Tuesday, April 24, 2007

நாட்டுப்புறப் பாடல்-ன்னா என்ன சார் அத்தனை இளக்காரம்?

"நாட்டுப்புறப் பாடல்-ன்னா என்ன சார் அத்தனை இளக்காரம்? நையாண்டி உங்களுக்கு??"
- எந்தப் படம்? நினைவுக்கு வருகிறதா? ...... சிந்து பைரவியில் நம்ம சிந்து, ஜேகேபி கிட்ட பொங்கி எழுவாங்க! :-)

நாட்டுப் பாடல்களில் என்ன சார் இல்ல? அதுல சொல்லப் படாத கருத்துக்களா? வெளிப்படுத்தாத உணர்ச்சிகளா?
வீரம், விவேகம், கோபம், ஹாஸ்யம் எது சார் இல்ல?
-இதுவும் அதே படத்து டயலாக் தான்!

அண்மையில் ஒரு அருமையான நாட்டுப் பாடல் கிடைத்தது!
அது காவடிச் சிந்து மெட்டில் அமைந்திருந்தது!
பொதுவா காவடி-ன்னாலே அது முருகனுக்குத் தான்!
ஆனா பாருங்க, இங்குக் கண்ணனுக்குக் காவடிச் சிந்து!
"மாடு மேய்க்கும் கண்ணே - போக வேண்டாம் சொன்னேன்" என்ற பாட்டு.
கண்ணபிரானுக்கு காவடி டோய்! :-)அதாச்சும் சிந்து என்பது நடைப்பாடல்.
பயணத்தின் போதோ, பயணத்துக்கு முன்னரோ உற்சாகம் பற்றிக் கொள்வதற்காகப் பாடுவது! தாளம் எல்லாம் தனியா எதுவும் போட வேண்டாம்! பாட்டில் தானா வந்து விடும்!
காவடி எடுத்துப் பயணம் போகும் போது பாடுவது காவடிச் சிந்து!

பெரும்பாலும் செஞ்சுருட்டி ராகத்தில் பாடுவார்கள். நாட்டக்குறிஞ்சி ராகமும் உண்டு! காவடிச் சிந்து, அதைப் பற்றிய குறிப்புகள், அண்ணாமலை ரெட்டியார் போன்ற தகவல்களை எல்லாம் அடுத்த பதிவில் பார்க்கலாம்.
இன்று, நேரடியா செவிக்கு விருந்து!

ஒரு தாய்க்கும், குட்டி மகனுக்கும் டிஸ்கஷன் நடக்கிறது. (உரையாடல்)
டேய் மவனே...வெளியில போவாதடா...எத்தனை வாட்டிடா சொல்லறது!
போம்மா...நீ எப்பவும் இப்படித் தான்! வெளியில ஒண்ணும் ஆவாது! எல்லாம் நான் பாத்துக்கறேன். ஆனா அப்பா கேட்டா மட்டும் சமாளிச்சுக்கோ! :-)

அருணா சாய்ராம், மார்கழி மகோற்சவத்தில் அதைப் பாடினார். நீங்களே கேளுங்கள்! உங்களுக்கும் மிகவும் பிடிக்கும்!


பல்லவி:

யசோதை:
மாடு மேய்க்கும் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன்


அனுபல்லவி:

கண்ணன்:
போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே


சரணம்:

காய்ச்சின பாலு தரேன்; கல்கண்டுச் சீனி தரேன்
கை நிறைய வெண்ணைய் தரேன்; வெய்யிலிலே போக வேண்டாம்

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

காய்ச்சின பாலும் வேண்டாம்; கல்கண்டுச் சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து, ஒரு நொடியில் திரும்பிடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

யமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ? கண்டதுண்டோ சொல்லும் அம்மா?
கள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

காட்டு மிருகமெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டங் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------
ராகம்=குறிஞ்சி
தாளம்=?
வரிகள்=அனானிமஸ் :-)
குரல்=அருணா சாயிராம்
வீடியோவிற்கு நன்றி=adomac


இந்தப் பதிவைக், காலஞ்சென்ற என் பாட்டி (ஆயா என்று அழைப்போம்)
திருமதி ஜனகவல்லி அம்மாள் நினைவுக்கு அர்ப்பணம் செய்கிறேன்.


அவர் வாழைப்பந்தல் கிராமத்தில் பாடாத நாட்டுப் பாடல்களா?

இராமாயாணக் கதையை முழுக்கவும் நாட்டுப் பாடலில் பாடி விடுவாரே!
அதுவும் பொங்கல் கும்மியின் போது, மொத்த உரே முற்றத்துக்கு வந்து கும்மிப் பாட்டுக்கு ஆடுமே! சிறு வயதில் அவரைப் பாடச் சொல்லி, TDK-90 காசெட் டேப்பில் பதிந்தவற்றை எல்லாம் சிடியாக்கணும்!

51 comments:

கோவி.கண்ணன் said...

ரவி,

பாடலும் இடுகைவிளக்கமும் அருமை... உணர்வுகளுடன் எழுதிப் பாடும் பாடல்கள் தான் வெற்றி பெறுகின்றன.

முதல்படமான அன்னக்கிளியில் இளையராஜா முத்திரை பதித்தார் என்றால் நாட்டுபுற இசைதான் காரணம்

குமரன் (Kumaran) said...

பாட்டை மட்டும் வேலை பார்த்துக் கொண்டே கேட்டேன் இரவிசங்கர். நன்றாக இருந்தது. :-)

பின்னர் வந்து இடுகையைப் படிக்கிறேன்.

ஷைலஜா said...

பாட்டு கொடுத்த கண்ணபிரானே
கேட்டு மனசு மகிழ்ந்து போச்சே!

அதிலும் அருணா சாயிராம் அனுபவிச்சிப்பாட பந்து அவர்மேலயே விழுந்தமாதிரி உணர்வு கொடுக்குமிடத்தில் சூபர்ப்!
நாட்டுப்புற மொழிலயே சொல்ணும்னா
அள்ளிக்கிட்டுல்ல போவுது மனச?:)நன்றி.
ஷைலஜா

Anonymous said...

வரிகள்=அனானிமஸ் :-)

aaha! nalla vishayam ellam silent'ave seyyarangaba.

வெற்றி said...

ரவி,
நல்ல பதிவு. நாட்டார் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். மக்களின் அன்றாட வாழ்வியலை அழகாகவும் இயல்பாகவும் சொல்வது நாட்டார் பாடல்கள் தான் என்பது என் கருத்து.

நல்ல பாடலொன்றைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள். நீங்கள் பாடலுக்கு விளக்கம் சொன்னது இன்னும் அருமை.

/* சிறு வயதில் அவரைப் பாடச் சொல்லி, TDK-90 காசெட் டேப்பில் பதிந்தவற்றை எல்லாம் சிடியாக்கணும்! */

ரவி, உங்கள் பாட்டி பாடிய பாடல்களை ஆட்சேபனை இல்லையெனின் எங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

சிவபாலன் said...

Ravi Shankar,

Excellent!

Thanks a lot!

சிவமுருகன் said...

நாட்டு புற பாடலில் வருன் பல விஷயங்களை நமது தலைமுறை மறந்து விட்டது.

"மாமன் அடித்தாரோ மல்லியப்பூ சென்டாலே!
அத்தை அடித்தாரோ அரளி பூ சென்டாலே!"

இதுக்கு அர்த்தம் தெரியவில்லை அடுத்த வரி படிக்கும் வரை

"அத்தையும் அடிக்க வில்லை
மாமனும் அடிக்க வில்லை
தானாக அழுகிறான்
தம்பிதுணை வேண்டுமென்று"

இதில் சாதரணமாக குழந்தையை தூங்க செய்யும் தாலாட்டு பாடலாக தோன்றினாலும், கணவனை முதல் இருவரிகளில் உசுப்பேத்தும் பாடலாகவும், பின் வரும் வரிகளில் தன் காதலை வெளிப்படுத்தும் வரிகளாகவும் சொல்லுகிறது இப்பாடல்.

நாட்டுப்புறப் பாடல் படிக்க படிக்க இன்பம் தான். ஆராய ஆராய படிப்பினை தான்.

வேதா said...

இந்த பாட்டை நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேன் என் கண்னியில் சேமித்து வைத்திருந்தேன் .ஆனால் அருணா சாய்ராம் அதை மார்கழி உற்சவத்தில் பாடியதை பார்த்த பொழுது பாடலுக்கு இன்னும் அழகு சேர்ந்தது என்றே சொல்ல வேண்டும். கண்ணனின் தாயாகவும்,கண்ணனாகவும் மாறி மாறி பாடினார் என்றே சொல்லலாம் அவ்வளவு அழகாக இருந்தது.:)

சிவமுருகன் said...

விரைவில் தங்களது பாட்டியின் பாடல்களை கேட்க விரும்புகிறேன்.

பொறந்த நாள் அதுவுமா கேட்கிறேன் செய்வீங்க தானே? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சிவமுருகன் said...
பொறந்த நாள் அதுவுமா கேட்கிறேன் செய்வீங்க தானே? :)//

சிவா
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Apr 23 தானே! (எப்போதோ சொன்ன ஞாபகம்)
சரி...Birthday Special என்ன? சித்திரை விழாவுக்கு ஒரு ஸ்பெஷல் பதிவு/மீள் பதிவு போடுங்க!
தினமலரில் அன்னை முகப்புப் படங்களில் ஜொலிக்கிறாளே!

பாட்டி பாடல்களை, வரிகளாக எழுதி வைக்க முயல்கிறேன். அதுவும் அந்த ராமாயணப் பாடல்...நாம ராமாயணம், பாசுர ராமாயணம் போல் கிராம ராமாயணம்...
குரலையும் டேப்பில் இருந்து சிடிக்கு மாற்ற வேண்டும். இங்கு தேட வேண்டும். சென்னை என்றால் எளிது. இதுவும் முயல்கிறேன். என் ஆசையும் கூட :-)

dubukudisciple said...

hi Kannabiran
Naan idai keten margazhi maha utsavatil.. super paatu.. enaku romba pidikum..potathuku thanks

ப்ரசன்னா said...

அருமையான பாடல்... எளிமையா அழகான வரிகள், அதை அருணாவின் குரலில் கேட்பது இனிமையிலும் இனிமை.

மிக்க நன்றி....

நாகை சிவா said...

ரவி,

இந்த பாடலை கேட்டப் பிறகு தான் அருணா சாய்ராமின் மற்ற பாடல்களையும் கேட்கலாம் என்ற எண்ணம் எனக்கு வந்தது. கர்னாட்டிக் எனக்கு அலர்ஜி. அதான் காரணம்.
இந்த பாடல் 2005 ஆண்டு முதன் முறையாக கேட்டேன். அருமையான பாடல்.

வல்லிசிம்ஹன் said...

ரவியோட பாட்டியும் பாடுவாங்களா.
!!

எத்தனை அற்புதமான செல்வம் ரவி.

இந்த மாதிரித் தமிழ் , மனத்தில்
வேரூன்றும்.

குரலும் பாட்டும் அருமை.

குமரன் (Kumaran) said...

வள்ளி தெய்வானை, பாமா ருக்மணி போன்று இளையவரை முதலில் சொல்லும் வழக்கத்தைத் திரைப்படத்திலும் காட்டியிருக்கிறார்கள் சிந்து பைரவி என்று. :-)

உங்க பாட்டி பாடுன பாடல்களைக் கேட்க ஆவலாக இருக்கிறேன் இரவி. முடியும் போது இடுங்கள்.

***

பிறந்த நாள் வாழ்த்துகள் சிவமுருகன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவி.கண்ணன் said...
உணர்வுகளுடன் எழுதிப் பாடும் பாடல்கள் தான் வெற்றி பெறுகின்றன//

உண்மை GK ஐயா.
கவியும் பாடலும் மனதைத் தொட வேண்டும். கட்டுரை அறிவைத் தொட வேண்டும்!

//முதல்படமான அன்னக்கிளியில் இளையராஜா முத்திரை பதித்தார் என்றால் நாட்டுபுற இசைதான் காரணம்//

முதல் படத்தோடு நிறுத்தி விடாது, அப்பப்ப தொடர்ந்து கொடுத்துத் தானே தக்க வைத்துக் கொண்டார்.

தியாகராஜரும் பேச்சுத் தெலுங்கிலும் கிராமத்து எளிமைப் பாணியிலும் தான் ஞானக் கருத்துக்களையும் பாட்டாய் பொழிந்து தள்ளினார். இன்றும் நிலைத்து நிற்கிறார்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
பாட்டை மட்டும் வேலை பார்த்துக் கொண்டே கேட்டேன் இரவிசங்கர். நன்றாக இருந்தது. :-)//

குமரன், மணி எட்டரை ஆகிறதே...
இன்னுமா அலுவலகத்தில் வேலை?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஷைலஜா said...
பாட்டு கொடுத்த கண்ணபிரானே -கேட்டு
மனசு மகிழ்ந்து போச்சே!//

அட நீங்களும் சிந்துப் பாட்டாய் பின்னூட்டம் போடறீங்களே, ஷைலஜா!

//பந்து அவர்மேலயே விழுந்தமாதிரி உணர்வு கொடுக்குமிடத்தில் சூபர்ப்!//

நானும் இந்தக் கட்டத்தை மிகவும் ரசித்தேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Anonymous said...
வரிகள்=அனானிமஸ் :-)
aaha! nalla vishayam ellam silent'ave seyyarangaba.//

வாங்க அனானிமஸ்
நீங்க தான் இந்தப் பாடை எழுதியதா? :-)

ஆமாங்க...இன்னிக்கி நாட்டுல நடக்குற பாதி நல்ல விடயம் எல்லாம் ஆரவாரம் இல்லாமத் தான் நடக்குது!
தியாகராஜர் முதற்கொண்டு ஆரவாரம் இல்லாத் தான் செஞ்சாங்க...அவர்கள் காலத்துக்குப் பின்னர் தான், அவங்க கிருதிகளை வைத்துக் கொண்டு நாம ஒரே படங் காட்டறோம் :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வெற்றி said...
ரவி,
//மக்களின் அன்றாட வாழ்வியலை அழகாகவும் இயல்பாகவும் சொல்வது நாட்டார் பாடல்கள் தான் என்பது என் கருத்து//

"ஆத்து வெள்ளம் நாளை வர" என்ற ஒரு பள்ளுப் பாட்டு வெற்றி...
வாழ்க்கைக் கலை-ன்னு இன்னிக்கி சொல்ற எல்லாம் அதுல இருக்கு. நாட்டார் பாடல் என்பீர்களோ ஈழத்தில்? :-)

ஈழத்து நாட்டார் பாடல்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்குமா? இங்கு இடலாமே!

//ரவி, உங்கள் பாட்டி பாடிய பாடல்களை ஆட்சேபனை இல்லையெனின் எங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.//

செய்கிறேன் வெற்றி. இதுல என்ன ஆட்சேபனை இருக்கு?
ஆனா கொஞ்சம் நிறைய வேலை இருக்கு அவற்றைப் பதிவில் ஏற்ற...இப்ப தான் வரிகள் எழுதி வைக்கவே துவங்கியுள்ளேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சிவபாலன் said...
Ravi Shankar, Excellent!
Thanks a lot! //

Nandri Siba!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சிவமுருகன் said...
"அத்தையும் அடிக்க வில்லை
மாமனும் அடிக்க வில்லை
தானாக அழுகிறான்
தம்பிதுணை வேண்டுமென்று"//

அட, இது தான் சூட்சுமமா?
கணவனை உசுப்பி விடூவதா
இல்லை...
கணவன் மனைவியை உசுப்பி விடூவதா :-)

மருத பக்கம் இந்த நாட்டுப் பாடல்கள் எல்லாம் ஜாஸ்தியாமே...
முன்னொரு முறை மதுரையம்பதி கூட ஒரு பாட்டு அனுப்பி வைச்சார்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வேதா said...
இந்த பாட்டை நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேன் என் கண்னியில் சேமித்து வைத்திருந்தேன்//

யார் பாடியது வேதா? எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்க முடியுமா?

//கண்ணனின் தாயாகவும்,கண்ணனாகவும் மாறி மாறி பாடினார் என்றே சொல்லலாம் அவ்வளவு அழகாக இருந்தது.:)//

உண்மை தாங்க...அவர் மிகவும் லயித்து, அபிநயங்களுடன் தான் பாடி உள்ளார்! அதான் ஹிட்! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//dubukudisciple said...
hi Kannabiran
Naan idai keten margazhi maha utsavatil.. super paatu.. enaku romba pidikum..potathuku thanks //

சுதா, அடுத்த பதிவில் நீங்க மார்கழி மகோற்சவத்தில் கேட்ட நல்ல பாடல் ஒன்றை இங்கு இடுங்களேன்!
நாங்க எல்லாரும் ரசிப்போம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ப்ரசன்னா said...
அருமையான பாடல்... எளிமையா அழகான வரிகள், அதை அருணாவின் குரலில் கேட்பது இனிமையிலும் இனிமை.//

நன்றி ப்ரசன்னா!
கேட்டு கேட்டூ எனக்கு மனப்பாடமே ஆகி விட்டது!

குமரன் (Kumaran) said...

//இன்னுமா அலுவலகத்தில் வேலை?//

அலுவலகத்தில் மட்டும் தான் வேலை பார்க்க முடியும் என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டதே இரவி. பணியிட மடிக்கணி எதற்கு கொடுக்கிறார்கள்? :-)

வெற்றி said...

ரவி,
/* நாட்டார் பாடல் என்பீர்களோ ஈழத்தில்? :-) */

ஓம். நாட்டார் பாடல்கள் என்று தான் ஈழத்தில் பரவலாகச் சொல்கிறார்கள் என நினைக்கிறேன்.

/* ஈழத்து நாட்டார் பாடல்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்குமா? இங்கு இடலாமே! */

கடந்த வருடம் ஈழத்திற்குச் சென்றிருந்த போது நாட்டார் பாடல் புத்தகங்களுக்கு பல புத்தகக் கடைகளுக்கு ஏறி இறங்கினேன். யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர்களைச் சந்தித்து உரையாடிய போது பல விபரங்கள் தந்து உதவினார்கள். அத்துடன் ஈழத்தின் நாட்டார் பாடல்களை தேடிப் பிடித்து தொகுத்த பேராசிரியர் இங்கே கனடாவில் இருப்பதாகவும் அவரின் தொலைபேசி இலக்கமும் தந்தார்கள். நேரமின்மையால் இன்னும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
அவரைத் தொடர்பு கொண்டு பாடல்களை எடுத்ததும் இங்கே பதிகிறேன்.

/* ...இப்ப தான் வரிகள் எழுதி வைக்கவே துவங்கியுள்ளேன். */

கட்டாயம் எழுதி வையுங்கள். எனக்கென்னவோ சினிமா மற்றும் பல தாக்கங்களால் இவை இப்போது அழிந்து வருவதாகவே எண்ணத் தோன்றுகிறது. எனவே இருப்பவற்றையாதல் நாம் பேணிப் பாதுகாக்க வேணும்.

Anonymous said...

சபாஷ் நல்ல முயற்சி.

தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன். நன்றி.

http://www.desipundit.com/2007/04/25/isaiinbam/

அருணா சாய்ராம் அழகாக பாடியுள்ளர்கள். குறையாகச் சொல்லவில்லை சில வார்த்தைகளை சந்ததுக்காக உச்சரிப்பை மாற்றியுள்ளார்களா? வடக்கத்திய தமிழ் மாதிரி தெரிகிறது. (காய்ச்சின, பாசமுள்ள.)

Anonymous said...

கண்ணபிரான் சார்,

சிந்து பைரவியில் நம்ம சிந்து, ஜேகேபி கிட்ட பொங்கி எழுவாங்க! ன்னு எழுதி என்னோட பழைய நினைவுகளை தட்டி எழுப்பிட்டீங்க.

சார்,
"நாட்டுப்புறப் பாடல்-ன்னா என்ன சார் அத்தனை இளக்காரம்? நையாண்டி உங்களுக்கு??" ன்றது எல்லம் படத்துல பாத்து படபடன்னு கை தட்டலாம் அவ்வளவுதான்.

ஏன்னா சார்,

இந்த Art ன்னு சொல்லராங்கல்ல கலை அதுல 2 வகை இருக்குங்க.

1. வாழ்வியல் கலை
2. நுண்கலை

ஆங்கிலத்துல சொன்னா Art & FineArt ன்னு சொல்லலாம்.இதுல ஆர்ட்ன்றது சார், வாழ்வியல் கலை சார். அதாவது வாழ்வோடு ஒட்டியிருந்து, அதிலிருந்து பிறப்பது சார்.

ஒரு ஆர்ட் அதாவது கலை அதுக்கான சட்டதிட்டங்களும், திட்டவட்டமான இலக்கணமும் வகுக்கப்பட்டு செம்மையாக்கப்படும்போது அது நுண்கலை அதாவது ஃபைன் ஆர்ட் ஆவுது.

தமிழ சொல்ரோமில்ல ... செம்மொழின்னு... அதாவது இலக்கணங்கள் நன்கு வகுக்கப்பட்டு.. பயன்படுத்த சரியான சட்டதிட்டங்களெல்லாம் வச்சு... அப்போதான் அது செம்மொழி .. இல்லயா?

அதுமாதிரிதான்... நாட்டுப்பாடல்ன்றது எந்த ஒரு இலக்கணமும் கட்டுப்பாடும் இல்லாமலிருக்கும் ஒரு காட்டறு மாதிரிதான்... அது இயற்கையான அழகுதான் .. இல்லன்னல...சரியா சார்...

ஆனா சங்கீதம்ன்னு சொல்லராங்கல்ல அதுக்கு மிகக்கடுமையான இலக்கண விதிகள் இருக்குங்கோ. திட்டவட்டமான சட்டங்கள் இருக்குங்கோ.. ஒரு பாட்ட எப்படி பாடரது. ஒரு ராகத்த எப்படி பாடறது.. இப்படி... மனோ தர்மம்ன்னு சொல்வாங்க... ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ள மேல்சொன்ன இலக்கணத்துல எப்படிவேணும்நாலும் சுத்திக்கோன்னு..

இப்போ தமிழோட இங்லீஷோ இல்ல ஹிந்தியோ கம்பேர் பண்ணா எப்படி நமக்குத் தெரியுது... தமிழ்தான் செம்மைன்னு?

அதுமாதிரிதான் இதுவும்...

புரிஞ்சதா சார்?

G.Ragavan said...

நாட்டுப்புறப்ப்பாடல்களின் உயிர்ப்பு மற்ற பாடல்களில் இயல்பாக வராது. ஆகையால்தான் இலக்கியங்களே நாட்டுப்பாடல்களை அடிப்படையாகக் கொண்டு வெளிப்பட்டன. சிலப்பதிகாரம் போன்ற நூல்களைப் படித்தாலே அது விளங்கும். ஆய்ச்சியர், குறத்தியர், உழவர், என்று பலருடைய பாடல்கள் அவரவர் மண்வாசனை மாறாமல் அருமையாக கொடுத்திருக்கிறார் இளங்கோ.

இந்தப் பாடல் செமி-ஃபோக் வைகையைச் சார்ந்தது. நாட்டுப்பாடலின் அடிப்படையில் எழுந்த கருநாடகப் பாணிப் பாடல். முன்பே கேட்ட பழக்கமான பாடல்தான். மீண்டும் நினைவுபடுத்தியமைக்கு நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நாகை சிவா said...
இந்த பாடலை கேட்டப் பிறகு தான் அருணா சாய்ராமின் மற்ற பாடல்களையும் கேட்கலாம் என்ற எண்ணம் எனக்கு வந்தது. கர்னாட்டிக் எனக்கு அலர்ஜி. அதான் காரணம்.
//

வாங்க புலி...முதலில் எனக்குக் கூட கர்நாடிக் என்றாலே ஒரு பயம் தான். எஸ்கேப் ஆகி விடுவேன்.
பலாப் பழத்தைச் சுளையெல்லாம் உரிச்சுக் கையில பிசின் படாம கொடுத்தா, வண்ணமா சாப்பிடுவோம் இல்லையா? :-)

அலர்ஜி எல்லாம் எதுவும் இல்லாமல் அட்லீஸ்ட் மேலோட்டமாகவாவது ரசிக்க, இசை இன்பம் வலைப்பூ மூலமாக, சிறிது சிறிது முயற்சிகள் செய்யலாம் என்று எண்ணம்.
அதற்காகவே தான் புது வலைப்பூ துவங்கினோம்.

கூடுமான வரை எளிமைப் படுத்தினால், இனிமை தென்படும் அல்லவா? உங்க நேயர் விருப்பம், என்ன மாதிரி செய்யலாம் என்று நீங்களும் ஐடியா கொடுங்க சிவா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
ரவியோட பாட்டியும் பாடுவாங்களா.
!! எத்தனை அற்புதமான செல்வம் ரவி//

ஆமாம் வல்லியம்மா...எத்தனையோ செல்வத்தின் உண்மையான மதிப்பு தெரியாமல் இருக்கிறோமே என்று சில சமயம் ஏக்கம் வரும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
வள்ளி தெய்வானை, பாமா ருக்மணி போன்று இளையவரை முதலில் சொல்லும் வழக்கத்தைத் திரைப்படத்திலும் காட்டியிருக்கிறார்கள் சிந்து பைரவி என்று. :-)//

அட இது மாதிரி நான் யோசிச்சுப் பாக்கவே இல்லியே!
ஸ்ரீதேவி, பூமிதேவி தான் விதிவிலக்கு போல! :-)

கச்சேரிகளில் கூட, நாட்டுப் பாடல்களை இறுதியாப் பாடுவாங்க!
அதான் இசை இன்பம் வலைப்பூவிலாவது, முதல்ல வரட்டும் என்று நாதசுரத்துக்கு அடுத்துக் கொண்டு வந்து விட்டோம்:-)

//உங்க பாட்டி பாடுன பாடல்களைக் கேட்க ஆவலாக இருக்கிறேன் இரவி. முடியும் போது இடுங்கள்//

கண்டிப்பாக முயல்கிறேன், குமரன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வெற்றி said...
அவரைத் தொடர்பு கொண்டு பாடல்களை எடுத்ததும் இங்கே பதிகிறேன்//

நன்றி வெற்றி.
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை என்ற குறள் போலவே, உங்கள் ஆர்வம் காணுங்கால் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Dubukku said...
தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன்.//
நன்றி தலைவா!

//சில வார்த்தைகளை சந்ததுக்காக உச்சரிப்பை மாற்றியுள்ளார்களா? வடக்கத்திய தமிழ் மாதிரி தெரிகிறது. (காய்ச்சின, பாசமுள்ள.)//

கரெக்டா கண்டுபுடிச்சீங்க!
அருணாவுக்கு பம்பாய் பக்கம். அதனால இப்படி உச்சரிப்பு மாறியிருக்கோ-ன்னு நினைக்கிறேன்.
"காய்ச்சின" என்று பாடும் போது ரொம்பவே காய்ச்சி எடுக்கிறார்கள் :-)

இவங்க-ன்னு இல்லே, தமிழ்நாட்டுக் கலைஞர்கள் கூட அவரவர் வட்டார வழக்கம் போல சில சமயம் இசைத்தமிழை உச்சரிக்கிறார்கள்.

ஆனா சில பேர், ஸ்டைலுக்காக பண்ணுவது தான் பரிதாபமானது! (நம்ம டிவி அறிவிப்பாளர் போல)
"சொல்ல வேண்டும் ஷண்முகா"-வை ஷொல்ல வேண்டும் ஷண்முகா என்பார்கள் பாருங்கள் :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அனானியாவே இருந்துட்டுப்போறேன் said...
கண்ணபிரான் சார்//

வாங்க அனானி சார்...
இந்தக் கண்ணபிரன் சார் எல்லாம் வேண்டாமே சார்!
சும்மா ரவி இல்ல கண்ணபிரான்னே கூப்புடுங்க சார்! :-)
மிக அருமையாக கருத்துகளை எடுத்து வைத்திருக்கீங்க!

//ஆங்கிலத்துல சொன்னா Art & FineArt ன்னு சொல்லலாம்.இதுல ஆர்ட்ன்றது சார், வாழ்வியல் கலை சார். ஒரு ஆர்ட் செம்மையாக்கப்படும்போது அது நுண்கலை அதாவது ஃபைன் ஆர்ட்//

புரியுதுங்க! ஏற்கனவே ஒரு முறை சிமுலேஷன் இந்த நுண்கலை/கலை பற்றிச் சொல்லியிருந்தார்.

இந்த வலைப்பூவில் கனராகங்களாக எடுத்தவுடனே கொடுக்காது, கொஞ்சம் எளிமைப் படுத்தி, மேல் மட்டச் சுவை மட்டும் கொடுக்கலாம் என்ற எண்ணம்.

இது கர்னாடிக்-னா அலர்ஜின்னு சொல்றவங்க, ஆனா அதே சமயம் நம் பண்பாடு/கலை இவற்றை விட்டுவிடக் கூடாது என்று எண்ணுபவர்களுக்கு ஒரு eye opener, தூண்டில் போல இருக்கும் என்ற கருத்தில் தொடங்கினோம்.
எப்படி இறைத் தத்துவத்தை உடனே சொல்லாது சிலை வழிபாட்டில் இருந்து துவங்குகிறார்களோ, அதைப் போல!

//நாட்டுப்பாடல்ன்றது அழகுதான் .. இல்லன்னல...ஆனா சங்கீதம்ன்னு சொல்லராங்கல்ல..ஒரு ராகத்த எப்படி பாடறது.. இப்படி... மனோ தர்மம்ன்னு சொல்வாங்க... ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ள மேல்சொன்ன இலக்கணத்துல எப்படிவேணும் நாலும் சுத்திக்கோன்னு..//

இதுவும் புரியுதுங்க!
சங்கீதத்துக்கு இலக்கணம் எல்லாம் ஒரு மண்ணும் தேவையில்லை என்று நான் சொல்ல மாட்டேன்!
எப்படி விதிகளை உருவாக்கினாங்களோ, அதற்கு மேல் மனோ தர்மம்-ன்னும் உருவாக்கி, ஒரு பொறுப்புணர்வோடு கூடிய சுதந்திரம் கொடுத்திருக்காங்க!
இது இந்திய இசை மட்டுமன்றி, மற்ற பல நாட்டு இசைக்கும் பொருந்துமே!

இவ்வளவு ஏன், சினிமாவில் கூட, என்ன இனிமையாத் தோணுதோ அதைப் பாடிட்டு போவோம்னு இல்லாம, அதற்கும் நோட்ஸ் எல்லாம் கொடுத்து தானே இசை அமைக்கிறாங்க! என்ன அவை எல்லாம் இசை உற்பத்தி செய்யும் இடத்திலேயே நின்று விட்டு, மக்களிடம் வரும் போது, விதிகள் என்ற எதுவும் இல்லாதது போல வேடமிட்டு வருகிறது!

இங்கு இசை இன்பம் வலைப்பூவில்,
இரண்டுமே தான் இடம் பெறப் போகின்றன! இதன் நோக்கத்தை வலைப்பூவின் முகப்பில் இட்டுள்ளோம். முதல் வணக்கம் என்ற முதல் பதிவிலும் சொல்லி உள்ளோம்.

யோகன் அண்ணா போன்றவர்கள் தியாகராஜ கனராகப் பஞ்சரத்ன கீர்த்தனைகளுக்குப் பொருளும் கேட்டுள்ளார்கள். மேலும் திவ்யப் பிரபந்தம், தேவாரத் திருமுறை இசை, இசைக் கருவிகள் அறிமுகம் என்று கதம்ப மாலை!

art-இல் இருந்து fine art-க்கு முன்னேற, ரசிகனின் முயற்சியும் தேவை என்பதை அடியேன் அறிவேன். ஆனால் அதற்கு முயலக் கூட எண்ணம் இல்லாமல் அவன் இருந்து விடக் கூடாதே என்ற ஆதங்கத்தில் தான் இப்பூ மலர்ந்தது.

தாங்கள் ஆர்வமுடன் அளித்த பின்னூட்டம் போலவே, மேலும் நல்ல பல கருத்துகளும் சொல்லி, இந்த வலைப்பூ எளியவர்க்கும் மணக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

Geetha Sambasivam said...

mmmm, nanggalum ketom inthap pataiyum Kannanin patti pathi Kannan sonnathum ketom. pattiyin pattaiyum podalame Kannan? mudinjal :D

துளசி கோபால் said...

அடி ஆத்தீ........... இதென்னா இப்படி அள்ளிக்கிட்டுப் போகுது!!!!!!


( டேப்லே இருந்து சி.டிக்கு எப்படி மாத்தறதுன்னு எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்)

Radha Sriram said...

//அடி ஆத்தீ........... இதென்னா இப்படி அள்ளிக்கிட்டுப் போகுது!!!!!!//

ரிபீட்!!!!

வேதா said...

என்னிடம் இருக்கும் பாடலும் அருணா சாய்ராம் பாடியது தான்:)

தி. ரா. ச.(T.R.C.) said...

ரவி இந்தப்பாட்டை நானும் செலகெட் செய்து வைத்து இருந்தேன். நீங்கள் முந்திக் கொண்டு விட்டீர்கள். உங்கள் விளக்கம் பிரமாதம்.

ஜெயஸ்ரீ said...

சின்ன வயதில் கேட்ட பாடல். வரிகள் மறந்தே போய்விட்டன. மிக மிக நன்றி ரவி. உங்கள் பாட்டி பாடிய மற்ற பாடல்களையும் போடுங்கள்.

முத்தான பாடல்களைப் போட்டு பாராட்டுக்களை அள்ளிக்கொண்டு போகிறீர்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//G.Ragavan said...
ஆய்ச்சியர், குறத்தியர், உழவர், என்று பலருடைய பாடல்கள் அவரவர் மண்வாசனை மாறாமல் அருமையாக கொடுத்திருக்கிறார் இளங்கோ.//

இளங்கோ மட்டுமல்லாது, பின் வந்த கவிஞர்கள் எல்லாம் இதைத் தொட்டுத் தான் சென்றிருக்கிறார்கள்!
சமய இலக்கியங்கள் கூட குறத்திப் பாட்டுகளாய், பேச்சு வழக்கில், பெரும் ஆன்மீகக் கருத்துகளை முன் வைக்கின்றன.

//இந்தப் பாடல் செமி-ஃபோக் வைகையைச் சார்ந்தது. நாட்டுப்பாடலின் அடிப்படையில் எழுந்த கருநாடகப் பாணிப் பாடல்//

இல்லை ஜிரா!
கர்நாடக இசை இதற்கு இடப்பட்டுள்ளதே தவிர, மற்றபடி இதுவும் நாட்டுப் பாடல் தான்!

அப்படிப் பார்த்தா இன்னிக்கி காவடிச் சிந்து, தாலாட்டு என்று பல பாடல்களும் கர்நாடக மெட்டில் அமைக்கப் பெற்று, பரவலாகப் பாடி வருகிறார்கள்!
வயலோரத்தில் பள்ளச்சி பாடும் பாட்டு அவள் குழந்தைக்கு! அதை அவள் நீலாம்பரி ராகத்திலா பாடுகிறாள்? இல்லையே!

அதில் ஈர்க்கப்பட்ட பின், அதற்கு ஒரு கட்டமைப்பு கொடுக்கும் போது, உள்ளுக்குள் ஒளிந்து இருந்த நீலாம்பரி வெளியில் வந்து விடுகிறது! அவ்வளவே!!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கீதா சாம்பசிவம் said...
pattaiyum podalame Kannan? mudinjal :D//

பாட்டியின் பாட்டை இட்டும் தொட்டும் பல முறை லயித்துள்ளேன் கீதாம்மா...அவுங்களுக்கு ராகம் எல்லாம் தெரியாது...எசப்பாட்டு தான்!
விரைவில் இடுகிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//துளசி கோபால் said...
அடி ஆத்தீ........... இதென்னா இப்படி அள்ளிக்கிட்டுப் போகுது!!!!!!//

ஹிஹி...நான் என்னத்த சொல்ல!:-)

//டேப்லே இருந்து சி.டிக்கு எப்படி மாத்தறதுன்னு எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்//

கண்டு பிடித்தவுடன்,
தனி மடல் அனுப்புகிறேன் டீச்சர்..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Radha Sriram said...
//அடி ஆத்தீ........... இதென்னா இப்படி அள்ளிக்கிட்டுப் போகுது!!!!!
ரிபீட்!!!!
//

மக்கள், நம் இசை அலர்ஜி அரிக்குது என்று சொல்வதை விட்டு விட்டு, அல்வா இனிக்குது என்று சொல்லும் நிலை வந்தாலே போதும் அல்லவா? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தி. ரா. ச.(T.R.C.) said...
ரவி இந்தப்பாட்டை நானும் செலகெட் செய்து வைத்து இருந்தேன். நீங்கள் முந்திக் கொண்டு விட்டீர்கள். உங்கள் விளக்கம் பிரமாதம்//

நன்றி திராச ஐயா!
நீங்க நம்ம குழு வலைப்பூவில், உங்களுக்கு சமயம் வரும் போதெல்லாம் draft ஆக சேமித்து விடுங்கள் திராச. பின்னர் எளிதா இருக்கும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஜெயஸ்ரீ said...
சின்ன வயதில் கேட்ட பாடல். வரிகள் மறந்தே போய்விட்டன. மிக மிக நன்றி ரவி. உங்கள் பாட்டி பாடிய மற்ற பாடல்களையும் போடுங்கள்.//

நிச்சயம் செய்கிறேன் ஜெயஸ்ரீ.
இதைக் கண்ணன் பாட்டில் இடுவதா, இசை இன்பம் வலைப்பூவில் இடுவதான்னு முதலில் ஒரு குழப்பம்! :-)

பின்னர், இசை இசைந்தது!

Anonymous said...

Maadu Mekkum Kannae - composer: OOthukkadu Venkatakavi

His other famous compositions

alai paayuthae, Thaayae Yashoda

Unknown said...

எனக்குப் பிடித்த பாடல் / பாடகி. Youtoube-இல் தான் முதலில் கேட்டேன்....

இடுகைக்கு நன்றி.
கெ.பி.

சேமலையப்பன் said...

நான் விரும்பி கேட்கும் பாடல் நாட்டுப்புற பாடல்கள்...

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP