ஜாஸ் (Jazz) இசை ஜாலம்
யோசித்து பார்த்தால் இந்த இசைக்கு ஏன் இவ்வளவு சக்தி என்று என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. என்னதான் இருந்தாலும் இசை என்பது நாம் எல்லோரும் எழுப்புவது போல் ஓர் விதமான சப்தம் தானே. அதற்கு எங்கிருந்து இப்படி மனதை குடைந்து இன்பம்,சோகம்,நெகிழ்ச்சி,வீரம்,உற்சாகம்,துயரம,பக்தி் என ஆயிரம் உணர்வுகளை ஊற்றி நிறப்பும் ஆற்றல் வந்தது என்று கேட்டால் என்னால் பதில் எதுவும் தர இயலாத. இந்த இசைக்கு மனித சமுதாயத்தின் அனைத்து தரப்பிலும் அடிமைகள் உண்டு. உலகின் வெவ்வேறு நாடுகளிலும் வெவ்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு காலக்கட்டங்களிலும் மக்கள் தங்களுக்கு தோன்றிய இசை வகைகளை உருவாக்கி வளர்த்து வந்திருக்கிறார்கள்.அப்படிப்பட்ட இசை வகைகளில் ஒன்றைத்தான் தான் நாம் இன்று பார்க்கப்போகிறோம்.
ஜாஸ் எனும் இசை வகை நம் தமிழ் திரை இசையில் நாம் நினைப்பதை விட நிறையவே கேட்டிருக்கிறோம். முழுக்க முழுக்க ஜாஸ் இசையை ஒட்டி பாடல்கள் கிடைப்பது கடினமானாலும் அதன் பாதிப்பில் ஏற்பட்ட பாடல்கள் நிறையவே இருக்கின்றன. அதுவும் இன்று நேற்றல்ல எம்.எஸ்.விஸ்வனாதன் காலத்தில் இருந்தே ஜாஸ் இசையை ஒட்டிய பாடல்கள் நம் தமிழ் திரை இசையில் அமைந்திருக்கின்றன. அதுவும் தமிழ்் திரையுலகில் மெல்லிசைக்கு அடித்தளம் அமைத்த எம்.எஸ்.விஸ்வனாதன் அவர்களின் பல புனைவுகளில் ஜாஸ் இசையின் உதாரணங்களை பார்க்கலாம். அப்படிப்பட்ட அதிகப்படியான ஜாஸ் இசையின் தாக்கம் அமைந்த பாடல் ஒன்று இதோ.
பாடல் :வரவேண்டும் ஒரு பொழுது
படம் : கலைக்கோயில் (1964)
பாடியவர் : எல்.ஆர். ஈஸ்வரி
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
முழுக்க முழுக்க ஜாஸ் தழுவலில் வந்த உதாரணத்திற்காக மேற்கண்ட பாடலை கொடுத்திருந்தேனே தவிர நாமே உணராத வகையில் ஜாஸ் இசையில் சார்ந்த பாடல்கள பல உள்ளன. அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்று இதோ!! :-)
பாடல் : நினைத்ததை நடத்தியே முடிப்பவன்
படம் : நம்நாடு (1969)
பாடியவர்கள் : டி.எம். சௌந்தர்ராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர்: வாலி
அட இப்படி 1960-களிலேயே நம் தமிழ் திரை உலகில் ஜாஸ் இசை ஒலித்திருக்கிறதா என்று கேட்கிறீர்களா??ஆம் நாம் விரும்பி கேட்டிருக்கும் பல தமிழ் திரையிசை பாடல்களின் பின்னால் ஜாஸ் இசையின் நளினம் ஒளிந்திருக்கிறது.
ஜாஸ் இசை என்பது உலகின் மிக புதிய இசை வகைகளில் ஒன்று என்று சொல்லலாம்.இதன் உருவாக்கம் அமெரிக்காவில் உள்ள கருப்பர் இன அடிமை குடியிருப்புகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்டது. அந்த சமயங்களில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில்் இருந்து பிட
ித்து வரப்பட்ட அடிமைகளின் மத்தியில் அவர்கள் நாட்டில் இருக்கும் பாரம்பரிய இசையான ப்ளூஸ் (Blues) இசை வகையின் ஒரு பரிமாணமே ஜாஸ் என உருவெடுத்தது. முதலில் தென் அமெரிக்க அடிமை காலனிகளில் மட்டுமே பார்க்கக்கிடைத்த இந்த ஜாஸ்,கருப்பர்கள் அமெரிக்காவின் நகரங்களுக்கு பரவ பரவ மேலும் பிரபலமாகியது. இது மேலும் மேலும் இடங்களுக்கு சென்று சேர சேர ,இந்த வகை இசையின் பல்வேறு உருவகங்களும் வெளி வர ஆரம்பித்தன. இதனால் அந்தந்த இடத்திற்கு ஏற்றார்போலும் ,இசையின் வேகம்,ஜதி போன்ற பில விஷயங்களினாலும் ஜாஸில் பல்வேறு பிரிவுகள் உண்டு.
எத்தனை பிரிவுகள் வந்தாலும் ஜாஸின் அடிப்படை தத்துவங்கள் ஆன சுதந்திரமான இசை ஓட்டமும், Improvisation என சொல்லக்கூடிய சம்யோஜிதமும் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். சுதந்திர வேட்கைக்கான பிரதிபலிப்பாக கருதப்படும் இந்த இசையில் கலைஞரின் தனித்திறமையை வெளிக்கொணரும் விதமாகவே பாடல்கள் அமைந்திருக்கும். நம் கர்நாடக சங்கீதத்தில் தனி ஆவர்த்தணத்தை போல் கலைஞர்கள் தனிதனியே தம் திறமையை காட்டி வாசிப்பது மிக சாதாரணம். தனிநபர் சுதந்திரத்தை வலியுருத்தும் இசை வகை என்பதால் குழுவில் அவரவர் தனிதனியே தாந்தோன்றியாக வாசித்துக்கொண்டிருக்க அந்த குழப்பமான இசை அமைப்பிலும் தோன்றும் ஒரு விதமான வித்தியாசமான இசை இந்த இசை வகையில் ஒரு முக்கியமான உத்தி. அது தவிர சிறிய குழுக்கள் பெரிய குழுக்கள் என இவர்கள் பிரிந்து இசை அமைக்க அதன் படி பெரிய குழு வகை (Big band) போன்று தனி தனி பிரிவுகளே கூட இந்த இசையில் தோன்றிவிட்டன. இதை தவிர ஸ்விங் (Swing), பெபாப் (Bepop),க
ூல் ஜாஸ் (Cool Jazz) போன்று பல பிரிவுகள் இந்த ஜாஸில் உண்டு.
இந்த இசையில் பெரிதும் பயன்படுத்தப்படும் கருவிகள் என பார்த்தால சாக்ஸபோன் (Saxophone), ட்ரம்பெட்(Trumpet),பியானோ (Piano), க்ளாரினேட்(Clarinet), கிதார(Guitar)்,ட்ரம்ஸ் (Drums) ஆகியவற்றை சொல்லலாம்.ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மற்ற இசை வகையில் எல்லாவற்றிலும் பெரிதும் பயன்படுத்தப்படும் வயலின் ஜாஸில் அவ்வளவாக பயன்படுத்தப்படுவதே இல்லை!!
தமிழ் திரை இசையில் நம்மையும் அறியாமல் அவ்வப்போது ஜாஸின் இசை நம் காதுகளில் நுழைந்துக்கொண்ட தான் வந்திருக்கிறது. ஆனால் நம் இசை அமைப்பாளர்கள் பலவிதமான இசை வகைகளையும் கலந்து நமக்கு ஒரே பாட்டாக விருந்து படைப்பவர்கள் என்பதால் ஜாஸின் தாக்கத்தை நம் பாடல்களில் உணர்வது கடினம். சமீபத்திய படங்கள் என்று சொல்லப்போனால் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமானின் இசை அமைப்பில் வெளிவந்த "இருவர்" படம் மிக தேர்ந்த ஜாஸ் இசைப்பிரயோகத்தின் உதாரணமாக கருதப்படுகிறது. இதில் வரும் "வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே" மற்றும் "ஹலோ மிஸ்டர் எதிர்கட்சி" போன்ற பாடல்களில் உள்ள ஜாஸ் இசையின் தாக்கத்தை கவனிக்காமல் விடுவது கடினம். ஆனால் இந்த படத்தில் ஜாஸ் இசை பாணியில் அமைந்த ஒரு பிரபலமான பாடலை கொஞ்சம் பார்க்கலாமா??
இந்த வகை இசையின் வித்தகர்களாக லூயி ஆம்ஸ்ட்ராங் (Louis Armstrong (1901-1971)),சிட்னி பெச்செட் (Sidney Bechet (1897-1959)), பிக்ஸ் பெய்டர்பெக் Bix Beiderbecke (1903-1931) ஆகியோரை கூறலாம்.
தற்பொழுது இருக்கும் ஜாஸ் இசைக்கலைஞர்களில் கென்னி ஜி (Kenny G) என்ற இசைகலைஞரின் இசையை நான் பெரிதும் விரும்பி கேட்டிருக்கிறேன்.ஆனால் அவரின் இசை தூய ஜாஸ் இசை கிடையாது என்று சொல்லப்படுகிறது. உங்களுக்கு தெரிந்த/பிடித்த ஜாஸ் இசைக்கலைஞ்ர்கள் யாராவது இருந்தால் அவர்களின் பெயர்களைபின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.பெயரோடு கூட அவர் வாசிக்கும்கருவியையும் சேர்த்து தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
நான் முன்பு சொன்னதை போல மனதின் எண்ண ஓட்டத்தை மாற்றி நம் உணர்வுகளை பந்தாடும் வலிமை இசைக்கு உண்டு.கென்னி ஜி-யின் சாக்ஸபோன் ஆலாபனை பலவற்றை கேட்டு மனதில் அமைதியும் உதட்டில் புன்னகையும் நிறம்ப கண்டிருக்கிறேன். அதே சமயம் நம்ம ஊரு குத்துப்பாட்டுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு நம்மை தாளம் போட வைக்கும் இசை பிரிவுகளும் ஜாஸில் உண்டு.அவரவருக்கு அவரவர் விருப்பப்படியான இசையை வாரி வழங்கும் ஜாஸ் இசை பற்றி அறிந்து ,அது தரக்கூடிய இசை இன்ப வெள்ளத்தில் மனம் குளிர என் மனமார்ந்த வாழ்த்துகள்
References:
http://www.dhool.com/sotd2/673.html
http://en.wikipedia.org/wiki/Jazz
http://www.dhool.com/sotd2/680.html
http://en.wikipedia.org/wiki/List_of_jazz_musicians
http://www.dhool.com/sotd2/676.html
http://www.dhool.com/sotd2/689.html
படங்கள்:
http://www.mossstreetgallery.com/Satchmo's%20Jazz.JPG
http://rdr.zazzle.com/img/imt-prd/pd-137064913479983602/isz-m/tl-%22Jazz+band%22.jpg
http://www.mus.cmich.edu/images/jazz.jpg








