தக தீம் த தீம் தில்லானா!
நமது இந்திய இசையில் பல்வேறு பரிணாமங்களைப் பார்க்கலாம். நடனஇசை, அந்த பல்வேறு பரிணாமங்களுள் ஒன்றாகும். ஒன்றுதானே என்று ஓரமிடாமல், ஓங்கி வளர்ந்த நடனஇசை. நமது பாரம்பரிய மணம் கமழும் அற்புதக் கலையான பரத நாட்டியத்தின் பக்கபலமான இசையும் அதன் மாண்புகளும் தான் என்னே! பல்வேறு "அடவு"களை கைகளில் காட்டி, இசையின் வளைவுகளுக்கு ஏற்ப உடலை வளைத்து, அனைத்து ரசங்களையும் முகத்தில், குறிப்பாக கண்களில் காட்டி, அபிநயம் செய்யும் பரதக் கலைஞரின் பெருமைகள்தான் என்னே!
பத்மினி / சிவ பக்தா / 1954
பாடல்களுக்கு ராகமும் தாளமும் இரு பரிணாமம் என்றால், இன்னொன்றும் இருக்கிறது. அதுவே பாவம் (Bhavam). நமது பாடல்களை பாவபூர்வமாக பார்ப்பதும் சிறப்பானதாகும். மதுரை T.N சேஷகோபாலன் மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் பாவபூர்வமாக பாடிக்கேட்டுத் திளைத்ததுண்டு. தில்லானா பாடல்கள் இந்த வகையைச் சார்ந்தவை. விறுவிறுப்பும், உணர்ச்சி மயமும் நிறைந்த தில்லானா பாடல்களின் என்ன விசேஷம் என்றால், பாடலில் பாடல் வரிகள் குறைவாக இருக்கும். ஆனால், ஜதி எனப்படும் சொற்கட்டுக்கள் நிறைந்து இருக்கும். அவற்றில் சில : திரனா, தில்லில்லானா, தொந்திரனா, தனம் போன்றவை. பாடல் வரிகளுடன் சேர்ந்த தில்லானாக்களை, கச்சேரிகளிலும் தனியான பாடல் உருப்படியாகவே பாடும் வழக்கமும் உள்ளது. அப்படிப்பட்டவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
பாம்பே ஜெயஸ்ரீ பாடிடும் இந்த தில்லானாவில் பாடல் வரிகள் இவ்வளவுதான்:
நின்னையே எண்ணி நிதம் ஏங்கிடும்என்ன ராகம்? மதுவந்தி
என்னை ஆளவந்த மன்னா, மணிவண்ணா
மனம் கொள்ளை கொண்ட கண்ணா - இனியுன்னை
கனவிலும் நனவிலும் நான் பிரியேனே!
யார் இசையமைத்தது? வேற யாரு, தில்லானா என்றவுடன் நினைவுக்கு வரும் நம்ம லால்குடி சார் தான்.
தமிழகம் தந்த தன்னிகரில்லாத இசை மேதை அல்லவா பத்மஸ்ரீ திரு.லால்குடி ஜெயராமன்!
நிறைய தில்லானாக்களை அவர் இசையமைத்திருக்கிறார். பட்டியலுக்கு விக்கிபீடியாவில் இங்கு பார்க்கலாம்.
இதே தில்லானாவை சிதாரில் வாசித்துக் கேட்கலாமா? இங்கே.
இங்கே கேளுங்கள் லால்குடி சாரின் இன்னொரு தில்லானா - ரேவதி ராகத்தில்:
திருமதி.விசாகா ஹரி பாடிட:
கோலமுருகனை காண எண்ணி
காலமெல்லாம் காத்திருந்தேன்
வேலனோ என்னை ஏனோ மறந்தான்
ஜாலமோ, என் காலமோ அறியேன்!
லால்குடி சார், தில்லானாக்களைக் கொண்ட இசைத்தொகுப்புகளையும் இசையமைத்து வெளியிட்டிருக்கிறார். அவற்றில் ஒன்று "The Dance of Sound" (1980 இல்) என்கிற தலைப்பில். அந்த தொகுப்பில் தேஷ், த்வஜாவந்தி, ஹமீர் கல்யாணி, கானடா, காபி, கதன குதூகலம், மோகனகல்யாணி, பகடி ஆகிய ராகங்களில் அமைந்த தில்லானாக்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுக்கான சுட்டிகள்:
1. மோகனகல்யாணி (ஆரோகணத்தில் மோகனமும், அவரோகணத்தில் கல்யாணியும் அமையப்பெற்ற ராகம்!)
2. த்வஜாவந்தி
3. ஹமீர் கல்யாணி
4. தேஷ்
5. கதனகுதூகலம்
6. கானடா
7. காபி
8. பகடி