Tuesday, December 16, 2008

தமிழிசைப் பாவலர் பலர்!

மது இசை வரலாற்றைத் திருப்பிப் பார்க்கையில், எண்ணற்ற இறையடியாளர்களின் இனிய இசைத் தொண்டினைக் கேட்டுப் பூரிக்கலாம். இன்று, நேற்று என்றில்லாமல், பற்பல நூற்றாண்டுகளாக, தாங்களும் பாடிப் பூரித்ததோடு, இறவாப் பாடல்கள் மூலம் நம்மையும், இசையின் இனிய நாதத்தினை மகிழ்ந்து பருகும் படியாக செய்து விட்டுப் போயிருக்கிறார்கள். வரப்போகும் சந்ததிக்கு, இசைச் செல்வத்தினை சேர்த்து வைத்துவிட்டுப் போன நம் மூதாதையர்களுக்கு எத்துணை நன்றி செலுத்தினாலும், அது போதாது.

இந்தப் பகுதியில், இரண்டு பாடல்களைப் பார்க்கப்போகிறோம். ஒன்று அக்காலாத்துப் பாடல், இன்னொன்று இக்காலத்துப் பாடல். முதல் பாடலில், முதற்காலத்தில் இருந்த, மாகவிகளின் பட்டியலைப் பார்க்கலாம். இரண்டாவது பாடலில், முதற்காலத்திற்கு, அடுத்த காலகட்டத்தில் வந்துதித்த மகாகவிகளின் பட்டியலைப் பார்க்கலாம்.

இது என்ன பாடலா, அல்லது பட்டியலா? இரண்டும் தாங்க!. இந்தப் பட்டியலில் இடம் பெரும், மகாகவிகளின் பல பாடல்களை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால், அவர்களைப் பற்றிய பாடலை?. இங்கே, அப்படிப்பட்ட, ஒரு பாடல்... இல்லை, இல்லை, இரண்டு பாடல் பார்க்கப் போகிறோம்! ப்ளாஷ்பேக்-குக்கு ரெடியா?

முதல் பாடல்:
இயற்றியவர்: சுத்தானந்த பாரதி
இராகம் : கர்நாடக தேவகாந்தாரி.

எடுப்பு
எப்படிப் பாடினாரோ அடியார் அப்படிப் பாட நான்
ஆசை கொண்டேன் சிவனே

தொடுப்பு
அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணி வாசகரும் பொருளுணர்ந்து உன்னையே

முடிப்பு
குருமணி சங்கரரும் அருமை தாயுமானாரும்
அருணகிரி நாதரும் அருட்ஜோதி வள்ளலும்
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்
(எப்படிப் பாடினாரோ!)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இப்பாடலை இயற்றியவர் சுத்தானந்த பாரதியார் அவர்கள் (1897-1990). யோகி சுத்தானந்தர், இவரோ பெரிய கவி. பக்தியாளரும், சுதந்திரப் போராட்ட வீரரும் கூட. புதுவை அரவிந்த ஆசரமத்தில் சுமார் 23 ஆண்டுகள் தங்கி இருக்கையில், யோக நெறிதனை பின்பற்றி, அவற்றில் உச்சங்களை எட்டினாராம். 1914இல், மகாத்மா காந்தியுடன் ஏற்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, சிலகாலம் அரசியலில் ஆர்வம் செலுத்தினாலும், சிலகாலத்தில் முழுமையாக ஆன்மீகத்தில் ஆழ்ந்திடலானார். அரவிந்த ஆசரமத்தில் சுவாமி சிவானந்தர், இவரை அங்கு சந்தித்து இருக்கிறார்.
சுத்தானந்த பாரதியார் இயற்றிய பாடல்களில் சில:
* அருள் புரிவாய் (ஹம்சத்வனி)
* சகலகலா வாணியே (கேதாரம்)
* தூக்கிய திருவடி (சங்கராபரணம்)
* ஜங்கார சுருதி செய்குவாய் (பூர்விகல்யாணி)

சுத்தானந்த பாரதி, தனக்கு முன் வந்த இறையடியாளர்கள், எப்படியெல்லாம் சிவனைப் பாடிக் கொண்டாடினர். ஆகா, அவற்றில் மயங்கி, அவர்களைப் போலவே எனக்கும் பாட ஆசை வந்ததே என்கிறார். தொடுப்பில் அவர் சொல்லும், நான்கு பேரும் திருமுறைகள் தந்த சமயக் குரவராவர். (அப்பர், சுந்தரர், சம்பந்தர் & மணிவாசகர்.). முடிப்பில், அவர் சொல்லும் நால்வரும், பெரும் ஞானியர். காலத்தை வென்று நிற்பவர்கள். முதலில் மணியான குருவாம் ஆதி சங்கரரில் தொடங்குகிறார். இவர் தமிழில் ஏதும் பாடல் இயற்றாவிட்டாலும், பின்னர் வரப்போகும் அத்வைத பாரம்பரியத்தின் முன்னோடி என்பதால், சுத்தானந்தர், சங்கரரில் துவங்கியிருக்க வேண்டும். அடுத்தது தாயுமானவர். அவரின் கண்ணிகளும், ஆனந்தக் களிப்பும் சொல்லில் அடங்கா சுகம் தருபவை. அருணகிரியாரின் சந்தத்திலோ அழகன் முருகனின் பாதார விந்தமே, தாளம் போடும். அருட்பெரும் ஜோதியார் அருளிய திருவருட்பாக்களோ, நன்னெறிக்கு வித்திடுவதோடு, அருள்நெறியும் தந்திடும். வள்ளலார் என்றவுடன், அடுத்த வார்த்தை, 'கருணை' என்று வந்திருக்கும் பொருத்தத்தினை என்னென்று சொல்வேன்!

ஆலாபனையுடன், இப்பாடலை, சங்கீத கலாநிதி, டி.கே.பட்டம்மாள் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:


மெல்லிசையில், பாடலை நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.

அடுத்த பாடல்:
இப்பாடலில், 18 முதல் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்க் கவிகளை திரு.சேதுராமன் சுப்ரமணியன் அவர்கள் பாடுகிறார். திரு.சேதுராமன் சுப்ரமணியன் - இவர் ஒரு அறிவியல் வல்லுனர். இவரது ப்ளாகர் பக்கத்தினை இங்கு பார்க்கலாம்.

எடுப்பு
எப்படிப் புனைந்தீரோ ராமய்யா!
அப்படி நானெழுத ஆசை கொண்டேன் சிவனே!
(எப்படி..)

தொடுப்பு
கோபால கிருஷ்ணனும் நீலகண்ட சிவனும்
அருணாசலக் கவியும் கண்டறிந்த பொருள் தனையே
(எப்படி..)

முடிப்பு
சுப்ரமண்ய பாரதியும் சுத்தானந்த பாரதியும்
கவிகுஞ்சர பாரதியும் கோடீஸ்வர அய்யரும்
பாசமுடன் எழுதி பரிவுடனே பாடிய
கனித்தமிழ்ச் சொற்களால் இறைவனின் புகழ் பாட
(எப்படி..)


முன்பு கேட்ட 'எப்படிப் பாடினாரோ' பாடலைப் போலவே இந்தப் பாடலையும் இயற்றியுள்ளார். அதே இராகத்தில் பாடிப் பார்க்கவும். இந்தப் பாடலின் எடுப்பிலேயே, தமிழ்த் தியாகராஜர், பாபநாசம் சிவன் (1890-1973) அவர்களை அழைக்கிறார். 'ராமய்யா' என்பது பாபநாசம் சிவன் அவர்களின் இயற்பெயர். சிவனாரின் காலத்திலும், அவருக்கு முற்பட்ட காலத்திலும் அருந்தமிழ் கவிகளை இயற்றிய தமிழிசைக் கவிஞர்களையும் இப்பாடல் குறிப்பிட்டு, அக்கவிகளுக்குப் பெருமை சேர்க்கிறது.

தொடுப்பில் தொடுக்கப்பட்டுள்ளோர்:
கோபால கிருஷ்ண பாரதி (1811-1896) - நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளை இயற்றியவர்.
நீலகண்ட சிவன் (1839-1900)
அருணாசலக் கவியார் (1711-1779) - இராம நாடகக் கீர்த்தனைகளை இயற்றியவர்.

அடுத்து முடிப்பில், தொடுக்கப்பட்டுள்ளோர்:
சுப்ரமணிய பாரதி (1882, 1921),
சுத்தானந்த பாரதி (1897-1990),
கவிகுஞ்சர பாரதி (1810-1896) மற்றும்
கோடீஸ்வர ஐயர் (1870-1936)

இவர்களும், இன்னும் பற்பல கவிகளும் தந்துள்ள சாகாவரம் பெற்ற பாக்கள் தான் எத்தனை எத்தனை! அத்தனையும் செவிகளில் நிறைத்து மகிழ, உள்ளம் விழையுது. அவற்றைக் கேட்டிட நெஞ்சம் குழையுது!.

9 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அருமை, ஜீவா! அருமை!

எத்தனை தமிழிசைப் பாவலரோ - அவர்
அத்தனை பேருக்கும் அடியேன் வணக்கம்!

எந்தரோ மகானுபாவுலு
அந்தரிகி வந்தனமுலு

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சுத்தானந்த பாரதியும், சேதுராமன் சுப்ரமணியன் போட்டி போட்டுக்கிட்டு பட்டியல் போடுவதில் நமக்குத் தான் இன்பம் - இசை இன்பம்! :)

Unknown said...

ஜீவா!


நல்ல இருக்கு. பாடு பட்டு இது மாதிரி பதிவுகளை போடுகிறீர்கள் .வாழ்த்துக்கள்.

பாட்டியும் பேத்தியும் பாடினதை கேட்டேன். உண்மையிலேயே இசை இன்பம்தான் .

மார்கழி மாத இசை சீசன் னுக்கு இதமாக இருக்கிறது.

இரண்டாவது பாட்டு ஆடியோ இல்லையா?

jeevagv said...

ஆம், கே.ஆர்.எஸ்,
பாரதியார் பாடல் எந்தரிகி மகானுபாவலு போல, இங்கே தமிழிசை பாவலரை பெருமைப் படுத்துகிறது.

jeevagv said...

//போட்டி போட்டுக்கிட்டு பட்டியல் போடுவதில்//
ஆம், கே.ஆர்.எஸ்,
கொள்ளை இன்பம்!

jeevagv said...

வாருங்கள் கே.இரவிசங்கர்!
//பாட்டியும் பேத்தியும் பாடினதை கேட்டேன்//
:-)
இருவருக்குமான இயற்கையான தொடர்பு, இங்கேயும் இயைந்து விட்டது!
//இரண்டாவது பாட்டு ஆடியோ இல்லையா?//
இரண்டாவது பாட்டு இனிமேல்தான் பிரபலப்பட வேண்டும். திரு.சேதுராமன் சுப்ரமணியன் அவர்கள், இப்பாடலை, திரு.அசோக் ரமணி அவர்களிடம் தந்திருப்பதாகவும், அவர் தன் கச்சேரிகளில் பாடவிருப்பதாகவும் கேள்வி.

கிருஷ்ண மூர்த்தி S said...

கவியோகி சுத்தானந்த பாரதியார் வாழ்ந்த காலம் 11/05/1897 முதல் 07/03/1990 வரை. இரண்டு இடங்களில் அவ்ழ்ருடையகாலம் 1897-1937 என்று குறிப்பிட்டிருப்பதை அருள்கூர்ந்து திருத்திக் கொள்ளுங்கள். கவியோகியார், பல்மொழி வித்தகர். தன்னுடைய சுய சரிதையை, "ஆத்மசோதனை" என்று நூலாக வெளியிட்டிருக்கிறார்.

1987 வாக்கில் கவியோகியாரை, சிவகங்கைக்கு அடுத்து சோழபுரத்தில் அவரது ஆசிரமத்தில் தரிசித்து உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. ஸ்ரீ அரவிந்தர் எப்படி "சாவித்ரி" பெரும் காப்பியம் எழுதினாரோ, அதே மாதிரி கவியோகியாரும் "பாரத சக்தி மகா காவியம்" படைத்திருக்கிறார். அதை மீண்டும் பதிப்பிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று அப்போது அவர் சொன்னது இன்னும் என் நெஞ்சில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கவியோகி சுத்தானந்த பாரதியார் வாழ்ந்த காலம் 11/05/1897 முதல் 07/03/1990 வரை. இரண்டு இடங்களில் அவ்ழ்ருடையகாலம் 1897-1937 என்று குறிப்பிட்டிருப்பதை அருள்கூர்ந்து திருத்திக் கொள்ளுங்கள்//

மன்னிக்க வேண்டும் கிருஷ்ண மூர்த்தி ஐயா! ஜீவா உங்க பின்னூட்டத்தைப் பார்த்திருக்க மாட்டார்-ன்னு நினைக்கிறேன்! அவருக்கு மடல் அனுப்பி விட்டு, உரிமையுடன் நானே பதிவில் திருத்தி விட்டேன்! தகவற் பிழை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!

இதோ...யோகியாரின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டப் படங்கள்!
http://www.srambharati.com/sria/anglais/Association/Gallery/Centenary98/Centenary02.html

Unknown said...

கவியோகி சுத்தானந்த பாரதியாரின் கீர்த்தனைகள் அத்தனையும் ஈடில்லா பேரின்ப ரசம்! உருக வைக்கும் உன்னதமான கருத்தாழமிக்க வரிகள்! அத்தனை பாடல்களும் பாடிப் பாடி பரவசம் கொள்ள மனம் துடிக்கும். யோகக்கலையின் உச்சத்தைத் தொட்டு, இறையுணர்வு பெற்று எழுதப்பெற்றதால் இவரது கீர்த்தனைகளகளிலும் தியாக ப்ரம்மத்தின் கீர்த்தனைகளில் இருக்கின்ற அதே “ஜீவன்“ உண்டு. ”எப்படிப் பாடினரோ” என்ற கவியோகியாரின் மிக அற்புதமான கீர்த்தனையில் அவர் பட்டியலிட்டுப் பெருமை பாராட்டும் சிவனடியார்கள் மகான்களின் பெருமையை நாம் அறிந்து உணர்ந்து கொள்ள இந்தக் கீர்த்தனை ஒரு தூண்டுகோலாய் உள்ளதெனில் அது மிகையில்லை. இந்தக் கீர்த்தனையின் அடிப்படையைக் கொண்டு திரு. சேதுராமன் சுப்பிரமணியன் அவர்கள் படைத்துள்ள கீர்த்தனை அவரது பெரும் உள்ளத்ததை படம் பிடித்துக் காட்டுகிறது. அவரது தமிழ் வெல்க!
இன்பமே சூழ்! எல்லாரும் வாழ்க!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP