Monday, July 07, 2008

கை தொழுது கர்ம வினையும் மன்றாடுமா ???

கபீரன்பன் அவர்களின் ஒரு பதிவிற்கு நான் அளித்திருந்த பின்னூட்டத்தின் மறுமொழியாக அவர் இவ்வாறு கூறியிருந்தார்.அவர் விருப்பத்திற்கு இணங்க இந்தப்பதிவு எல்லா இசை பிரியர்களுக்குமாக சமர்ப்பணம்.


+++++

http://kabeeran.blogspot.com/2008/06/blog-post_28.html

வருக கிருத்திகா,

//"கை தொழுது கர்ம வினைகள் மன்றாடும் கைவிடாதே கண்ணா என்று சொல்லும்......" அவனின்று யாருண்டு இதற்கு... //

கர்மவினைகள் மன்றாடுகின்றனவா ?! ரொம்ப சுவாரசியமாக இருக்கிறதே. நான் இந்த பாடலை கேட்டதில்லை.

முழுபாடலையும் உங்கள் பதிவாக போட்டுவிடுங்கள். எல்லோருக்கும் பயனளிக்கும்.
நன்றி

+++++++

பாடல் வரிகள்

அழகர் மலையில் என் மனமோடி விளையாடும்

ஆயர் பாடியில் ஓர் குழைந்தை போலே (2)

நீங்காத மணிநாதம் வேணுகாணம் காதில்

வழிந்தோடும் செந்தேன் அருவிபோலே (2)

அழகர் மலையில் என் மனமோடி விளையாடும்

ஆயர் பாடியில் ஓர் குழைந்தை போலே.

திருக்கோவில் முற்றமதில்

தாமரை மலர் மொட்டுபோல் உனது காலடிகள் (2)

அவிமலர் இதழ் மீது வெண் பனித்துளியாக

ஆழ்வார்கள் பாசுர தேனடிகள்

அழகர் மலையில் என் மனமோடி விளையாடும்

ஆயர் பாடியில் ஓர் குழைந்தை போலே

காதல் மீதெழெ கண்ணனைச்சுற்றியே

களிப்புடன் மேய்ந்திடும் மோகங்களே (2)

கைதொழுது கர்ம வினைகள் மன்றாடும்

கைவிடாதே கண்ணா என்று சொல்லும் (2)

அழகர் மலையில் என் மனமோடி விளையாடும்

ஆயர் பாடியில் ஓர் குழைந்தை போலே (2)


இந்தப்பாடலை கே.ஜே.ஏஸ் தன் கம்பீரமான குரலில் பாடும்போது "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"


azagarmalayil.mp3

15 comments:

குமரன் (Kumaran) said...

எனக்குப் பிடித்தப் பாடல்களில் ஒன்று இது கிருத்திகா. கல்லூரிக்காலத்தில் இந்தப்பாடல் இருக்கும் ஒலிப்பேழையை வாரத்திற்கு இரு முறையேனும் கேட்பேன். எல்லாப்பாடல்களும் நன்றாக இருக்கும். இதே பாடல்கள் மலையாளத்திலும் உண்டு. அவையும் நன்றாக இருக்கும்.

கவிநயா said...

அருமையான பாடலைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கிருத்திகா.

ஜீவி said...

அருமை கிருத்திகா!
'இசை இன்பம்' பதிவிற்குள் நுழைந்தாலே, பதிவிற்கு பதிவு ஒரு நல்ல இசைக் கச்சேரியில் அமர்ந்த
உணர்வை ஏற்படுத்திவிடுகிறீர்கள்..
பெரியசாமி தூரனின் தமிழிசைத் தேனை, இப்பொழுதுதான் நமது ஜீவா
அவர்கள் போட்ட பதிவில் மாந்தித் திளைத்தோமென்றால், தொடர்ந்து ஓர் அற்புதப் பாடலை இசையுடன் நீங்கள் பதிவிட்டிருக்கிறீர்கள்!
அர்ப்பணிப்பு உணர்வுடன் 'இசை இன்பத்'தில் பதிவிடும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..
மிக்க நன்றி..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அருமையான பாடலுடன், இசை இன்பத்து ரீங்காரத்தை இனிமையாகத் துவங்கியுள்ளீர்கள் கிருத்திகா!

குழுப்பதிவு அன்பர்கள் அனைவர் சார்பிலும், இசை இன்பம் வலைப்பூவுக்கு உங்களை மகிழ்வுடன் வரவேற்கிறேன்! நல்வரவு! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அவிமலர் இதழ் மீது வெண் பனித்துளியாக ஆழ்வார்கள் பாசுர தேனடிகள் அழகர் மலையில்//

அப்படியே கவிதை பனித்துளியாகவே சொட்டுகிறது பாட்டில்!
திருமாலிருஞ் சோலைமலை என்றேன்;
என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்

//கைதொழுது கர்ம வினைகள் மன்றாடும் கைவிடாதே கண்ணா என்று சொல்லும்//

கர்ம வினைகள் கை கூப்பும் காட்சியை நம்மாழ்வாரும் விரிக்கின்றார்!

கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே,
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்,
வருமழை தவழும் மாலிருஞ் சோலை,
திருமலை அதுவே அடைவது திறமே!

வலம்செய்து வைகல் வலங் கழியாதே,
வலம்செய்யும் ஆய மாயவன் கோயில்,
வலம்செய்யும் வானோர் மாலிருஞ் சோலை,
வலம்செய்து நாளும் மருவுதல் வழக்கே!

jeevagv said...

அட்டகாசமான பாடல், ஜேசுதாஸ் குரலில் அற்புதமாய் பட்டொளி வீசிப் பறக்கிறது!
தரங்கிணி ஒலிநாடா கேசட்களில் இசை என்றால் என்னவென்று அறியாக காலத்திலும் ஜேசுதாஸை மெய்மறந்து கேட்டதெல்லாம் நினைவுக்கு வருகிறது!
பதிவிட்டமைக்கு மிக்க நன்றிகள்.

இதுபோல இன்னும் பற்பல பாடல்களைத் தந்து எங்களை இசை வெள்ளத்தில் நீந்திடச் செய்ய வேண்டும்!

கபீரன்பன் said...

//எல்லா இசை பிரியர்களுக்குமாக சமர்ப்பணம் //

நன்றி, நன்றி, நன்றி....

கர்ம வினைகள் செய்யும் சதியைப் பாருங்கள். பெருவழி இணப்பு ஒரு வாரமாக இம்சித்துக் கொண்டிருக்கிறது. பாடலை கேட்க முடியவில்லை. ஆனா என்ன அப்புறம் கேட்டுக் கொள்கிறேன்.
பாடலாசிரியர் யார் என்பது இசைப் பேழையின் அட்டை விவரத்தில் இருந்தால் சொல்லுங்களேன். அவருக்கும் ஒரு சலாம் போட்டிடலாம் ! தரங்கிணியின் பேழைகள் பலவும் கச்சேரிகளின் நேரடி ஒலிப்பதிவு. அதனால் இல்லாமலும் போகலாம்

Enjay said...

ஆம் குமரன் ஜேசுதாஸ் பாடல்களில் பல மலையாளத்திலும் தமிழிலும் கேட்கலாம். எந்த மொழியில் கேட்டாலும் அதில் இன்பத்தின் சுவை கூடுமே தவிர குறையவே குறையாது.. அது தானே இசையின் தனித்துவம்.

Enjay said...

நன்றி கவிநயா.
வாருங்கள் ஜீவி..இந்த இசைஇனபத்தேனை பருகும் எத்தனையோ பயனர்களில் நானும் ஒருவராயிருந்தேன்.. இப்போது தான் அங்கமாகும் வாய்ப்பு கிட்டியது. உண்மையில் இது ஒரு சர்க்கரைப்பந்தல் தான்.

Enjay said...

நன்றி கே.ஆர்.எஸ். இக்குழுவின் மிகப்பெரும் பயனே பேசியதைக்காட்டிலும் அதிகமாக பேசப்பொருளைப்பற்றி அறிந்து கொள்வது தான். பாடல்வரிகள் தொட்டுச்சென்றதை நம்மாழ்வாரிடம் இருந்து காட்டிச்சொல்லியிருப்பது வெகு நாள் இருந்து வரும் ஆசையான் திவ்யபிரபந்தத்தை முற்றும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசையை மேலும் தூண்டியுள்ளது. நன்றி மீண்டும்.

Enjay said...

ஆமாம் ஜீவா ஜேசுதாஸின் இசையை இரசிக்க முறையான் இசைப்பயிற்சியோ அல்லது இராக தாள புரிதல்களோ தேவையில்லை கடவுளை கண் முன்னே காட்டிச்செல்லும் ஒரு இசைக்கோயில் அவர் குரல்.

jeevagv said...

/கைதொழுது கர்ம வினைகள் மன்றாடும்
கைவிடாதே கண்ணா என்று சொல்லும் //
பொதுவாக கர்ம வினைகள் எனச் சொன்னாலே - தீவினைகளைச் சொல்லியே கேட்டிருக்கிறோம்.
இங்கே பாடலாசிரியர் நல்லூழினை சொல்லுகிறார் போலும். அவை நமக்காக செய்யும் வேலையென்ன என்று பார்த்தால், நமக்காக இறைவனிடம் வேண்டி, இவனை பிறவிக்கடலில் இருந்து காப்பாற்று என வேண்டும் போலும்!

Enjay said...

ஆம் ஜீவா நாம் எப்போதுமே முன் எத்தனப்பட்ட நினைவுகளையே குறிப்பெடுத்துக்கொள்கிறோம் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சியாகிறது. (செவிலி என்றால் பெண்ணை மட்டுமேயும், ஓட்டுநர், நடத்துனர் என்றால் ஆண் பாலைக்குரிக்கும் சொல்லாயும் கொள்வதைப்போல). நம் செய்யும் நல்ல வினைகள் கூட நம் கர்ம வினைகளாய் பின் தொடர்ந்து இது போன்ற உதவிகளைச்செய்யும் போலும். நன்றி தங்களின் பின்னூட்ட மேலதிக புரிதல்களை தந்து சென்றிருக்கிறது.

தி. ரா. ச.(T.R.C.) said...

welcome to Isaipayanam. wonderful selection song. Thankyou

+Ve Anthony Muthu said...

மனதுக்கு நிறைவையும், அமைதியயும் தந்த பாடல்.
இதயம் நிறைந்த நன்றிகள் கிருத்திகா!

கூடவே சேர்ந்து பாடிப் பார்த்தேன்.

ஜேசுதாசின் குரலின் குழைவைக் குரலில் கொண்டு வர நம்மால் முயற்சி மட்டுமே பண்ண முடியும்.

அதுவும் கூட கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழியின் கதைதான்.

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP