இசையின் அங்கங்களும் ரசிகசிகாமணி கந்தனும்
இசை ரசனை எல்லோருக்கும் உண்டு.
உங்களுக்கும், எனக்கும், ஏன் என்னப்பன் குமரக்கடவுளுக்கும் கூடத்தான்!
குமாரசாமியின் இசை ரசனைக்கு, 'ரசிகசிகாமணி' என்றொடு பட்டம் கொடுத்த பாடல் ஒன்று உள்ளது. நாம் இங்கே பார்க்கவிருக்கும் அப்பாடல் கோடீஸ்வரஐயரால் இயற்றப்பட்டது. இவர் 72 மேளகர்த்தா இராகங்களிலும் பாடல்களைப் புனைந்த பெருமை பெற்றவர். இவரைப் பற்றிய குறிப்புகளை முன்பொருமுறை என் வாசகத்தில் பார்த்திருக்கிறோம் இங்கே. இப்பாடல், 62வது மேளகர்த்தா இராகமாகிய ரிஷபப்பிரியா இராகத்தில் அமைந்துள்ளது. இவரது மற்ற பாடல்களைப் போலவே, இந்த பாடலிலும் இராக முத்திரையினைக் காணலாம். மேலும் 'கவி குஞ்சரதாசன்' எனப்பாடல் இயற்றியவர் முத்திரையினையும் காணலாம்.
எடுப்பு
கன நய தேசிக கானரசிக சிகாமணி நீயே கந்தா
எனக்கருள் நீயே தினம்
தொடுப்பு
கனிநய சொல்பொருள் கனகம்பீரம்
இனிய சுருதியோடு இயை லய தீர
முடிப்பு
ஸட்ஜ ரிஷபப்பிரிய காந்தார மத்யம
பஞ்சம த்வைத நிஷாத வித
சப்தஸ்வர சங்கீத கவி குஞ்சரதாசன்
அனவரதம் தரும் நின்னருள் மய
-----------------------------
* பாடலை M.L.வசந்தகுமாரி அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.
* சஞ்சய் சுப்ரமணியம் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.
-----------------------------
"கன, நய, தேசிக" என்பது மூன்று விதமான இராகப் பிரிவுகளைக் குறிப்பதாகும்.
இதுபோன்ற மூன்று விதமான இராகப் பிரிவுகளையும் ரசிக்கும் ரசிகசிகாமணியாம் கந்தன்! கலைமாமணி பட்டத்திற்கு ஏங்கும் கலைஞர்கள் ஒருபுறமிருக்க, கந்தன் மட்டும் இசை விரும்பும் ரசிகனாகவே இருக்கிறான்!!!:-)
ஒரு பாடல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணத்தினைச் சொல்லும் பாடலிது!
என்னவெல்லாம் இருக்கும்?:
சொல்
பொருள்
சுருதி
எப்படியெல்லாம் இருக்க வேண்டும்?
சொல்லிலும் பொருளிலும் - கனிநயம் நிறைந்திருக்க வேண்டும்.
அது கேட்போரை இழுக்கும் வகையில் கம்பீரமாக இருக்க வேண்டும்.
இனிமையான சுருதியினைக் கொண்டிருக்க வேண்டும்.
இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று இயல்பாக கலந்திருக்க வேண்டும்.
சப்த சுரங்களான ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம் மற்றும் நிஷாதம் - ஆகியவற்றின் சஞ்சாரங்களில் அமையப்பெற்ற இசையென்னும் இனிமை ததும்பும் சங்கமத்தில், குஞ்சரகவி'யின் தாசனாகிய அடியேன் 'குஞ்சரதாசன்', எப்பொழுதும் பாடிப்புகழுவது யாதெனில், குன்று தோறும் வளரும் குமரக் கடவுளின் குன்றா அருள்தனையேயாம்.
"கனிநயம்":
சொல்லும் சொல்லதில் *கனி*யிருத்தி, காய் விலக்கிடுவீர் என்பார் வள்ளுவர்.
கனிவான சொற்புழக்கம் கனியான சொல்லினைத் தரும்.
அக்கனியோடு சேரும் நயம், பூவோடு சேரும் நார் போல. பூவினைத் தாங்கித் திகழச் செய்யும் மறைபொருள் போலே.
நயமெனில் யாது?
நன்மை பயக்கும் யாதும் நயமென இயம்பும் நாலடியார்.
கனிவான சொல்லினை புழங்கும் பாங்கினை கனிநயம் என்போம்.
கனிநயத்தில் அன்பும், அருளும் மிளிரட்டும். அது குமரனருளைப் பாடட்டும்.
--------------------------------------------------
இந்தப் பாடலைப் பார்க்கும்போது, தியாகராஜரின் ஆரபி இராக 'நாதசுதாரசம்' கிருதியும் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலாதது. அப்பாடலில் அவர் சொல்லுவதாவது:
வேத புராண ஆகம சாஸ்திரங்களுக்கு ஆதாரமான
நாதமே இராமன் என்ற பெயரில் மனித உருவானது.
"சுரங்கள் ஏழும் இராமனின் திருமேனியில் மணிகளாகவும்
இராகம் அவனது கோதண்டமாகவும்
கன, நய, தேசிகம் ஆகிய பிரிவுகள் நாணின் முப்பிரிகளாகவும், ரஜஸ், தமஸ், சத்வம் எனும் முக்குணங்களாகவும்,
கதிகள் அம்புகளாகவும் அமையப்பெற்றுள்ளது"
என்றெலாம் இசையின் அங்கங்களை, தனது மனம் விரும்பும் மகாபுருஷனிடம் கண்டு களிக்கிறார்.
---------------
இப்பாடலை, ராதா ஜெயலக்ஷ்மி அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:
கத்ரி கோபால்நாத் அவர்களின் சாக்ஸபோனில் இப்பாடலிசை தவழ்வதை இந்த பாடல் தொகுதியில் இருந்துகேட்கலாம்.
8 comments:
மிகவும் அருமையான ஆய்வு கட்டுரை . நன்றி
மிகவும் அருமையான ஆய்வு கட்டுரை . நன்றி
உங்கள் பின்னுட்டத்தை பற்றி என் பதிவில் எழுதியிருக்கிறேன் . நேரம் இருந்தால் பார்க்கவும்
http://manasaali.blogspot.com/2011/10/01_21.html
இந்த பதிவு இன்றைய வலைச்சரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.நேரமிருக்கும் போது சென்று பார்க்கவும்
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_23.html
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.
அருமையான கட்டுரையை படித்த திருப்தி என்னுள்!
அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.
http://keerthananjali.blogspot.com/2010/11/blog-post.html
தங்கள் தளத்தை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். சமயமிருப்பின் வந்து பார்த்துக் கருத்திட்டால் மகிழ்வேன். நன்றி!
http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_05.html
Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper
Post a Comment