தமிழிசை வரலாறு - 1 : சங்க காலம்
ஜெயா டி.வி மார்கழி மகா உற்சவம் 2008 நிகழ்ச்சியில், நேற்று, 'சிலப்பதிகாரம் முதல் சிவன்' வரை என்ற தலைப்பில் திருமதி.சௌம்யா அவர்கள் சங்க கால இலக்கியம் முதல் பாபநாசம் சிவன் வரை, தமிழிசை வரலாற்றின் முக்கியமான மைல்கற்களை தொட்டுப் போகும்படியானதொரு தொகுப்பினை தந்திருந்தார்கள்.
வாய்ப்பாட்டு : எஸ். சௌம்யா
வயலின் : எம்பார் எஸ். கண்ணன்
மிருதங்கம் : நெய்வேலி ஆர். நாராயணன்
சௌம்யா அவர்கள் பாடிய பாடல்களும், நிகழ்வில் அவர் சொன்ன முக்கிய குறிப்புகளும்:
1. அகநானூறு பாடல் : ஆடமைக் குயின்ற...
இயற்றியவர் : கபிலர்
கோடை அவ்வளி குழலிசை யாக
பாடுஇன் அருவிப் பனிநீர் இன்னிசைத்
தோடமை முழவின் துதைகுரல் ஆக
2. சிலப்பதிகாரம் : கன்று குணிலாக்... (ஆய்ச்சியர் குரவை)
இயற்றியவர் : இளங்கோ அடிகள்
இராகம் : மோகனம்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ;
இராகம் : மத்யமாவதி
அறுவை யொளித்தான் வடிவென் கோயாம்
அறுவை யொளித்தான் அயர அயரும்
நறுமென் சாயல் முகமென் கோயாம்;
வஞ்சஞ் செய்தான் தொழுனைப் புனலுள்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையென் கோயாம்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும் வளையும்
வஞ்சஞ் செய்தான் வடிவென் கோயாம்;
இராகம் : ஹிந்தோளம்
மதிபுரையு நறுமேனித் தம்முனோன் வலத்துளாள்
பொதியவிழ் மலர்க்கூந்தற் பிஞ்ஞைசீர் புறங்காப்பார்
முதுமறைதேர் நாரதனார் முந்தைமுறை நரம்புளர்வார்;
மயிலெருத் துறழ்மேனி மாயவன் வலத்துளாள்
பயிலிதழ் மலர்மேனித் தம்முனோன் இடத்துளாள்
கயிலெருத்தம் கோட்டியநம் பின்னைசீர் புறங்காப்பார்
குயிலுவருள் நாரதனார் கொளைபுணர்சீர் நரம்புளர்வார்;
சிலப்பதிகாரத்தில் அன்றைக்கே, கிரக பேதத்தினை விளக்கிடும் எடுத்துக்காட்டாக, பாடலை இயற்றி இருக்கிறார்கள்! பாடல்களும் இயைபு தரும் பண்களைப் பற்றி நன்கு அறிந்து பாடல்களை இயற்றி இருக்கிறார்கள்! இவையெல்லாம் நமது தமிழிசை எத்தனை உன்னதமான நிலையில் இருந்திருக்க வேண்டும் என்பதனை நினைத்துப் பார்க்க, பெருமையாக இருக்கிறது.
(அடுத்த பகுதியில் தேவாரப் பாடல்களின் கால கட்டத்தில் தமிழிசை வரலாறு தொடர்வதினைப் பார்க்கலாம்...)
6 comments:
ஜீவா
ரொம்ப நல்ல பதிவு! சின்னப் பதிவு-ன்னாலும் ரசிச்சிப் படிச்சேன்!
அதுவும் சிலம்பின் வரிகள் அவ்வளவு தமிழ் இனிமை! ரொம்பவும் தேர்ந்து எடுத்திருக்காங்க செளம்யா...
//சிலப்பதிகாரத்தில் அன்றைக்கே, கிரக பேதத்தினை விளக்கிடும் எடுத்துக்காட்டாக//
கிரக பேதம்-ன்னா என்ன?
என்னைப் போல் இசை அறியாப் பாமரர்க்கும் விளங்குமாறு ஓரிரு வரிகளில் சொல்லுங்களேன்!
//கடல்வண்ணன் இடத்துளாள்
தம்முனோன் வலத்துளாள்
மாயவன் வலத்துளாள்
தம்முனோன் வலத்துளாள்//
இசைப் பதிவு என்றாலும் இயல் வரிகள் கூட எத்தனை அழகு! இசைக்காகவே எழுதப்பட்ட வரிகள் போலவே இருக்கு!
//ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்
கோடை அவ்வளி குழலிசை யாக//
புல்லாங்குழலின் தோற்றத்தை எப்படிக் காட்டுறாரு பாருங்க! பாடலின் பொருளைப் பிரிச்சி மேய கை பரபரக்குது! :))
வாங்க கே.ஆர்.எஸ்,
//சின்னப் பதிவு-ன்னாலும் ரசிச்சிப் படிச்சேன்!//
மாயோன் தமிழாச்சே!
//ரொம்பவும் தேர்ந்து எடுத்திருக்காங்க செளம்யா...//
நல்ல தேர்வுகள்!
உங்களுக்குத் தெரியாததா!
//கிரக பேதம்-ன்னா என்ன?//
ஒரு இராகத்தில் இருந்து இன்னொரு இராகத்திற்கு மாறுவது:
கிரகம் : வீடு: தொடங்கும் இடம்;
பேதம் : மாற்றம்
/வேற்றுமை
சரிகபத - மோகனம் பாடத் தொடங்கி,
அப்புறம் ரி தொடங்கற ஸ்வரஸ்தானத்திலே,
ஸ-வை
துவங்கினா,
அது அப்புறம் மோகனம் இல்லாம, மத்யமாவதி வாகிடும். (சரிமபநி)
இப்படி ஷட்ஜமத்தோட இடத்தை மாற்றி ஒரு இராகத்தில் இருந்து இன்னொரு இராகத்திற்குப் போவது கிரக பேதமாம்.
இப்படியே மோகனம் - மத்யமாவதி - ஹிந்தோளாம் - சுத்த சாவேரி - சுத்த தன்யாசி - அப்படின்னு ஒரு இராகத்தில் இருந்து இன்னொரு இராகத்திற்கு ஜம்ப் பண்ணுறாங்க!
//ஆடமைக்குயின்ற...//
அப்பாடலின், அடுத்த பாடலும் இங்கே:
மலைப்பூஞ் சாரல்
வண்டுயாழ் ஆக
இன்பல் இமிழ்இசை கேட்டுக்,
கலிசிறந்து,
மந்தி நல்அவை மருள்வன
நோக்கக்
கழைவளர் அடுக்கத்து, இயலி
ஆடுமயில்
நனவுப்புகு விறலியின்
தோன்றும் நாடன்! .82-10
- சென்ற பாடலின் குழலைப் பற்றிச் சொன்னவர், அடுத்த பாடலில் யாழைப் பற்றி சொல்கிறார்!
என்ன அற்புதமான ஐந்து பதிவுகள் !
மிகுந்த பாராட்டுக்கள்.
தமிழுக்கும் இசைக்குமான தொடர்பு குறித்து இரண்டு பதிவுகள்(1,2)எழுதி இருந்தேன்.
அவை மொழி நோக்கிலேயே அமைந்த பதிவுகள்,அவற்றின் இசை நோக்கில் அமைந்த பதிவுகள்,நீங்கள் எழுதிய ஐந்து பதிவுகளும்.
இவற்றிற்கான சுட்டியை உங்கள் அனுமதியுடன் என் பதிவிலும் சேர்க்கிறேன்.
சிறப்பாக இவற்றில் கருத்து செலுத்தி இருக்கும் திருமதி சௌம்யா அவர்களுக்கு பல நன்றிகள் !
Post a Comment