Thursday, October 18, 2007

தமிழ் மொழியில் தியாகராஜர்- நீ தய ராதா?(உன் தயவில்லையா)?

எனக்கு இசை ரொம்ப பிடிக்கும்!
தமிழில் இசையோ ரொம்ப ரொம்ப பிடிக்கும்!
தனிமையில் என்னைப் பிடியாய்ப் பிடிக்கும்!
தவிக்கும் உள்ளத்தில் செடியாய் முளைக்கும்!

நியுயார்க் நகரத்தை ஒட்டினாப் போல இருக்கும் ஆறு, ஹட்சன் ஆறு!
இன்று அலுவலகத்தில் ஒரு நீண்ட.....நெடிய......மீட்டீங்....முடிந்த பின்னர், அடப் போங்கடா... கொஞ்சம் புதுக் காற்றையாச்சும் சுவாசிக்கலாமே என்ற எண்ணம் வந்துச்சு!
அதனால் ஆத்தோரமா காலாற நடந்து கொண்டிருந்தேன். உடனே "ஆத்தா, ஆத்தோரமா போறியா" ன்னு பாட்டை எல்லாம் எடுத்து வுடாதீங்க! :-)

குளிரும் அவ்வளவா இல்லை! வெயிலும், காற்றும் மிதமாய் வீசின!
என் mp3 ப்ளேயரில் அப்ப தான் ஏதோ ஒரு பாட்டு முடிஞ்சு, திடீரென்று ஒரு உருக்கமான பாட்டு துவங்கியது! - "நீ தய ராதா"?

சிந்து பைரவி படத்தில், நம்ம சிந்து, இந்தப் பாட்டின் முதல் வரியை மட்டும் ஜேகேபி-கிட்டே மொழி மாத்தி, தமிழில் பாடிக் காட்டுவாய்ங்க! அதுல இருந்து அவரும் தமிழிசைக் கட்சியில் சேந்துடுவாரு! :-))

ஆகா...இது நான் விரும்பிக் கேட்கும் ஜேசுதாஸ் பாட்டாச்சே! கொஞ்ச நேரம் அப்படியே சொக்கிப் போய் நின்று விட்டேன்!
பொருள் லேசாகத் தெரிஞ்சாப் போலத் தான் இருந்திச்சு! ஆனா அதை விட, சூழ்நிலைக்கு அந்தப் பாட்டு ரொம்ப பொருத்தமாய், இதமாய் இருந்துச்சு!

ஏன்னா, நெருங்கிய நண்பருடன் சண்டை! ஒரு நாலு வாரமா பேசவும் இல்லை! சாட்டவும் இல்லை! நடுவில் ஒரு முறை அழைத்துப் பார்த்த போது, நண்பர் கொஞ்சமும் கோபம் தணியாமல் (இல்லையில்லை...ஒரு விதமான செல்லமான உரிமையில்....), தொலைபேசியை கட் பண்ணி விட்டார்! :-) இந்த மாதிரி சமயத்தில் நாம் என்ன சொல்வோம்? - டேய், ரொம்ப தான் கோச்சிக்காதே! போதும்-டா, நிறுத்திக்கோன்னு! சொல்லலாம்!

ஆனா தியாகராஜர் வேற மாதிரி சொல்லுறாரு!
ஸ்ரீராமனே! உனக்குத் தயவே இல்லையா? உன் மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்க நீ? அப்படின்னு கேள்வி மேல கேள்வியா கேட்டுட்டு, கடைசில நச்-சுன்னு ஒரு பாயிண்டை வைக்கறாரு!
மன்னிச்சுட்டேன்னு சொன்னா என்ன கொறைஞ்சாப் போயிடுவே நீயி-ன்னு, தலையில் ஒரே தட்டா தட்டறாரு!:-)



இந்தப் பாட்டை நம் கொஞ்சு தமிழில் கேட்டா எப்படி இருக்கும்-னு உடனே தோணிச்சி!
அமெரிக்கா வந்த புதுசுல, பொழுது போகாம, இது போல ஏற்கனவே சில பிரபலமான கீர்த்தனைகளை, சும்மானாங்காட்டியும் தமிழில் ஆக்கி வைச்சிருந்தேன்!
ஒலிப்பேழையில் ஜேசுதாஸ் பாடப்பாட, நானும் அவர் கூடவே தமிழில் ஹம் பண்ணிக்கிட்டே நடந்து கொண்டிருந்தேன்!

ஆத்தோரமா ஜாகிங் பண்ண வந்த ஆத்தாக்கள், ஆத்தீ...இவன் தானாப் பேசிக்கறானேன்னு, நினைச்சுதுங்களோ என்னவோ...புன்சிரிப்பு தூவிட்டுப் போச்சுதுங்க!
நான் தான் இசையின் போதையில் இருந்தேனே! பாட்டைத் தவிர ஒன்னுமே மனசுல நிக்கலை!

தெலுங்குப் பாட்டையும், தமிழ் ஆக்கத்தையும் கீழே கொடுத்திருக்கேன்! பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க!
தமிழில் ஆக்கும் போது, அதே ராகமும் மெட்டும் அப்படியே வரவேண்டி இருக்கு; அதனால் தமிழ்ச் சொற்களை ஆங்காங்கே சற்று மாற்றி அமைக்க வேண்டி இருக்கு!
தியாகராஜரின் தெலுங்கோ, மக்களின் பேச்சுத் தெலுங்கு! அதனால் தமிழ் செய்யும் போது, அதே எளிமை வந்தா தான் இன்னும் நல்லா இருக்கும்!

இதோ...பாட்டைக் கேட்டுக்கிட்டே படிச்சீங்கன்னா, தியாகராஜர் என்ற இசைக் கடலின் சுவையில் நீங்களும் கிறங்கிப் போயிடுவீங்க!
உங்களுக்கு எது விருப்பமோ, அதைக் க்ளிக்கி கேளுங்க!.....நான் விரும்பியது நித்யஸ்ரீ மற்றும் சுசீலாம்மா பாடுவது...
* சிந்து பைரவி-யில் ஜேசுதாஸ் பாடுவது
** சுசீலாம்மா, ஒரு தெலுங்கு படத்தில், கொஞ்சம் ஜனரஞ்சகமாப் பாடுவது

* நித்யஸ்ரீ பாடுவது
** N.C. வசந்த கோகிலம் பாடுவது
*** வீணையில், காருக்குறிச்சி சகோதரர்கள்

ராகம்: வசந்த பைரவி
தாளம்: ரூபக தாளம்
பாடல்: நீ தய ராதா
வரிகள்: தியாகராஜர்


பல்லவி
(நீ தய ராதா...ராமா...நீ தய ராதா)
உன் தயவில்லையா?...ராமா...உன் தயவில்லையா?

அனுபல்லவி
(காதென வாரு எவரு...கல்யாண ராமா)
தடுப்பது யார் எவரோ?...கல்யாண ராமா...!!

சரணங்கள்
(முதல் இரண்டு பத்திகள் அவ்வளவா யாரும் பாடுவதில்லை...அதனால படிச்சிட்டு, ஸ்கிப் பண்ணிடுங்க...ஆனா பி.சுசீலா மட்டும் முழுவதுமே பாடுறாங்க...)

(நன்னு ப்ரோ-சுவர் இலனு நாடே தெலிய
இன வம்ச திலகா நீக்கு இந்த தாமசமா)

காப்பவர் யாருமிலை என்று, முன்பே தெளிந்தனனே!
கதிரவ குல திலகா, இனியும் உனக்குத் தாமதமா?


(அன்னித்திக்கு அதிகாரி வாநீ - நீனு பொக டித்தே
மன்னிஞ் சிதே நீது மகிமக்கு தக்கு வா)
அனைத்தும் நின் பொறுப்பே - உன்றன் கண்ணியம் குறைபடுமோ?
மன்னித்து அருளாயோ - உன்றன் மகிமையும் குறைபடுமோ?

(ராம ராம ராம தியாக ராஜ ஹ்ருத் சதனா
நாமதி தள்ளதில்லகா நியாயமா வேகமே)

ராம ராம ராம, தியாக - ராஜ மன வாழ்வே
என்மதி தள்ளாடக் கண்டும், நியாயமா? வா வேகமா(ய்)!

இது போல வேறு சில கீர்த்தனைகளையும் அவ்வப்போது இசை இன்பத்தில் அதே மெட்டு வராப்போலக் கொடுக்கலாம்-னு எண்ணம்! இவ்வாறு செய்வதால் மூலக் கீர்த்தனைகளை மதிக்கவில்லை என்று தயவு செய்து எண்ண வேண்டாம்! தியாகராஜரின் முன்னால் அடியேன் முயற்சி வெறும் கால் தூசி தான்!

உள்ளத்துக்கு உள்ளே உருகும் போது, மொழி குறுக்கே வரப் போவதில்லை! - இசையை மட்டும் ஹம் பண்ணி லயித்து விடலாம்!
பாட்டை, வீணையிலோ வயலினிலோ கேட்கும் போது, மொழி வந்து முன்னே நிற்கிறதா என்ன?

ஆனா, அப்படி எல்லாம் உருகிக் கேட்கணும்-னா,
மனசு அதை முதலில் உணர வேண்டும் இல்லையா?
பொருளை உணரும் போது, மனம் தியாகராஜரையும் உணர்கிறது! கரைகிறது!வீணையிலோ வயலினிலோ ஒலியாய் கேட்கும் போது கூட, உணர்ந்து உணர்ந்து, கூடவே பாடுகிறது!

பாருங்க...இந்தப் பதிவை எழுதி முடிக்கும் போது கூட, உன் தயவில்லையா-ன்னு பாடிக்கிட்டே தான் இருக்கேன்! அப்போ நீங்களும் ஹம் பண்ணத் துவங்கியாச்சா?
நீ தய ராதா...ராமா...நீ தய ராதா!

41 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இன்று சிங்கையில் வீணைக் கச்சேரி செய்யப் போகும் அன்புத் தங்கை பதிவர் துர்காவுக்கு நல்வாழ்த்துக்கள்!

அவர் வாசிக்கப் போவதும் நகுமோமு என்ற தியாகராஜர் கீர்த்தனை தான்!
கலக்குங்க துர்கா! கலக்குங்க!!

Anonymous said...

thanksssuuuuu anna :))

nalla vasichu unga peyara kappal ethuren i mean kappathuren anna.
thanks for the support and encouragement.

துளசி கோபால் said...

எங்கய்யா இருக்கீர் 'அந்த'நண்பா? சீக்கிரம் ஓடிவாருமைய்யா. இங்கே நம்ம
KRS கலங்கறது கண்ணுக்குத் தெரியலையா?

அருமையா வந்துருக்கு 'முழி'பெயர்ப்பு.

//ஆத்தோரமா ஜாகிங் பண்ண வந்த ஆத்தாக்கள், ஆத்தீ...இவன் தானாப் பேசிக்கறானேன்னு, நினைச்சுதுங்களோ என்னவோ...புன்சிரிப்பு தூவிட்டுப் போச்சுதுங்க!
நான் தான் இசையின் போதையில் இருந்தேனே! பாட்டைத் தவிர ஒன்னுமே மனசுல நிக்கலை!//

ஹூம்....இப்படி இருக்கவேண்டிய வாக்கியம்?

ஆத்தாக்களின் புன்சிரிப்பைத்தவிர வேறு ஒன்னுமே மனசில் நிக்கலை:-)))))


அட! நம்ம துர்க்கா, வீணையா?

வாழ்த்து(க்)கள்

Anonymous said...

//ஆனா, அப்படி எல்லாம் உருகிக் கேட்கணும்-னா,
மனசு அதை முதலில் உணர வேண்டும் இல்லையா?
பொருளை உணரும் போது, மனம் தியாகராஜரையும் உணர்கிறது! கரைகிறது//
அழகா இருக்கு நீங்க மேல சொல்லியிருக்கறது. எனக்கும் பல முறை இதேதான் தோணியிருக்கு

வடுவூர் குமார் said...

எனக்கு நித்திய ஸ்ரீ பாடியது தான் ரொம்ப பிடித்திருக்கிறது.
தமிழாக்கம் நன்றாக இருக்கிறது.

jeevagv said...

நன்றாக இருக்கிறது ரவி சங்கர்!

ஹட்சன் ஆற்றுக்கு அந்தப்பக்கமா இந்தப் பக்கமா என்று சொல்லவில்லையே!

இப்படி திடீரென வரும் பதிவில் இனிமை இருக்கத்தான் செய்கிறது!

இந்த பாடலின் ஸ்வரங்களை இங்கே
பார்க்கலாம்!


கருணை இல்லையா இராமா?
ஆதாராம் உன்னையல்லால்
ஆருமில்லை எனக்கெனத் தெரிந்தும் தடுத்தாட்கொள்ள தாமதமேன்?

கோவி.கண்ணன் said...

//நெருங்கிய நண்பருடன் சண்டை!
ஒரு நாலு வாரமா பேசவும் இல்லை//

ரவி,

உங்களுடன் சண்டை இடுகிறவர்களும் இருக்கிறார்களா ?

நம்ப முடியவில்லை

இலவசக்கொத்தனார் said...

அருமையான பாடல். முழிபெயர்ப்பு, சாரி சாரி, மொழி பெயர்ப்பு படிக்க நல்லா இருக்கு. யாராவது பாடிக் கெட்டால்தான், சாரி சாரி கேட்டால்தான் எப்படி இருக்குன்னு தெரியும். அதுக்கு ஒரு போட்டி வையுங்க தல! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//துர்கா|thurgah said...
nalla vasichu unga peyara kappal ethuren//

ஹிஹி...
கப்பல் ஏத்திய தமிழச்சி துர்கா, வாழ்க! கப்பல் எல்லாம் நீங்க ஏத்த வேணாம் ஜிஸ்டர்! ஏற்கனவே ஒருத்தர் ஏத்திட்டாரு! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//துளசி கோபால் said...
எங்கய்யா இருக்கீர் 'அந்த' நண்பா?//

ஹூம்...ஊர் பேரைச் சொன்னேன்னா நீங்க கண்டு புடிச்சிடுவீங்க,,,வேணாம் :-)

//சீக்கிரம் ஓடிவாருமைய்யா. இங்கே நம்ம KRS கலங்கறது கண்ணுக்குத் தெரியலையா?//

டீச்சர் சொல்லியாச்சும் மாணவர் கேக்கறாரா-ன்னு பார்ப்போம்! :-)
நன்றி டீச்சர்.

//அருமையா வந்துருக்கு 'முழி'பெயர்ப்பு//

ஆகா...நம்ம முழியே முழி முழின்னு முழிக்குது. இதுல முழிய பெயர்த்து முழியோ முழின்னு முழிக்க வைக்கணுமா?

//ஆத்தாக்களின் புன்சிரிப்பைத்தவிர வேறு ஒன்னுமே மனசில் நிக்கலை:-)))))//

ஹிஹி...அதெல்லாம் வேறொரு நாளா இருந்திச்சினா ஓகே தான்!
ஆனா நேத்து மெய்யாலுமே பாட்டுல கிறங்கிப் போயிட்டேன் டீச்சர். கண்ணும் கொஞ்சம்.....அப்படி ஒரு இசை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சின்ன அம்மிணி said...
//பொருளை உணரும் போது, மனம் தியாகராஜரையும் உணர்கிறது! கரைகிறது//
அழகா இருக்கு நீங்க மேல சொல்லியிருக்கறது. எனக்கும் பல முறை இதேதான் தோணியிருக்கு//

ஆமாங்க சின்ன அம்மிணி
இசையில் கரைவது ஒன்று! அதுக்கு மொழி கிடையாது.
தியாகராஜர் இல்லை அவரைப் போல பக்தி உள்ளங்களில் கரைவது இன்னொன்று - அதுக்கு மொழி கொஞ்சம் தேவைப்படும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வடுவூர் குமார் said...
எனக்கு நித்திய ஸ்ரீ பாடியது தான் ரொம்ப பிடித்திருக்கிறது.//

சூப்பர்! ஜேசுதாஸ் கொஞ்சம் கம்பீரமாப் பாடுறாரு. அதுனால தான் தயவில்லையா ன்னு உருகுவது அடிபட்டுப் போகுது!

//
தமிழாக்கம் நன்றாக இருக்கிறது//

நன்றி குமார் சார்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//(Jeeva Venkataraman) said...
ஹட்சன் ஆற்றுக்கு அந்தப்பக்கமா இந்தப் பக்கமா என்று சொல்லவில்லையே!//

இந்தப் பக்கம்...படத்துல தெரியுதே! :-)

//இப்படி திடீரென வரும் பதிவில் இனிமை இருக்கத்தான் செய்கிறது!//

புது வெள்ளை மழை போல் ஒரு இனிமை. திட்டமிடாமல் வரும் பதிவு!

//இந்த பாடலின் ஸ்வரங்களை இங்கே
பார்க்கலாம்!//

ஆகா...தளம் ரொம்ப நல்லா இருக்கு! பல கீர்த்தனைகள்! நல்ல முயற்சி. நன்றி ஜீவா.

//கருணை இல்லையா இராமா?
ஆதாராம் உன்னையல்லால்
ஆருமில்லை எனக்கெனத் தெரிந்தும் தடுத்தாட்கொள்ள தாமதமேன்?//

இதுவும் நல்லா இருக்கு ஜீவா
ஆதாரம்-ஆருமில்லைன்னு மோனை எல்லாம் நல்லா வருது.
ஆனா முன்பே சொன்னது போல, பாடிப் பாக்கும் போது, அதே மெட்டும் வருதா-ன்னு பாத்து மொழியாக்க வேண்டி இருக்கே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கோவி.கண்ணன் said...
//நெருங்கிய நண்பருடன் சண்டை!
ஒரு நாலு வாரமா பேசவும் இல்லை//

ரவி,
உங்களுடன் சண்டை இடுகிறவர்களும் இருக்கிறார்களா ?
நம்ப முடியவில்லை//

ஹிஹி...நான் என்ன சொல்ல GK?
எனக்கும் செல்லமான சண்டைகள் பிடிக்கும் தான்! ஆனா இது அதையும் தாண்டிப் போகுதோ-ன்னு மனசுக்குள்ள ஒரு கழிவிரக்கம்! :-(

அச்சோ...கழிவிரக்கம் கூடாதுல்ல?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
அருமையான பாடல். முழிபெயர்ப்பு, சாரி சாரி, மொழி பெயர்ப்பு//

வாருமய்யா...இலவச முழியாரே! சாரி மொழியாரே!

//யாராவது பாடிக் கெட்டால்தான்,//

நீங்களே கெடுங்க தல! சாரி மெனக் கெடுங்க...பாட்டைப் பாடிக் கொடுங்க! :-)

//அதுக்கு ஒரு போட்டி வையுங்க தல! :))//

போட்டியா? சர்வேசனைத் தான் கேட்கணும், பாட்டுக்குப் பாட்டு போட்டி வைக்கறீங்களான்னு! :-)

வல்லிசிம்ஹன் said...

துர்காவுக்கு வாழ்த்துக்கள். இத்தனை நேரம் வாசித்து முடித்து இருப்பார்.

உங்களுடன் யாரும் மன வேறுபாடு கொள்வார்கள் என்று நினைக்கக் கூட முடியவில்லை.

யாராயிருந்தாலும் நட்பைப் பாராட்டி மீண்டும் உங்களுடன் பேசி விடுவார்.
ரவி,
இணைய நட்பு மிகவும் உயர்ந்தது.
எதையும் எதிர்பார்த்து இந்த நட்புகள் ஆரம்பமாவதில்லை என்றே நம்புகிறேன்.
அதனால் வருத்தம் வேண்டாம்.
நாளைக்கே பின்னூட்டமாக வந்துவிடுவார்.:))))
நான் நித்யஸ்ரீ யைத்தான் ரசித்தேன். நன்றி.

வெட்டிப்பயல் said...

////துளசி கோபால் said...
எங்கய்யா இருக்கீர் 'அந்த' நண்பா?//

ஹூம்...ஊர் பேரைச் சொன்னேன்னா நீங்க கண்டு புடிச்சிடுவீங்க,,,வேணாம் :-)//

ஆள் பேரே 10 தடவைக்கு மேல சொல்லியாச்சு. ஊரை சொல்ல மாட்டாராம்...

//டேய் ராமா, உனக்குத் தயவே இல்லையா? உன் மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்க? எதுடா உன்னை அப்பிடித் தடுக்குது? - இப்படின்னு கேள்வி மேல கேள்வியா கேட்டுட்டு, கடைசில நச்-சுன்னு ஒரு பாயிண்டை வைக்கறாரு!
சரிடா ராமா, மன்னிச்சுட்டேன்னு சொன்னா என்ன கொறைஞ்சாப் போயிடுவே நீயி-ன்னு, ராமன் தலையில் ஒரே தட்டா தட்டறாரு!:-)//

கடைசியா அந்த ராமா என்ன பண்ணாரு? பாட்டை கேட்டு மனசு மாறினாரா?

வெட்டிப்பயல் said...

//துர்கா|thurgah said...

thanksssuuuuu anna :))

nalla vasichu unga peyara kappal ethuren i mean kappathuren anna.
thanks for the support and encouragement.//

தங்கச்சி,
அண்ணன் பேரை கப்பல் ஏத்தினயா? உன் இசை என்னும் வெள்ளத்துல மக்கள் எல்லாம் முழுகிட்டாங்கனு BBCல வந்துச்சே.. உண்மையா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வெட்டிப்பயல் said...
ஆள் பேரே 10 தடவைக்கு மேல சொல்லியாச்சு. ஊரை சொல்ல மாட்டாராம்...//

ஹலோ பாலாஜி...
வம்பு பண்ணனும்னா ஆசை ஆசையா ஓடியாந்திடுவீங்களே! :-)
நான் எங்கேய்யா நண்பர் பேரைச் சொன்னேன்?
நானே தியாகராஜர் பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டு பாட்டு கேட்டுக்கிட்டு இருக்கேன்.

//கடைசியா அந்த ராமா என்ன பண்ணாரு? பாட்டை கேட்டு மனசு மாறினாரா?//

என்னைக் கேட்டா? எனக்கென்ன தெரியும்?

தியாகராஜர் பாட்டைக் கேட்டு, ராமன் மனம் மாறினான் போல!
ஒரு நிலைமையில, அப்படியே தியாகராஜரின் வாடகை வீட்டுக்கு, சொல்லாமல் கொள்ளாமல் திடீர் என்று வந்து விடுகிறான். அப்போ எழுதின இன்னொரு பாட்டு தான் - ரா ரா!

சந்திரமுகி ரா ரா இல்லை இது! :-)
இது - ரா ரா மா இண்ட்டி ராமய்யா! அந்தப் பாட்டு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வெட்டிப்பயல் said...
தங்கச்சி,
அண்ணன் பேரை கப்பல் ஏத்தினயா? உன் இசை என்னும் வெள்ளத்துல மக்கள் எல்லாம் முழுகிட்டாங்கனு BBCல வந்துச்சே.. உண்மையா?//

ஹிஹி...
BBC-Balaji Broadcasting Corporation?

கப்பல், கடல் தானய்யா போகும்!
வெள்ளத்துல படகு தான் போகும்!!
எங்க ஜிஸ்டர் சொன்னது கப்பல்! நல்லாப் புரிஞ்சுக்கோங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
யாராயிருந்தாலும் நட்பைப் பாராட்டி மீண்டும் உங்களுடன் பேசி விடுவார்//

ஆறுதலான வார்த்தை வல்லிய்யமா!
நன்றி!

//இணைய நட்பு மிகவும் உயர்ந்தது//

இது இணைய நட்பு-ன்னு நான் சொல்லவே இல்லையே!
நேரடியான நட்பும் கூட வல்லியம்மா! :-)

//எதையும் எதிர்பார்த்து இந்த நட்புகள் ஆரம்பமாவதில்லை என்றே நம்புகிறேன்//

மிகவும் உண்மை!
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சி தான்
நட்பாம் கிழமை தரும்!

//அதனால் வருத்தம் வேண்டாம்.
நாளைக்கே பின்னூட்டமாக வந்துவிடுவார்.:))))//

ஆகா...அப்ப ஒரு மகிழ்ச்சியான சிச்சுவேஷன்-ல இன்னொரு சூப்பர் தியாகராஜர் பாட்டு போடுறேன்!

//நான் நித்யஸ்ரீ யைத்தான் ரசித்தேன்//

ஜேசுதாஸ் = கம்பீரம்
நித்ய ஸ்ரீ = நளினம்
வசந்த கோகிலம் = ராகம்
பி. சுசீலா = உருக்கம்.
நீ தய ராதாஆஆஆஆஆ ன்னு இந்தப் பாடலுக்கு உருக்கம் மிகவும் தேவை எனப்து என கருத்து! :-)

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வெட்டிப்பயல் said...
ஆள் பேரே 10 தடவைக்கு மேல சொல்லியாச்சு. ஊரை சொல்ல மாட்டாராம்...//

ஹலோ பாலாஜி...
வம்பு பண்ணனும்னா ஆசை ஆசையா ஓடியாந்திடுவீங்களே! :-)
நான் எங்கேய்யா நண்பர் பேரைச் சொன்னேன்?
நானே தியாகராஜர் பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டு பாட்டு கேட்டுக்கிட்டு இருக்கேன்.//

இப்படி ஒளிஞ்சிக்கிட்டு கேட்டா அப்படித்தான் இருக்கும்... தைரியமா வந்து கேளுங்க... உங்க பின்னாடி நாங்க இருக்கோம். (திரும்பி பாருங்க)

வெட்டிப்பயல் said...

//
கப்பல், கடல் தானய்யா போகும்!
வெள்ளத்துல படகு தான் போகும்!!
எங்க ஜிஸ்டர் சொன்னது கப்பல்! நல்லாப் புரிஞ்சுக்கோங்க!//

ஆமாம் இவர்தான் ஐசக் நியுட்டன். கண்டுபிடிச்சிட்டாரு...

நாங்க எல்லாம் வெள்ளத்துலயே கப்பல் விடுவோம்...

Avial said...

//உள்ளத்துக்கு உள்ளே உருகும் போது, மொழி குறுக்கே வரப் போவதில்லை!

Absolutely..Music has no religion ..no language..Only pure mind.

Keep up the good work

Madhu

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Madhusoodhanan said...
//உள்ளத்துக்கு உள்ளே உருகும் போது, மொழி குறுக்கே வரப் போவதில்லை!

Absolutely..Music has no religion ..no language..Only pure mind.//

மது, அடுத்த வரியைப் படிக்கலையா? :-)

///Keep up the good work//

நன்றி மது!

sury siva said...

தங்களைப்போன்று தெலுங்கும் தமிழும் கற்றவர் கர்னாடக இசையின் முன்னோடிகளின் பிரபலமான பாடல்களை தமிழில் மொழி பெயர்த்து அதனையும் அதே ராகங்களுக்கேற்றபடி அமைக்கமுயற்சி செய்வது தெய்வீகத்தூண்டுதல் எனவே கொள்ளவேண்டும்.

சூரிய நாராயணன். சென்னை.
http://pureaanmeekam.blogspot.com

G.Ragavan said...

அப்படியே சுகாசினி பாடுன வரிகளை வெச்சுக்கிட்டே தொடங்கீட்டீங்களா :)

இதோ என்னுடைய மொழிபெயர்ப்பு. இசையரசி பாடுனத வெச்சி பெயர்த்துட்டேன். மொழியை. வேறென்ன பெயர்த்தேன்னு நீங்கதான் சொல்லனும்.

நின் அருள் இல்லையா
ராமா
நின் அருள் இல்லையா

தடுப்பவர்தான் எவரோ
கல்யாணராமா
தடுப்பவர்தான் எவரோ
கல்யாணராமா

நின் அருள் இல்லையா
நின் அருள் இல்லையா
நின் அருள் இல்லையா
ராமா................

என்னைக் காப்பவரும் இலையே
நீ காக்க
கதிர் வழிச் சுடரே உனக்கின்னும் தாமதமா

ராம ராம ராம தியாகராஜ உயிர்த் துடிப்பே
என் மதி மயங்கிடுதே முறையோ வா வேகமாய்

நின் அருள் இல்லையா
ராமா
நின் அருள் இல்லையா

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஜிரா-வின் சற்றே எடிட் செய்யப்பட்ட பின்னூட்டம்...
ஜிரா மன்னிக்கவும்! உங்கள் ஆதங்கம் புரிகிறது! ஆனா இது இன்னொரு டெயில் பீஸாக வளர வேண்டாம் என்று தான் எடிட் செய்து விட்டேன்! உங்களிடம் நேரில் விளக்குகிறேன்!//

G.Ragavan said...
தமிழ் தியாகராஜரை அணைக்கிறதா ;)

அணைக்கட்டும். எட்டுத் திக்கும் சென்று கலைச் செல்வங்கள் சேர்க்கத்தானே வேண்டும்.

அடுத்து தங்கை துர்காவிற்கு வாழ்த்துகள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//sury said...
தங்களைப்போன்று தெலுங்கும் தமிழும் கற்றவர்//

அச்சச்சோ...நாக்கு தெலுகு தெலுசு லேதண்டி! அந்தா கேள்வி ஞானம்! அந்தே! :-))

வாங்க சூரி
இதுக்கு முன்பே பல முயற்சிகள் இது போல நடந்துள்ளன. இந்தப் பதிவு இட்ட பின்னர் பாலமுரளி அவர்களின் தமிழாக்கங்கள் பற்றிய ஒலிச் சுட்டி ஒன்றை நண்பர் அனுப்பி இருந்தார்!

அதே ராகங்களில் ஒரு நாலைந்து பாடல்கள்! மிகவும் இனிமை! இனி வரும் பதிவுகளில் இடுகிறோம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//G.Ragavan said...
அப்படியே சுகாசினி பாடுன வரிகளை வெச்சுக்கிட்டே தொடங்கீட்டீங்களா :)//

ஆகா...ஜிரா வராம ஒரு தெலுகு-தமிழ் முழி பெயர்ப்பா?

ஏனய்யா ராகவரே!
அருணகிரிக்கு முருகன் முதற் சொல் கொடுத்தான்! தெரியும்!
அதுக்காக, எனக்கு சுகாசினி முதல்வரி கொடுத்தாங்க-ன்னு சொல்லிட்டீங்களே! ஐயகோ!

//வேறென்ன பெயர்த்தேன்னு நீங்கதான் சொல்லனும்//

இருங்க சொல்லறோம்! :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நின் அருள் இல்லையா ராமா
நின் அருள் இல்லையா

தடுப்பவர்தான் எவரோ
கல்யாணராமா//

நல்லா வந்திருக்கு ஜிரா! நான் தயவில்லையான்னே போட்டிருந்தேன்! அதே பேச்சு வழக்கில்! நீங்க அருள்-னு ஆண்டிருக்கீங்க!

//என்னைக் காப்பவரும் இலையே
நீ காக்க//

இங்க கொஞ்சம் தளை தட்டுது!
மெட்டு சரியா வரல! பாடிப் பாருங்க!
நாடே தெலிய = இதுக்குப் பொருள் தேடிப் பார்த்தேன்!

நாடே = பல காலமாக ன்னு ஒரு பொருள் வருது.
சின்ன நாடே, நா செய்யி பட்டித்துவே ன்னு வேறொரு கீர்த்தனையில், சின்ன நாள் முதலா என் கையைப் பிடித்தவனே என்கிறார்.

காப்பவர் யாருமில்லை என்று முன்பே தெளிந்தும், இன்னும் நீ வரவில்லையா என்று கொண்டால் பொருத்தமா இருக்கும் இல்லியா?

//கதிர் வழிச் சுடரே உனக்கின்னும் தாமதமா//

ஹ்ம்ம்ம்...இன வம்ச திலகா = கதிர் வழிச் சுடரே!
குலம், வம்சம்னு எதையும் இழுக்காம, சிம்பிளா வழிச் சுடரேன்னு சொல்லறதும் பொருத்தம் தான்!

//ராம ராம ராம தியாகராஜ உயிர்த் துடிப்பே//
இதுவும் நல்லா இருக்கு!

//என் மதி மயங்கிடுதே//
மெட்டு உதைக்குது...நா மதி தள்ள டில்லகா...என்று இழுக்குறாங்க...அதுனால இன்னொரு அசைச்சொல் போடணும்!

//முறையோ வா வேகமாய்//

சூப்பர்! தனித் தமிழில் நியாயமா-வை முறையோ-ன்னு ஆக்கியிருக்கீங்க!
அடுத்து என்ன பாட்டு-ன்னு நீங்களே சொல்லுங்க ஜிரா!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

என் இளமையில் இருந்து இக் கீர்த்தனை கேட்டுள்ளேன். கல்யாணராமா தவிர எந்தச் சொல்லும் புரிந்தலில்லை.
சிந்துபைரவியின் பின் அட இப்படியா?/பாடியுள்ளார்..உருக்கமாக இருக்கே என ஆசையோடு ரசிப்பேன்.
இப்போ எங்காவது தியாகராஜ கீர்த்தனைக்கு விளக்கம் தமிழில் இருந்தால் படித்துச் சேர்க்கிறேன்.
நேரம் குறைந்த அளவு வெனிலும்
வீணை நாதம் எனக்குத் தூக்கலாக இருக்கிறது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வெட்டிப்பயல் said...
ஆமாம் இவர்தான் ஐசக் நியுட்டன். கண்டுபிடிச்சிட்டாரு...
நாங்க எல்லாம் வெள்ளத்துலயே கப்பல் விடுவோம்...//

பேப்பர் கப்பலா பாலாஜி?
இப்பவும் செய்யத் தெரியுமா? அதுவும் கத்திக் கப்பல் பேப்பர்-ல செய்வீங்களா?
மழை வந்தா என்ன ஒரு இந்தியக் கப்பற்படை சின்ன வயசுல! அதுவும் திண்ணையை ஒட்டிய கால்வாயில் புது வெள்ளம் அடித்து ஓடும் போது? ஆகா அந்த நாளும் வந்திடாதோ? :-)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
என் இளமையில் இருந்து இக் கீர்த்தனை கேட்டுள்ளேன். கல்யாணராமா தவிர எந்தச் சொல்லும் புரிந்தலில்லை.//

உங்க நேயர் விருப்பம் கொடுங்க யோகன் அண்ணா! சின்னச் சின்னக் கீர்த்தனைகளா ஆரம்பிப்போம்!

//இப்போ எங்காவது தியாகராஜ கீர்த்தனைக்கு விளக்கம் தமிழில் இருந்தால் படித்துச் சேர்க்கிறேன்//

ஆகா...அவசியம் சேருங்கள்!

//நேரம் குறைந்த அளவு வெனிலும்
வீணை நாதம் எனக்குத் தூக்கலாக இருக்கிறது//

வீணையில் உருக்கம் இழையோட விடுவது கொஞ்சம் கடினம் (வயலின் இதுக்கு ஈசி) ஆனா நீ தய ராதா-வை தூக்கலாகத் தான் வாசிக்கறாங்க காருக்குறிச்சி சகோஸ்! :-)

VSK said...

மிக அட்டகாசமன மொழியாக்கம் ரவி.

அருமையான பாடல்.

அந்த உருக்கம் இதில் , மற்றும் ஜி.ரா.வின் மொழியாக்கங்களில் புலப்படவில்லை.

அப்படியெ அந்தப் பொருளைக் கொடுத்திருந்தாலூம் என்னமோ ஒன்று குறைகிறது.

ஆனால், புரிந்து பாடுவதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.
வாழ்த்துகள்!

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆஹா நல்ல பாடல் விளக்கம்.தமிழ் மொழியிலேயே ஒரு தியகராஜர் பாடல் இருக்கிறது.இசை இன்பத்தில் முழ்குவது இன்பம். முழ்குகிறேன்

sury siva said...

கர்னாடக இசை மழையில் இன்புறும் தமிழ் அன்பர்கள் யாவருக்கும்
புதியதோர் கச்சேரி ஒன்றைப்பார்த்து ரசிக்குமாறு இந்த சென்னை தாத்தா
அன்புடன் அழைக்கிறேன்.
இடம்:
http://movieraghas.blogspot.com

நேரம்: இப்போதே.

ரசியுங்கள்.

அன்பன்
சிவ.சூரிய நாராயாணன்.
சென்னை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//VSK said...
மிக அட்டகாசமன மொழியாக்கம் ரவி.//

நன்றி SK.

//அருமையான பாடல்.
அந்த உருக்கம் இதில் , மற்றும் ஜி.ரா.வின் மொழியாக்கங்களில் புலப்படவில்லை.//

உருக்கம்+எளிமை+சங்கீதம் மூன்றுமே மொழியாக்கத்தில் வரணும்னா மிகவும் கடினம் SK!

பிரசவம் போலத் தான்! தானே பிரசவிக்கும் போது தான் வலியும் தெரியும்! வந்த பின்பு பாசமும் புரியும்!
தியாகராஜரின் உருக்கத்தை நாம் எப்படி உருகாமலேயே கொண்டு வரமுடியும்?

//ஆனால், புரிந்து பாடுவதில் ஒரு சுகம் இருக்கத் தான் செய்கிறது.
வாழ்த்துகள்!//

ஆமாம்...அந்த சுகத்துக்குத் தான் இந்த முயற்சி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தி. ரா. ச.(T.R.C.) said...
ஆஹா நல்ல பாடல் விளக்கம்.//

நன்றி திராச

//தமிழ் மொழியிலேயே ஒரு தியகராஜர் பாடல் இருக்கிறது.
இசை இன்பத்தில் முழ்குவது இன்பம். முழ்குகிறேன்//

ஆகா...சீக்கிரம் மூழ்குங்க! காத்திருக்கிறோம்! :-)

Anonymous said...

Making use of the tune of Thiagaraja krithi "Sri Rama Padamaa", the following song has been composed by me in Tamil.
Pallavi:
Sri Ramar Paadamey
Sinthai Seiyyin Naalume
Unnadhangal Unmaiyaalumey
Uruvaagumey {Sri Ramar}
Anupallavi:
Saadanai Saarumey
Sodanai Theerumey
Vedanaihal yaavumey
vetriyaaha maarumey {Sri Ramar}
Saranam:
Thaamadam Neengumey
Saahasam Ongumey
Paadaham pohumey
Saadaham koodumey
Anbarhal naattamey
Bakthi kondaattamey
Raama Naamam nenjirpoonda
Maandarkillai vaattamey - Sri-
{Sri Ranmar}
Try this. Iam v.karthikeyan of mumbai.

Anonymous said...

Raravenu Gopala song's tune made use of for a tamil song

Pallavi

Vaarai Kannaa Valamey Taarai
Paarinil Uru Thunai Padha Malarey

Anupallavi

Saadanaigal Seyyum Vannam
Maayan Undhan Aruley Thinnam (Vaarai)

Saranam

1.Nanda Gopaalan
Unai Santhatham Vaazhvil
Dhida Sinthai Seyvom
Madhiyodu Nalangal
Gathiyodu Valangal
Nadhiyena Perugida (Vaarai)
2.Maraigalil Sugam Kollum
Magimaigalum
Tharamena Seyalpadum
Thiramaigalum
Magizhvugalum
Niraivugalum
Polivugalum
Kalaigalum Sirandhida (Vaarai)
3.Vaa Perumaigal
Thaa Arumaigal
Maa Thavappayan
Maanidarkey
Nee Puvidhanil
Seer Migundhida
Theer Kuraigalai
Viraiviniley
Korikkai Seyalaakkam
Aatralin Virivaakkam
Nalguga Peru Ookam
Valimaiyudan Aram Sirakka
Kalidhanin Madamaigal
Ozhitthida (Vaarai)

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP