Wednesday, June 27, 2007

Nothing But Wind...புல்லாங்குழல்!

ஊதாங்கோல்-னு அடுப்பங்கரையில் ஊதுவார்கள், ஒரு காலத்தில்! பாத்திருக்கீங்களா? அதைப் பார்க்கும் போதெல்லாம் "புல்லாங்கோல்" தான் ஞாபகத்துக்கு வரும் எனக்கு!
இப்படி அடுப்படியில் உட்கார்ந்து கொண்டு ஊதி, நெருப்பு வளர்க்கிறார்களே!
அதுக்குப் பதில் புல்லாங்குழலில் ஊதினா இசைக்கு இசையும் ஆச்சு, நெருப்புக்கு நெருப்பும் ஆச்சு! - என்று கேட்டு அத்தையிடம் உதை வாங்கிய காலமும் நினைவுக்கு வருகிறது! :-)

பாம்பு மகுடிக்கு மயங்கும் சரி - மனுசன் எதுக்கு மயங்குவான்?
நீங்களே கேட்டுப் பாருங்களேன்...இந்தப் பாட்டின் துவக்க இசையை....



பூவே செம்பூவே உன் வாசம் வரும்! - சொல்லத் துடிக்குது மனசு படத்தில் இசை ஞானி இளையராஜா தரும் மெலடி!



மெலடி என்றாலே அது புல்லாங்குழல் தானா?
குழல் இனிது யாழ் இனிது என்று திருக்குறள் சொல்லும். அதில் யாழ் போய் விட்டது! குழல் மட்டும் தான் மிஞ்சி உள்ளது!
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே என்ற பாட்டு எவ்வளவு பிரபலம்! அது என்ன அந்தப் புல்லாங்குழல் இசையில் அப்படி ஒரு மாயம்?


மாயக் கண்ணன் கையில் கூட அது தான்! கோபிகைகள் எல்லாரும் மயங்கியது கண்ணனிடத்திலா, புல்லாங்குழல் இசையிலா?
இவ்வளவு பெருமை பெற்றதா இந்தப் புல்லாங்கோலு?

உலகின் முதல் இசைக்கருவி எது தெரியுமா? - சாட்சாத் இந்தப் புல்லாங்குழல் தான். ஒரு ஆதிவாசி...முதல் மனிதன்...புல்லாங்குழலை எப்படிக் கண்டு பிடிக்கிறான் என்று காட்டுகிறார்கள்.
காட்டுத் தீயில் ஒரு மூங்கில் செடி மட்டும் தப்பிக்கிறது...ஒரு வண்டு அந்த மூங்கில் தண்டில் துளை போடுகிறது!
எங்கிருந்தோ வீசும் காற்று, துளையில் புகுந்து செல்ல
...ஊஊஊஊஉஉஉஉம் என்கிற நாதம்...புல்லாங்குழலின் தோற்றம்!

புல்லாங்குழல் இந்தியக் கருவியா இல்லை மேனாட்டுக் கருவியா என்று தனித்தனியா ஆராய்ச்சி எல்லாம் செய்ய முடியாத அளவுக்கு எல்லாப் பண்பாட்டிலும் அது பின்னிக் கிடக்கிறது!
மகாபாரதம் நிகழ்ந்தது 2000 BC என்று மிக அண்மைக் காலக் கணிப்பாய் நிறுவினாலும் கூட அதிலும் புல்லாங்குழல் வருகிறது. அப்படிப் பார்த்தால் 4000 ஆண்டு பழமையான கருவியா இது?
தமிழ் இலக்கியங்களிலும் குழல் வருகிறது. பெரும்பாணாற்றுப்படை மற்றும் குறிஞ்சிப்பாட்டில் ஆம்பல் பண்ணில் குழல் வாசிப்பதாகக் குறிப்புகள் வருகின்றன. குழல் இனிது யாழ் இனிது என்று குறளும் செப்புகிறது!

சீனாவிலும் Chie என்ற குழல் பழமை வாய்ந்தது.
எகிப்து, ரோமாபுரியில் இருந்து ஜெர்மனி மற்றும் ஐரோப்பாவிற்கும் குழல் பரவியது. ஃபிரான்ஸ் நாட்டு லூயி XIV ஆம் காலத்தில் தான் அரசவைகளில் குழல் நுழைந்ததாகவும் சொல்லுகிறார்கள்!
Baraoque புல்லாங்குழல் லண்டன் மற்றும் ஜெர்மனியில் பிரபலம் ஆகியது!
பின்பு கீ வைத்த குழல்கள் உருவாகின. ஃபோயம் (Boehm) என்பவரால் வடிவமைக்கப் பெற்று Boehm Flute என்று பெயர் பெற்றன.
இன்றைய மேல் நாட்டு வடிவம் பெரும்பாலும் இந்த Boehm குழல் தான்! பல குழல்களை அடுக்கி வைத்த Pan Flute-உம் பின்னாளில் தோன்றியது!



வாய்க்கு அருகே ஒரு வாய்த்துளை. ஒரே நேர்க்கோட்டில் இன்னும் 6-8 துளைகள்!
வாயால் ஊதிய காற்றை உள்ளே செலுத்தி விட்டோம்;
இப்போது துளைகளில் கைவிரல்கள் கொண்டு அடக்கி அளும் போது, குழல் இசை உருவாகிறது!
(துளை வழியே எச்சில் பறக்குமா-ன்னு கன்னா பின்னா கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது...சொல்லிட்டேன்... வேணும்னா கச்சேரியில் முதல் வரிசையில் உட்கார்ந்து கேட்டுப் பார்த்து விட்டுச் சொல்லுங்க!:-)

ஊதினால் மட்டும் போதுமா? போதாது....பிடிமானமும் தேவை.
பொதுவா எல்லாருமே கொஞ்சம் சாய்த்து தான் புல்லாங்குழலைப் பிடித்துக் கொள்கிறார்கள்.


வட இந்தியாவில் நீட்டுப் புல்லாங்குழல் வாசிப்பாங்க.
பன்சூரி புல்லாங்குழல் (Bansuri) என்று பெயர். (பன்=மூங்கில், சுரி=சுரம்)
ஹரி பிரசாத் செளராசியா-வின் குழலிசை ஹிந்துஸ்தானியில் மிகவும் பிரபலம்.
தென்னிந்தியாவில் குறுக்கு வாட்டில் தான் குழல் வாசிப்பு! (வேணு புல்லாங்குழல் என்று பெயர்)

கர்நாடக/தமிழ் இசையில் பிரபலமானவர்கள் பலர்...ஃப்ளூட் மாலி என்னும் மகாலிங்கம் முற்காலத்தில் என்றால்...
அண்மையில் கே.எஸ். கோபாலகிருஷ்ணன், சிக்கில் சகோதரிகள் (குஞ்சுமணி, நீலா), என்.ரமணி, ஷசாங்க், ஃப்ளூட் ராமன், B.V பாலசாய் என்று பலர்!

பொதுவா, நம் நாட்டுப் புல்லாங்குழல்கள் மூங்கிலால் ஆனவை! சில இடங்களில் உலோகக் குழல்களும் உண்டு. (விலங்கு எலும்புகளிலால் ஆன குழல்கள் மேல் நாடுகளில் இருக்கு)
8 அங்குலம்(inch) இல் இருந்து 3 அடி(feet) வரைக்கும் புல்லாங்குழல்கள் உண்டு. சிறிய குழல்களில் தான் pitch அதிகம்.

மேலை நாடுகளுக்குப் போனா, இன்னும் ஏகப்பட்ட புல்லாங்குழல் வகைகள்! பெரும்பாலும் உலோகக் குழல்கள் தான்!
துளைகள் போதாதென்று, விசை எனப்படும் கீ(key) வைத்த புல்லாங்குழல்களும் உண்டு!
இது மட்டுமா? கொத்து கொத்தா குழல்களை அடுக்கி வைத்து ஊதும் சாம்போனா (Zampona) கருவியும் பிரபலம்.
அவர்கள் புல்லாங்குழலில் பிக்கோலோ(Piccolo) என்பது குட்டியானது; அல்டோ(Alto), பாஸ்(Bass) வகைகள் சற்று பெரிது!


சரி...நம்ம சினிமாவுக்கு நாம வருவோம்!
தமிழ் சினிமாவில் புல்லாங்குழல் இல்லாத பாடல்களே மிக மிக அரிது! எதை எடுப்பது...எதை விடுப்பது?

அண்மையில் கொக்கி என்ற படம் வந்தது. அதில் தீனாவின் இசையில் முழுக்க முழுக்க ஒரு புல்லாங்குழல் மெலடி - When my heart goes - நீங்களே கேட்டுப் பாருங்க!

மே மாதம் படத்தில், மார்கழிப் பூவே பாடல். ரஹ்மான் இசையில் இதுவும் ஒரு ப்ளூட் மெலடி. பாடலின் துவக்கத்தில் கெளசல்யா சுப்ரஜா மெட்டில்
குழல் மேஜிக் கேளுங்க!

பாரதியாரின் சின்னஞ் சிறு கிளியே...புல்லாங்குழலில் மட்டும் தான் அப்படி இனிமையாகக் குழையும். உன் கண்ணில் நீர் வழிந்தால்ல்ல்ல்ல் என்று ரமணி வாசிப்பது இதோ!

இசைஞானி இளையராஜா தொடுக்காத குழல் மெலடி ஒன்று இருக்கத் தான் முடியுமா!...ஏற்கனவே பூவே செம்பூவே பாட்டைப் பதிவின் துவக்கத்தில் பார்த்தோம்.
ஆனால் குழலிசையில் வெளுத்து வாங்கிய இசைஞானி என்று சொல்லணும்னா அது Nothing But Wind ஆல்பம் தான்.
அதில் பண்டிட் ஹரிபிரசாத் செளராசியா அவர்கள் வாசிப்புக்கு, இளையராஜா தரும் ராக ஜொலிஜொலிப்புகள் கட்டாயம் கேட்க வேண்டிய ஒன்று!

புல்லாங்குழல் அதில் பேசுகிறது...சிரிக்கிறது, அழுகிறது, ஒய்யாரம் இடுகிறது! திடீரென்று வயலின்கள் ஒரே நேரத்தில் முழங்க, குழலிசை ஒளிந்து கொள்கிறது. கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் எட்டிப் பார்த்து துள்ளாட்டம் போடுகிறது!

Mozartஉம், நாட்டுப் பாடலும் கலந்து அடிக்கிறார் இளையராஜா. திடீரென்று விறகு வெட்டும் ஓசை மட்டும் ஒரு நாதம் போல் கேட்கிறது!
ஹிந்தோள ராகத்தில் ஆரம்பிக்கும் இளையராஜா, Bass Guitarஐக் கொண்டு வந்து, நோட்-களை எல்லாம் மாற்றி....அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ராகத்தை மாற்றுகிறார்! மறுபடியும் ஏக காலத்தில் Drums எல்லாம் முழங்க...ஒவ்வொன்றாக நிறுத்தப்பட்டு, குழல் மெல்ல எட்டிப் பார்த்து கண்ணடிக்கிறது!
கட்டாயம் கேட்டு மகிழ வேண்டும்! இதோ!





செவிக்கின்பம்...மேலும் சில குழலோசைக் காட்சிகள்!

Flute Band எனப்படும் வாத்திய இசைக்குழு ராணுவங்களில் மிகவும் பிரபலம்.
நம் நாட்டு அணிவகுப்புகளில் கூடக் கேட்கலாம். மிகவும் கம்பீரமாக இருக்கும். கீழே ஒரு Flute Band காட்சி...கேட்டு மகிழுங்கள்!


கேப் டவுன் Philharmonic Orchestraவில் Karin Leitner வாசிக்கும் Mozart 2nd movement...


Dr.N.ரமணி வாசிக்கும் ராம கதா சுத...செம பீட்


ஹரிபிரசாத் செளராசியாவின் ஹம்சத்வனி...

என்ன, அடுத்த முறை பொருட்காட்சிக்குப் போனா, குழல் வாங்கி வருவீர்கள் இல்லையா? ஆனா கொஞ்சம் அக்கம் பக்கம் பார்த்து ஊதுங்க!
பாவம் நீங்க ஊதுறதைப் பார்த்து, காதில் யாரும் ஆனந்தக் கண்ணீர் வடிக்கக் கூடாது இல்லையா?:-)

References:
http://en.wikipedia.org/wiki/Flute
http://www.webindia123.com/music/instru/flute.htm
http://www.flutehistory.com/
http://inventors.about.com/library/inventors/blflute.htm
http://www.bansuriflute.com

Monday, June 18, 2007

சினிமா காரம் காபி - பாகம் 4

தமிழ்த்திரை உலகில் தற்பொழுதிருக்கும் இசை அமைப்பளர்களில் பெரிதும் மதிக்கப்படும் இசை அமைப்பாளர்களில் வித்யாசாகரும் ஒருவர். அவரின் பல மனதை வருடும் பாடல்களை நானும் கேட்டு மயங்கி இருக்கிறேன்.ஒரு முறை இசை அமைப்பாளர் பற்றிய பேச்சு வரும்போது ரஹமானிற்கு இணையாக வித்யாசாகரும் திறமையானவர் என்று என்னிடம் சண்டைக்கே வந்துவிட்டார ஒரு நண்பர்்!! அந்த அளவுக்கு தீவிரமான ரசிகர்கள் அவருக்கு உண்டு.
அந்த சண்டை இப்பொழுது இங்கே வேண்டாம்,ஆனால் வித்யாசகர் இசையில் நமக்கு காணக்கிடைக்கும் "இன்ஸ்பிரேஷன்ஸ்" வகையறாக்கள் சிலவற்றை பார்க்கலாமா??

சந்திரமுகி!!
இந்த படத்தை பற்றி என்ன சொல்வது?? தலைவர் படம்!! சூப்பர் டூப்பர் ஹிட். ஒரு மலையாளப்படத்தை தழுவி எடுக்கப்பட்ட கன்னட படத்தை தழுவி எடுக்கப்பட்டது. இப்படி தழுவி தழுவி அன்பை வெளிப்படுத்தினாலும் கூட ் இந்தியாவில் ஒற்றுமை இல்லை என்று ஏன் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை!! :-) இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் "ரா ரா" என துவங்கும் பாடல். ஆனால் இந்த பாடல் கன்னட படத்தில் அமைந்த "ரா ரா" பாடலை போலவே தான் இருக்கும்். படமே காபி எனும்போது இந்த பாட்டின் ஒற்றுமை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.
ஆனால் இந்த படத்தில் எனக்கு பிடித்த இன்னொரு பாடல் "அத்திந்தொம் திந்தியும் தொந்தன திந்தாதினந்தோம்" எனதுவங்கும் பாடல்!! (இறைவா,சொல்லுறதுக்குல்லாற நாக்கு சுலுக்கெடுத்துகிச்சு!! நல்லா எழுதராய்ங்கையா பாட்ட!! :-P)!!!
நல்ல பாடல், அமைதியான ஓட்டம்,இனிமையாக இசைந்து, இருக்கமான மனதை இளக வைக்கும் அழகான பாடல். ஆனால் இந்த பாடல் அட்டை காபி என்ற விஷயம் எனக்கு வெகு நாட்களாக தெரியாது.
அட!! உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா??? நாடான் பாட்டு எனும் கேரள நாட்டுப்புற பாட்டை நீங்களும் கேட்டால்தான் உங்களுக்கும் புரியும். கேரள நண்பர்கள் இதை பற்றி பின்னூட்டத்தில் மேலும் தகவல்களை அளித்தால் நன்றாக இருக்கும்!! :-)


அத்திந்தோம் - சந்திரமுகி





அத்திந்தோம் - நாடான் பாட்டு





அடுத்ததா நாம பாக்க போறது அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த "கர்ணா" என்ற படத்தில் வரும் பாடல். வித்யாசாகரை நான் கவனிக்க ஆரம்பித்த படம் என்றால் அது கர்ணா படம்தான்.அந்த படத்தில் வரும் "மலரே மௌனமா" எனும் பாடல் என்னை அப்படியே உருக வைத்து விடும்.அருமையான ஹிந்துஸ்தானி இசையில் எஸ்.பி.பி மற்றும் ஜானகியின குரல் இழைந்து குழைந்து இதயத்தை தாலாட்டு பாடி தூங்க வைத்து விடும்!! ஆனால் நாம் இப்பொழுது பார்க்க போவது வேறு ஒரு பாடல்.
படத்தில் "ஏய் ஷப்பா ஏய் ஷப்பா' என்று ஒரு பாட்டு.மத்திய கிழக்கு நாடுகளின் இசை பாணி பாட்டில் அமைந்த வேகமான பாட்டு.நல்ல ரசிக்கும்படியாக, படத்தில் இயனக்குனரின் தேவையை நிறைவேர்த்தக்கூடிய பாட்டு.இந்த பாட்டு ஒரு ஈயடிச்சான் காபி என்று உங்களுக்கு தெரியுமா?? நீங்களே கேட்டு பாருங்கள்!! :-)

ஹே ஷப்பா - கர்ணா






ஏய் சப்பா





இது வரை முழுப்பாடல் காபியை பார்த்தொமல்லவா இப்பொழுது பாடலின் ஒரு பகுதி மட்டும் முழுவதுமாக காபி அடிக்கப்பட்ட சில தருணங்களை பார்க்கலாம். :-)

தீராத தம்மு வேணும் - பார்த்தீபன் கனவு





லையோலை லயலோ.........







பார்த்தீங்களா?? இதே போல இன்னொரு பிட் இப்போ கேளுங்க!! :-)

என்ன செய்ய - பார்த்தீபன் கனவு





ஃப்யூகோ - ஷைன்








Powered by Podbean.com


ஹ்ம்ம்ம்!!
ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை!! :-)

அடுத்த முறை இன்னொரு இசை அமைப்பாளருடன் உங்களை சந்திக்கிறேன்!!
வரட்டா?? :-)

நன்றி :
http://www.itwofs.com/

Wednesday, June 13, 2007

ஜாஸ் (Jazz) இசை ஜாலம்

யோசித்து பார்த்தால் இந்த இசைக்கு ஏன் இவ்வளவு சக்தி என்று என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. என்னதான் இருந்தாலும் இசை என்பது நாம் எல்லோரும் எழுப்புவது போல் ஓர் விதமான சப்தம் தானே. அதற்கு எங்கிருந்து இப்படி மனதை குடைந்து இன்பம்,சோகம்,நெகிழ்ச்சி,வீரம்,உற்சாகம்,துயரம,பக்தி் என ஆயிரம் உணர்வுகளை ஊற்றி நிறப்பும் ஆற்றல் வந்தது என்று கேட்டால் என்னால் பதில் எதுவும் தர இயலாத. இந்த இசைக்கு மனித சமுதாயத்தின் அனைத்து தரப்பிலும் அடிமைகள் உண்டு. உலகின் வெவ்வேறு நாடுகளிலும் வெவ்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு காலக்கட்டங்களிலும் மக்கள் தங்களுக்கு தோன்றிய இசை வகைகளை உருவாக்கி வளர்த்து வந்திருக்கிறார்கள்.அப்படிப்பட்ட இசை வகைகளில் ஒன்றைத்தான் தான் நாம் இன்று பார்க்கப்போகிறோம்.

ஜாஸ் எனும் இசை வகை நம் தமிழ் திரை இசையில் நாம் நினைப்பதை விட நிறையவே கேட்டிருக்கிறோம். முழுக்க முழுக்க ஜாஸ் இசையை ஒட்டி பாடல்கள் கிடைப்பது கடினமானாலும் அதன் பாதிப்பில் ஏற்பட்ட பாடல்கள் நிறையவே இருக்கின்றன. அதுவும் இன்று நேற்றல்ல எம்.எஸ்.விஸ்வனாதன் காலத்தில் இருந்தே ஜாஸ் இசையை ஒட்டிய பாடல்கள் நம் தமிழ் திரை இசையில் அமைந்திருக்கின்றன. அதுவும் தமிழ்் திரையுலகில் மெல்லிசைக்கு அடித்தளம் அமைத்த எம்.எஸ்.விஸ்வனாதன் அவர்களின் பல புனைவுகளில் ஜாஸ் இசையின் உதாரணங்களை பார்க்கலாம். அப்படிப்பட்ட அதிகப்படியான ஜாஸ் இசையின் தாக்கம் அமைந்த பாடல் ஒன்று இதோ.

பாடல் :வரவேண்டும் ஒரு பொழுது
படம் : கலைக்கோயில் (1964)
பாடியவர் : எல்.ஆர். ஈஸ்வரி
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி







முழுக்க முழுக்க ஜாஸ் தழுவலில் வந்த உதாரணத்திற்காக மேற்கண்ட பாடலை கொடுத்திருந்தேனே தவிர நாமே உணராத வகையில் ஜாஸ் இசையில் சார்ந்த பாடல்கள பல உள்ளன. அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்று இதோ!! :-)

பாடல் : நினைத்ததை நடத்தியே முடிப்பவன்
படம் : நம்நாடு (1969)
பாடியவர்கள் : டி.எம். சௌந்தர்ராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர்: வாலி







அட இப்படி 1960-களிலேயே நம் தமிழ் திரை உலகில் ஜாஸ் இசை ஒலித்திருக்கிறதா என்று கேட்கிறீர்களா??ஆம் நாம் விரும்பி கேட்டிருக்கும் பல தமிழ் திரையிசை பாடல்களின் பின்னால் ஜாஸ் இசையின் நளினம் ஒளிந்திருக்கிறது.
ஜாஸ் இசை என்பது உலகின் மிக புதிய இசை வகைகளில் ஒன்று என்று சொல்லலாம்.இதன் உருவாக்கம் அமெரிக்காவில் உள்ள கருப்பர் இன அடிமை குடியிருப்புகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்டது. அந்த சமயங்களில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில்் இருந்து பிடித்து வரப்பட்ட அடிமைகளின் மத்தியில் அவர்கள் நாட்டில் இருக்கும் பாரம்பரிய இசையான ப்ளூஸ் (Blues) இசை வகையின் ஒரு பரிமாணமே ஜாஸ் என உருவெடுத்தது. முதலில் தென் அமெரிக்க அடிமை காலனிகளில் மட்டுமே பார்க்கக்கிடைத்த இந்த ஜாஸ்,கருப்பர்கள் அமெரிக்காவின் நகரங்களுக்கு பரவ பரவ மேலும் பிரபலமாகியது. இது மேலும் மேலும் இடங்களுக்கு சென்று சேர சேர ,இந்த வகை இசையின் பல்வேறு உருவகங்களும் வெளி வர ஆரம்பித்தன. இதனால் அந்தந்த இடத்திற்கு ஏற்றார்போலும் ,இசையின் வேகம்,ஜதி போன்ற பில விஷயங்களினாலும் ஜாஸில் பல்வேறு பிரிவுகள் உண்டு.

எத்தனை பிரிவுகள் வந்தாலும் ஜாஸின் அடிப்படை தத்துவங்கள் ஆன சுதந்திரமான இசை ஓட்டமும், Improvisation என சொல்லக்கூடிய சம்யோஜிதமும் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். சுதந்திர வேட்கைக்கான பிரதிபலிப்பாக கருதப்படும் இந்த இசையில் கலைஞரின் தனித்திறமையை வெளிக்கொணரும் விதமாகவே பாடல்கள் அமைந்திருக்கும். நம் கர்நாடக சங்கீதத்தில் தனி ஆவர்த்தணத்தை போல் கலைஞர்கள் தனிதனியே தம் திறமையை காட்டி வாசிப்பது மிக சாதாரணம். தனிநபர் சுதந்திரத்தை வலியுருத்தும் இசை வகை என்பதால் குழுவில் அவரவர் தனிதனியே தாந்தோன்றியாக வாசித்துக்கொண்டிருக்க அந்த குழப்பமான இசை அமைப்பிலும் தோன்றும் ஒரு விதமான வித்தியாசமான இசை இந்த இசை வகையில் ஒரு முக்கியமான உத்தி. அது தவிர சிறிய குழுக்கள் பெரிய குழுக்கள் என இவர்கள் பிரிந்து இசை அமைக்க அதன் படி பெரிய குழு வகை (Big band) போன்று தனி தனி பிரிவுகளே கூட இந்த இசையில் தோன்றிவிட்டன. இதை தவிர ஸ்விங் (Swing), பெபாப் (Bepop),கூல் ஜாஸ் (Cool Jazz) போன்று பல பிரிவுகள் இந்த ஜாஸில் உண்டு.
இந்த இசையில் பெரிதும் பயன்படுத்தப்படும் கருவிகள் என பார்த்தால சாக்ஸபோன் (Saxophone), ட்ரம்பெட்(Trumpet),பியானோ (Piano), க்ளாரினேட்(Clarinet), கிதார(Guitar)்,ட்ரம்ஸ் (Drums) ஆகியவற்றை சொல்லலாம்.ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மற்ற இசை வகையில் எல்லாவற்றிலும் பெரிதும் பயன்படுத்தப்படும் வயலின் ஜாஸில் அவ்வளவாக பயன்படுத்தப்படுவதே இல்லை!!

தமிழ் திரை இசையில் நம்மையும் அறியாமல் அவ்வப்போது ஜாஸின் இசை நம் காதுகளில் நுழைந்துக்கொண்ட தான் வந்திருக்கிறது. ஆனால் நம் இசை அமைப்பாளர்கள் பலவிதமான இசை வகைகளையும் கலந்து நமக்கு ஒரே பாட்டாக விருந்து படைப்பவர்கள் என்பதால் ஜாஸின் தாக்கத்தை நம் பாடல்களில் உணர்வது கடினம். சமீபத்திய படங்கள் என்று சொல்லப்போனால் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமானின் இசை அமைப்பில் வெளிவந்த "இருவர்" படம் மிக தேர்ந்த ஜாஸ் இசைப்பிரயோகத்தின் உதாரணமாக கருதப்படுகிறது. இதில் வரும் "வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே" மற்றும் "ஹலோ மிஸ்டர் எதிர்கட்சி" போன்ற பாடல்களில் உள்ள ஜாஸ் இசையின் தாக்கத்தை கவனிக்காமல் விடுவது கடினம். ஆனால் இந்த படத்தில் ஜாஸ் இசை பாணியில் அமைந்த ஒரு பிரபலமான பாடலை கொஞ்சம் பார்க்கலாமா??



இந்த வகை இசையின் வித்தகர்களாக லூயி ஆம்ஸ்ட்ராங் (Louis Armstrong (1901-1971)),சிட்னி பெச்செட் (Sidney Bechet (1897-1959)), பிக்ஸ் பெய்டர்பெக் Bix Beiderbecke (1903-1931) ஆகியோரை கூறலாம்.
தற்பொழுது இருக்கும் ஜாஸ் இசைக்கலைஞர்களில் கென்னி ஜி (Kenny G) என்ற இசைகலைஞரின் இசையை நான் பெரிதும் விரும்பி கேட்டிருக்கிறேன்.ஆனால் அவரின் இசை தூய ஜாஸ் இசை கிடையாது என்று சொல்லப்படுகிறது. உங்களுக்கு தெரிந்த/பிடித்த ஜாஸ் இசைக்கலைஞ்ர்கள் யாராவது இருந்தால் அவர்களின் பெயர்களைபின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.பெயரோடு கூட அவர் வாசிக்கும்கருவியையும் சேர்த்து தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

நான் முன்பு சொன்னதை போல மனதின் எண்ண ஓட்டத்தை மாற்றி நம் உணர்வுகளை பந்தாடும் வலிமை இசைக்கு உண்டு.கென்னி ஜி-யின் சாக்ஸபோன் ஆலாபனை பலவற்றை கேட்டு மனதில் அமைதியும் உதட்டில் புன்னகையும் நிறம்ப கண்டிருக்கிறேன். அதே சமயம் நம்ம ஊரு குத்துப்பாட்டுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு நம்மை தாளம் போட வைக்கும் இசை பிரிவுகளும் ஜாஸில் உண்டு.அவரவருக்கு அவரவர் விருப்பப்படியான இசையை வாரி வழங்கும் ஜாஸ் இசை பற்றி அறிந்து ,அது தரக்கூடிய இசை இன்ப வெள்ளத்தில் மனம் குளிர என் மனமார்ந்த வாழ்த்துகள்


References:
http://www.dhool.com/sotd2/673.html
http://en.wikipedia.org/wiki/Jazz
http://www.dhool.com/sotd2/680.html
http://en.wikipedia.org/wiki/List_of_jazz_musicians
http://www.dhool.com/sotd2/676.html
http://www.dhool.com/sotd2/689.html

படங்கள்:
http://www.mossstreetgallery.com/Satchmo's%20Jazz.JPG
http://rdr.zazzle.com/img/imt-prd/pd-137064913479983602/isz-m/tl-%22Jazz+band%22.jpg
http://www.mus.cmich.edu/images/jazz.jpg

Thursday, June 07, 2007

நல்லதோர் வீணை செய்தே

மன்னன் படத்தில் "அம்மா என்றழைக்காத" என்று ஒரு பாடல் (அது எப்படியோ இசைக்கருவியை பற்றிய பதிவு வந்தாலே தலைவர் பாட்டு என்னை அறியாமல் நுழைந்து விடுகிறது.எனக்கு மிகவும் பிடித்தமான பாடல இது்.


Get Your Own Music Player at Music Plugin

இந்த பாட்டின் தொடக்கத்தை கேட்டாலே மெய் மறந்து போய்விடும்!! மனதில் எந்த ஒரு எண்ணம் இருந்தாலும் அதையெல்லாம் ஓட ஓட விரட்டிவிட்டு மனதை சாத்வீகப்படுத்தி முழு பாடலையும் கேட்க ஓரிரு மணித்துளிகளில் நம்மை தயார்செய்துவிடும் அந்த இசை. அதன் பிறகு யேசுதாஸின் குரலே ஒன்றே போதும்.இப்படிப்பட்ட தெய்வீகமான இசையை வீணையை தவிர்த்து வேறு எந்த இசைக்கருவியால் தர முடியும்??ஆமாம் அப்படிப்பட்ட உன்னதமான இசையை அளிக்கவல்ல வீணையை தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.
நம் கர்நாடக சங்கீதத்தில் மிக உயரிய இடத்தை பிடித்து வைத்திருக்கும் இசைக்கருவி வீணை. வீணையின் வரலாறு என்று எடுத்துக்கொண்டால் இந்திய கலாசாரத்தில் வீணையின் குறிப்புகள் வெகு ஆரம்ப காலத்தில் இருந்தே உண்டு. ராமாயண காலத்தில் பார்த்தோமேயென்றால் இலங்கேசுவரனான இராவணன் மிக தேர்ந்த வீணை இசை கலைஞன் என கூற கேட்டிருக்கிறோம். ஆனால் முன் காலத்தில் தந்தியுடன் கூட இருக்கும் எந்த இசைக்கருவியாக இருந்தாலும் அதை வீணை என கூப்பிடுவார்கள். நாம் இப்பொழுது காணும் வீணையின் வடிவில் அவை இருந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் இப்பொழுதிருக்கும் வீணையின் வித்து ஆயிரக்கனக்கான ஆண்டுகளுக்கு முன்னமே போடப்பட்டு விட்டது என்பது திண்ணம்.
இப்பொழுது பரவலாக உபயோகப்படுத்தப்படும் சரஸ்வதி வீணை பதினாறாவது நூற்றாண்டில் தோன்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தில் கோவிந்த தீட்சிதர் என்பவரால் ரகுனாத மேல வீணை எனும் வீணையின் குறிப்பு "சங்கீத சுதா" எனும் ஏட்டில் இருப்பதாக தெரிகிறது. அந்த வீணையில் இருந்துதான் இன்று நாம் உபயோகிக்கும் சரஸ்வதி வீணை மருவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். ரவி வர்மாவின் ஓவியங்களில் கூட இந்த வீணை இடம் பெற்றிருப்பதை நாம் காணலாம்.
சரி இவ்வளவு பழமையான வீணையின் வடிவமைப்பை கொஞ்சம் பார்க்கலாமா??

வீணையில் பல விதங்கள் இருந்தாலும் பரவலாக உபயோகப்படுத்தப்படும் சரஸ்வதி வீணை சுமார் நான்கு அடி நீளமாக இருக்கும்.வீணையின் வடிவை தாங்கி நிறபது இதன் தண்டி.வீணையை செய்வதற்கு பலா மர வகையை சார்ந்த கட்டைகளையே பயன்படுத்துகிறார்கள். அதனால் தான் இசை இவ்வளவு இனிமையாக இருக்கிறதோ என்னமோ.ஒரே மரத்தினால் செய்யப்பட்ட வீணைகளுக்கு ஏகாந்த வீணை என்று பெயர் உண்டு.
தண்டியின் ஒரு ஓரத்தில் காலியான குடம் போன்ற அமைப்பு உண்டு.இந்த குடத்தில் ஏற்படும் அதிர்வினால்தான் இசையே உருவாகிறது. தண்டியின் இன்னொரு புறம் யாளி முகம் பொருத்தப்பட்டிருக்கும். இந்த பகுதியில் ஒரு சிறிய குடமும் உண்டு. இது பெரும்பாலும் வீணையை தொடையில் தாங்கி இருத்திக்கொள்வதற்காக பயன்படுத்தப்படுகிறது.தண்டியின் மேலிருந்து கீழ் வரை பித்தளையால் செய்யப்பட்ட 24 மெட்டுக்கள்,ஒரு வகை மெழுகுப்பொருளினால் பொருத்தப்பட்டிருக்கும்.இந்த மெட்டுகளை பார்த்தால் எனக்கு தாயக்கட்டைகள் தான் ஞாபகம் வருகிறது. இவற்றின் மேல்தான் வீணையின் 7 தந்திகள் படர்ந்திருக்கும். வீணையின் பல நுணுக்கமான வடிவமைப்புகள் பற்றி நிறைய சொல்லலாம்,ஆனால் அதை பற்றி எழுதுவதற்கு எனக்கு பொறுமை இருக்கிறதோ இல்லையோ ,ஆனால் அதை படிப்பதற்கு உங்களுக்கு நிறைய பொறுமை வேண்டும்.அதனால் நாம் பதிவின் அடுத்த பகுதிக்கு போகலாம்.

இந்த வீணையை தரையில் உட்கார்ந்து கொண்டு,பெரிய குடத்தை வலது பக்கம் தரையில் இருத்தி,யாளி முக பக்கம் இருக்கும் குடத்தை இடது பக்கத்தொடையின் மேல் பொருத்திக்கொள்வார்கள்.
தந்திகளை வலது கையினால் மீட்ட வேண்டும். வலது கையின் ஆட்காட்டி விரல் மற்றும் நடு விரலை கொண்டு 7 தந்திகளில் வாசிப்பு தந்திகள் எனப்படும் 4 தந்திகளை மட்டும் கீழ்நோக்கி மீட்டி வாசிப்பார்கள்.மற்ற மூன்று தந்திகளான தாள-சுருதி தந்திகளை வலது கையின் சுண்டு விரலை கொண்டு மேற்புரம் நோக்கி மீட்டுவார்கள்.
பலர் விரல்களின் மேல் மீட்டுக்கோள் எனப்படும் க்ளிப்புகளை பொருத்திக்கொண்டு மீட்டுவார்கள் (இல்லையென்றால் விரல் என்னத்துகாகறது),ஆனால் சிலர் நகங்களாலேயே மீட்டுவார்கள்.
இடது கையின் விரல்கள் எல்லாம் தந்தியின் மேல் அழுத்தம் கொடுத்து இசையை மாற்ற பயன்படும். இதை சொல்லும்போதே கண்ணைகட்டுகிறதே,இதை நீண்ட நேரம் தாங்கிக்கொண்டு வாசித்தால் காலிலும்,முதுகிலும்,விரல்களிலும் எவ்வளவு வலி ஏற்படும் என்று வாசிப்பவர்கள் தான் கூற முடியும்!! லேசுப்பட்ட விஷயம் இல்லை!!! :-)
நமக்கு வீணை என்றாலே நினைவுக்கு வருவது சரஸ்வதி வீணை என்ற வகை வீணை தான். நான் மேலே சொன்ன குறிப்புகள் கூட சரஸ்வதி வீணையை பற்றியதுதான், ஏனென்றால் இப்போதைக்கு மிக பரவலாக உபயோகப்படுத்தப்படுவது இந்த வகை வீணைகள் தான். ஆனால் வீணையில் வேறு ரகங்களும்் கூட உண்டு.அவற்றில் முக்கியமான சில வகைகள் பற்றி சிறிது பார்ப்போமா??


ருத்ர வீணை:
வீணையின் வகைகளில் நாம் முதலில் பார்க்க போவது ருத்ர வீணை. இது பெரும்பாலும் ஹிந்துஸ்தானி சங்கீததின் ஒரு வகையான துருபத் எனும் இசையை இசைக்க உபயோகப்படுத்தப்படுகிறது. இதற்கும் சரஸ்வதி வீணைக்கும் உள்ள வித்தியாசங்களை பார்தோமென்றால்,சரஸ்வதி வீணையில் குடங்கள் வெவ்வேறு அளவுகளில் இருக்கும் ஆனால் ருத்ர வீணையில் இரண்டு பக்கமும் சம அளவுள்ள காய்ந்து போன பூசனிக்காய்கள் பொருத்தப்பட்டிருக்கும். சரஸ்வதி வீணையில் உள்ளது போலவே இந்த வீணையிலும மெட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும் (அதாங்க!!அந்த தாயக்கட்டைகள்!! :-))்
இந்த வீணையை வாசிக்கும் விதமே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். தண்டியின் ஒரு பகுதியில் உள்ள குடத்தை தோளின் மேல் இருத்திக்கொண்டு இந்த வகையான வீணையை வாசிப்பார்கள். இந்த ்இந்த வகை வீணைகள் இப்பொழுதெல்லாம் அவ்வளவாக பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் இந்தியாவின் மிக பழமையான இசை கருவிகளில் ருத்ர வீணையும் ஒன்று.


விசித்திர வீணை:
இதுவும் பார்க்க கொஞ்சம் ருத்ர வீணை போலவே தான் இருக்கிறது இல்லையா?? இந்த வீணையிலும் இரு புறமும் காய்ந்து போன பூசனிக்காய்களை பொருத்தி இருப்பார்கள். ஆனால் ருத்ர வீணையை போல இது ஒன்றும் பழமையான இசைக்கருவி அல்ல. இந்த வீணைக்கும் ருத்ர வீணைக்கு உள்ள ஒரு வித்தியாசம் என்னவென்றால் இந்த வீணையில் மெட்டுகளே கிடையாது. அதுவும் தவிர இந்த வீணையை வாசிக்கும் விதத்திலும் சிறிது விசித்திரம் உண்டு. வலது கை விரல்களால் தந்திகளை மீட்டியபடி இடது கையில் ஒரு விதமான தட்டையான மீட்டுக்கோளை பயன்படுத்தி தேய்த்து தேய்த்து வாசிப்பார்கள். இந்த வீணையும் இப்பொழுதெல்லாம் அவ்வளவாக பயன்படுத்தபடுவதில்லை. அதனால் வீணை உலகில் முடி சூடா ராணியாக சரஸ்வதி வீணையை நாம் எண்ணிக்கொள்ளலாம்.


கோட்டுவாத்தியம்:
இந்த வகை வீணைக்கு சித்திர வீணை என்றும்,மஹாநாடக வீணை என்று பல பெயர்கள். பார்ப்பதற்கு இது சரஸ்வதி வீணையை போலத்தான் இருக்கும். ஆனால் இந்த வீணையில் என்ன வித்தியாசம் என்றால் இதில் மொத்தம் 21 தந்திகள் உண்டு!! (யெப்பா!!) அதுவும் ஒவ்வொன்றும் மிக தடிமனானவை.இந்த வீணையை விசித்திர வீணையை வாசிப்பது போலவே இடது கையால் ஒரு விதமான தட்டையான மீட்டுகோளை வைத்து ஒலி எழுப்புவார்கள். வலது கையால் தந்திகளை மீட்டுவார்கள்.
இந்த வீணையில் உள்ள இன்னொரு முக்கியமான வித்தியாசம் என்னவென்றால்,இதில் கூட விசித்திர வீணையை போல் மெட்டுக்கள் கிடையாது.இந்த வீணையின் வரலாறு ஒன்றும் பெரியது அல்ல,சுமார் 100 வருடங்களாக தான் இது புழங்கி வருவதாக கூறப்படுகிறது.திருவிடைமருதூர் சகாராம் என்பவரால் இது முதல் முதலாக பிரபலப்படுத்தப்பட்டது,பின் மைசூர் சமஸ்தானத்தில் அரண்மனை இசைகலைஞரான நாராயண ஐயங்கார் என்பவரால் இது மேலும் மக்களால் அறியப்பட்டது.ரவிகிரண் போன்ற புகழ்பெற்ற இசைகலைஞர்களால் இந்த விதமான வீணையின் நாதத்தை இன்றும் இசை உலகில் கேட்க முடிகிறது

வீணை நம் நாட்டின் கலாசாரத்தையும் ,பாரம்பரியத்தையும் குறிக்கும் சின்னமாக கருதப்படுகிறது. படிப்புக்கு அதிபதியான கலைவாணியின் கையில் வீணையை கொடுத்திலேயே அதற்கு நம் மக்கள் எவ்வளவு மரியாதை கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம். நான் முன்பே குறிப்பிட்டிருந்தது போல கர்நாடக இசை உலகில் வீணைக்கு என்று ஒரு தனி மரியாதைக்குரிய இடம் எப்பொழுதும் உண்டு.
அதுவும் இல்லாம நம்ம அப்துல் கலாம்,KRS,துர்கா அக்கா(:P) மாதிரி பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வீணை வாசிக்க தெரிஞ்சவங்களா இருக்காங்க!! இது மாதிரி வீணையின் சிறப்பை எல்லாம் சொல்லிக்கிட்டே போகலாம்.

பதிவும் பெருசாகிட்டே போய்ட்ருக்கு. போன தடவை மாதிரி பதிவு எழுதிட்டு ரொம்ப பெருசாகிடுச்சுன்னு யாரும் படிக்காம போயிட போறாங்க!! அதனால நான் மொக்கையை நிறுத்திக்கிட்டு கடையை கட்டுறேன். போறதுக்கு முன்னாடி ஒரு அருமையான வீணை இசைப்படத்தை போட்டிருக்கேன். இருக்கற வெயிலுக்கு இதமா வீணை இசை இன்பத்துல நனைஞ்சிட்டு போங்க.
வரட்டா?? :-)



References :
http://en.wikipedia.org/wiki/Veena
http://www.sawf.org/music/interviews/veena/veena.asp?pn=Music
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AF%88#.E0.AE.B5.E0.AE.B0.E0.AE.B2.E0.AE.BE.E0.AE.B1.E0.AF.81
http://en.wikipedia.org/wiki/Rudra_veena
http://www.buckinghammusic.com/veena/veena.html
http://www.indian-instruments.com/stringed_instruments/rudra_vina.htm
http://www.dhrupad.info/rudraveena.htm
http://en.wikipedia.org/wiki/Image:Femme_Vina.jpg
www.beenkar.com/.../RudraVeenaSmallSuvir.jpg
http://www.geocities.com/Vienna/Stage/2225/pictures/ravikiran.jpg
http://www.chandrakantha.com/articles/indian_music/gotuvadyam.html
மற்றும் சில

Sunday, June 03, 2007

சினிமா காரம் காபி - பாகம் 3

இந்த பதிவுல தேவா பத்தி எழுதலாமனுதான் நினைத்தேன்,ஆனால் வலையுலகில் தேவாவிற்கு இருக்கும் அன்பும் ஆதரவையும் பார்த்து அவரை பற்றி பிறகு எழுதிக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். அதற்கு இணையாக சுவாரஸ்யம் மிகுந்த வேறோரு தமிழ்திரையுலக காபி பற்றி இன்றைக்கு நாம் பார்க்கலாம்.

ஒரு படத்தின் எல்லா பாடலகளையுமே ஈயாடித்தான் காபி அடித்த இசை அமைப்பாளரும்,அப்படி காபி அடிக்கப்பட்ட படம் பற்றியும் தெரியுமா உங்களுக்கு். இந்த மகத்தான பெருமைக்கு உரித்தானவர் இசை அமைப்பாளர் சிற்பி ,நாம் பார்க்கப்போகும் திரைப்படம் "உள்ளத்தை அள்ளித்தா".

உள்ளத்தை அள்ளித்தா திரைவானில் தோன்றிய புத்துணர்வு கூட்டக்கூடிய இளமை படம். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி இழையோடிய நகைச்சுவையால் பின்னப்பட்டு , கலகலப்பாக செல்லக்கூடிய லேசான படம். நடிகை ரம்பாவை மர்லின் மன்ரோ ரேஞ்சுக்கு அறிமுகத்தோடு திரையுலகில் தன் பயணத்தை தொடக்கிவைத்த படம். படத்தில் கார்த்திக் மற்றும் கவுண்டமணியின் லூட்டிகளுடன் சேர்த்து படத்தின் இனிமையான இசையும் படத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது என்றால் மிகையாகாது.
படத்தின் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட். பட்டி தொட்டிகளில் எல்லாம் படத்தின் ஐந்து பாடல்களும் எப்பொழுது பார்த்தாலும் அலறிக்கொண்டு இருந்தது.
ஆனால் இந்த ஐந்து பாடல்களுமே ஈயடிச்சான் காபி அடிக்கப்பட்டவை என்று உங்களுக்கு தெரியுமா???
தெரிய வேண்டும் என்றால் மேலே படியுங்கள்!! ;-)

1.) படத்தின் மிக பிரபலமான பாடல்களில் ஒன்று "அழகிய லைலா" எனப்படும் ரம்பாவின் அறிமுகப்பாட்டு. இதில் தான் மர்லின் மன்ரோவைப்போன்று கிலுகிலுப்பான காட்சியுடன் பாடல் ஆரம்பமாகும். இந்த பாட்டை மக்கள் (ஆண்கள்(!?) ) திரும்ப திரும்ப விரும்பி பார்த்தற்கும் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். பாடலை கேட்கும் போதே பாடலில் மத்திய கிழக்கு நாடுகளின் இசைச்சாயல் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது!! ஆனா இந்த பாட்டே ஒரு மத்திய கிழக்கு இசை பாடலின் அச்சு அசல் காபி என்று தெரியுமா?? நீங்களே கேட்டு பாருங்கள்!! :-)

உள்ளத்தை அள்ளித்தா - அழகிய லைலா






ஹிஷமப்பாஸ் - அஹ்லமஃபெகி





இதுல என்ன காமெடினா,"யெஸ் பாஸ்" எனும் இந்தி படத்தில் வரும் "சுனியே தோ" எனும் பாட்டும் இதே பாட்டின் காபி தான்!!அந்த படத்தின் இசை அமைப்பாளரின் பெயர் ஜடின் லலித்!! :-)

2.)படத்தில் எல்லோரும் ஒன்று கூடி உண்டு மகிழ்ந்து இருக்கும் வேலையில் கதாநாயகி பாடுவது போல ஒரு பாட்டு வரும்.பாட்டின் மெட்டும்,படமாக்கிய விதமும் பார்பவற்கு ஒரு இதமான மன நிலையை கொடுத்து விடும்.
பின்பு ஒரு முறை எம்.டிவியில் பாலி சகுவின் மறு கலவை பாட்டு ஒன்றை கேட்டுக்கொண்டிருக்கும் போது இந்த பாட்டை எங்கேயோ கேட்டாற்போல் உள்ளதே என்று தோன்றியது!! பிறகு தான் உறைத்தது ,இது உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கேட்டோமே என்று.
நான் கேட்ட பாடல் "மேரி லௌங் கவாச்சா" என் தொடங்கும் பஞ்சாபி பாடல்.நுஸ்ரத் ஃபதே அலி கான் எனப்படும் புகழ் பெற்ற பாகிஸ்தானிய இசை கலைஞரால் முதன் முதலில் வெளியிடப்பட்ட இந்த பாடல் பாலி சகு மூலமாக மறு கலவை (Remix)செய்யப்பட்டு வெளிவந்தது. அதைத்தான் நம் சிற்பி "சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு' எனும் பாடலில் உபயோகப்படுத்தி இருக்கிறார்!! அடக்கடவுளே என்று சொல்வதை தவிர எனக்கு வேறு எதுவும் சொல்ல தோன்றவில்லை!! நீங்களே கொஞ்சம் கேட்டு பாருங்களேன்!! :-)

உள்ளத்தை அள்ளித்தா - சிட்டு சிட்டு குருவிக்கு





மேரி லௌங் கவாச்சா - நுஸ்ரத் ஃபதே அலி கான் மற்றும் பாலி சாகு






3.) படத்துல வர அப்பா கதாபாத்திரம் ,தன் மகனுக்கு கர்நாடக சங்கீதம் நன்றாக தெரியும் என்றும் அதனால் வீட்டிலேயே ஒரு கச்சேரி வைத்துக்கொள்ளலாம் என்று பேச்சு வர அப்பொழுது "மாமா நீ மாமா" என்று ஒரு பாட்டு வரும். பாட்டை கேட்டவுடன் கர்நாடக சங்கீதம் என்று சொல்லிவிட்டு வட இந்திய இசை மெட்டு படி பாட்டு அமைந்திருக்கிறதே ந்ன்று நான் அப்பொழுதே நினைத்ததுண்டு. பின்பு தான் தெரிந்தது இதுவும் நுஸ்ரத் ஃபதே அலி கான பாலி சாகு கூட்டணியில் வந்த ஒரு புகழ்பெற்ற பாட்டின் ஈயடிச்சான் காபி என்று. ச ரி க ம என்று எது வந்தாலும் மக்கள் கர்நாடக சங்கீதம் தான் என்று நம்பி விடுவார்கள் என்று முடிவே செய்துவிட்டார்கள் போலும். :-)


உள்ளத்தை அள்ளித்தா - மாமா நீ மாமா






கின்னா சோனா - நுஸ்ரத் ஃபதே அலி கான் மற்றும் பாலி சாகு





பி.கு:இதே பாட்டை நதீம் ஷ்ரவன் கூட்டணி "ராஜா ஹிந்துஸ்தானி" படத்தில் "கித்னா ப்யாரா துஜே" எனும் பாட்டிற்காக காபி அடித்திருக்கிறார்கள்.

4.)படத்தில் வரும் இன்னொரு ஜாலியான பாடல் "அடி அனார்கலி" என தொடங்கும் பாடல்.படத்தில் ரெக்கே இசை பாணியின் சாயல் பட்டவர்தனமாக தெரியும்.இந்த பாடலை "Mungo Jerry" எனும் இசைக்குழுவின் "In the summertime" என்ற பாடலில் இருந்து சுட்டிருக்கிறார்கள். இந்த பாடல் ஷாகி எனும் புகழ்பெற்ற ரெக்கே பாடகரால் 1995-இல் முறுமுறை வெளியிடப்பட்டிருந்தது். இதனால் இந்த பாட்டு மிக புகழ் பெற்றது.பாடலை ஒரு முறை கேட்டாலே இது காபி என்று புரிந்துவிடும்.

உள்ளத்தை அள்ளித்தா - அடி அனார்கலி





Mungo Jerry - In the summertime






இன்னொரு பி.கு: இதே பாடலை Tarazu எனும் படத்தில் "ஹசீனா கோரி கோரி" எனும் படலின் மூலம் இசை அமைப்பாளர் ராகேஷ் ரோஷன் அட்டை காபி அடித்திருப்பார் (நம்ம கூட போட்டி போடலைனா,இந்த பசங்களுக்கு தூக்கமே வராது போல) :-)


5.) படத்தில் மிக பிரபலமான பாட்டு "I love you,love you,love you,love you சொன்னாலே" (அடங்கொக்கா மக்கா,எவ்ளோ love you டா சாமி,நமக்கெல்லாம் ஒரு தடவையே யாரும் சொல்ல மாட்றாங்க!! :-P)
சென்னையில் அப்பொழுது புதிதாக வந்திருந்த MGM பொழுதுபோக்கு பூங்காவில் அழகாக படமாக்கப்பட்ட காட்சிகள் பாட்டையும் அந்த பூங்காவையும் செமத்தியாக பிரபலப்படுத்தியது.இனிமையான பாடல் தான் ஆனால் இந்த பாடல் ஒரு மத்திய கிழக்கு (திரும்பவும்) பாடலில் இருந்து அச்சு அசல் காபி (முதலில் வரும் ஆலாபனையில் இருந்து)
நீங்களே கேட்டு பாருங்க!! :-)

உள்ளத்தை அள்ளித்தா - I love you சொன்னாலே






ஹிஷம் அப்பாஸ் - வன்ன வன்ன வன்ன






காபியோ டீயோ படத்தின் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆனது,இதனால் படமும் சுப்பர் ஹிட். இதனால் சிற்பிக்கும் நிறைய படங்கள் ஒப்பந்தம் ஆனது. லிவிங்ஸ்டன் கதாநாயகனாக நடித்த "சுந்தர புருஷன்" எனும் படத்தின் மூலம் சிறிது பேசப்பட்டார்.(அதில் எந்த அளவுக்கு சொந்த சரக்கு இருந்தது என்று தெரியவில்லை).பின்பு காணாமல் போனார்.
அடுத்த பதிவில் இன்னொரு இசை அமைப்பாளருடன் உங்களை சந்திக்கிறேன்.
வரட்டா?? ;-)

நன்றி : http://www.itwofs.com/

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP