ஜாஸ் (Jazz) இசை ஜாலம்
யோசித்து பார்த்தால் இந்த இசைக்கு ஏன் இவ்வளவு சக்தி என்று என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. என்னதான் இருந்தாலும் இசை என்பது நாம் எல்லோரும் எழுப்புவது போல் ஓர் விதமான சப்தம் தானே. அதற்கு எங்கிருந்து இப்படி மனதை குடைந்து இன்பம்,சோகம்,நெகிழ்ச்சி,வீரம்,உற்சாகம்,துயரம,பக்தி் என ஆயிரம் உணர்வுகளை ஊற்றி நிறப்பும் ஆற்றல் வந்தது என்று கேட்டால் என்னால் பதில் எதுவும் தர இயலாத. இந்த இசைக்கு மனித சமுதாயத்தின் அனைத்து தரப்பிலும் அடிமைகள் உண்டு. உலகின் வெவ்வேறு நாடுகளிலும் வெவ்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு காலக்கட்டங்களிலும் மக்கள் தங்களுக்கு தோன்றிய இசை வகைகளை உருவாக்கி வளர்த்து வந்திருக்கிறார்கள்.அப்படிப்பட்ட இசை வகைகளில் ஒன்றைத்தான் தான் நாம் இன்று பார்க்கப்போகிறோம்.
ஜாஸ் எனும் இசை வகை நம் தமிழ் திரை இசையில் நாம் நினைப்பதை விட நிறையவே கேட்டிருக்கிறோம். முழுக்க முழுக்க ஜாஸ் இசையை ஒட்டி பாடல்கள் கிடைப்பது கடினமானாலும் அதன் பாதிப்பில் ஏற்பட்ட பாடல்கள் நிறையவே இருக்கின்றன. அதுவும் இன்று நேற்றல்ல எம்.எஸ்.விஸ்வனாதன் காலத்தில் இருந்தே ஜாஸ் இசையை ஒட்டிய பாடல்கள் நம் தமிழ் திரை இசையில் அமைந்திருக்கின்றன. அதுவும் தமிழ்் திரையுலகில் மெல்லிசைக்கு அடித்தளம் அமைத்த எம்.எஸ்.விஸ்வனாதன் அவர்களின் பல புனைவுகளில் ஜாஸ் இசையின் உதாரணங்களை பார்க்கலாம். அப்படிப்பட்ட அதிகப்படியான ஜாஸ் இசையின் தாக்கம் அமைந்த பாடல் ஒன்று இதோ.
பாடல் :வரவேண்டும் ஒரு பொழுது
படம் : கலைக்கோயில் (1964)
பாடியவர் : எல்.ஆர். ஈஸ்வரி
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
முழுக்க முழுக்க ஜாஸ் தழுவலில் வந்த உதாரணத்திற்காக மேற்கண்ட பாடலை கொடுத்திருந்தேனே தவிர நாமே உணராத வகையில் ஜாஸ் இசையில் சார்ந்த பாடல்கள பல உள்ளன. அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்று இதோ!! :-)
பாடல் : நினைத்ததை நடத்தியே முடிப்பவன்
படம் : நம்நாடு (1969)
பாடியவர்கள் : டி.எம். சௌந்தர்ராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர்: வாலி
அட இப்படி 1960-களிலேயே நம் தமிழ் திரை உலகில் ஜாஸ் இசை ஒலித்திருக்கிறதா என்று கேட்கிறீர்களா??ஆம் நாம் விரும்பி கேட்டிருக்கும் பல தமிழ் திரையிசை பாடல்களின் பின்னால் ஜாஸ் இசையின் நளினம் ஒளிந்திருக்கிறது.
ஜாஸ் இசை என்பது உலகின் மிக புதிய இசை வகைகளில் ஒன்று என்று சொல்லலாம்.இதன் உருவாக்கம் அமெரிக்காவில் உள்ள கருப்பர் இன அடிமை குடியிருப்புகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்டது. அந்த சமயங்களில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில்் இருந்து பிடித்து வரப்பட்ட அடிமைகளின் மத்தியில் அவர்கள் நாட்டில் இருக்கும் பாரம்பரிய இசையான ப்ளூஸ் (Blues) இசை வகையின் ஒரு பரிமாணமே ஜாஸ் என உருவெடுத்தது. முதலில் தென் அமெரிக்க அடிமை காலனிகளில் மட்டுமே பார்க்கக்கிடைத்த இந்த ஜாஸ்,கருப்பர்கள் அமெரிக்காவின் நகரங்களுக்கு பரவ பரவ மேலும் பிரபலமாகியது. இது மேலும் மேலும் இடங்களுக்கு சென்று சேர சேர ,இந்த வகை இசையின் பல்வேறு உருவகங்களும் வெளி வர ஆரம்பித்தன. இதனால் அந்தந்த இடத்திற்கு ஏற்றார்போலும் ,இசையின் வேகம்,ஜதி போன்ற பில விஷயங்களினாலும் ஜாஸில் பல்வேறு பிரிவுகள் உண்டு.
எத்தனை பிரிவுகள் வந்தாலும் ஜாஸின் அடிப்படை தத்துவங்கள் ஆன சுதந்திரமான இசை ஓட்டமும், Improvisation என சொல்லக்கூடிய சம்யோஜிதமும் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். சுதந்திர வேட்கைக்கான பிரதிபலிப்பாக கருதப்படும் இந்த இசையில் கலைஞரின் தனித்திறமையை வெளிக்கொணரும் விதமாகவே பாடல்கள் அமைந்திருக்கும். நம் கர்நாடக சங்கீதத்தில் தனி ஆவர்த்தணத்தை போல் கலைஞர்கள் தனிதனியே தம் திறமையை காட்டி வாசிப்பது மிக சாதாரணம். தனிநபர் சுதந்திரத்தை வலியுருத்தும் இசை வகை என்பதால் குழுவில் அவரவர் தனிதனியே தாந்தோன்றியாக வாசித்துக்கொண்டிருக்க அந்த குழப்பமான இசை அமைப்பிலும் தோன்றும் ஒரு விதமான வித்தியாசமான இசை இந்த இசை வகையில் ஒரு முக்கியமான உத்தி. அது தவிர சிறிய குழுக்கள் பெரிய குழுக்கள் என இவர்கள் பிரிந்து இசை அமைக்க அதன் படி பெரிய குழு வகை (Big band) போன்று தனி தனி பிரிவுகளே கூட இந்த இசையில் தோன்றிவிட்டன. இதை தவிர ஸ்விங் (Swing), பெபாப் (Bepop),கூல் ஜாஸ் (Cool Jazz) போன்று பல பிரிவுகள் இந்த ஜாஸில் உண்டு.
இந்த இசையில் பெரிதும் பயன்படுத்தப்படும் கருவிகள் என பார்த்தால சாக்ஸபோன் (Saxophone), ட்ரம்பெட்(Trumpet),பியானோ (Piano), க்ளாரினேட்(Clarinet), கிதார(Guitar)்,ட்ரம்ஸ் (Drums) ஆகியவற்றை சொல்லலாம்.ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மற்ற இசை வகையில் எல்லாவற்றிலும் பெரிதும் பயன்படுத்தப்படும் வயலின் ஜாஸில் அவ்வளவாக பயன்படுத்தப்படுவதே இல்லை!!
தமிழ் திரை இசையில் நம்மையும் அறியாமல் அவ்வப்போது ஜாஸின் இசை நம் காதுகளில் நுழைந்துக்கொண்ட தான் வந்திருக்கிறது. ஆனால் நம் இசை அமைப்பாளர்கள் பலவிதமான இசை வகைகளையும் கலந்து நமக்கு ஒரே பாட்டாக விருந்து படைப்பவர்கள் என்பதால் ஜாஸின் தாக்கத்தை நம் பாடல்களில் உணர்வது கடினம். சமீபத்திய படங்கள் என்று சொல்லப்போனால் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமானின் இசை அமைப்பில் வெளிவந்த "இருவர்" படம் மிக தேர்ந்த ஜாஸ் இசைப்பிரயோகத்தின் உதாரணமாக கருதப்படுகிறது. இதில் வரும் "வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே" மற்றும் "ஹலோ மிஸ்டர் எதிர்கட்சி" போன்ற பாடல்களில் உள்ள ஜாஸ் இசையின் தாக்கத்தை கவனிக்காமல் விடுவது கடினம். ஆனால் இந்த படத்தில் ஜாஸ் இசை பாணியில் அமைந்த ஒரு பிரபலமான பாடலை கொஞ்சம் பார்க்கலாமா??
இந்த வகை இசையின் வித்தகர்களாக லூயி ஆம்ஸ்ட்ராங் (Louis Armstrong (1901-1971)),சிட்னி பெச்செட் (Sidney Bechet (1897-1959)), பிக்ஸ் பெய்டர்பெக் Bix Beiderbecke (1903-1931) ஆகியோரை கூறலாம்.
தற்பொழுது இருக்கும் ஜாஸ் இசைக்கலைஞர்களில் கென்னி ஜி (Kenny G) என்ற இசைகலைஞரின் இசையை நான் பெரிதும் விரும்பி கேட்டிருக்கிறேன்.ஆனால் அவரின் இசை தூய ஜாஸ் இசை கிடையாது என்று சொல்லப்படுகிறது. உங்களுக்கு தெரிந்த/பிடித்த ஜாஸ் இசைக்கலைஞ்ர்கள் யாராவது இருந்தால் அவர்களின் பெயர்களைபின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.பெயரோடு கூட அவர் வாசிக்கும்கருவியையும் சேர்த்து தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
நான் முன்பு சொன்னதை போல மனதின் எண்ண ஓட்டத்தை மாற்றி நம் உணர்வுகளை பந்தாடும் வலிமை இசைக்கு உண்டு.கென்னி ஜி-யின் சாக்ஸபோன் ஆலாபனை பலவற்றை கேட்டு மனதில் அமைதியும் உதட்டில் புன்னகையும் நிறம்ப கண்டிருக்கிறேன். அதே சமயம் நம்ம ஊரு குத்துப்பாட்டுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு நம்மை தாளம் போட வைக்கும் இசை பிரிவுகளும் ஜாஸில் உண்டு.அவரவருக்கு அவரவர் விருப்பப்படியான இசையை வாரி வழங்கும் ஜாஸ் இசை பற்றி அறிந்து ,அது தரக்கூடிய இசை இன்ப வெள்ளத்தில் மனம் குளிர என் மனமார்ந்த வாழ்த்துகள்
References:
http://www.dhool.com/sotd2/673.html
http://en.wikipedia.org/wiki/Jazz
http://www.dhool.com/sotd2/680.html
http://en.wikipedia.org/wiki/List_of_jazz_musicians
http://www.dhool.com/sotd2/676.html
http://www.dhool.com/sotd2/689.html
படங்கள்:
http://www.mossstreetgallery.com/Satchmo's%20Jazz.JPG
http://rdr.zazzle.com/img/imt-prd/pd-137064913479983602/isz-m/tl-%22Jazz+band%22.jpg
http://www.mus.cmich.edu/images/jazz.jpg
14 comments:
CVR- பதிவின் கீழ் கொடுத்துள்ள சுட்டிகள் நன்றாக உள்ளன்,அதுவும் Song of the Day என்று சொல்லப்படுகிற sotd..அருமை.
ஜாஸ் மட்டும் உரித்தெடுத்து அனுபவிக்கும் அளவுக்கு முன்னேறவில்லை.
வேண்டுகோளை ஏற்று ஜாஸ் அரங்கேற்றிய CVR-க்கு நன்றி!
ஜாஸை தமிழ்ச் சினிமாவில் கொஞ்சம் காது ஊன்றிக் கேட்க வேண்டும்! அதுவும் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலுக்கு அருமையா செட் ஆகுது பாருங்க!
பொதுவாகப் பாடல்களை விட, monologue என்று சொல்லப்படும் paasageகளுக்கு ஜாஸ் இசை மிகவும் பொருந்தும். சுதந்திரமான இசை ஓட்டம் தான் காரணம்-னு நினைக்கிறேன்!
CVR,
Jazz வேறு சாக்ஸபோன் வேறா?
பார்ப்பதற்கு இரண்டும் ஒரே மாதிரித் தான் இருக்கு.
நம்ம நாதசுரம், க்ளாரினெட் கூட கொஞ்சம் வித்தியாசம் தெரியும்! ஆனா இதுக்கு அவ்வளவா தெரியல!
CVR,
எல்.ஆர்.ஈஸ்வரியின் இந்தப்பாடல் மிகவும் பிரசித்தம்60களில்.
நீ என்னஎன்பதென்ன என்று கூட
ஒரு பாட்டு...வெண்ணிற ஆடை படத்தில் வரும்.
ஜாஸில் ட்ரம்பெட் இசையின் முடிசூடா மன்னன் எடி கால்வெர்ட்.
Man with the Goden Trumpet
என்று அழைப்பார்கள்.
கட்டாயம் கேட்டுப் பாருங்கள்.
அதே போல ஸ்மூத்ஜாஸ் வகையறாவும் காதுகளுக்கு இனிமை.
இங்கிலாந்து முடி துறந்த எட்வர்ட் ,ப்ரின்ஸ் ஆஃப் வேல்ஸ் ஜாஸ் கேட்டார்*(பாரம்பரிய இசையை மீறி) என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மிகவும் நன்றி.
nice posting. i recommend the article on reggae cause that is an another form of music from the oprressed souls. sinnna aasai is a fine example of a reggae tamil music.
Have you listen Mumbai express, Illayaraja done excellent jazz music.
ஜாஸ் பற்றி நல்ல பதிவு.....வெங்கட்(domesticated onion !!) ஜாஸ் பற்றி ஒரு தொடர் எழுதிட்டிருந்தார்....ரொம்ப நல்லா இருந்தது....
இருந்தாலும் ஜாஸ் இசைய எல்லாராலும் கேக்க முடியாதுன்னு தான் எனக்கு தோணுது....நம்மளோட இசைல சுர் ரொம்ப முக்க்யம் அதை கேட்டு பழகின காதுக்கு ஜாஸ் கொஞ்சம் பேசுர்ரா ஒலிக்கலாம்.....out of tune....கேட்டு கேட்டு பழகணும்....பழகின காதுக்கு ஆனந்தம்தான்....!!
http://domesticatedonion.net/tamil/?p=629
venkat's posts on Jazz music
//ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மற்ற இசை வகையில் எல்லாவற்றிலும் பெரிதும் பயன்படுத்தப்படும் வயலின் ஜாஸில் அவ்வளவாக பயன்படுத்தப்படுவதே இல்லை!!//
என்ன இப்பிடி சொல்லிட்டீங்க? ஜாஸ் இசைக்குழுவான Mahavishnu Orchestraவில் பங்கு பெற்ற Jean Luc Ponty, Jerry Goodman போன்ற கலைஞர்களின் வாசிப்பை கேட்டிருக்கீங்களா? நம்முடைய எல்.ஷங்கர், எல்.சுப்ரமணியம் போன்ற வயலின் கலைஞர்களும் தங்களது அபாரமான திறமைகளை ஜாஸ் வடிவில் வெளிப்படுத்தியிருக்கிறார்களே? கேள்விப்பட்டதில்லையா? வயலின் ஜாஸுக்கு ஒரு முக்கியமான கருவி, மற்றும் ஒரு ஜாஸ் படைப்பை மெருகேற்றக்கூடிய ஒன்றே.
மற்றபடி, எனது கணிப்பில் ஜாஸ் ஒரு உன்னதமான, மிக உயரத்தில் இருக்கும் ஒரு கலை வடிவம். இசைப்பதற்கு அதிகமான virtuosity தேவைப்படும், மற்றும் அந்த virtuosityஐப் புரிந்து கொள்வதற்கும் தேர்ந்த செவிகள் தேவைப்படும் ஒரு இசை வடிவம். இதற்கு மேல் எதுவும் கூற விரும்பவில்லை :)
@வடுவூர் குமார்
கேட்க கேடக் தானாக புரிஞ்சிக்கலாம் குமார்!! கேட்டு பாருங்க அருமையா இருக்கும்!! :-)
@கே.ஆர்.எஸ்
//ஜாஸை தமிழ்ச் சினிமாவில் கொஞ்சம் காது ஊன்றிக் கேட்க வேண்டும்! அதுவும் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலுக்கு அருமையா செட் ஆகுது பாருங்க!//
கரெக்டுதான் தல!! நான் பதிவில் குறிப்பிடாமல் விட்டு விட்டேன், தமிழ் ஜாஸ் இசையின் முடி சூடா மன்னி என்றால் அது கண்டிப்பாக எல்.ஆர்.ஈஸ்வரி தான்.அவரின் குரலை போல வேறு யாருடைய குரலும் ஜாஸ் இசையில் ஒலித்தது இல்லை!! :-)
//Jazz வேறு சாக்ஸபோன் வேறா?
பார்ப்பதற்கு இரண்டும் ஒரே மாதிரித் தான் இருக்கு.//
ஜாஸ் என்பது கர்நாடக இசை,ஹின்ந்துஸ்தானி போல அதுவும் ஒரு இசை வகை. சாக்ஸபோன் என்பது அதில் பெரிதும் உபயோகப்படுத்தப்படும் இசைக்கருவி. நாளைக்கு யாராவது மிருதங்கத்தை மேற்கத்திய இசை வாசிக்க பழக்கடுத்திக்கொண்டால்,அவர் மிருதங்கம் வாசிக்கும்போதெல்லாம் கர்நாடக சங்கீதம் வாசிக்கிறார் என்று கூற முடியுமா?? அது போல் தான்.
கதிரி கோபால்நாத் சாக்ஸபோன் எனும் ஜாஸ் இசைக்கருவியை கர்நாடக இசையை வாசிக்க உபயோகப்படுத்துகிறார் என்பதால் அவர் வாசிப்பது எல்லாம் ஜாஸ் என்று ஆகிவிடாது. :-)
@வல்லிசிம்ஹன்
நீங்கள் சொன்ன வெண்ணிர ஆடை பாடல் பற்றியும் கேள்வி பட்டேன்.
அதே போன்று வல்லவன் ஒருவன் படத்தில் வரும் "பளிங்கு நான் ஒரு மாளிகை" எனும் பாடல் கூட ஒரு ஜாஸ் இசைப்பாடலின் அட்டைகாபி (இசை அமைப்பாளர் வேதா!! :-D)
//ஜாஸில் ட்ரம்பெட் இசையின் முடிசூடா மன்னன் எடி கால்வெர்ட்.
Man with the Goden Trumpet
என்று அழைப்பார்கள்.
கட்டாயம் கேட்டுப் பாருங்கள்.
அதே போல ஸ்மூத்ஜாஸ் வகையறாவும் காதுகளுக்கு இனிமை.
இங்கிலாந்து முடி துறந்த எட்வர்ட் ,ப்ரின்ஸ் ஆஃப் வேல்ஸ் ஜாஸ் கேட்டார்*(பாரம்பரிய இசையை மீறி) என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மிகவும் நன்றி.//
சூப்பர்!! நிறைய மேலதிக தகவல்கள் கொடுத்திருக்கிறீர்கள் !!!
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
@ஓசை செல்லா
வாங்க செல்லா.
நான் இதை எழுதும் போதே ரெக்கே பற்றி ஒரு பதிவு போட வேண்டும் எனக்கும் உறுதியாக தோன்றியது.ஏனென்றால் எனக்கும் அந்த வகை இசை வகை ரொம்ப பிடிக்கும். நம்ம ரஹமான் ரெக்கே இசை நுணுக்கங்கள் நிறைய பயன்படுத்தி இருப்பார்.
நம்மில் பெரிதும் பிரபலமடைந்த காதல் தேசம் படத்தில் வரும் "முஸ்தஃபா முஸ்த்ஃபா" எனும் பாடல் ரெக்கே பாணியில் அமைந்த பாடல் தான்!! :-)
@சங்கர்
உண்மைதான் சங்கர்.
அந்த பாட்டில் வரும் "பூ பூத்தது","குரங்கு கையில் மாலை" எனும் பாடல்கள் எல்லாம் நல்ல ஜாஸ் பாணியில் அமைந்த பாடல்கள்.
கருத்துக்களுக்கு நன்றி :-)
@Voice on wings
முதன் முதலாக ஜாஸ் இசை வளர ஆரம்பித்த போது உபயோகப்படுத்தப்பட்ட இசை க்ருவிகளையே நான் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுது நிறைய கலந்திசை மற்றும் ஜாஸின் பல்வேறு உருவகங்களினால் இப்பொழுது ஜாளில் உபயோகப்படுத்தப்படாத கருவிகளே இல்லை என்று சொல்லலாம்.
எனக்கு தெரியாத பல மேலதிக தகவல்களை தந்திருக்கிறீர்கள்!!
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி Voice on wings
இந்தா பாருப்பா. ஜாஸ்னு ஒரு படம் வந்தது..அந்தப் படத்து இசையைப் பத்தித்தான் நீ ஏதோ எழுதீருக்கன்னு வந்தா...ஏதோ பெரிய பெரிய தகவலையெல்லாம் சொல்லீருக்க. நல்லாரு.
நீ சொன்ன பாட்டுகள நானும் கேட்டிருக்கேன். தமிழ்த்திரையுலகில் எல்.ஆர்.ஈசுவரி மிகச் சிறந்த பாடகி. ஜாஸ் இசைக்கு மிகவும் பொருந்தும் குரல் அவருடையதுதான். அதில் மறுப்பே இல்லை. ஹல்லோ மிஸ்ட்டர் எதிர்க்கட்சியில் ஹரிணி நன்றாகப் பாடியிருந்தாலும் ஏதோ குறைவது தெரியும். அதே மாதிரிதான் குரங்கு கையில் பூமாலையும். வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே பாட்டில் ஆஷா கொலை செய்திருப்பார். தேடினேன் வந்தது ஜாஸ் இசையோ?
@ஜிரா
வாங்க ஜிரா!!
எல்.ஆர்.ஈஸ்வரியை என்னை போலவே எல்லோருக்கும் பிடித்திருக்கிறதே!!
நீங்கள் சொன்ன பிறகு யோசித்து பார்த்ததில் அந்த பாட்டும் ஜாஸ் போலத்தான் தோன்றுகிறது. எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலைக்கேட்டாலே ஜாஸ் இசையின் உருக்கமும் ஓட்டமும் நம் மனதுகளில் பதிந்து விடுகின்றன அல்லவா!! :-)
அம்மம்மா ஏனடி தோழி என்று ஒரு பாட்டு வரும் (படம் பெயர் ஞாபகம் வரவில்லை),எனக்கு மிக பிடித்தமான பாடல். அதுவும் ஜாஸ் போலத்தான் தோன்றுகிறது!!
இந்த காதலிக்க நேரமில்லை படத்துல "விஸ்வநாதன் வேலை வேணும்" ன்ற பாட்டு கூட ஜாஸ் தானே??
சங்கர், நீங்கள் குறிப்பிட்டது போல மும்பை எக்ஸ்பிரஸ் இளையராஜாவின் அற்புதமான ஜாஸ் படைப்புகளில் ஒன்று.
ராஜா ஆரம்பத்திலிருந்தே நிறைய ஜாஸ் போட்டிருக்கிறார். மௌனராகம் "மன்றம் வந்த", "இளையநிலா பொழிகிறது", "மாருகோ மாருகோ", "காலம் காலமாக வாழும் காதலுக்கு" என 100க்கணக்கான ஹிட் பாடல்களில் ஜாஸைக் கலந்து அடித்திருக்கிறார்.
விவரம் தெரிந்து ஜாஸ் கேட்க ஆரம்பித்த பின்பு கூட ராஜாவின் பாடல்களை "best of jazz" என்று கருதுகிறேன்.
Post a Comment