Saturday, May 09, 2009

உளறினாலும் அழகிய பாட்டு வருமா?

ரொம்ப நாள் ஆச்சு இசை இன்பத்துல பதிவு போட்டு.. ( என்னோட ப்ளாக்ல கூட பதிவு போட்டு ரொம்ப நாள் ஆனது வேற கதை)... ஏர்டல் சூப்பர் சிங்கர் எத்தனை பேரு பார்கறீங்கனு தெரியாது ... என்னை மாதிரி ஆளுங்க பாட தெரியாததுனால இந்த மாதிரி நிகழ்ச்சி எல்லாம் நல்ல பார்பாங்கனு நினைக்கிறேன் .. அதை பார்த்ததுனால வந்த வினை தான் உங்களுக்கு எல்லாம் இந்த பதிவு.. (விதி யாரை விட்டுது).. சரி சரி விஷயத்துக்கு வரேன்..
ஹரிஹரன் சார் எப்படி பாடுவார்னு எல்லாருக்கும் தெரியும்.... அவரை கௌரவபடுத்தும் வகையில் அவர் பாடிய பாடல்கள் பாடனும்னு ஒரு சுற்று.. அதுல ஒருத்தர் பாடினது உதயா படத்துல வர "உதயா உதயா உளறுகிறேன்" பாட்டு மிக அருமையாக இருந்தது.. நீங்களும் கேளுங்களேன்.. சாதனா சர்கமும் சேர்ந்து பாடி இருக்காங்க. நான் மிகவும் ரசிச்ச பாட்டு.. கேட்டுட்டு உங்க கருத்துகளை சொல்லுங்களேன்..

உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுதிறேன்
காதல்

காதல் ...தீண்டவே .... காதல் ...தீண்டவே
கடல் தாகம் தீர்ந்ததே
உன்னாலே தன்னாலே
உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுதிறேன்
காதல் காதல் காதல்

உன் பாதி வாழ்கிறேன்
என் பாதி தேய்கிறேன்
உன்னாலே தன்னாலே
என்னாளும் ...
உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுதிறேன்
காதல் காதல் காதல்

என்னை தொலைத்துவிட்டேன்
ஏன் உன்னை அடைந்துவிட்டேன்
உன்னை அடைந்ததனால்
என் என்னை தொலைத்துவிட்டேன்
ஏனோ ஏனேனோ தொலைந்தே நீந்தேனோ
ஏனோ ஏனேனோ மீண்டும் தொலைவேனோ
ஆயுள் ஆனவளே
உன் கூந்தல் இருட்டில் என் கிழக்கு தொலைந்தும்
காதல்...தீண்டவே
மூச்சின் குழிகளிலே ... உயிர் ஊற்றி அனுப்பிவைத்தேன்
கூச்சம் வருகையிலே ...உடல் மாற்றி நுழைந்துவிட்டேன்
ஏனோ ஏனேனோ ஏதோ ஆனேனோ
ஏனோ ஏனேனோ நீயாய் ஆனேனோ
தாயுமானவனே
என் நெற்றி பாலையில் ஊற்றை திறந்து
காதல்...
காதல். ..தீண்டவே... காதல்...தீண்டவே
கடல் தாகம் தீர்ந்ததே
உன்னாலே தன்னாலே
உயிரே உயிரே உளறுகிறேன்
உளறியும் கவிதைகள் எழுதுகிறேன்

உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல் ...காதல் ...

Tuesday, December 30, 2008

தமிழிசை வரலாறு - 5 - சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை

இத்தொடரின் இறுதிப் பகுதியினை எட்டி விட்டோம். இந்தப் பகுதியில் சென்ற மூன்று நூற்றாண்டுகளில் தமிழிசைப் பாடல்களை இயற்றிய அருந்தமிழ்க் கவிகளின் பாடல்கள் சிலவற்றை திருமதி. சௌம்யா அவர்கள் பாடிக் காட்டுகிறார்.

9. இராம நாடகம்
இயற்றியவர் : அருணாசலக் கவிராயர் (1711-1779)
பாடல் : ஏன் பள்ளி கொண்டீரய்யா, ஸ்ரீரங்கநாதா!
இராகம் : மோகனம்

அருணாசலக் கவிராயரைப் பற்றி ஏற்கனவே இட்ட பதிவினை இங்கே பார்க்கவும்.

10. மாரிமுத்தாப்பிள்ளை (1712 - 1787)
பாடல் : காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே
இராகம் - யதுகுலகாம்போதி

11. முத்துத்தாண்டவர் (1560(?) - 1640(?))
பாடல் : இத்தனை துலாபாரமாய்
இராகம்: தன்யாசி

பாடல்: ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காண கண் ஆயிரம் வேண்டாமோ!
இராகம் : மயாமாளவகௌளை

மாரிமுத்தாப்பிள்ளை மற்றும் முத்துத்தாண்டவர் அவர்கள் இருவரைப் பற்றிய பதிவினை இங்கே பார்க்கவும்.

இவர்கள் மூவரும் - தமிழ் மூவர் என தமிழ் இசை அறிஞர்களால் பெருமைப்படுத்தப் பட்டவர்கள். தமிழில் கிருதி வடிவினை (பல்லவி - அனுபல்லவி - சரணம் என்ற பாடல் வடிவு) அறிமுகப் படுத்தியவர்கள்.

12. கோபால கிருஷ்ண பாரதி (1811 - 1896)
பாடல் : யாருக்குத்தான் தெரியும், அவர் மகிமை
இராகம் : தேவமனோகரி
இவர் இயற்றிய நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் மிகவும் பிரசிதம். ஆழ்ந்த தத்துவப் பொருள் நிறைந்தவை இவரது பாடல்கள். மேலும் இரண்டு நாயன்மார்கள் (நீலகண்ட நாயனார், காரைக்கால் அம்மையார்) சரித்திரங்களையும் படைத்துள்ளார்.

13. அண்ணாமலை ரெட்டியார் (1865-1891)
இவரது காவடிச் சிந்து பாடல்கள் மிகவும் பிரபலம். 'காவடிச் சிந்தின் தந்தை' எனவே இவரை அழைக்கலாம்!. 'சென்னிகுளம்' என்ற இவரது ஊர்ப்பெயரை, இவரது பாடல்களில் காணலாம். இவர், தமது, 26ஆவது, வயதிலேயே இறந்தார் என்பது வருத்தத்திற்குரிய இழப்பாகும்.

இசைத்தமிழின் இனிதானதொரு அங்கம் சிந்து. பாடுவதற்கு எளிதானது. இதில் ஐந்து பகுதிகள் அடங்கும் : பல்லவி, அனுபல்லவி, பின்பு மூன்று கண்ணிகள் கொண்ட சரணம். காவடிச் சிந்து, என்பது, சிந்தில் ஒருவகை. இதில் பல்லவியும், அனுபல்லவியும் இல்லாமல், சரண வரிகள் மட்டுமே.

பாடல் : பூமி மெச்சிடும் (காவடிச்சிந்து)
இப்பாடலின் இருந்து மூன்று கண்ணிகள்:

பூமி மெச்சிடும் அண்ணாமலைக்கோர் துணையானவன்
மயில் வாகனன், ஒரு கானவன் - எனப்
புனத்தைக் காக்கும் வள்ளி
தனத்தைப் பார்க்க மெல்லப் போனவன்.

தென்றலான புலி வந்து கோபமொடு சீறுதே
தடுமாறுதே; இதழ் ஊறுதே - மெத்தத்
தீமையாம் இருளினில்
காமலாகிரியும் மீறுதே.

மார வேளினாலே கோர மனகாம் வாதையே
எனும் தீதையே தீரத் தூதையே! - சொல்லி
வாட்டம் தீர் குகனைக்
கூட்டி வாடியடி கோதையே!

(இப்பாடல் 5:40 இல் தொடங்குகிறது)


14. பாபநாசன் சிவன் (1890 - 1973)
'தமிழ் தியாகராஜர்' எனப் போற்றப் படும் பாபநாசம் சிவன் அவர்கள், நிறைய தமிழ்ப் பாடல்களை, மூம்மூர்த்திகள் போல, தமிழுக்கு இயற்றித் தந்தவர்கள். மூம்மூர்த்திகளின் பாதிப்பால், மற்ற திராவிட மொழிப் பாடல்களே, தென்னிந்திய இசையில் பிரபலமாகி இருந்தது. தமிழிலும் அதைப்போன்ற கீர்த்தனைகளைப் பாடிட முடியும் என்பதை நிரூபித்திக் காட்டியவர். கிருதி, வர்ணம், பதம், ஜவளி என பற்பல இசை வடிவங்களிலும், பற்பல இராகங்களிலும் தமிழில் இசைத்துக் காட்டிய பெருமை இவரைச் சாரும்.

பாடல் : கஜவதனா கருணாசதனா
இராகம் : ஸ்ரீரஞ்சனி

எடுப்பு
கஜவதனா கருணா சதனா
சங்கரபாலா லம்போதர சுந்தர -
ஸ்ரீ கஜவதனா கருணா சதனா

தொடுப்பு
அஜனமரேந்திரனும் முனிவரும் பணியும்
பங்கஜ சரணா, சரணம் சரணம்!

முடிப்பு
நீயே மூவுலகிற்கு ஆதாரம்
நீயே சிவாகம மந்திர சாரம்
நீயே வாழ்வில் என் ஜீவாதாரம்
நீயருள்வாய் சுமுகா, ஓம்கார
கஜவதனா கருணா சதனா!

15. மகாகவி பாரதி (1882 - 1921)
பாடல்: வாழிய செந்தமிழ்

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

(இதைவிடவும் இனிதாக நிறைவு செய்ய இயலுமோ!, அழகாக திருமதி.சௌம்யா அவர்கள் நிறைவு செய்தார், இவ்வாறாக, 'சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை' என்ற தலைப்பிட்ட இந்நிகழ்ச்சியை.)
இப்படியொரு அருமையான நிகழ்ச்சியை வழங்குவதற்கான மூல காரணம், அவருக்கு அமைந்த அருமையான குரு - டாக்டர் எஸ்.இராமநாதன் அவர்கள் மற்றும் திருமதி.முக்தா, அவர்களை இங்கே குறிப்பிடுகிறார். குறிப்பாக இராமநாதன் அவர்களின் சிலப்பதிகார இசை ஆராய்ச்சிகள், அவற்றில் இருந்து நாம் அறியக் கிடைக்கும் பண்டைத் தமிழரின் இசை நுணுக்கங்கள்.

Saturday, December 27, 2008

தமிழிசை வரலாறு - 4 - திருவாசகமும் திருப்புகழும்

இந்தத் தொடரில், திருமதி. சௌம்யா அவர்கள் 'சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை' என்ற தலைப்பில் தொகுத்து வழங்கிய பாடல்களைப் பார்த்து வருகிறோம். இந்தப் பகுதியில் திருவாசகம் மற்றும் திருப்புகழ்.

6. திருவாசகம்
ஏற்கனவே, சமயக் குரவர் நால்வரில், மூவரைப் பார்த்து விட்டோம். இப்போது நாம் பார்க்கவிருப்பது, நான்காவது நபர் - திருவாசகம் தந்து அன்பர் மனதை உருக்கிய மணிவாசகர்! மணிவாசகரின் காலத்தைப் பற்றி முரணான கருத்துக்கள் இருப்பினும், பொதுவாக அவர், 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என கருதப் படுகிறது. சமயக் குரவர் நால்வரின் காலத்தைப் பற்றி மேலும் படிக்க இந்தக் கட்டுரையை நாடவும்.

எட்டாம் திருமுறை
இயற்றியவர் : மணிவாசகர் (மாணிக்கவாசகர்)
இராகம் : மோகனம்

பார்பாடும் பாதாளர்
பாடும்விண்ணோர் தம்பாடும்
ஆர்பாடுஞ் சாரா
வகையருளி ஆண்டுகொண்ட
நேர்பாடல் பாடி
நினைப்பரிய தனிப்பெரியோன்
சீர்பாடல் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ.


இத்திருவாசகம் தன்னில், தன்னை ஆட்கொண்டு அருளிய சிவபெருமானின் நேர்மையையும், சிறப்பினையும் நாம் 'தெள்ளேணம்' கொட்டுவோம் என்கிறார் அருள் மணிவாசகர்.
பாடலின் பொருளை இங்கே பார்க்கவும்.
அது என்ன 'தெள்ளேணம்'?
கைகளால் கும்மி அடித்துப் பாடுவோம் அல்லவா, அப்படிப் பாடுவது தான் 'தெள்ளேணம்'.
பண்டைத் தமிழர், குழல் வைத்துப் பாடினர், யாழ் வைத்து பாடினர், பறை முழக்கினர்,
ஏன் எந்த இசை வாத்தியமும் இல்லாமலும், தன் கைகளைத் தட்டியே, இசை எழுப்பினர்!
இவர், கைகள் மட்டுமல்லாமல், காலையும் தட்டுவர். அப்போது, காலில் அணிந்திருந்த கழலும் இசை எழுப்பும்!
இப்படியாக, நமது இசைக்கு, அன்றாட வாழ்வில் நிகழும் நாட்டுப்புறப் பாடலும் வளம் சேர்க்கும்.
~~~~~~~~~~~~~~~~
7. திருப்புகழ்
சந்தங்களின் இமயம் அருளாளர் அருணகிரியின் திருப்புகழில் இருந்து அடுத்த பாடல். இப்பாடலை திருமதி.சௌம்யா அவர்கள், இரண்டு வேகத்திலும் பாடுவது அருமை. சந்தத்திற்கு இசைந்து வருவது போல், எத்தனை எத்தனை அருமையான சொல்லாடல்கள். புதுமையான சொற்களும், பழமையான் சொற்களும், புகுந்து விளையாடும் இவர் பாக்களில்.
தமிழால் திருப்புகழுக்கு பெருமையா, அல்லது, திருப்புகழால் தமிழுக்குப் பெருமையா எனப் பட்டிமன்றமே வைக்கலாம். முன்னது தொடக்கம், பின்னது முடிபு என்பேன் நான். இந்தப் பாடலின் தான் பாருங்களேன், எத்தனை மூன்றெழுத்துச் சொற்கள்! மூன்றெழுத்துல் என் மூச்சிருக்கும்?!

இயற்றியவர் : அருணகிரி நாதர் (பதினைந்தாம் நூற்றாண்டு)
இராகம் : ஹமீர் கல்யாணி
தலம் : பழநி


தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும் ...... அயலாகத்

தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய ...... எறியாதே

கமல விமல மரக தமணி
கனக மருவு ...... மிருபாதங்

கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவு ...... தரவேணும்

குமர சமர முருக பரம
குலவு பழநி ...... மலையோனே

கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி ...... மணவாளா

அமர ரிடரு மவுண ருடலு
மழிய அமர்செய் ...... தருள்வோனே

அறமு நிறமு மயிலு மயிலு
மழகு முடைய ...... பெருமாளே.


பாடலைக் கேட்டவாறு, பொருளைப் பார்க்கலாமா?
(பாடல் 0:40 இல் தொடங்குகிறது)


அருஞ்சொற்பதம்:
தமர் : சுற்றம்
தறு : கொடுமை, வன்மை
மறலி : காலன் (யமன்)
முறுகு : கடினம்; திண்ணிய
சமர் : போர்
குலவு : ஒளிர்ந்து
பகடு : வலிமையான; ஆண் யானை
முடுகு : விரைந்து
அவுணர் : அசுரர்
அமர் : போர்
அயில் : வேல்

நம் குடும்பமும், உறவினர்களும், நண்பர்களுமாக சேர்ந்து வாழ்கிறோம். ஆக சுற்றத்தோடு வாழ்கிறோம். மேலும், பல பொருள் ஈட்டி, செல்வம் தனைச் சேர்த்து வாழ்கிறோம். மேலும், அவரவர், தமது தகுதிக்கேற்ப, மற்றவரை மேலாண்மை செய்து, ஆட்சியும் செய்து வருகிறோம்.

சுற்றம், செல்வம், ஆட்சி - இந்த மூன்றும், நமக்கு அயலாகப் போவது எப்போது? அதாவது, நம்மை விட்டுப் போவது - கொடுமையான கூற்றுவன், தன் பாசக்கயிற்றைக் கொண்டு, நம் தலைக்குமேல் ஏறிந்து, சுருக்கிடும் பொழுது.

அப்படிக் கூற்றுவன், அந்தக் கடினமான பாசக்கயிறை எறியாமல் இருக்க என்ன செய்ய?
தாமரை போன்று அழகானவனும், மாசற்ற, மரகதமணி மற்றும் தங்கத்தைப் போன்றவனுமான முருகனின் திருவடிகளை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
அதற்கான அருளினை, குமரா, நீயே தரவேண்டும். உன்னைப்பிரிந்து வாடும் என் தனிமை அகலும் படியாக அறிவினைத் தர வேண்டும்.

இங்கே கந்தனை நான்கு பெயர்களால் அழைத்து, பாடற்தலத்தினைச் சொல்லுகிறார்:
குமரா, சமரா (போர்வீரா), முருகா, பரமனே,
குலவும் - ஒளிர்ந்து, திகழ்ந்து விளங்கும் பழநிமலை தனில் உறைவோன் - என.

அச்சுறுத்தும் யானையை, (வள்ளிக்காக) உன் செயல் முடிய, விரைந்து வரச் செய்தவனே,
அமரர்(தேவர்) துன்பங்களையும், அசுரர்களின் உடலினையும் (ஆணவத்தினையும்), ஒருசேர அழிந்திடும்படி, போர் செய்து அருள்வோனே,

அறமும், நிறமும், வேலும், மயிலும், அழகும், உடைய கந்த பெருமாளே!
~~~~~~~
8. சித்தர் பாடல்கள்
பாடல் : நாதர் முடி மேலிருக்கும் நல்லபாம்பே
இராகம் : புன்னாகவரளி
இயற்றியவர் : பாம்பாட்டிச் சித்தர்

நாதர்முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே!
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே!
பாதலத்தில் குடிபுகும் நல்ல பாம்பே!
பாடிப்பாடி நின்று ஆடு பாம்பே!
ஆடு பாம்பே, தெளிந்தாடு பாம்பே!

(அடுத்த பகுதியில் தமிழ் மூவர். அப்பகுதியில் இத்தொடர் நிறையும் என நினைக்கிறேன், பார்க்கலாம்.)

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP