Thursday, June 07, 2007

நல்லதோர் வீணை செய்தே

மன்னன் படத்தில் "அம்மா என்றழைக்காத" என்று ஒரு பாடல் (அது எப்படியோ இசைக்கருவியை பற்றிய பதிவு வந்தாலே தலைவர் பாட்டு என்னை அறியாமல் நுழைந்து விடுகிறது.எனக்கு மிகவும் பிடித்தமான பாடல இது்.


Get Your Own Music Player at Music Plugin

இந்த பாட்டின் தொடக்கத்தை கேட்டாலே மெய் மறந்து போய்விடும்!! மனதில் எந்த ஒரு எண்ணம் இருந்தாலும் அதையெல்லாம் ஓட ஓட விரட்டிவிட்டு மனதை சாத்வீகப்படுத்தி முழு பாடலையும் கேட்க ஓரிரு மணித்துளிகளில் நம்மை தயார்செய்துவிடும் அந்த இசை. அதன் பிறகு யேசுதாஸின் குரலே ஒன்றே போதும்.இப்படிப்பட்ட தெய்வீகமான இசையை வீணையை தவிர்த்து வேறு எந்த இசைக்கருவியால் தர முடியும்??ஆமாம் அப்படிப்பட்ட உன்னதமான இசையை அளிக்கவல்ல வீணையை தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.
நம் கர்நாடக சங்கீதத்தில் மிக உயரிய இடத்தை பிடித்து வைத்திருக்கும் இசைக்கருவி வீணை. வீணையின் வரலாறு என்று எடுத்துக்கொண்டால் இந்திய கலாசாரத்தில் வீணையின் குறிப்புகள் வெகு ஆரம்ப காலத்தில் இருந்தே உண்டு. ராமாயண காலத்தில் பார்த்தோமேயென்றால் இலங்கேசுவரனான இராவணன் மிக தேர்ந்த வீணை இசை கலைஞன் என கூற கேட்டிருக்கிறோம். ஆனால் முன் காலத்தில் தந்தியுடன் கூட இருக்கும் எந்த இசைக்கருவியாக இருந்தாலும் அதை வீணை என கூப்பிடுவார்கள். நாம் இப்பொழுது காணும் வீணையின் வடிவில் அவை இருந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் இப்பொழுதிருக்கும் வீணையின் வித்து ஆயிரக்கனக்கான ஆண்டுகளுக்கு முன்னமே போடப்பட்டு விட்டது என்பது திண்ணம்.
இப்பொழுது பரவலாக உபயோகப்படுத்தப்படும் சரஸ்வதி வீணை பதினாறாவது நூற்றாண்டில் தோன்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தில் கோவிந்த தீட்சிதர் என்பவரால் ரகுனாத மேல வீணை எனும் வீணையின் குறிப்பு "சங்கீத சுதா" எனும் ஏட்டில் இருப்பதாக தெரிகிறது. அந்த வீணையில் இருந்துதான் இன்று நாம் உபயோகிக்கும் சரஸ்வதி வீணை மருவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். ரவி வர்மாவின் ஓவியங்களில் கூட இந்த வீணை இடம் பெற்றிருப்பதை நாம் காணலாம்.
சரி இவ்வளவு பழமையான வீணையின் வடிவமைப்பை கொஞ்சம் பார்க்கலாமா??

வீணையில் பல விதங்கள் இருந்தாலும் பரவலாக உபயோகப்படுத்தப்படும் சரஸ்வதி வீணை சுமார் நான்கு அடி நீளமாக இருக்கும்.வீணையின் வடிவை தாங்கி நிறபது இதன் தண்டி.வீணையை செய்வதற்கு பலா மர வகையை சார்ந்த கட்டைகளையே பயன்படுத்துகிறார்கள். அதனால் தான் இசை இவ்வளவு இனிமையாக இருக்கிறதோ என்னமோ.ஒரே மரத்தினால் செய்யப்பட்ட வீணைகளுக்கு ஏகாந்த வீணை என்று பெயர் உண்டு.
தண்டியின் ஒரு ஓரத்தில் காலியான குடம் போன்ற அமைப்பு உண்டு.இந்த குடத்தில் ஏற்படும் அதிர்வினால்தான் இசையே உருவாகிறது. தண்டியின் இன்னொரு புறம் யாளி முகம் பொருத்தப்பட்டிருக்கும். இந்த பகுதியில் ஒரு சிறிய குடமும் உண்டு. இது பெரும்பாலும் வீணையை தொடையில் தாங்கி இருத்திக்கொள்வதற்காக பயன்படுத்தப்படுகிறது.தண்டியின் மேலிருந்து கீழ் வரை பித்தளையால் செய்யப்பட்ட 24 மெட்டுக்கள்,ஒரு வகை மெழுகுப்பொருளினால் பொருத்தப்பட்டிருக்கும்.இந்த மெட்டுகளை பார்த்தால் எனக்கு தாயக்கட்டைகள் தான் ஞாபகம் வருகிறது. இவற்றின் மேல்தான் வீணையின் 7 தந்திகள் படர்ந்திருக்கும். வீணையின் பல நுணுக்கமான வடிவமைப்புகள் பற்றி நிறைய சொல்லலாம்,ஆனால் அதை பற்றி எழுதுவதற்கு எனக்கு பொறுமை இருக்கிறதோ இல்லையோ ,ஆனால் அதை படிப்பதற்கு உங்களுக்கு நிறைய பொறுமை வேண்டும்.அதனால் நாம் பதிவின் அடுத்த பகுதிக்கு போகலாம்.

இந்த வீணையை தரையில் உட்கார்ந்து கொண்டு,பெரிய குடத்தை வலது பக்கம் தரையில் இருத்தி,யாளி முக பக்கம் இருக்கும் குடத்தை இடது பக்கத்தொடையின் மேல் பொருத்திக்கொள்வார்கள்.
தந்திகளை வலது கையினால் மீட்ட வேண்டும். வலது கையின் ஆட்காட்டி விரல் மற்றும் நடு விரலை கொண்டு 7 தந்திகளில் வாசிப்பு தந்திகள் எனப்படும் 4 தந்திகளை மட்டும் கீழ்நோக்கி மீட்டி வாசிப்பார்கள்.மற்ற மூன்று தந்திகளான தாள-சுருதி தந்திகளை வலது கையின் சுண்டு விரலை கொண்டு மேற்புரம் நோக்கி மீட்டுவார்கள்.
பலர் விரல்களின் மேல் மீட்டுக்கோள் எனப்படும் க்ளிப்புகளை பொருத்திக்கொண்டு மீட்டுவார்கள் (இல்லையென்றால் விரல் என்னத்துகாகறது),ஆனால் சிலர் நகங்களாலேயே மீட்டுவார்கள்.
இடது கையின் விரல்கள் எல்லாம் தந்தியின் மேல் அழுத்தம் கொடுத்து இசையை மாற்ற பயன்படும். இதை சொல்லும்போதே கண்ணைகட்டுகிறதே,இதை நீண்ட நேரம் தாங்கிக்கொண்டு வாசித்தால் காலிலும்,முதுகிலும்,விரல்களிலும் எவ்வளவு வலி ஏற்படும் என்று வாசிப்பவர்கள் தான் கூற முடியும்!! லேசுப்பட்ட விஷயம் இல்லை!!! :-)
நமக்கு வீணை என்றாலே நினைவுக்கு வருவது சரஸ்வதி வீணை என்ற வகை வீணை தான். நான் மேலே சொன்ன குறிப்புகள் கூட சரஸ்வதி வீணையை பற்றியதுதான், ஏனென்றால் இப்போதைக்கு மிக பரவலாக உபயோகப்படுத்தப்படுவது இந்த வகை வீணைகள் தான். ஆனால் வீணையில் வேறு ரகங்களும்் கூட உண்டு.அவற்றில் முக்கியமான சில வகைகள் பற்றி சிறிது பார்ப்போமா??


ருத்ர வீணை:
வீணையின் வகைகளில் நாம் முதலில் பார்க்க போவது ருத்ர வீணை. இது பெரும்பாலும் ஹிந்துஸ்தானி சங்கீததின் ஒரு வகையான துருபத் எனும் இசையை இசைக்க உபயோகப்படுத்தப்படுகிறது. இதற்கும் சரஸ்வதி வீணைக்கும் உள்ள வித்தியாசங்களை பார்தோமென்றால்,சரஸ்வதி வீணையில் குடங்கள் வெவ்வேறு அளவுகளில் இருக்கும் ஆனால் ருத்ர வீணையில் இரண்டு பக்கமும் சம அளவுள்ள காய்ந்து போன பூசனிக்காய்கள் பொருத்தப்பட்டிருக்கும். சரஸ்வதி வீணையில் உள்ளது போலவே இந்த வீணையிலும மெட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும் (அதாங்க!!அந்த தாயக்கட்டைகள்!! :-))்
இந்த வீணையை வாசிக்கும் விதமே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். தண்டியின் ஒரு பகுதியில் உள்ள குடத்தை தோளின் மேல் இருத்திக்கொண்டு இந்த வகையான வீணையை வாசிப்பார்கள். இந்த ்இந்த வகை வீணைகள் இப்பொழுதெல்லாம் அவ்வளவாக பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் இந்தியாவின் மிக பழமையான இசை கருவிகளில் ருத்ர வீணையும் ஒன்று.


விசித்திர வீணை:
இதுவும் பார்க்க கொஞ்சம் ருத்ர வீணை போலவே தான் இருக்கிறது இல்லையா?? இந்த வீணையிலும் இரு புறமும் காய்ந்து போன பூசனிக்காய்களை பொருத்தி இருப்பார்கள். ஆனால் ருத்ர வீணையை போல இது ஒன்றும் பழமையான இசைக்கருவி அல்ல. இந்த வீணைக்கும் ருத்ர வீணைக்கு உள்ள ஒரு வித்தியாசம் என்னவென்றால் இந்த வீணையில் மெட்டுகளே கிடையாது. அதுவும் தவிர இந்த வீணையை வாசிக்கும் விதத்திலும் சிறிது விசித்திரம் உண்டு. வலது கை விரல்களால் தந்திகளை மீட்டியபடி இடது கையில் ஒரு விதமான தட்டையான மீட்டுக்கோளை பயன்படுத்தி தேய்த்து தேய்த்து வாசிப்பார்கள். இந்த வீணையும் இப்பொழுதெல்லாம் அவ்வளவாக பயன்படுத்தபடுவதில்லை. அதனால் வீணை உலகில் முடி சூடா ராணியாக சரஸ்வதி வீணையை நாம் எண்ணிக்கொள்ளலாம்.


கோட்டுவாத்தியம்:
இந்த வகை வீணைக்கு சித்திர வீணை என்றும்,மஹாநாடக வீணை என்று பல பெயர்கள். பார்ப்பதற்கு இது சரஸ்வதி வீணையை போலத்தான் இருக்கும். ஆனால் இந்த வீணையில் என்ன வித்தியாசம் என்றால் இதில் மொத்தம் 21 தந்திகள் உண்டு!! (யெப்பா!!) அதுவும் ஒவ்வொன்றும் மிக தடிமனானவை.இந்த வீணையை விசித்திர வீணையை வாசிப்பது போலவே இடது கையால் ஒரு விதமான தட்டையான மீட்டுகோளை வைத்து ஒலி எழுப்புவார்கள். வலது கையால் தந்திகளை மீட்டுவார்கள்.
இந்த வீணையில் உள்ள இன்னொரு முக்கியமான வித்தியாசம் என்னவென்றால்,இதில் கூட விசித்திர வீணையை போல் மெட்டுக்கள் கிடையாது.இந்த வீணையின் வரலாறு ஒன்றும் பெரியது அல்ல,சுமார் 100 வருடங்களாக தான் இது புழங்கி வருவதாக கூறப்படுகிறது.திருவிடைமருதூர் சகாராம் என்பவரால் இது முதல் முதலாக பிரபலப்படுத்தப்பட்டது,பின் மைசூர் சமஸ்தானத்தில் அரண்மனை இசைகலைஞரான நாராயண ஐயங்கார் என்பவரால் இது மேலும் மக்களால் அறியப்பட்டது.ரவிகிரண் போன்ற புகழ்பெற்ற இசைகலைஞர்களால் இந்த விதமான வீணையின் நாதத்தை இன்றும் இசை உலகில் கேட்க முடிகிறது

வீணை நம் நாட்டின் கலாசாரத்தையும் ,பாரம்பரியத்தையும் குறிக்கும் சின்னமாக கருதப்படுகிறது. படிப்புக்கு அதிபதியான கலைவாணியின் கையில் வீணையை கொடுத்திலேயே அதற்கு நம் மக்கள் எவ்வளவு மரியாதை கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம். நான் முன்பே குறிப்பிட்டிருந்தது போல கர்நாடக இசை உலகில் வீணைக்கு என்று ஒரு தனி மரியாதைக்குரிய இடம் எப்பொழுதும் உண்டு.
அதுவும் இல்லாம நம்ம அப்துல் கலாம்,KRS,துர்கா அக்கா(:P) மாதிரி பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வீணை வாசிக்க தெரிஞ்சவங்களா இருக்காங்க!! இது மாதிரி வீணையின் சிறப்பை எல்லாம் சொல்லிக்கிட்டே போகலாம்.

பதிவும் பெருசாகிட்டே போய்ட்ருக்கு. போன தடவை மாதிரி பதிவு எழுதிட்டு ரொம்ப பெருசாகிடுச்சுன்னு யாரும் படிக்காம போயிட போறாங்க!! அதனால நான் மொக்கையை நிறுத்திக்கிட்டு கடையை கட்டுறேன். போறதுக்கு முன்னாடி ஒரு அருமையான வீணை இசைப்படத்தை போட்டிருக்கேன். இருக்கற வெயிலுக்கு இதமா வீணை இசை இன்பத்துல நனைஞ்சிட்டு போங்க.
வரட்டா?? :-)



References :
http://en.wikipedia.org/wiki/Veena
http://www.sawf.org/music/interviews/veena/veena.asp?pn=Music
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AF%88#.E0.AE.B5.E0.AE.B0.E0.AE.B2.E0.AE.BE.E0.AE.B1.E0.AF.81
http://en.wikipedia.org/wiki/Rudra_veena
http://www.buckinghammusic.com/veena/veena.html
http://www.indian-instruments.com/stringed_instruments/rudra_vina.htm
http://www.dhrupad.info/rudraveena.htm
http://en.wikipedia.org/wiki/Image:Femme_Vina.jpg
www.beenkar.com/.../RudraVeenaSmallSuvir.jpg
http://www.geocities.com/Vienna/Stage/2225/pictures/ravikiran.jpg
http://www.chandrakantha.com/articles/indian_music/gotuvadyam.html
மற்றும் சில

21 comments:

ACE !! said...

நல்ல தெளிவா எளிமையா (மேலோட்டமா :D ) எழுதியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்...

வீணையில இத்தனை வகை இப்போ தான் கேள்வி படறேன்..

ACE !! said...

படம் போட்டு விளக்கிய விதம் அருமை.. நன்றி..

Anonymous said...

நான் வந்துவிட்டேன்.ஆமா உங்க கோஷ்டியில் ஒருத்தர் நல்ல வீணை வாசிப்பார் என்று கேள்விப்பட்டேனே?நிஜமாகவா?

Anonymous said...

//பலர் விரல்களின் மேல் மீட்டுக்கோள் எனப்படும் க்ளிப்புகளை பொருத்திக்கொண்டு மீட்டுவார்கள் (இல்லையென்றால் விரல் என்னத்துகாகறது),ஆனால் சிலர் நகங்களாலேயே மீட்டுவார்கள்.//

:-((((

என் சோக கதையை கேளுங்க.எங்க மாஸ்டர் நீ நகத்தையே வளர்காதே வெறும் விரலால் மீட்டுன்னு சொல்லிட்டார்.என் விரல் மிகவும் சிறியது என் அளவுக்கு ஏற்ற மீட்டி இல்லையென்று இப்படி எல்லாம் கொடுமை படுத்துகின்றார்.
நகம் வளர்த்தால் வீணை நன்றாக வாசிக்க முடியாது என்றார்.(ஆனால் அவர் பேச்சை நான் கேட்பதே இல்லை.)நிஜமாக நகம் நீண்டு இருந்தால் இசை நன்றாக வரதா?தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Anonymous said...

/ஒரே மரத்தினால் செய்யப்பட்ட வீணைகளுக்கு ஏகாண்ட வீணை என்று பெயர் உண்டு.
//

தூக்கி பார்த்தால் தானே உங்களுக்கு எல்லாம் என் கஷ்டம் புரியும் :-((
ஒரே கட்டையில் செய்த வீணைகளின் இசை நன்றாக வரும் என்று கேள்வி பட்டு இருக்கின்றேன்.இரண்டு கட்டைகள் இணைந்து இருந்தால் அது ஓட்டு வீணை என்று மாஸ்டர் சொன்ன் ஞாபகம்.

Anonymous said...

தம்பி வீணை வாசிக்க கத்துகிட்டு இருக்கேன் தான் பெயரு.ஆனா எனக்கு நீங்க சொன்ன பல விஷயம் எனக்குத் புதுமையாக இருந்தது.முக்கியமாக அந்த ருத்திர வீணை,விசித்திர வீணை எல்லாம் எப்படி வாசிப்பார்கள் என்று...
நல்ல பதிவு சிவிஆர்
ரொம்ப கஷ்டப்பட்டீங்களோ?ஹிஹி.வாழ்த்துக்கள்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

துர்கா...வீணைன்னு பதிவு போட்டதும், enthuவாகி...பின்னூட்டத்திலேயே சூப்பரா வாசிக்க ஆரம்பிச்சிட்டாங்களே! அருமை!

//உங்க கோஷ்டியில் ஒருத்தர் நல்ல வீணை வாசிப்பார்// -ஆகா வெட்டி!சொல்லவே இல்ல?:-)

//நகம் வளர்த்தால் வீணை நன்றாக வாசிக்க முடியாது என்றார்//

மைசூர் ஸ்டைல் (வீணை துரைசாமி ஐயங்கார்) என்ற ஒன்று உள்ளது. அதில் மீட்டுக்கோள் போட்டுக் கொள்ளாமால் விரல்/நகத்தால் தான் வாசிப்பார்கள்.
இது மெல்லிய மெட்டுகளுக்கு ஓகே!

ஆனால் கனராகங்களை வீணையில் வாசிக்க ஆரம்பித்தால் தெரியும்! வீட்டில் தலைமுடி எண்ணெயை விட, நகத்துக்குத் தான் எண்ணெய் வாங்க வேண்டி இருக்கும்! :-)
நகம் உடைந்து போவதும் அதிகம்.

அதனால் தான் செயற்கை நகங்கள் கண்டு பிடிச்சாங்க! (Western fashionக்கு எல்லாம் முன்னாலேயே இந்த artificial nails நம்மூரில் வந்து விட்டதுபா...வீணைக்காக!)

துர்கா, உங்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இல்லையா? :-)
இது கொஞ்சம் உதவியா இருக்கும். க்ளிப்பை மாட்டாமல், நக வலியும் இல்லாமல் ஒப்பேத்தலாம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பாருங்க, நான் CVR பற்றி ஒண்ணுமே சொல்லாம, துர்காவுக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன்! ஏற்கனவே CVR-க்கு என் மேல கோபம். இப்ப இது வேறயா?

நல்ல பதிவு CVR.
முடிஞ்ச வரை எளிமையா விளக்கி இருக்கீங்க! கோட்டு வாத்தியம் மட்டும் மிஸ் பண்ணிட்டீங்க! அதுவும் வீணை போலவே தான் இருக்கும்!

அது சரி, நீங்க எதுக்கு திடீர்னு வீணையைக் கையில் எடுத்தீங்க? எங்கோ பஜ்ஜி சாப்பிடும் போது, யாரோ வீணை வாசிக்க, அதைக் கேட்டுக்கிட்டே சாப்பிட்டீங்கன்னு ஒரு தகவல் வந்ததே!
அடா அடா அடா...ஸ்ரீதேவி வீணை வாசிச்சுகிட்டே, "சின்னஞ் சிறு வயதில், எனக்கோர் சித்திரம் தோணுதடீ" ன்னு நம்ம கமலஹாசனைப் பாத்துப் பாடினாங்க என்ற விடயத்தை ராயல் கூட சொல்லாம மறைச்சிட்டாரேப்பா!

இதுக்கு மேல துர்கா, வெட்டி வந்து சிவிரா-கத்துல வாசிப்பாங்க!

கண்மணி/kanmani said...

ரொம்ப அருமையா இருக்கு பதிவு படங்களும் சூப்பர்.

CVR said...

@ACE
வாங்க ACE
//நல்ல தெளிவா எளிமையா (மேலோட்டமா :D ) எழுதியிருக்கீங்க.. //
ஒன்னும் விஷ்யமே இல்லைன்னு நேரடியாவே சொல்லலாமே தல!! :-D

//படம் போட்டு விளக்கிய விதம் அருமை.. நன்றி.. //
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!!

@துர்கா
//ஆமா உங்க கோஷ்டியில் ஒருத்தர் நல்ல வீணை வாசிப்பார் என்று கேள்விப்பட்டேனே?நிஜமாகவா? //
ஒருத்தர் இல்ல அக்கா!! இரண்டு பேர்!! அவங்க பேரை கூட பதிவுல போட்டிருக்கேனே!! :-)

@கே.ஆர்.எஸ்
அருமையான விளக்கங்கள் அண்ணா!!
நன்றி

//கோட்டு வாத்தியம் மட்டும் மிஸ் பண்ணிட்டீங்க//
அது அவ்வளவு முக்கியமில்லை என தவறுதலாக நினைத்து விட்டேன்.
மன்னிக்கவும்.
இன்று சாயந்திரம் அதை பற்றி சேர்த்து விடுகிறேன்!! :-)

//எங்கோ பஜ்ஜி சாப்பிடும் போது, யாரோ வீணை வாசிக்க, அதைக் கேட்டுக்கிட்டே சாப்பிட்டீங்கன்னு ஒரு தகவல் வந்ததே! //
மொதல்ல நான் சொஜ்ஜி பஜ்ஜி சாப்பிட்டேன் என்று எந்த எனிமி புரளி கிளப்பி விட்டது??? :-P

//இதுக்கு மேல துர்கா, வெட்டி வந்து சிவிரா-கத்துல வாசிப்பாங்க! //
ஆகா!!
நல்லா கிளப்பி விட்டுட்டீங்க!! இப்போ சந்தோஷமா??? :-)))

@கண்மணி
//ப அருமையா இருக்கு பதிவு படங்களும் சூப்பர். //
வாங்க அக்கா!!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!! :-)

Anonymous said...

@KRS
//துர்கா...வீணைன்னு பதிவு போட்டதும், enthuவாகி...பின்னூட்டத்திலேயே சூப்பரா வாசிக்க ஆரம்பிச்சிட்டாங்களே! அருமை!//

தெரிஞ்ச வாத்தியம்.அதுவும் எழுத தம்பி ரொம்ப கஷ்டப்பட்டார்.ஆகவே எல்லாம் ஒரு கரிசனம்தான்.வீணை நேரில் வாசித்தால் எல்லாரும் எஸ்கேப் ஆகிடுவீங்க.ஆகவே கும்மி மட்டும் அடிகின்றேன் :-)
மற்றொரு வீணை வித்துவான் நீங்க என்று பட்சி சொல்லிற்று.உண்மையா?

Anonymous said...

//துர்கா, உங்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இல்லையா? :-)
இது கொஞ்சம் உதவியா இருக்கும். க்ளிப்பை மாட்டாமல், நக வலியும் இல்லாமல் ஒப்பேத்தலாம்!//

இல்லையே :D
நகத்தோடு வாசிப்பதில் எனக்கு கஷ்டம் இல்லை.என்னை நகத்தோடு பார்க்கும் மாஸ்டர்க்கு கோவம் வருது :-((

Anonymous said...

//இதுக்கு மேல துர்கா, வெட்டி வந்து சிவிரா-கத்துல வாசிப்பாங்க! //

அதுக்குதான் கும்மி அடிக்க ஆள் சேர்த்துகிட்டு இருக்கேன்.அண்ணா நீங்களும் கும்மியில் வந்து ஐக்கியம் ஆகி விடுங்கள் :-)

Anonymous said...

//மொதல்ல நான் சொஜ்ஜி பஜ்ஜி சாப்பிட்டேன் என்று எந்த எனிமி புரளி கிளப்பி விட்டது??? :-P
//

நான் இல்லை சாமீ.சொன்னவரை அனுப்புறேன்.waituuuu

Anonymous said...

//நல்லா கிளப்பி விட்டுட்டீங்க!! இப்போ சந்தோஷமா??? :-)))//

சந்தோசம்.கும்மி அடிக்க விரல் காத்துக் கொண்டிருக்கின்றன.வெட்டி அண்ணா சீக்கிரம் இந்த இராகத்தை பற்றி எழுதுங்கள் :D

//எங்கோ பஜ்ஜி சாப்பிடும் போது, யாரோ வீணை வாசிக்க, அதைக் கேட்டுக்கிட்டே சாப்பிட்டீங்கன்னு ஒரு தகவல் வந்ததே//

இந்த தகவலை தந்தமைக்கு நன்றி krs அண்ணா.வருங்காலத்தில் இந்த information use ஆகும்.

Avial said...

Veenai oda speciality innum onnu . Its the instrument where sahityam can be felt better than the swarams. Ippadi ennoda music miss solli kelvi .

Cheers,
Madhu

cdk said...

கர்நாடக சங்கீதத்தை முறையா கத்துக்கிட்டீங்களா??

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Madhusoodhanan said...
Veenai oda speciality innum onnu . Its the instrument where sahityam can be felt better than the swarams. Ippadi ennoda music miss solli kelvi//

ஓரளவு உண்மை தான் மது. ஏன்னா கமகம் என்று சொல்லப்படும் oscillation of the note வீணையில் கொண்டு வரும் போது கம்பீரமாக இருக்கும். வீணையின் குடத்தில் இருந்து எழும் அடி நாதம் என்பதால், அதன் கமக ஒலி அவ்வளவு கம்பீரம்!

ஆனால் என்னைப் பொருத்தவரை, வயலின் தான் close to human voice.
அதான் பெரும்பாலும் எல்லாக் கச்சேரிகளிலும் ராகத்துக்கு வயலின், தாளத்துக்கு மிருதங்கம்-ன்னு இருக்கு!

சொல்லப் போனா, வயலின் வருவதற்கு முன் வீணை தான், வயலினுக்குப் பதிலாக இருந்தது.
ஆனா ஒரு நீண்ட தொடர்ச்சியான ஸ்வரத்தை வீணையில் கொடுப்பது கொஞ்சம் கஷ்டம் (plucking என்பதால்).
ஆனால் தொடர்ச்சியா பாடல் கூடவே ஓடி வர வயலினால் முடியும்...அதான் பல பேர் உஜாலாவுக்கு மாறின மாதிரி, வயலினுக்கு மாறிட்டாங்க போலும்! :-)

ஆனா வீணையின் கம்பீரத்தை மிஞ்ச முடியாது. அதான் ரங்க ராஜன் என்னும் திருவரங்கத்து நம்பெருமாளுக்கு இரவு ஏகாந்த சேவையில், கம்பீர வீணை வாசிக்கிறார்கள், அதுவும் குழுவாக...காண/கேட்க வேண்டிய காட்சி.

CVR said...

@மதுசூதனன்
வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே!! :-)

@கண்ணபிரான்
அண்ணாத்த!! இந்த மாதிரி அப்பப்போ வந்து கொஞ்சம் காப்பாத்துங்க!! :-)

@CDK
எனக்கு எசையை ரசிக்க மட்டுமே தெரியும் தலைவா,நான் முறையாக இசையை பயின்றதில்லை!! :-)

Ananth said...

ஆதாரம்: "சங்கீத சாரம்", கலைமாமணி பேராசிரியர் R.V. கிருஷ்ணன், Published by: இசைத் தகவல் தொடர்பு மையம்.

வீணை: "தற்கால அமைப்பிலுள்ள வீணை சுமார் 300 வருடங்களாகத்தான் இருந்து வருகிறது. தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கர் என்னும்ம் மன்னரால் இந்த வீணையின் தற்போதைய அமைப்பு அறிமுகப் படுத்தப் பட்டதால், இதனை ரகுநாத வீணையெனக் குறிப்பிடுவதுண்டு"

கோட்டு வாத்தியம்: "நான்கு நூற்றாண்டுகளுக்கு முன் தென்னிந்தியாவில் தோன்றிய வாத்தியமாகும். நகுநாத நாயக்கரால் தெலுங்கில் எழுதப்பட்ட (17ம் நூற்றாண்டு) சிருங்கார சாவித்ரி என்னும் நூலில் இந்த வாத்தியத்தின் பெயர் (கோட்டு வாத்தியம் என்ற பெயர்) குறிப்பிடப் பட்டுள்ளது. கோடு என்றால் மரத்துண்டு எனப் பொருள்படும். மரத்துண்டினால் தந்திகளின் மேல் உராய்சி இசை எழுப்பப்படுவதினால் இதற்கு 'கோடு' வாத்தியம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம். அதுவே பிற்காலத்தில் 'கோட்டு வாத்தியம்' எனத் திரிந்திருக்கலாம் எனவும் யூகிக்க இடமுண்டு. ரகுநாத நாயக்கர் தற்போதைய வீணையை உருவாக்கிய போது, கோட்டு வாத்தியம் தோன்றத் தலைப் பட்டது".


"....ராமாமாத்தியாரால் கிபி1550ல் எழுதப்பட்ட 'ஸ்வர மேள கலாநிதி' என்ற சமஸ்கிருத கிரந்தம், அக்காலத்திலேயே சங்கீதக்கலை சம்பந்தமாக நிலவி வந்த ஐயப்பாடுகளை நீக்கும் வகையில் அமைந்தது. இதில் முன்னுரை, ஸ்வரம், வீணை, மேளம், ராகம் என்ற ஐந்து அத்தியாயங்கள் உள்ளன. இவர் பல ரகமான வீணைகளை விவரிக்கின்றார். தற்காலத்தில் வழக்கத்திலுள்ள 24 மெட்டுகளுடன் கூடிய வீணை 'சர்வராக மேள வீணை' என்ற பெயருடன் இவரால் குறிப்பிடப்பட்டுள்ளது."

~~~~

சோமநாதர் எழுதிய ராகவிபோதம் (17ஆம் நூற்றாண்டு?) படித்திருக்கிறேன். வீணையை அமைப்பது, tuning பற்றி விலாவரியாக எழுதியிருக்கிறார். இவர்தான் பல (20-24?) தந்திகளுடைய அந்தக் கால வீணையை (யாழ்?) மாற்றி, தற்போதுள்ளது போல ஒரே தந்தியில் மெட்டுக்களால்(frets) பல ஸ்வரங்களை வாசிக்கும்படி அமைத்தார் என்று கூறப்படுகிறது.

~~~~

மாணிக்கவாசகர், திருப்பள்ளியெழுச்சி - "வீணையர் ஒருபால், யாழினர் ஒரு பால்"

:-)

Ananth said...

//சொல்லப் போனா, வயலின் வருவதற்கு முன் வீணை தான், வயலினுக்குப் பதிலாக இருந்தது.
ஆனா ஒரு நீண்ட தொடர்ச்சியான ஸ்வரத்தை வீணையில் கொடுப்பது கொஞ்சம் கஷ்டம் (plucking என்பதால்).
ஆனால் தொடர்ச்சியா பாடல் கூடவே ஓடி வர வயலினால் முடியும்...அதான் பல பேர் உஜாலாவுக்கு மாறின மாதிரி, வயலினுக்கு மாறிட்டாங்க போலும்! :-) //

வீணை 'மீட்டும்' வாத்தியம் என்பதால் சப்தம் திடீரெனக் கிளம்பி படிப்படியாக ஒலியிழக்கிறது. (fast attack, decay). வயனின் 'வில்'லிசைக் கருவியாதலால் 'attack' இல்லாமல் ஒரே சீரான ஒலி உருவாகிறது.

இவை மட்டுமில்லாமல், இவ்விரு கருவிகளின் ஒலியின் தன்மையால் (மிருது/ கணீர்) வீணையைவிட வயனின் பக்கவாத்தியமாக வாசிக்கத்தக்கதாகிறது.

pack செய்து எளிதாகத் தூக்கிக் கொண்டு போக முடிவதும், வயலின் famousஆனதற்கு ஒரு முக்கியமான காரணம். (மேற்கத்திய டபுள்-பேஸ் வழக்கிழந்து போனதற்கு அதன் சைஸ்தான் காரணம்!)

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP