புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடிய தியாகராஜ கீர்த்தனை!
சத்குரு ஸ்ரீ தியாகராஜருக்கும் புரட்சிக்கவிஞர் பாராதிதாசனுக்கும் என்ன தொடர்பு என்று பார்க்கிறீர்களா? - "மருகேலரா ஓ ராகவா" - அதான் தொடர்பு!
இன்று பாவேந்தர் பாரதிதாசனாரின் பிறந்த நாள் என்று நண்பர் சிவபாலனின் பதிவில் கண்டேன் (Apr 29)
பாவேந்தர் தமிழிசைக்கு ஆற்றிய ஆரம்ப கால நற்பணிகள் பல.
அதான் இன்று, இந்த பாரதிதாசன் சிறப்புப் பதிவு!
சரி, இதில் தியாகராஜர் எங்கிருந்து வந்தார்?
நானும் இப்படித் தான் முதலில் திருதிரு என்று முழித்தேன்.
நண்பர் ஒருவர் மின்னஞ்சலில், ஒரு தமிழ்ப் பாட்டை அனுப்பி இருந்தார்.
படித்துக் கொண்டே சென்றால்,
"தியாகராஜ" என்று கடைசி வரியில் முத்திரை வருகிறது!
அட, இது என்ன, தியாகராஜ கீர்த்தனையின் மொழி பெயர்ப்பு அச்சு அசலாக, அப்படியே உள்ளதே என்று வியந்து போனேன்.
ஆனால் இன்னும் அதிசயம் காத்து இருந்தது.....
அது பாவேந்தர் பாராதிதாசன் எழுதியது என்றார்.
ச்சே...இருக்கவே முடியாது;
பாரதிதாசன் தனித்தமிழ் ஆர்வலர், புரட்சிக்கவி, தந்தை பெரியாரின் கொள்கைகள் கொண்டவர் - அவர் இராமபிரான் மேல் பாட்டு எழுதுவாரா?
அட போங்கப்பா, ஜோக் பண்ணாதீங்க என்று சொன்னால்....
அட, அது பாரதிதாசன் எழுதியது தானாம்!
இளைஞர்கள் எல்லாம் சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம் என்று ஒரு அமைப்பு தொடங்கினார்கள் பாரதியார் காலத்திலேயே!
அதில் இருந்த இளைஞர் தான்
பாரதிதாசன் - அப்போது கனக சுப்புரத்தினம்.
முருகப் பெருமான் மேல் பாடல்கள் எல்லாம் கூட புனைந்துள்ளார் நம் பாவேந்தர்.
ஆனால் அதெல்லாம் இளமையில்; இள மயில் மேல் இளமையில் பாட்டு!
அப்போது கூட தமிழார்வமும் துடிப்பும் உள்ளவராம் கவிஞர்.
தமிழால் எதுவும் செய்ய முடியும் என்கிற துடிப்பு!
தமிழிசை பற்றி ஒரு முறை விவாதிக்கும் போது, இதெல்லாம் தமிழிலே செய்ய முடியுமா என்று ஒரு கேள்வி வந்ததாம். பாரதிதாசனுக்குப் பொத்துக் கொண்டு வந்து விட்டது!
சரி, அனைவரும் போற்றி வணங்கும் தியாகராஜரின் கீர்த்தனைகளை,
மெட்டு மாறாமல், கட்டு குலையாமல், அதே மதிப்புடன்,
அப்படியே தமிழில் பாடினால் என்ன என்று அவருக்குத் தோன்றியது.
உடனே யாரிடமோ பாட்டும், அதன் பொருளும் கேட்டு உணர்ந்து கொண்டார்.
அப்படியே சில பிரபலமான கீர்த்தனைகளையும் தமிழில் மொழிபெயர்த்தாராம்.
அடடா, தியாகராஜ கீர்த்தனையின் சிறப்பே அதன் சொல் எளிமையும், ஆழ்ந்த பக்தியும் தானே!
சுகமான ராகத்தை அதனுடன் கூட்டிப் பாடினால், எவ்வளவு சுகம்!
அதை அப்படியே பாரதிதாசன் தமிழில் கொணர்கிறார் என்றால்! அச்சோ!
மின்னஞ்சல் படித்து விட்டு, நண்பருக்கு உடனே தொலைபேசினேன்!
"அட , எங்க புடிச்சப்பா இந்தப் பாட்டை?
இதே போல வேறு ஏதாச்சும் இருக்கா தெரியுமா?", என்று கேட்டேன்!
அவரோ, இது fwdஇல் வந்ததாகவும், பாரதிதாசன் கவிதைகளிலோ, இல்லை அவர் கட்டுரை எழுதிய பத்திரிகைகளிலோ, தேடிப் பார்த்தால் கிடைக்கும் என்று சொன்னார்.
இது போல் ஒரு மூன்று நான்கு கீர்த்தனையாவது மொழி பெயர்த்து எழுதியிருக்க மாட்டாரா என்று எனக்கு ஒரு நப்பாசை வந்து விட்டது!
உடனே பாரதிதாசன் கவிதைப் புத்தகத்தில் தேடிப் பார்த்தேன்... காணோம்!
சரி, சென்னையில் யாரிடமாச்சும் சொல்லித் தேடச் சொல்ல வேண்டும்!
சிந்து பைரவி படம் என்று நினைக்கிறேன்.
சிவகுமார் தமிழிசையில் ஆர்வம் காட்ட, சுகாசினி சில தியாகராஜ கீர்த்தனைகளைத் தமிழில் பாடிக் காட்டுவார். உடனே, "நீ தய ராது" என்ற பாடலை
"உன் தயவில்லையா" என்று ஒலிபரப்புவார்கள்.
ஆனால் பாடல் முழுக்கவும் இருக்காது. சில வரிகளில் சினிமாவுக்காக, உடனே முடிந்து விடும்!
இந்தப் பாடலைப் பாருங்க!
"மருகேலரா ஓ ராகவா" என்ற பாடல்! என்னிடம் இருந்து ஏன் மறைந்து கொள்கிறாய் ராமா? - இதான் தியாகராஜரின் கேள்வி!
மிகப் பிரபலமான பாடல்! நிறைய கச்சேரிகளில் இதைப் பாடுவார்கள்; கல்யாண வீடுகளில் கூட பாடப்படும் என்றும் நினைக்கிறேன்.
ஆனா பாருங்க, நமக்கும் இசைக்கும் ஏணி வச்சா கூட எட்டாது!
எல்லாமே சுகமாக ரசிக்கும் எண்ணத்தோட சரி. அதிலும் கர்நாடக,தமிழ் இசைகளின் மீது ஒரு விதமான காதல்....
ஆனா இலக்கணம் எல்லாம் ஒரு மண்ணும் எனக்குத் தெரியாது! தெரிஞ்சுக்கனும்னு ஆவல் மட்டும் தான் இருக்கு!
ஆனா உறுதியாகச் சொல்ல முடியும், யார் வேண்டுமானாலும் இந்தப் பாடலைக் கேட்டு ரசிக்கலாம்! அப்படி ஒரு துடிப்பான மெட்டில் அமைந்த பாடல்.
நீங்களே கேட்டுப் பாருங்களேன்....
முக்கியமாகப் படித்தும் பாருங்க....
அழகுத் தமிழ், சுந்தரத் தெலுங்கு இரண்டிலும்!!!
பாவேந்தர் அவ்வளவு அழகாக தமிழ் பெயர்த்துள்ளார்!
இது மொழி பெயர்ப்பு என்று சொல்லவே மனம் வரவில்லை. அதனால் தமிழ் பெயர்ப்பு என்றேன்!
பாவேந்தரின் பாரதிதாசன் கைவண்ணத்தில்...
இதன் மூலப் பாடலைத் தெரிந்தவர்கள், அதே மெட்டில் பாடிக் கொண்டே,
தமிழில் வாய் விட்டுப் படிக்கலாமே....
தமிழில் இதை பாடித் தர யாராச்சும் உதவி செய்தால் இன்னும் சிறப்பு:-)
பல்லவி (எடுப்பு)
மறைவென்ன காண் ஓ ராகவா?
மறைவென்ன காண் ஓ ராகவா?
மறையும் அனைத்தின் உருவான மேலோய்!
மதியோடு கதிரும் விழியாகக் கொண்டோய்!(மறைவென்ன காண் ஓ ராகவா)
சரணம் (முடிப்பு)
யாவும் நீயே என்றன்.. அந்-தரங்கம் -அதில்
தீவிரத்தில் தேடித், தெரிந்து கொண்டேன் - ஐயா!
தேவரீரை அன்றிச், சிந்தை ஒன்றும் இல்லேன்;
காக்க வேண்டும் என்னை, தியாகராச வேளே!(மறைவென்ன காண் ஓ ராகவா)
இது சத்குரு ஸ்ரீதியாகராஜர் பாடிய மூலப் பாடல்
(சொற்களின் பொருள் வருமாறு அடைப்புக்குறிகளில் தந்துள்ளேன் - பிழையிருந்தால் அன்புடனே சுட்டிக் காட்டவும்)
* சுதா ரகுநாதன் பாடுவதை இங்கு கேட்கலாம்
** மகராஜாபுரம் சந்தானம் பாடுவது இங்கே!
*** எஸ். ஜானகி - K.V.மகாதேவன் இசையில் - "சப்தபதி" தெலுங்குத் திரைப்படம்
பல்லவி
மருகேலரா ஓ ராகவா
(ஓ ராகவனே, ஏன் என்னிடம் இருந்து மறைந்து கொள்கிறாய்?)
அனுபல்லவி
மருகேலர சரா சர ரூபா
(மறையும் பொருட்கள் நிறைந்த உலகிலும் ரூபமாக உள்ளவனே)
பராத்பர சூர்ய சுதாகர லோசன
(பரம்பொருளே, சூர்ய சந்திரர்களை விழிகளாகக் கொண்டவனே)
சரணம்
அன்னி நீவனுசு அந்த ரங்க முன
(எல்லாப் பொருளிலும் நீதான் என்று என் அந்தரங்கத்துக்கு உள்ளே)
தின்னக வேடகி தெலிசி கொண்டே னய்ய
(நன்றாக வேட்கைப்பட்டு தெரிந்து கொண்டேன் ஐயனே)
நின்னே கானி மடி நென்ன ஜால நொருல
(உன்னை அன்றி வேறு என் சிந்தனை வேறு இல்லை)
நன்னு ப்ரோவ வய்ய தியாக ராஜ னுத
(என்னைக் காத்து ரட்சி, தியாகராஜன் வணங்கும் தெய்வமே!)
ராகம்: ஜெயந்தஸ்ரீ
தாளம்: தேசாதி
குரல்:
* உன்னி கிருஷ்ணன் - தொகுப்பிசை(Fusion)
** உன்னி கிருஷ்ணன் - ஸ்ரீ குமரன் தம்பி இசையில் - "பந்துக்கள் சத்ருக்கள்", மலையாளத் திரைப்படம்
வாத்தியம்:
* துர்கா பிரசாத் - கோட்டு வாத்தியம்
என்ன நண்பர்களே, பாட்டு படிச்சீங்களா? புடிச்சு இருந்துச்சா?? :-)
53 comments:
இந்த நிகழ்ச்சியைப் பற்றி இன்னொரு இடத்திலும் படித்திருக்கிறேன் இரவிசங்கர். பாரதிதாசனார் தியாகராஜரின் பல கீர்த்தனைகளைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பதாகத் தான் அறிகிறேன். தேடிக் கிடைத்தால் நன்றாக இருக்கும்.
ரவிசங்கர்
நல்ல பதிவு!
பகிர்வுக்கு நன்றி!
இரவிசங்கர். இன்று தான் முதன் முதலாக தியாகராஜரின் கீர்த்தனைகளில் ஒன்றை முழுதாகக் கேட்டேன். பொருள் சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி.
யோகன் ஐயா பல நாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த இடுகையைக் கண்டால் மிக மகிழ்வார் என்று எண்ணுகிறேன்.
எதுகையும் மோனையும் கூட இந்தக் கீர்த்தனையில் நன்றாக அமைந்திருக்கிறது. கவனித்தீர்களா? :-)
தின்னக என்றால் திண்ணமாக; வேடகி என்றால் தேடி (வேட்டையாடி இல்லை என்று நினைக்கிறேன்) வேட்கை கொண்டு போன்று பொருள் வரும் என்று நினைக்கிறேன். வெட்டிப்பயலைத் தான் கேட்கவேண்டும். :-)
ரவிசங்கர்,
நல்ல பதிவு.
/* பாரதிதாசன் தனித்தமிழ் ஆர்வலர், புரட்சிக்கவி, தந்தை பெரியாரின் கொள்கைகள் கொண்டவர் - அவர் இராமபிரான் மேல் பாட்டு எழுதுவாரா?*/
உண்மையில் நானும் இப்படித்தான் நினைத்தேன். இங்கே நீங்கள் பாவேந்தர் பற்றிச் சொல்லியுள்ள தகவல்கள் அனைத்தும் எனக்கு புதுச் செய்திகள்.
சில வருடங்களின் முன் பாவேந்தரின் பாடல்கள் அடங்கிய புத்தகத்தை இங்குள்ள நூலகம் ஒன்றிலிருந்து எடுத்து
வாசித்தேன். அப் புத்தகத்தில் இக் கீர்த்தனைகள் உள்ளதாக ஞாபகம் இல்லை. எதற்கும் இன்னொரு முறை அப் புத்தகத்தை எடுத்துப் படிக்க வேண்டும்.
பாவேந்தர் மொழிபெயர்த்த கீர்த்தனைகள் ஒலி வடிவில் உள்ளதா?
அட! புதுச் செய்தியா இருக்கே!!!
நல்ல பதிவு. பாராட்டுக்கள்.
பாடிப் பார்த்தால் சரியா வருது.
//துளசி கோபால் said...
அட! புதுச் செய்தியா இருக்கே!!!
நல்ல பதிவு. பாராட்டுக்கள்.
பாடிப் பார்த்தால் சரியா வருது//
ஆகா...டீச்சர்
பாடிப் பாத்தீங்களா? சரியா வருதா?
அப்படின்னா நீங்களே பாடிக் கொடுங்களேன்...
டீச்சருக்கும் சபா சான்ஸ் கிடைச்சா மாதிரி இருக்கும்!:-)
புதிய செய்தி.. அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஆண்டவன் ஏதோ ஒரு ரூபத்தில் குறுக்கிட்டுத்தான் தீருவான் என்பார்கள். அது உண்மை என்று இப்போதும் நம்புகிறேன்.
தெரியாத ஒரு நல்ல செய்தியை சொல்லி உள்ளீர்கள். நன்றி ரவி!
கே ஆர் எஸ்,
பாரதிதாசனின் சில இசைப் பாடல்கள் "துன்பம் நேர்கையில் யாழெடுத்து", "வெண்ணிலாவும் வானும் போலே.." போன்றவை இனிமையானவை. மெல்லிசை (light classical) என்ற வகையில் சேர்க்கலாம்.
ஆனால் இது போன்ற மொழிபெயர்ப்புகள் பிறமொழி (குறிப்பாக சம்ஸ்கிருத) வெறுப்பில் விளைந்த, வீம்புக்கான, பரிதாபகரமான முயற்சிகள் தவிர வேறொன்றுமில்லை என்றே கருதுகிறேன். இசை மற்றும் கலைகளின் பிரம்மாண்டத்தை சிறிதும் புரிந்துகொள்ள முடியாத, விரும்பாத தன்மை தான் இதில் தெரிகிறது.
சங்கீத சாகித்தியங்களுக்கும், கவிதைகளுக்கும் அடிப்படையில் வேறுபாடு உள்ளது. பாரதி கவிஞர், ஆனால் தியாகராஜரை கவிஞர் என்று அல்ல, வாக்கேயக்காரர் (composer) என்றே சொல்லுவார்கள். சங்கீத சாகித்தியங்களில் சொற்கள் என்பவை ஸ்வரங்களோடு சேர்ந்த பாவங்களை வெளிப்படுத்தி அந்த அனுபவத்திற்கு இன்னொரு பரிமாணம் தருகின்றன, அவ்வளவே. இவை இல்லாமலே கூட அந்த இசைப் படைப்பு முழுமையாகவே இருக்கும் (உதாரணமாக, மருகேலராவை வயலினில் வாசிப்பது போல.
// தியாகராஜ கீர்த்தனையின் மொழி பெயர்ப்பு அச்சு அசலாக, அப்படியே உள்ளதே //
// தியாகராஜரின் கீர்த்தனைகளை,
மெட்டு மாறாமல், கட்டு குலையாமல், அதே மதிப்புடன்,
அப்படியே தமிழில் பாடினால் என்ன //
இவை ரொம்ப மிகைப்படுத்தப் பட்ட, தவறான பாராட்டுதல்கள்.
"சராசர ரூப பராத்பர" என்ற சொற்களின் ஆழம் என்ன? கொஞ்சம் கலாசார பரிச்சயம் உள்ள தாய்மொழி தமிழாகக் கொண்ட யாரும் புரிந்துகொள்ள முடியும் இந்த வரிகளை. இதன் மொழிபெயர்ப்பு வரிகள் இந்த அர்த்தபாவத்தின் நுனியில் ஒரு பங்கைக் கூடத்தொடவில்லை. பின் எப்படி "அச்சு அசல்" என்றெல்லாம் சொல்கிறீர்கள் ஐயா?
மேலும், மும்மூர்த்திகள் கிருதிகளில் வேறு பலவிதமான ரசானுபவங்கள் உள்ளன. இவற்றை எந்த "பெயர்ப்பிலும்" கொண்டுவர முடியாது, அதற்கு அவசியமும் இல்லை. ஒரு உதாரணம் ஸ்வராட்சரம். பாடலின் சொற்களின் எழுத்துக்கள் அவற்றுக்கான ஸ்வரமாகவே அமைந்திருப்பது - "நீ தரினிசே ஸாம நிகம மோதினி நீ.." (பாலமுரளி), இதில் வரும் ஸா, நீ, த எழுத்துக்கள் வரும் இடங்கள் அந்தந்த ஸ்வரங்களுக்கானவை. ஒரு ரசிகனுக்கு இவை வழங்கும் அனுபவமே தனி. மருகேலராவில் எத்தனை இடங்களில் ஸ்வராட்சரங்கள் இருக்கின்றன என்று தேடும் பணியை ரசிகர்களுக்கே விடுகிறேன்!
இது போன்று சில விஷயங்களை சங்கீதக் கடலின் கரையில் நின்று காற்று வாங்கும் நானே சொல்லமுடியும் என்றால் வித்வான்கள் எவ்வளவு சொல்லுவார்கள்!
தியாகராஜ கீர்த்தனைகளை பொருளுடன் வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது, அர்த்தம் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் அதை நாடலாமே!
யாரையும் கண்டனம் செய்வதற்காக இதை எழுதவில்லை. ஆனால் திராவிட இயக்க காலத்தில் கலை, இலக்கியம், இசை பற்றி இருந்த, சாதி வெறுப்பில் விளைந்த ஒரு குருட்டு வெறி தான் இத்தகைய போக்குகளையும், இவற்றை ஆகாகாரம் செய்து போற்றிப் பாராட்டி பட்டங்கள் வழங்கும் ஒரு உணர்வு மழுங்கிய, கண்மூடிக் கூட்டத்தையும் வளர்த்தது. தமிழ்நாட்டின் பாக்கியம், இவற்றில் பலது தோற்றுவிட்டது.
இதற்கு நீங்களும் ஒரு பட்டயம் வழங்குவது என்னை ஆச்சரியப் படுத்துகிறது! அது கருதியே இந்த நீண்ட மறுமொழி. தவறாகக் கருத மாட்டீர்கள் என்ற நம்பிக்கையோடு :))
சுவாரஸ்யமான செய்தியா இருக்கே!!
எப்படி தலைவரே உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி விஷயம் எல்லம் கிடைக்கிறது??
கிடத்ததையும் மிக அழகாக வெளியிட்டிருக்கிறீர்கள்!!
வாழ்த்துக்கள்!! :-)
ஜடாயு சொன்னது
\\"சராசர ரூப பராத்பர" என்ற சொற்களின் ஆழம் என்ன? கொஞ்சம் கலாசார பரிச்சயம் உள்ள தாய்மொழி தமிழாகக் கொண்ட யாரும் புரிந்துகொள்ள முடியும் இந்த வரிகளை.\\
எனக்கும் தாய்மொழி தமிழ்தான். ஆனால் எனக்கு இதன் பொருள் புரியவில்லையே! எனக்குக் கலாச்சாரப் பரிச்சயம் இல்லை போலும். கலாச்சாரப் பரிச்சயம் என்றால் என்னவென்றும் புரியவில்லை.
//குமரன் (Kumaran) said...
இந்த நிகழ்ச்சியைப் பற்றி இன்னொரு இடத்திலும் படித்திருக்கிறேன் இரவிசங்கர். //
குமரன்...எந்த இடம் என்று நினைவிருக்கிறதா? அங்கு தேடினால், இன்னும் சில கீர்த்தனைகள் கிடைக்குமா?
//சிவபாலன் said...
ரவிசங்கர்
நல்ல பதிவு!
பகிர்வுக்கு நன்றி!
//
நன்றி சிபா.
அது சரி, வெறும் நன்றி மட்டும் தானா? :-)
பாடல் கேட்டீர்களா? பிடித்திருந்ததா?
//குமரன் (Kumaran) said...
இரவிசங்கர். இன்று தான் முதன் முதலாக தியாகராஜரின் கீர்த்தனைகளில் ஒன்றை முழுதாகக் கேட்டேன். பொருள் சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி.//
ஆகா, குமரன் இன்று தான் முழுதும் கேட்டீரா?
இதற்காகவே, இம்முயற்சியில் முழு வீச்சாய் இறங்கலாம் போல் உள்ளதே!
யான் பெற்ற இன்பம்
பெறுக இவ் வையகம்
என்பது இம்மட்டில் உண்மை.
//எதுகையும் மோனையும் கூட இந்தக் கீர்த்தனையில் நன்றாக அமைந்திருக்கிறது//
ஆமாம் குமரன். இரண்டு பாடல்களிலுமே அமைந்துள்ளது.
தெலுங்கில் கூட எதுகை மோனை போல! :-)
ஆனால் தியாகராஜர் படைப்புகளைக் கவிதைகள் என்று பார்த்தாலும், சாகித்யங்கள் என்பதே சாலவும் பொருந்தும்.
// வேடகி என்றால் தேடி (வேட்டையாடி இல்லை என்று நினைக்கிறேன்)//
உண்மை தான் குமரன். வேட்கை என்று பதிவில் மாற்றி விட்டேன். ஏதேது, இப்படிப் படித்தால் நமக்கும் கொஞ்சம் தெலுங்கு ஒச்சிந்தி போல இருக்கே! :-)
//வெட்டிப்பயலைத் தான் கேட்கவேண்டும். :-)//
பாலாஜி காரு
ஒஸ்தாவா...அர்த்தம் இஸ்தாவா? :-)
சென்றிடுவீர் எட்டுத் திக்கும். கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்றார் பாரதி. அவர் தாசன் அதைச் சரியாகச் செய்திருக்கிறார். அதைப் பாராட்டுக் கண் கொண்டு பார்க்க இத்தனை பேர்கள் இங்கே இருப்பது மகிழ்ச்சி.
ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றும் பொழுது சிறிது சேதாரம் இருக்கத்தான் செய்யும். துப்பார்க்குத் துப்பாய என்ற குறளை தெலுங்கில் மொழி பெயர்த்தால் அப்படியே தமிழ் போல இருக்காதுதான். ஆனால் சொல்லப்பட வேண்டியது கொண்டு செல்லப்படும். அதுதான் இங்கும் நடந்திருக்கிறது. இந்தப் பாடலுக்குப் பொருள் புரிந்து விட்டதே. அது சரி...கிருஷ்ணா நீ வேகமாய் வாராய் என்று கூட மொழி பெயர்ப்பு உண்டே. சுப்ரபாதத்தைத் தமிழில் மொழிபெயர்த்து எம்.எஸ் பாடியிருக்கின்றார்களே...அவைகளும் இசை மற்றும் கலையின் முழுப்பரிமாணத்தைப் புரிந்து கொள்ளாமல் எடுத்த வீம்பு முயற்சியோ! வேதம் தமிழ் செய்தவர் என்று கொண்டாடுகிறார்களே...அவர் எதில் சேர்த்தி?
பாவேந்தர் முருகப் பெருமான் மேல் தூது நூல் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. அதுவும் ஏதோ ஒரு குறிப்பிட்ட ஊர்க்கோயில் முருகன் பற்றி. யாருக்கும் கிடைத்தான் தாருங்கள்.
பாரதிதாசன் பாடலை மருகேலரா போலவே பாடிப்பார்த்தேன் ஓரளவு நன்றாகவே வருகிறது.
கண்டுபிடித்து இங்க கொடுத்ததற்கு நன்றி ரவி
ஷைலஜா
//வெற்றி said...
சில வருடங்களின் முன் பாவேந்தரின் பாடல்கள் அடங்கிய புத்தகத்தை இங்குள்ள நூலகம் ஒன்றிலிருந்து எடுத்து வாசித்தேன்//
புத்தகத்தில் இல்லை வெற்றி..
நானும் பார்த்தேன்...ஏதேனும் சஞ்சிகைகளில் தேட வேண்டும்.
ஆனால் முருகன் பாடல்கள் கவிதைத் தொகுப்பில் உள்ளன். பாவேந்தரின் முதல் கவிதையே "ஏங்கெங்கு காணினும் சக்தியடா" தானே!
//பாவேந்தர் மொழிபெயர்த்த கீர்த்தனைகள் ஒலி வடிவில் உள்ளதா?//
நான் அறிந்த வரை, இல்லை!
அதான் பதிவுலக நண்பர்களிடம் உதவி கேட்டுள்ளேன்.
முதல் தடவையாக கேள்விப்படுகிறேன்.
தகவலுக்கும் பாடலுக்கும் நன்றி...
//உண்மைத் தமிழன் said...
புதிய செய்தி.. அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.//
வாங்க உண்மைத் தமிழரே!
இதில் ஒவ்வொருவருக்கும் அவரவர் பார்வையில் ஒரு விதமான மகிழ்ச்சி, ஒரு விதமான சிந்தனை. :-)
ஆனால் நான் இங்கு இட்டது முழுக்க முழுக்க இசை இன்பம் என்ற அடிப்படையில் மட்டுமே!
பாரதிதாசனாரின் இளமைக்கால ஆன்மீக நோக்கோ, வருங்காலத்து புரட்சிச் சிந்தனைகளோ, இங்கே கருப்பொருள் இல்லை!
//நாகை சிவா said...
தெரியாத ஒரு நல்ல செய்தியை சொல்லி உள்ளீர்கள். நன்றி ரவி!//
வாங்க சிவா...
பதிவர் சந்திப்பின் போது உங்களிடம் தொலைபேசியது மிக்க மகிழ்ச்சி.
படம் தான் புலி
உங்க குரலோ மெலி
(மிருதுவாய் இருந்தது என்று சொல்ல வந்தேன் :-)
வாங்க ஜடாயு சார்!
தவறாகக் கருத இதில் என்ன சார் இருக்கிறது? உங்கள் நேரத்தைச் செலவிட்டு, கருத்துக்களைப் பின்னூட்டத்தில் வைத்துள்ளீர்கள்! நன்றி.
//இதற்கு நீங்களும் ஒரு பட்டயம் வழங்குவது என்னை ஆச்சரியப் படுத்துகிறது!//
நா(யே)ன் போய் தியாகராஜருக்குப் பட்டயம் வழங்க கற்பனை கூடச் செய்து பார்க்க முடியுமா?
பாரதிதாசனார்க்கும் பட்டயம் தரும் அளவுக்கு அடியேன் தகுதி உடையவன் இல்லையே! :-)
இந்தப் பதிவின் நோக்கம் என்ன என்று தெளிவுபடுத்தி விடுகிறேன்.
உண்மைத் தமிழருக்குச் சொன்னதையும் பாருங்கள்.
பாரதிதாசனாரின் பூர்விகத்தைக் கிளறும் எண்ணமும் இல்லை. தியாகராஜருக்கு ஒப்பாக அவரைப் பேசும் எண்ணமும் இல்லை.
என்ன தான் கோவிலில் போய் சுவாமி தரிசனம் செய்து அகம் கரைந்தாலும், ஒரு சிறு குழந்தை அந்தக் கோவிலில் விற்ற சுவாமி பொம்மையை வாங்கி வருகிறது. வீட்டுக்கு வந்தவுடன் அதனுடன் செல்லமாக விளையாடத் துவங்கி விடுகிறது. பொம்மையில் சாந்நித்யம் இல்லையாயினும், மக்கள் வ்ழிபாடு இல்லையாயினும்...
அக்குழந்தைக்கு பொம்மை ஒரு சிறு தன்னலம் கலந்த அகமகிழ்வைத் தருகிறது...அவ்வளவே!
அது போல், சற்று யோசித்துப் பாருங்களேன்.
தியாகரஜரின் எல்லாப் பாடல்களையும் தமிழாக்கம் செய்து தான் பாடுவேன் பேர்வழி என்று கிளம்பினால், அது இயலுமோ?
ஆனால் அவரின் மிகப் பிடித்தமான சில பாடல்களை அதே மெட்டில் பாடிப் பார்க்கும் போது ஒரு சிறிய இசைச் சுவை அவ்வளவே! இதில் எது பெரிது, எது உசத்தி என்ற விவாதங்கள் எழ வாய்ப்பே இல்லை.
அவரின் ஸ்வர அக்ஷரங்கள், பீஜாகஷரங்கள் எல்லாம் கொண்டு வந்து விட முடியாது. அவரின் கனராக வரிசைகளைக் கொஞ்சம் சிரமப்பட்டுக் கொண்டு வரலாம். ஆனால் ராம பக்தியை அன்புள்ளத்துடன் கொண்டு வரலாம்.
அப்படிக் கொண்டு வரும் போது வெறுமனே உரைநடையாக இல்லாமல், சற்றுக் கவிதையாக, இல்லை சந்தப் பாட்டாக கொண்டு வரும் போது மனம் குதூகலிக்கிறது.
//சங்கீத சாகித்தியங்களுக்கும், கவிதைகளுக்கும் அடிப்படையில் வேறுபாடு உள்ளது. பாரதி கவிஞர், ஆனால் தியாகராஜரை கவிஞர் என்று அல்ல, வாக்கேயக்காரர் (composer) என்றே சொல்லுவார்கள்.//
மிகவும் உண்மை; இதை ஏற்றுக் கொள்கிறேன். கவிதைகள் வேறு, சங்கீத சாகித்யங்கள் வேறு.
அதனால் தான் பாரதிதாசன் கீர்த்தனை எழுதினார் என்று சொல்லவில்லை. தியாகராஜரின் கீர்த்தனையைத் தமிழ்பெயர்த்தார் என்று மட்டும் சொன்னேன். அந்த பெயர்த்தலில் ஸ்வர ராக சஞ்சாரங்கள் எல்லாம் கொண்டு வர இன்னொரு தியாகராஜர் தான் வரணும். ஆனால் மெட்டை மட்டும் கொண்டு வந்து பாடும் போது...ஒரு பலமான புரிதல் மட்டும் ஏற்படுகிறது...
நாளை மருகேலராவைக் கேட்கும் போது...பாட்டின் பொருள் மெட்டாகவே உள்ளே தங்கி விட்டதால்...இந்த ஸ்வர சஞ்சாரங்களில் இன்னும் கவனித்து லயிக்க முடியும் என்பது தான் அடியேன் கருத்து. அணில் ராமருக்கு உதவியது போல், தியாகராஜருக்கு இது ஒன்றும் பெரிய உதவி ஒன்றும் இல்லை என்றாலும், அவர் இதைக் கண்டு புன்சிரிப்புடன் மகிழ்வார் என்று தான் கருதுகிறேன்.
குமரன் பின்னூட்டத்தைக் காணுங்கள்!
இன்று தான் முழு கீர்த்தனையும் படிப்பதாக மகிழ்ந்துள்ளார். யோகன் அண்ணாவும் மகிழ்வார் என்று சொல்லியுள்ளார். அவர் குரலில் ஒரு விதமான குதூகலம் கொப்பளிக்கிறது.
அதுவே என் நோக்கம்.
சென்ற நாட்டுப் பாடல் பதிவில், ஒரு நண்பர் கர்நாடக இசை எப்பமே தனக்கு அலர்ஜி என்றும், ஆனால் இப்போது கேட்டுப் பார்க்கலாமே என்று உந்துதல் வருவதாகக் கூறியுள்ளார்.
ஆரம்ப நிலையில் உள்ளவர்க்கு, முதல் நிலையில் மட்டும் பொருத்திப் பார்த்து ரசிக்க இது ஏதுவாகிறது.
கலை ரசிகனை, நுண்கலை ரசிகன் ஆக்க இதுவும் ஒரு உதவியாய் இருக்கும்.
// தியாகராஜ கீர்த்தனையின் மொழி பெயர்ப்பு அச்சு அசலாக, அப்படியே உள்ளதே //
"அச்சு அசல்" என்ற சொல் தான் இத்தனை புரிதலுக்கும் காரணமா?
சரி...அந்த சொற்களை நீக்கி விடுங்களேன். அதனால் தான் "ஆதே மதிப்புடன்" என்று கூடவே எழுதினேன். தியாகராஜ சாகித்யத்துக்கு மதிப்புக் குறை ஏதும் இல்லாது, கொணர்ந்தார் என்றும் குறிப்பிட்டேன்.
மேலும் இது பாரதிதாசன், கனக சுப்பு ரத்தினமாய் இருக்கும் போது எழுதியது. அதனால் அரசியல்/சமூகக் காரணிகளுக்காக திட்டமிட்டு, வெறுப்பில் விளைந்த முயற்சி என்று அடியேன் கருதவில்லை.
//தியாகராஜ கீர்த்தனைகளை பொருளுடன் வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது, அர்த்தம் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் அதை நாடலாமே!//
நல்ல யோசனை...ஆனால் முன்பே சொன்னது போல் மெட்டாகப் பொருள் உள்ளே தங்கும் போது, பொருளைப் பொருத்திப் பொருத்திப் பார்ப்பது குறைந்து விடுகிறது.
நீங்கள் சொன்ன ஸ்வர ராக சஞ்சாரங்களில் கவனம் செலுத்த ஏதுவாகிறது.
எல்லாக் கீர்த்தனைகளையும் ஒட்டு மொத்தமாக இப்படி பெயர்க்க முடியவும் முடியாது. அது சத்குரு தியாகராஜரின் ஆத்ம சமர்ப்பணம். அந்த வாரிதியை இரு கைகளால் இறைத்துக் கொட்டத் தான் முடியுமா?
அதனால் தான் மிகப் பிரபலமான பாட்டுகளையாவது இப்படிக் கொடுப்பதன் மூலம், சாதிஞ்சனே ஓ மனசா சாதிஞ்சனே என்று அடைய ஏதுவாகும் :-)
இது போன்ற முயற்சிகளை, ஆச்சாரியர் வேதாந்த தேசிகர் முன்பே செய்துள்ளார். ஆழ்வார்கள் தீங்கனியை, தமிழ் மறையை, "மெட்டு மாறாமல்" :-) அப்படியே வடமொழிக்குக் கொணர்ந்துள்ளார். பிரபந்த சாரம் என்ற பெயரில்!
வடநாட்டு வடமொழி வல்லுநர்க்கு "மாறன் சடகோபனை மனதில் விதைக்கவுண்டான ஆரம்ப ப்ரயத்னம்" என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அடியேனால் இயன்ற வரை விளக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி ஜடாயு சார்.
//CVR said...
சுவாரஸ்யமான செய்தியா இருக்கே!!
எப்படி தலைவரே உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி விஷயம் எல்லம் கிடைக்கிறது??//
வாங்க சிவிஆர்...
சுவாரஸ்யமா? சுவையாரமா? :-)
ஹி ஹி..ச்ச்சும்மா...
அதானே, உங்களூக்கு மட்டும் கலக்கல் காதல் கதைகள் எப்படித் தான் கிடைக்கிறதோ CVR? நானே கேக்கணும்னு நினைச்சேன்..நீங்க கேட்டுட்டீங்க!...:-)
//Anonymous said...
எனக்கும் தாய்மொழி தமிழ்தான். ஆனால் எனக்கு இதன் பொருள் புரியவில்லையே! எனக்குக் கலாச்சாரப் பரிச்சயம் இல்லை போலும்.//
அட, நீங்க ஒண்ணு...இவ்வளவு தன்னடக்கமா உங்களுக்கு, அனானி அவர்களே!
அவர் சொன்னது அண்ட சராசரம் அல்லது விரி நீர் முஞ்ஞாலம் :-)
கலாச்சாரப் பரிச்சயம் அல்லது பண்பாட்டுணர்வு அனைவருக்கும் உண்டு! எனக்கே இருக்கும் போது, உங்களுக்கு நிச்சயம் இருக்கும்! :-)
//ஜடாயு சொன்னது ,தியாகராஜ கீர்த்தனைகளை பொருளுடன் வானதி பதிப்பகம்
வெளியிட்டுள்ளது, அர்த்தம் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள்
அதை நாடலாமே! //
இது ரெண்டு புத்தகமா வந்துருக்கு. என்னிடம் இருக்கு. யாருக்காவது எந்தப் பாட்டுக்காவது 'பொருள்'
வேணுமுன்னாச் சொல்லுங்க.
எனக்கு ஒரு சந்தேகம்...
எதுக்கு ஒரே வரிய திரும்ப திரும்ப பாடறாங்க?
இந்த தியாகராயர் கீர்த்தனைக்கும் புரட்சிக் கவிஞர் பாடியதற்கும் உள்ள சம்பந்தம்...
புரட்சிக் கவிஞர் இசையை நன்கு கற்றவர்.பல பாடல்கள் ராக தாளங்களுடந்தான் பாடியுள்ளார்.
அவர் நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போது கேட்டிருக்கிறார்.என்னய்யா தியாகாராயர் என்கிறார்களே அது போல்த் தமிழில் இல்லையா என்று.நண்பர் இல்லையென்று சொல்ல்வே சரி பாடும் என்னவென்று பார்ப்போம் என்று சொல்லி ந்ண்பரைப் பாடச் சொல்லிக் கேட்டு உடனே தமிழில் பாடியவைதான்.
இது அவர் புரட்சிக் கவிஞராகப் பாடியதுதான்.
//G.Ragavan said...
சென்றிடுவீர் எட்டுத் திக்கும். கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்றார் பாரதி. அவர் தாசன் அதைச் சரியாகச் செய்திருக்கிறார்//
உங்கள் புரிதலுக்கு நன்றி ஜிரா.
//துப்பார்க்குத் துப்பாய என்ற குறளை தெலுங்கில் மொழி பெயர்த்தால் அப்படியே தமிழ் போல இருக்காதுதான்.//
அப்படியே மொழி பெயர்த்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செஞ்சு பாத்தேன்...:-))))
ஜிரா, அவர் சொல்வது சொற்கட்டு பற்றி இல்லை. ஸ்வர சஞ்சாரங்களைப் பற்றிச் சொல்கிறார்.
ஒரு பெயர்ப்பில் அனைத்தும் கொண்டு வர இயலாது...
அதற்கும் என்னால் இயன்ற வரை பதில் தந்துள்ளேன்; பாருங்க.
ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால்...
It is not substituting but only supplementing the effort!
இதைப் போல் வேதாந்த தேசிகரும் செய்துள்ளார்.
வடநாட்டுப் பண்டிதரும், மக்களும் பயனுற வேண்டுமே என்று பிரபந்த சாரம் என்னும் நூலாகப் பெயர்த்தார்.
"வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனின் உபய வேதத்து வித்தினை உள்ளத்திற் தூவத் தலைப்பட்டேன்; அரையர் சந்தம் இதிற் இல்லாது போனமைக்கு ஆழ்வாரே, அடியேனைப் பொறுப்பீர்" என்று முன்னுரை சொல்கிறார் அதிலே!
//அதுவும் ஏதோ ஒரு குறிப்பிட்ட ஊர்க்கோயில் முருகன் பற்றி. யாருக்கும் கிடைத்தான் தாருங்கள்//
யாருக்குக் கிடைக்கும், உம்மைத் தவிர! நீங்களே தேடி முருகனருளில் தாருங்கள் ஜிரா!
//ஷைலஜா said...
பாரதிதாசன் பாடலை மருகேலரா போலவே பாடிப்பார்த்தேன் ஓரளவு நன்றாகவே வருகிறது//
ஆகா...நீங்க சொன்னாச் சரி தான்..
நன்றி ஷைலஜா!
// இராமநாதன் said...
முதல் தடவையாக கேள்விப்படுகிறேன்.
தகவலுக்கும் பாடலுக்கும் நன்றி... //
வாங்க மருத்துவரே!
நானும் முதல் முறையாகத் தான் இதைக் கேள்விப்பட்டேன்...உடனே இட்டேன்!
//துளசி கோபால் said...
இது ரெண்டு புத்தகமா வந்துருக்கு. என்னிடம் இருக்கு. யாருக்காவது எந்தப் பாட்டுக்காவது 'பொருள்'
வேணுமுன்னாச் சொல்லுங்க.//
டீச்சர். ஐ ஆம் தி வெயிட்டிங்...
அடுத்த பல பதிவுகளுக்குத் தேவைப்படுமே! நன்றி!
ஹூம்..."பொருள்" வைத்துள்ள உங்களிடமே இசை இன்பத்தை ஒப்படைத்தால் என்னன்னும் யோசிக்கிறேன்! :-)
இசை இன்பம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு துவங்கப்பட்ட இந்தப் பதிவுகளில் தேவையற்ற சர்ச்சை தவிர்க்கப்பட வேண்டியது.
இப்பாடலின் மூலம், தியாகராஜரின் பெருமைக்கு எந்தவொரு களங்கமும் கற்பிக்கப் படவில்லை.
புரட்சிக்கவிஞரின் தமிழாக்கம் இப்பாடலுக்கு...ஸாஹித்யத்திற்கு ... மேலும் சிறப்பையே அளித்திருக்கிறது!
மூலப்பாடலை அறிமுகப்படுத்தி, அதனைப் புரிய வைத்து, அப்பாடலையும் கற்றுக்கொள்ள, அல்லது கேட்க ஒரு ஆவலையே தூண்டிவிடுகிறது என்றால் மிகையில்லை.
தங்களது சீரான பணிக்கு என் வாழ்த்துகள் ரவி!
பாவேந்தரின் பிறந்த நாளை ஒட்டி, அவர் மொழிபெயர்த்த தியாகராச கீர்த்தனைகளைச் சுட்டி, ஓர் இணக்கநிலையை உருவாக்க முயன்ற உங்கள் இடுகைக்கு நன்றி. எல்லாவிடத்தும் வலைத் தமிழ்க் குமுகத்தைப் பிரித்து, கிடாச் சண்டை போடச் சிலர் முயன்று கொண்டிருக்கும் நேரத்தில் உங்களின் இணக்கச் செய்கை போற்றத் தகுந்தது.
பாவேந்தர் - தியாகராச கீர்த்தனை பற்றிய செய்தியை என்னுடைய தமிழிசை - ஒரு பார்வை என்ற இடுகையில் (மொத்தம் 4 பகுதி) குறித்திருக்கிறேன். ஒருமுறை படித்துப் பாருங்கள். தியாகராசர் கீர்த்தனைகள் சிலவற்றைப் பாவேந்தர் தமிழாக்கம் செய்த நிகழ்வைப் பலரும் வெவ்வேறு காலத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். (காட்டாகப் புலவர் இளங்குமரன் தன்னுடைய "தமிழிசை இயக்கம்" என்ற பொத்தகத்தில் பதிவு செய்திருப்பார்.)
பாவேந்தர் நடந்து வந்த பாதை நெடுந்தொலைவு உள்ளது. பாரதியின் மறைவிற்கு அப்புறம், நம்பா மதத்திற்கு வந்து சேர்ந்த பின்னாலும் கூட, நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்காக, பல பத்திப் பாடல்களை பாவேந்தர் பாடியிருக்கிறார். அவர் புரட்சிக் கவிஞராய் அறியப் பட்ட பிறகு தான், இதைப் பாடினார். அப்படிப் பாடியது ஒன்றும் வியப்பானது இல்லை. இந்த நிகழ்வு நடந்தது 1935ம் ஆண்டு ஆகும். பாவேந்தரின் வரலாறு தெரியாமல், அவர் ஆக்கங்களைப் பரவலாய்ப் படிக்காமல், இங்கே ஒருவர் செய்தது போல, முட்டாள் தனமாகப் புறம் கூறி அவர் பெருமையைக் குலைப்பது பலகாலம் நடந்திருக்கிறது. இவர்களுக்கெல்லாம் நாம் சொல்லி ஒன்றும் தெரியப் போவதில்லை. ஏதொன்றையும் குல நோக்கிலும், காவியாடி வழியேயும் பார்த்தே பழக்கப் பட்டவர்கள், காழ்ப்பும், குல உயர்ச்சியும் தொனிக்க இப்படி எழுதிக் கொண்டுதான் இருப்பார்கள். "இணக்கமாய் யாரேனும் ஒருவர் நிகழ்வுகளையும் செய்திகளையும்" கூறினால் இவர்களுக்குப் பொறுக்கவே பொறுக்காது. "நாங்கள் எப்பவுமே தனி; நீ எவ்வளவு முட்டினாலும் நாங்கள் இருக்கும் இடத்திற்கு நீ எம்பவே முடியாது; எனவே இருக்கும் இடத்தில் நீ இருந்து கொள்" என்று பொருள்பட, மாற்றாரைத் தட்டிக் கொண்டே இந்துத்துவம் பேசுவதில் இவர்களை மிஞ்ச யாரும் கிடையாது. இவர்களின் சொல்லுக்குச் சொல் நாம் மறுமொழித்துக் கொண்டு இருக்கலாம். ஆனால், அது கொஞ்ச நேரத்தில் சலித்துப் போகும்; நம் உருப்படியான வேலையைத் தொலைப்பதாய் ஆகிப் போய்விடும். மேலும் அவை நாகரிகத்தில் அது பொருந்தாது போய் விடும். எனவே வேறு புலனத்தில் நாம் நகர்ந்து போவதே நல்லது.
பாவேந்தர் மொழிபெயர்த்த தியாகராசரின் பத்துக் கீர்த்தனைகளையும் படிக்க வேண்டுமானால், "பாவேந்தர் பாரதிதாசனின் பழம் புதுப்பாடல்கள்" என்ற நூலைப் பாருங்கள். அது முனைவர் இரா. இளவரசால் தொகுத்துப் 2005ல் பதிக்கப் பெற்றது. பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பாரதிதாசன் உயராய்வு மையத்தால் அந்தப் பொத்தகம் வெளியிடப்பெற்றது. (நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் முருகன் பாடலும் அதில் இருக்கிறது.) சுரம், அராகம், தாளம் ஆகியவற்றோடு தான் அந்த நூலில் சீர்த்தனைகள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட பாடல்களை நானே இங்கு தட்டச்சித் தருவது முறையல்ல; அப்புறம் இது போன்ற நூல்களைப் பலரும் வாங்குவது குறைந்து போகும். தேடிப் பாருங்கள். கிடைக்காது போனால் சொல்லுங்கள், நான் தட்டச்சித் தருகிறேன்.
முட்டாள் தனமாய்ச் சொன்ன நண்பர் ஏதேதோ வெற்று முழக்கச் சொற்களை (jargon) போட்டு, "வாக்கேயக்காரர் வேறு, கவிஞர் வேறு" என்று சொல்லியிருந்தார். அவருடைய முன்னிகையைப் (comment) படிக்கும் போது, கோவம் வருகிறது. முழு மறுமொழியைத் தவிர்க்கிறேன்.
"வாக்கேயக் காரர்" என்றால் என்னவென்று இவருக்குத் தெரியுமோ? இப்படிச் சொற்களைக் கொட்டிப் பம்மிக் கொண்டிருந்தால் எப்படி? பழமை காப்பாற்றப் பட்டுவிடுமோ? மெட்டுக்குப் பாட்டுப் போடுவது வாக்கேயம்; அதாவது வாக்குப் போடுவது; சொல்லை இழைப்பது. (வாக்கேயம் என்பது தமிழ்த் தொடக்கும் வடமொழி முடிபும் கொண்ட சொல்.) வாக்கேயக்காரரைத் தான் பாட்டுக்காரன் என்று தமிழில் சொல்லுகிறோம். ஆங்கிலத்தில் lyricist என்று சொல்லுவார்கள். பாட்டுக்காரரும், இசை அமைத்தவரும், பாடகரும் வெவ்வேறு ஆளாகவும் இருக்கலாம், ஒரே ஆளாகவும் இருக்கலாம்.
இசையமைத்தவனைப் பழந்தமிழில் பண்ணன் என்பார்கள் (composer என்ற சொல் இதற்குத் தான் பொருந்தும். அது பாட்டுக் காரனுக்குப் பொருந்தாது); பாடியவன் பாணன். பாடத் தெரியாமற் சொற்களை எழுதியவன் புலவன். (ஆனாலும் புலவனுக்குச் சந்தமும் இசையும் தெரியாமற் சொற்களைப் போடமுடியாது. இந்தக் காலத்துப் புதுக் கவிதை என்பது பாடல் அல்ல.) பரிபாடலைப் படித்தால் நான் சொல்ல வருவது புரியும். பாவேந்தர் பாரதிதாசன் ஆழ்ந்த தாள அறிவு கொண்டவர்; இசையறிந்தவர். எப்படிப் பார்த்தாலும் அவர் பாணரே. மணிப் பவளத்தில் சொல்ல வேண்டுமானால், அவர் ஒரு வாக்கேயக் காரரே. ஆனால் பண்ணராய் இருந்ததில்லை.
அன்புடன்,
இராம.கி.
சிறந்த பதிவு. நன்றி.
பாரதிதாசன் இதை புரட்சிக்கவிஞராக இருந்தபோதுதான் இப்படி மொழி பெயர்த்தார் என்பதை நானும் பல இடங்களில் படித்திருக்கிறேன்.
'அச்சு அசலாக' என்பது தவறுதான். உயர்வு நவிற்சியாகக் கூட அது பொருந்தவில்லை. ஏனெனில் இசை என்ற கட்டுக்குள் அதே பொருள் தருகின்ற தமிழ்ச் சொற்களைப் போட்டு அதே பாடலுணர்வும் வரவேண்டுமென்பது மிகக் கடினம். முக்கியமாக தெலுங்குக் கீர்த்த்னைகள் அளவுக்கு செங்கிருதச் சொற்களை தமிழிசைப் பாடல்களில் நான் கண்டதில்லை. தெலுங்குக் கீர்த்தனைகளில் பெருமளவில் செங்கிருதச் சொற்கள் இருக்கின்றன.
ஜடாயுவின் கண்டனம் எனக்கு ஏற்புடையதில்லை. அவர் சொல்லும் ஸ்வராட்சரமெல்லாம் மொழியாக்கப் பாடல்களில் எதிர்பார்ப்பது எவ்வகையில் சரி?
ஜிரா சரியாகச் சொல்லியிருக்கிறார்.
//ஏதொன்றையும் குல நோக்கிலும், காவியாடி வழியேயும் பார்த்தே பழக்கப் பட்டவர்கள், காழ்ப்பும், குல உயர்ச்சியும் தொனிக்க இப்படி எழுதிக் கொண்டுதான் இருப்பார்கள். "இணக்கமாய் யாரேனும் ஒருவர் நிகழ்வுகளையும் செய்திகளையும்" கூறினால் இவர்களுக்குப் பொறுக்கவே பொறுக்காது. "நாங்கள் எப்பவுமே தனி; நீ எவ்வளவு முட்டினாலும் நாங்கள் இருக்கும் இடத்திற்கு நீ எம்பவே முடியாது; எனவே இருக்கும் இடத்தில் நீ இருந்து கொள்" என்று பொருள்பட, மாற்றாரைத் தட்டிக் கொண்டே இந்துத்துவம் பேசுவதில் இவர்களை மிஞ்ச யாரும் கிடையாது. இவர்களின் சொல்லுக்குச் சொல் நாம் மறுமொழித்துக் கொண்டு இருக்கலாம். ஆனால், அது கொஞ்ச நேரத்தில் சலித்துப் போகும்; நம் உருப்படியான வேலையைத் தொலைப்பதாய் ஆகிப் போய்விடும். மேலும் அவை நாகரிகத்தில் அது பொருந்தாது போய் விடும். எனவே வேறு புலனத்தில் நாம் நகர்ந்து போவதே நல்லது. //
கண்ணுக்குக் கண்!
வாக்கேயக்காரர் என்ற சொல் நான் புரிந்து கொண்ட வகையில் 'ஒரே நேரத்தில் பாடலையும் இசையும் படைப்பவர்' என்ற பொருளைத் தர பயன்படுகிறது. ஒரு சமையலைப் போன்று காட்டாக புலவு, சோறும் சுவையுமாகக் கலந்திருப்பதைப் போன்று இசையும் கருத்தும் மொழியும் இணைந்து கிடைப்பவை கீர்த்தனைகள் என்பது என் புரிதல். இவற்றின் முழுச்சுவையோ அல்லது மூலத்தின் சுவையோ மொழியாக்கங்களில் முழுமையாகக் கிடைப்பது அரிது.
இது ஒரு அரிய மொழியாக்கம்.
//இராம.கி said...
எல்லாவிடத்தும் வலைத் தமிழ்க் குமுகத்தைப் பிரித்து, கிடாச் சண்டை போடச் சிலர் முயன்று கொண்டிருக்கும் நேரத்தில் உங்களின் இணக்கச் செய்கை போற்றத் தகுந்தது//
வாங்க, இராம.கி ஐயா!
அடியேன் எண்ண ஓட்டத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு, வாழ்த்தியமைக்கு நன்றி.
//பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பாரதிதாசன் உயராய்வு மையத்தால் அந்தப் பொத்தகம் வெளியிடப்பெற்றது. (நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் முருகன் பாடலும் அதில் இருக்கிறது.) //
முருகன் பாடலுக்கு வழி காட்டியமைக்கு நன்றி.
அப்புத்தகத்தைப் பெற முயல்கிறேன்!
//ஓகை said...
சிறந்த பதிவு. நன்றி.
'அச்சு அசலாக' என்பது தவறுதான். உயர்வு நவிற்சியாகக் கூட அது பொருந்தவில்லை.
ஏனெனில் இசை என்ற கட்டுக்குள் அதே பொருள் தருகின்ற தமிழ்ச் சொற்களைப் போட்டு அதே பாடலுணர்வும் வரவேண்டுமென்பது மிகக் கடினம்.//
உண்மை தான் ஓகை ஐயா!
"அச்சு அசலாக" என்னும் சொற்கள் - இது போன்ற புரிதலுக்குக் காரணியாய் இருக்கலாம்.
இத்தனைக்கும் "கீர்த்தனையின் மொழி பெயர்ப்பு அச்சு அசலாக", என்று மொழி பெயர்ப்பு மட்டும் தான் அப்படி இருப்பதாக இட்டேன்.
வருகைக்குக் கருத்துக்கும் நன்றி.
// வெட்டிப்பயல் said...
எனக்கு ஒரு சந்தேகம்...
எதுக்கு ஒரே வரிய திரும்ப திரும்ப பாடறாங்க?//
வந்துட்டார் ஐயா நம்ம பாலாஜி :-)
இனி களை கட்டி விடும்!
ஒரே வரிய திரும்ப திரும்ப பாடினா உங்களுக்குக் கோவம் வருதா பாலாஜி? :-) இது இங்கன்னு இல்ல...எல்லா நாட்டிலேயும் உள்ளது தான்...மரபுப் பாடல்களிலும் சரி...சினிமாப் பாடல்களிலும் சரி...
ஏன் நீங்களே கண்ணன் பாட்டில் இட்ட கனக் கச்சிதமான கவிதை..அதில் கூட "ஏ தில்லா தாங்கு தாங்கு" என்று திரும்ப திரும்ப பாடுறாங்களே! - அது ஏன் பாலாஜி? :-)
கருத்துக்கு நன்றி தமிழன்!
//VSK said...
இப்பாடலின் மூலம், தியாகராஜரின் பெருமைக்கு எந்தவொரு களங்கமும் கற்பிக்கப் படவில்லை.
மூலப்பாடலை அறிமுகப்படுத்தி, அதனைப் புரிய வைத்து, அப்பாடலையும் கற்றுக்கொள்ள, அல்லது கேட்க ஒரு ஆவலையே தூண்டிவிடுகிறது//
மிகச் சரியான வார்த்தைகள் SK ஐயா!
வசைத் துன்பம் நிற்கட்டும்!
இசை இன்பம் பெருகட்டும்!
//
வந்துட்டார் ஐயா நம்ம பாலாஜி :-)
இனி களை கட்டி விடும்!
ஒரே வரிய திரும்ப திரும்ப பாடினா உங்களுக்குக் கோவம் வருதா பாலாஜி? :-) இது இங்கன்னு இல்ல...எல்லா நாட்டிலேயும் உள்ளது தான்...மரபுப் பாடல்களிலும் சரி...சினிமாப் பாடல்களிலும் சரி...
ஏன் நீங்களே கண்ணன் பாட்டில் இட்ட கனக் கச்சிதமான கவிதை..அதில் கூட "ஏ தில்லா தாங்கு தாங்கு" என்று திரும்ப திரும்ப பாடுறாங்களே! - அது ஏன் பாலாஜி? :-)//
ரெண்டு தடவை மூணு தடவைனா பரவாயில்லை.. அதையே 5-6 தடவைக்கு மேல பாடினா போர் அடிக்கிற மாதிரி இல்லை???
தில்லா தாங்கு தாங்குனு 2 தடவைக்கு மேல பாடறதில்லை ;)
// சுப்ரபாதத்தைத் தமிழில் மொழிபெயர்த்து எம்.எஸ் பாடியிருக்கின்றார்களே...அவைகளும் இசை மற்றும் கலையின் முழுப்பரிமாணத்தைப் புரிந்து கொள்ளாமல் எடுத்த வீம்பு முயற்சியோ! //
சுப்ரபாதப் பக்திப் பனுவல் - அதில் ஒருவிதமான சந்த நயம் உள்ளது, அது "இசைப் படைப்பு" அல்ல.
இதே போல் வீரை கவிராஜ பண்டிதர் சௌந்தரிய லகரியை அற்புதமாகத் தமிழ்ச் செய்யுட்களாக எழுதியுள்ளார். கீதார்த்த சங்கிரகம் பற்றியும் இப்படியே கூறுவேன். இவை அழகிய முயற்சிகள், பக்தர்களால் செய்யப் பட்டவை. அதனால் போற்றத் தக்கவை.
// வேதம் தமிழ் செய்தவர் என்று கொண்டாடுகிறார்களே...அவர் எதில் சேர்த்தி? //
இதற்குப் பெயர் தான் கேனத் தனமாகக் கேள்வி கேட்பது என்பது.
வேதத்தை வரிவரியாக சடகோபர் மொழிபெயர்த்தாரா? இல்லை சூக்தம் சூக்தமாக ஆக்கினாரா? திருவாய்மொழியைப் படித்திருக்கிறீரா?
அந்தத் தமிழ் அனைத்தும் அவர் ஆத்ம அனுபூதியில் நின்று, ஆத்ம தரிசனத்தில் நின்று வந்த சொற்கள். இதனால் வேதமந்திரங்களை உள்ளுணர்வில் பெற்ற ரிஷிகளைப் போல அவரும் "மந்திர திரஷ்டா" ஆகிறார். அவரது வாய்மொழிகள் மந்திரங்கள் ஆகின்றன - நிறைமொழி மாந்தர் அருளிய மறைமொழி என்பதாக. அவை "வேதத்திற்கு நிகரான" என்ற பொருளிலேயே "வேதம் தமிழ் செய்த" என்று கூறப் படுகின்றனவே தவிர, மொழியாக்கம் என்ற அளவில் அல்ல. வைணவஸ்ரீ கேஆரெஸ் அவர்களே, சரிதானே?
என் கருத்தின் மீது முத்திரை குத்தும் முயற்சி தான் இங்கு நடக்கிறதே அன்றி சரியான விவாதம் இல்லை. பாரதி தாசனின் இத்தகைய மொழிபெயர்ப்புகள் கண்டிப்பாக வீம்பு தான் - அதில் ஒரு கவித்துவ நேர்மையும் எல்லை, தியாகையரின் பாடலில் கரைந்து உருகிய ஒரு ரசிக உள்ளமும் இல்லை. "ஸ்ரீரங்கநாதரையும் தில்லை நடராசரையும் பீரங்கி வைத்துப் பிளக்க வேண்டும்" என்று கூவிய ஒரு குருட்டு வெறிக் கூச்சல் கவிஞரிடம் இத்தகைய ஆழ்தலை எதிர்பார்ப்பதும் தவறுதான்!
//வெட்டிப்பயல் said...
ரெண்டு தடவை மூணு தடவைனா பரவாயில்லை.. அதையே 5-6 தடவைக்கு மேல பாடினா போர் அடிக்கிற மாதிரி இல்லை???//
சரிப்பா பாலாஜி, எத்தனை முறை ரிப்பீட்டு அனுமதிக்கலாம் என்று நம் சர்வேசனை வைத்து ஒரு சர்வே எடுத்திடலாம் :-)
Look into my eyes பத்து முறைக்கும் மேலாக ரீப்பிட் செய்வார்கள். அது செம ஹிட் :-)
பாண்டிய மன்னர் பாலாஜியின் சந்தேகத்தைத் தீர்த்து வைப்பவருக்கு ஆயிரம் ? பரிசு என்று அறிவித்து விடலாமா? :-)
ஜடாயு சார்
நல்வரவு!
//என் கருத்தின் மீது முத்திரை குத்தும் முயற்சி தான் இங்கு நடக்கிறதே அன்றி சரியான விவாதம் இல்லை//
தங்களையோ மற்றெவரையுமோ தாழ்த்திப் பேசும் எந்தப் பின்னூட்டங்களையும் அடியேன் அனுமதிக்க மாட்டேன்.
தாங்கள் வருந்தற்க!
//இவை அழகிய முயற்சிகள், பக்தர்களால் செய்யப் பட்டவை. அதனால் போற்றத் தக்கவை//
இப்போது, விவாதம் இந்தக் கருத்துக்கு வந்து விட்டது.
பக்தர்கள் இறைவனுக்குச் செய்யும் படைப்புகள் மட்டும் தான் போற்றத் தக்கவையா?
இல்லை பக்தர் அல்லாதார், இறைவனை வசை பாடியவர்கள், ஒரு முறையாச்சும், இல்லை சும்மானாங்காட்டியும்,
ஒரு பாட்டை இறைவன் பேரில் எழுதுவது நல்லதில்லையா?
//அந்தத் தமிழ் அனைத்தும் அவர் ஆத்ம அனுபூதியில் நின்று, ஆத்ம தரிசனத்தில் நின்று வந்த சொற்கள்//
மிகவும் உண்மை ஜடாயு சார்.
எம்பெருமானை ஆழ்ந்து அனுபவித்த அன்பு வார்த்தைகள் போற்றற்குரியவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
அதே சமயம்
முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பான்,
சிறு பேர் அழைத்தனவும் சீறி "அருளுவான்" - அல்லவா அவன்!
இந்தப் பாடலில் ராமபிரானுக்கு இழுக்கு ஏற்படுத்தும் நோக்கமோ, தியாகராஜருக்குக் களங்கம் கற்பிக்கும் நோக்கமோ எதுவுமில்லை.
என்ன, இதைப் பாடிய கவிஞர் பின்னாளில் இறைமறுப்புப் பாடல்களையும் பாடியுள்ளார். அந்த ஒரு காரணத்துக்காக இந்தப் பாடல் ஒட்டு மொத்தமாகத் தகுதியற்றதாக ஆகி விடாது என்பது தான் அடியேன் கருத்து.
நான் பாரதிதாசனார் பாடலை வைத்து, அவரைத் தமிழ்த் தியாகராஜர் என்றோ, அவர் பாடல்களை கீர்த்தனாம்ருதம் என்றோ கொண்டாடச் சொல்லவில்லை! இனி தியாகராஜர் பாடலுக்குப் பதிலாக, இந்தப் பாட்டையே பாடி விடலாம் என்றும் சொல்லவும் மாட்டேன்!
ஒரு நல்ல பெயர்ப்பு, இசை அறிமுக அன்பர்களுக்குச் சட்டென பிடித்துக் கொண்டு, மேலும் ஆர்வம் கூட்ட ஒரு முயற்சி...அவ்வளவே!
"அச்சு அசல்" என்பதை எந்த நோக்கத்தில் உரைத்தேன் என்பதையும் தெளிவுபடுத்தி விட்டேன்.
வேண்டுமானால் அந்தச் சொற்களை எடுத்தும் விடலாம்.
சற்று நேரத்துக்குப் பாட்டை எழுதியவரையும் அவர் என்ன நோக்கத்தோடு எழுதினார் என்பதையும் மறந்து விடலாம்.
ராகம் கூட முழுதும் உள்ளதா என்பதை மறந்து விடலாம்!
பாட்டை, அதன் வரிகளை மட்டும் கவனிக்கலாம்.
ஓ ராமா, நீ நாமா எந்த ருசிரா...
அதை அன்பன் சொன்னாலும், வேறு யார் சொன்னாலும் - "ராமா" அந்தப் பெயர் ருசியாகத் தான் உள்ளது!
//வைணவஸ்ரீ கேஆரெஸ் அவர்களே//
அய்யோ, ஜடாயு சார்..
இப்படி எல்லாம் அடியேனை வையாதீர்கள். :-)
நாயேன் தகுதி என்ன என்று எல்லார்க்கும் குறிப்பாக எனக்கும் அப்பட்டமாகத் தெரியுமே!
அவரவர் சார்பு நிலையில் அவரவர் மனத்துக்கு இனிய ஒன்றைச் சொல்லும் போது...
மாறுபாடுகள் அவ்வளவிலே நிற்பது நல்லது;
மாறுபாடுகள், வார்த்தையின் கூறுபாடுகள் ஆக வேண்டா!
இங்கு இசை இன்பம்!
இங்கு எதற்கு வசைத் துன்பம்?
எல்லார் மனத்துக்கும் இனியானைப் பாடேலோ ரெம்பாவாய்!
இசைப் பதிவு மேலும் சிறக்க நல் வழி சொல்வீர்!
I think thygaraja's composition was an outpouring od devotion to the lord.the emotion or bhavam associated with thyagaraja's "marugelara" was bhakthi
But, i think bharathi dasan composition was not for the sake of bhakthi.as thamizan said, he was mainly interested in showing that Tamil can have such songs etc and translated the original composition.His intention was not to spread devotion to Lord Vishnu
இசைக்கு மொழி தேவையில்லை, எனவே தமிழிசை என்பதெல்லாம் குறுகிய மனம் கொண்டவர்களின் கூப்பாடு என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள் திடீரென்று இப்போது பொருள் புரிந்து பாடுவதுதான் முக்கியம் என்கிறார்கள்!
\\"சராசர ரூப பராத்பர" என்ற சொற்களின் ஆழம் என்ன?\\ என்று கேட்கிறார் ஜடாயு. இசைக்குப் பொருள், முக்கியம் மொழி முக்கியம் என்று ஒத்துக்கொண்டதற்கு மிகவும் நன்றி.
இந்தச் சொற்களுக்ககான பொருளை ஒரு தமிழனால் புரிந்துகொள்ள இயலும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?
காந்தி பெரியார் பற்றிய கட்டுரையில் `உத்தரவு வாங்கிக்கொண்டு வந்துவிட்டோம்` என்று தமிழில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைககளுக்கு உண்மையான பொருள், `போய்விட்டு வருகிறோம் என்று விடைபெறுவதா` அல்லது `கட்டளையை ஏற்றுக்கொண்டு வருவதா` என்று தெரியாமல் குழம்பிய ஜடாயு, தியாகராசரின் மராத்திய வார்த்தைகளுக்குத் தமிழர்களால் பொருள் அறிந்துகொள்ள முடியும் என்று நினைப்பது வேடிக்கையாக இருக்கிறது.
Dear Kannabiran, Ravishankar:
One of the finest articles I enjoyed reading. Keep it up.
anbudan
naaga elangovan
//Anonymous said...
I think thygaraja's composition...was bhakthi
But, i think bharathi dasan composition was not for the sake of bhakthi.as thamizan said, he was mainly interested in showing that Tamil can have such songs//
Rightly said...Anony!
and our case is here...
whether the intent was bhakti or something else, still Rama Nama is sweet for the ears! :-)
//nayanan said...
One of the finest articles I enjoyed reading. Keep it up.//
நன்றி நாக இளங்கோவன்!
நன்றி. வியப்பளிக்கும் செய்தி. பாவேந்தரின் அருமையான மொழிமாற்றம். சிந்துபைரவி பார்த்ததன் விளைவாய் ப்ரோச்சேவாரெவருரா வைப் பின்பற்றி முருகன்மேல் ஒரு பாடல் எழுதியுள்ளேன். Google Blog Searchல் அணைக்கட்டுபாலா சென்று பார்க்கவும். மீண்டும் நன்றி.
அணைக்கட்டுபாலா
Post a Comment