Sunday, October 28, 2007

காதல் இன்பம்: Bryan Adams - Everything I do, I do it for you!

நீங்க முதல் முதலில் கேட்ட மேல்நாட்டு இசை என்ன-ன்னு ஞாபகம் இருக்கா? - அதுவும் அதை மிகவும் ரசித்துக் கேட்டு, மீண்டும் மீண்டும் கேட்ட முதல் அனுபவம் என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்!

பொதுவா எங்க வீட்டுல கேக்கற மீசிக், எப்பமே தமிழ் சினிமாப் பாட்டு தான்!
யாம் அறிந்த இசைகளிலே தமிழ் சினிமா
இசையைப் போல் எங்கும் காணேன்! - ஏன்னா, தமிழ் சினிமாவைத் தவிர அப்ப வேற ஒண்ணும் தெரியாது! :-))

எங்க வீட்டுல எனக்கு அண்ணனும் இல்ல, தம்பியும் இல்ல! அப்போ எல்லாம் வலையுலகத் தம்பிகளும் கிடையாது! அப்பாவை எதிர்த்துப் போராடி நம்ம மீசிக்கை ஸ்பீக்கரில் அலற வுடறதுக்கு சரியான கூட்டணி இல்ல! ஜிஸ்டர் என்னிக்குமே எதிர்க்கட்சி தான்! (சினிமா டிக்கெட் வாங்கும் போது மட்டும், அவளுக்கு நான் சத்குரு! அதுக்கப்புறம் மீண்டும் எதிர்க்கட்சி :-)

அன்னிக்கு-ன்னு பாத்து வீட்டுக்கு மை ஃப்ரெண்டு வந்தாங்க!
(அட, நம்ம காலேஜ் ஃப்ரெண்டுன்னு சொல்ல வந்தேங்க!); அவங்க நமக்குப் ப்ராஜெக்ட் மேட்டும் கூட! அவங்க கையில ஒரு சிடி.
இது Bryan Adams-ன்னு ஒருத்தர், கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி போட்ட பாட்டாம்! ரொம்ப உருக்கமா இருக்கு! கேக்கறயா ரவின்னு சொன்னாங்க!

உடனே நமக்குச் சொல்லணுமா?..... இங்கிலீஷ் பாட்டு வேற!
அம்மாவை நான் பார்க்க, அந்தப் பொண்ணும் அம்மாவைப் பார்க்க...பொண்ணு பார்த்ததும் அம்மா ஓகேன்னு சொல்லிட்டாங்க! :-)
வீட்டில் முதல் முறையா, ஃபுல் வால்யூமில், ஸ்டிரியோவுடன்,
Look into my eyes - you will see,.......
What you mean to me......
என்ற அற்புதமான காதல் கவிதை!
Everything I do, I do it for you! என்று ஒவ்வொரு வரியிலும் முடியும்! அப்படியே காற்றில் பறக்கும் மென்பஞ்சு சிறகு போல், அப்படி ஒரு சுகம்!

அன்னிக்கு கேக்க ஆரம்பிச்சது தாங்க!
இசையை மொழி, மதம், நாடு, இனம் எல்லாத்தையும் கடந்து ரசிக்கலாம்-னு அப்பப்ப ஒரு பில்ட்-அப் கொடுத்துட்டு, கேட்டுக்கிட்டே இருந்தாலும்...
முதல் காதல் போல், இந்த முதல் இசையும் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து விட்டது!
இன்றும் என் காரில், இந்தப் பாடலின் சிடி இல்லாமல், பயணம் இருக்காது!

பாட்டையும் வரிகளையும் நீங்களே படிச்சி என்சாய் பண்ணுங்க!
ஒவ்வொரு வரியும் வைர வரிகள்! தனிமையில் கேட்கும் போது காதல் விஞ்ஞானிகளும் கவிழ்ந்து விடுவார்கள்!
எனக்குப் பிடித்த பாடல், உங்களுக்கும் பிடிக்கும்-ன்னே நினைக்கிறேன்!
mp3 வேண்டும் என்றால் சொல்லுங்க; upload செய்கிறேன்!




எந்தவொரு காதலுக்கும் இந்தப் பாடலைப் பொருத்தறாங்க. மேலே கண்டது Lord of the Rings-க்கு பொருத்தியது! கீழே ஒரிஜினல் ராபின்ஹூட் வீடியோவும், Bryan Adams அவரே பாடுவதும் கொடுத்துள்ளேன்!

Look into my eyes - you will see
What you mean to me
Search your heart - search your soul
And when you find me there - you'll search no more

Don't tell me it's not worth tryin' for
You can't tell me it's not worth dyin' for
You know it's true
Everything I do - I do it for you

********************************************************
Look into your heart - you will find
There's nothin' there to hide
Take me as I am - take my life
I would give it all - I would sacrifice


Don't tell me it's not worth fightin' for
I can't help it - there's nothin' I want more
Ya know it's true
Everything I do - I do it for you

********************************************************
There's no love - like your love
And no other - could give more love

There's nowhere - unless you're there
All the time - all the way


Oh - you can't tell me it's not worth tryin' for
I can't help it - there's nothin' I want more
I would fight for you - I'd lie for you
Walk the wire for you - ya I'd die for you
********************************************************
Ya know it's true
Everything I do - I do it for you





இது ஒரு காதலன் பாடுவது போல், தன் உள்ளத்தைச் சொல்லும் பாட்டு!
Don't tell me it's not worth fightin' for
Everything I do, I do it for you! என்று சொல்கிறான்!

பாட்டின் பின்னணி கொஞ்சம் பார்ப்போமா?
Waking up the neighbours என்ற ஆல்பத்துக்காக, Bryan Adams எழுதிய பாடல்! இது சூப்பர் ஹிட்டாகி, அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பதினாறு வாரங்களுக்கு மேல்...டாப் டென்-னில் நம்பர் ஒன்னாக நின்றதாம்! - பின்னாளில் இதற்கு Grammy Award வேறு கொடுத்திருக்காங்க!
அன்றில் இருந்து, இன்று வரை பல முன்னணிப் பாடகர்கள் இதைப் பாடி இருக்காங்க! - இன்னிக்கும் Brandy குழுவிலும் இதைப் பாடுறாங்க!

ராபின் ஹூட் பற்றிய ஒரு படம், Robin Hood - Prince of Thieves!
அதற்கு பாட்டும் எழுதி, இசையமைத்துப் பாட Bryan Adams-ஐக் கூப்பிட்டாங்க! அவர் நண்பர் Mutt Lange உம் உடன் பாடினார்!
ஆனா அவங்க பாடிய விதம் ஏனோ, அந்தப் படம் எடுத்த கம்பெனிக்குப் பிடிக்காமல் போனது!
மாற்றிப் பாடும் படி எவ்வளவு சொல்லியும், ஆடம்ஸ் பாட்டின் ஜீவனை மாற்ற முடியாது என்று சொல்லி விட்டார்! அதனால் படத்தின் இறுதியில் Cast and Credit -இல் எங்கோ ஒரு மூலையில் ஆடம்ஸ்-இன் பெயரைப் போட்டுட்டாங்க!

ஆனா பாடல் வெளி வந்த பின், நம்பர் ஒன் ஹிட்டாகி, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பரவ,
ஆடம்ஸ் Cast and Credit -இல் சிறு புள்ளியாய்த் தோன்றினாலும், இசை வானில் பெரும் புள்ளியாய் ஆகி விட்டார்!
முப்பது நாடுகளில் ஹிட்டாகி, 1991-இல் அதிகம் விற்கப்பட்ட தனிப்பாடலாக வளர்ந்தது!
ஸ்பானிஷ், இத்தாலியன், ஜெர்மானிய மொழிகளிலும் பின்னர் ரெக்கார்ட் செய்யப்பட்டது!

References (உசாத்துணை):
http://wc06.allmusic.com/cg/amg.dll?p=amg&sql=10:t2jv7iajg74r
http://en.wikipedia.org/wiki/Everything_I_Do




BBC-ராபின்ஹூட்-ஒரு காட்சி


ப்ரையன் ஆடம்ஸ்-இன் லைவ் ஷோ !


பியானோவில், அதே வாசிப்பு!

Thursday, October 25, 2007

தமிழிசை பாடும் வானம்பாடி

ராகம் : சிவரஞ்சனி

தமிழிசை பாடுகின்ற வானம்பாடி - என்
தலைவன் முருகனை தினம் தேடி - நான்
தமிழிசை பாடுகின்ற வானம்பாடி!

அமிழ்தினும் இனிதான தமிழ்ப்பாட்டு - அந்த
ஆறுமுகம் மயங்கும் அதைக்கேட்டு - செந்
தமிழிசை பாடுகின்ற வானம்பாடி! - என்
தலைவன் முருகனை தினம் தேடி!

திருப்புகழில் மணக்கும் தமிழிசையே - தேன்
திருவாசம் தன்னில் தமிழிசையே!
திருஅருட்பாவெல்லாம் தமிழிசையே - தமிழ்
தெய்வத்தை வசமாக்கும் தமிழிசையே!

(தமிழிசை...)

பூம்பாவைக்கு உயிரைத் தந்த இசை - பொங்கும்
புனலினையே எதிர்த்து வந்த இசை!
பாம்பு தன் நஞ்செடுக்க வைத்த இசை - என்றும்
பரவசம் ஊட்டுகின்ற இன்ப இசை!


(தமிழிசை...)

கடைசி நான்கு வரிகளுக்கு விளக்கம் சொல்ல வாரீகளா வாசகர்களே?

பத்மஸ்ரீ Dr. சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கம்பீரக் குரலில் இந்த பாடலைக்கேட்டு தமிழிசையில் திளைத்தபடியே, கொஞ்சம் பொருள் சொல்லுங்களேன்...!

08_SEERKAZHI_Thami...


பாடலை மேலே கேட்க இயலாதவர்களுக்காக சுட்டி இங்கே.

இதுபோன்ற உருக்கமான பாடல்களுக்கு ஏற்ற ராகம் சிவரஞ்சனி. இந்த ராகத்தில் அமைந்த சில திரை இசைப்பாடல்கள்:

இன்னிசை பாடி வரும் காற்றுக்கு (துள்ளாத மனமும் துள்ளும்)
உன்னைத்தானே தஞ்சம் என்று (நல்லவனுக்கு நல்லவன்)
ஒரு ஜீவன் தான் (நான் அடிமை இல்லை)
வா வா அன்பே பூஜை செய்து (அக்னி நட்சத்திரம்)
நான் பாடும் மௌன ராகம் (இதயக்கோவில்)

Thursday, October 18, 2007

தமிழ் மொழியில் தியாகராஜர்- நீ தய ராதா?(உன் தயவில்லையா)?

எனக்கு இசை ரொம்ப பிடிக்கும்!
தமிழில் இசையோ ரொம்ப ரொம்ப பிடிக்கும்!
தனிமையில் என்னைப் பிடியாய்ப் பிடிக்கும்!
தவிக்கும் உள்ளத்தில் செடியாய் முளைக்கும்!

நியுயார்க் நகரத்தை ஒட்டினாப் போல இருக்கும் ஆறு, ஹட்சன் ஆறு!
இன்று அலுவலகத்தில் ஒரு நீண்ட.....நெடிய......மீட்டீங்....முடிந்த பின்னர், அடப் போங்கடா... கொஞ்சம் புதுக் காற்றையாச்சும் சுவாசிக்கலாமே என்ற எண்ணம் வந்துச்சு!
அதனால் ஆத்தோரமா காலாற நடந்து கொண்டிருந்தேன். உடனே "ஆத்தா, ஆத்தோரமா போறியா" ன்னு பாட்டை எல்லாம் எடுத்து வுடாதீங்க! :-)

குளிரும் அவ்வளவா இல்லை! வெயிலும், காற்றும் மிதமாய் வீசின!
என் mp3 ப்ளேயரில் அப்ப தான் ஏதோ ஒரு பாட்டு முடிஞ்சு, திடீரென்று ஒரு உருக்கமான பாட்டு துவங்கியது! - "நீ தய ராதா"?

சிந்து பைரவி படத்தில், நம்ம சிந்து, இந்தப் பாட்டின் முதல் வரியை மட்டும் ஜேகேபி-கிட்டே மொழி மாத்தி, தமிழில் பாடிக் காட்டுவாய்ங்க! அதுல இருந்து அவரும் தமிழிசைக் கட்சியில் சேந்துடுவாரு! :-))

ஆகா...இது நான் விரும்பிக் கேட்கும் ஜேசுதாஸ் பாட்டாச்சே! கொஞ்ச நேரம் அப்படியே சொக்கிப் போய் நின்று விட்டேன்!
பொருள் லேசாகத் தெரிஞ்சாப் போலத் தான் இருந்திச்சு! ஆனா அதை விட, சூழ்நிலைக்கு அந்தப் பாட்டு ரொம்ப பொருத்தமாய், இதமாய் இருந்துச்சு!

ஏன்னா, நெருங்கிய நண்பருடன் சண்டை! ஒரு நாலு வாரமா பேசவும் இல்லை! சாட்டவும் இல்லை! நடுவில் ஒரு முறை அழைத்துப் பார்த்த போது, நண்பர் கொஞ்சமும் கோபம் தணியாமல் (இல்லையில்லை...ஒரு விதமான செல்லமான உரிமையில்....), தொலைபேசியை கட் பண்ணி விட்டார்! :-) இந்த மாதிரி சமயத்தில் நாம் என்ன சொல்வோம்? - டேய், ரொம்ப தான் கோச்சிக்காதே! போதும்-டா, நிறுத்திக்கோன்னு! சொல்லலாம்!

ஆனா தியாகராஜர் வேற மாதிரி சொல்லுறாரு!
ஸ்ரீராமனே! உனக்குத் தயவே இல்லையா? உன் மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்க நீ? அப்படின்னு கேள்வி மேல கேள்வியா கேட்டுட்டு, கடைசில நச்-சுன்னு ஒரு பாயிண்டை வைக்கறாரு!
மன்னிச்சுட்டேன்னு சொன்னா என்ன கொறைஞ்சாப் போயிடுவே நீயி-ன்னு, தலையில் ஒரே தட்டா தட்டறாரு!:-)



இந்தப் பாட்டை நம் கொஞ்சு தமிழில் கேட்டா எப்படி இருக்கும்-னு உடனே தோணிச்சி!
அமெரிக்கா வந்த புதுசுல, பொழுது போகாம, இது போல ஏற்கனவே சில பிரபலமான கீர்த்தனைகளை, சும்மானாங்காட்டியும் தமிழில் ஆக்கி வைச்சிருந்தேன்!
ஒலிப்பேழையில் ஜேசுதாஸ் பாடப்பாட, நானும் அவர் கூடவே தமிழில் ஹம் பண்ணிக்கிட்டே நடந்து கொண்டிருந்தேன்!

ஆத்தோரமா ஜாகிங் பண்ண வந்த ஆத்தாக்கள், ஆத்தீ...இவன் தானாப் பேசிக்கறானேன்னு, நினைச்சுதுங்களோ என்னவோ...புன்சிரிப்பு தூவிட்டுப் போச்சுதுங்க!
நான் தான் இசையின் போதையில் இருந்தேனே! பாட்டைத் தவிர ஒன்னுமே மனசுல நிக்கலை!

தெலுங்குப் பாட்டையும், தமிழ் ஆக்கத்தையும் கீழே கொடுத்திருக்கேன்! பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க!
தமிழில் ஆக்கும் போது, அதே ராகமும் மெட்டும் அப்படியே வரவேண்டி இருக்கு; அதனால் தமிழ்ச் சொற்களை ஆங்காங்கே சற்று மாற்றி அமைக்க வேண்டி இருக்கு!
தியாகராஜரின் தெலுங்கோ, மக்களின் பேச்சுத் தெலுங்கு! அதனால் தமிழ் செய்யும் போது, அதே எளிமை வந்தா தான் இன்னும் நல்லா இருக்கும்!

இதோ...பாட்டைக் கேட்டுக்கிட்டே படிச்சீங்கன்னா, தியாகராஜர் என்ற இசைக் கடலின் சுவையில் நீங்களும் கிறங்கிப் போயிடுவீங்க!
உங்களுக்கு எது விருப்பமோ, அதைக் க்ளிக்கி கேளுங்க!.....நான் விரும்பியது நித்யஸ்ரீ மற்றும் சுசீலாம்மா பாடுவது...
* சிந்து பைரவி-யில் ஜேசுதாஸ் பாடுவது
** சுசீலாம்மா, ஒரு தெலுங்கு படத்தில், கொஞ்சம் ஜனரஞ்சகமாப் பாடுவது

* நித்யஸ்ரீ பாடுவது
** N.C. வசந்த கோகிலம் பாடுவது
*** வீணையில், காருக்குறிச்சி சகோதரர்கள்

ராகம்: வசந்த பைரவி
தாளம்: ரூபக தாளம்
பாடல்: நீ தய ராதா
வரிகள்: தியாகராஜர்


பல்லவி
(நீ தய ராதா...ராமா...நீ தய ராதா)
உன் தயவில்லையா?...ராமா...உன் தயவில்லையா?

அனுபல்லவி
(காதென வாரு எவரு...கல்யாண ராமா)
தடுப்பது யார் எவரோ?...கல்யாண ராமா...!!

சரணங்கள்
(முதல் இரண்டு பத்திகள் அவ்வளவா யாரும் பாடுவதில்லை...அதனால படிச்சிட்டு, ஸ்கிப் பண்ணிடுங்க...ஆனா பி.சுசீலா மட்டும் முழுவதுமே பாடுறாங்க...)

(நன்னு ப்ரோ-சுவர் இலனு நாடே தெலிய
இன வம்ச திலகா நீக்கு இந்த தாமசமா)

காப்பவர் யாருமிலை என்று, முன்பே தெளிந்தனனே!
கதிரவ குல திலகா, இனியும் உனக்குத் தாமதமா?


(அன்னித்திக்கு அதிகாரி வாநீ - நீனு பொக டித்தே
மன்னிஞ் சிதே நீது மகிமக்கு தக்கு வா)
அனைத்தும் நின் பொறுப்பே - உன்றன் கண்ணியம் குறைபடுமோ?
மன்னித்து அருளாயோ - உன்றன் மகிமையும் குறைபடுமோ?

(ராம ராம ராம தியாக ராஜ ஹ்ருத் சதனா
நாமதி தள்ளதில்லகா நியாயமா வேகமே)

ராம ராம ராம, தியாக - ராஜ மன வாழ்வே
என்மதி தள்ளாடக் கண்டும், நியாயமா? வா வேகமா(ய்)!

இது போல வேறு சில கீர்த்தனைகளையும் அவ்வப்போது இசை இன்பத்தில் அதே மெட்டு வராப்போலக் கொடுக்கலாம்-னு எண்ணம்! இவ்வாறு செய்வதால் மூலக் கீர்த்தனைகளை மதிக்கவில்லை என்று தயவு செய்து எண்ண வேண்டாம்! தியாகராஜரின் முன்னால் அடியேன் முயற்சி வெறும் கால் தூசி தான்!

உள்ளத்துக்கு உள்ளே உருகும் போது, மொழி குறுக்கே வரப் போவதில்லை! - இசையை மட்டும் ஹம் பண்ணி லயித்து விடலாம்!
பாட்டை, வீணையிலோ வயலினிலோ கேட்கும் போது, மொழி வந்து முன்னே நிற்கிறதா என்ன?

ஆனா, அப்படி எல்லாம் உருகிக் கேட்கணும்-னா,
மனசு அதை முதலில் உணர வேண்டும் இல்லையா?
பொருளை உணரும் போது, மனம் தியாகராஜரையும் உணர்கிறது! கரைகிறது!வீணையிலோ வயலினிலோ ஒலியாய் கேட்கும் போது கூட, உணர்ந்து உணர்ந்து, கூடவே பாடுகிறது!

பாருங்க...இந்தப் பதிவை எழுதி முடிக்கும் போது கூட, உன் தயவில்லையா-ன்னு பாடிக்கிட்டே தான் இருக்கேன்! அப்போ நீங்களும் ஹம் பண்ணத் துவங்கியாச்சா?
நீ தய ராதா...ராமா...நீ தய ராதா!

Friday, October 05, 2007

ஆபோகியில் அகமுருகி

ஆபோகி ராகத்தினைப் பற்றி அரிய ஆர்வமுள்ளவர் விக்கிபீடியாவிற்கு விஜயம் செய்யவும்.

தமிழ் திரையில் ஆபோகி ராகத்தில் வந்த சில திரை இசைப் பாடல்கள் இங்கே:

தங்கரதம் வந்தது வீதியிலே/ Dr பாலமுரளி கிருஷ்ணா, P சுசீலா / கலைக்கோவில் / MS விஸ்வநாதன்


thangarathamvantha...


காலை நேர பூங்குயில் / S ஜானகி, SPB / அம்மன் கோயில் கிழக்காலே /இளையராஜா



இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே / வாணி ஜெயராம், ஜெயசந்திரன் / வைதேகி காத்திருந்தாள் / இளையராஜா



இந்த பாடலின் ஸ்வரங்களை இங்கே பார்க்கலாம்.

சமீபத்திய படங்களைல் சந்திரமுகி படத்தில் வித்யாசாகர் இசையில் "கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்" பாடலும் இந்த ராகத்தின் சாயலில் இருக்கிறதென்பார். ஆனால் 'நி' ஸ்வரம் அதிகமாக இருப்பதால், ஸ்ரீரஞ்சனியும் இதில் இருக்கிறது எனலாம்.

திரைப்பாடல்கள் தருவது கொஞ்ச நேரம் - கொஞ்சம் இன்பம் தான், ஆபோகியின் அகமுருக்கும் பேரின்பத்தைனை செவியில் பருகிட நீங்கள் இந்த ராகத்தில் கீர்த்தனைகளைக் கேட்க வேண்டும்.

முதலில்:
சபாபதிக்கு வேறு தெய்வம் / கோபாலகிருஷ்ண பாரதியார் / மாண்டலின் U ஸ்ரீநிவாஸ்
Sabapathikku.mp3


மேலே கேட்ட பாடலுடன் தொடர்பாக, சுவையான சம்பவம் ஒன்று: இந்த பாடலை பாடிய கோபால கிருஷ்ண பாரதியும், தியாகராஜரும் சமகாலத்தவர்கள். முதன்முறை இருவரும் சந்தித்தபோது:


கோபாலகிருஷ்ண பாரதி: ஸ்வாமிகளுக்கு வணக்கங்கள்!

தியாகராஜர் : ஆஹா, நீங்கதான் 'நந்தனார் சரித்திரம்' இயற்றிய கோபால கிருஷ்ண பாரதியா, உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி!

கோபாலகிருஷ்ண பாரதி: தங்களை சந்தித்தது என் பாக்கியம்.

தியாகராஜர் : எல்லோரும் உங்கள் கீர்த்தனைகளை மிக உயர்வா சொல்கிறார்கள், ஆபோகி ராகத்தில் ஏதேனும் கீர்த்தனை செய்திருந்தால் கொஞ்சம் பாடிக் காட்டுங்களேன்.

கோபாலகிருஷ்ண பாரதி: அடடா, அந்த ராகத்தில் ஏதும் இயற்றவில்லையே!.

என்றபின் காவிரியில் போய் நீராடிவிட்டு வந்தபின் தியாகராஜருக்கு முன் பாடுகிறார்:

சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ - தில்லை
சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ?

கிருபாநிதி இவரைப்போல கிடைக்குமோ இந்த பூமிதன்னில்?
சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ?

ஒருதரம் சிவ சிதம்பரம் என்று சொன்னால் போதுமே
பரகதி பெற வேறு புண்ணியம் பண்ண வேண்டுமா?

அரிய புலையர் மூவர் பாதம் அடைந்தாரென்று புராணம்
அறிந்து சொன்ன கேட்டோம் கோபாலகிருஷ்ணன் பாடும் தில்லை
சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ?

அதுவும் "ராமா நீ சமானம் எவரு?" என்று பாடிய தியாகராஜர் முன்பாவாகவே!
பாடலைக் கேட்டு தியாகராஜரும் பாரதியை பாராட்டி தானும் அதே ராகத்தில் 'மனசு நில்ப சக்திலேகபோதே' என்ற பாடலை இயற்றினாராம்!


அடுத்ததாக:

நெக்குருகி உன்னைப் பணியா கல்நெஞ்சன்/ பாபநாசம் சிவன் / நித்யஸ்ரீ மஹாதேவன்
03 Nekkuruhi-Main....


இந்த பாபநாசம் சிவனின் ஆபோகி ராகக் கீர்த்தனையில் நெக்குருகிப் பாடினால், முருகனருள் முன்னிற்காதோ!

இந்த கீர்த்தனையில் ஸ்வர சஞ்சாரங்கள் அலாதி திருப்தி அளிப்பவை. குறிப்பாக -


ரீ ரி க ம க ரி ஸா - ரி க மா மா

த ஸ் த த மா - க ம த ஸ்ா

ரி ஸ்ா ம க ரி ...

நீங்களே கேட்டுக் களியுங்கள்:



Nekkuruhi-Swarams....

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP