Thursday, July 03, 2008

இசைப் பேரறிஞர் பெ.தூரன் பிறந்தநாள் நூற்றாண்டு

தமிழகத்தில் கவிஞனாக பிறப்பதே ஒரு வரம் போலும். அந்த வரம் பெற்று சாகாவரம் கொண்ட கவிதைகளை வடித்த செம்மல்கள் எத்தனை பேர்! செந்நெல் விளைந்து செழித்த பூமியில் நற்சொல் கவிதைப்பயிர் வளர்த்து மொழிக்கும், சமுதாயத்திற்கும், மக்கள் வாழ்தர மேம்பாட்டிற்கும் அருந்தொண்டு புரிந்திட்ட கவிஞர் வரிசையில் ம.பெ.பெரியசாமித்தூரன் அவர்கள் தனக்கென பெரியதோர் இடத்தினைப் பிடித்துள்ளார்.

இந்த வருடம் பிறந்தநாள் நூற்றாண்டு காணும் அமரர் தூரன் அவர்களைப் "பல்கலைச் செம்மல்" எனவே சொல்லலாம். பகத்சிங் தூக்கிலேற்றப்பட்ட செய்தி கேட்டு, தன்னுடைய BA இளங்கலை பட்டத் தேர்வினைப் புறக்கணித்தது முதல் - விடுதலைப் போராட்டங்களிலும் பங்கெடுத்தவர். மகாகவி பாரதியால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, கவிதைகளையும், இசைப்பாடல்களையும் இயற்றியவர். அறுநூறுக்கும் மேற்பட்ட இவரது பாடல்களில் தேசிய, ஆன்மீக, சமுதாய நற்சிந்தனைகள் நிறைந்திருக்கும். இராக பாவத்துடன் அமைந்த பாடல்களாதலால், கச்சேரிகளிலும் இவரது பாடல்கள் இன்றுவரை இசைக்கப்படுகின்றன.
மிக எளிமையான பாடல்களில், மிக உயர்ந்த தத்துவக் கருத்துக்களை பாரமில்லாமல் சொல்லும் இவரது பாங்கு தன்னிகரில்லாதது. குழந்தைகளுக்காகவும் மழலைப்பாடல்களை இயற்றி உள்ளார். திருமதி.N.C.வசந்த கோகிலம், திருமதி.டி.கே.பட்டம்மாள், திருமதி.எம்.எஸ்.சுப்புலஷ்மி உட்பட பல பாடகர்களும் இவரது பாடல்களைப் பாடி பெருமைப்படுத்தினர். திருமதி.எம்.எஸ்.சுப்புலஷ்மி அவர்களின் ஐ.நா.சபைக் கச்சேரியில் இவரது 'முருகா, முருகா' பாடலும் இடம்பெற்றது.
இசைக் குறிப்புகளுடன் இவரது பாடல்கள் நான்கு தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. அவை:

1. இசைமணி மஞ்சரி (1970இல்)
2. முருகன் அருள்மணி மாலை (1972இல்)
3. கீர்த்தனை அமுதம் (1974இல்)
4. நவமணி இசைமாலை (19880இல்)

வடநாட்டினர் தமக்கு அருகிலுள்ள கர்நாடக நாட்டைப்பார்த்து அங்கும் அதற்கு தெற்கிலும் உள்ள இசைக்கு கர்நாடக இசை என்று பெயரிட்டு அழைத்தனர்.
எனத் தூரன் ஒரு சொற்பொழிவில் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் இசைச்சங்கம் தூரன் அவர்களில் இசைப் பங்களிப்புகளை பெருமைப்படுத்தும் விதம், 1972இல், 'இசைப் பேரறிஞர்' பட்டத்தினை வழங்கியது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 1970இல், 'கலைமாமணி' பட்டம் வழங்கியது.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும்(Fetna) இந்த வருடம் ஒர்லாண்டோ,ஃப்ளோரிடாவில் பெரியசாமித்தூரன் அவர்கள் பிறந்த நூற்றாண்டினை விமர்சையாக கொண்டாடுகிறது, மூன்று நாட்களுக்கு, ஜூலை நான்கு முதல்!. அந்தப் பக்கத்தில் நீங்கள் இருந்தால், விழாவில் கலந்து கொள்ளலாமே?

தூரனின் படைப்புகளில் ஒரு படைப்பாளியின் படைப்புலக ஆளுமைதனை பறைசாற்றும் அனைத்து இயல்புகளையும் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். கவிதை, சிறுகதை, நாடகம், கீர்த்தனம், கட்டுரை இலக்கியம், சிறுவர் இலக்கியம், அறிவியல் மற்றும் சிந்தனை எழுத்துக்கள், மொழிபெயர்ப்பு என பற்பல படைப்புப் பரிணாமங்கள்! "தமிழ் கலைக் களஞ்சியம்" என்னும் மிகப்பெரிய தகவல் களஞ்சிய நூலையும் பத்து பகுதிகளில் தொகுத்துள்ளார். பாரதியின் நூல்களை ஆய்வு செய்திருக்கிறார் 'பாரதியின் நூல்கள் - ஒரு திறனாய்வு' என்கிற தலைப்பில்! "கம்பனுக்கு விருத்தம் போல், பாரதிக்குச் சிந்து" எனத் தெளிவாக இனங்கண்டு சொல்கிறார்.

தூரன் அவர்கள் இயற்றிய இசைப்பாடல்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்:
Thooran_Keerthanigal
Thooran_Keerthanig...
Hosted by eSnips


தூரன் அவர்கள் இயற்றிய பாடல்களில், நான் கேட்டு மெய்மறந்த பாடல்கள்:
* முருகா முருகா என்றால் உருகாதோ (சாவேரி)
* கொஞ்சிக் கொஞ்சி வா முருகா (கமாஸ்)
* கலியுகவரதன் கண்கண்ட தெய்வமாய் (ப்ருந்தாவன சாரங்கா)
* இன்னமும் அவர் மனம் (சஹானா)
* எங்கு நான் செல்வேன் ஐயா (த்வஜவந்தி)
* தொட்டு தொட்டு பேச வரான் (பேஹாக்)

இந்த எல்லாப் பாடல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினாலும், இந்த இடுகைக்கு அவற்றில் ஒன்றினைப் பார்ப்போம்.

எங்கு நான்...


எங்கு நான் செல்வேன் ஐயா
இராகம் : த்வஜவந்தி
பாடுபவர் : பாம்பே ஜெயஸ்ரீ

எடுப்பு
எங்கு நான் செல்வேன் ஐயா - நீர் தள்ளினால்
எங்கு நான் செல்வேன் ஐயா?

தொடுப்பு
திங்கள் வெண் பிஞ்சினை செஞ்சடை
தாங்கிடும் சங்கராம்பிகை தாய் வளர்மேனியா!

முடிப்பு
அஞ்சினோர் இடரெல்லாம் அழிய ஓர் கையினால்
அபயமே காட்டிடும் அருட்பெரும் அண்ணலே!
நஞ்சினை உண்டுமே, வானுளோர் நலமுற
நாடிடும் வள்ளலே, நான்மறை நாதனே!

என்ன அருமையாக, வார்த்தைகள் வந்து விழுந்திருக்கு பாருங்க!.
வெண்மதியாம் வெண் அம்புலிதனை தன் செஞ்சடைதனில் அணிந்த சங்கரன்,
(சுருளார்ந்த செஞ்சடை என திருமந்திரத்தில் திருமூலர் குறிப்பிடுகிறார்.)
தன்னைப் பணிபவர் தீவினைதனை சங்காரம் செய்யும் சங்கரனைப் பாடுகிறார் தூரனார்.
அப்படிப்பட்ட சங்கரன், தன் மேனியில் அம்பிகையை, தாயை தன்னொரு பாகத்தில் தரித்திருக்கிறானாம்.
அஞ்சியவர் இடரெல்லாம் தவிடுபொடியாய் தகர்த்திட தனது கையினால்,
அபயம் காட்டிடும் அருட்பெரும் அண்ணல் இவனாம்.
(சிவனுக்கு 'கறை மிடறு அண்ணல்' என்றொரு பெயரும் உண்டு)
நான்மறைகளால் போற்றப்படும் நாதன், வானுளோர் நலம்பெற
நஞ்சினை உண்ட 'விடமுண்-கண்டனை' நாடிடுவார்களாம்.

அப்படிப்பட்ட அண்ணல், என்னைப்பாராது புறம் தள்ளினால், நான் வேறெங்கு செல்வேன்?
எனக்கு வேறென்ன வழி? எல்லாமும் அவனாய் இருக்கும்போது?
அவன் இன்றி எதுவும் இல்லை எனப்படும் போது,
அவனே சரணம் என அவன் தாள் பணிவதன்றி வேறென்ன செய்வேன் யான்?

பெ.தூரன் பற்றி மேலும் அறிய தொடர்புடைய சுட்டிகள்:
* தூரன் வாழ்க்கைக்குறிப்புகள்
* தென்றல் இதழில் திரு.மதுசூதனன்
* சென்னை ஆன்லைன் தளம்

8 comments:

jeevagv said...

இந்த இடுகை ஏற்கனவே 'என் வாசகம்' பதிவில் வெளியிட்டதுதான். மறுமொழிகளில் கிடைத்த ஒருசில கூடுதல் செய்திகளையும், சுட்டிகளையும் சேர்த்திருக்கிறேன், இந்த இடுகையில்.

jeevagv said...

முன்பு வந்த மறுமொழிகள்:

கவிநயா said...

தூரன் அவர்கள் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி ஜீவா. அருமையான பாடல். அவனே தள்ளி விட்டால் போக்கிடம்தான் ஏது?
10:07 PM
அகரம்.அமுதா said...

பெரியசாமித் தூரனைப்பற்றி மிக அழகியத் தகவல்களைத் தந்துள்ளீர், வாழ்த்துக்கள். என்கணினியில் அப்பாடலைக்கேட்க முடியவில்லை. பின்கு அதனையும் கேட்டுவிட்டு விரிகாகக் கருத்துரைக்கிறேன். நன்றி!
2:02 AM
sury said...

எங்கு நான் செல்வேன் ஐயா !
" நான்
எங்கு செல்வேன் ஐயா ?"
இப்படிப்பட்ட அற்புதமான பாடலைப் போட்டு
என்னைக் கட்டிப் போட்டு விட்டால் நான்
எங்கு செல்வேன் ஐயா ?

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://arthamullavalaipathivugal.blogspot.com
5:55 AM
ஜீவா (Jeeva Venkataraman) said...

வாங்க கவிநயா,
போக்கிடம் இல்லை,
வேறெங்கு புக,
வேந்தன் அவன் இல்லை என்றால்.

வருகைக்கு நன்றி.
8:51 AM
ஜீவா (Jeeva Venkataraman) said...

வருக அமுதா,
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
பாடலைக் கேட்க இயன்றதா?
8:52 AM
ஜீவா (Jeeva Venkataraman) said...

வாங்க சுப்புரத்தினம் ஐயா,
அற்புதமான பாடலே.
முத்துசாமி தீக்ஷிதரின் 'அகிலாண்டேஸ்வரி ரக்ஷமாம்' த்வஜவந்தி கீர்த்தனையைப் போலவே உள்ளதல்லவா இந்தப் பாடல்?
8:55 AM
கானா பிரபா said...

மிக்க நன்றி ஜீவா நிறைய அறிந்துகொண்டேன்
9:02 AM
ஜீவா (Jeeva Venkataraman) said...

நல்லது பிரபா, வருகைக்கு நன்றி.
9:09 AM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஜீவா
பெ.தூரன் அவர்களைப் பற்றி, அவர் நூற்றாண்டு சமயத்தில் நல்ல முறையில் அறியத் தந்தீர்கள்! நன்றி!

கொஞ்சிக் கொஞ்சி வா முருகா எனக்கு மிகவும் பிடித்த தூரன் பாடல்!
தேச பக்திப் பாடல்களும் தூரன் பல எழுதி இருக்கார்! குழந்தைகளுக்கான கதை நூல்களும் அவர் கைவண்ணம்!

தொட்டுத் தொட்டுப் பேச வரான் கண்ணன் பாட்டும் மிக அருமையா இருக்கும்!

அன்னார் எழுதிய கண்ணன் பாடல்கள் தொகுப்பு உள்ளதா? கண்ணன் பாட்டில் பதிக்க! நூற்றாண்டு விழாவில் அவர் நினைவாக அமையுமே!
6:21 PM
ஜீவா (Jeeva Venkataraman) said...

வருக இரவிசங்கர்,
கண்ணன் பாடல்கள் மட்டும் தனியாக இல்லை. மேலே தந்துள்ள கோப்பில், தூரன் அவர்களின் பாடல்களின், கண்ணன் பாடல்களும் உள்ளன.
இந்த இடுகையை இசை இன்பதிலும் வெளியிட எண்ணம்.
9:36 PM
Vassan said...

ஜீவா

நலமா.

ஏப்ரல் மாத 'தென்றலில்' தூரன் அவர்கள் பற்றி, சிறப்பாக மதுசூதனன் கட்டுரை ஒன்று எழுதியிருந்தார்.

சுட்டி || தூரன்

ஒரு தடவை எங்களூருக்கு கித்தார் பிரசன்னா வந்திருந்த போது, தூரன் அவர்களுடைய பாடல் ஒன்றை
கித்தாரிலேயே வாசித்தார். மாறுதலாகவும் அற்புதமாகவும் அமைந்தது.
9:47 PM
ஜீவா (Jeeva Venkataraman) said...

வாங்க வாசன்,
நலமே நான். தாங்கள் நலம் சிறக்கட்டும்.
ஏப்ரல் மாதத்து தென்றல் இதழில் தூரன் கட்டுரையை அப்போதே படித்தறிந்தேன். அதிலிருந்து முதல்முதலில் இது தூரன் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு என அறிந்தேன். இந்த இடுகையில் ஓரிரண்டு செய்தித் துளிகள் அந்தக் கட்டுரையில் படித்ததுதான். ஆகவே இந்த சமயத்தில் மதுசூதனன் அவர்களுக்கும் என் நன்றிகள். சுட்டியினைத் தந்தமைக்கு தங்களுக்கும் நன்றிகள்.

பெரியசாமித் தூரன் பற்றி மேலதிக தகவல்கள் நாடுவோர்க்கு, இந்தச் சுட்டி பயனுள்ளதாக இருக்கும். தமிழிசை மட்டுமல்லாமல், ஏனைய இலக்கியப் பிரிவுகளுக்கும் அவர் ஆற்றிய தொண்டுகளை விவரித்திருந்தார்.

தூரன் பாடல் கிடாரிலா, செய்தியைக் கேட்கவே ஆவலாய் இருக்கிறது!
10:19 PM
Simulation said...

பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான, சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தின் உடனுறை தேவியாம் திரிபுரசுந்தரி மேல் பாடப்பெற்ற, சுத்தஸாவேரியில் அமைந்த, 'தாயே திரிபுர சுந்தரி', பெரியசாமித்தூரன் அவர்களின் ஒரு அழகான பாடலாகும்.

- சிமுலேஷன்
11:57 PM
ஜீவா (Jeeva Venkataraman) said...

வருக சிமுலேஷன் சார்,
அப்படியா சேதி. அந்தப் பாடலையும் சீக்கிரமே கேட்க வேண்டும் என ஆவலைத் தூண்டுகிறது!
12:00 AM
Simulation said...

பெரியசாமித் தூரன் அவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு இங்கே:-

http://entertainment.vsnl.com/thooran/Thooran_Biography.html
12:02 AM
Simulation said...

காத்திருக்கத் தேவையில்லை. கேட்டிவிடுங்கள் சாகேதராமன் குரலில்.

http://www.youtube.com/watch?v=G9AcCYvHK8s

"வருக சிமுலேஷன் சார்,
அப்படியா சேதி. அந்தப் பாடலையும் சீக்கிரமே கேட்க வேண்டும் என ஆவலைத் தூண்டுகிறது!"
12:21 AM
ஜீவா (Jeeva Venkataraman) said...

சுட்டிகளுக்கு நன்றிகள் சிமுலேஷன் சார்.
7:48 AM
ஜீவா (Jeeva Venkataraman) said...

திரிபுர சுந்தரி... பாடலைக் கேட்டு முடித்தேன் சிமுலேஷன் சார். அருமையாக இருந்தது.
"தேயாத புகழ் மேவும் திருவான்மியூர் வளர்..."
"தேனார் மொழி வல்லி..."
என்ற சரண வரிகள் அற்புதம்!
7:54 AM
nAradA said...

Hi JeevA:
I just happened to see your blog on P. Thooran after seeing your post on rasikapriya.net. The isai inbam blog is also good. I am a great fan of Thooran. Years ago (in 2004) I wrote an article on P. Thooran as part of my series, "Thamizh songs in carnatic music" in Chennaionline.com. I am giving the URL below if you are interested in reading it.
http://www.chennaionline.co m/musicnew/thamizhsongs/2004/song14.asp
11:33 PM
ஜீவா (Jeeva Venkataraman) said...

Welcome Narada Sir,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தங்கள் தருவித்த சுட்டியினைப் பார்த்தேன். தூரன் அவர்களின் "புண்ணியம் ஒரு கோடி" பாடலைப் பற்றி எழுதியுள்ளீர்கள். ஆச்சார்யரின் அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.
8:57 AM
Anonymous said...

M.S.Subbulakshmi sang his " Muruga Muruga"
song at Carnegie Hall!
12:23 PM
ஜீவா (Jeeva Venkataraman) said...

/M.S.Subbulakshmi sang his " Muruga Muruga"
song at Carnegie Hall!//
அட ஆமாம்!. ஐ.நா சபையில் எம்.எஸ் அம்மா, நம்ம தூரனார் பாடலைப் பாடி இருக்காங்க.
குறிப்புக்கு நன்றிங்க!
7:30 PM
கிருத்திகா said...

மிக்க நன்றி ஜீவா தூரனின் பாடல்களைப்பாடும் போது எம்.எஸ் அம்மாவின் குரலில் கூடுதல் குழைவு இருப்பது போல் ஒரு இனிமை கூடும் அது தான் தமிழின் சுவையே என்று கூடத்தோன்றும்...
6:07 AM
குமரன் (Kumaran) said...

பெரியசாமி தூரன் அவர்களின் 'பாட்டொன்று தந்தருளினான்' என்று தொடங்கும் இசைப்பாடலைக் கல்லூரிக்காலத்தில் படித்திருக்கிறேன்/பாடிப் பழகியிருக்கிறேன். இன்று அவரது நூற்றாண்டு விழாவைப் பற்றிப் படித்து அறிந்து கொண்டேன். நன்றி ஜீவா.
1:56 PM
ஜீவா (Jeeva Venkataraman) said...

வாங்க கிருத்திகா,
நீங்கள் சொல்வது சரியே, அருமையா ரசித்துச் சொன்னீர்கள்!
6:34 PM
ஜீவா (Jeeva Venkataraman) said...

ஆகா, அப்படியா குமரன், அப்போதே தூரனார் பாடலைப் பாடி இருக்கீங்களா, அருமை!
6:35 PM

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஜீவா
இங்கு இசை இன்பத்திலும் இதைப் பதிந்தமைக்கு நன்றி!
கண்ணன் பாட்டிலும் நான் தூரன் ஐயா பாடல்களைப் பதிக்கிறேன்!
நூற்றாண்டு விழாவின் போது அன்னாரின் இசைப் பணியைச் சிறிதளவாவது அறிய முனைவோம்!

jeevagv said...

ஆம், கே.ஆர்.எஸ், நல்லது.

Expatguru said...

பாம்பே ஜெயஸ்ரீ பாடிய இந்த பாடலை பல முறை கேட்டிருக்கிறென். ஆனால் இந்த அற்புதமான பாடலை எழுதியவர் யார் என்று இது வரை தெரியாது. நெஞ்சத்தை தொட்ட அருமையான பாடல் இது. அரிய பல தகவல்களை தந்தமைக்கு நன்றி.

jeevagv said...

வாங்க Expatguru,
இந்தப் பாடல் கேட்டிருந்தால், இந்த பாடல் இடம் பெற்றிருக்கும், 'அமிர்தம்' இசைத் தொகுப்பினையும் கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். அத்தனையும் தமிழிசையில் மின்னும் நித்திலங்கள்!

+Ve Anthony Muthu said...

இவ்வளவு இனிமையான தமிழ்ப் பாடலை அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி ஜீவா.

jeevagv said...

வாங்க திரு.அந்தோணி முத்து. உங்கள் இரசிப்பிற்கு நன்றி!. விரைவில் நீங்கள் எழுதி நாங்கள் இரசிக்க வேண்டும்!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP