Sunday, January 06, 2008

தமிழ்த் திரை இசையில் டாப் டென் 2007

2007 ஆம் வருடமும் முடிந்து விட்டது. ஆண்டாண்டு வழக்கம்போல, இந்த வருடமும் டாப் டென் பாடல்களை வரிசைப்படுத்துகிறேன். இதுதான் இசை இன்பத்தில் இந்த இடுகையைத் தருவது முதல் முறை என்றாலும், சென்ற சில வருடப் பட்டியல்களை இந்தப் பதிவின் இறுதியில் பார்க்கலாம். இந்தப் பதிவு எழுதுத் துவங்குமுன் எனக்குப் பிடித்திருந்த பாடல்கள் - இரண்டு மூன்றுதான். இந்தப் பதிவு எழுதுவதற்காக, சென்ற வருடத்தில் வந்த திரைப்படங்களில் இருந்து முடிந்த அளவிற்கு கேட்டபின், ஏனைய பாடல்களை கேட்டறிந்தேன்! இவற்றில் விட்டுப்போன பாடல்களும் இருக்கலாம். இன்னமும் சிலமுறை கேட்டுப்பார்த்தால், இன்னபிறவும் பிடித்துப்போகலாம். வரிசைப்படுத்துகையில் நான் கணக்கில் கொண்டது பாடலின் இசையும், பாடகர் குரலுமே பெரிதுமாக - பாடலின் காட்சி அமைப்பல்ல. சில பாடல்கள் ஏற்கனேவே வெளிவந்த ஏதோ ஒரு பாடலின் சாயலிலும் இருக்கலாம். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், சென்ற வருடத்துப் பாடல்களை கேட்டுப் பார்ப்போம் - வரும் வருடத்தில் இன்னமும் சிறப்பான பாடல்கள் வெளிவர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன்.

என் ரசனையில் எனக்குப் பிடித்த பாடல்களை இங்கே வரிசைப்படுத்தி இருக்கிறேன். இதில் இதுவரை நீங்கள் கேட்காத பாடல்கள் இருந்தால், அவற்றை தவறாமல் கேட்டுப் பார்க்கவும்.

(பாடல் / பாடுபவர் / படம் / இசையமைப்பாளர்)
1. காற்றின் மொழியே / சுஜாதா / மொழி / வித்யாசாகர்

இதமாக வருடிச் செல்லும் இனிதான பாடல். மேலே சுஜாதாவின் குரலிலும், கீழே பலராம் குரலிலும் கேட்கலாம்.
முன்னீடு தனில் வரும் கிடாருக்கும், தொடரும் பலராமின் குரலுக்கும் அப்படி ஒரு ஹார்மொனி. தொடர்ந்து வரும் குழலோசை உள்ளத்தை உருக்குகிறது. இடையூட்டில் வரும் பியானோ துளிகளின் சாரலில் நனைந்த சுகம் சுகமே. குரலும் இசைக் கருவிகளும் இரண்டற கலந்த இனிய சங்கமம்.

பலராம் குரலில்:2. விழியில் உன் விழியில் / ஸ்வேதா, சோனு நிகம் / கிரீடம் / GV பிரகாஷ்குமார்
மெலடியில் இந்தப் பாடல் மனதைத் தொட்டது. சேனு நிகமின் குரல் இனிதாய் இழைந்தோடுகிறது. ஸ்வேதாவின் குரலும் நன்று. பாடலில் எளிமை பாடலை உயரத் தூக்கி நிறுத்துகிறது. வீணை வாசிப்புகள் ஒரு கிளாசிகல் உருவகத்தை ஏற்படுத்துகிறது.
கீழே கொடுத்துள்ள வீடியோ பாடலில் இடையிடையே வசனங்கள் வரும். வசனங்களில்லாமல் இடையூடுகளை மேலே உள்ள சுட்டியில் கேட்கலாம்.

மேலும் இந்தப் படத்தில் இன்னொரு டூயட் பாடலும் பிரபலம்:
& அக்கம் பக்கம் / சாதனா சர்கம் / கிரீடம் / GV பிரகாஷ்குமார்

3. பறபற பட்டாம்பூச்சி / ராகுல் நம்பியார்/ கற்றது தமிழ் / யுவன் சங்கர் ராஜா
பியானோவில் துவங்கும் இந்தப் பாடலின் எனக்குப் பிடித்தது - பாடல் துறுதுறுவென ஊக்கத்தினை ஏற்படுத்துவதுதான். பற, பற... என மொத்தம் ஐந்து 'பற' போட்டு, ந.முத்துக்குமாரின் வரிகளுக்கு வேகம் கொடுத்திருக்கிறார் யுவன். விரும்பிக் கேட்கச் செய்யும் கம்பி வாத்தியங்களில் மீண்டும் பழைய யுவனைக் கேட்கப் பிடிக்கிறது, இதமானதொரு மெலடியில்.

4. அலைகளின் ஓசை / ஹரிசரண், கல்யாணி / ராமேஸ்வரம் / நிரு
அசத்தலான முன்னீடுடன் அருமையாக தொடங்கும் பாடல். முடியும் முன்னீடுக்கு முத்தாய்ப்பாய் ஒற்றை மணி ஒலி. அழகான மெலடியில், ஹரிசரண் மற்றும் கல்யாணி இருவரும் நன்றாக பாடி உள்ளார்கள். இலேசான சோகமும் குரலில் இழையோடுவது தெரிகிறது. சாரங்கி, செலோ மற்றும் புல்லாங்குழல் இடையூடுகளில் தனியில் பிராகசிக்கின்றன. இரண்டு முறை இந்தப்பாடலைக் கேட்டுவிட்டு கண்களை மூடுங்கள், உங்கள் தோள்கள் தானாக குலுங்கும், பாடலின் ரிதத்தில்.


5. எனதுயிரே / சின்மயி, சாதனா சர்கம், நிகில் மேத்யூ / பீமா / ஹேரிஸ் ஜெயராஜ்
இன்னமும் திரைப்படம் வெளிவராவிட்டாலும், ஒலிக்கோப்புகள் வந்து விட்டன. பாடலின் பின்னணியில் சின்மயி 'ஹம்' செய்யும் ரிதம் அழகு. சாதனாவின் உச்சரிப்பில் கொச்சையைத் தவிர்த்தால், இதர அனைத்தும் இந்தப் பாடலில் அருமை. நிகிலும் அழகாக பாடி இருக்கிறார். சந்தூர் மற்றும் தபலா, ஹிந்துஸ்தானி இசையின் பரிணாமங்களை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.

இந்தப் படத்தில் இன்னொரு பாடலையும் அழகாக வடித்திருக்கிறார் ஹேரிஸ்:
ரகசிய கனவுகள், ஹரிஹரனின் இனிமையான குரலில்.

6. உன்னருகில் வருகையில் / ஹரிணி சுதாகர், ஹரிசரண் / கல்லூரி / ஜோ.ஸ்ரீதர்
நீளமான இடையூடுகளில் அசத்துகிறார் ஜோ.ஸ்ரீதர். பாடலின் ஜீவன் அவரது இசையில் மிளிர்வதைப் பார்க்கலாம்.கனமான மேளங்களுக்கு நடுவேயும் பாடல் வரிகளும் இசையும் ரசிக்கும்படியாக இருக்கிறது.


7. ஆருயிரே மன்னிப்பாயா / சின்மயி, குவாதீர், மதாஷா, ஏ.ஆர்.ரஹ்மான் / குரு / ஏ.ஆர். ரஹ்மான்
ஒரே பாடலில் இத்தனை குரல்களா? இத்தனை இசைக்கருவிகளா? வியப்பே வேண்டாம் - இது ரஹ்மான் இசை. தனக்கு மிகவும் பரிச்சயமான குவாலி வகை பாடலில் கலக்குகிறார் ரஹ்மான். பாடலில் ஒவ்வொரு நொடியும், ஏன் இறுதியில் கடைசி சப்தம் தானாக தேய்ந்து மறைகிற வரையும், இசையின் பிரம்மாண்டம் இனிதாகவும் இருக்கிறது.8. மார்கழியில் / ஸ்ரீநிவாஸ் / ஒன்பது ரூபாய் நோட்டு / பரத்வாஜ்
பாட்டென்றால் இப்படித்தான் இயற்கையாக இருக்க வேண்டும் என்று சொல்ல வைக்கும் அளவிற்கு அருமை. பாடலாசிரியர் வைரமுத்து நிச்சயம் வாழ்த்துவார். 'என்னைப்போல சுகமான ஆளிருந்தா காமி' என்ற வரிகளுக்கு பதிலாக - இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொருவரையும் காட்டலாம்!.
& வேலாயி / குணசேகரன் / ஒன்பது ரூபாய் நோட்டு / பரத்வாஜ்
இதே படத்தில் இன்னொரு பாடலும் அசத்துகிறது. இந்தப் பாடல் முழுதும் வீசும் மண்ணின் மணத்தை அப்படியே எடுத்து உடலெங்கும் பூசிக் கொள்ளலாம்!. இரண்டாவது இடையூடில் வரும் மணிஓசைகளும், குழலும் இன்பம்.

9. உன்னாலே உன்னாலே / ஹரிணி, கார்த்திக், க்ருஷ்/ உன்னாலே உன்னாலே /ஹேரிஸ் ஜெயராஜ்
வழக்கமான ஹேரிஸ் ஜெயராஜ் பாடல் என்றாலும், கார்த்திக்கின் இனிமையான குரல் - கேட்பதற்கு நன்றாக உள்ளது. இரண்டாவது இடையூடில் கிடார் வாசிப்ப்பும், தொடர்ந்து கிடார் எப்படி ராப் செய்வதற்காக வழி அமைத்துக் கொடுக்கிறது என்பதை கேட்கவும் ரசிக்கும்படியாக உள்ளது. தொடரும் ஹரிணியின் குரலும் - ஒன்றுக்கொன்று பொருத்தமாக உருவாக்கப்பட்டது போன்ற அழகு.


10. ஏழேழு ஜென்மம் / முகமது அஸ்லம் / பரட்டை (எ) அழகுசுந்தரம்/யுவன் சங்கர் ராஜா
முகமது அஸ்லாமின் மாறுபாட்ட குரலில் தாயின் பெருமையைப் போற்றும் பாடல். இந்தப் பாடலிலும் பாடல் வரிகளை தெளிவாக கேட்டு, பாடல் தரும் சுகத்தை அனுபவிக்கலாம். தாலாட்டுப்பாடல் கேட்பது போன்று சுகமான அனுபவம் வரும். இடையூடுகளில் இசைக்கருவிகளும் சேர்ந்து இனிமையைத் தரும்.

------------------------------------------------------------------------------------
இந்தப் பத்தில் இடம் பெறாமல் போன, இதர ஐந்து பாடல்களையும், இங்கு தந்திருக்கிறேன். அவையும் உங்களுக்குப் பிடித்திருக்கலாம் - கேட்டுப்பாருங்கள்.

11. சஹானா பூக்கள் / சின்மயி, உதித் நாராயணன் / சிவாஜி / ஏ.ஆர்.ரஹ்மான்

12. மெதுவா மெதுவா / கார்த்திக், ஹரிணி / பிரிவோம் சந்திப்போம் / வித்யாசாகர்

13. இது என்ன மாயம் / சங்கர் மஹாதேவன், அல்கா யக்நிக் /ஓரம் போ/ GV பிரகாஷ்குமார்

14. உனக்குள் நானே / பாம்பே ஜெயஸ்ரீ / பச்சைக்கிளி முத்துச்சரம் / ஹேரிஸ் ஜெயராஜ்

15. பேசப் பேராசை / கார்த்திக், பவதாரிணி / நாளைய பொழுதும் உன்னோடு / ஸ்ரீகாந்த் தேவா---------------------------------------------------------------------------------------

சென்ற சில வருட டாப் டென் வரிசைகள்:
2003 முதல் 2006 வரை

23 comments:

Boston Bala said...

இது நம்ம ப(த்து)ட்டியல்... Tamil Film Songs - Best of 2007 Movie Music « Snap Judgment

jeevagv said...

வாவ் பாலா - பத்தெல்லாம் பத்தாதுன்னு மூணு பத்து போட்டிருக்கீங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஜீவா எங்கே சஹானா பாட்டைச் சொல்லவே இல்லையே-ன்னு ஏமாற்றமாப் பதிவ படிச்சிக்கிட்டே வந்தா...கடைசில லிஸ்டுல சேத்துட்டீங்களே! வாழ்க! :-)

காற்றின் மொழியே, விழியில் உன் விழியில் = ரெண்டுமே என் டாப் டென்னில் கூட அதே ரேங்க் தான்! :-)

வந்தியத்தேவன் said...

தீபாவளி படத்தில் இடம் பெற்ற விஜய் ஜேசுதாஸ் பாடிய காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் என்ற அற்புதமான பாடல் ஏன் உங்களின் காதுகளில் படவில்லை. 2007 ஜனவரியில் இந்தப் படம் வெளிவந்தது.

jeevagv said...

KRS:
/சஹானா பாட்டைச் சொல்லவே இல்லையே...//
ஹூம், சஹானாவுக்கு பின்னாலே, ஒரு க்ரேஸ் கூட்டம் இருக்கு போல!
உதித் நாரணயணன் பாடியிருப்பதால் - பின்னுக்குத் தள்ள வேண்டியதாற்று!

jeevagv said...

வந்தியத்தேவன்,
அந்த தீபாவளி - படப் படல் கேட்டிருக்கிறேன் - ஆனால் அது அவ்வளவு தாக்கத்தை என்னில் ஏற்படுத்தவில்லை. காரணம் யாதென யோசித்தால் - பாடகரின் பாவம் (bhavam) ஆக இருக்கலாம் எனத் தோன்றுகிறது - பாடகர் சோகப் பாடல் போல பாடுகிறார் - ஆனால் இசையோ மகிழ்ச்சியான கீதம் போல இருக்கிறது. (இரண்டாவது இடையூடைத் தவிர) இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரணகாக இருப்பதால் ரசிக்க இயலவில்லை!
இசையை மட்டும் வைத்துப்பார்த்தால் நல்ல அமைப்பு.

Anonymous said...

Nice Collection of vey melodious songs, Thanks.

jeevagv said...

டாப் டென் வரிசைப்படுத்தியுள்ள இதர பதிவர்கள்:

சுரேஷ்குமார்
கார்த்திக்

Anonymous said...

அலைகளின் ஓசை பாடல் மிகவும் நன்றாக உள்ளது.
Considering, how under-rated it is by others,
I am glad to see it on your list!

sury siva said...

சஹானா !

நீ சோகத்தில் இணைந்த மோகனம்.
தாமரை மொட்டின் மேல்
தனியாக பரிணமிக்கும் பனித்துளி.
உனைத்தொடின்
உதிர்ந்து விடுவாய்.
உனைக் கேட்டவரோ
உறக்கம் கண்டார்.

நல்ல இசையில் நீ நந்தவனம். எம்
கனவுகள் உனது ராஜ்ஜியம். இதயத்தின்
அறை ஒலிகள் உன் மூச்சு !

உதித்தும் ஹரனும் உனைப் பாடவில்லை.
துதிக்கிறார்கள்.

ஜீவாவின் இன்
பத்தில் உன் வரவு இல்லை.
பரவாயில்லை. ரசிகர் தம்
ஜீவனே நீ ஆன பின்னே உனக்
கேன் கவலை?

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

பி.கு. " நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கோங்கோ..ஆனா..காற்றின் மொழியே தான்
நம்பர் ஒன். " என்கிறாள் என் இல்லாள்.

jeevagv said...

வரிசை எண்களில் இருந்த தவறை சரி செய்து விட்டேன், இப்போது!

jeevagv said...
This comment has been removed by the author.
jeevagv said...

வாங்க ரசிகன், மெலடிகள் என்றும் இனிதே!

jeevagv said...

ஆம் ஜோ, அலைகளின் ஓசை அருமையான பாடல். ஜோ.ஸ்ரீதர் மீண்டும் காதல் படப் பாடலின் ட்யூனை நினைவு படுத்தினாலும் - இனிமயான பாடல். பாடகர் ஹரிசரணுக்கு இந்த வருடம் அருமையான வருடமும் கூட.
புலம் பெயர்ந்தவர்களின் ஜீவனின் குரலாக பாடல் ஒலிக்கிறது.

jeevagv said...

சுப்புரத்தினம் ஐயா, அப்படியா, துதிக்கிறார்களா!
:-)
உங்களின் பாதி வாக்காவது காற்றின் மொழிக்கு கிடைத்ததே!
வருகைக்கும் கவிதைப்படைப்புக்கும் மிக்க நன்றி - செல்வம் பெற்றேன்.

P.S. Suresh Kumar said...

jeeva - I think Parattai engira Azhaghusundaram music is by Guru Kiran (Kannada music composer)... This movie is a remake of the Kannada hit 'Jogi' and they used all the songs from the movie for which Guru Kiran is the composer.. anyways.. nice list

jeevagv said...

வருக சுரேஷ்,
அப்படியா, தங்கள் செய்தி புதிது எனக்கு.
இணையத்தில் நான் பார்த்த பல இடங்களில் யுவன் தான் இசை அமைப்பாளர் என்கிறார்கள். ஒருவேளே கன்னட படத்தின் ட்யூன்களை அப்படியே எடுத்துக்கொண்டு தமிழில் பதிவு செய்தது யுவனாக இருக்கலாம்.

//anyways.. nice list
//
Let me tell you that, you are my inspiration for the top tens every year ever since MouthShut.

Karthik S said...

Excellent list, Jeeva.

Suresh is right - Parattai has music by Gurukiran, recall seeing his name when the film was aired recently on TV.

Karthik

jeevagv said...

//Excellent list, Jeeva.
//
Thanks Karthik.

அப்படியா, குருகிரண் தானா.

Anonymous said...

அண்ணாச்சிமாரே / தங்கைமாரே புதுசா தமிழ் விடீயொ பக்கம் ஒன்னு
ஆரம்பித்து இருக்கேய்ன். கொஞ்சம் லின்க் பண்ணி ஆதரவு தரவேணும்.

பக்கம் பெயர் தமிழ்விடீயொ.org

முடிந்த அளவு பண்ணி இருக்கேன். இன்னும் நிறைய வேலை இருக்கு. Tamil Cinema Video

முடிஞ்சால் நீங்க இந்த பக்கம் போயீ பாருங்க தமிழ்விடீயொ.org .

உங்க எண்ணங்களை / விடீயொக்களை வகைபடுத்த இந்த பக்கத்தை பயன்படுத்துங்கள்

Recommend new Tamil video

Musings of an amateur writer said...

Thanx a lot Jeeva for your comments...Let us continue OUR good job forever....

Shriram

Unknown said...

'அம்முவாகிய நான்'படத்தில் வரும் 'உன்னைச் சரணடைந்தேன்'பாடல் 'ஹரீஷ்'& 'கல்யாணி' பாடியது...மிகவும் அருமையான பாடல்..
இந்தப்பட்டியலில் எதிர்பார்த்தேன்..விடுபட்டிருக்கிறதோ?

Unknown said...

superb songs

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP