Wednesday, July 23, 2008

அவளுக்கு இன்னொரு பெயர்... சிவரஞ்சனி!


ஒவ்வொருவருக்கு ஒரு விதமாக அவள் காட்சியளிப்பாள்.

தாயாக, சகோதரியாக, மனைவியாக, காதலியாக, மனைவியாக, அல்லது வழிப்பாதையில் கடந்து போகிற ஒர் அழகியாக, இப்படி அவளுக்குப் பல வடிவங்களுண்டு.

என்னைப் பொறுத்தவரை அவள் என் காதலி.

அதே போல அவளுக்குப் பல பெயர்களுமுண்டு.
அத்தனையையும் எழுதத் நினைத்தால் அவை முடிவில்லாது நீளும்.

அவற்றில் எனக்கு மிகப் பிடித்த பெயர் சிவரஞ்சனி.

பெயரைச் சொல்லிப் பார்த்தாலே,
நாவில் தேன் சொட்டி,
ஒரு பெயர் தெரியாத இனிய பூவின் வாசம் வந்து முகத்தில் மோதும்.

ஒரு முறை கடுமையான ஜுரம் வந்து, ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகிக் குணமாகி வந்த போது,
உடனிருந்து என்னைக் கவனித்துக் கொண்ட அண்ணன் பிள்ளைகள் சேவியரும், சின்னக்குட்டியும், கண்சிமிட்டியபடிக் கேட்டார்கள்.
"எப்பாவ், யாருப்பா அது சிவரஞ்சனி?
நீ லவ் பண்ற ஆண்ட்டியா?"

வெட்கத்தில் என் முகம் சிவந்தாலும், ஜுர வேகத்திலும் அந்தப் பெயரை அரற்றிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது,
அப்போதுதான் உறைத்தது.

அந்த சமயம், "சின்னக் குஷ்பூ" என்றழைக்கப்பட்ட, "சிவரஞ்சனி" என்றொரு நடிகை, மார்க்கெட் இழந்து கொண்டிருந்த நேரம்.

இது அவரல்ல என்று புரிய வைக்க நான் பெரும் பாடுபட வேண்டியிருந்தது.

சரி! என் சிவரஞ்சனியின் அழகையும், குணத்தையும், உங்களுக்கு வர்ணித்துக் காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.

மொத்தம் ஐந்தே ஸ்வரங்கள்தான்.

//ஷட்ஜமம், "ஸ"
சதுஸ்ருதி ரிஷபம், "ரி1"
சாதாரண காந்தாரம், "க"
பஞ்சமம், "ப"
சதுஸ்ருதி தைவதம். "த"//

ஸ, ரி, க, ப, த, ஸ
ஸ, த, ப, க, ரி, ஸ

சோகம், சுகம், இரண்டுக்குமே பொருத்தமானவள்.

முன்பெல்லாம் என் கீபோர்டில் மனம் போன போக்கில், இலக்கின்றி, ஒரு தனிக் குயில் பாடுவதைப்போல இந்த குறிப்பிட்ட ஸ்வரங்களைத் தடவிக் கொண்டிருப்பேன்.

ஐயோ! அந்த சமயங்களில் அவள் அழகு இருக்கிறதே....

சர்வாலங்காரத்துடன், ஜெக, ஜெகவென்று....

கண்மூடினால் இரண்டு மைதீட்டிய விழிகள்...
என்னை உள்ளுக்குள் துளைத்துக் கொண்டிருப்பதாய் உணர்ந்திருக்கிறேன்.

என் உயிர் அப்போது கிறு கிறுத்துப் போய், மெழுகாய் உருகிக் கொண்டிருக்கும்.

நான் மனம் நொந்து அழுத வேளைகளில் இந்த ஸ்வரங்களால்,
"உனக்கு நானிருக்கேண்டா என் செல்லமே!" என்று
இறுக அணைத்து, தலைதடவி, உச்சிமோந்து, ஆறுதலளித்திருக்கிறாள்.

சந்தோஷமாயிருந்த வேளைகளில்,அதை என்னுடன் பகிர்ந்து கொண்டு, என் மனத்தினுள்,
என்னுடன் கைகோர்த்து ஆடிப் பாடி மகிழ்ந்திருக்கிறாள்.

இப்போது அவளைக் குறித்து நீங்கள் அறிந்த திரை இசை உதாரணங்களுடன்...

ஒருமுறை இப்படி கீபோர்டில் வாசித்துக் கொண்டிருக்கையில், என் மாமா
கேட்டார்.
"என்னப்பா! 'வசந்த மாளிகை-ல வர்ற, 'கலைமகள் கைப்பொருளே' பாட்டு மாதிரி இருக்கு?"

அவருக்கு இசைபற்றி ஏதும் தெரியாவிட்டாலும், மிக நல்ல ரசிகர்.

ஆம்....
என்னையே அறியாமல் நான் அந்தப் பாடலின் முதல் வரியைப் பிரயோகித்திருக்கிறேன்.

அதற்குப் பிறகுதான் நான் அடிக்கடி ரசிக்கும் அந்தப் பாடலும் சிவரஞ்சனியினால், இழைக்கப் பட்ட தங்க விக்ரகம் என்பதை உணர்ந்தேன்.

பி. சுசீலாவின் குரலில்...
ஏதோ ஒரு சொல்ல முடியாத ஏக்கத்தையும், சோகத்தையும் அந்தப் பாடல் பிரதிபலிக்கும்.

கேட்டுப் பாருங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

பாடலை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்

அடுத்தது "நட்சத்திரம், படத்தில் 'அவள் ஒரு மேனகை' பாடல்."

எஸ். பி. பி-.... சிவரஞ்சனீ....ஈ... என்று மேல் ஸ்தாயிக்குப் போகும் போது
அம்மாடீ... எங்கொ ஒரு மேகக் குவியலின் மேல் தூக்கிக் கொண்டு போய் விடுவதைப் போல உணர்வேன். இந்தப் பாடல் பக்திரசத்தையும், சந்தோஷத்தை தரும்.
Get this widget | Track details | eSnips Social DNA

பாடலை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்

அடுத்து, "மைதிலி என்னைக் காதலி படத்தில், நானும் உந்தன் உறவை"
பாடலும் அப்படியே...

அவளுடைய தனித்தன்மையே இதுதான்.
தார அதிதார ஸ்தாயி என்று உச்சத்துக்கு உச்சத்தில் வாசிக்கப் பட்டாலும் சரி,
மந்திர அதி மந்திர என்று வெகு வெகு கீழே, இசைக்கப் பட்டாலும் சரி, அவள் அழகு, மின்னல் வெட்டுகிற அழகுதான்.
Get this widget | Track details | eSnips Social DNA

பாடலை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்


"நான் அடிமை இல்லை, படத்தில் 'ஒரு ஜீவன் தான்' பாடலை சந்தோஷமாக ஒரு முறை பாடுவார்கள்.
அப்போது இவள் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் பேரின்ப நாயகி.
Get this widget | Track details | eSnips Social DNA

பாடலை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்

அதே பாடலைச் சோகமாக பாடுவார் எஸ். பி. பி.
அப்போது, "சீதையைப் பிரிந்த் ராமனின் சொல்லொணாச் சோகமும், அசோகவனத்துச் சீதையின் ஆற்ற முடியாத் துயரும்," வெளிப்படும் பாருங்கள்...
Get this widget | Track details | eSnips Social DNA

பாடலை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்

இசைஞானி இளையராஜா இசையமைத்த "என் ராசாவின் மனசிலே" படத்தில் "குயில் பாட்டு" பாடலிலும் ஒரு முறை சந்தோஷ ரசத்தையும், மறு முறை சோக ரசத்தையும் மிக அழகாக சிவரஞ்சனி மூலம் வெளிப்படுத்துவார்.

அதில் பல்லவியில் ஒரே ஒரு முறை பிரதி மத்யமத்தை தொட்டுச் செல்லுவார் பாருங்கள்.

ஆஹா இவளலல்லவோ அழகி என்று சொல்லத் தோன்றும்.

இவ்விதம் அன்னிய ஸ்வரங்களைத் தொட்டு, அதே சமயம் அந்த ராகத்தின் இயல்பு கெடாமல், இனிமைக்கு இனிமை சேர்க்கும் வல்லமை இசைஞானிக்கு இறைவன் தந்த வரம்.

குயில் பாட்டை சந்தோஷ ரசம் ததும்பும் ஸ்வர்ணலதா-வின் குயில் குரலில் இங்கே க்ளிக் செய்து கேளுங்கள்.

அதே குயில் பாட்டை சோக ரசம் ததும்ப இசைஞானியின் கம்பீரக் குரலில் இங்கே க்ளிக் செய்து கேளுங்கள்.

ஸ்வர்ணலதாவின் குயில் பாடலை டவுன் லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

இன்னும் சிவரஞ்சனியில் வெளிவந்த இங்கு குறிப்பிட மறந்த பாடல்கள் நிறைய உண்டு.

நினைவிருக்கும் அன்பர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்.

இத்தனை அழகான, அன்பானவளையும், நான் மறந்து...

இல்லை..., மறந்ததாக நினைத்துக் கொண்டு...

சில காலம் என் குரல்வளையை நானே நெறித்துக்கொண்டு...

அவளுடன் பேசாதிருந்தேன்.

தொடர்புடைய பதிவின் சுட்டி இதோ...

இப்போதுதான் பேசத்துவங்கியிருக்கிறேன்.

பார்க்கலாம்.

+ve பதிவர் அந்தோணி வருகவே! ராஜாவின் ராஜாங்கம் தருகவே!

பதிவர் அந்தோணிமுத்துவை நம்மில் பலரும் அறிவோம் இல்லையா? Positive அந்தோணி என்றால் அவர் தான்! எழுந்து நிற்க இயலாவிடினும், உலகத்தின் முன் எழுந்து நின்றவர்! தான் யார் என்பதைச் சொல்லி வென்றவர்! ஆனந்த விகடன், ஆறாம் திணை, நிலாச் சாரல் என்று வளைய வந்தவர்!
மதிப்பிடமுடியாத அளவுக்கு தன்னம்பிக்கை வரம் கைக்கொண்ட இளைஞர்! நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் இருந்தால், ஊனங்கள் ஓடியே ஒளியும்! உற்சாகம் தேடியே வருகும்! = இதை நம் அனைவருக்காகவும் இன்னொரு முறை மெய்ப்பிக்க வந்தவர் தான் அந்தோணி!
* அவர் எழுந்து நின்ற கதை இங்கே!
** அவர் வென்ற முதல் பரிசு இங்கே!

வெற்றியைப் படித்தல் பல நோய்களுக்கு நல்ல மருந்து! வெற்றிக் கதையைத் தந்த அந்தோணி அண்ணனும் ஒரு மருத்துவர் தான்!
அவர் கதையைப் படித்துப் பாருங்கள்! பிடித்துப் போகும்!

அந்தோணியிடம் ஒரு பெரிய புதையல் இருக்காம்! இந்த முறை சென்னை சென்றிருந்த போது (April-2008), அந்தோணி வீட்டுக்கு, நானும் மதுமிதா அக்காவும் சென்றிருந்தோம்! செம உபசரிப்பு!
அப்போ அவர் பாதுகாத்து வந்த புதையல் என் கண்ணில் பட்டு விட்டது!
அந்தப் புதையலை எப்படியும் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்கிற பேராசை மதுமிதா அக்காவுக்கு!

ராகங்களைப் புட்டு புட்டு வைக்கிறார்! ராகதேவன் இளையராஜாவின் இசையில் குறுக்குச் சந்துகளும் நெடுக்குச் சாலைகளுமாய் பைக் ஓட்டுகிறார்! உச்சி வகிந்தெடுத்து, பிச்சிப்பூ வச்ச கிளி-ன்னு ஒரு பாட்டை வேறு விதமான ராக ஆலாபனையுடன் எடுத்து விட்டார் பாருங்க!
அவருடன் மதுமிதா அக்காவும் நானும் கூட ஈடு கொடுக்க முடியாமல் பாடினோம்!

அன்தோணி அண்ணன் வீட்டுச் சுண்டைக்காயும் செம்பருத்தியும் கூட இசை பாடும்!

இசை இன்பம் குழு வலைப்பூவுக்குப் பிச்சிப்பூ வைத்திட, அவர் புதையலை அங்கேயே அபேஸ் பண்ண அக்காவும் அடியேனும் கூட்டுச் சதி செய்து விட்டோம்!
இதோ, அந்தோணி அண்ணன் இசை இன்பத்தில் உலா வரத் தொடங்கி விட்டார்!

அவர் முதல் காதலி பேரு ரஞ்சனி!
அந்த முதல் காதலைச் சொல்லப் போறாரு!
கதை கேளு கதை கேளு!
இசை கேளு இசை கேளு!....
பாசிடிவ் அந்தோணியின் இசையை நல்லா கேளு...


இசை இன்பம் வலைப்பூவில் சினிமா-காரம்-காபி, வாத்தியக் கருவிகள், அன்னமாச்சர்யர் கீர்த்தனை என்று பல அருமையான பதிவுகளைப் பதிந்த நண்பர் CVR-க்கு இன்று (Jul-24) பிறந்தநாள்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீவி! :)

Monday, July 14, 2008

பிரம்மத்தை தேடுவதெங்கணம்.

இப்பெரும் கேள்விக்கு விடைகாண இந்த ஜென்மம் போதுமோ, இல்லை நம்மாழ்வார்

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற

காவிமலரென்றும் காண்தோறும் பாவியேன்

மெல் ஆவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை

எல்லாம் பிரான் உருவே என்று

(பூவைப்பூ, காயாம்பூ, கருநெய்தல், செங்கழுநீர்ப்பூ, ஆகிய மலர்களைக் காணும்பொழுது அவை பெருமான் திருவடிவை நினைவு படுத்துகின்ரன். அவற்றை அவன் வடிவமாகவே எண்ணி பேறுடைய அடியேனின் உயிரும் உடம்பும் பூரித்துப்போகின்றன) என்றுணர்ந்து

கூறியதுபோல் நம்மால் உணர்ந்து கூறத்தான் முடியுமோ.

இந்த கலியுகத்தில் நாம் நம்மாழ்வாரும் அல்ல, நால் வகை வேதங்கள் காட்டும் வழிச்சென்றடையும் ஸ்ததியுள்ளோரும் அல்ல பின் உய்யும் வழி எதென்று அலைபாயும் அனைவருக்கும் உபாயத்தை காட்டித்தருவது ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் வரிகள். காணும் பொருள்களிலெல்லாம் கண்ணனை, அந்த பிரம்ம ரூபத்தை காண்பது தானே உண்மையான உணர்தலாய் இருக்க முடியும். அது நீலக்கடலோ, நீள் வானமோ, இல்லை பாடித்திரியும் குயிலோ, கதிரோ, மதியோ அனைத்தும் நீயென சொல்லும் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்பது கூட பிரம்மத்தை உணரும் வழியாகக்கொள்ளலாம் என்றால் மிகையாகதன்றோ.

பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம்
பரவசமிகவாகுதே - கண்ணா

(பால் வடியும்)

நீலக்கடல் போலும் நிறத்தழகா - எந்தன்
நெஞ்சம் குடிகொண்ட அன்று முதல் இன்றும்
எந்த பொருள் கண்டும் சிந்தனை செலாதொழிய

(பால் வடியும்)

வான முகட்டில் சற்றே மனம் வந்து நோக்கினும்
மோன முகம் வந்து தோன்றுதே
தெளிவான தண்ணீர் தடத்தில் சிந்தனை மாறினும்
சிரித்த முகம் காணுதே
கானக்குயில் குரலில் கருத்தமைந்திடினும் உன்
கானக்குழலோசை மயக்குதே

கருத்த குழலொடு நிறுத்த மயில் சிறகினை இறுக்கி அமைத்த திரத்திலே
கான மயிலாடும் மோனக்குயில் பாடும் நீல நதியோடும் வனத்திலே
குழல்முதல் எழிலிசை குழைய வரும் இசையில் குழலொடு மிளிரிள ம் கரத்திலே
கதிரும் மதியும் என நயன விழிகளிரு நளினமான சலனத்திலே (2)
காளிங்கன் சிரத்திலே கதித்த பதத்திலே
கனவு நனவினொடு பிறவி பிறவி தொரும்
கனிந்துருக வரம் தருக பரங்கருணை

(பால் வடியும்)




paalvadiyummugam.m...

Friday, July 11, 2008

உளியின் ஓசை - ராஜாவின் ஓசை

இளையராஜாவின் இசையில் சமீபத்தில் வெளியாகியுள்ள இந்தப் பாடல் 'உளியின் ஓசை' படத்தில் இடம்பெற்றுள்ளது.

பாடலின் துவக்கத்தில் இளையராஜா, கவிதை நடையில் என்ன சொல்லுகிறார்?

நான் ஒரு சிற்பி, நடனக்கலை தெரிய தேவையில்லை.
இருப்பினும் உனக்கதை விளக்கிடவே...

முதுநாரை, முதுகுருகு, இசை நுணுக்கம், களரியாவிரை, யாழ்நூல், பஞ்சமரபு
இவை இசை கூறும்.

செயிற்றியம், கூத்தநூல்
நடன கலை வகை கூறும்.

பல தொன்நூல்கள் கூறும்
தோற்கருவி, முழவு, முரசு, உடுக்கை,
மிருதங்க தாள மேளம் ஆகும்.

துளைக்கருவி, புல்லாங்குழலொடு,
மரக்கிளை ஒடித்து மனைத்து சீவாளி பொருந்தும் முகவீணை,
திமிரி நாயனம் நாதஸ்வரமாகும்.
நரம்புக்கருவி மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ்,
ஆயிரம் நரம்புகள் கொண்ட பேரியாழ்,
சாரங்கியொடு
என்றும் நிறை வீணையாகும்.

மிடற்றுக்கருவி குரல் ஆகும்,
பண்பட்டு பண்பாடும் குரல் வகையாகும்.

இத்தனையும் ஒருங்கிணைந்து
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என
ஏழிசை எழும்ப தாளம் தவறாமல், இசைந்தாடும் நடனக் கலைதனில்
எத்தனை பாவமுண்டு நடனத்திலே!!!

குரல்: ஸ்ரீராம் பார்த்தசாரதி
இராகம்: மாயாமாளவகௌளை & (???நீங்களே சொல்லுங்க!)
பாவாசிரியர்: நா.முத்துலிங்கம்

அகந்தையில்...


"மோனத்து இருந்த முன்னோன் கூத்தில்

உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே

ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே

இசையில் பிறந்தது ஆட்டத்து இயல்பே

ஆட்டம் பிறந்தது கூத்தினது அமைவே

கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே

நாட்டியம் பிறந்தது நாடக வகையே"

- கூத்த நூல்

இசை நூல்கள், இசைக் கருவிகள் பெயரெல்லாம் வருவது போலுளதே? எத்தனையோ காலம் முன்னரே நம் மரபில் திளைத்திட்ட இந்த இசை நயங்களை, இப்போது நினைவில் திருப்பிட, இவையெல்லாம் என்னவென்று விளக்கும் சுட்டிகளையும் இயன்றவரை இணைத்திருக்கிறேன்:

* தமிழ்ச்சங்கங்கள்
* இசைத்தமிழ்
* சுவாமி விபுலானந்தர் - யாழ்நூல்
* நாடகத்தமிழ்
* முரசும் அரசும்
* ஒரு நாகசுரம் உருவாகிறது
* துளைக்கருவிகள்
* விக்கியில் யாழ்
* இசை இன்பம் - சாரங்கி
* வைகோ இசை உரை
* விக்கியில் பஞ்சமரபு
* இசையின் கருவரைகள்

Monday, July 07, 2008

கை தொழுது கர்ம வினையும் மன்றாடுமா ???

கபீரன்பன் அவர்களின் ஒரு பதிவிற்கு நான் அளித்திருந்த பின்னூட்டத்தின் மறுமொழியாக அவர் இவ்வாறு கூறியிருந்தார்.அவர் விருப்பத்திற்கு இணங்க இந்தப்பதிவு எல்லா இசை பிரியர்களுக்குமாக சமர்ப்பணம்.


+++++

http://kabeeran.blogspot.com/2008/06/blog-post_28.html

வருக கிருத்திகா,

//"கை தொழுது கர்ம வினைகள் மன்றாடும் கைவிடாதே கண்ணா என்று சொல்லும்......" அவனின்று யாருண்டு இதற்கு... //

கர்மவினைகள் மன்றாடுகின்றனவா ?! ரொம்ப சுவாரசியமாக இருக்கிறதே. நான் இந்த பாடலை கேட்டதில்லை.

முழுபாடலையும் உங்கள் பதிவாக போட்டுவிடுங்கள். எல்லோருக்கும் பயனளிக்கும்.
நன்றி

+++++++

பாடல் வரிகள்

அழகர் மலையில் என் மனமோடி விளையாடும்

ஆயர் பாடியில் ஓர் குழைந்தை போலே (2)

நீங்காத மணிநாதம் வேணுகாணம் காதில்

வழிந்தோடும் செந்தேன் அருவிபோலே (2)

அழகர் மலையில் என் மனமோடி விளையாடும்

ஆயர் பாடியில் ஓர் குழைந்தை போலே.

திருக்கோவில் முற்றமதில்

தாமரை மலர் மொட்டுபோல் உனது காலடிகள் (2)

அவிமலர் இதழ் மீது வெண் பனித்துளியாக

ஆழ்வார்கள் பாசுர தேனடிகள்

அழகர் மலையில் என் மனமோடி விளையாடும்

ஆயர் பாடியில் ஓர் குழைந்தை போலே

காதல் மீதெழெ கண்ணனைச்சுற்றியே

களிப்புடன் மேய்ந்திடும் மோகங்களே (2)

கைதொழுது கர்ம வினைகள் மன்றாடும்

கைவிடாதே கண்ணா என்று சொல்லும் (2)

அழகர் மலையில் என் மனமோடி விளையாடும்

ஆயர் பாடியில் ஓர் குழைந்தை போலே (2)


இந்தப்பாடலை கே.ஜே.ஏஸ் தன் கம்பீரமான குரலில் பாடும்போது "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"


azagarmalayil.mp3

Thursday, July 03, 2008

இசைப் பேரறிஞர் பெ.தூரன் பிறந்தநாள் நூற்றாண்டு

தமிழகத்தில் கவிஞனாக பிறப்பதே ஒரு வரம் போலும். அந்த வரம் பெற்று சாகாவரம் கொண்ட கவிதைகளை வடித்த செம்மல்கள் எத்தனை பேர்! செந்நெல் விளைந்து செழித்த பூமியில் நற்சொல் கவிதைப்பயிர் வளர்த்து மொழிக்கும், சமுதாயத்திற்கும், மக்கள் வாழ்தர மேம்பாட்டிற்கும் அருந்தொண்டு புரிந்திட்ட கவிஞர் வரிசையில் ம.பெ.பெரியசாமித்தூரன் அவர்கள் தனக்கென பெரியதோர் இடத்தினைப் பிடித்துள்ளார்.

இந்த வருடம் பிறந்தநாள் நூற்றாண்டு காணும் அமரர் தூரன் அவர்களைப் "பல்கலைச் செம்மல்" எனவே சொல்லலாம். பகத்சிங் தூக்கிலேற்றப்பட்ட செய்தி கேட்டு, தன்னுடைய BA இளங்கலை பட்டத் தேர்வினைப் புறக்கணித்தது முதல் - விடுதலைப் போராட்டங்களிலும் பங்கெடுத்தவர். மகாகவி பாரதியால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, கவிதைகளையும், இசைப்பாடல்களையும் இயற்றியவர். அறுநூறுக்கும் மேற்பட்ட இவரது பாடல்களில் தேசிய, ஆன்மீக, சமுதாய நற்சிந்தனைகள் நிறைந்திருக்கும். இராக பாவத்துடன் அமைந்த பாடல்களாதலால், கச்சேரிகளிலும் இவரது பாடல்கள் இன்றுவரை இசைக்கப்படுகின்றன.
மிக எளிமையான பாடல்களில், மிக உயர்ந்த தத்துவக் கருத்துக்களை பாரமில்லாமல் சொல்லும் இவரது பாங்கு தன்னிகரில்லாதது. குழந்தைகளுக்காகவும் மழலைப்பாடல்களை இயற்றி உள்ளார். திருமதி.N.C.வசந்த கோகிலம், திருமதி.டி.கே.பட்டம்மாள், திருமதி.எம்.எஸ்.சுப்புலஷ்மி உட்பட பல பாடகர்களும் இவரது பாடல்களைப் பாடி பெருமைப்படுத்தினர். திருமதி.எம்.எஸ்.சுப்புலஷ்மி அவர்களின் ஐ.நா.சபைக் கச்சேரியில் இவரது 'முருகா, முருகா' பாடலும் இடம்பெற்றது.
இசைக் குறிப்புகளுடன் இவரது பாடல்கள் நான்கு தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. அவை:

1. இசைமணி மஞ்சரி (1970இல்)
2. முருகன் அருள்மணி மாலை (1972இல்)
3. கீர்த்தனை அமுதம் (1974இல்)
4. நவமணி இசைமாலை (19880இல்)

வடநாட்டினர் தமக்கு அருகிலுள்ள கர்நாடக நாட்டைப்பார்த்து அங்கும் அதற்கு தெற்கிலும் உள்ள இசைக்கு கர்நாடக இசை என்று பெயரிட்டு அழைத்தனர்.
எனத் தூரன் ஒரு சொற்பொழிவில் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் இசைச்சங்கம் தூரன் அவர்களில் இசைப் பங்களிப்புகளை பெருமைப்படுத்தும் விதம், 1972இல், 'இசைப் பேரறிஞர்' பட்டத்தினை வழங்கியது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 1970இல், 'கலைமாமணி' பட்டம் வழங்கியது.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும்(Fetna) இந்த வருடம் ஒர்லாண்டோ,ஃப்ளோரிடாவில் பெரியசாமித்தூரன் அவர்கள் பிறந்த நூற்றாண்டினை விமர்சையாக கொண்டாடுகிறது, மூன்று நாட்களுக்கு, ஜூலை நான்கு முதல்!. அந்தப் பக்கத்தில் நீங்கள் இருந்தால், விழாவில் கலந்து கொள்ளலாமே?

தூரனின் படைப்புகளில் ஒரு படைப்பாளியின் படைப்புலக ஆளுமைதனை பறைசாற்றும் அனைத்து இயல்புகளையும் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். கவிதை, சிறுகதை, நாடகம், கீர்த்தனம், கட்டுரை இலக்கியம், சிறுவர் இலக்கியம், அறிவியல் மற்றும் சிந்தனை எழுத்துக்கள், மொழிபெயர்ப்பு என பற்பல படைப்புப் பரிணாமங்கள்! "தமிழ் கலைக் களஞ்சியம்" என்னும் மிகப்பெரிய தகவல் களஞ்சிய நூலையும் பத்து பகுதிகளில் தொகுத்துள்ளார். பாரதியின் நூல்களை ஆய்வு செய்திருக்கிறார் 'பாரதியின் நூல்கள் - ஒரு திறனாய்வு' என்கிற தலைப்பில்! "கம்பனுக்கு விருத்தம் போல், பாரதிக்குச் சிந்து" எனத் தெளிவாக இனங்கண்டு சொல்கிறார்.

தூரன் அவர்கள் இயற்றிய இசைப்பாடல்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்:
Thooran_Keerthanigal
Thooran_Keerthanig...
Hosted by eSnips


தூரன் அவர்கள் இயற்றிய பாடல்களில், நான் கேட்டு மெய்மறந்த பாடல்கள்:
* முருகா முருகா என்றால் உருகாதோ (சாவேரி)
* கொஞ்சிக் கொஞ்சி வா முருகா (கமாஸ்)
* கலியுகவரதன் கண்கண்ட தெய்வமாய் (ப்ருந்தாவன சாரங்கா)
* இன்னமும் அவர் மனம் (சஹானா)
* எங்கு நான் செல்வேன் ஐயா (த்வஜவந்தி)
* தொட்டு தொட்டு பேச வரான் (பேஹாக்)

இந்த எல்லாப் பாடல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினாலும், இந்த இடுகைக்கு அவற்றில் ஒன்றினைப் பார்ப்போம்.

எங்கு நான்...


எங்கு நான் செல்வேன் ஐயா
இராகம் : த்வஜவந்தி
பாடுபவர் : பாம்பே ஜெயஸ்ரீ

எடுப்பு
எங்கு நான் செல்வேன் ஐயா - நீர் தள்ளினால்
எங்கு நான் செல்வேன் ஐயா?

தொடுப்பு
திங்கள் வெண் பிஞ்சினை செஞ்சடை
தாங்கிடும் சங்கராம்பிகை தாய் வளர்மேனியா!

முடிப்பு
அஞ்சினோர் இடரெல்லாம் அழிய ஓர் கையினால்
அபயமே காட்டிடும் அருட்பெரும் அண்ணலே!
நஞ்சினை உண்டுமே, வானுளோர் நலமுற
நாடிடும் வள்ளலே, நான்மறை நாதனே!

என்ன அருமையாக, வார்த்தைகள் வந்து விழுந்திருக்கு பாருங்க!.
வெண்மதியாம் வெண் அம்புலிதனை தன் செஞ்சடைதனில் அணிந்த சங்கரன்,
(சுருளார்ந்த செஞ்சடை என திருமந்திரத்தில் திருமூலர் குறிப்பிடுகிறார்.)
தன்னைப் பணிபவர் தீவினைதனை சங்காரம் செய்யும் சங்கரனைப் பாடுகிறார் தூரனார்.
அப்படிப்பட்ட சங்கரன், தன் மேனியில் அம்பிகையை, தாயை தன்னொரு பாகத்தில் தரித்திருக்கிறானாம்.
அஞ்சியவர் இடரெல்லாம் தவிடுபொடியாய் தகர்த்திட தனது கையினால்,
அபயம் காட்டிடும் அருட்பெரும் அண்ணல் இவனாம்.
(சிவனுக்கு 'கறை மிடறு அண்ணல்' என்றொரு பெயரும் உண்டு)
நான்மறைகளால் போற்றப்படும் நாதன், வானுளோர் நலம்பெற
நஞ்சினை உண்ட 'விடமுண்-கண்டனை' நாடிடுவார்களாம்.

அப்படிப்பட்ட அண்ணல், என்னைப்பாராது புறம் தள்ளினால், நான் வேறெங்கு செல்வேன்?
எனக்கு வேறென்ன வழி? எல்லாமும் அவனாய் இருக்கும்போது?
அவன் இன்றி எதுவும் இல்லை எனப்படும் போது,
அவனே சரணம் என அவன் தாள் பணிவதன்றி வேறென்ன செய்வேன் யான்?

பெ.தூரன் பற்றி மேலும் அறிய தொடர்புடைய சுட்டிகள்:
* தூரன் வாழ்க்கைக்குறிப்புகள்
* தென்றல் இதழில் திரு.மதுசூதனன்
* சென்னை ஆன்லைன் தளம்

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP