Nothing But Wind...புல்லாங்குழல்!
ஊதாங்கோல்-னு அடுப்பங்கரையில் ஊதுவார்கள், ஒரு காலத்தில்! பாத்திருக்கீங்களா? அதைப் பார்க்கும் போதெல்லாம் "புல்லாங்கோல்" தான் ஞாபகத்துக்கு வரும் எனக்கு!
இப்படி அடுப்படியில் உட்கார்ந்து கொண்டு ஊதி, நெருப்பு வளர்க்கிறார்களே!
அதுக்குப் பதில் புல்லாங்குழலில் ஊதினா இசைக்கு இசையும் ஆச்சு, நெருப்புக்கு நெருப்பும் ஆச்சு! - என்று கேட்டு அத்தையிடம் உதை வாங்கிய காலமும் நினைவுக்கு வருகிறது! :-)
பாம்பு மகுடிக்கு மயங்கும் சரி - மனுசன் எதுக்கு மயங்குவான்?
நீங்களே கேட்டுப் பாருங்களேன்...இந்தப் பாட்டின் துவக்க இசையை....
பூவே செம்பூவே உன் வாசம் வரும்! - சொல்லத் துடிக்குது மனசு படத்தில் இசை ஞானி இளையராஜா தரும் மெலடி!
மெலடி என்றாலே அது புல்லாங்குழல் தானா?
குழல் இனிது யாழ் இனிது என்று திருக்குறள் சொல்லும். அதில் யாழ் போய் விட்டது! குழல் மட்டும் தான் மிஞ்சி உள்ளது!
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே என்ற பாட்டு எவ்வளவு பிரபலம்! அது என்ன அந்தப் புல்லாங்குழல் இசையில் அப்படி ஒரு மாயம்?
மாயக் கண்ணன் கையில் கூட அது தான்! கோபிகைகள் எல்லாரும் மயங்கியது கண்ணனிடத்திலா, புல்லாங்குழல் இசையிலா?
இவ்வளவு பெருமை பெற்றதா இந்தப் புல்லாங்கோலு?
உலகின் முதல் இசைக்கருவி எது தெரியுமா? - சாட்சாத் இந்தப் புல்லாங்குழல் தான். ஒரு ஆதிவாசி...முதல் மனிதன்...புல்லாங்குழலை எப்படிக் கண்டு பிடிக்கிறான் என்று காட்டுகிறார்கள்.
காட்டுத் தீயில் ஒரு மூங்கில் செடி மட்டும் தப்பிக்கிறது...ஒரு வண்டு அந்த மூங்கில் தண்டில் துளை போடுகிறது!
எங்கிருந்தோ வீசும் காற்று, துளையில் புகுந்து செல்ல
...ஊஊஊஊஉஉஉஉம் என்கிற நாதம்...புல்லாங்குழலின் தோற்றம்!
புல்லாங்குழல் இந்தியக் கருவியா இல்லை மேனாட்டுக் கருவியா என்று தனித்தனியா ஆராய்ச்சி எல்லாம் செய்ய முடியாத அளவுக்கு எல்லாப் பண்பாட்டிலும் அது பின்னிக் கிடக்கிறது!
மகாபாரதம் நிகழ்ந்தது 2000 BC என்று மிக அண்மைக் காலக் கணிப்பாய் நிறுவினாலும் கூட அதிலும் புல்லாங்குழல் வருகிறது. அப்படிப் பார்த்தால் 4000 ஆண்டு பழமையான கருவியா இது?
தமிழ் இலக்கியங்களிலும் குழல் வருகிறது. பெரும்பாணாற்றுப்படை மற்றும் குறிஞ்சிப்பாட்டில் ஆம்பல் பண்ணில் குழல் வாசிப்பதாகக் குறிப்புகள் வருகின்றன. குழல் இனிது யாழ் இனிது என்று குறளும் செப்புகிறது!
சீனாவிலும் Chie என்ற குழல் பழமை வாய்ந்தது.
எகிப்து, ரோமாபுரியில் இருந்து ஜெர்மனி மற்றும் ஐரோப்பாவிற்கும் குழல் பரவியது. ஃபிரான்ஸ் நாட்டு லூயி XIV ஆம் காலத்தில் தான் அரசவைகளில் குழல் நுழைந்ததாகவும் சொல்லுகிறார்கள்!
Baraoque புல்லாங்குழல் லண்டன் மற்றும் ஜெர்மனியில் பிரபலம் ஆகியது!
பின்பு கீ வைத்த குழல்கள் உருவாகின. ஃபோயம் (Boehm) என்பவரால் வடிவமைக்கப் பெற்று Boehm Flute என்று பெயர் பெற்றன.
இன்றைய மேல் நாட்டு வடிவம் பெரும்பாலும் இந்த Boehm குழல் தான்! பல குழல்களை அடுக்கி வைத்த Pan Flute-உம் பின்னாளில் தோன்றியது!
வாய்க்கு அருகே ஒரு வாய்த்துளை. ஒரே நேர்க்கோட்டில் இன்னும் 6-8 துளைகள்!
வாயால் ஊதிய காற்றை உள்ளே செலுத்தி விட்டோம்;
இப்போது துளைகளில் கைவிரல்கள் கொண்டு அடக்கி அளும் போது, குழல் இசை உருவாகிறது!
(துளை வழியே எச்சில் பறக்குமா-ன்னு கன்னா பின்னா கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது...சொல்லிட்டேன்... வேணும்னா கச்சேரியில் முதல் வரிசையில் உட்கார்ந்து கேட்டுப் பார்த்து விட்டுச் சொல்லுங்க!:-)
ஊதினால் மட்டும் போதுமா? போதாது....பிடிமானமும் தேவை.
பொதுவா எல்லாருமே கொஞ்சம் சாய்த்து தான் புல்லாங்குழலைப் பிடித்துக் கொள்கிறார்கள்.
வட இந்தியாவில் நீட்டுப் புல்லாங்குழல் வாசிப்பாங்க.
பன்சூரி புல்லாங்குழல் (Bansuri) என்று பெயர். (பன்=மூங்கில், சுரி=சுரம்)
ஹரி பிரசாத் செளராசியா-வின் குழலிசை ஹிந்துஸ்தானியில் மிகவும் பிரபலம்.
தென்னிந்தியாவில் குறுக்கு வாட்டில் தான் குழல் வாசிப்பு! (வேணு புல்லாங்குழல் என்று பெயர்)
கர்நாடக/தமிழ் இசையில் பிரபலமானவர்கள் பலர்...ஃப்ளூட் மாலி என்னும் மகாலிங்கம் முற்காலத்தில் என்றால்...
அண்மையில் கே.எஸ். கோபாலகிருஷ்ணன், சிக்கில் சகோதரிகள் (குஞ்சுமணி, நீலா), என்.ரமணி, ஷசாங்க், ஃப்ளூட் ராமன், B.V பாலசாய் என்று பலர்!
பொதுவா, நம் நாட்டுப் புல்லாங்குழல்கள் மூங்கிலால் ஆனவை! சில இடங்களில் உலோகக் குழல்களும் உண்டு. (விலங்கு எலும்புகளிலால் ஆன குழல்கள் மேல் நாடுகளில் இருக்கு)
8 அங்குலம்(inch) இல் இருந்து 3 அடி(feet) வரைக்கும் புல்லாங்குழல்கள் உண்டு. சிறிய குழல்களில் தான் pitch அதிகம்.
மேலை நாடுகளுக்குப் போனா, இன்னும் ஏகப்பட்ட புல்லாங்குழல் வகைகள்! பெரும்பாலும் உலோகக் குழல்கள் தான்!
துளைகள் போதாதென்று, விசை எனப்படும் கீ(key) வைத்த புல்லாங்குழல்களும் உண்டு!
இது மட்டுமா? கொத்து கொத்தா குழல்களை அடுக்கி வைத்து ஊதும் சாம்போனா (Zampona) கருவியும் பிரபலம்.
அவர்கள் புல்லாங்குழலில் பிக்கோலோ(Piccolo) என்பது குட்டியானது; அல்டோ(Alto), பாஸ்(Bass) வகைகள் சற்று பெரிது!
சரி...நம்ம சினிமாவுக்கு நாம வருவோம்!
தமிழ் சினிமாவில் புல்லாங்குழல் இல்லாத பாடல்களே மிக மிக அரிது! எதை எடுப்பது...எதை விடுப்பது?
அண்மையில் கொக்கி என்ற படம் வந்தது. அதில் தீனாவின் இசையில் முழுக்க முழுக்க ஒரு புல்லாங்குழல் மெலடி - When my heart goes - நீங்களே கேட்டுப் பாருங்க!
மே மாதம் படத்தில், மார்கழிப் பூவே பாடல். ரஹ்மான் இசையில் இதுவும் ஒரு ப்ளூட் மெலடி. பாடலின் துவக்கத்தில் கெளசல்யா சுப்ரஜா மெட்டில்
குழல் மேஜிக் கேளுங்க!
பாரதியாரின் சின்னஞ் சிறு கிளியே...புல்லாங்குழலில் மட்டும் தான் அப்படி இனிமையாகக் குழையும். உன் கண்ணில் நீர் வழிந்தால்ல்ல்ல்ல் என்று ரமணி வாசிப்பது இதோ!
இசைஞானி இளையராஜா தொடுக்காத குழல் மெலடி ஒன்று இருக்கத் தான் முடியுமா!...ஏற்கனவே பூவே செம்பூவே பாட்டைப் பதிவின் துவக்கத்தில் பார்த்தோம்.
ஆனால் குழலிசையில் வெளுத்து வாங்கிய இசைஞானி என்று சொல்லணும்னா அது Nothing But Wind ஆல்பம் தான்.
அதில் பண்டிட் ஹரிபிரசாத் செளராசியா அவர்கள் வாசிப்புக்கு, இளையராஜா தரும் ராக ஜொலிஜொலிப்புகள் கட்டாயம் கேட்க வேண்டிய ஒன்று!
புல்லாங்குழல் அதில் பேசுகிறது...சிரிக்கிறது, அழுகிறது, ஒய்யாரம் இடுகிறது! திடீரென்று வயலின்கள் ஒரே நேரத்தில் முழங்க, குழலிசை ஒளிந்து கொள்கிறது. கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் எட்டிப் பார்த்து துள்ளாட்டம் போடுகிறது!
Mozartஉம், நாட்டுப் பாடலும் கலந்து அடிக்கிறார் இளையராஜா. திடீரென்று விறகு வெட்டும் ஓசை மட்டும் ஒரு நாதம் போல் கேட்கிறது!
ஹிந்தோள ராகத்தில் ஆரம்பிக்கும் இளையராஜா, Bass Guitarஐக் கொண்டு வந்து, நோட்-களை எல்லாம் மாற்றி....அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ராகத்தை மாற்றுகிறார்! மறுபடியும் ஏக காலத்தில் Drums எல்லாம் முழங்க...ஒவ்வொன்றாக நிறுத்தப்பட்டு, குழல் மெல்ல எட்டிப் பார்த்து கண்ணடிக்கிறது!
கட்டாயம் கேட்டு மகிழ வேண்டும்! இதோ!
செவிக்கின்பம்...மேலும் சில குழலோசைக் காட்சிகள்!
Flute Band எனப்படும் வாத்திய இசைக்குழு ராணுவங்களில் மிகவும் பிரபலம்.
நம் நாட்டு அணிவகுப்புகளில் கூடக் கேட்கலாம். மிகவும் கம்பீரமாக இருக்கும். கீழே ஒரு Flute Band காட்சி...கேட்டு மகிழுங்கள்!
கேப் டவுன் Philharmonic Orchestraவில் Karin Leitner வாசிக்கும் Mozart 2nd movement...
Dr.N.ரமணி வாசிக்கும் ராம கதா சுத...செம பீட்
ஹரிபிரசாத் செளராசியாவின் ஹம்சத்வனி...
என்ன, அடுத்த முறை பொருட்காட்சிக்குப் போனா, குழல் வாங்கி வருவீர்கள் இல்லையா? ஆனா கொஞ்சம் அக்கம் பக்கம் பார்த்து ஊதுங்க!
பாவம் நீங்க ஊதுறதைப் பார்த்து, காதில் யாரும் ஆனந்தக் கண்ணீர் வடிக்கக் கூடாது இல்லையா?:-)
References:
http://en.wikipedia.org/wiki/Flute
http://www.webindia123.com/music/instru/flute.htm
http://www.flutehistory.com/
http://inventors.about.com/library/inventors/blflute.htm
http://www.bansuriflute.com
29 comments:
குழலைப் பத்தின பதிவு அருமை. சும்மா ஊதித் தள்ளிட்டீங்க!! :))
வெறும் காற்று...ஆனால் வரும் இசையோ...என்ன சொல்ல...
நல்ல பதிவு அண்ணா.
நீங்க சொல்வதை பார்த்தால் புல்லாங்குழில் பல வகை இருக்கும் போல் இருக்கின்றதே..ஒரு 500 வருமா?நீங்க கொடுத்து இருக்கும் அனைத்து புல்லாங்குழல் இசையும் இசை விருந்தே படைத்து விட்டது.
அண்ணாத்த!!
சூப்பரு பதிவு!!
நீங்க சொல்லுறா மாதிரி மெலடினாலே புல்லாங்குழல்னு தான் சொல்ல தோனுது!!
மெலடி விரும்பியான என்னை பல முறை குழல் தன் குளிர்ந்த இசையால் இளைப்பாற்றி இருக்கிறது!! :-) ("பூவெ செம்பூவே" பாடல் ஒரு மிகச்சிறந்த உதாரணம்)
நீங்கள் கொடுத்த பாடல்கள் ஒவ்வொன்றையும் கேட்டேன்!!
இன்னும் கடைசி இரண்டையும் கேட்கவில்லை.
எந்த இசை பாணியாக இருந்தாலும் பூலாங்குழலின் வழி வந்தால் அந்த இசையின் சிறப்பே தனி தான் என்ற என் நம்பிக்கை உறுதி பெற்றது!!!
அதுவும் அந்த புல்லாங்குழல் மற்றும் யாழ் சேர்ந்து வந்த இசை விருந்து (கேப் டவுன் Philharmonic Orchestraவில் Karin Leitner வாசிக்கும் Mozart 2nd movement...) மி்க இனிமை!!!
வாழ்த்துக்கள்!! :-)))
குழலை கொஞ்சம் கவனிக்க வைத்தது இளையராஜா பாடல்கள் மூலம் தான்.
ஏனோ அப்படி ஒரு ஈர்ப்பு அதன் மேல்.
இப்போது கூட 2 குழல் அறையில் இருக்கிறது.பொழுது போகாத போது கொஞ்சம் காற்றை விட்டு பார்ப்பது.
சிங்கை பெருமாள் கோவில் பக்கத்தில் "ஆலாபனை" என்ற கடையில் வாத்திய கருவிகளை பயண்படுத்த சொல்லிக்கொடுக்கிறார்கள்.அந்த வழியாக போகும் போது ஏக்கத்துடன் இப்போதும் பார்த்துக்கொண்டு போகிறேன்.
//இலவசக்கொத்தனார் said...
குழலைப் பத்தின பதிவு அருமை. சும்மா ஊதித் தள்ளிட்டீங்க!! :)) //
என்னாது "ஊதித்" தள்ளிட்டேனா? போச்சுடா...ஊதித் தள்ளறது கேள்விப்பட்டு பூரிக்கட்டையோடு நம்மள ஊதித் தள்ளறத்துக்கு ஐடியா கொடுக்கறீங்களே கொத்ஸ்! :-)
//†hµrgåh said...
வெறும் காற்று...ஆனால் வரும் இசையோ...என்ன சொல்ல...//
தேவர் மகன்-ல ரேவதி சொல்ற "வெறும் காத்து தாங்க வருது" நினைவுக்கு வருது துர்கா!
//புல்லாங்குழில் பல வகை இருக்கும் போல் இருக்கின்றதே..ஒரு 500 வருமா?//
சைஸ் வாரியா அடுக்கினா, துளை வாரியா பிரித்தா, இன்னும் 1000 கூட எட்டும் போல இருக்கே துர்கா!...ஆமா நீங்க வீணை வாசிக்கும் போது பக்க வாத்தியம் யாரு வாசிப்பா?
//CVR said...
மெலடி விரும்பியான என்னை பல முறை குழல் தன் குளிர்ந்த இசையால் இளைப்பாற்றி இருக்கிறது!! :-)//
நீங்க மெலடி விரும்பியா CVR?
அப்பன்னா நான் நினைச்சுது சரியாப் போச்சு!
காதலுக்கும் மெலடி தான் கரெக்டான தீம் - தெரியுமில்லையா? :-)
//நீங்கள் கொடுத்த பாடல்கள் ஒவ்வொன்றையும் கேட்டேன்!!
இன்னும் கடைசி இரண்டையும் கேட்கவில்லை.//
கண்டிப்பா "ராம கதா சுத" கேளுங்க! இனிய மெலடி!
ஆஹா, இனிய குழலினைப் பற்றி எழுதி விட்டீர் ரவி!
தேனினும் இனிது குழலின் கீதம்.
செவியில் தேனை ஊற்றினாற்போல் என்ன ஒரு இனிமை.
ஒரு முறை Dr.N.Ramani அவர்களின் சீடர்களின் ஒருவரான ஜெயப்பிரதா ஒரு வீட்டுக் கச்சேரியில் வாசிக்கக் கேட்டது பெரும் பாக்கியம்!
இளையராஜாவின் கீரவாணிப் பாடல்களில் குழல் கீரவாணிக்காவே படைக்கப்பட்டதாக தோன்றும்!
உதாரணம்:
1. முன்னம் செய்த தவம்
2. போவோமா ஊர்கோலம்
பாடல்கள்
//சைஸ் வாரியா அடுக்கினா, துளை வாரியா பிரித்தா, இன்னும் 1000 கூட எட்டும் போல இருக்கே துர்கா!...ஆமா நீங்க வீணை வாசிக்கும் போது பக்க வாத்தியம் யாரு வாசிப்பா?
//
ஹிஹி.அதுக்குதான் ஆளைத் தேடிகிட்டு இருக்கேன் ;)
அண்ணா,பக்கவாத்தியம் எல்லாம் இல்லை.தனியாகதான் வாசித்து கொண்டிருகின்றேன்.போன தடவை நடந்த ஒரு நிகழ்ச்சியில் தபேலா தான் பக்க வாத்தியமாக இருந்தது :)
பெரும்பாலன நேரங்களில் நம்ப எல்லாம் தனி கட்சிதான் :D
//வடுவூர் குமார் said...
இப்போது கூட 2 குழல் அறையில் இருக்கிறது.பொழுது போகாத போது கொஞ்சம் காற்றை விட்டு பார்ப்பது//
ஆகா...சூப்பரு!
அடுத்த முறை சிங்கை வரும் போது உங்க கச்சேரி தான், குமார் சார்!
//சிங்கை பெருமாள் கோவில் பக்கத்தில் "ஆலாபனை" என்ற கடையில் வாத்திய கருவிகளை பயண்படுத்த சொல்லிக் கொடுக்கிறார்கள்.அந்த வழியாக போகும் போது ஏக்கத்துடன் இப்போதும் பார்த்துக்கொண்டு போகிறேன்//
அன்பு ஈனூம் ஆர்வம் உடைமை!
சும்மா ஒரு மாதப் பயிற்சி எல்லாம் இருக்கா சார் அங்கே?
Not to be a professional, but to be appreciative of the professional?
Nothing But Wind இசைஞானியின் மாஸ்டர் பீஸ். எனக்கு மிகவும் பிடித்த தொகுப்பு. காரில் நீண்ட தூரம் செல்லும் போது மறக்காமல் எடுத்துச் செல்லும் CD க்களில் ஒன்று.
அருமையான பதிவு
//ஜீவா (Jeeva Venkataraman) said...
இளையராஜாவின் கீரவாணிப் பாடல்களில் குழல் கீரவாணிக்காவே படைக்கப்பட்டதாக தோன்றும்!
உதாரணம்:
1. முன்னம் செய்த தவம்
2. போவோமா ஊர்கோலம்//
வாங்க ஜீவா.
ஆகா சின்னத்தம்பியில் "போவாமா ஊர்கோலத்தை" எப்படி மறந்தேனோ தெரியவில்லை!
எடுத்துக் கொடுத்த உங்களுக்கு நன்றி! அதிலும் குழலிசை ஊர்கோலம் போகுமே!
கீரவாணி ராகமா அது?
ஹீம்! திரை இசையில் ராகங்கள் பற்றி ஒரு தொடர் போடுங்களேன் ஜீவா, இசை இன்பம் வலைப்பூவில்!
//†hµrgåh said...
ஹிஹி.அதுக்குதான் ஆளைத் தேடிகிட்டு இருக்கேன் ;)///
பக்கவாத்தியத்துக்கு ஒரு ஆள் ரெடியா இருக்கார்! :-)
//ப்ரசன்னா said...
Nothing But Wind ... காரில் நீண்ட தூரம் செல்லும் போது மறக்காமல் எடுத்துச் செல்லும் CD க்களில் ஒன்று.//
நானும் அப்படித் தான் ப்ரசன்னா! How to Name It-உம் எடுத்துச் செல்வேன்!
சஞ்சய் சுப்ரமணியம், மகராஜபுரம், மர்றும் எம்.எஸ் கூடவே வருவாங்க! :-)
//
பக்கவாத்தியத்துக்கு ஒரு ஆள் ரெடியா இருக்கார்! :-) //
யார் அந்த நல்வவர் :D
Can you write a separate posting for Flute in Carnatic Music? It is so much rich in flute music and Flute Maali's specialities are still ringing in my ears.
Thanks
-Dr.Balu
//Can you write a separate posting for Flute in Carnatic Music? It is so much rich in flute music and Flute Maali's specialities are still ringing in my ears//
நன்றி டாக்டர் பாலு!
இது வெறும் இசைக் கருவிகள் பற்றிய அறிமுகம் மட்டுமே!
அதனால் பொதுவான தகவல்கள்!
மேலும் இந்த வலைப்பூவில் எந்தவொரு இசையும் over dose ஆக்காது, நம் இசையை நம் இளைஞர்களுக்கு, நல்ல முறையில் ரசனைப்படுத்துவது தான்!
இன்னும் விரிவாக கர்நாடக இசை பற்றி எழுதலாம் தான்! அதுவும் மாலியின் இசை பற்றிச் சொல்லவும் வேண்டுமா? நண்பர் CVR இந்த வலைப்பூ பங்களிப்பில் நிறைய செய்துள்ளார். அவர் இசைவு பெற்று எழுதுகிறேன்!
எனக்கு தமிழில் பிரபலமான பாடல்களின் புல்லாங்குழில் நோட்ஸ் வேண்டும்... ஸ,ரி,க,ம வில்... Not in a,s,.. (i.e) in english...
வலைத்தலத்தில் எஙகு கிடக்கும்..? உதவ முடியுமா..? நானாக கண்டுபிடிக்கும் அளவு திறமை இல்லை... எனக்கு சாமி பாட்டு மத்திரமே வாசிக்கத் தெரிகிறது.. நண்பர்கள் சினிமா பாட்டு கேட்டால் வழிய வேண்டியதாய் உள்ளது...
நல்ல பதிவு
//மோனா said...
எனக்கு தமிழில் பிரபலமான பாடல்களின் புல்லாங்குழில் நோட்ஸ் வேண்டும்... ஸ,ரி,க,ம வில்... Not in a,s,.. (i.e) in english...//
தமிழ் யூனிகோட்டில் கிடைப்பது கொஞ்சம் சிரமம் தான் மோனா!
இந்தத் தளம் வேண்டுமானால் பாருங்க! சரிகம வில் தான் உள்ளது. But that sa ri ga ma is typed in English!
http://www.keylessonline.com/list/tamil
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - டி.எம்.எஸ் பாடல் சிவரஞ்ஜனி ராகம்தானே?
பிதாமகன் படத்தில் வரும்"இளங்காற்று வீசுதே" பாடலில் கூட ஒரு அருமையான பிட் வருது. இளையராஜாவும் புல்லாங்குழலும்னு ஒரு போஸ்டே நான் கூடிய சீக்கிரம் போடரேன் சார்.
//http://www.youtube.com/watch?v=4v5qELNtJAs&feature=RecentlyWatched&page
=1&t=t&f=b//
இந்த Hero படப் பாடலைக் கேட்கப் பொறுமை இருந்தால் நடுவே புல்லாங்குழல் இசை வரும். மறக்க முடியாத இசை
//http://www.youtube.com/watch?v=4v5qELNtJAs&mode=related&search=//இந்த Hero படப் பாடலைக் கேட்கப் பொறுமை இருந்தால் நடுவே புல்லாங்குழல் இசை வரும். மறக்க முடியாத இசை
//manipayal said...
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - டி.எம்.எஸ் பாடல் சிவரஞ்ஜனி ராகம்தானே?//
வாங்க மணிப்பையல்!
சிவரஞ்சனியே தான்!
நான் எப்படிக் கண்டுபிடிப்பேன்னா, பாட்டோடு வேறு ஒரு சிவரஞ்சனி பாட்டைச் சேர்த்துப் பாடினா...ஒன்னா ஒட்டும்...அப்ப ஆகா இதுவும் சிவரஞ்சனி தான் கெஸ் பண்ணிக்கறது :-)
//பிதாமகன் படத்தில் வரும்"இளங்காற்று வீசுதே" பாடலில் கூட ஒரு அருமையான பிட் வருது//
ஆமாங்க அதுவும் சூப்பர் பிட்டு. கொஞ்ச நேரம் தான் வரும்!
//இளையராஜாவும் புல்லாங்குழலும்னு ஒரு போஸ்டே நான் கூடிய சீக்கிரம் போடரேன் சார்//
ராஜாவும் குழல் மெலடியும் சொல்ல வேண்டுமா? சீக்கிரம் போடுங்க! போட்டுட்டு அப்படியே ஒரு மெயில் தட்டி விடுங்க!
//anonymous said...
//http://www.youtube.com/watch?v=4v5qELNtJAs&feature=RecentlyWatched&page
=1&t=t&f=b//
இந்த Hero படப் பாடலைக் கேட்கப் பொறுமை இருந்தால் நடுவே புல்லாங்குழல் இசை வரும். மறக்க முடியாத இசை//
இல்லம் சென்றவுடன் கேட்டுச் சொல்கிறேன், அனானி சார்!
@அனானி
//http://www.youtube.com/watch?v=4v5qELNtJAs&feature=RecentlyWatched&page
=1&t=t&f=b//
இந்த Hero படப் பாடலைக் கேட்கப் பொறுமை இருந்தால் நடுவே புல்லாங்குழல் இசை வரும். மறக்க முடியாத இசை//
அழகான வட இந்திய நாட்டுப்புற பாடலாயிற்றே இது!!
எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்!
நேற்றே கேட்டு விட்டேன்!! :-)
பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!! :-)
எனக்கு மிக உபயோகமான பதிவாயிருந்தது. நன்றி! குழலிசை பற்றி சின்னதாய் நானும் ஒரு பதிவு போட்டிருக்கிறேன். http://chithran.blogspot.com/2009/01/blog-post_29.html
புல்லாங்குழல்கள் பற்றி தெள்ளிய பதிவு. இந்தியாவில் மரபான புல்லாங்குழல்கள் இரண்டு என்று நினைக்கிறேன். ஒன்று bansuri மற்றத murli எனப்படும் நேர்-புல்லாங்குழல்.
முரளி டைப் வாசிப்பது சுலபம். குழந்தைகள் விஸில் போன்ற அமைப்பு கொண்டது. பான்ஸுரி / வேணு டைப்புகள் கொஞ்சம் மூச்சு வாங்க வைத்துவிடும். நாதம் குழல்பட ஆரம்பித்துவிட்டால் புல்லாங்குழல் போன்ற தோழமை வேறு கிடையாது.
புல்லாங்குழல் இசைக்கருவிகளில் மிகத்தொன்மையானதும், இயற்கையானதும் மற்றும் ஆத்மார்த்தமானதும் கூட. எங்கோ ஒரு ஆதிக்காட்டில் வண்டு துளைத்த மூங்கிலாகத்தான் புல்லாங்குழல் பிறந்திருக்க வேண்டும். ப்ரபஞ்சத்தின் முதல் இசையும் இப்படித்தான் ஆரம்பித்திருக்க முடியும்.
இசைவடிவத்தை குரலாக மாற்றும்
பாடகரின் அத்தனை சாத்தியங்களையும் கொண்டது புல்லாங்குழல். மற்ற இசைக்கருவிகளுக்கு (வயலின், கிதார், பியானோ) ஒரு இசைமூல வடிவை கொண்டு செல்வது (வாசிப்பது) ரசவாதம் மாதிரி. அது முழுமையாகவும் இருக்காது. அதுவே குரலாக இருந்தால் மனதில் தோன்றும் இசைக் கற்பனையை அப்படியே பாடிவிடமுடிகிறது. குரல்போன்றே புல்லாங்குழலும் மனதுக்குள் ஓடும் இசையை அப்படியே நாதமாக்கி விடுகிறது. புல்லாங்குழல் ஆத்மார்த்தமான இசைக்கருவி.
நவீன் சினிமா பின்னணி இசை புல்லாங்குழல் கலைஞர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பல பாடல்களுக்கு குழலிசைத்திருக்கிறார். ஒருமுறை டிவி பேட்டியில் தன்னிடம் உள்ள குழல் வாத்தியங்களின் கலெக்ஷனை காட்டினார். ஆப்ரிக்கா வகை புல்லாங்குழல்கள் முதற்கொண்டு பல வித்யாசமான குழல்கள் அவரிடம் உள. அவற்றை திரை இசைக்கோர்வைகளுக்குப் பயன்படுத்தியும் இருக்கிறார்.
நவீன் போன்ற புல்லாங்குழல் கலைஞர்கள் நம்மால் அறியமுடிவதில்லை. இவர்களும் போற்றுதலுக்குரியவர்கள்தான்.
ஹரிபிரசாத் எனக்குப் பிடித்த இசைக் கலைஞர். நத்திங் பட் வின்ட் ஒரு உன்னதமான படைப்பு.
நன்றியும் வாழ்த்துக்களும்!!
Nice flouding
Post a Comment