Thursday, September 27, 2007

சாருகேசியின் மன்மத லீலையும், Jazz Fusion-உம்!

எவன் டா அவன் சாருகேசி?
அடப் பாவி...இது தெரியாதா உனக்கு? உன்னால் முடியும் தம்பி படம் பாத்துக்கீறயா நீயி? அதுல கமலுக்குப் போட்டியா ஜெமினி கிட்ட சிஷ்யனா சேந்துக்கிட்டு, கமல் தங்கச்சியவே டாவடிப்பானே! அவன் பேரு தான் மச்சி சாருகேசி!

அட அவனுக்கும் Jazz Fusionக்கும் என்னா சம்பந்தம் டா? டேய் வாணாம்! பிட்டு போடறத நிறுத்திக்கினு ஸ்ட்ரெய்ட்டா மேட்டருக்கு வா மாமே! சாருகேசி ராகத்த தான சொல்லற நீயி?
ஆமா, இவரு அப்படியே ராகத்தை எல்லாம் ஒன்னாக் கலந்து ராவா அடிச்சவரு! பேச வந்துட்டான்! சொல்றத கேள்றா!

ஜாஸ் மீசிக் பத்தி நம்ம சிவிஆரு ஒரு பதிவ போட்டாரு எப்பாலியோ!
ஆனா அதே ஜாஸ்-ஐ நம்மூரு மீசிக்-ல கலந்து, சாக்ஸோபோன்-ல நம்மூரு பையன் ஒருத்தன் வாசிக்கறான். சான் பிரான்சிஸ்கோவுல இருக்குறான். பிரசாந்து-ன்னு பேரு! நம்ம கே.ஆர்.எஸ் ஃபிரண்டு தானாம்! இலவச டிக்கெட் எதுன்னா கெடைக்குமான்னு கேட்டு வையி!
அவன் கூட சேர்ந்துக்குனு, டேவிட் ஈவெல்-னு ஒரு அமெரிக்கா காரன் Bass வயலின்-ல, நம்மூரு சாருகேசிய வாசிக்கறான்!

அடங்கொக்க மக்கா...சார்லஸ் கேசின்னு நினைச்சிருப்பான் போல சாருகேசிய!
டேய், சாருகேசின்னா ஒனக்கு அவ்ளோ கேவலமாப் போயிடுச்சா? சாருகேசி உலகம் பூரா இருக்கு! தெரியும்-ல? கர்நாடிக், ஹிந்துஸ்தானி ரெண்டுத்தலேயும் இருக்கு!
ஒரு காலத்துல இது எவ்ளோ பெரீய்ய்ய்ய் ஹிட்! மன்மத லீலையை வென்றார் உண்டோ - இது சாருகேசி தான்! இதைப் பாடாதவன்னே எவனும் கிடையாது!
சரி நம்ம ஜாஸ் மீசிக்குக்கு வருவோம்! Where Jazz meets Carnaticன்னு ஒரு தீம் வச்சிக்கிட்டாங்க பசங்க! அவங்க குழுவின் பேர் vidyamusic

Where Jazz meets Carnatic


பிரபல Sax கலைஞர் கத்ரி கோபால்நாத்-பிரசாந்த்


இளமைத் துடிப்புக்கு ஜாஸ்! அதில் மெலடிக்கு தென்னாட்டு இசை!
புதுசு புதுசாய் மெட்டுக்கள், Fusion மற்றும் மரபு இசை - ரெண்டுமே தராங்க.
இதுல டேவிட் = பெரிய ஆளுயர Bass வயலின்.
கவுதம் = ரெகுலர் வயலின்.
சமீர் = டிரம்ஸ்.
பிரசாந்த் = சாக்ஸபோன்.
கீழே சாருகேசிய Fusion-ல அற்புதமா வாசிக்கறாங்க! Million Fishes Artist Collective என்ற நிகழ்ச்சியில் வாசித்தது. கேளுங்க, பாருங்க!





சாருகேசின்னாலே இசை அமைப்பாளர்களுக்கு எல்லாம் அல்வா சாப்பிடற மாதிரி. நல்ல வெரைட்டி கொடுக்க முடியும். ராஜா, ரகுமான் ரெண்டு பேருமே சாருகேசியில் பூந்து விளையாடி இருக்காங்க.
சின்னத் தாய் அவள் பெற்ற ராஜாவே - தளபதி


உதயா உதயா - உதயா (ஹரிஹரன்-சாதனா சர்கம் பாடுவது)


காதலா, காதலா - அவ்வை சண்முகி


ஆடல் கலையே தேவன் தந்தது - ஸ்ரீ ராகவேந்திரா
இதுல சாருகேசி ராகத்தின் பேரைச் சொல்லி அபிநயம் பிடிக்க முடியாமல் செய்து, அம்பிகாவைப் போட்டியில் ஜெயிப்பாரு நம்ம தலைவரு!


பண்டிட் ரவிசங்கர் சிதார் இசையில் சாருகேசி



அட சாரு சாரு என்ன வேணும்னாலும் சொல்லுங்க சாரு. சாருகேசி-ன்னா அன்னிக்கும், இன்னிக்கும், என்னிக்கும், இது ரெண்டு தான் சாரு!
ஆட மோடி கலதே - தியாகராஜர்
மன்மத லீலையை வென்றார் உண்டோ?

போன வாட்டி நளினகாந்தி போட்டோம்ல, அதான் இன்னிக்கி ஒரு ஆம்பள ராகம் - சாருகேசி!
அடுத்த தபா, கட்டாயம் ஒரு கட்டழகு விளையாடும் கன்னிப் பொண்ணு ராகம் தேன்! அதுவரை வர்ட்டா ஸ்டைலில், வரட்டா? :-)

Wednesday, September 19, 2007

சினிமா இசையில் வாத்தியமா? குரலா?? - உன்னி கிருஷ்ணன் நேர்காணல்!

1. சினிமா இசையில், வாத்திய இசை மிகுந்து, குரல் இசை படுத்து விட்டதா?

2. இளையராஜா, ரஹ்மான் - யாருக்கு கர்நாடக இசை அதிகமாகத் தேர்ச்சி?

3. நளினகாந்தி ராகத்தில் பாடிய இருவர் படத்தின் பாடல் எது?

4. சுடும் நிலவு சுடாத சூரியன்
ஓடும் நிமிடம் ஓடாத வருடம்
- என்ன ராகம்?

5. பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் - பாட்டின் ஜீவன் வரிகளா? இசையா? குரலா??

6. கர்நாடக சங்கீதத்தை பொது மக்களுக்கும் எளிதாக எடுத்துச் செல்வது சினிமா தானே? - என்னவளே அடி என்னவளே,...காதல் என்றால் பெரும் அவஸ்தை என்றுன்னைக் கண்டதும் கண்டு கொண்டேன்!



இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் என்ன?
உன்னி கிருஷ்ணனைச் சந்தித்து உரையாடுகிறார் N.முருகன், இ.ஆ.ப. (I.A.S)
நன்றி: IndiaInteracts.com

(ஆடியோ தரம் அப்படி ஒன்றும் இல்லை. இருப்பினும் உன்னி ஹம் செய்யும் பாடல்களைக் கேட்பதற்காகவே பார்க்கலாம். ஐந்து பகுதிகள், ஒவ்வொன்றும் சுமார் 5 நிமிடம்; முதல் வீடியோ மிகவும் நல்லா இருக்கு!)
பாருங்க. உன்னியின் பிடித்தமான கருத்தைப் பின்னுட்டமாச் சொல்லுங்க! (பார்க்காதவர்கள் வசதிக்காக....)











என்னவளே அடி என்னவளே



நறுமுகையே, நறுமுகையே

Sunday, September 09, 2007

பீமா படப்பாடல்கள் விமர்சனம்

ஹாரிஸ் ஜெயராஜின் இசைக்கு என்றுமே ஒரு தனி தரம் உண்டு. தொடர்ந்து வெற்றிகரமான இசை வழங்குவதில் ஹாரிஸின் திறமை அலாதியானது. அவரின் இசையில் சமீபத்தில் வெளியான "பீமா" திரைப்படப்பாடல்கள் பற்றி கொஞ்சம் பார்க்கலாமா??

எனதுயிரே:
சாதனா சர்க்கமின் இனிமையான குரலில் அழகாக தவழும் பாடல். சமீபத்தில் வெளியான "கிரீடம்" படத்தில் வரும் 'அக்கம் பக்கம்" பாட்டை போல அருமையான மெலடி பாடல். பாடலில் வரும் நிகில் மாத்யூவின் ஆண் குரலும் பாடலுக்கு நயம் சேர்த்து நம்மை குழைய வைத்துவிடும்.

நீங்க என்ன நினைக்கறீங்க??? :-)



முதல் மழை:
வழமையான ஹாரிஸ் பாடல் என்று கேட்க ஆரம்பித்தவுடன் தெரிந்து விடுகிறது. ஆரம்ப ஹம்மிங் மற்றும் தாளம் எல்லாம் கேட்கும் போதே காலம் காலமாக நாம் கேட்டு வந்த ஹாரிசின் பல பாடல்கள் மனத்திரையில் ஆரசல் புரசலாக தோன்றி மறைகிறது. சிறிது நேரத்தில் மனதை அமைதி படுத்திவிட்டு நாம் இசையை இரசிக்க ஆரம்பித்து விடுகிறோம். கேட்க கேட்க இனிமை கூடும் பாடல்களின் இரகத்தில் இந்த பாடலை கட்டாயமாக சேர்க்க்கலாம்.ஹரிஹரனின் மயக்கும் குரலுடன் சேர்ந்து மற்ற பாடகர்களும் இசைக்கு அழகு சேர்ப்பது இப்பாடலுக்கு சாதகம்.

நீங்க என்ன நினைக்கறீங்க??? :-)


ஒரு முகமோ:
பாடலை கேட்க ஆராம்பித்த உடன் என்னையும் அறியாமல் ஒரு ஆங்கில பாடல் தான் ஞாபகம் வந்தது.க்வீன்் எனப்படும் ஆங்கில பாடற்குழுவின் "We will rock you " பாடல் தான் அது.
பாடலை நிங்களும் கொஞ்சம் கேட்டு பாருங்கள்.



ஆனால் என் நண்பர் வேறொரு பாடல் ஒன்றை அளித்து இதையும் கேட்டுப்பார் என்று சொன்னார்.

முதல் பாடலை விட இந்த பாடல் சற்று அதிகமாகவே ஒத்துப்போனது

முதல் பாட்டு கேட்டால் காபி என்று சொல்ல முடியாது ஆனால் கண்டிப்பாக இன்ஸ்பயர் பண்ணப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது,ஆனால் இரண்டாவது பாட்டை கேட்டவுடன்......
நீங்களே யோசித்து முடிவெடுத்துக்கொள்ளுங்கள்!! :-)
நரேஷ் ஐயர் தனக்கே உரித்தான உணர்ச்சிப்பூர்வமான குரலில் உருகி உருகி பாடியிருக்கிறார்.குரல்களின் விளையாட்டுடன் பலதரப்பட்ட கோரஸ்களோடு சேர்ந்து பாட்டு அமர்களமாக முடிகிறது.

நீங்க என்ன நினைக்கறீங்க??? :-)


ரகசிய கனவுகள்:
கேட்ட வுடன் திரும்பவும் இந்த பாட்டினால் இன்ஸ்பயர் ஆகி இருக்கலாம் என்று தோன்றியது.இந்த பாட்டின் வேகத்தை கொஞ்சம் அதிகப்படுத்தினால் ரஹமானின் ஹிந்திப்பாட்டினை போலவே இருந்தது!! பாடல் சுமார் ரகம். கேட்க கேட்க பிடித்துப்போகும் ரகம். நடுவில் மிக அழகான வயலின் மற்றும் சாரங்கி இசை பயன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மதுஸ்ரீயின் சற்றே கொச்சை தமிழின் எதிரில் ஹரிஹரனின் கம்பீரமான குரலும் ஸ்பஷ்டமான உச்சரிப்பும் தனியாக நிற்கிறது.பாடலின் கடைசியில் மிக அழகான நாதஸ்வர பயன்பாடு.

நீங்க என்ன நினைக்கறீங்க??? :-)


சிறு பார்வையாலே:
பாட்டு கேட்க ஆரம்பித்தவுடனே சிவாஜி படத்தின் "பூம்பாவாய்" பாடல் பளிச்சென ஞாபகம் வந்தது!! பாடலின் தாளம்,மெட்டு இரண்டுமே அந்த பாட்டை நினைவு படுத்துவதாக அமைந்திருக்கிறது். சிறிது நேரம் கழித்து தான் "செல்லமே" படத்தின் இந்த பாட்டு எனக்கு தோன்றியது. இரண்டு பாடலிலும் வரும் ஆண் குரலும் ஆலாபனைகளும் இந்த இரண்டு பாடல்கலின் ஒற்றுமையை உயர்த்திக்காட்டுகிறதா என்று தெரியவில்லை.

நீங்க என்ன நினைக்கறீங்க??? :-)


ரங்கு ரங்கைய்யா:
"ரோஜா கூட்டம்" படத்தில் வரும் "சுப்பம்மா சுப்பம்மா" பாடலால் ஆரம்பம் இன்ஸ்பயர் ஆகியிருக்கிறது என்று கேட்டவுடன் தெரிந்தது. மற்றும் பல குத்துப்பாட்டு அம்சங்களும் சேர்த்து ஒரு ஐடம் பாடலை தேர்த்த முயன்றிருக்கிறார் இசை அமைப்பாளர். பாடல் அவ்வளவாக என் மனதில் ஒட்டவில்லை. படத்தில் சிகரெட் பற்ற வைக்க எல்லோரும் எழுந்து போகும் பாடலாக இது அமையும் என்று பட்சி சொல்லுகிறது.

நீங்க என்ன நினைக்கறீங்க??? :-)



ஒரு படத்துக்கு இசை அமைப்பது என்பது கடினமான செயல். அதுவும் தொடர்ந்து பல படங்களுக்கு இசை அமைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதனால் முன் கேட்ட பாடல்களின் சாயல் ஏதாவது புதிதாக போடப்படும் பாடல்களில் தெரிவது வியப்பல்ல. ஆனால் அது போல இல்லாமல் தனித்துவத்துடன் விளங்கும் பாடல்கள் தான் காலத்தை கடந்து என்றும் பசுமையாக நினைவில் நிற்கும் என்பதை நாம்் பார்த்திருக்கிறோம்.
பீமாவின் பாடல்கள் கேட்கும்படியாக இருந்தாலும் ,ஒண்றிரண்டு பாடல்கள்் இனிமையாகவே இருந்தாலும் கூட தனித்துவமாக இல்லாததால் அடுத்த வருடமே மனதிலிருந்து் மறைந்துவிடும் என்று தோன்றுகிறது.

உங்கள் கருத்து என்ன??? ;)



Friday, September 07, 2007

நறுமுகையே நறுமுகையே - நளினா நீ கொஞ்சம் நில்லாய்!

மிக மிகப் பழங்காலத் தமிழ்; சங்க இலக்கியப் பாடல்! அதைச் சினிமாவில் வைத்தால் செல்லுமா? ஆடியன்ஸ் கல்லெறிவார்களே!
சரி, அதை சுரங்களோடு கர்நாடக மெட்டில் பாடினால்? கல்லா?...பாறையே எறிவாய்ங்க!

டேய், அதெல்லாம் ஒண்ணுமில்லை மச்சி. காலேஜ் பசங்க, பொண்ணுங்க எல்லாரும் இந்த ட்யூனைத் தான் ஹம் பண்ணுறாங்கடா.
சில பேரு, தமிழ்-லயும் வீக்கு! காதல்-லயும் வீக்கு!
இந்தப் பாட்டு வந்த போது, என்னைக்கும் இல்லாத திருநாளா, தமிழ் ஆசிரியருக்கு அவிங்க ரொம்பவே மரியாதை காட்டுனானுங்கப்பா!

எதுக்காம்? - இந்தப் பாட்டின் வரிகளை வாங்கி மனப்பாடம் செய்யத் தானாம்!
அப்படி என்னடா மச்சி இந்தப் பாட்டுல அப்படி ஒரு மேஜிக் இருக்கு?
வரிகளா? இசையா? குரலா? எதுடா, எது? எது?
உன்னி கிருஷ்ணனும் பாம்பே ஜெயஸ்ரீயும் பாடின பாட்டு தானே!
இருவர் படத்தில், ரஹ்மான் கொடுத்த மாஸ்டர் பீஸ்!

என்னாது ரகுமானா? பொதுவா இந்த மாதிரி கர்நாடிக் மெட்டு எல்லாம் நம்ம மொட்டை தானடா கலக்குவாரு!
நல்லாத் தெரியுமா? இசை ஞானி இளையராஜாவா இருக்கப் போவுது!
ச்சே ச்சே! நிச்சயமா ரகுமான் தாண்டா!
ராஜா இதுல பெரிய பிஸ்து தான். ஆனா அங்கொண்ணுமா, இங்கொண்ணுமா ரகுமான் கொடுத்த கர்நாடிக் மாஸ்டர் பீசுல இதுவும் ஒன்னுடா!



ஆமாண்டா மாப்ள, எழுதியவரு யாரு? - நம்ம கவியரசர் வைரமுத்து தானே!
அதுல என்னடா சந்தேகம்! அவரே தான்!
சும்மாவே அமீபா, நோக்கியான்னு இங்கலீஷ் வார்த்தைகளை நேச்சுரலா தமிழோட கலந்து அடிப்பாரு! அவருக்குத் தூய தமிழ்ல இப்படிப் பாட்டு போடக் கசக்குமா என்ன?
இதுல வர சில வரிகளைச் சங்கத் தமிழ் பாட்டுல இருந்து அப்படியே வரி மாத்தாம கொடுத்திருக்காருடா!

அதுவும் "யாயும் யாயும் யார் ஆகியரோ - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல" என்று வருது பாரு!
அது...குறுந்தொகை-ன்னு ஒரு பழம் பெரும் இலக்கியப் பாட்டுல இருந்து எடுத்துக்கிட்டாரு மனுசன்.
அதை எழுதனவரு பேரே செம்புலப்பெயனீரார்-னு சொல்லுவாங்களாம்!

ஹூம்...லேசா ஞாபகம் வருதுடா! இதே பாட்டைத் தான் நான் சாய்ஸ்-ல வுட்டேன் ப்ளஸ்டூ-ல!
ஹூம்...நேரம் பாத்தியா! அப்ப "சாய்ஸ்" ல வுட்ட!
இப்ப, பெப்சி உங்கள் "சாய்ஸ்"-ல அதையே கேட்டு கேட்டு வாங்கற!


பாடறவன் இருக்கானே, அவனும் ஒன்னும் சும்மா இல்லடா! உன்னி கிருஷ்ணன்! சொல்லவே வேணாம் - மெலடி மன்னன்.
அவன் கண்டி நம்ம காலேஜ்-ல இப்ப படிச்சான்னு வையி...ஒரு பிகரு நம்மள பாக்காதுங்க!
அது என்னமோ கரெக்டு தான்டா! குரலுக்குக் குரல், கொஞ்சும் குரல் வேற! சொல்லணுமா நம்ம பொண்ணுங்களுக்கு!
கூடப் பாடினது பாம்பே ஜெயஸ்ரீ. அந்த அம்மா கொஞ்சம் அடர்த்தியா பாடுவாய்ங்க! இதுல நல்லாத் தான் குழைஞ்சு பாடி இருக்காங்க!

சரி, அது என்னமோ ஒரு ராகம் சொன்னியே! இன்னாது - சூரிய காந்தியா?
டேய் டொக்கு! அது சூரிய காந்தியும் இல்ல, இந்திரா காந்தியும் இல்ல! அது பேரு நளின காந்தி டா! அந்த ராகத்துல தான் இந்தப் பாட்டைப் போட்டிருக்காங்க!

ஒங்க கொக்கா மக்க! ஒனக்கு எப்படிடா இதெல்லாம் தெரியும்? பாட்டு க்ளாஸ் பத்மா டீச்சரைக் கணக்கு பண்றியே, அந்த எக்ஸ்பெரீயன்ஸா?
அடப்பாவி! இது இசை இன்பம் பதிவுல, அந்த பாட்டுக்காரப் பையன் CVR சொன்னதுடா மச்சி!
சரி வா, நாம பாட்டைப் பார்க்கலாம்! ராகம், போகத்துக்கெல்லாம் அப்பறம் வரலாம்!

பாடலைக் கேட்டுக் கொண்டே படிக்க, இங்கே!
பாடலைப் பொருளோடு அனுபவித்துக் கேட்கும் போது, ஈடுபாடு இன்னும் அதிகமாகிறது. அதான் சற்றே கடினமான சொற்களுக்கு மட்டும் விளக்கம். மத்ததெல்லாம் உங்களுக்குத் தெரியாததா என்ன?

நறுமுகையே நறுமுகையே
நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து
நீயொரு திருமொழி சொல்லாய்
(முகை=அரும்பு; நறுமுகை=வாசமுள்ள அரும்பு;
என்ன அரும்பு? மல்லிகையோ, இருவாட்சியோ...காதலர்களுக்குத் தான் தெரியும்!
ஒரு நாழிகை = 24 நிமிடம்; 60 நாழிகை = ஒரு நாள் என்பது கணக்கு.

செங்கனி ஊறிய வாயா? - அது எப்படி கனி ஊறியதுன்னு தெரியும்? என்ன கனி? முக்கனியா?
அடப் போங்க, நான் சொல்ல மாட்டேன். ஒரே வெட்கமா இருக்கு :-)

அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றித் தரள நீர் வடிய
கொற்றப் பொய்கை ஆடியவள் - நீயா?

(அற்றைத் திங்கள் அந்நிலவில்)
(அற்றைத் திங்கள் = அந்த மாதம்;
தரளம்=முத்து; நெற்றித்தரள = நெற்றியில் முத்து முத்தாய் நீர் வடிய;
பொய்கை=குளம்; கொற்றப் பொய்கை = அரண்மனைக் குளத்தில் விளையாடின பெண் நீ தானே?)

திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகை பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே
வேல்விழி மொழிகள் கேளாய்

(புரவி=குதிரை)

அற்றைத் திங்கள் அந்நிலவில்
கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றைப் பார்வை பார்த்தவனும் - நீயா?

(அற்றைத் திங்கள் அந்நிலவில்)


மங்கை மான்விழி அம்புகள்
என் மார் துளைத்தது என்ன!
பாண்டி நாடனைக் கண்டு
என்உடல் பசலை கொண்டது என்ன!
(பசலை = பெண்களுக்கு மட்டுமே வரும் காதல் நோய்; அதனால் தோலில் உண்டாகும் நிற மாற்றம்; பெரும்பாலும் பொன்னிறமா மாறி இருக்கும்; பார்த்தவுடனே சொல்லிடலாம் இது காதல் தான் என்று!
இப்பவெல்லாம் இந்தப் பசலை யாருக்காச்சும் வருதா தெரியலையே! நீங்க யாரையாச்சும் பார்த்திருக்கீங்களா? :-)
ஒரு வேளை இந்தக் காலத்தில் பொண்ணுங்களை விட்டுவிட்டு, பசங்களுக்கு மட்டும் தான் பசலை வருதா என்ன? :-)


நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையில் மேகலை இறுக்கவில்லை

(நறுமுகையே நறுமுகையே)

(மேகலை = ஒட்டியாணம் போன்ற ஆபரணம். பெண்கள் இடுப்பில் அணிவது; ஏழு அல்லது எட்டுக் கோர்வை இருக்கும். இழுத்துக் கட்டலாம் ஒரு பெல்ட் போல; இடையில் மேகலையை இறுக்கிக் கட்டக் கூட முடியாத அளவுக்கு அவள் மெலிந்து போய் விட்டாளோ!)

யாயும் யாயும் யார் ஆகியரோ
நெஞ்சு நேர்ந்தது என்ன?
யானும் நீயும் எவ்வழி அறிதும்
உறவு சேர்ந்தது என்ன?

(யாய்=தாய்; எங்கம்மாவும் ஒங்கம்மாவும் ப்ரெண்ட்ஸா? எனக்கும் ஒனக்கும் எப்படி இப்படி ஒரு பொருத்தம் )

ஒரே ஒரு தீண்டல் செய்தாய்
உயிர்க்கொடி பூத்தது என்ன!
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல்
அன்புடை நெஞ்சம் கலந்தது என்ன!

(செம்புலம்=செம்மண் பூமி; செம்மண்ணில் சேர்ந்த நீர் போல ஒன்னா மிக்ஸ் ஆனது நம்ம காதல்!)

திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகை பாராய்
அற்றைத் திங்கள் அந் நிலவில்
கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றைப் பார்வை பார்த்தவனும் - நீயா

அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றித் தரள நீர் வடிய
கொற்றப் பொய்கை ஆடியவள் - நீயா



படம்: இருவர்
இசை: ஏ ஆர் ரஹ்மான்
குரல்: உன்னி கிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ
வரிகள்: வைரமுத்து


இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்னர், "பிரிவர்" எனக் கருதி அஞ்சிய தலைமகளின் குறிப்பு வேறுபாடு கண்டு, தலைமகன் கூறியது:

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
- செம்புலப்பெயனீரார்; குறுந்தொகை, குறிஞ்சித் திணை

எங்கம்மாவும் ஒங்கம்மாவும் ப்ரெண்ட்ஸா?
எங்க டாடியும் ஒங்க டாடியும் பார்ட்னர்ஸா?
எனக்கும் ஒனக்கும் எப்படி இப்படி ஒரு பொருத்தம், மேட் ஃபார் ஈச் அதர் மாதிரி?
செம்மண்ணில் தண்ணி கொட்டிரிச்சுன்னா
, அப்படியே ஒன்னா மிக்ஸ் ஆயிடுமே!
அது போல, நம்ம ஹார்ட்டு ரெண்டும் ஒன்னாயிருச்சு ஸ்வீட் ஹார்ட்!
- இதாண்டா பொருள்!

சூப்பர்டா மச்சி! பாட்டுக்குப் பொருளை, இந்த மாதிரியே எக்ஸாம்-ல எழுதினேன்னு வையி, நூத்துக்கு நூறு தான்! :-)
ஒரு தங்கரதத்தில் பொன் மஞ்சள் நிலவுன்னு பாட்டு வருமே, அதுல கூட
"செம்மண்ணிலே தண்ணீரைப் போல் உண்டான சொந்தம் இது"-ன்னு கண்ணதாசன் கூட இதே பொருள்-ல பாடியிருக்காருடா!

டேய், போதும் போதும்! ஒத்துக்கறேன்!
ஒனக்குக் கூட கொஞ்சம் இசை ஞானம் இருக்குடா மச்சி!
இசை இன்பம் மேனேஜர் CVR கிட்ட சொல்லி ஒன்னையும் அந்த வலைப்பூவில் சேத்துக்கச் சொல்றேன்! போதுமா?


நளின காந்தி என்பது அருமையான ராகம். பேருக்கு ஏற்றாற் போல் அப்படி ஒரு நளினம்!
அந்த ராகத்தில் சில பாடல்கள், இதோ உங்கள் செவிகளுக்கு!

எந்தன் நெஞ்சில் நீங்காத...தென்றல் நீ தானா?


மனம் விரும்புதே உன்னை - உன்னை


தியாகராஜரின் மனவயால கிஞ்சன என்ற நளினகாந்தி கீர்த்தனை - மாண்டலின்


லயதரங்கா என்னும் வாத்தியக் குழு (Band), நளினகாந்தியைப் போட்டி போட்டு வாசிக்கறாங்க! இங்கே கேளுங்க!

என்னாங்க, நளினாவை நளினமா ரசிச்சீங்களா?
அடுத்த பதிவில் இன்னொரு ஃபிகரை ரசிக்கும் வரை...
"வர்ட்டா" ஸ்டைலில் வரட்டா? :-)

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP