உங்களால் "நாதஸ்"(அ) ஒத்து ஊத முடியுமா?
பிறந்த நாள் பார்ட்டிகளில் பத்து பலூன்கள் ஊதவே, முழி பிதுங்குது! நாதசுரத்தில் அவ்வளவு நேரம் காற்றை விட்டு எப்படித் தான் ஊதுகிறார்களோ? அதுவும் அவ்வளவு வாசித்தும், கடைசியில் மக்கள் கண்டு கொள்ளவே இல்லை என்றால்?
இருந்தும் நமக்கு மங்கலம் தங்குவதற்காகவே வாசிக்கும் அனைத்து நாதசுரக் கலைஞர்களுக்கும் நமது வந்தனங்கள்!
இசை குறித்த வலைப்பூ என்பதால் மங்கல இசையான, நாதசுரத்தில் இருந்தே தொடங்குவோம்! சென்ற பதிவில் திராச ஐயா, ஷேக் சின்ன மெளலானா அவர்களின் வாத்திய இசையைத் தந்திருந்தார்!
"நாதஸ்" என்று செல்லமாக அழைக்கப்பட்டது ஒரு திரைப்படத்தில்.
நாதஸ்வரம் "நாதஸ்" ஆனால், தவில் என்ன ஆகும்? :-)
இதிலிருந்தே தெரியவில்லையா, தவிலை அவ்வளவு சீக்கிரம் யாரும் அசைத்துப் பார்க்க முடியாது என்று! :-)
மற்ற பல வாத்தியம், இசைக் கருவிகளை, சூழ்நிலைக்கு ஏற்றவாறு எப்படியும் பயன்படுத்தலாம். ஆனால் நாதசுரமும், தவிலும் மட்டும், எப்போதும் மங்கல இசைக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்!
இது ஒன்றே போதும், இவ்விரு கருவிகளின் பெருமையைச் சொல்ல!
நாதசுரம் என்றால் என்ன? ஒத்து ஊதுதல்-ன்னா என்ன?
நான் சொல்வதைக் காட்டிலும், கீழே வீடியோவைப் பாருங்க!
மெளலியின் பிளைட்-172 என்ற நாடகம். அதில் என்னமாய் விளையாட்டா விளக்கறார் பாருங்க! :-)
1. இட நெருக்கடி அதிகமாகி வரும் இந்தக் காலத்தில், இதை எடுத்தேன் கவிழ்த்தேன் என்றெல்லாம் வாசிக்க முடியாது.
ஒலி பெருக்கி இல்லாமலேயே அரங்கத்தின் கோடியில் உள்ளவரும் கேட்கக் கூடிய வாத்தியம் இது.
இதுவே அதன் பலவீனமாகிப் போய் விட்டது இப்போது.
ஒரு சின்ன அறைக்குள் வாசித்தால், அவ்வளவு தான்! வந்தது வினை!
உடனே Noise Pollution என்று யாருச்சும் வழக்கு போட்டாலும் போட்டு விடுவார்கள்!
2. இதன் பயிற்சி மிகவும் கடினமானது. தனிமையில் கூடப் பயில முடியாது. சத்தமே ஊரைக் கூட்டி விடும். தப்பும் தவறுமாக பயிற்சியில் வாசித்தாலும், ஊருக்கே தெரிந்து விடும்! :-(
3. இது போதாதென்று பயிலும் மாணவ/மாணவிகள் விடும் மூச்சுக் காற்றை எண்ணிப் பாருங்கள்!
தில்லானா மோகனாம்பாள் படத்தில், சிக்கல் சண்முகசுந்தரம் சொல்வது போல், நாபிக் கமலத்தில் (தொப்புள்) இருந்து காற்றை இழுத்து, மேலே ஏற்றி, இழுத்துப் பிடித்து, ஊத வேண்டும். பல நாயனக்காரர்களின் கழுத்தைப் பாருங்கள். வீங்கி இருக்கும்!
நாதசுரத்துக்குப் போட்டியாக அண்மைக் காலங்களில் வந்தவை இரண்டு வாத்தியங்கள்
1. க்ளாரினெட்
2. சாக்ஸ் என்னும் சாக்ஸபோன்
இருப்பினும் மங்கல இசை என்ற இடத்தை, அவற்றால் இன்னும் பிடிக்க முடியவில்லை!
3. இன்னொரு வாத்தியம் - முகவீணை என்று பெயர். இது உருவில் சிறிய, குட்டி நாதசுரம்.
நாதசுரம் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியதா?
இல்லை ஆந்திரா, கர்னாடகம், இன்னும் கேரளத்தில் கூட வாசிக்கிறார்கள்!உலகில் தமிழர் இருக்கும் இடமெல்லாம் வாசிக்கிறார்கள்.
கோவில், கல்யாணம் - இதற்கு மட்டுமே நாதசுரம் என்று இருந்த நிலை மாறிவிட்டது! பல கச்சேரிகளில் வாசிப்பு காண முடிகிறது!
இந்தக் காலத் திரைப்படங்களில் கூட, இசை அமைப்பாளர்கள், இதைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.
பழனியில் தமிழக அரசின், ஒரு நாதசுரக் கல்லூரியே உள்ளது.
இன்னும் கீபோர்டில், நாதசுரம் வரவில்லை. அவ்வளவு தான்! :-)
நான் இந்த முறை சென்னை சென்றிருந்த போது, ஆழ்வார்கள் ஆராய்ச்சி மையத்தின் நண்பர் ஒருவர், ஒரு குட்டி எலெக்ட்ரானிக் (மின்னணு) கருவியைக் காண்பித்தார். பார்ப்பதற்கு ஏதோ பொம்மைக் கப்&சாசர் போல் இருந்தது. அதை எடுத்து நாதசுரத்தின் அடிப்பாகத்தில் பொருத்தினார் மனுசன்.
இப்ப ஊதினா, ஏதோ புல்லாங்குழல் ஊதுவது போல் மெல்லிதாய் வருகிறது நாத சப்தம்! ஆகா...அறிவியல் முன்னேற்றங்களை இது போன்று தொன்மையான இசை வளரப் பயன்படுத்தினால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்! முயற்சிகள் அங்கொன்று இங்கொன்றுமாக நடந்து வருவதாகச் சொன்னர் நண்பர்!
ஒரு காலத்தில், நாதசுரம்-தவில், சாதியின் பாற்பட்டும் இருந்தது.
சமூகத்தில் அதன் இசைக்கு மயங்கியவர்கள், அதனை இசைக்கும் கலைஞர்களுக்கு மதிப்பு அளிக்காமல் இருந்தார்கள்.
ஆனால் இந்தப் போக்கை வெட்டி வீழ்த்தி, நாதசுரக் கலைஞன் ஒரு ராஜாவைப் போல் உலா வர முடியும், அவனுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர்
TN ராஜரத்தினம் பிள்ளை.
அவரைப் போலவே நாதசுர இசையில் பெரும் புகழ் அடைந்தவர்கள் வெகு சிலரே! காருக்குறிச்சி அருணாச்சலம் இன்னொரு பெரும் மேதை.
இசுலாமிய மதத்தினரான ஷேக் சின்ன மெளலானா, இதைக் கற்க மிகவும் பாடுபட்டார். ஆனால் எவ்வளவுக்கு எவ்வளவு இடையூறுகளோ, அவ்வளவுக்கு அவ்வளவு வெற்றிகள்! இப்படி மதங்களை கடந்தது நாதசுர இசை!
பெண்களால், இப்படி "தம்" பிடித்து ஊத முடியுமா?
சேலும் பொன்னுத்தாயி செய்து காட்டினார். உலகமே வியந்தது!
நாதசுரம்-தவில் காம்பினேஷன் களை கட்டத் தொடங்கியது!
நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்-வலையப்பட்டி சுப்ரமணியம்,
இலங்கை மற்றும் சிங்கையிலும் பெரும் கலைஞர்கள் உள்ளனர். அவர்கள் பெயர்களையும் சொல்லி உதவுங்களேன்!
தில்லானா மோகனாம்பாள் திரைப்படம், மக்களிடையே நாதசுரத்திற்கு ஒரு sensation-ஐ உருவாக்கித் தந்தது. நாதசுரக் கலைஞர்கள் மற்ற எந்தக் கலைஞர்களுக்கும் குறைவானவர்கள் அல்ல என்ற ஒரு நல்ல நிலை உருவாகவும் தொடங்கியது.
சரி, முக்கியமான ஒரு கேள்விக்கு வருவோம்!
நம்மில் எத்தனை பேர், கல்யாணத்துக்குப் போனால், இந்த நாதசுர இசையைக் காது கொடுத்துக் கேட்போம்?
இப்போதெல்லாம் நல்ல சினிமாப் பாடல்களையும் நாதசுரத்தில் வாசிக்கிறார்கள். அப்போது கூட நாம் காது கொடுத்துக் கேட்கிறோமா?
சரி, இனி மேலாவது கேட்க, முயற்சி செய்யலாமா?
வாசிப்பு நன்றாக இருந்தால், ஒரு எட்டு போய், "நல்லா வாசிச்சீங்க" என்று சொல்லி விட்டு வரலாமா?
அண்மையில் சென்னையில், நாதசுரத்துக்கு என்றே தனி விழா ஒன்று நடைபெற்றது! ஈழத்து நாதசுரக் கலைஞர் முருகதாஸ் என்பவர், இதற்கு முயற்சிகள் மேற்கொண்டார்.
அது பற்றிய யோகன் அண்ணா/BBC பதிவு இங்கே!
42 comments:
ரவி,
நான் தனியாக அவர்களிடம் பேசி எனக்கு பிடித்த கிருதிகளை வாசிக்கச் செய்து, என்னாலான சன்மானமும் செய்திருக்கிறேன்.
//சரி, முக்கியமான ஒரு கேள்விக்கு வருவோம்!
நம்மில் எத்தனை பேர், கல்யாணத்துக்குப் போனால்,
இந்த நாதசுர இசையைக் காது கொடுத்துக் கேட்போம்?//
நம்மூட்டுக் கல்யாணத்துலே நான் (மட்டும்) நாதசுரக்காருக்குப் பக்கத்துலேயே
இருந்து என்னக்கிஷ்டப்பட்ட பாட்டையெல்லாம் வாசிக்கச் சொல்லிக் கேட்டிருக்கேன்.
எங்காளுங்களே என்னை 'வியர்டா' பார்த்தாங்கப்பா(-:
இப்பவும் நம்ம வீட்டுலே ஒரு நாள் கிழமைன்னா நாதஸ்வரம் சிடி போட்டுருவோம்.
நிறைய கலெக்ஷன் இருக்கு.
வாசிப்பு நன்றாக இருந்தால், ஒரு எட்டு போய், "நல்லா வாசிச்சீங்க" என்று சொல்லி விட்டு வரலாமா?
ஒரு தடவை அப்படி சொன்னேன் அதோடில்லாமல் வீடியோவையும் எடுத்தேன்,அதற்குப்பிறகு அவர் முகம் மட்டும் அல்ல வாசித்த வாசிப்பும் "பிரகாசம்" தான்.
பல கல்யாணங்களில் இவர்களை கவனிப்பதில்லை என்பது கண்கூடு.
ஒரு கல்யாணத்தில நானும் என்னோட அப்பாவும் இவங்க பக்கத்தில உக்காந்துகிட்டோம். மணமக்கள் நலங்கு விளையாட்டுகள் நடந்து கொண்டிருக்க, எங்கப்பா வித்வான்கிட்ட அடுத்து மகுடி வாசிங்க சொல்ல, அவரும் நதஸ்வரத்தில் வாசிக்க எல்லாரோட கவனவமும் அவர்பக்கம். ரொம்ப ஜோர இருந்தது.
இதோ போல் அறுபதாம் கல்யாணத்திலும் (சஷ்டி பூர்த்தி) இவங்களுக்குன்னு ஒரு நல்ல இடமிருக்கும்.
ரவி சமீபத்தில் பாண்டிச்சேரியில் என்னுடைய உறவினர் திருமணத்திற்கு சென்றபோது. என் குடும்பத்தினர் அனைவரும் நாதஸ்வர கலைஞர்களின் அருகே அமர்ந்து ரசித்து,விரும்பிய பாடல்களை கேட்டு இன்புற்றோம்.முடிவில் அவர்களைப் பாராட்டி சன்மானமும் கொடுத்தோம்
கொஞ்சும் சலங்கை என்ற படத்திலும் நாதஸ்வரத்துக்கு மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது.திரு. அருணாசலம் அவர்கள் வாசித்து சிறப்பித்துள்ளார்கள்
இசை இன்பம் நிஜ இன்பம்
நல்ல மங்களகரமான ஆரம்பம்.
//வாசிப்பு நன்றாக இருந்தால், ஒரு எட்டு போய், "நல்லா வாசிச்சீங்க" என்று சொல்லி விட்டு வரலாமா?//
ஒரு முறை எங்க வீட்டு கல்யாணத்தின் போது சொல்லியிருக்கிறேன். இனிமேல் ஒவ்வொரு முறையும் சொல்ல முயற்சி செய்யணும்
//நல்ல மங்களகரமான ஆரம்பம்.//
ரிப்ப்பீட்டே :)
சென்ஷி
//மதுரையம்பதி said...
ரவி,
நான் தனியாக அவர்களிடம் பேசி எனக்கு பிடித்த கிருதிகளை வாசிக்கச் செய்து, என்னாலான சன்மானமும் செய்திருக்கிறேன்.//
நல்ல ஊக்குவிப்பு மெளலி சார்.
பொதுவா நாம் நேயர் விருப்பம் கேட்டாலே அவர்கள் ரொம்ப மகிழ்ச்சியாகி விடுவதைப் பார்த்துள்ளேன்!
//துளசி கோபால் said...
என்னக்கிஷ்டப்பட்ட பாட்டையெல்லாம் வாசிக்கச் சொல்லிக் கேட்டிருக்கேன்.
எங்காளுங்களே என்னை 'வியர்டா' பார்த்தாங்கப்பா(-://
அட, நீங்க ரசிக மணி டீச்சர்.
உங்கள வியர்டா பாத்தவங்க தான் வியர்டூ!!:-)
//இப்பவும் நம்ம வீட்டுலே ஒரு நாள் கிழமைன்னா நாதஸ்வரம் சிடி போட்டுருவோம்//
ஆமாம் டீச்சர்...ஒரு நல்ல நாளில் இதைக் கேட்கலைன்னா, ஒரு திருப்தியான ஃபீலிங்கே வராது!
//வடுவூர் குமார் said...
அதோடில்லாமல் வீடியோவையும் எடுத்தேன்,அதற்குப்பிறகு அவர் முகம் மட்டும் அல்ல வாசித்த வாசிப்பும் "பிரகாசம்" தான்.//
ஹிஹி
உங்க ஊக்கம் ஏற்படுத்திய தாக்கம், குமார் சார்!
இன்னமும் கல்யாணம் கோயில்களில் நாதஸ்வரம் வாசிக்கும் வழக்கம் இருப்பதால்தான் அந்தக்கலை உயிர்பெற்றூ வாழ்ந்து கொண்டிருக்கிறது.
குழலூதி மனமெல்லாம் கொள்ளைகொண்ட பாடலை ஒரு கல்யாணத்தில் உருகி நாதஸ்வரத்தில் வாசித்துக் கொண்டிருந்த நாதஸ்வரக்காரரை கல்யாண மந்திரம் சொல்லவேண்டுமென பாதியில் மென்னைப்பிடித்து விட்டனர். கஷ்டமாயிருந்தது அப்போது எனக்கு.
காதுகொடுத்துக்கேட்கிறோம் ஏனெனில் இசை தானே வந்து செவியில் பாய்ந்துவிடும் ஆனால் ஓரிருமுறைதவிர,எல்லாகல்யாணங்களிலும் அவர்களை அருகில் சென்று பாராட்டியதில்லைஅதற்குப் பிரயத்தனப்பட்டதுமில்லை..பாராட்டத்
தவறிவிட்டவர்களின் பட்டியலில் புகைவண்டி ஓட்டுனரும் உண்டு.
//சிவமுருகன் said...
எங்கப்பா வித்வான்கிட்ட அடுத்து மகுடி வாசிங்க சொல்ல, அவரும் நதஸ்வரத்தில் வாசிக்க எல்லாரோட கவனவமும் அவர்பக்கம். ரொம்ப ஜோர இருந்தது.//
சிவா, இது நல்ல ஐடியா தான்.
முகூர்த்தம் முடிந்ததும் வித்வான்களுக்கு இடையிடைத் தடங்கல் அதிகம் இருக்காது. அதுவும் நலங்கின் போது. அப்ப நேயர் விருப்பம் கேட்கலாம்! :-)
//தி. ரா. ச.(T.R.C.) said...
முடிவில் அவர்களைப் பாராட்டி சன்மானமும் கொடுத்தோம்//
குருவே, வாங்க!
நல்ல முயற்சி திராச ஐயா.
முதலில் விருப்பம் என்று கேட்டாலே நல்ல கலைஞர்கள் குளிர்ந்து விடுகிறார்கள்!
அதுக்கப்புறம் சன்மானம் என்றால் சொல்லவும் வேண்டுமோ?
//கொஞ்சும் சலங்கை என்ற படத்திலும் நாதஸ்வரத்துக்கு மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது//
சிங்கார வேலனே தேவா படம் தானே சார்?
//ப்ரசன்னா said...
நல்ல மங்களகரமான ஆரம்பம்.
...
இனிமேல் ஒவ்வொரு முறையும் சொல்ல முயற்சி செய்யணும்//
கட்டாயம் செய்யுங்க ப்ரசன்னா...
இது ஒரு நல்ல ஊக்கமாய் அமையும்!
நன்றி
சென்ஷி said...
//நல்ல மங்களகரமான ஆரம்பம்.//
ரிப்ப்பீட்டே :)//
நன்றி சென்ஷி
//ஷைலஜா said...
இன்னமும் கல்யாணம் கோயில்களில் நாதஸ்வரம் வாசிக்கும் வழக்கம் இருப்பதால்தான் அந்தக்கலை உயிர்பெற்றூ வாழ்ந்து கொண்டிருக்கிறது.//
இது உண்மை தான் ஷைலஜா!
இது போல் ஒரு அமைப்பு ஏற்படுத்திக் கொடுக்கலீன்னா நாளடைவில் மறையும் தான் - நாதசுரத்துக்கு இட ஒதுக்கீடு தேவை! :-)
// கஷ்டமாயிருந்தது அப்போது எனக்கு//
இது professional hazard :-)
ஆனா நலங்கின் போது அவ்வளவா குறுக்கீடுகள் இராது!
//பாராட்டத்
தவறிவிட்டவர்களின் பட்டியலில் புகைவண்டி ஓட்டுனரும் உண்டு//
விமானி? :-)
பாராட்டுவது ஒருபுறம் இருக்கட்டும், ரவி.
பொது நிகழ்ச்சிகளில் இவர்கள் படும் பாட்டைச் சொல்லி முடியாது.
ஓரமாக நிற்க வேண்டும்.
ஊதச் சொன்ன போதெல்லாம் ஊத வேண்டும்.
மற்றவர்கள் கேட்கும் எல்லாப் பாடல்களையும் ஊத வேண்டும்.
சன்மானமும் குறைவு.
நாதசுரம் என் வாழ்க்கையில் ஒரு தனியிடம் பிடித்திருக்கிறது.
அது பற்றி பின்னர் சொல்லுகிறேன்.
முதலில் இவர்களது கலைக்கு மரியாதை கொடுக்கக் கற்றுக் கொள்வோம்.
நன்றாகத் தொடங்கி இருக்கிறீர்கள்.
வாழ்த்துகள்!
இசை இன்பம் - புது வலைப்பதிவு முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
ரவி,
அருமையான பதிவு. எங்கள் ஊர் முருகன் ஆலயத்தில் சிறு வயது முதல் நாதஸ்வரம்-தவில் கச்சேரிகள் பார்த்து வளர்ந்ததனால், இன்றும் இங்கே நாதஸ்வர-தவில் கச்சேரிகள் என்றால் தவறவிடாது சென்று விடுவேன்.
ஈழத்தில் மிகவும் புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் திரு.பத்மநாதன் அவர்கள். அவரின் நாதஸ்வர இசைக்கு மயங்கி அன்றைய இலங்கையின் ஜனாதிபதி ஜெயவர்த்தனே அதிஉயர் கலை விருதை அவருக்கு அளித்துக் கெளரவித்தார்.
ஈழத்தில் இக் கலையை ஒரு குறிப்பிட்ட சாதியினரே தொடர்ந்து வருகிறார்கள் என்பது வருத்தமானது. விரைவில் இந்த நிலை மாறுமென்று எதிர்பார்ப்போம்.
மங்கள இசை என்று சொல்லியே கொஞ்சம் ஓரம் கட்டி விட்டோமோ என்ற ஐயம் எனக்கு உண்டு. ஒருமுறை வீட்டில் நாதஸ்வரம்/தவில் வாசிப்பை கேட்டுக்கொண்டிருந்தோம். அந்தப்பக்கம் வந்த நண்பர் ஒருவர் "என்ன இப்படி கல்யாண மண்டபத்தில் கேட்பதெல்லாம் இங்க வீட்டிலே கேட்கறீங்க..." என்று நம்மை வியர்டு போல் பார்த்தாவாறே கேட்டார்!
மற்ற இசைக் கருவிகளுக்குள்ள அங்கீகரத்தில் ஓரளவு கூட நாதஸ்வரத்திற்கு கிடைப்பதில்லைதான்.
நாதஸ்வரத்திற்கு முதன்மை கொடுத்ததற்கு நன்றிகள்!
சூப்பர் பதிவு!!
இதே மாதிரி இன்னும் பல பதிவுகளை இந்த வலைப்பூ காண வாழ்த்துக்கள்!! :-)
ரவி நாதஸ்வரம் இறைவனுக்காகவே ஏற்பட்ட வாத்தியம்போல இருக்கிறது.
இந்த மங்கல வாத்தியம் இல்லாத கோவில் நிகழ்ச்சிகளே கிடையாது.காலை பூபாளத்திலிருந்து இரவு நீலாம்பரிவரை அவர்கள்தான் குத்தகை.
ஊர்வலம் வரும்போது மல்லாரி வாசித்தால் ஆடாத மனமும் உண்டோ
சமீபத்தில் மறைந்த கிருஷ்னகான சபையின் காரியதரிசி திரு.யஞ்யராமன் அவர்கள் வருடா வருடம் தைமாதத்தில் நாதஸ்வர விழா நடத்தி கலைஞர்களை மரியாதை செலுத்தி வந்தார்
//VSK said...
ஓரமாக நிற்க வேண்டும்.
ஊதச் சொன்ன போதெல்லாம் ஊத வேண்டும்.சன்மானமும் குறைவு//
Professional Hassle என்பது போல், இந்த ஓரமாய் நிற்பது ஆகி விட்டது SK. ஆனால் சுவாமி புறப்பாட்டின் போது, இவர்கள் தான் அனைவரின் முன்னும் செல்லுவது!
ஆனால்...இதை வேறு மாதிரி ஈடு கட்டி அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்!
//நாதசுரம் என் வாழ்க்கையில் ஒரு தனியிடம் பிடித்திருக்கிறது.
அது பற்றி பின்னர் சொல்லுகிறேன்//
ஆகா படிக்கக் காத்துள்ளேன் SK.
நன்றி.
//சேதுக்கரசி said...
இசை இன்பம் - புது வலைப்பதிவு முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
//
நன்றி சேதுக்கரசி.
அப்பப்ப, இசையை இன்னும் எப்படி இன்பமாக்கலாம் என்று ஐடியா கொடுங்க! :-)
//வெற்றி said...
இன்றும் இங்கே நாதஸ்வர-தவில் கச்சேரிகள் என்றால் தவறவிடாது சென்று விடுவேன்//
வாங்க வெற்றி!
ஈழத்தில் இசை வளர்ச்சிக்கு இருக்கும் ஆதரவு கண்டு நான் பல முறை மலைத்ததுண்டு. அதுவும் விபுலானந்த அடிகளின் பண் ஆராய்ச்சி, அதி அற்புதம்! ஈழத்தில் நாதசுரம் பற்றி அவர் கட்டுரை ஒன்று மிகப் பிரபலம். தேடிப் பதிவிடுகிறேன்!
//ஈழத்தில் மிகவும் புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் திரு.பத்மநாதன் அவர்கள்.//
கேள்விப்பட்டுள்ளேன் வெற்றி.
சிங்களவருக்கும் நாதசுர இசையில் ஆர்வம் உண்டா? அவர்கள் விழாக்களில் உண்டா?
//ஜீவா (Jeeva Venkataraman) said...
"என்ன இப்படி கல்யாண மண்டபத்தில் கேட்பதெல்லாம் இங்க வீட்டிலே கேட்கறீங்க..." என்று நம்மை வியர்டு போல் பார்த்தாவாறே கேட்டார்!//
:-))
வாங்க ஜீவா.
ஓ, இதுவும் வியர்டு பட்டியலில் சேர்ந்து விட்டதா?
பெரும் ஒலி (சத்தம்) தான் காரணம் என்று நினைக்கிறேன். மத்தபடி முகவீணை வாசிச்சா, யாரும் எதுவும் கேட்கறதில்லை! :-)
//நாதஸ்வரத்திற்கு முதன்மை கொடுத்ததற்கு நன்றிகள்!//
இன்னொரு முறையும் நாதசுரம் பதிவில் வரும்! மல்லாரி வாசிப்பாக!
//CVR said...
சூப்பர் பதிவு!!
இதே மாதிரி இன்னும் பல பதிவுகளை இந்த வலைப்பூ காண வாழ்த்துக்கள்!! :-) //
நன்றி CVR.
உங்களுக்கு இசைக் கருவிகளில் எது மிகவும் பிடிக்கும்?
//தி. ரா. ச.(T.R.C.) said...
ரவி நாதஸ்வரம் இறைவனுக்காகவே ஏற்பட்ட வாத்தியம்போல இருக்கிறது.
காலை பூபாளத்திலிருந்து இரவு நீலாம்பரிவரை அவர்கள்தான் குத்தகை.//
ஆமாம் திராச ஐயா.
அந்தக் கலைஞர்களின் வாழ்க்கை, கோவிலோடு மிக நெருங்கிய தொடர்பு, அர்ச்சகர்களை அடுத்து!
//சமீபத்தில் மறைந்த கிருஷ்னகான சபையின் காரியதரிசி திரு.யஞ்யராமன் அவர்கள் வருடா வருடம் தைமாதத்தில் நாதஸ்வர விழா நடத்தி கலைஞர்களை மரியாதை செலுத்தி வந்தார்//
ஆகா, மிக நல்ல சேவை!
இது தொடர்ந்து செய்ய கிருஷ்ண கான சபை முன் வர வேண்டும்.
தமிழிசை மன்றம் நாதசுர விழா ஏதாவது நடத்துகிறதா?
ரொம்ப சரிங்க...எங்க ஊரிலெல்லாம் முன்னாடி விசேஷஙகளில் நாதஸ்வரத்தைக் கேட்பதற்கென்றே கூட்டம் வரும். இப்போலாம் மாறிவிட்டது.சில விஷேசங்களில் இப்போது சத்தம் என்பதால் வெளியே உட்கார்ந்து வாசிக்க சொல்கிறார்கள்.
ஈழத்தில் எனக்குத் தெரிந்த தவில் வித்வான் - யாழ்ப்பாணம் கணேசன்.
(ஏ.கே.சி அய்யா க்ளாரினெட் இல்ல?)
In 'Unnal Mudiyum thambi' movie, Manorama's husband (Kamal's brother) used to play Nadaswaram and there was a touching scene in which he used to convey his feelings through Nadaswaram (that character cannot speak)
உங்கள் பதிவு என் நெஞ்சைத் தொட்டது. இலங்கைத் தமிழர்கள் நாதஸ்வரம்-தவிலை நேசிப்பது போல வேறு எந்த வாத்தியத்தையும் நேசிப்பதில்லை. இந்து மதத்தை சார்ந்தவர்கள் மாத்திரமில்லை. கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் தங்கள் திருமணங்களில் நாதஸ்வரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததை பார்த்திருக்கிறேன். உதாரண்மாக என் மகனின் திருமணம் கனடாவில் நடந்தபோது என் சம்பந்தி (கத்தோலிக்க கிறிஸ்தவர்) நாதஸ்வரக் கச்சேரி நிச்சயமாக இருக்க வேண்டுமென்று விரும்பி கேட்டுக்கொள்ள, நான் அவ்வாறே ஒழுங்கு செய்தேன். காரணம் அவரது (கிறிஸ்தவ முறையிலான)திருமணத்தின் போதும் நாதஸ்வரக் கச்சேரி சிறப்பாக நடந்ததாம்.
இலங்கையின் பிரபல நாதஸ்வர வித்வான்கள் - கோண்டாவில் பாலகிருஷ்ணன், அளவெட்டி பத்மநாதன், கானமூர்த்தி - பஞ்சமூர்த்தி சகோதர்கள், சாவகச்சேரி பஞ்சாபிகேசன்,
பி. எஸ். ஆறுமுகம் பிள்ளை போன்றோர்,
தவில் வித்வான்கள் - தவில் மேதை தட்சணாமூர்த்தி, நாச்சிமார்கோவிலடி கணேஷன், இணுவில் சின்னராசா, புண்ணியமூர்த்தி, கைதடி பழனி, குமரகுரு இப்படி பலரைக் குறிப்பிடலாம்.
என் சின்ன வயதில் இருந்தே எங்கள் கோயில் திருவிழாக்ககளில் இந்தியாவிலிருந்து தருவிக்கப்படும் பிரபல நாதஸ்வர, தவில் வித்வான்களின் கச்சேரிகளை நேரில் கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
திருவாவடுதுறை இராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாசலம், குளிக்கரை பிச்சையப்பா பிள்ளை, ஷேக் சின்ன மெளலானா, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், தவில் வித்வான்கள் முத்துவீரு பிள்ளை, ராகவன் பிள்ளை, நீடாமங்கலம் சண்முகசுந்தரம், லயஞான குபேர பூபதி இணுவில் தட்சணமூர்த்தி இவர்களெல்லாம் அக்காலத்தில் எங்கள் ஆலயங்களில் வாசித்தவர்கள்.
அவர்களின் வாசிப்பை நினைக்கவே நெஞ்சம் சிலிர்க்கின்றது.
தமிழ்னாடு காங்கிரஸ் கட்சிக்காராங்க பலர் இருக்காங்க. அதுவும் சோனியா ராகத்தில் வாசிச்சா ரெம்ப ஜோரா ஒத்து ஊதுவாங்க.
ரவி!
"ஒத்து" ஊதவும் தெரியாது, ஒத்தைப் பார்த்ததும் இல்லை. எங்கள்
ஈழத்தில் என் காலத்தில் ஒத்துடன், நாதசுரம் வாசிக்கும் பழக்கம்
இருந்ததில்லை.தில்லானா மோகனாம்பாளில் இதென்ன? 3 நாதசுரம் எனக் கேட்டபோதே பெரியவர் ஒருவர்,அது ஒத்து என்றார்.
இன்றுவரை கச்சேரிகளை பக்கத்தில் இருந்து ரசிப்பேன். வித்துவான்களுடன் அளவளாவுவேன். அன்றைய ஈழத்தில் பருத்துறை,வல்வெட்டித்துறை, ஊர்காவற்றுறை போன்ற துறைமுக
நகரங்களை அண்டிய ஊர்க்கோவில் திருவிழாக்களுக்கு ,இந்தியாவில் இருந்து பாய்மரக்கப்பல்களில் வித்துவான்கள் வந்து
வாசித்துச் சென்றதாக வீட்டில் பெரியவர்கள் கூறியுள்ளார்கள்.
இலங்கையில் சிங்கள மக்களுக்கு நாதசுரத்துடன் தொடர்பில்லை.எனினும் இந்த வாசிப்பை சிலர் ஓரத்தில் நின்று ரசித்ததைக் கண்டுள்ளேன்.
அவர்கள் கண்டிய நடனத்துக்கு செனாய் போன்ற ஓர் வாத்தியம்
வாசிக்கும் பழக்கம் உண்டு.
ஈழத்தில் பல வித்துவான்கள் இருந்துள்ளார்கள்.இருக்கிறார்கள். தவிலுக்கு தெட்சணாமூர்த்தி உலக தவில் வித்துவான் எனப் புகழப் பெற்றவர். அத்துடன் வலங்கைமான் சண்முகசுந்தரம் ஈழத்தவரே! கைதடி பழனி, நாச்சிமார் கோவிலடி கணேசன்,கோண்டாவில் சின்னராசா...மறக்க முடியாத வித்துவான்கள்.
நாதசுரமெனில் கோவிந்தசாமி,பாலகிருஸ்ணன்,பத்மநாதன்,பஞ்சாபிஷேகன் எனப் பட்டியல் நீளும், தற்போது கானமூர்த்தி,கேதீஸ்வரன் உலக அரங்குகளில் வாசிக்கிறார்கள்.
இக்கலைஞர்களுக்கு உரிய மதிப்பை நாம் கொடுக்கத் தவறுகிறோம். என்பதே என் அபிப்பிராயம்.
இனிவரும் இளைய சமுதாயம் இதன் இனிமை,மகிமை அறிந்து போற்றுவார்கள் என நம்புவோம்.
மேலும் பல விபரங்கள் குமரனின் கூடல் பதிவில் ஈழத்தில் இசைவளர்சியில் நாதசுர தவில் கலைஞர்கள் பங்கு எனும் ,இணையத்தில் என் முதல் கட்டுரையில் தொகுத்துள்ளேன்.
08/03/2006 ல் பதிவிட்டது.
http://koodal1.blogspot.com/2006/03/156.html
//Dubukku said...
(ஏ.கே.சி அய்யா க்ளாரினெட் இல்ல?) //
தலைவா...ரொம்ப சாரி...இந்தப் பின்னூட்டம் நான் publish செய்யாததால் எப்படியோ மிஸ்-ஆகி விட்டது!
ஏ.கே.சி அய்யா க்ளாரினெட் சக்ரவர்த்தி என்று பட்டம் வாங்கிப் புகழ் பெற்றாலும், நாதசுரக் கச்சேரிகளும்/காசெட்டுகளும் நிறைய செய்துள்ளார். அவர் துவக்கம் நாதஸ்ஸில் இருந்து தான் :-)
Inreco அவர் நாதசுர சிடி வெளியிட்டுள்ளது. AKP மற்றும் சிவகுருநாதன் தவிலுடன் சூப்பரா இருக்கும்!
//Anonymous said...
In 'Unnal Mudiyum thambi' movie, Manorama's husband (Kamal's brother) used to play Nadaswaram and there was a touching scene//
ஆமாங்க அனானி
கமல் வீட்டை விட்டு வெளியேறும் போது ரகுபதி ராகவ ராஜா ராம் - நாதசுரத்தில் வாசிப்பார்.
//K.S.Balachandran said...
உதாரண்மாக என் மகனின் திருமணம் கனடாவில் நடந்தபோது என் சம்பந்தி (கத்தோலிக்க கிறிஸ்தவர்) நாதஸ்வரக் கச்சேரி நிச்சயமாக இருக்க வேண்டுமென்று விரும்பி கேட்டுக்கொள்ள//
ஆகா...எவ்வளவு உயர்ந்த விடயம்!
நன்றி பாலச்சந்திரன் சார்!
பாருங்க ஷேக் சின்ன மெளலானா கூட இதில் வந்து விடுகிறார்!
இசை இப்படி அனைத்து மதத்தையும் இசைக்கிறது!
//
இலங்கையின் பிரபல நாதஸ்வர வித்வான்கள் .....
கானமூர்த்தி - பஞ்சமூர்த்தி சகோதர்கள், சாவகச்சேரி பஞ்சாபிகேசன்//
கானமூர்த்தி-பஞ்சமூர்த்தி சகோதரர்கள் கேள்விப்பட்டுளேன் ஐயா.
அதே போல் யாழ்ப்பாணம் கணேசன் அவர்கள்.
//...இவர்களெல்லாம் அக்காலத்தில் எங்கள் ஆலயங்களில் வாசித்தவர்கள்.
அவர்களின் வாசிப்பை நினைக்கவே நெஞ்சம் சிலிர்க்கின்றது//
ஆகா..
அத்தனை பேரையும் மறவாது பட்டியல் இட்டு விட்டீர்களே!
அடியேன் பதிவு பெரும் பேறு பெற்றது...இந்த மாமேதைகளின் திருப்பெயர் ஒலிக்க!
நன்றி பாலச்சந்திரன் சார்!
ஈழத்து இசைப்பணி மேல் எனக்கு அதீத ஈடுபாடு! அதுவும் விபுலானந்த அடிகளாரின் முயற்சிகளில். அவரைப் பற்றிய கட்டுரை இங்கு இட வேண்டும் என்றும் ஆசை.
தங்களை அவசியம் கலந்தாலோசிக்கிறேன்!
//Anonymous said...
அதுவும் சோனியா ராகத்தில் வாசிச்சா ரெம்ப ஜோரா ஒத்து ஊதுவாங்க//
:-)
அட ஒத்து ஊதறதே, மெயின் நாதசுரம், சுருதியோடு எப்பவும் சேர்ந்தே இருக்க உதவித் தான்.
அதனால் ஒத்தும் பயனுள்ள கருவி தானுங்க!
//ரவி!
"ஒத்து" ஊதவும் தெரியாது, ஒத்தைப் பார்த்ததும் இல்லை. எங்கள்
ஈழத்தில் என் காலத்தில் ஒத்துடன், நாதசுரம் வாசிக்கும் பழக்கம்
இருந்ததில்லை//
யோகன் அண்ணா
நாதசுரத்திற்கு சுருதி கருவியாக விளங்குவது தான் ஒத்து.
இதிலிருந்து ஆதார சுருதி மட்டும் தான் வரும். இப்போதெல்லாம் சுருதிப்பெட்டி தான் பயன்படுத்துகிறார்கள்.
//தவிலுக்கு தெட்சணாமூர்த்தி உலக தவில் வித்துவான் எனப் புகழப் பெற்றவர். அத்துடன் வலங்கைமான் சண்முகசுந்தரம் ஈழத்தவரே!
ஆகா...வலங்கைமான் என்றவுடன் நான் கும்பகோணம் அருகில் உள்ள வலங்கைமான் என்று தான் இது வரை எண்ணியிருந்தேன்...தலைவர் ஒங்க ஊரா! அருமை!
//மேலும் பல விபரங்கள் குமரனின் கூடல் பதிவில் ஈழத்தில் இசைவளர்சியில் நாதசுர தவில் கலைஞர்கள் பங்கு எனும் ,இணையத்தில் என் முதல் கட்டுரையில் தொகுத்துள்ளேன்.//
அந்தக் கட்டுரையை விரும்பிப் படித்துள்ளேன் அண்ணா...
அப்ப நான் ரொம்ப புதுசு...அதைப் படித்தவுடன் தான் உங்க இசை ஆர்வம் அறிந்தேன்...
நான் பதிவு போடத் துவங்கியதுமே, தியாகராஜரின் கீர்த்தனை இன்பம் - பொருளுடன் - விரும்பிக் கேட்டார்கள் குமரன், ஜிரா போன்றோர். உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றும் சொன்னார்கள்!
யோகன்,
எங்கள் காலத்தில் 60களில் யாழ்ப்பாணத்தில் "ஒத்து" இருந்தது. நாதஸ்வரத்தின் ஊதுகின்ற பகுதியின்மேல் துண்டைப் போட்டு முடிக்கொண்டு அதில் வாய் வைத்து
ஊதுவார்கள். "ம்" என்ற சத்தம் வந்து கொண்டிருக்கும். ஒலி வெளியில் வராததாலோ என்னவோ அதை "ஊமைக்குழல்" என்பார்கள். இது சுருதிப்பெட்டி வருவதற்கு முந்திய காலம்.
"அண்ணை றைற் "அண்ணா!
உங்கள் காலத்தில் நான் மி்கச்சிறுவன்! அதனால் இந்த ஒத்தைக் காணக்கிடைக்கவில்லை. ஆனால் ஊமைக் குழல் எனும் சொல் கேள்விப்பட்டுள்ளேன்.
தங்களுக்கு நேரமி்ருந்தால் ;குமரனின் கூடல் தளத்தில் நான் எழுதிய
"ஈழத்தில் இசைவளர்ச்சியில் நாதசுர தவில் கலைஞர்களின் பங்கு" எனும்
கட்டுரையை வாசித்துக் கருத்துக் கூற வேண்டுனமென அன்புடன்
கேட்டுக் கொள்கிறேன்.
அனானியும் நீங்களும் குறிப்பிட்ட "உன்னால் முடியும் தம்பி" படத்தில் இடம்பெற்ற அந்த உருக்கமான கட்டம் இந்த இணைப்பில் இருக்கிறது.
http://www.youtube.com/watch?v=NPASbo_qQDY
என் அப்பா ஒரு நாதஸ்வர கலைஞன்....
இதை உங்கள் BLOGSPOT-ல் பதிவு செய்தமைக்கு எனது வாழ்த்துகளும் நன்றிகளும்....
Post a Comment