Dating மோகனா/மோகினி/மோகனம்! - வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா!
வாங்க, இன்னிக்கி இசை இன்பத்தில், மோகனாவை டேட் பண்ணலாம்! மோகனாவை ஷார்ட் ஃபார்ம்ல எப்படிங்க கூப்பிடலாம்? மோகினி? மோகி? மோகு? மோக்ஸ்? மோனா? மோமோ?
அட என்ன-ன்னு பாக்குறீங்களா? தமிழ் சினிமாவுல எங்க பார்த்தாலும் இந்த மோகனா தாங்க சூப்பர் ஸ்டார்! இவங்க இல்லாத ஹிட் படமே இல்லைங்கறேன்!
அட, யாருப்பா இந்த மோகனா?
இப்ப எல்லாம் ஸ்ரேயா, அமோகா, சுஜா தானே! இலியானா கூட இல்லீயே! ஒரு வேளை மேகா நாயரைத் தான் மோகா, மோகி-ன்னு சொல்லுறாரோ?
அட, இது அச்சு அசல் அக்மார்க் மோகனா-ங்க!
காதல் கோட்டை படம் பாத்திருப்பீங்களே! அதுல "வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா, என்னைப் பாக்காமப் போறாளே சந்திரிகா"-ன்னு ஒரு பாட்டு கேட்டீங்களா? பிடிச்சிருந்துச்சா?
இந்தா, இன்னொரு தபா கேளுங்க! அதுல மோகனாவையும் க்ரீட்டாக் கண்டுபுடிங்க பார்ப்போம்!
தெலுங்குல ப்ரேமலேகா-ன்னு அதே படம் வந்துச்சி...ஜிராகாரு, வெட்டிகாரு அதில் இருந்தும் கண்டுபுடிக்கலாம்!
என்ன கண்டுபுடிச்சாச்சா? ஹிஹி!
மோகனம் என்னும் ராகம் இல்லாத ஹிட் படங்களே தமிழ் சினிமாவில் இல்லைன்னு சொல்லி விடலாம்! அந்த அளவுக்கு மோகனத்தில், தமிழ்த் திரை இசை ஊறிப் போயிருக்கு!
மோகனம்-ங்கிற சொல்லுக்கே பொருள் என்னன்னா அழகு, மோகித்துப் போதல், சொக்கிப் போதல்!
வாங்க இன்னிக்கி மோகனத்தை டேட் பண்ணலாம், இசை இன்பத்தில்!
டேட்டிங்-னு சொன்னவுடனேயே, எனக்கு டேட்டிங் பாட்டு தான் ஞாபகம் வருது! பாய்ஸ் படத்தில் ஒரு அருமையான மோகனம்!
D-A-T-ING...You and me are meant to be!
Yeah..I can clearly see! Dating is a fantasy!! என்று ஆங்கிலச் சொற்கள் நிறைய வந்தாலும்...
பாய்ஸை ஏங்க வைக்காதே, ஹார்ட்டுல ஹெல்மெட் மாட்டாதே! என்று செந்தமிழ்ச் சொற்களும் பாட்டில் விளையாடும்! :-))
I dont want to love! I dont want to love!
Love is not a game!! Love is not a game!!-ன்னு மோகனம் அப்படியே குழையும்! கேளுங்க!
மோகனம்-ன்னாலே கொள்ளை அழகு-ன்னு பார்த்தோம்! அதான் கரெக்டா இந்த ராகத்துக்கும் மோகனம்-ன்னே பேரு வச்சிருக்காய்ங்க! மோகனத்துல எந்த ரசம் வேணும்னாலும் கொடுக்கலாம்!
அட மிளகு ரசம், தக்காளி ரசம், பைனாப்பிள் ரசம் எல்லாம் இல்லீங்க! நான் சொல்லும் ரசம் - காதல் ரசம், சிருங்கார ரசம், ஏக்க ரசம், வீர ரசம், பக்தி ரசம், காருண்ய ரசம்!
ஆனாப் பொதுவா மோகனம்-னா அது காதலுக்கு உரிய ராகம்-னு ஆகிப் போச்சுது! அதுவும் மயக்கும் மாலை/இனிக்கும் இரவு நேர ராகம்-னா அது மோகனம் தான்!
மோகனம் தான் இசையிலேயே மிகப் பழமையான ராகம் என்பது அறிஞர் பலரின் கருத்து!
சிலப்பதிகாரத்தில் வரும் பண்கள் பலவற்றுள் மோகனம் மிக முக்கியமான ஒன்று! முல்லைப் பண் - மோகன ராகம் அப்படியே அச்சு அசலாக ஒத்துப் போகிறது! அதன் நோட்ஸ், cycle of fifths வரிசையில் இருப்பதை இசை அறிஞர் டாக்டர். S. இராமநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்!
தேவாரத் திருமுறைகள், ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் பலவற்றை மோகனத்தில் தான் இன்றும் பாடுகிறார்கள்! "நாயகனாய் நின்று" என்ற திருப்பாவைப் பாடலும் மோகனம் தான்! சீன, ஜப்பானிய, ஸ்வீடிஷ் மற்றும் ஜிப்சி இசையில் கூட மோகனம் தொனிக்கிறது! இந்துஸ்தானியில் இதுக்குப் பேரு "பூப்"/"பூபாளி" (பூபாளம் அல்ல!)
இப்பேர்பட்ட மோகனத்தை, இசைஞானி இளையராஜா சும்மா விடுவாரா?நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் - இசைத்திட என்னைத் தேடி வரணும் வரணும்! -அக்னி நட்சத்திரம் படத்துல, யாரையோ மயக்க ஆடுவாங்க! யாரை மயக்க-ன்னு சரியா நினைவில்ல! ஆனா ஆடுறது அமலா! அது மட்டும் நினைவிருக்கு! :-)
(சரி...அமலா இப்போ எங்க இருக்காங்க சாமீ? அம்மா, அக்கா ரோல்-ல கூட வரதில்லையா என்ன? அமலா காலத்துல நான் பச்சைப் புள்ளையா தான் இருந்தேன்! ஆனாலும் அவிங்க நடிச்ச வேதம் புதிது, அக்னி நட்சத்திரம், வேலைக்காரன் படமெல்லாம் இப்ப பார்க்கும் போது கூட, அக்கால ஜோதிகாவோ-ன்னு எண்ணத் தோனுது...)
சரி, நாம மோகனம் மேட்டருக்கு வருவோம்!
அக்னி நட்சத்திரம் படத்துல, இளையராஜா இதைப் போட்ட விதமே சூப்பர்! நின்னுக் கோரி-ன்னு கர்நாடக இசை வர்ணத்தின் சொற்களைப் பாட்டில் அப்படியே எடுத்தாண்டு இருக்கிறார்! அந்தப் பாடல் முழுதுமே மோகனம் தான்! கேளுங்க!
கொஞ்சமா மோகனத்தைப் பத்திச் சொல்லிக்கிறேன். அப்பாலிக்கா இளையராஜா முதற்கொண்டு ஒவ்வொரு இசையமைப்பாளரும் மோகனத்தை எப்படிக் கையாண்டாங்கன்னு பார்த்துவிடலாம்!
மோகன ராகத்தில் உள்ள எல்லா ஸ்வரங்களையும் "கமகம்" என்று சிறப்பாகச் சொல்லப்படும் ஒரு தொனியில் தர முடியும்! அதுனால இதுக்கு சர்வ ஸ்வர கமக ராகம்-ன்னே பேரு! திருமணங்களில் மோகனம் வாசிப்பது மங்களகரமானது! எல்லாக் காலங்களிலும் வாசிக்கலாம் என்றாலும், காதல் ராகம் அல்லவா? மாலை/இரவு வேளைகளில் இன்னும் நல்லா இருக்கும்!
கர்நாடக இசையில் மோகனத்தைக் கட்டியாண்டது மகராஜபுரம் வழி வந்த பாடகர்கள்! முத்துசாமி தீட்சிதரின் "கோபிகா மனோகரம் பஜேகம்" என்பது மகராஜபுரம் சந்தானத்தின் ஃபேவரிட் பாடல்!
மோகனத்தின் பேரையே வைத்து, மோகன ராமா என்று தியாகராஜர் பாடியிருக்கும் பாட்டு, மற்றும் அவரின் நன்னு பாலிம்ப - இவை இரண்டும் மதுரை மணியின் ஃபேவரிட்!
தமிழிசைப் பாடல்களில்
அருணாச்சலக் கவிராயரின் ஏன் பள்ளி கொண்டீர் ஐயா, மற்றும் பாபநாசம் சிவனின் நாராயண திவ்ய நாமம் - இவையும் மோகனம் தான்! ஸ்வாகதம் கிருஷ்ணா என்னும் ஊத்துக்காடு வேங்கட கவியின் மோகனப் பாடல் மிகவும் பிரபலம்!
மயில் வாகனா, வள்ளி மண மோகனா என்னும் பாட்டும் முருகப் பெருமான் மேல் அமைந்த மோகனம்! இம்புட்டுச் சொல்லிட்டு, நம்ம கேபி சுந்தராம்பாள் பாடுற மோகனத்தைச் சொல்லாம விட முடியுமா? - ஆனந்த தாண்டவம் என்னும் பாட்டு!
உஷ்...அப்பா, மூச்சு வாங்குதே!...சினிமாவுக்குப் போகலாம்-பா!
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் - காதல் ஓவியம் - SPB - இளையராஜா
கம்பன் ஏமாந்தான் - நிழல் நிஜமாகிறது - SPB - MSV (ஜிரா-வுக்காக பதிவிட்ட பின்னர் சேர்த்தது :-)
கீதம் சங்கீதம் - நீ தானே என் காதல் வேதம் - கொக்கரக்கோ - SPB/Shylaja - இளையராஜா
கண்மணியே காதல் என்பது - ஆறில் இருந்து அறுபது வரை - இளையராஜா
வான் போல வண்ணம் கொண்டு வந்து - சலங்கை ஒலி - SPB/Shylaja - இளையராஜா
மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்! - கரும்பு வில் - யேசுதாஸ் - இளையராஜா
கங்கை-யமுனை-இங்கு தான் சங்கமம்! - இமயம் - யேசுதாஸ்/வாணி ஜெயராம் - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி
இன்னும் ரஹ்மான், ஹாரிஸ், தேவான்னு வரிசையா மோகனத்தை எல்லாம் பின்னூட்டத்தில் சொல்லுங்கப்பா!
அது இல்லாம மோகனமும் கல்யாணியும் கலந்தடிச்சி மோகனகல்யாணி ன்னு வேற இருக்காமே! மோகனகுறிஞ்சி, மோகனசந்திரிகா, மோகனவராளி, மோகனாங்கி...ன்னு இன்னும் எத்தனையோ மோகனாஸ்!
சரி அடுத்த யாரை டேட் பண்ணலாம்? யோசிச்சிச் சொல்லுறேன்! வர்ட்டா? :-)
References (உசாத்துணை):
http://www.carnatica.net/special/raganubhava-mohanam-ppn.htm
நண்பர் சிமுலேஷனின் மோகனம் பற்றிய பதிவு இங்கே!