Tuesday, December 18, 2007

பூர்விகல்யாணி ராகம் - பகுதி 1

பூர்விகல்யாணி ராகத்தின் ஆரோகணம் - அவரோகணம்:

ஸ ரி1 க3 ம2 ப த2 ப ஸ
ஸ நி3 த2 ப ம2 க3 ரி1 ஸ
இது 53ஆவது மேளகர்த்தா ராகமாகிய கமனாச்ரமவின் ஜன்ய ராகம்.

இதே ராகம் முத்துசாமி தீக்ஷிதர் பாராம்பரியத்தில் கமகக்கிரியா என்று அழைக்கப்படுகிறது. இரண்டும் பிரயோகத்தில் சற்றே வேறுபடும் என்று சொல்வாரும் உண்டு. இந்த ராகத்தினை பூர்வ கல்யாணி என்றும் பூரிகல்யாணி என்ற பெயரில் வழங்குவாரும் உண்டு!.

முன்பொருநாள் அலவலக நண்பர் ஒருவர் தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை மின் அஞ்சலில் அறிவித்திருந்தார். என்ன பெயர் வைத்திருக்கிறார் என்ற கேட்டபோது மின் அஞ்சலில் 'Purvi' என்றார். எனக்கோ பெயரின் பொருள் புரியவில்லை. அவரிடம் பொருள் கேட்டபோது - இது ஒரு ராகத்தின் பெயர் என்று வேறு சொல்கிறார். அப்போதுதான் ஹிந்துஸ்தானியில் 'பூர்வி' என்றொரு ராகம் இருப்பதாகத் தெரிய வந்தது! (இந்த ராகம் கர்நாடக சங்கீத முறையில் ராகம் 'கர்மவர்தினி'க்கு சமானமாகும்).

இராக சஞ்சாரங்கள்:

கமதஸ் - பதபஸ் - நிதமக - தமகரி போன்றவை.

கீழ் ஸ்தாயில் இருந்து தொடங்குவது இந்த ராகத்தில்் இயற்றப்பட்ட பாடல்களுக்கு வழக்கமாகவும் இருந்திருக்கிறது.
உதாரணம் : நின்னேகோரி (வர்ணம் - சொண்டி வெங்கடசுப்பய்யா) மற்றும் காரணம் கேட்டு வாடி (கோபாலகிருஷ்ண பாரதி)

இந்த ராகத்தில் அமைந்த கிருதிகளில் சில இங்கே:

* எக்கலாத்திலும் உனைமறவா - திருவாரூர் ராமசாமிப்பிள்ளை
நித்யஸ்ரீ மஹாதேவன் பாடிட இந்தக் கிருதியை இங்கு கேட்கலாம். இது அன்னை மீனாட்சியைப் பாடும் கிருதி.

* ஆனந்த நடமாடுவார் தில்லை - நீலகண்ட சிவன்
ஷேக் சின்ன மௌலானா அவர்களின் இனிய நாதஸ்வரதில் இந்தப் பாடலை இங்கு கேட்கலாம்.

* காரணம் கேட்டு வாடி - கோபாலகிருஷ்ண பாரதி(?). மதுரஸ்ம்ரிதி என்றொரு ஆல்பத்தில் இந்தப் பாடலை அருணா சாய்ராம் அவர்கள் பாடிடக் கேட்கலாம். (அந்தக் தொகுப்பில் இந்தப் பாடல் சுத்தானந்த பாரதியால் இயற்றப் பட்டதாக குறிப்படப்பட்டுள்ளது.(?))

*சற்றே விலகி இரும் பிள்ளாய் - கோபாலகிருஷ்ண பாரதிஇந்த நந்தனார் சரித்திரக் கீர்த்தனையைப் பற்றி சில வரிகள்:
திருப்புங்கூரில் சிவலோக நாதனை தரிசிக்க நந்தனார் கோவிலுக்கு வெளியே நின்று எட்டிஎட்டிப் பார்த்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் அவருக்கோ வழியில் நந்தி மறைத்துக் கொண்டு இருக்கிறது. கண்ணுக்கு சரியாகத் தெரியவில்லை. உடனே,

"மாடு வழி மறித்திருக்குதே மலை போலே...உற்றுப் பார்க்க சற்றே விலகாதா..."

என்று கதறுகிறார். இது காதில் விழ, மகேஸ்வரனே
"சற்றே விலகி இரும் பிள்ளாய், சன்னிதானம் மறைக்குதாமே, சற்றே விலகி இரும் பிள்ளாய்.."
என்று நந்திக்கு ஆணையிடுகிறார்.
"நற்றவம் புரிய நம்மிடம்் திருநாளை போவார் வந்திருக்கின்றார், சற்றே விலகி இரும் பிள்ளாய்..."
என்றதும் நந்தி விலகி வழி விட்டது.

இந்தப் பாடலை ராகா.காம் இல் இங்கு கேட்கலாம். இங்கு ஒரு விளம்பரத்திற்குப் பிறகு பாடல் ஒலிக்கும், நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் குரலில்.

* மீனாக்ஷி மேமுதம் - முத்துசாமி தீக்ஷிதர்

இந்த கிருதியோடு சேர்த்து சின்னக் கதையும் உண்டு:

மதுரை மீனாட்சி அம்மன் சந்நிதியில் அம்மனை தரிசிக்கும்போது, அவரையே அறியாத பரவச நிலையில் இந்தப் பாடலை பாடுகிறார். இந்த பாடலில் மீன லோசனி - பாவ மோசனி - கதம்ப வன வாசினி - என்கிற வரிகளில் வரும். இதில் பாவ மோசனி - என்ற வரிகளை அழுத்தமாக பல சங்கதிகளில் பாடிக்கொண்டு இருக்கும்போது, ஓர் அதிசயம் நிகழ்ந்தது. மீனாட்சியின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. உடனே தீக்ஷிதர், "அம்மா, உன்னை மனம் நோகச் செய்துவிட்ட பாவியாகி விட்டேனா நான்" என்று கண்ணீர் மல்கக் கேட்டார். உடனே அன்னையின் கண்ணீர் நின்றது, சிரித்த முகமாக மாறியது. அருகே இருந்த குருக்கள், "சுவாமி, இப்படி அம்பாளின் ஆனந்தக் கண்ணீரையும், பின்னர் சிரித்த முகமாய் மாறியதையும்ன நான் என்றும் கண்டதில்லை. நீர் பெரும் பாக்கியசாலி" என்றார். பின்னர், தன் இறுதி நாட்களில் தீக்ஷிதர் தனது சிஷ்யர்களை அழைத்து இந்தப் பாடலை பாடச்சொல்லிக் கேட்டவாறே, அதுவும் 'மீன லோசனி - பாவ மோசனி' எனற வரிகள் வரும்போது உயிர் நீர்த்தார்.

மீனாட்சி அம்மனையே மகிழ்வித்த பூர்விகல்யாணியின் ராக வலிமை அதன் மகத்துவத்தைக் காட்டுகிறது. எத்தனை மனக்கவலை நிலையிலும் மனசாந்தி அளித்து மங்களம் தரும் குணம் கொண்டது பூர்விகல்யாணி எனலாம். இது போன்ற மகத்துவங்கள் பல நிறைந்த நம் சங்கீதத்தை 'நாத உபாசனை' என்று சொல்வது சாலப் பொருந்தும்.

இந்தக் கிருதியை எஸ்.சௌம்யா அவர்கள் பாடிடக் கேட்கலாம். முதலில் ஆலாபனையும், பின்பு வயலினில் வாசிப்பதையும், தொடர்ந்து கிருதியைப் பாடுவதையும் கீழே கேட்கலாம்.

02_MeenakshiMemudh...பிரியா சிஸ்டர்ஸ் (ஹரிப்பிரியா, ஷண்முகப்பிரியா) அவர்கள் இந்தக் கிருதியைப் பாடுவது யூட்யூபில்:

பகுதி 1:பகுதி 2:(அடுத்த பகுதியில் தொடரும்...)
உசாத்துணை:
* சுதாமா அவர்களின் சங்கீத அலைகள்

* கர்நாடிகா.நெட் - பூர்விகல்யாணி

நன்றி:
* சிவலோகநாத சுவாமி ஆலய நுழைவாயில் படம் - ஃபிளிக்கரில் ரமேஷ்

* Music India online மற்றும் Raaga தளங்கள்

33 comments:

அறிவன் /#11802717200764379909/ said...

கர்நாடக சங்கீதம் ஓசை வடிவில்,அடிப்படை ராகங்கள் முதல் அறிய,கற்றுக்கொள்ள இணையத்தில் வழியிருக்கிறதா..
en.madal@yahoo.com ல் மின்மடலிடவும்,நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

ஜீவா அருமையாக பூர்விகல்யாணியை
அலசி அளித்துள்ளீர்கள். நன்றி. இந்த ராகத்தில் காலத்தால் அழியாத பாட்டு எம் ஸ் அம்மா பாடியது " ஜங்கார ஸ்ருதி செய்குவாய்". 1940- 50 களில் சக்கைபோடு போட்டது.
மகான் தீக்ஷதரைப் பற்றி குறிப்பிட்டது.சாலச்சிறந்தது. தீபாவளியன்று பாபமோசனி பாசநாசினி என்ற வரிகளை கேட்டவண்ணம் ஈஸ்வரியுடன் இரண்டறக் கலந்தவர்

Simulation said...

ஜீவா,

ப்ரியா சகோதரிகளின் "மீனலோசனி"யைக் கேட்க

http://youtube.com/watch?v=DfoXIjCUC6Q

- சிமுலேஷன்

இலவசக்கொத்தனார் said...

எனக்கு இந்த பூர்விகல்யாணியும் பந்துவராளியும் கேட்டா வித்தியாசமே தெரியாத மாதிரி இருக்கு. முன்பு அது போல் இருந்த வேறு சில ராகங்களை கேட்டுக் கேட்டு இப்பொழுது வித்தியாசங்களை உணரத் தொடங்கினாலும், இந்த இரு ராகங்களிடையே அப்படித் தெரிந்து கொள்வது கடினமாகவே இருக்கிறது.

ஜீவா (Jeeva Venkataraman) said...

சிமுலேஷன் சார், உங்கள் சுட்டிக்கு நன்றி - பதிவுடன் அந்த வீடியோ கிளிப்களை இப்போது இணைத்து விட்டேன்.

ஓகை said...

ஜீவா, பதிவுக்கு நன்றி.

இகொ, எனக்கு இராகங்களைப் பொருத்தவரையில் திரையிசையே குரு. நான் பூர்விகல்யாணியை நன்றாக அறிந்துகொண்டது 'நாதமயமான இறைவா' என்று டி.எம்.எஸ் பாடும் திரைப் பாடல் மூலமாகத்தான். இறைஞ்சுதல் பாவம் கொண்ட இராகம்.
பந்துவராளிக்கு 'அம்பா மனம் கனிந்துனது கடைக்கண் பார்' என்னும் எம்கேடி பாடல் சிறந்த எடுத்துக் காட்டு. இரண்டையும் ஒப்பிட்டு வேற்பாட்டை அறிந்து கொள்ளுங்கள்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஜீவா..கலக்கல்!

எனக்கும் "பூரி" கல்யாணி ரொம்ப பிடிக்கும்! :-)
திராச குறிப்பிடும் ஜங்கார ஸ்ருதி செய்குவாய் பாட்டைத் தேடிக் கொடுங்களேன்!
ஒரு முறை கல்லூரியில் கேட்டு அப்படியே மலைச்சுப் போனேன்.

சினிமாப் பாட்டுல பூர்வி கல்யாணி இல்லீங்களா? வேதம் புதிது படத்துல ஒரு பாட்டு...சரியா நினைவில்ல!

ஜீவா (Jeeva Venkataraman) said...

வாங்க அறிவன், எனக்கு தெரிந்த தளங்களை தொகுத்து அனுப்புகிறேன். ராகங்களை கற்று அறிய நிறைய கேட்க வேண்டும். படிப்பதனால் மட்டும்் சங்கீதம் கற்றுக்கொள்ள இயலாது. நிறைய கேட்க வேண்டும். திரை இசைப் பாடல்களிலேயே அதனை துவங்கலாம்.

ஜீவா (Jeeva Venkataraman) said...

அப்படியா தி.ரா.ச சார், இப்போதுதான் கேள்விப்படுகிறேன் அந்தப் பாடலை. இணையத்தில் தேடிப்பார்க்கிறேன்.

ஜீவா (Jeeva Venkataraman) said...

இலவசக்கொத்தானார்,

பந்துவரளிக்கும் பூர்விகல்யாணிக்கும் வித்யாசம் கண்டு பிடிப்பது சற்றே கடினமானதும். இரண்டுக்கும் பொதுவான சங்சாரங்கள் இருப்பதால்.
உசாத்துணையில் கொடுத்துள்ள சில expert opinion-ஐ பார்க்கவும். அவற்றுள் பந்துவரளிக்கும் பூர்விகல்யாணி உறவும், வேறுபாடுகளும் சொல்லப்பட்டிருக்கிறது.

ஜீவா (Jeeva Venkataraman) said...

KRS,
ஜங்கார ஸ்ருதி - தேடிப்பார்க்கிறேன் - கிடைத்தால் அடுத்த பகுதியில் இடுகிறேன். நீங்கள் சொன்னவுடன் எனக்கும் அந்த பாடலைக் கேட்க ஆவலாய் இருக்கிறது.

வேதம் புதிது படத்தில் அந்தப் பாடல் - சந்திக்க துடித்தேன் பொன்மானே - அடுத்த பகுதியில் நிச்சயம் உண்டு!

ஜீவா (Jeeva Venkataraman) said...

வாங்க ஓகை சார், அம்பா மனம் கனிந்து பாபுலர் பாடல் - பாபநாசம் சிவன் இயற்றியதல்லவா - அந்த பாடல் கேட்டிருக்கிறேன்.

'நாதமயமான இறைவா' - அந்தப் பாடலைக் கேட்டதில்லை.

மதுரையம்பதி said...

மிக அருமையான ராகம். எனக்கு பிடித்த ராகம், காரணம் நீங்க மிக தெளிவா சொல்லிட்டீங்க

//மீனாட்சி அம்மனையே மகிழ்வித்த பூர்விகல்யாணியின் ராக வலிமை அதன் மகத்துவத்தைக் காட்டுகிறது. எத்தனை மனக்கவலை நிலையிலும் மனசாந்தி அளித்து மங்களம் தரும் குணம் கொண்டது பூர்விகல்யாணி எனலாம்..//

. மனது கனமா இருக்கும் சமயங்களில் மீனாக்ஷியை இந்த பாடலைப் பாடி அழைப்பது எனக்கும் வழக்கமே :-)

இன்னுமொரு செய்தி மீனாக்ஷி கோவில் தினமும் அர்த்தஜாம பூஜையில் இந்த பாடலை பாடுகிறார்கள்.

திராச சார், நல்ல சாகித்தியத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறார். எனக்கு சில வரிகள் ஞாபகம் இருக்கிறது...கல்கி எழுதியது என்று நினைக்கிறேன். சரி பார்க்க வேண்டும்.

ஜங்கார ஸ்ருதி செய்குவாய்,
சிவ வீணையில் சங்கிதாம்ருதம் செய்குவாய், ஜகதிஸ்வரியே..

பலபல என்னும் காலை பாடும் துள்ளோசை போலும்,
பார்கடல் என்னுள்ளம் மயக்கும் ரீங்காரம் போலும்,
மலர்களைக் கொஞ்சி வரும் மந்தமாருதம் போலும்,
மதுவுண்ட வண்டினம் மயக்கும் ரீங்காரம் போலும்.

ஆகா, இன்றைய காலைப் பொழுது எனக்கு மிக அருமையான பாடல்களுடன் ஆரம்பித்திருக்கிறது.
மிக்க நன்றி ஜீவா சார்.

அறிவன் /#11802717200764379909/ said...

//
வாங்க அறிவன், எனக்கு தெரிந்த தளங்களை தொகுத்து அனுப்புகிறேன். ராகங்களை கற்று அறிய நிறைய கேட்க வேண்டும். படிப்பதனால் மட்டும்் சங்கீதம் கற்றுக்கொள்ள இயலாது. நிறைய கேட்க வேண்டும். திரை இசைப் பாடல்களிலேயே அதனை துவங்கலாம்.
//
நானும் நிறையப் பாடல்கள் கேட்பவன் தான்;ஆயினும் திரைப் பாடல்களில் பல்லவி ஒரு ராகமும்,சரணம் ஒரு ராகமும்-இன்னும் சொல்லப் போனால் இதுவா,அதுவா என சொல்லமுடியாதபடி இருப்பதாக,தெளிந்த ரசிகர்கள் சொல்கிறார்கள்,எனவே என்னைப் போன்ற கற்கும் ஆர்வலர்கள் எப்படி திரைப் பாடல்களை முன்வைத்து தொடங்க முடியும்.
இவ்வளவு தகவல் தொடர்பும்,மொழி,இசை ஆர்வம் வளர்ந்துவிட்ட இந்த நாட்களில்,எவரேனும்,ராகத்தின் தாளக்கட்டு,ஆரோகணம்,அவரோகணம்,அதன் ஒலி வடிவம்,அதில் அமைந்த பாடல்கள் இவற்றை ஒரே இடத்தில் பார்வை மற்றும் ஒலி ஊடகத்தில் கொடுத்தால்,கற்றுக் கொள்வோர் எளிதாகக் கற்பார்களே...

Anonymous said...

Search in Youtube. Cine songs based on Raga is available. A person named 'CVVASANTH" has posted lot of songs based on Raga in Youtube.

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஜிவா,ராவி,மௌளி நீங்கள்
கேட்ட பாடால்

http://www.musicindiaonline.com/p/x/6JK2D76Et9.As1NMvHdW/?done_detect

ஜீவா (Jeeva Venkataraman) said...

அறிவன்,

கர்நாடக சங்கீத ஆரம்ப பாடங்களை இங்கே கர்நாடிக்.காம் தளத்தில் பார்க்கலாம். திருமதி.ராணி என்பவர் இந்த தளத்தை நடத்தி வருகிறார்.
அதே தளத்தில் இன்னும் ஏராளமான விஷயங்களும் உண்டு. உதாரணத்திற்கு தியரி இங்கே உள்ளது.

சிவ் குமார் (இவர் NewYorkஇல் Electronics professor) என்பவர் நடத்தும் இந்த
ஏராளமான வர்ணங்களும், கிருதிகளும் எப்படிப் பாடுவது என்று மிக மிக விவரமாக பொறுமையாக கற்றுத் தருகிறார்.

ஜீவா (Jeeva Venkataraman) said...

வருக மதுரையம்பதி சார்,

தங்களுக்கு மீனாட்சி மேமுதும் மிகவும் பிடிக்கும் என்பது மிக்க மகிழ்ச்சி.ஜங்காரஸ்ருதி சாகித்ய வரிகளுக்கு நன்றி. கீழே தி.ரா.ச சார் சுட்டியும் கொடுத்துள்ளார், கேட்டுப் பார்த்துவிட்டு வருகிறேன்.

sury said...

கனாக் கண்டத்து போதும். பூர்வி கல்யாணி ராகத்தினைக் கேட்க வாருங்கள்
என்ற சங்கதி கேட்டு விரைந்து வந்தேன்.
இன்னமும் முழுமையாக படிக்கவில்லை.
முதல் பாராவிலேயே இலக்கணவாதியான எனக்கு சற்றே இடிக்கிறது.
ஆகவே பூர்வி கல்யாணி ராகத்தினை உடன் கேட்கத்துடித்திடும்
ஆர்வமதை " சற்றே விலகிரும் பிள்ளாய் " என சொல்லிவிட்டு,
இதை எழுதலானேன்.

பூர்வி கல்யாணி ராகத்தின் மற்றொரு பெயர் காம வர்த்தினி என‌
எழுதியுள்ளீர்கள். இது சரியல்ல.

பந்துவராளி என்ற ராகத்தின் மற்றொரு பெயர் தான் காம வர்த்தினி.

பூர்வி கல்யாணி யும் பந்துவராளி யும் ஒரே சாயலில் இருப்பதால்
இந்த மயக்கம் ஏற்படுகிறது.

இந்த வலைப்பதிவினை முழுமையாக படித்து ராகத்தை அனுபவித்தபின்
அடுத்த மடல் எழுதுவேன்.

உங்கள் அழைப்புக்கு நன்றி.

சிவ.சூரிய நாரயணன்.
சென்னை.

ஓகை said...

//'நாதமயமான இறைவா' - அந்தப் பாடலைக் கேட்டதில்லை.//

இந்தப் பாடல் 'மிருதங்கச் சக்கரவர்த்தி' படத்தில் வருகிறது. இசை எம்மெஸ். விஸ்வனாதன். பல கீர்த்தனைகள் கேட்டும் பிடிபடாத இந்த இராகம் இந்தப் பாடலினால் எனக்கு பிடிபட்டது. நான் கீர்த்தனைகளை குறைவாகச் சொல்வதாக தயவுசெய்து நினைத்துவிட வேண்டாம். என் ஞானம் அவ்வளவுதான்.

அறிவன் அவர்களுக்கு, திரையிசைப் பாடல்களில் கர்நாடக சங்கீதத்தின் இராகங்களை அதன் மேன்மையுடன் கேட்கவேண்டுமென்றால் எம்மெஸ். விஸ்வநாதன், கேவி மஹாதேவன் இசையமைத்த பாடல்களையும் இக்காலகட்டத்திற்கு முந்தய கால திரைப்படப் பாடல்களையும் கேட்கவேண்டும். G.இராமநாதன் என் மிகுந்த வணக்கத்துக்குறிய ஓர் இசையமைப்பாளர். இது என் தாழ்மையான கருத்து. இளையராஜாவின் வருகைக்குப் பிறகு திரைப்பாடல்கள் வேறு பாதையில் சென்றுவிட்டன. இது என் தனிப்பட்ட கருத்து.

ஜீவா (Jeeva Venkataraman) said...

வாங்க சூரி சார்!

//அப்போதுதான் ஹிந்துஸ்தானியில் 'பூர்வி' என்றொரு ராகம் இருப்பதாகத் தெரிய வந்தது! (இந்த ராகம் கர்நாடக சங்கீத முறையில் ராகம் 'கர்மவர்தினி'க்கு சமானமாகும்).//

இப்படியாக ஹிந்துதானி பூர்விதான் கர்மவர்த்தினி என்று சொல்லி இருந்தேன், பூர்விகல்யாணியை அல்ல. இந்த ஹிந்துஸ்தானி பூர்வியின் மேளம்தான் (தாட்) பந்துவரளி என்று இந்தப் பகுதியில் சொல்லப்பட்டு இருக்கிறது.

பந்துவரளியும், கல்யாணியும் சேர்ந்து பூர்வி கல்யாணி உருவானது என்றோரு கருத்தும் உண்டு.

(பார்க்க கர்நாடிகா.காம் உசாத்துணை)
முழுதும் படித்துவிட்டு தவறுகள் ஏதேனும் இருந்தால் சுட்டவும்.

ஜீவா (Jeeva Venkataraman) said...

வாங்க அனானி,

யூ ட்யூபில் நிறைய திரை இசைப்பாடல்கள் இருக்கிறது, அவற்றில் சில ராகம் என்னவேன்றும் இருக்கிறது. சிலவற்றில் ராகம் தவறாகவும் குறிப்பிடப் பட்டு இருக்கிறது! But its definitely a very good resource.

ஜீவா (Jeeva Venkataraman) said...

தி.ரா.ச சார்,

ஜங்காரசுருதி செய்குவாய் பாடல் கேட்டேன் - நன்றாக இருந்தது. அதுவும் எம்.எஸ் அம்மா,

ஜங்கார...என்று இழுத்து விடும் போது, ஆகா.
(தடாகம் ஒன்றுண்டாக்கினார்...பாடலை நினைவு படுத்துகிறது,அந்த இடம் மட்டும்்!)

இதுபோல
பழைய பாடல்களைக் கேட்கும்போது, அப்படியே travelling back in Time போலத்தோன்றும்!
ஜங்கார..?

பொன்னியின் செல்வனில் கல்கி இவ்வாறாக குறிப்பிடுகிறார்:

"கையில் தாளங்களை வைத்து இனிய ஜங்கார ஓசையை எழுப்பிக் கொண்டு சிலர் பல்லக்கின் முன்னாலும் பின்னாலும் பாடிக்கொண்டு வந்தார்கள்." (17ஆம் அத்தியாயம், திருநாரையூர் நம்பி)

கிளிங் கிளிங் என்று ஏற்படும் சபதத்திற்கு ஜங்கார ஒலி என்ற பெயரா? ஜங்காரம் என்பது ஒட்டகம் அல்லவா? ஒருவேளை ஒட்டகத்தின் குளம்பொலியோ?

ஜீவா (Jeeva Venkataraman) said...

அப்புறம் இந்த 'ஜங்கார ஸ்ருதி...' பாடல் - இயற்றியவர் சுப்பரமணிய பாரதி - என்று அந்த musicindiaonline கிளிப்பில் இருக்கிறது. அது தவறென்று நினைக்கிறேன்.

சுத்தானந்த பாரதியாக இருக்குமோ?

ஜீவா (Jeeva Venkataraman) said...

அறிவன்,

திரை இசை ராகங்கள் பற்றி - இந்த இரண்டு வலைப்பதிவையும் பார்க்கவும்:

சிமுலேஷன்

MovieRagas
திரை இசைப்பாடல்களை கேட்டு அதே சாயலில் இருக்கும் கிருதிகளையும் அவற்றின் ராகங்களையும் அடையாளம் காணும் நிறைய பேர் உண்டு.

ஜீவா (Jeeva Venkataraman) said...

ஓகை சார்,

//இந்தப் பாடல் 'மிருதங்கச் சக்கரவர்த்தி' படத்தில் வருகிறது. //

அந்தப் படமா, படம் நினைவிருக்கிறது. அந்தப் படம் பார்த்த வயதில் பாடல்களை கவனித்ததில்லை!

இப்போது இணையத்தில் தேடிப்பார்க்கிறேன், கிடைக்கிறதா என்று.

sury said...

History.
"ஜங்கார ஸ்ருதி செய்குவாய்" என்ற பூர்வி கல்யாணியில் அமைந்த பாடலைக்கேட்டு
மெய் சிலிர்த்தேன். பூஜை அறையில் விளக்கேற்றியவுடன் என் அம்மா பாடும் பாடல்களில்
ஒன்றல்லவா இது ? . In one stroke, the song brought tears in my eyes.
1950 ல் என்று நினைக்கின்றேன். 7ம் வகுப்பில் எல்லோரையும்
பாடச்சொன்னபோது, நான் இதைப்பாடியபோது எல்லோரும் எழுப்பிய கரவொலி இன்னமும்
ஞாபகம் இருக்கிறது.
பின்பு பல வருடங்கள் சென்றபின், நான் என் தங்கையுடனும் தங்கை கணவர் (அத்திம்பேர் என்று
நான் அழைப்பேன் வயதில் மூத்தவரானதால்) 1987 என நினைக்கிறேன், பெஸன்ட் நகரில் நடைபெற்ற
ஒரு கச்சேரிக்கு ச்சென்றிருந்தோம்.
அப்போதெல்லாம் மணல் தரை தான். கச்சேரி நடு வாக்கில் ஒரு ராக ஆலாபனை துவங்கியது.
என் தங்கை அத்திம்பேரை இது என்ன ? என்றாள். அதற்கு அவர் ஏதோ சொல்லப்போக, ( நான் பின்னே
உட்கார்ந்திருந்தேன் ) என்னிடம் திரும்பி, இது என்ன ராகம் என்றார். சட் என்று பூர்வி கல்யாணி என்றவுடன்
என் தங்கை பொது இடம் என்றும் பாராது, பட் என்று என் முதுகில் ஒரு அறை கொடுத்தார். அது மட்டும்
போதாது என்று நினைத்து, அத்திம்பேரை நோக்கி, இந்த அடி ஆக்சுவலா உங்களுக்கு என்றாள் .
" அது எப்படி ? பூர்வி கல்யாணிக்கும் பந்து வராளிக்கும் வித்தியாசம் தெரியாமப்போச்சு ? " என்றாள்.
ஜன்யமே வேறே. இது 53 வது மேள கர்த்தா. பந்து வராளி 51 வது மேள கர்த்தா. மற்ற படி பந்து வராளி
பிரதி மத்யம ராகம்." தொடர்ந்து சொல்ல, அத்திம்பேர் என்பக்கம் திரும்பி, " அடி ரொம்ப பலமோ ?"
என்றது இன்னமும் ஞாபகம் உள்ளது.
பந்து வராளியில் அப ராம பக்தி என்று ஒரு அத்புதமான சாகித்யம் தியாகராஜ க்ருதி உள்ளது. எத்தனை
தடவை கேட்டாலும் அலுக்காது. பால முரளி பாடி இருக்கிறார். எல்லோரும் அதை கேட்டு பந்து வராளி யின்
பூரண சொருபத்தினை கேட்டு மகிழலாம். மனம் சோர்வைடையும் போதெல்லாம் அந்தப்பாட்டினைக் கேட்பது
என் வழக்கம்.
Grammar

Again, “Suba Panthuvarali” differs from “Panthuvarali”
Having said that, I may submit that
Purvi appears to be a different Raag altogether.
பூர்வி என்று சொல்லப்படும் இந்துஸ்தானி ராகம் கிட்டத்தட்ட நமது 15 வது மேள கர்த்தாவை ஜன்யமாகக்
கொண்டது போல் தெரிகிறது. இதன் மத்யமம் பந்து வராளியின் மத்யமத்தினை ஒத்ததாக இருப்பதால்
இதுவும் பந்து வராளி போல் தோற்றமளிக்கிறது.
இதில் பண்டிட் ஜஸ்ராஜ் அற்புதமாக பாடியுள்ள விலம்பித் காயன் ஒன்றின் ஹெச்.டி.ம்.எல். பின்வருமாறு:

(As the html format is not acceptable to the response) I am again posting this in my blog
http://movieraghas.blogspot.com

பூர்வி கல்யாணி யின் ஸ்வரங்கள்

ஆரோ : ஸ ரி1 க2 ம2 ப த2 ப ஸ
அவ : ஸ நீ2 த2 ப ம2 க2 ரி1 ஸ

ஆரோகணத்தில் நிஷாதம் இல்லை.
ஆரோகணத்தில் வக்ரமாக ஒரு பிரயோகம் pa இருப்பதை கவனிக்கவும்.
அவரோகணத்தில் இது ஸம்பூரணமாக இருக்கிறது.

பந்து வராளியிலோ

ஆரோ: S R1 G2 M2 P D1 N2 S
அவரோ S N2 D1 P M2 G2 R1 S

பந்து வராளியில் முதல் கீதம்:
தாயே இது தருணமென என்னெதிர் வருவாய்
தரிசனம் தந் தருள் புரிவாய்.
Thaye idu tharunamen edir varuvai
darisanam thandarul purivoi Set to Adi tal

இந்த இரண்டு ராகங்களின் ஒற்றுமை வேற்றுமை பற்றி
விரிவான demonstation
தற்போது எனது வலைப்பதிவில்
http://movieraghas.blogspot.com
தரப்பட்டுள்ளது. ( Today's posting )

Sanskrit (Lexicon)
மற்றுமொரு விஷயம். .

"பூர்வி" என்ற சொல்லுக்கு வடமொழியில் கிழக்கு, உதிப்பவன், சூரியன் என்றே பொருள்.
"பூர்வி" என்ற சொல் "பூர்வ" என்றிலிருந்து வந்தது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
அப்போது, அச்சொல்லுக்கு, முன்னமே (before, prior to, etc. possibly, everything else)
என்ற பொருள். As a deduction,
பூர்வி என்பது முதலானவள் (first among the rest ) என்ற பொருளும் உண்டு.

(லலிதா ஸஹஸ்ர நாமத்தில் அம்பிகைக்கு ஒரு பெயர்:
பூர்வ ஜாயை நமஹ.)

ஆதலால் ஹிந்து மத ஸம்பிரதாயப்படி, பூர்வி , தேவியின் இன்னொரு பெயராம்.
இதை ஒரு ராகம் என்று மட்டும் சொல்வது அச்சொல்லின் பரிமாணத்தினை சற்றே குறைப்பதுபோல
தோன்றுகிறது.
அதிகம் பேசியிருந்தால் க்ஷமிக்கவும். ( வாசக தோஷஹ க்ஷந்தவ்யஹ)
இவண்,
பரிதி மாலன்.
சென்னை.

sury said...

ஜங்கார ஸ்ருதி செய்குவாய் என்ற பாட்டிலே வரும்
"ஜங்காரம்" என்ற வார்த்தை குறிக்கும் பொருள் என்ன ?
(My sister's daughter who is a Professor in Sanskrit tells me as follows:)

பாட்டின் கடைசி வரியிலேயே ஒரு க்லூ கிடைக்கிறது.
அதிகாலையில் செய்யும் பூஜைக்கு உஷத்கால பூஜை எனப்பெயர்.
இதற்கு அதிகாலையிலேயே நந்தவனத்திற்குச் ச்சென்று மலர இருக்கும்
மொட்டுக்களைப் பறிக்கும் நேரத்தில் அத்தகைய மலர இருக்கும் மொட்டுக்களைச்
சுற்றி வரும் வண்டுகள் இசைத்திடும் நாதம் ரீங்காரம் எனப்படுகிறது.

மற்றும் தேவியை ஐந்து பீஜ மந்திரங்களால்
வழிபடுவது ஆகம முறையாம். இந்த 5 பீஜ மந்திரங்களையும் குரு மூலமாக‌
முறையே உபதேசம் பெற்று இதை அதற்குறிய பண்ணுடன் ( நாத ஒலி இசையுடன்) (rhythmic modulation) உச்சரிக்கையில் வண்டுகள் ஒலித்திடும் ரீங்காரம்
போல் தோன்றுகிறதாம்.

siva.surya narayanan
chennai

ஜீவா (Jeeva Venkataraman) said...

விளக்கங்களுக்கு மிக்க நன்றி, திரு.சூரிய நாராயணன் சார்!

பந்ந்துவரளிக்கும் பூர்விகல்யாணிக்கும் வித்யாசத்தினை ஒரு டெமோ வீடியோவாகவே சூரி சார் தன் பதிவில் தந்திருக்கிறார்.
பார்க்கவும், இங்கே.

Ram said...

I have uploaded Raag Puriya Kalyan - in eight parts:
First part is here
This from a Hindustani concert by Pandit Venkatesh Kumar.

sury said...

I just heard puriya kalyan in Youtube and to confirm that this has nothing to do with either our Carnatic classical Purvi Kalyani or Panthu varali.
Albeit what I had said, there is no indication of the raag. I am referring this to my friend who is well versed in Hindusthani classical and shall revert shortly.
I am happy that I couldt this Raag alapana remarkably rendered by Pandit Venkatesh Kumar.

மதுரையம்பதி said...

ஜீவா, மற்றும் சூரி சார் மிக்க நன்றி. நிறைய தெரிந்து கொண்டேன்.

/மற்றும் தேவியை ஐந்து பீஜ மந்திரங்களால்
வழிபடுவது ஆகம முறையாம். இந்த 5 பீஜ மந்திரங்களையும் குரு மூலமாக‌
முறையே உபதேசம் பெற்று இதை அதற்குறிய பண்ணுடன் ( நாத ஒலி இசையுடன்) (rhythmic modulation) உச்சரிக்கையில் வண்டுகள் ஒலித்திடும் ரீங்காரம்
போல் தோன்றுகிறதாம்/

5 பீஜங்கள் கொண்ட அந்த மந்திரதை பஞ்சாஷரி என்பர்.

ஜங்கார ஸ்ருதி செய், அதையும் சிவவீணையில்....எப்படி சிவ-சக்தி ஐக்கிய வழிபாட்டினை கூறும் பாடல் போல இருக்கு. பல முறை கேட்டிருந்தாலும் இது புதிய செய்தி.

V. Ramaswamy (நாகை வை. ராமஸ்வாமி) said...

Hello Jeeva: SAIRAM. Thanks for valued info on Ragas. Presently out of India, belongong to Nagapattinam, worked in Mumbai and retired, settled in Bangalore, I have been writing lyrics on the glory of Nagapattinam Ambal Neelayadakshi. Ten of my songs have been made into a Music Album by me titled Amudame Kumudame and the songs were also played in World Space Radio (now defunct). Can also hear the songs in the following link http://www.last.fm/music/Various%2520Artists/Amudame%2520Kumudame%2520Neelayadakshi%2520Vol-1?ac=amud as also under Devotional Songs of Tamilbrahmins.com Shall be glad if you can notify this to all music lovers thro' your blogs. Thanks and Regards
V. Ramaswamy - http:/nampakkam.blogspot.com

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP