Thursday, October 25, 2007

தமிழிசை பாடும் வானம்பாடி

ராகம் : சிவரஞ்சனி

தமிழிசை பாடுகின்ற வானம்பாடி - என்
தலைவன் முருகனை தினம் தேடி - நான்
தமிழிசை பாடுகின்ற வானம்பாடி!

அமிழ்தினும் இனிதான தமிழ்ப்பாட்டு - அந்த
ஆறுமுகம் மயங்கும் அதைக்கேட்டு - செந்
தமிழிசை பாடுகின்ற வானம்பாடி! - என்
தலைவன் முருகனை தினம் தேடி!

திருப்புகழில் மணக்கும் தமிழிசையே - தேன்
திருவாசம் தன்னில் தமிழிசையே!
திருஅருட்பாவெல்லாம் தமிழிசையே - தமிழ்
தெய்வத்தை வசமாக்கும் தமிழிசையே!

(தமிழிசை...)

பூம்பாவைக்கு உயிரைத் தந்த இசை - பொங்கும்
புனலினையே எதிர்த்து வந்த இசை!
பாம்பு தன் நஞ்செடுக்க வைத்த இசை - என்றும்
பரவசம் ஊட்டுகின்ற இன்ப இசை!


(தமிழிசை...)

கடைசி நான்கு வரிகளுக்கு விளக்கம் சொல்ல வாரீகளா வாசகர்களே?

பத்மஸ்ரீ Dr. சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கம்பீரக் குரலில் இந்த பாடலைக்கேட்டு தமிழிசையில் திளைத்தபடியே, கொஞ்சம் பொருள் சொல்லுங்களேன்...!

08_SEERKAZHI_Thami...


பாடலை மேலே கேட்க இயலாதவர்களுக்காக சுட்டி இங்கே.

இதுபோன்ற உருக்கமான பாடல்களுக்கு ஏற்ற ராகம் சிவரஞ்சனி. இந்த ராகத்தில் அமைந்த சில திரை இசைப்பாடல்கள்:

இன்னிசை பாடி வரும் காற்றுக்கு (துள்ளாத மனமும் துள்ளும்)
உன்னைத்தானே தஞ்சம் என்று (நல்லவனுக்கு நல்லவன்)
ஒரு ஜீவன் தான் (நான் அடிமை இல்லை)
வா வா அன்பே பூஜை செய்து (அக்னி நட்சத்திரம்)
நான் பாடும் மௌன ராகம் (இதயக்கோவில்)

16 comments:

வடுவூர் குமார் said...

சிவரஞ்சனி என்று தெரியாமலேயே கேட்டு அனுபவித்திருக்கேன் இவ்வளவு நாட்களாக.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அவளொரு மேனகை
என் அபிமான தாரகை...
சிவரஞ்சனி....சிவரஞ்சனி....
ன்னு ஒரு சூப்பர் பாட்டு வரும்! என்ன படம்-னு மறந்து போச்சுது!

அவ்வளவு உருக்கமான ராகம், ஜீவா!
குறை ஒன்றுமில்லைனு எம் எஸ் பாடுவதும் கூட, முதல் சரணம் சிவரஞ்சனி தான்! (கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா)

நலந் தானா, நலந் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா? - இது கூட சிவரஞ்சனி தான்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சீர்காழியின் குரலில் தமிழிசைப் பாட்டு அருமை!

//திருப்புகழில் மணக்கும் தமிழிசையே - தேன்
திருவாசம் தன்னில் தமிழிசையே!
திருஅருட்பாவெல்லாம்...//

ஆகா...இசை இன்பத்தில், இனி இவற்றில் இருந்து அள்ளி அள்ளிப் போட்டுறலாம்! திராச...கொஞ்சம் மனசு வையுங்க!

//கடைசி நான்கு வரிகளுக்கு விளக்கம் சொல்ல வாரீகளா வாசகர்களே?//

ஆமாம்ப்பா...ஏதோ கதை எல்லாம் இருக்காப்பல இருக்கு அந்த வரியில! யாராச்சும் சொன்னீங்கனா, எங்களுக்கும் புண்ணியமாப் போவும்! சொல்லுங்கப்பா! :-)

cheena (சீனா) said...

//ஓம்பாவைக்கு உயிரைத் தந்த இசை - பொங்கும்
புனலினையே எதிர்த்து வந்த இசை!
பாம்பு தன் நஞ்செடுக்க வைத்த இசை - என்றும்
பரவசம் ஊட்டுகின்ற இன்ப இசை!//

அது ஓம்பாவையா அல்லது பூம்பாவையா ??

வணிகச் செட்டியின் மகளுக்கு ஞான சம்பந்தர் எரித்த சாம்பலிலிருந்து உயிர் கொடுத்தது.

காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கின் போதெல்லாம் மக்கள், தம் அறியாமையால், எறிந்து வழிபட்ட தமிழ் ஏடுகள் எல்லாம் அழிந்தும் தமிழ் இன்னும் நிலைத்து நிற்பது.

அப்பர் பெருமான் பாம்பு கடித்து இறந்த சிறுவனின் உயிர் மீட்டது ( நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே )

எனக்குத் தெரிந்ததை சொல்லி விட்டேன்

cheena (சீனா) said...

நண்ப,

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - பாடல் ஏதெனும் ப்திவுகளில் இருக்கிறதா ?? சுட்டி கொடுத்தால் நலமாக இருக்கும்.

jeevagv said...

வாங்க வடுவூரார், சிவரஞ்சனியில் பாப்புலர் பாடல்கள் இன்னமும் இருக்கிறது. KRS குறிப்பிட்டு இருக்காரு பாருங்க!

jeevagv said...

KRS,
அவள் ஒரு மேனகை மற்றும் நலந்தானா - இரண்டு திரைப்பாடல்களும் இருக்கமான பாடல்கள்தான்.

எம்.எஸ் 'கண்ணுக்குத் தெரியாமல்...' என்று பாடுவதை நீங்கள் மனக்கண் முன் நிறுத்துகிறீர், மனம் சிலிர்கிறது!

//ஆகா...இசை இன்பத்தில், இனி இவற்றில் இருந்து அள்ளி அள்ளிப் போட்டுறலாம்!//
தமிழிசைக்கு இல்லை தட்டுப்பாடு!

//திராச...கொஞ்சம் மனசு வையுங்க! //
வழி மொழிகிறேன்!

jeevagv said...

வாங்க சீனா சார்!
விளக்கத்திற்கு நன்றி!
நீங்கள் சொல்லுவதுபோல் 'பூம்பாவை' யாகத்தான் இருக்க வேண்டும்.
அப்பர், சம்பந்தர் இரண்டு பேரையும் பாடல் வரிகளில் குறிப்பது சிறப்பாக கருதுகிறேன்.
மூன்றாவது விளக்கம் தமிழிசை வரலாறிலிருந்து வரியாகவும் அமைந்து விட்டது, இன்னமும் சிறப்பு.

jeevagv said...

"புல்லாங்குழல் கொடுத்த" பாடல் 'கண்ணன் பாட்டு' வலைப்பதிவில் நிச்சயம் இருக்க வேண்டும் என்றெண்ணிக்கொண்டு கூகிளில் தேடினேன் - வந்தது முதல் முதலாகவே!

சுட்டி

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அது ஓம்பாவையா அல்லது பூம்பாவையா ??//

சீனா சார்; அது மயிலாப்பூர் பூம்பாவையே தான்!
ஜீவா, பதிவிலும் மாற்றி விட்டேன்!

சீனா மற்ற இரண்டையும் சரியாகச் சொல்லி விட்டார்!
//பொங்கும் புனலினையே எதிர்த்து வந்த இசை!//

இது புனல் வாதம் புரிந்த சமணர்களை, அந்த வாதில் சம்பந்தப் பெருமான் வென்றதைக் குறிப்பது!
வாதத்தின் பொருட்டு, வைகை ஆற்றில் ஏடு எழுதி விடுத்தார். ஆற்றின் வெள்ளத்துக்கு எதிர்ப்பக்கம், ஆற்றையே எதிர்த்து வந்து திருவேடகம் என்ற ஊரில் தங்கின சம்பந்தரின் தமிழிசை ஏடுகள். சம்பந்தரும் வென்றார்.

jeevagv said...

//ஜீவா, பதிவிலும் மாற்றி விட்டேன்!//
நன்றி கே ஆர் எஸ்.
பூம்பாவை என மாற்றியவுடன் இப்போது நான்கு வரிகளும் 'ப' வில் தொடக்கம்!

வேறு யாராவது மாற்று விளக்கமும் சொல்கிறார்களா பார்ப்போம்!

cheena (சீனா) said...

//பொங்கும் புனலினையே எதிர்த்து வந்த இசை!//

//இது புனல் வாதம் புரிந்த சமணர்களை, அந்த வாதில் சம்பந்தப் பெருமான் வென்றதைக் குறிப்பது!
வாதத்தின் பொருட்டு, வைகை ஆற்றில் ஏடு எழுதி விடுத்தார். ஆற்றின் வெள்ளத்துக்கு எதிர்ப்பக்கம், ஆற்றையே எதிர்த்து வந்து திருவேடகம் என்ற ஊரில் தங்கின சம்பந்தரின் தமிழிசை ஏடுகள். சம்பந்தரும் வென்றார். //

நண்ப,

உடன்படுகிறேன். இக்கருத்து தான் எனக்கு முதலில் மனதில் தோன்றிய கருத்து. ஏற்கனவே சம்பந்தரைப் பற்றிக் கூறி விட்ட படியால் வேறு ஒரு நிகழ்வினைக் குறிப்பிட்டேன். அவ்வளவே !!!!!!

cheena (சீனா) said...

நண்ப ஜீவி

"புல்லாங்குழல் கொடுத்த" பாடல் 'கண்ணன் பாட்டு' வலைப்பதிவில் நிச்சயம் இருக்க வேண்டும் என்றெண்ணிக்கொண்டு கூகிளில் தேடினேன் - வந்தது முதல் முதலாகவே!"

சுட்டிக்கு நன்றி நண்ப

ஒலி வடிவம் கிடைத்தால் மிக நன்றி உடையவனாக இருப்பேன். அதிகம் தொந்தரவு தருகிறேனா ?? மன்னிக்கவும்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குரல்,தமிழுக்காக இரசித்தேன். இராகம் எப்படியிருந்தாலும் சீர்காழியார் குரலில் பரிமளிக்கும்

வல்லிசிம்ஹன் said...

குரல்,தமிழுக்காக இரசித்தேன். இராகம் எப்படியிருந்தாலும் சீர்காழியார் குரலில் பரிமளிக்கும்
//
இது உண்மை.
@ரவி
சிவரஞ்சனி பாட்டு நட்சத்திரம் என்ற படத்தில் வரும் ரவி.
ஸ்ரீப்ரியா நட்சத்திரமாக நடித்த படம்.
பாட்டுக்கு மிக்க நன்றி ஜீவா.

jeevagv said...

சீனா சார் - புல்லாங்குழல் TMS பாடியது தேடியவரை கிடைக்கவில்லை. கிடைத்தால் சொல்கிறோம்!

யோகன்/ வல்லி சிம்ஹன்,
சீர்காழியின் குரலும் தமிழும் என்றென்றும் இனிமையே!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP