Thursday, August 02, 2007

நம் வாழ்க்கை தினமும்,நாடகமோ? (நானாதி பதுக்கு நாடகமு)

எனக்கு இசை என்றாலே கொள்ளை பிரியம். சமீபத்தில் ஒரு நாதஸ்வர இசை தொகுப்பு ஒன்று கிடைத்தது. அதில் "நானாடி பதுக்கு" எனும் அன்னமாச்சாரியா கீர்த்தனையை கேட்டு மெய் மறந்து போய் விட்டேன். அதை கேட்ட பின் முன்பு எப்பொழுதோ எம்.எஸ்ஸின் தெய்வீக குரலில் இந்த பாட்டை கேட்ட ஞாபகம் வந்து விட்டது.
கே.ஆர்.எஸ் அண்ணாவின் கருணையால் இணையத்தில் அதற்கான ஒலிப்பேழை கிடைத்தது. அதை திரும்ப திரும்ப கேட்க கேட்க இவ்வளவு அழகான பாடலை நம் இனிய தமிழில் கேட்டால் என்ன என்று தோன்றியது!!! எனக்கு தெரிந்து இந்த பாட்டிற்கு தமிழ் மொழி பெயர்ப்பு இருக்கிறதா என்று தெரியாது. அதுவுமில்லாமல் எனக்கு தெலுங்கு வேறு தெலுசு லேது!! :-(
என்ன செய்வது????

சகலாகலா வல்லவர் கே.ஆர்.எஸ் அண்ணாவையே திரும்பவும் துணைக்கழைத்தேன். எனக்காக மெனக்கெட்டு இந்த பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கொடுத்தார். அதை பார்த்ததில் இருந்து மனதில் ஒரே குஷி. வீட்டிற்கு வந்ததில் இருந்து வரிகளை பார்த்துக்கொண்டே பாடலை திரும்ப திரும்பக்கேட்டு கீர்த்தனையில் மூழ்கியே போய் விட்டேன்.
அந்த மூடில் பிறந்தது தான் கீழே நீங்கள் பார்க்கும் அடியேனின் மொழிபெயர்ப்பு. பாடுவதற்கு வசதியாகவும் அதே சமயம் பொருளுக்கு பொருந்தியும் இருக்க வேண்டும் என்பதையும் பார்த்து பார்த்து எழுதியதால் ஆங்காங்கே வட மொழி சொற்கள் வருவதையும்,வேறு சில விட்டுக்கொடுக்கல்களையும் தவிர்க்க முடியவில்லை (Some compromises had to be made).

வரிகளை படிக்கும் போது எம்.எஸ்ஸின் இந்த ஒலி கோப்பை கேட்டுக்கொண்டே படித்தால்,கீர்த்தனையின் சுவையை ரசிக்கலாம்.

பாம்பே சகோதரிகளின் குரலில் அமைந்த ஒலிப்பேழையும் உங்களுக்காக உண்டு!!

பாட்டில் இரண்டாவது பத்தி ஒலிப்பேழையில் பாடப்படவில்லை என்பதால் பாட்டு கேக்கும்போது அதை ஒதுக்கிவிட்டு மூன்றாவது பத்திக்கு நேரடியாக தாவி விடுங்கள்!! :-)

ராகம் : ரேவதி
தாளம் : ஆதி
இயற்றியவர் : அன்னமாச்சாரியா


நம் வாழ்க்கை தினமும்,நாடகமோ?
கண்களில் மறைவது பேரின்பமோ!!

பிறப்பது நிஜமோ,போவதும் நிஜமோ
நடுவினில் நம் பணி நாடகமோ??
எதிரினில் விரிவது, பிரபஞ்சமோ
கடைசியில் கை சேரும் பேரின்பமோ

உண்ணும் உணவும்,உடுத்திடும் உடையும்
இதன் இடை இவண் பணி நாடகமோ!!??
இதில் தோன்றும, இடர் தரும் உபயகர்மங்களும்
இவை தாண்டி இறை சேர்ந்தால்,பேரின்பமோ

தங்கும் பாவமும்,தீராத புண்யமும்
நகைக்கிற காலமும் நாடகமோ
எங்கும் நிறை ஸ்ரீ வேங்கடேஸ்வரனை அன்றி
எது தரும் குறைவில்லா,பேரின்பமோ.

24 comments:

ILA (a) இளா said...

Good Selection. adding to my fav.

வடுவூர் குமார் said...

வேறு தெலுசு லேது!
தெலுகு தெலியது.
தெலுகு மாடலாட ராது- பேச வராது.
தெலுகு சதுவ ராது- படிக்க தெரியாது.
சாஸ்திரீய சங்கீதத்தையும் தெலுங்கையும் அவ்வளவு சீக்கிரமாக பிரிக்க முடியாது போலும்.
அருமையான மொழிபெயர்ப்பு.

குமரன் (Kumaran) said...

எத்தனை வருடமாக இந்தப் பாடலை விரும்பிக் கேட்கிறேன். இன்று பொருளுடன் சொல்லி மகிழ்வித்ததற்கு மிக மிக நன்றி CVR

நல்ல மொழிபெயர்ப்பு. நல்ல உழைப்பு.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

CVR

மிகவும் அழகான மொழியாக்கம். உங்களுக்குப் பொருளை அனுப்பியதில் இருந்தே மனதில் ஆயிரம் ஆயிரம் சிந்தனைகள் - இந்தப் பாடலின் கருத்தைப் பற்றி!

யோசித்துக் கொண்டே இல்லத்துக்குத் தாமதமாக வந்து சேர்ந்தேன்!
இசை இன்பத்தைத் திறந்தால், உங்களின் இந்தப் பதிவு! சிறிது நேரம் ஸ்தம்பித்து (திகைத்து) போய் விட்டேன்!

வாழ்க நீங்கள்!
வாழ்க உங்கள் பணி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அன்னமாச்சார்யரின் இறுதிக் காலப் பாடல் இது. இதை ஆக்கும் போதோ, பாடும் போதோ பின் புலம் தெரிந்தால் இன்னும் உள்ளம் உருகி ரசிக்கலாம்!

மிகவும் நொந்து போன நிலையில் இருந்த அன்னமய்யாவின் உயிர் பிரியும் தருவாயில், அவர் எதிரே தோன்றிவிட்டான் திருவேங்கடமுடையான். கை பிடித்து ஆதரவாக என்ன வேணும், சொர்க்கம் வேணுமா-ன்னு கேட்க,
வேண்டாம், நீ தான் வேணும் என்று அவன் கைகளில் உயிரைத் தருகிறார் அன்னமய்யா!

அதனால் தான் பின் வருமாறு சொல்கிறார்!
//யெவகுனே ஸ்ரீ வேங்கடேஸ்வரு தெலிக
ககனமு மிட்டிதி கைவல்யமு//

ககனம்=வானம், சொர்க்கம், மோட்சம்
சொர்க்கத்தையும் தாண்டி நிற்பவன் திருவேங்கடமுடையான். "அவனே துணை" என்றால் அவன் துணைக்குக் கூட வருகிறான் என்று பொருளாகி விடுகிறது.
இது அவரின் இறுதிக் கட்டம். அதனால் அவனையே பெற்று விட்டால் பேரின்பமோ என்று குழைந்து விடுகிறார்!

//எங்கும் நிறை ஸ்ரீ வேங்கடேஸ்வரனே துணை
அவன் பதம் சேர்ந்திட்டால் பேரின்பமோ//

எங்கும்நிறை ஸ்ரீ வேங்கடேஸ்வரனே தெரிய
அவனையே பெற்று விட்டால் பேரின்பமோ!
என்று மாற்றினால் பூர்ணமாகி விடும் CVR.

வாழ்க!

jeevagv said...

ஆஹா, அழகாக வந்திருக்கு சி.வி.ஆர்!

எளிமையும் அழகும் நிறை
அன்னமாச்சாரியரின் கீதங்களை கேட்டு இன்பம் பெறுவதே பேரின்பம்!

துளசி கோபால் said...

அழகான மொழிபெயர்ப்பு. அருமையா அமைஞ்சிருக்கு.
நல்லா இருங்க சி வி ஆர்.


பாக(னே)வச்சுந்தி:-)))

CVR said...

@இளா
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!! :-)

@வடுவூர் குமார்
அட!! தெலுங்குல வெளுத்து வாங்கறீங்க!!
எனக்கு இவ்வளவு எல்லாம் தெரியாது தல!! :-(
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

@குமரன்
உங்களுக்கும் இது பிடித்த பாடல் என்று அறிந்ததில் மகிழ்ச்சி!!
:-)

@கே.ஆர்.எஸ்

//வாழ்க நீங்கள்!
வாழ்க உங்கள் பணி!//
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணா!! :-)

பிறப்பது நிஜமோ,போவதும் நிஜமோ
நடுவினில் நம் பணி நாடகமோ??


//ககனம்=வானம், சொர்க்கம், மோட்சம்
சொர்க்கத்தையும் தாண்டி நிற்பவன் திருவேங்கடமுடையான். "அவனே துணை" என்றால் அவன் துணைக்குக் கூட வருகிறான் என்று பொருளாகி விடுகிறது.
இது அவரின் இறுதிக் கட்டம். அதனால் அவனையே பெற்று விட்டால் பேரின்பமோ என்று குழைந்து விடுகிறார்!

//எங்கும் நிறை ஸ்ரீ வேங்கடேஸ்வரனே துணை
அவன் பதம் சேர்ந்திட்டால் பேரின்பமோ//

எங்கும்நிறை ஸ்ரீ வேங்கடேஸ்வரனே தெரிய
அவனையே பெற்று விட்டால் பேரின்பமோ!
என்று மாற்றினால் பூர்ணமாகி விடும் CVR.//

ஆஹா!!
சுட்டி காட்டியதற்கு நன்றி அண்ணா!!

எனக்கு என்னமோ

"எங்கும்நிறை ஸ்ரீ வேங்கடேஸ்வரனே தெரிய"
என்பதை விட
"எங்கும்நிறை ஸ்ரீ வேங்கடேஸ்வரனே கண்ணில்"
என்பது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறதூ!!
அப்படியே மாற்றி விடுகிறேன்!! :-)

@ஜீவா
இசையே இன்பம் அதிலும் இறைவனை நினைத்து கசிந்துருகி பாடினால் அதன் சுவையே தனிதான்!!

வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஜீவா!! :-))

Avial said...

Paatu composer super a , Paatu padiyavar Subbu Super a nnu solra alavaku inda paatu .

MS Amma Paadi inda padalai keata urugadha manam kooda urugadho ?

Manadhai urukiya post.

Cheers,
Madhu

CVR said...

@துளசி டீச்சர்
:-)

நன்றி டீச்சர்

@மதுசூதனன்
வாங்க மதுசூதனன்.
கேட்க கேட்க மெலும் மேலும் உருகச்செய்யும் பாடல் இது!! :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

சால பாக உந்தி சிவிஆர் காரு.
நல்ல பாட்டு. நல்ல மொழிபெயர்ப்பு.
அன்னமைய்யாவின் பாடல்களுக்கு
நல்ல வரவேற்பு இருக்கும்.அன்னமைய்யா தியாராஜருக்கும் காலத்தால் முற்பட்டவர்.

CVR said...

@தி.ரா.சா
வாங்க தி.ரா.சா!!

சாலா தாங்க்ஸண்டி!! :-D

G.Ragavan said...

நல்ல முயற்சி தம்பி. பாட்டையும் மொழிபெயர்ப்பையும் மிகவும் ரசித்தேன். இதோ என்னுடைய மொழிபெயர்ப்பு.

நாம் வாழும் வாழ்க்கை நாடகமே
நாம் போகாப் பாதை பேரின்பமே (நாம் வாழும்

பிறப்பதும் மெய்யே மறைவதும் உண்மையே
இடைப்படு வாழ்க்கையும் நாடகமே (பிறப்பதும்
எட்டு வைத்தால் தெரிவது உலகாயமே
எட்டி எட்டிப் போவதோ பேரின்பமே (நாம் வாழும்

தீர்ந்திடாத தீமையும் நேர்ந்திடாத நன்மையும்
நகை முகைக் காலமும் நாடகமே
ஒப்பிலாத வேங்கடேசன் திருவடியால்
சொர்க்கத்திலும் மேன்மையாகும் பேரின்பமே (நாம் வாழும்

G.Ragavan said...

// //யெவகுனே ஸ்ரீ வேங்கடேஸ்வரு தெலிக
ககனமு மிட்டிதி கைவல்யமு// //

ரவி, அது யெவகுனே அல்ல. யெக்குவனே என்று நினைக்கிறேன். அப்படித்தான் என் காதில் விழுந்தது. ஏற முடியாதது...அதாவது மிகவும் உயர்ந்தது...திருவேங்கடமுடையான் என்ற பொருளில் வரும் என்றே தோன்றுகிறது

// ககனம்=வானம், சொர்க்கம், மோட்சம்
சொர்க்கத்தையும் தாண்டி நிற்பவன் திருவேங்கடமுடையான். "அவனே துணை" என்றால் அவன் துணைக்குக் கூட வருகிறான் என்று பொருளாகி விடுகிறது.
இது அவரின் இறுதிக் கட்டம். அதனால் அவனையே பெற்று விட்டால் பேரின்பமோ என்று குழைந்து விடுகிறார்! //

:) கவிதையை எனக்குத் தெரிந்த வரையிலும் மொழி பெயர்த்து மேலே இட்டிருக்கிறேன். நீங்கள் எழுதிய ஆங்கில மொழிபெயர்ப்பையும் பார்த்தேன். நிறைவில்லாமல் மொழி பெயர்த்து விட்டு..இங்கு பின்னூட்டத்தைப் பார்த்தால் நான் சொன்னதையே சொல்லியிருக்கின்றீர்கள். :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எட்டு வைத்தால் தெரிவது உலகாயமே
எட்டி எட்டிப் போவதோ பேரின்பமே//

அருமை அருமை! சொற்கட்டு வந்து விட்டதே!

//தீர்ந்திடாத தீமையும் நேர்ந்திடாத நன்மையும்
நகை முகைக் காலமும் நாடகமே
ஒப்பிலாத வேங்கடேசன் திருவடியால்//

ஜிராஆஆஆஆஆஆஆ....
எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலையே!
எம்பெருமான், என்னப்பன், பொன்னப்பன்,திருவேங்கடமுடையான், ராகவனின் வாய் மொழியை வாங்க வேண்டும் என்று நடத்திய நாடகமா இது!

என்னை மூட்-அவுட் செய்து, CVRஐயும் மூட் அவுட் செய்து, நாங்கள் இருவரும் சண்டையிட்டு, பின்னர் பாடலில் திளைத்து, பின்னர் ஆங்கிலத்தில் பொருள் கண்டு, CVR தமிழில் ஆக்கி, இறுதியில் பெருமாள் ராகவன் வாய்மொழியை வாங்கி - அத்தனையும் நானாதி நாடகமா?

அன்னமாச்சர்யர், தியாகராஜர் போன்ற சீலர்களை மொழியாக்கும் போது, மொழியை மட்டும் ஆக்காது, அவர்கள் மனத்தையும் சேர்த்தே ஆக்கினால் தான் பாட்டில் ஜீவ களை தெரியும்!

என்னுடைய இன்னமுதே ராகவனே வாழியவே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ரவி, அது யெவகுனே அல்ல. யெக்குவனே என்று நினைக்கிறேன்.//

யெகுவனே என்பது தான் சரி ஜிரா! சாரி, டைப் அடிக்கும் போது மாறி விட்டது போலும்! எகுதல்,ஏகுதல் என்று பொருளில் தட்டுகிறதே தமிழும் தெலுங்கும்!

//நீங்கள் எழுதிய ஆங்கில மொழிபெயர்ப்பையும் பார்த்தேன்//

அடியேன் எழுதியது இல்லை ஜிரா. தெலுங்கு நண்பர் ஷ்ரவண் என்பவரின் உதவி அது!

//கவிதையை எனக்குத் தெரிந்த வரையிலும் மொழி பெயர்த்து மேலே இட்டிருக்கிறேன்.
நிறைவில்லாமல் மொழி பெயர்த்து விட்டு..இங்கு பின்னூட்டத்தைப் பார்த்தால் நான் சொன்னதையே சொல்லியிருக்கின்றீர்கள். :)//

Birds of the same feather flock together :-)

ஜிரா...
முன்பொரு முறை நான் பதிவு எழுத வந்த புதிதில், தியாகராசர் கீர்த்தனங்களுக்குத் தமிழில் பொருள் சொல்லுமாறு சொன்னீர்கள். யோகன் அண்ணா மற்றும் எல்லாரும் கூடக் கேட்டார்கள்! நினைவிருக்கா?

நன்னு ப்ரோசேவா எவருரா = என்னைக் காத்தருள் செய எவருளரோ
நீ தய ராதா ராமா = உன் தயவில்லையா ராமா

என்று சில சில பாடல்களைக் காக்கைக்கும் தன் குஞ்சு பொன்னே போல் ஆக்கி வைத்துள்ளேன் ஜிரா...ஒவ்வொன்றாகப் பதிவிடலாமா? நீங்களும் ஒவ்வொன்றுக்கும் சொற்கட்டு இட்டு சிறப்பிக்க வேணும்! பார்க்கலாம் இறைவன் திருவுள்ளம் யாதோ என்று!

CVR said...

அண்ணாத்த ஜிரா!!!
கலக்கிட்டீங்க போங்க!!

காலை காட்டுங்கள் முதலில்!! :-D

//என்று சில சில பாடல்களைக் காக்கைக்கும் தன் குஞ்சு பொன்னே போல் ஆக்கி வைத்துள்ளேன் ஜிரா...ஒவ்வொன்றாகப் பதிவிடலாமா? நீங்களும் ஒவ்வொன்றுக்கும் சொற்கட்டு இட்டு சிறப்பிக்க வேணும்! பார்க்கலாம் இறைவன் திருவுள்ளம் யாதோ என்று!///
வாவ்!!!
கேக்கறதுக்கே சூப்பரா இருக்கு!! B-)

நடத்துங்க!! :-D

Anonymous said...

dear cvr,

great and superlative effort...

it is a beautiful but a new song to me and resembles BHARATHI's 'Nitrpathve nadapathuve..' to some extent(song and details recently put up by SATHANGA).

thanks again to u and ur leader.

sundaram

CVR said...

@சுந்தரம்
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!! :-)

Blogeswari said...

நீ தான் என் தேசிய கீதம் ரஞ்சனா ரஞ்சனா பாடல் - பார்த்தாலே பரவசம் படம்

பூவாசம் புறப்படும் பெண்ணே - அன்பே சிவம்


இது இரண்டும் எந்த ராகம்?

பெஹாக் ராகத்தில் அமைந்த பாப்புலர் திரைப்பாடல்கள் (tfmpage.com இல் கொடுத்துள்ள பாடல்கள் அர்த்தபுராதன வகை)

கொஞ்சம் ஹெல்ப் ப்ளீஸ்

manipayal said...

வணக்கம் ப்ளாகேஸ்வரி,
பூவாசம் புறப்படும் பெண்ணே - அன்பே சிவம் - ராகம் Hamsanaadam.
இதே ராகத்தில் இன்னுமொரு பாடல் - இசையில் தொடங்குதம்மா - Hey Ram.
பார்த்தாலே பரவசம் பாடலை பாடி பார்த்து நாளை சொல்லுகிறேன். நேரம் இருக்கும்போது நம்ப வலைக்கும் விஜயம் செய்யவும். TFM-il இல்லாத திரைப்பட பாடல்கள் in Carnatic ராகம் ஒரு பெரிய லிஸ்டே வச்சிருக்கேன்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Blogeswari, Manipayal

இசை இன்பம் வலைப்பூவில் நீங்கள் காட்டி வரும் ஆர்வத்துக்கு முதலில் எங்கள் நன்றி. இந்தக் குழு வலைப்பூவை மேலும் இன்பமாய் மலரச் செய்ய, இசை ஆர்வலர்கள் -உங்கள் கருத்துகளையும், ஐடியாக்களையும் பெரிதும் வரவேற்கிறோம். தனி மடலில் வேண்டுமானுலும் தொடர்பு கொள்ளுங்கள்.

//நீ தான் என் தேசிய கீதம் ரஞ்சனா ரஞ்சனா பாடல் - பார்த்தாலே பரவசம்//

இது எனக்கென்னமோ சஹானா ராகம் போலத் தான் தோன்றுகிறது! நோட்ஸ் கிடைத்தால் இன்னும் எளிதாச் சொல்லி விடலாம்!
அதே படத்தில் - அழகே சுகமா-ன்னு ஒரு பாட்டும் சஹானா தான்!

//பூவாசம் புறப்படும் பெண்ணே - அன்பே சிவம்//

இது மணிப்பையல் சொல்வது போல ஹம்சநாதம் தான்.
ஹே ராமில் - இசையில் தொடங்குதம்மா பாட்டைச் சரியாகக் காட்டினார் மணிப்பயல்.
தென்றல் வந்து என்னைத் தொடும் பாட்டும் ஹம்ஸநாதம் தான்!

manipayal said...

Some more in Ragam Hamsanaadam

பண்டுரீதி கோலு நிய வைய்ய ராமா

சொர்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா - some ராமராஜன் படம்

இரவும் நிலவும் மலரட்டுமே - கர்ணன்

தி. ரா. ச.(T.R.C.) said...

ஜீரா வந்து கலக்கிட்டு போயிட்டாரே.அருமையன வரிகள்
இதுக்குதான் நான் அப்பவே சொன்னேன்
"யரென்று ராகவனை எண்ணி நீர் அம்மா இதை அறிந்து சொல்லப்போமோ"

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP