Sunday, October 12, 2008

தமிழ் மூவர்

மிழிசையின் மும்மூர்த்திகள் என நாம் பெருமையுடன் அழைக்கும் தமிழ் மூவர் பற்றி இங்கே பார்க்கவிருக்கிறோம்.
'தமிழ் மூவர்' என்றும் 'தமிழிசை மும்மூர்த்திகள்' என்றும் வழங்கப்படுவோர் :
முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசலக் கவியார் - ஆகியோராவர். (இவர்களோடு, பாபவினாசம் முதலியார் அவர்களையும் சேர்த்து 'தமிழ் நால்வர்' எனவும் வழங்குவதுண்டு.) தமிழில் கிருதிகளை உருவாக்கிய முன்னோடிகளான இவர்களின் தமிழிசைத் தொண்டு அளவிடற்கரியது.

முத்துத்தாண்டவர் தில்லை சிதம்பரநாதனை ஏராளமான பாடல்களில் பாடி இருக்கிறார். இன்றைக்கும் நம் பாடல்களில் வழங்கி வரும் 'பல்லவி - அனுபல்லவி - சரணம்', என்கிற முறையை முதன்முதனில் தமிழில் இவர் இயற்றிய பாடல்களில் பார்க்கிறபடியால், இவரே 'கிருதி' முறைக்கு முன்னோடி என்பர். குறிப்பிட்ட தாளத்தில் பாடல்களை இசைப்பதும் இவர் காலத்தில், வழக்கில் நிலைத்தது. தமிழிசைத் தலைநகரான 'சீர்காழி' யில் வாழ்ந்தவர் இவர்.

முத்துத்தாண்டவரின் பாடல்களில் நான் கேட்டுச் சுவைத்தவையில் சில:
சேவிக்க வேண்டுமய்யா சிதம்பரம் - ஆந்தோளிகா
ஈசனே கோடி சூரிய பிரகாசனே - நளினகாந்தி
ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காண - மாயாமாளவகௌளை

'ஆடிக்கொண்டார்' பாடலை இங்கு, திருமதி.சுதா ரகுநாதன் அவர்கள் பாடிடக் கேட்கலாம்:
MusicIndiaOnline தளச் சுட்டி இங்கே.

மாரிமுத்தாப்பிள்ளை அவர்களும் தில்லை நடராஜப் பெருமான் மீது பல பாடல்களை இயற்றியுள்ளார். இவரது காலம் 1712 முதல் 1787 வரையாகும். இவரது தில்லைப் பாடல் தொகுதிக்குப் பெயர் 'புலியூர் வெண்பா' ஆகும்.

இவர் இயற்றிய பாடல்களில் சில:
காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே - யதுகுல காம்போஜி
தரிசித்தளவில் - லதாங்கி
இன்னமும் ஒரு தலம் இருக்கும் - சுருட்டி

'இன்னமும் ஒரு தலம்' பாடலில், சிதம்பரத் தலத்தின் பெருமையை எங்கனம் எடுத்துரைக்கிறார் பார்ப்போம். எத்தனைத் தலம் இருந்தாலும், சிவகாமி அன்பில் உறை சிற்சபை வாசனின் தில்லைத் தலத்திற்கு ஈடான தலமுண்டோ என வினா எழுப்பி, அதற்கான விடையும் தருகிறார். வெண்மதியும், தாமரையும், கற்பக மரமும் எப்படித் தனித்துவம் வாய்ந்ததாய் அவனியிலே திகழ்கிறதோ, அப்படியே, புண்டரீகபுரம் எனச்சொல்லப்படும் தில்லைச் சிதம்பரம் என்கிறார்.

விருத்தம்:
கற்பூரமும்....

உப்பும் கற்பூரமும் ஒன்றைப்போல் இருந்தாலும்

ஊரெங்கும் பெரிதாய் கற்பூரம் தனைச் சொல்வாரே...!

அப்படிப்போல அனேகத்தலம் இருந்தாலும், அந்த

அல்லல் வினைத் தொலைக்கும் தில்லைப்பதிக்கு நேரோ...?

எடுப்பு:
இன்னமும் ஒரு தலம் இருக்கும் என்றொருகாலே,

ஏன் மலைக்கிறாய் மனமே?


தொடுப்பு:

சொன்ன சொன்ன தலங்கள் எங்கும் ஓடிக்களைத்து

சோதித்தறிந்தால், இந்த ஆதிசிதம்பரம் போல்

(இன்னமும் ஒரு தலம்...)

முடிப்பு:
விண்ணுலகத்தில் நீ(ள்)நிலமெலாம் கூடினும்

வெண்ணிறமாம் ஒரு தண்மதி முன்னில்லாது

தண்ணுலவிய அல்லித் திரளாய்ப் பூத்தாலும்

ஒருதாமரைக்கு ஒவ்வாது

மண்ணுலகத்தில் உள்ள தருக்கள் அனைத்தும் கூடி

மருவுலவும் கற்பகத் தருவுக்கு இணை வராது

புண்ணிய தலங்கள் பல இருந்தாலும் நடேசன் வாழும்

புண்டரீகபுரம் போல் கண்டுசொல்ல வேறேது?
(இன்னமும் ஒரு தலம்...)


இங்கே இந்தப் பாடலை இசைப்பேரொளி திரு.சஞ்சய் சுப்ரமணியம் பாடிடக் கேட்கலாம்:



அந்த கடைசி இரண்டு வரிகளை சஞ்சய் பாடிட எப்படியெல்லாம் மனம் இளகுகிறது!
*கண்டுசொல்ல வேறேது?* கண்ணுக்கினியனாய், கண் கண்ட தெய்வமாய் காலைத்தூக்கி ஆடும் கனகசபாபதிக்கு நேர் ஏதுவென நேர்ந்திடும் நம் மனம் நெகிழ்ந்திடுதே இப்பாடல் கேட்டு!

ருணாசலக் கவிராயர் (1711-1779) தில்லையாடியில் பிறந்து சீர்காழியில் வாழ்ந்தவர். பல இசைப்பாடல்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பெற்றவர். இவரது ஆக்கங்களில் முக்கியமாக குறிப்பிடப் பட வேண்டியது, 'இராம நாடகக் கீர்த்தனம்' எனப்படும் இசைக் காவியம். இராமயணத்தில் வரும் முக்கிய நிகழ்சிகளை மையமாக வைத்துக்கொண்டு, அவற்றை கீர்த்தனைப் பாடல்களாக இயற்றியுள்ளார். இப்பாடல்களை இவர் இயற்றியும், தன் உதவியாளர்களைக் கொண்டு அவற்றுக்கு இசை அமைத்தும், இவற்றை மக்களிடையே பரப்பினார். நடனம் மற்றும் நாட்டிய நாடகங்களிலும், கச்சேரிகளிலும் இன்றளவும் இப்பாடல்களைப் பாடக் கேட்கலாம். கம்பரைப்போலவே, இவரும் தனது இராம நாடகக் கீர்த்தனையை திருவரங்கக் கோயிலில் அரங்கேற்றினார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த அரங்கேற்றத்தின் போது பாடியதுதான் புகழ்பெற்ற 'ஏன் பள்ளி கொண்டீரய்யா' பாடல். 'கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' போன்ற புகழ் பெற்ற வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிராயர்.

முன்னொரு முறை தஞ்சைக் கோட்டையை ஆற்காடு நவாபின் படைகள் முற்றுகை இட்டபோது, தஞ்சைப்படையினருக்கு, மன உறுதியையும், ஊக்கத்தையும் தருவதற்காக, அருணாசலக் கவியாரை அழைத்து சிப்பாய்களுக்கு முன்னால் பாடச் சொன்னார்களாம். அவரும் 'அனுமன் விஜயம்' என்கிற தலைப்பில் சொற்பொழிவாற்றி, 'அந்த ராவணனைக் கண்டு சும்மா போனால், என்ன அனுமன் நானே?' என்ற அடாணா கீர்த்தனத்தைப் பாடியபோது வீரர்களிடையே ஓர் எழுச்சி ஏற்பட்டதாம். தொடர்ந்து,
'அடிக்காமலும், கைகளை
ஒடிக்காமலும், நெஞ்சிலே
இடிக்காமலும், என் கோபம்
முடிக்காமலும் போவேனோ?'
என்று பாடியபோது, வீரர்கள் எழுந்து ஆரவாரம் செய்தனராம்.
"ராமசாமியின் தூதன் நானடா ராவணா!", என்று மோகனராகத்தில் பாடியபோது, அனேக வீரர்கள் வீர உணர்ச்சியில் மூழ்கிப்போயினராம். பின்னர் நடந்த போரில், தஞ்சை வீரர்கள், 'பாய்ந்தானே அனுமான்', என்ற வாக்கியத்தையே படைமுழக்கமாக முழக்கிக்கொண்டு எதிரிகளின்மீது பாய்ந்து வெற்றி பெற்றதும் வரலாறு.

சீர்காழிக் கலம்பகம், சீர்காழி அந்தாதி, தியாகராசர் வண்ணம், சம்பந்தர்பிள்ளைத் தமிழ், சீர்காழி புராணம், சிர்காழிக்கோவை, அனுமான் பிள்ளைத் தமிழ், அசோமுகி நாடகம் என்பன இவர் இயற்றிய இதர நூல்கள்.

இவரது பாடல்களில் என் மனதைக் கவர்ந்தவை:

  • ஏன் பள்ளி கொண்டீர் ஐயா - ஸ்ரீ ரங்கநாதரே நீர், ஏன் பள்ளி கொண்டீர் ஐயா.
    இராகம் : மோகனம், தாளம் : ஆதி
    பாடுபவர் : சுதா ரகுநாதன்
    பாடலை இங்கு கேட்கலாம்.

  • ஆரோ இவர் ஆரோ - என்ன பேரோ அறியேனே
    இராகம் : பைரவி, தாளம் : ஆதி
    பாடுபவர் : எம்.எஸ்.சுப்புலஷ்மி
    பாடலை இங்கு கேட்கலாம்.

  • கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை, இராகவா
    இராகம் : வசந்தா, தாளம் : ஆதி
    பாடுபவர் : சௌம்யா
    பாடலை இங்கு கேட்கலாம்.

  • இராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே, நன்மையுண்டொருகாலே
    இராகம் : ஹிந்தோளம், தாளம் : ஆதி
    பாடுபவர் : நித்யஸ்ரீ மஹாதேவன்
    பாடலை இங்கு கேட்கலாம்.

பொதுவாக கச்சேரியின் இறுதியில் மங்களப் பாடலாக 'நீ நாம ரூபமுலகு நித்திய ஜய மங்களம்' அல்லது 'பவமான சுதடு படு பாதார விந்த முலகு' பாடலையோ பாடுவார்கள். அருணாசலக்கவிராயரோ இசை நிகழ்ச்சிகளில் பாடி நிறைவு செய்வதற்காகவே தமிழில் அருமையான ஒரு மங்களப்பாடலைத் தந்துள்ளார்:

எடுப்பு / பல்லவி
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்- நல்ல
திவ்விய முகச் சந்திரனுக்கு சுப மங்களம்

தொடுப்பு / அனுபல்லவி
மாராபி ராமனுக்கு மன்னு பரந்தாமனுக்கு
ஈராறு நாமனுக்கு இரவிகுல சோமனுக்கு

முடிப்பு
(சஹானா சரணம்)
கொண்டல் மணி வண்ணனுக்கு கண்ணனுக்கு மங்களம்
கோசலை குமாரனுக்கு வீரனுக்கு மங்களம்
புண்டரீக தாளனுக்கு பூச்சக்கர வாளனுக்குத்
தண்டுளுவதோளனுக்கு
ஜானகி மனாளனுக்கு
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.
(மத்யமாவதி சரணம்)
பகிரண்டநாதனுக்கு வேதனுக்கு மங்களம்
பரதனாம் அன்பனுக்கு முன்பனுக்கு மங்களம்
சகல உல்லாசனுக்குந் தருமந்தஹாசனுக்கு
அகில விலாசனுக்கு அயோத்யாவாசனுக்கு
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.

7 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இங்கும் இட்டமைக்கு நன்றி ஜீவா.
இப்போ தான் ஊருக்கு வந்தேன்! முழுசாப் படிச்சிட்டு மீண்டும் வாரேன்!

Kavinaya said...

தமிழ் மூவரின் இனிய பாடல்களை மீண்டும் கேட்கத் தந்தமைக்கு நன்றி ஜீவா.

jeevagv said...

நல்லது கே.ஆர்.எஸ்.
முன்பு, தனித்தனியா இருந்தன. இப்போது, மூவரையும் ஒரே இடத்தில்!
அப்புறம், முத்துத்தாண்டவரின் 'ஆடிக்கொண்டார்.' பாடலுக்கான சுட்டியை இங்கு புதிதாக தந்திருக்கிறேன்!

jeevagv said...

நல்லது கவிநயாக்கா,
தமிழ் மூவரின் பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும், தெவிட்டா இன்பம்!

N.Ganeshan said...

இது போன்ற பதிவுகளால் தமிழிசைக் கவிஞர்கள் நினைவுபடுத்தி கௌரவப் படுத்தப்படுகிறார்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்

என்.கணேசன்

jeevagv said...

வாங்க கணேசன் சார், தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி!

sury siva said...

http://uk.youtube.com/watch?v=9ov627qFM9k

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP