிகள் என்றாலே பக்கவாத்தியமாகவோ அல்லது தனி ஆவர்த்தனமாகவோ சாரங்கி கண்டிப்பாக இடம் பெற்றுவிடும்.
சரி சாரங்கியின் வடிவமைப்பை கொஞ்சம் இப்பொழுது பார்க்கலாமா??

டுன் (tun) எனப்படும் ஒரு வித மரத்தினால் ஒரு விதமான பெட்டி செய்யப்பட்டு அதன் மேல் கீழ்ப்பகுதியில் ஆட்டுத்தோல் போர்த்தப்படுகிறது. சுமார் 64-67 சென்டிமீட்டர்கள் நீளம் இருக்கும் இந்த பெட்டியின்்பெட்டியின் உள்ளே ஒன்றும் இல்லாமல் வெறுமையாகத்தான் இருக்கும்.இதன் மேல் போர்த்தப்படும் தோலின் மேல் தான் சாரங்கியின் தந்திகள் ஓடும். சாரங்கிக்கு மொத்தம் 40 தந்திகள் உண்டு. ஆனால் இவற்றில் மூன்று தந்திகள் மட்டுமே ஒலியை நிர்ணயிக்க பயன்படும். மற்றவை எல்லாம் சும்மா ஒத்து ஊதுவதற்கு தான். ஆங்கிலத்தில் இதற்கு "Sympathetic strings" என்று பெயர் உண்டு. இவை ஒலியின் மாற்றத்திற்கு உதவாவிட்டாலும் நன்றாகவே ஒலியை கூட்டி விடும்.
சாரங்கிக்கு உபயோகப்படுத்தப்படும் வில் பொதுவாக தேக்கு மரக்கட்டையால் செய்யப்படும். இது நம் வயலினின் வில்லை விட கனமாக இருக்கும்.அதனூடே குதிரை வாலினில் தோன்றும் முடியை கட்டி இந்த வில்லினை உபயோகிப்பார்கள்.

இந்த சாரங்கியை வாசிக்கும் விதம் வயலினை திருப்பிப்போட்டு வாசிப்பது போலத்தான். வயலினில் இடது கைகளால் தந்தியை கீழ்புறம் தொட்டுக்கொண்டு மேல்புறம் வில்லினை தேய்ப்போம் அல்லவா?? ஆனால் சாரங்கியில் இதற்கு நேர் எதிர். இதில் மேற்புறம் இடது கை நகங்களால் தந்தியில் அழுத்தம் கொடுத்துக்கொண்டு வலது கையினால் வில்லினை கிழே தேய்ப்பார்கள். வயலினை போல் இல்லாமல் இந்த வாத்தியத்தில் விரல் நகங்கள் மூலமாக தந்தியின் மேல் அழுத்தம் தர வேண்டும்,விரல்களால் அல்ல. இதனால் இந்த வாத்தியத்தை வாசிப்பது மிகவும் கடினம். அதுவும் இல்லாமல் இந்த வாத்தியத்தை வாசிக்க கற்றுக்கொள்வதும் மிகவும் கஷ்டம்.
இதை வாசிக்க பழகுவதற்குள் விரல்களில்் வரும் வலியினை பொறுத்தாக வேண்டும். அதுவுமில்லாமல் தந்தியின் மேல் தேய்த்து தேய்த்து நகங்களின் மேல் ஒரு விதமான பள்ளம் கூட பதிந்து விடும். இதனை பெண் வாத்தியக்கலைஞர்கள் கற்றுக்கொள்ளவும் வாசிப்பதற்கும் கஷ்டமாக இருக்கிறது என்று தான் தில்ருபா,எஸ்ராஜ் போன்ற வாத்தியங்கள் சாரங்கியை ஒற்றி உருவாக்கப்பட்டனவாம்.இவை அனைத்திலும் எழுப்பப்படும் ஒலி ஒரளவிற்கு ஒரே மாதிரி தான் இருக்கும்.

இந்தியா தவிர பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தில் கூட இந்த இசைக்கருவி உபயோகப்படுத்த படுகிறது. ஹிந்துஸ்தானி போன்ற பாரம்பரிய இசை வகைகளில் மட்டுமில்லாமல் நாட்டுப்புற இசை மெட்டுக்களிலும் சாரங்கி மிக பிரபலம். குறிப்பாக ராஜஸ்தானிய நாட்டுபுற பாட்டுக்கள் என்றால் சாரங்கியின் ஒலியை நிறைய கேட்கப்பெறலாம்.இந்தியாவில் இந்த இசைக்கருவி வித்தகர்கள் என்று பார்த்தால் பண்டித் ராம் நாராயண்,சுல்தான் கான் போன்றோரை சொல்லலாம். பாகிஸ்தானிய இசை கலைஞர்கள் என்றால் உஸ்தாத் அல்லா ரக்கா முசாபிரி,டாக்டர் தைமூர் கான் என்று தனி பட்டியல் உண்டு.நேபாளத்தில் ஜலக் மான் கந்தர்பா,கிம் பஹதுர் கந்தர்பா எனும் ஒரு தனி பட்டியலை விக்கி தருகிறது.
இப்பொழுதெல்லாம் நம் தமிழ் சினிமா இசையிலேயே நிறைய சாரங்கி இசையை நாம் கேட்க பெறுகிறோம். சற்றே யோசித்து பார்த்தால்் என் மனதிற்கு சில பாடல்கள் தோன்றுகின்றன. "தீபாவளி" படத்தில் "காதல் வைத்து" என்ற ஒரு பாடலில்,நடுவில் வரும் இசையில் மிக அழகான சாரங்கி இசை கலந்திருக்கும். அது தவிர "தளபதி" படத்தில் வரும் "சின்ன தாயவள்" படத்திலும் இதை கேட்கப்பெறலாம்.
"காதல் கோட்டை' படத்தில் "சிகப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது " எனும் பாட்டு ஒன்று வரும். ராஜஸ்தானிய இசை மெட்டில் அமைந்திருக்கும் பாடல் என்பதால் சாரங்கி சம்மனில்லாமல் ஆஜராகி விடும்.
இது போன்று கவனிக்க ஆரம்பித்தால் நிறைய கிடைக்கப்பெறும்.

sarangi_bits_all.m...



பார்த்தீங்களா நம்ம தமிழ் இசையிலேயே நமக்கு தெரியாத வட இந்திய கருவி எவ்வளவு பயன் படுத்தப்பட்டிருக்கிறது. இனிமேல் எதாவது பாடல் கேட்டால் அதில் சாரங்கி பயன்படுத்துப்பட்டிருந்தால்,அதை கவனித்து விட்டு நன்றாக ரசித்து கேட்பீர்கள் ,இல்லையா??
சரி போறதுக்கு முன்னாடி ஒரு இனிமையான சாரங்கி இசை போட்டிருக்கேன் கேட்டுட்டு போங்க!!



வரட்டா?? :-)


http://en.wikipedia.org/wiki/Sarangi
http://www.infoweb.co.nz/sarangi
http://www.india-instruments.de/pages/glossar/g-sarangi.html
http://www.sarangi.pwp.blueyonder.co.uk/Sarangi.html
http://www.india-instruments.de/pages/glossar/g-sarangi.html

படங்கள் :
www.aimrec.com/images/instruments-sarangi.jpg
http://www.fiddlingaround.co.uk/Resources/sarangi.gif

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP