மிக மிகப் பழங்காலத் தமிழ்; சங்க இலக்கியப் பாடல்! அதைச் சினிமாவில் வைத்தால் செல்லுமா? ஆடியன்ஸ் கல்லெறிவார்களே!
சரி, அதை சுரங்களோடு கர்நாடக மெட்டில் பாடினால்? கல்லா?...பாறையே எறிவாய்ங்க!
டேய், அதெல்லாம் ஒண்ணுமில்லை மச்சி. காலேஜ் பசங்க, பொண்ணுங்க எல்லாரும் இந்த ட்யூனைத் தான் ஹம் பண்ணுறாங்கடா.
சில பேரு, தமிழ்-லயும் வீக்கு! காதல்-லயும் வீக்கு!
இந்தப் பாட்டு வந்த போது, என்னைக்கும் இல்லாத திருநாளா, தமிழ் ஆசிரியருக்கு அவிங்க ரொம்பவே மரியாதை காட்டுனானுங்கப்பா!
எதுக்காம்? - இந்தப் பாட்டின் வரிகளை வாங்கி மனப்பாடம் செய்யத் தானாம்!
அப்படி என்னடா மச்சி இந்தப் பாட்டுல அப்படி ஒரு மேஜிக் இருக்கு?
வரிகளா? இசையா? குரலா? எதுடா, எது? எது?
உன்னி கிருஷ்ணனும் பாம்பே ஜெயஸ்ரீயும் பாடின பாட்டு தானே!
இருவர் படத்தில், ரஹ்மான் கொடுத்த மாஸ்டர் பீஸ்!
என்னாது ரகுமானா? பொதுவா இந்த மாதிரி கர்நாடிக் மெட்டு எல்லாம் நம்ம மொட்டை தானடா கலக்குவாரு!
நல்லாத் தெரியுமா? இசை ஞானி இளையராஜாவா இருக்கப் போவுது!
ச்சே ச்சே! நிச்சயமா ரகுமான் தாண்டா!
ராஜா இதுல பெரிய பிஸ்து தான். ஆனா அங்கொண்ணுமா, இங்கொண்ணுமா ரகுமான் கொடுத்த கர்நாடிக் மாஸ்டர் பீசுல இதுவும் ஒன்னுடா!
ஆமாண்டா மாப்ள, எழுதியவரு யாரு? - நம்ம கவியரசர் வைரமுத்து தானே!
அதுல என்னடா சந்தேகம்! அவரே தான்!
சும்மாவே அமீபா, நோக்கியான்னு இங்கலீஷ் வார்த்தைகளை நேச்சுரலா தமிழோட கலந்து அடிப்பாரு! அவருக்குத் தூய தமிழ்ல இப்படிப் பாட்டு போடக் கசக்குமா என்ன?
இதுல வர சில வரிகளைச் சங்கத் தமிழ் பாட்டுல இருந்து அப்படியே வரி மாத்தாம கொடுத்திருக்காருடா!
அதுவும் "யாயும் யாயும் யார் ஆகியரோ - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல" என்று வருது பாரு!
அது...
குறுந்தொகை-ன்னு ஒரு பழம் பெரும் இலக்கியப் பாட்டுல இருந்து எடுத்துக்கிட்டாரு மனுசன்.
அதை எழுதனவரு பேரே
செம்புலப்பெயனீரார்-னு சொல்லுவாங்களாம்!
ஹூம்...லேசா ஞாபகம் வருதுடா! இதே பாட்டைத் தான் நான் சாய்ஸ்-ல வுட்டேன் ப்ளஸ்டூ-ல!
ஹூம்...நேரம் பாத்தியா! அப்ப "சாய்ஸ்" ல வுட்ட!
இப்ப, பெப்சி உங்கள் "சாய்ஸ்"-ல அதையே கேட்டு கேட்டு வாங்கற!பாடறவன் இருக்கானே, அவனும் ஒன்னும் சும்மா இல்லடா! உன்னி கிருஷ்ணன்! சொல்லவே வேணாம் - மெலடி மன்னன்.
அவன் கண்டி நம்ம காலேஜ்-ல இப்ப படிச்சான்னு வையி...ஒரு பிகரு நம்மள பாக்காதுங்க!
அது என்னமோ கரெக்டு தான்டா! குரலுக்குக் குரல், கொஞ்சும் குரல் வேற! சொல்லணுமா நம்ம பொண்ணுங்களுக்கு!
கூடப் பாடினது பாம்பே ஜெயஸ்ரீ. அந்த அம்மா கொஞ்சம் அடர்த்தியா பாடுவாய்ங்க! இதுல நல்லாத் தான் குழைஞ்சு பாடி இருக்காங்க!
சரி, அது என்னமோ ஒரு ராகம் சொன்னியே! இன்னாது - சூரிய காந்தியா?
டேய் டொக்கு! அது சூரிய காந்தியும் இல்ல, இந்திரா காந்தியும் இல்ல! அது பேரு
நளின காந்தி டா! அந்த ராகத்துல தான் இந்தப் பாட்டைப் போட்டிருக்காங்க!
ஒங்க கொக்கா மக்க! ஒனக்கு எப்படிடா இதெல்லாம் தெரியும்? பாட்டு க்ளாஸ் பத்மா டீச்சரைக் கணக்கு பண்றியே, அந்த எக்ஸ்பெரீயன்ஸா?
அடப்பாவி! இது இசை இன்பம் பதிவுல, அந்த பாட்டுக்காரப் பையன் CVR சொன்னதுடா மச்சி!
சரி வா, நாம பாட்டைப் பார்க்கலாம்! ராகம், போகத்துக்கெல்லாம் அப்பறம் வரலாம்!
பாடலைக் கேட்டுக் கொண்டே படிக்க, இங்கே!பாடலைப் பொருளோடு அனுபவித்துக் கேட்கும் போது, ஈடுபாடு இன்னும் அதிகமாகிறது. அதான் சற்றே கடினமான சொற்களுக்கு மட்டும் விளக்கம். மத்ததெல்லாம் உங்களுக்குத் தெரியாததா என்ன?
நறுமுகையே நறுமுகையே
நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து
நீயொரு திருமொழி சொல்லாய்
(முகை=அரும்பு; நறுமுகை=வாசமுள்ள அரும்பு; என்ன அரும்பு? மல்லிகையோ, இருவாட்சியோ...காதலர்களுக்குத் தான் தெரியும்!
ஒரு நாழிகை = 24 நிமிடம்; 60 நாழிகை = ஒரு நாள் என்பது கணக்கு.செங்கனி ஊறிய வாயா? - அது எப்படி கனி ஊறியதுன்னு தெரியும்? என்ன கனி? முக்கனியா? அடப் போங்க, நான் சொல்ல மாட்டேன். ஒரே வெட்கமா இருக்கு :-)
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றித் தரள நீர் வடிய
கொற்றப் பொய்கை ஆடியவள் - நீயா?
(அற்றைத் திங்கள் அந்நிலவில்)
(அற்றைத் திங்கள் = அந்த மாதம்; தரளம்=முத்து; நெற்றித்தரள = நெற்றியில் முத்து முத்தாய் நீர் வடிய; பொய்கை=குளம்; கொற்றப் பொய்கை = அரண்மனைக் குளத்தில் விளையாடின பெண் நீ தானே?)திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகை பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே
வேல்விழி மொழிகள் கேளாய்(புரவி=குதிரை)அற்றைத் திங்கள் அந்நிலவில்
கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றைப் பார்வை பார்த்தவனும் - நீயா?
(அற்றைத் திங்கள் அந்நிலவில்)மங்கை மான்விழி அம்புகள்
என் மார் துளைத்தது என்ன!
பாண்டி நாடனைக் கண்டு
என்உடல் பசலை கொண்டது என்ன!
(பசலை = பெண்களுக்கு மட்டுமே வரும் காதல் நோய்; அதனால் தோலில் உண்டாகும் நிற மாற்றம்; பெரும்பாலும் பொன்னிறமா மாறி இருக்கும்; பார்த்தவுடனே சொல்லிடலாம் இது காதல் தான் என்று! இப்பவெல்லாம் இந்தப் பசலை யாருக்காச்சும் வருதா தெரியலையே! நீங்க யாரையாச்சும் பார்த்திருக்கீங்களா? :-)
ஒரு வேளை இந்தக் காலத்தில் பொண்ணுங்களை விட்டுவிட்டு, பசங்களுக்கு மட்டும் தான் பசலை வருதா என்ன? :-)நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையில் மேகலை இறுக்கவில்லை
(நறுமுகையே நறுமுகையே)(மேகலை = ஒட்டியாணம் போன்ற ஆபரணம். பெண்கள் இடுப்பில் அணிவது; ஏழு அல்லது எட்டுக் கோர்வை இருக்கும். இழுத்துக் கட்டலாம் ஒரு பெல்ட் போல; இடையில் மேகலையை இறுக்கிக் கட்டக் கூட முடியாத அளவுக்கு அவள் மெலிந்து போய் விட்டாளோ!)யாயும் யாயும் யார் ஆகியரோ
நெஞ்சு நேர்ந்தது என்ன?
யானும் நீயும் எவ்வழி அறிதும்
உறவு சேர்ந்தது என்ன? (யாய்=தாய்; எங்கம்மாவும் ஒங்கம்மாவும் ப்ரெண்ட்ஸா? எனக்கும் ஒனக்கும் எப்படி இப்படி ஒரு பொருத்தம் )
ஒரே ஒரு தீண்டல் செய்தாய்
உயிர்க்கொடி பூத்தது என்ன!
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல்
அன்புடை நெஞ்சம் கலந்தது என்ன! (செம்புலம்=செம்மண் பூமி; செம்மண்ணில் சேர்ந்த நீர் போல ஒன்னா மிக்ஸ் ஆனது நம்ம காதல்!)திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகை பாராய்
அற்றைத் திங்கள் அந் நிலவில்
கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றைப் பார்வை பார்த்தவனும் - நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றித் தரள நீர் வடிய
கொற்றப் பொய்கை ஆடியவள் - நீயா
படம்: இருவர்
இசை: ஏ ஆர் ரஹ்மான்
குரல்: உன்னி கிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ
வரிகள்: வைரமுத்து
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்னர், "பிரிவர்" எனக் கருதி அஞ்சிய தலைமகளின் குறிப்பு வேறுபாடு கண்டு, தலைமகன் கூறியது:
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
- செம்புலப்பெயனீரார்; குறுந்தொகை, குறிஞ்சித் திணை
எங்கம்மாவும் ஒங்கம்மாவும் ப்ரெண்ட்ஸா?
எங்க டாடியும் ஒங்க டாடியும் பார்ட்னர்ஸா?
எனக்கும் ஒனக்கும் எப்படி இப்படி ஒரு பொருத்தம்,
மேட் ஃபார் ஈச் அதர் மாதிரி?
செம்மண்ணில் தண்ணி கொட்டிரிச்சுன்னா, அப்படியே ஒன்னா மிக்ஸ் ஆயிடுமே!
அது போல, நம்ம ஹார்ட்டு ரெண்டும் ஒன்னாயிருச்சு ஸ்வீட் ஹார்ட்!
- இதாண்டா பொருள்!
சூப்பர்டா மச்சி! பாட்டுக்குப் பொருளை, இந்த மாதிரியே எக்ஸாம்-ல எழுதினேன்னு வையி, நூத்துக்கு நூறு தான்! :-)
ஒரு தங்கரதத்தில் பொன் மஞ்சள் நிலவுன்னு பாட்டு வருமே, அதுல கூட
"செம்மண்ணிலே தண்ணீரைப் போல் உண்டான சொந்தம் இது"-ன்னு கண்ணதாசன் கூட இதே பொருள்-ல பாடியிருக்காருடா!
டேய், போதும் போதும்! ஒத்துக்கறேன்!
ஒனக்குக் கூட கொஞ்சம் இசை ஞானம் இருக்குடா மச்சி!
இசை இன்பம் மேனேஜர் CVR கிட்ட சொல்லி ஒன்னையும் அந்த வலைப்பூவில் சேத்துக்கச் சொல்றேன்! போதுமா?
நளின காந்தி என்பது அருமையான ராகம். பேருக்கு ஏற்றாற் போல் அப்படி ஒரு நளினம்!
அந்த ராகத்தில் சில பாடல்கள், இதோ உங்கள் செவிகளுக்கு!
எந்தன் நெஞ்சில் நீங்காத...தென்றல் நீ தானா?மனம் விரும்புதே உன்னை - உன்னைதியாகராஜரின்
மனவயால கிஞ்சன என்ற நளினகாந்தி கீர்த்தனை - மாண்டலின்
லயதரங்கா என்னும் வாத்தியக் குழு (Band), நளினகாந்தியைப் போட்டி போட்டு வாசிக்கறாங்க!
இங்கே கேளுங்க!என்னாங்க, நளினாவை நளினமா ரசிச்சீங்களா?
அடுத்த பதிவில் இன்னொரு ஃபிகரை ரசிக்கும் வரை...
"வர்ட்டா" ஸ்டைலில் வரட்டா? :-)