Sunday, November 18, 2007

காதல் இன்பம்: வான் நிலா, நிலா அல்ல! உன் வாலிபம் நிலா!

அமர கானம்-னு கேள்விப்பட்டு இருக்கீங்களா? வரிகளா? இசையா? பாடறவங்க குரலா? - எது ஒசத்தி? - இதுக்கு உங்களால் விடை கண்டுபுடிக்க முடியலைன்னா, அது அமர கானம் தான்! :-)

நண்பர் ஜி.ராகவன் இன்னிக்கு காலையில், சும்மா கிடந்த சங்கை ஊதி விட்டிருந்தாரு! :-)
ஒரு போட்டி, ரெண்டு பாட்டு! தெலுங்குப் பாட்டு மெட்டில் இருந்து தமிழ்ப் பாட்டின் மெட்டைக் கண்டுபிடிக்கணுமாம்! அதில் ஒரு பாட்டு, "வான் நிலா நிலா அல்ல". அதுல ஜெயிச்சதுக்குத் தனியா பரிசு கொடுக்கறதா வேற சொல்லி இருக்காரு. G3, உங்களிடம் சொன்னரா? இப்பவே எழுதி வாங்கிக்குங்க :-)

பாட்டைக் கேட்டதில் இருந்து, இந்த இசையிலேயே மூழ்கி விட்டேன் சில நேரத்துக்கு! ஒரு பத்து முறையாச்சும் திரும்ப திரும்பக் கேட்டிருப்பேன்! - அதுவும் அந்த வயலின் இசையில் - அப்படி ஒரு சுகம்! காதல் சுகம்!
காதலைப் பற்றி நினைச்சாலே ஒரு சுகம்! அதே அந்தக் காதலைப் புதுமையாகச் சொன்னா அது ஒரு புது சுகம் தானே!
அவள், என் காதலா, லலா, லலா என்னும் போது,
லலா லலா என்று காதலியின் மடியிலா, மொட்டை மாடியிலா, வான் நிலாவிலா, - தாலாட்டித் தூங்கும் சுகம் தெரியும் அல்லவா?


மொதல்ல காதல் தவழும் ஒவ்வொரு வரியையும் படிச்சி, ருசிச்சிப் பாருங்க!
அப்பறம் பாட்டின் பின்னணி என்ன-ன்னு பார்ப்போம்! இந்தப் பாட்டுக்கு அழுத்தமான இசை-ன்னு எடுத்துக்கிட்டா, வெறும் ஒத்தை வயலின் தான்! வேற ஒன்னுமே இல்ல!
இதோ SPB-யின் குரலில் கேட்டுக் கொண்டே படிங்க! இங்கே!


லா லலா லலா லலா - லலால லாலலா!

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா?
(வான் நிலா நிலா அல்ல)

வயலின் இசை.....
பாருங்க...மானே இல்லாத ஊராம்! அதனால் காதலி கண்ணுலயே மானைக் காட்டுகிறாளாம்! சாயல் கண்ணிலா!
பூ பூக்காத பூமி-ன்னு பூவுக்குப் பதிலா, பெண்ணைப் படைத்தானாம்! ஜாடை பெண்ணிலா!
பொண்ணு வைக்கற இடத்தில் பூவை வைக்கிறோன்-னு சொல்வாங்களே! அது இதானா? :-)

தெய்வம் கல்லிலா? - ஒரு தோகையின் சொல்லிலா?
பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா?
அவள் காட்டும் அன்பிலா?
இன்பம் கட்டிலா? அவள் தேகக் கட்டிலா?
தீதிலா காதலா ஊடலா கூடலா?
அவள் மீட்டும் பண்ணிலா?

(வான் நிலா நிலா அல்ல)

வயலின் இங்கே மிகவும் அருமை.....
(இன்பம் கட்டிலா என்று கேட்கிறார். கட்டிலா இன்பம் கட்டு இல்லாத இன்பம்-ன்னும் கொள்ளலாம்!
தேகக் கட்டிலா? - கட்டான தேகமா? இல்லை தேகமே கட்டிலா?
ஆனா தீதிலா காதலான்னு கேட்டு, காதல் இன்பத்தை முன்னாடி கொண்டு வந்துடறாரு கவிஞர்! காமத்து இன்பம்...காதல் இன்பமாய் மாறும் போது பேரின்பம் என்பதை அடுத்த பத்தியில் வெட்ட வெளிச்சம் ஆக்கிடறாரு)


வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா?
அவள் நெஞ்சின் ஏட்டிலா?
சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டது ஏன்?
அதைச் சொல்வாய் வெண்ணிலா!

(வான் நிலா நிலா அல்ல)

(சொந்தம் இருளிலா? - சென்ற பத்தியில் தேகக் கட்டிலான்னு கேட்டவர், இங்கு இருளிலா என்கிறார். இல்லை. சொந்தமும் பந்தமும் காதலும் இன்பமும்..ஒரு பூவையின் அருளிலா? அவள் நெஞ்சின் ஏட்டிலா? - பூவையின் அருளில் தான்! நெஞ்சின் ஏட்டில் தான்!)

படம்: பட்டினப் பிரவேசம்
இசை: M.S.விஸ்வநாதன்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
குரல்: S.P.பாலசுப்ரமணியம்
வயலின் வாசித்தவர்: மணி

பாட்டு ஒலிப்பதிவு முடிந்ததும் SPB, வயலின் மணியை நோக்கித் திரும்பி இரு கைகளையும் தட்டினாராம். அப்படி ஒரு வயலின் சுகம் இந்தப் பாட்டில்!

தம்பி சீவீஆர் வயலின் பற்றிய பதிவு ஒன்றை இசை இன்பத்தில் முன்பு இட்டிருந்தார்.
அப்போ ஓப்பனிங் பீசாக நல்ல வயலின் இசை ஒன்றைப் போட ஆசைப்பட்டார். என்னிடமும் கேட்டார். அப்போ இந்தப் பாட்டு எப்படியோ மிஸ்ஸாகி விட்டது...இப்போ மீண்டும் அவருக்காகவும், உங்களுக்காக இங்கு வந்து விட்டது! :-)



இந்த பாட்டுக்குப் பின்னால் ஒரு கதை உண்டு...
மெல்லிசை மன்னர் MSV ஒரு ட்யூனைக் கொடுத்து, இதுக்குப் பாட்டு எழுத வேணும்னு கவியரசர் கண்ணதாசனைக் கேட்டுக் கொண்டாராம்.
லா லலா லலா லலா - லலால லாலலா!

கண்ணதாசன்: டேய் விசு! என்னது இது?
நீ பாட்டுக்கு ல லலா, லா லலான்னு வாயாலயே வேகமாச் சொல்லிட்டே! இதுக்கெல்லாம் பாட்டு எழுத முடியாது! அதுக்குன்னு வார்த்தை வரவேணாமா?
விஸ்வநாதன்: அண்ணே சரியாத் தேடிப் பாருங்கண்ணே! கிடைக்கும்!

கண்ணதாசன்: எனக்கு என்னமோ இது சரியா வரும்-னு தோனலை...நீ வேற ட்யூன் போடுடா!
விஸ்வநாதன்: இதப் பாருங்க செட்டியாரே! இது தான் ட்யூன்! இதுக்கு எழுத முடிஞ்சா எழுதுங்க! இல்ல நான் இதுக்கு மட்டும் வேற கவிஞர வச்சி எழுதிக்கறேன்!
(இப்படி ஒரு அன்பு ஊடல் அவர்களுக்குள். இதெல்லாம் கண்ணதாசன்-விஸ்வநாதன் விஷயத்துல சகஜம்-னு இண்டஸ்ட்ரிக்கே தெரியும்!)

கண்ணதாசன்: டேய்...அப்படி எல்லாம் போயிடாதே! சும்மா உன்னைக் கிண்டல் பண்ணேன். இப்போ நான் சொல்றேன் கேட்டுக்கோ...
என்னமோ பெருசா லா, லா, லா, லு-ன்னு ட்யூனைக் கொடுத்தியே! பாரு நானும் லா, லா, லா, லா ன்னே வச்சி எழுதறேன். அப்போ தெரியும்!
வான் நிலா...நிலா அல்ல
உன் வாலிபம் நிலா...

விஸ்வநாதன்: அண்ணே, அடேயப்பா...பாதர் இன் லா, சன் இன் லா, பிரதர் இன லா வைத் தவிர எல்லா லாவும் உள்ளே புகுத்திட்டீங்களே! இவ்ளோ சரக்கை வச்சிக்கிட்டு ஏண்ணே முரண்டு பிடிக்கறீங்க?
கண்ணதாசன்: டேய், உன் கூட நான் விளையாடாம, வேற யார்டா விளையாடப் போறாங்க?


இப்படி லா லா ன்னு வைத்து, இன்னொரு பாட்டும் பின்னாளில் வந்தது!
மெளனம் சம்மதம் படத்தில் இளையராஜா போட்டாரு; ஜேசுதாஸ்-சித்ரா பாடுவாங்க, கல்யாண தேன் நிலா ன்னு!
ஆனா முதல் காதல், என்னிக்குமே முதல் காதல் தானே? என்ன சொல்றீங்க? வான் நிலா நிலா அல்ல - அது போல் வேறு எந்த நிலாவும் அல்ல!

கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா என்னோடு வா நிலா
தென்பாண்டிக் கூடலா தேவாரப் பாடலா
தீராத ஊடலா தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா என்னாளும் கூடலா
பேரின்பம் நெய்யிலா நீ தீண்டும் மெய்யிலா
பார்ப்போமே ஆவலா வாவா வா நிலா


கடைசியா:
ஜிரா மட்டும் தான் கேள்வி கேட்பாரா? நான் கேக்கக் கூடாதா? :-)
வீடியோவில் சிவச்சந்திரன் கூட நடிச்ச அந்தக் கதாநாயகி யாருங்க?

23 comments:

cheena (சீனா) said...

கேயாரெஸ், பாடல் அருமை - இசை அதனினும் அருமை - பலமுறை ஏற்கெனவே கேட்டிருப்பினும், தங்கள் கருத்துகளோடு. படித்துக் கொண்டே கேட்பது இன்பம் தான். கவியரசின் வரிகள், மெல்லிசை மன்னரின் இசை, பாடும் நிலாவின் மெல்லிய உச்சரிப்பு - இவை அனைத்துமே ஒரு இனிய இரவில், நிலா முற்றத்தில், துணையுடன் மகிழ்ந்திருக்கும் நேரத்தை நினைவு படுத்துகிறது.


//தேன் நிலா எனும் நிலா - தேவியின் நிலா//

தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா

"என்" விட்டுப் போய் விட்டதா ?

கோவி.கண்ணன் said...

நிலாவை வச்சு பாடுவதெல்லாம் சூப்பர் ஹிட் பாடல்கள் தான்.

உதாரணத்துக்கு ஒண்ணு சொல்லனும்னா...

"நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பாணம்..."

மன்மதன் ரதியாக கமலும் சில்க் ஸ்மிதாவும். அப்பப்பா ... ரஜினி கூட சிவாஜியில் முயற்சித்துருப்பார் அந்த பாடலை கமல்வேடத்தில்

jeevagv said...

பின்புலக் கதையிலும் சுவாரஸ்யம் குறையவில்லை!
சூப்பர்!

பாலராஜன்கீதா said...

//வீடியோவில் சிவச்சந்திரன் கூட நடிச்ச அந்தக் கதாநாயகி யாருங்க? //

அவர் பெயர் மீரா என்று நினைக்கிறேன். அவர் வேறு ஏதாவது படத்தில் நடித்தாரா என்று நினைவில்லை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவி.கண்ணன் said...
நிலாவை வச்சு பாடுவதெல்லாம் சூப்பர் ஹிட் பாடல்கள் தான்//

SJ Surya கூட நடிச்சாங்களே! அந்த நிலாவைச் சொல்லுறீங்களா கோவி அண்ணா? :-)

//"நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பாணம்..."
மன்மதன் ரதியாக கமலும் சில்க் ஸ்மிதாவும்//

அச்ச்சோ!
Great men think alike!
நானும் ஜிராவும் நிலாப் பாட்டில் இந்தப் பாட்டைத் தான் சாட்டிக்கிட்டு இருந்தோம்! நீங்களும் இதையே சொல்லுறீங்க! சூப்பர்! :-)

சீமாச்சு.. said...

கேயாரெஸ், நல்ல ஆராய்ச்சி.. நீங்க சொன்ன மாதிரி இது ஒரு அமர கானம் தான்..

நீங்கள் விவரித்த விதமும் அருமை.. உங்கள் கொஞ்சு தமிழும் அருமை..

உண்மையாவே காதலிருத்திருந்தால் தான் காதலின் அந்த சுகம் தெரியும்..

தம்பி இளா கிட்டே உங்க அனுபவங்களை அவிழ்த்து விடுங்க.. ஒரு கதை எழுதிடுவாரு...


//பேரின்பம் நெய்யிலா ....//
அது மெய்யிலா னு இருக்கணும்.. ச்சின்ன spelling mistake..

அந்த மெளனம் சம்மதம் படத்தில் மம்மூட்டி ஒரு லாயரா நடிச்சிருப்பார்.. அதனால தான் அந்தப் பாட்டு.. "லா..லா" னு முடிஞ்சுதுன்னும் சொல்லுவாங்க..


அதுல அமலா ரொம்ப நல்லாயிருப்பாங்க...


வலையுலகத்துல ஒரு "அமலா ரசிகர்" இருக்கார் தெரியுமோ? அவரும் கிட்டத்தட்ட ஸ்ரீரங்கம் தான்... தெரியலன்னா போன் பண்ணுங்க.. சொல்றேன்...

அவர் மனைவியே... "எங்க வீட்டு **** க்கு அமலான்னா.. உயிர்.." அப்படீன்னு சொல்ற அளவுக்கு உயிர்-னா பாத்துக்குங்களேன்...

அன்புடன்,
சீமாச்சு

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//cheena (சீனா) said...
கவியரசின் வரிகள், மெல்லிசை மன்னரின் இசை, பாடும் நிலாவின் மெல்லிய உச்சரிப்பு - இவை அனைத்துமே ஒரு இனிய இரவில், நிலா முற்றத்தில், துணையுடன் மகிழ்ந்திருக்கும் நேரத்தை நினைவு படுத்துகிறது//

ஆமாங்க சீனா!
இந்தப் பாட்டு
கவிஞரின் தமிழுக்கும் தமிழ்
இசைக்கும் வயலின் இசை
குரலுக்கும் எஸ்.பி.பி
மெட்டுக்கும் எம்.எஸ்.வி
அப்படியே ஒன்னா கலந்து கட்டிய அமுதம்!

//தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா
"என்" விட்டுப் போய் விட்டதா?//

"என்" னைத் தேவிக் கிட்ட கொடுத்துட்டேன் போல!
அதான் தேவியில் "என்" விட்டுப் போச்சு :-)

பதிவில் சரி பண்ணிட்டேன் சீனா சார்! சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!

manipayal said...

அருமையான பாடல் சார். அதில் நடித்தவர் மீரா. இவர் மீண்டும் சிந்து பைரவி படத்தில் "தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நா" பாடலில் அதே சிவச்சந்திரனுடன் அதே பாலசந்தர் படத்தில் நடித்தார்.

பாலராஜன்கீதா said...

//வலையுலகத்துல ஒரு "அமலா ரசிகர்" இருக்கார் தெரியுமோ?//
அந்த அழகனின் பெயர் எங்களுக்குத்தெரியும் ;-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஜீவா (Jeeva Venkataraman) said...
பின்புலக் கதையிலும் சுவாரஸ்யம் குறையவில்லை!
சூப்பர்!//

நன்றி ஜீவா
கதையை எம்.எஸ்.வி ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் சொன்னது. அதை கொஞ்சம் வசன நடையா எழுதிட்டேன் :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பாலராஜன்கீதா said...
//வீடியோவில் சிவச்சந்திரன் கூட நடிச்ச அந்தக் கதாநாயகி யாருங்க? //
அவர் பெயர் மீரா என்று நினைக்கிறேன்.//

நன்றி பாலராஜன் சார்!
மீராவே தான்!

//அவர் வேறு ஏதாவது படத்தில் நடித்தாரா என்று நினைவில்லை.//

சிந்து பைரவி...
மணிப்பயல் சொல்லி இருக்காரு பாருங்க.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பாலராஜன்கீதா said...
//வலையுலகத்துல ஒரு "அமலா ரசிகர்" இருக்கார் தெரியுமோ?//

அந்த அழகனின் பெயர் எங்களுக்குத்தெரியும் ;-)//

அட ஒரு க்ளூ கொடுங்கப்பா! :-)

அமலா....
நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்-னு ஒரு பாட்டு பத்தாம் வகுப்புல! பசங்க எல்லாம் சிரிப்பாங்க வாத்தியார் பாடும் போது! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Seemachu said...
நீங்கள் விவரித்த விதமும் அருமை.. உங்கள் கொஞ்சு தமிழும் அருமை..
உண்மையாவே காதலிருத்திருந்தால் தான் காதலின் அந்த சுகம் தெரியும்..//

தலைவா
என்ன சொல்ல வரீங்க!
எனக்கு கதை சொல்ற சுகம் தானுங்கோ தெரியும்! வேற ஒண்ணும் தெல்லேது!

//தம்பி இளா கிட்டே உங்க அனுபவங்களை அவிழ்த்து விடுங்க.. ஒரு கதை எழுதிடுவாரு...//

ஆகா...இது வேறயா
கதை எழுத மட்டுமா செய்வாரு!
புக்கு போட்டு விப்பாரு! :-)

////பேரின்பம் நெய்யிலா ....//
அது மெய்யிலா னு இருக்கணும்.. ச்சின்ன spelling mistake..//

தோ....மாத்திடறேன்

//அந்த மெளனம் சம்மதம் படத்தில் மம்மூட்டி ஒரு லாயரா நடிச்சிருப்பார்.. அதனால தான் அந்தப் பாட்டு.. "லா..லா" னு முடிஞ்சுதுன்னும் சொல்லுவாங்க..//

ஓ...

//அதுல அமலா ரொம்ப நல்லாயிருப்பாங்க...//

அமலா-ல வர "லா" ன்னுல்ல நான் நினைச்சேன்! :-)
அமலா அதுலன்னு இல்ல, தலைவா, எல்லாத்துலயும் நல்லாத் தான் இருப்பாங்க!

//வலையுலகத்துல ஒரு "அமலா ரசிகர்" இருக்கார் தெரியுமோ? //

எலே...யாரு லே அது? (எனக்குப் போட்டியா - ஹிஹி)

//அவர் மனைவியே... "எங்க வீட்டு **** க்கு அமலான்னா.. உயிர்.." அப்படீன்னு சொல்ற அளவுக்கு உயிர்-னா பாத்துக்குங்களேன்...//

சாமீ....தெய்வமே! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//manipayal said...
அருமையான பாடல் சார்.//

நன்றி மணிப்பயல்!
சார் வேண்டாமே! :-)

//அதில் நடித்தவர் மீரா. இவர் மீண்டும் சிந்து பைரவி படத்தில் "தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நா"//

கரீட்டாச் சொன்னீங்க தல! எனக்கும் அதே தான் தோனிச்சு!

G.Ragavan said...

ஆகா....அந்தக் கதாநாயகி பேர் தெரிஞ்சிக்கிறதுக்கு இவ்வளவு பெரிய பதிவா? கூச்சப்படாம யார்னு கேட்டுருக்கலாம்ல. இப்பிடி ஒரு பில்டப்பு!

சரி. நல்ல பாட்டு குடுத்திருக்கீங்க. நன்றி.

dubukudisciple said...

avanga peru meera!!!

Anonymous said...

நிலவு பாட்டுக்கள்

1) அத்திக்காய் காய் காய் ஆலங்காய்
வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே நீயும் பெண்ணல்லவோ
2) நிலவைப்பர்த்து வானம் சொன்னது
என்னை தொடாதே
அமரத்துவம் நிறைந்த சிவாஜி படப் பாடல்கள்
ராகவன்

ILA (a) இளா said...

என்னென்னமோ ஞாபகத்துக்கு வருது.. வேணாம்... விடுங்க.. ..இலாவுக்கும், இளாவுக்கும் பெரிசா என்ன வித்தியாசம் இருந்திற போவுது..

K.R.அதியமான் said...

நன்றி ரவி. படமும் அருமையாக இருக்கும்.

கிடார் இசையில் இளையராஜா அசத்தியிருப்பது :

1.செந்தூரப்பூவே செந்தூரப்பூவே சில்லென்ற காற்றே...

(16 வயதினிலே ; guitar strumming)

2.அழகே உன்னை ஆராதிக்கிறேன்.
(title song)

துளசி கோபால் said...

////"நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பாணம்..."...//

அட தேவுடா.....நம்ம கயித்துக்கட்டில் பதிவு எழுதும்போது மனசில் வந்து நின்ன வரிகள்.

வயசானகாலத்துலெ.........இதெல்லாம் வேணாமுன்னு நாசூக்கா(!!!)
விட்டுட்டேன்:-))))

குமரன் (Kumaran) said...

கல்யாணத் தேனிலா எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் இரவிசங்கர்.

குமரன் (Kumaran) said...

கல்யாணத் தேனிலா எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் இரவிசங்கர்.

அ.பாண்டியன் said...

இந்த பாடலின் பலமே அதன் வயலின் இசைதான். ஆனால் முகம் காட்டாத அந்த வயலின் கலைஞரை பற்றி ஒரு குறிப்புமில்லை.வயலின் மணி என்ற ஒற்றை தகவல் மட்டும்தான் உள்ளது. முகம்தெரிந்த பிரபலங்களை பக்கம் பக்கமாக எழுதிக் கொள்வது எளிது. அதிலும் இதில் பாடல் பிறந்த கதை ஒரு தலபுராணம் போல எல்லாரும் காப்பி பேஸ்ட் செய்துள்ளார்கள். MSV வாழ்க்கை வரலாறு நூலில் இந்த தகவல் இருக்கிறதாம். ஆனால் அந்த பாடலுக்கு வயலின் வாசித்த கலைஞர் பற்றி வேறு தகவல் யாருக்கும் தெரியாது. அதை தேடி கண்டுபிடிக்கும் முனைப்பும் யாரிடமும் இல்லை. பாடால் வெளிவந்து புகழ் அடைந்த போது அந்த கலைஞரை MSV அறிமுகப் படுத்தி இருந்தால்,இந்த பாடலின் புகழில் இவருக்கும் பங்கு இருக்கிறது என்று ஒரு credit கொடுத்திருந்தால் இன்று இந்த பாட்ட்டோடு MSV, SPB, கண்ணதாசன் வரிசையில் அந்த முகம்தெரியா கலைஞனின் பெயரும் இருக்கும்.

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP