Saturday, December 22, 2007

பூர்விகல்யாணி ராகம் - பகுதி 2

சென்ற பகுதியின் தொடர்ச்சி:

சென்ற பகுதியில் பின்னூட்டங்களில் இருந்து நான் அறிந்து கொண்ட 'ஜங்கார ஸ்ருதி செய்குவாய், சிவ வீணையில்' என்கிற பாடலுடன் இந்தப் பகுதியைத் தொடங்குவோம். எம்.எஸ் அவர்கள் பாடி பிரபலமடைந்த இந்தப்பாடலை இங்கு கேட்கலாம். 'ஜங்கார...' இன்று இழுக்கும் இடத்தில், பூர்விகல்யாணி அருவியில் மேலிருந்து கேழே விழுவதைப் போன்றதொரு உணர்வினைப் பெறலாம்!.
'நீ மாடலு' என்கிற பூர்விகல்யாணி கீர்த்தனையும் இந்தப் பாடலின் சாயலில் இருக்கிறது. இது பரதநாட்டியத்தில் ஜவளியாக பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

பூர்வி கல்யாணியில் இதர கிருதிகள்/கீர்த்தனைகள்:

* நின்னுவின - சியாமா சாஸ்திரி

Dr.N.ரமணி அவர்களின் புல்லாங்குழலில் இந்த பாடலை இங்கு கேட்கலாம். இந்தப் பாடலில் காஞ்சி ஏகாம்பரநாதர் / காமாட்சி பற்றிய குறிப்பும் உண்டு.

* மொய்யார் தடம் - மாணிக்கவாசகர்

பூர்வி கல்யாணி ராகத்தில் இந்த திருவெம்பாவை பாடலுக்கு பண்ணேற்றி - குறிப்பாக செம்மங்குடி அவர்களும் எம்.எஸ் அம்மா அவர்களும் பாடி இருக்கிறார்கள்.

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல் பாடி
ஐயா வழி அடியோம் வாழ்ந்தோம் காண் ஆரழற்போற்
செய்யா! வெண்ணீறாடி! செல்வா! சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்தொந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

இந்த மார்கழி மாதத்திற்கு பொருத்தமான இந்த திருப்பள்ளிஎழுச்சியை எம்.எஸ் அம்மா பாடிட இங்கே கேட்கலாம்.

* பரதெய்வம் உனையன்றி - பாபநாசம் சிவன்

இந்தக் கிருதியின் ஆலாபனையும் பின்னர் அதை வயலினில் இசைத்திடவும் கேட்கலாம். பூர்வி கல்யாணியின் இனிமையை இதில் இனிதே நுகரலாம்:

03 Paratheivam-POO...


இந்தக் கிருதியின் வரிகள் இங்கே:

பல்லவி
பரதெய்வம் உனையன்றி உண்டோ
பலநோய்க்கு மருந்தே என் துயர்தீர்க்கும் காருண்ய (பரதெய்வம்)

அனுபல்லவி
ஹரனே சதாசிவ பரனே வராபய
கரனே உமையாள் மனமகிழ் சுந்தரனே எமையாள் மறைபுகழும் (பரதெய்வம்)

சரணம்
அடிமுடியார் கண்டார் ஆதி-மத்
யாந்த ரஹித சம்போ-நாமமுடன்
வடிவமும் உனக்குண்டோ-மாலயனும்
வணங்கும் சுவயம்போ
சடை முடியணி கைலாச விஹாரா
சங்கரா த்ரிபுர ஹரநிர்விகார (பரதெய்வம்)


தொடர்ந்து, சுதா ரகுநாதன் அவர்கள் இந்தப் பாடலை பாடிடக் கேட்கலாம்:

03 Paratheivam-Sud...


திரை இசையில் பூர்விகல்யாணி:

* சந்திக்க துடித்தேன் பொன்மானே / SPB, ஜானகி / வேதம் புதிது

SandhikkaThudittae...

(இந்தப் பாடல் திரைப்படத்தில் இடம்பெறவே இல்லை என்பது வேறு விஷயம்!)

Tuesday, December 18, 2007

பூர்விகல்யாணி ராகம் - பகுதி 1

பூர்விகல்யாணி ராகத்தின் ஆரோகணம் - அவரோகணம்:

ஸ ரி1 க3 ம2 ப த2 ப ஸ
ஸ நி3 த2 ப ம2 க3 ரி1 ஸ
இது 53ஆவது மேளகர்த்தா ராகமாகிய கமனாச்ரமவின் ஜன்ய ராகம்.

இதே ராகம் முத்துசாமி தீக்ஷிதர் பாராம்பரியத்தில் கமகக்கிரியா என்று அழைக்கப்படுகிறது. இரண்டும் பிரயோகத்தில் சற்றே வேறுபடும் என்று சொல்வாரும் உண்டு. இந்த ராகத்தினை பூர்வ கல்யாணி என்றும் பூரிகல்யாணி என்ற பெயரில் வழங்குவாரும் உண்டு!.

முன்பொருநாள் அலவலக நண்பர் ஒருவர் தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை மின் அஞ்சலில் அறிவித்திருந்தார். என்ன பெயர் வைத்திருக்கிறார் என்ற கேட்டபோது மின் அஞ்சலில் 'Purvi' என்றார். எனக்கோ பெயரின் பொருள் புரியவில்லை. அவரிடம் பொருள் கேட்டபோது - இது ஒரு ராகத்தின் பெயர் என்று வேறு சொல்கிறார். அப்போதுதான் ஹிந்துஸ்தானியில் 'பூர்வி' என்றொரு ராகம் இருப்பதாகத் தெரிய வந்தது! (இந்த ராகம் கர்நாடக சங்கீத முறையில் ராகம் 'கர்மவர்தினி'க்கு சமானமாகும்).

இராக சஞ்சாரங்கள்:

கமதஸ் - பதபஸ் - நிதமக - தமகரி போன்றவை.

கீழ் ஸ்தாயில் இருந்து தொடங்குவது இந்த ராகத்தில்் இயற்றப்பட்ட பாடல்களுக்கு வழக்கமாகவும் இருந்திருக்கிறது.
உதாரணம் : நின்னேகோரி (வர்ணம் - சொண்டி வெங்கடசுப்பய்யா) மற்றும் காரணம் கேட்டு வாடி (கோபாலகிருஷ்ண பாரதி)

இந்த ராகத்தில் அமைந்த கிருதிகளில் சில இங்கே:

* எக்கலாத்திலும் உனைமறவா - திருவாரூர் ராமசாமிப்பிள்ளை
நித்யஸ்ரீ மஹாதேவன் பாடிட இந்தக் கிருதியை இங்கு கேட்கலாம். இது அன்னை மீனாட்சியைப் பாடும் கிருதி.

* ஆனந்த நடமாடுவார் தில்லை - நீலகண்ட சிவன்
ஷேக் சின்ன மௌலானா அவர்களின் இனிய நாதஸ்வரதில் இந்தப் பாடலை இங்கு கேட்கலாம்.

* காரணம் கேட்டு வாடி - கோபாலகிருஷ்ண பாரதி(?). மதுரஸ்ம்ரிதி என்றொரு ஆல்பத்தில் இந்தப் பாடலை அருணா சாய்ராம் அவர்கள் பாடிடக் கேட்கலாம். (அந்தக் தொகுப்பில் இந்தப் பாடல் சுத்தானந்த பாரதியால் இயற்றப் பட்டதாக குறிப்படப்பட்டுள்ளது.(?))

*சற்றே விலகி இரும் பிள்ளாய் - கோபாலகிருஷ்ண பாரதி



இந்த நந்தனார் சரித்திரக் கீர்த்தனையைப் பற்றி சில வரிகள்:
திருப்புங்கூரில் சிவலோக நாதனை தரிசிக்க நந்தனார் கோவிலுக்கு வெளியே நின்று எட்டிஎட்டிப் பார்த்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் அவருக்கோ வழியில் நந்தி மறைத்துக் கொண்டு இருக்கிறது. கண்ணுக்கு சரியாகத் தெரியவில்லை. உடனே,

"மாடு வழி மறித்திருக்குதே மலை போலே...உற்றுப் பார்க்க சற்றே விலகாதா..."

என்று கதறுகிறார். இது காதில் விழ, மகேஸ்வரனே
"சற்றே விலகி இரும் பிள்ளாய், சன்னிதானம் மறைக்குதாமே, சற்றே விலகி இரும் பிள்ளாய்.."
என்று நந்திக்கு ஆணையிடுகிறார்.
"நற்றவம் புரிய நம்மிடம்் திருநாளை போவார் வந்திருக்கின்றார், சற்றே விலகி இரும் பிள்ளாய்..."
என்றதும் நந்தி விலகி வழி விட்டது.

இந்தப் பாடலை ராகா.காம் இல் இங்கு கேட்கலாம். இங்கு ஒரு விளம்பரத்திற்குப் பிறகு பாடல் ஒலிக்கும், நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் குரலில்.

* மீனாக்ஷி மேமுதம் - முத்துசாமி தீக்ஷிதர்

இந்த கிருதியோடு சேர்த்து சின்னக் கதையும் உண்டு:

மதுரை மீனாட்சி அம்மன் சந்நிதியில் அம்மனை தரிசிக்கும்போது, அவரையே அறியாத பரவச நிலையில் இந்தப் பாடலை பாடுகிறார். இந்த பாடலில் மீன லோசனி - பாவ மோசனி - கதம்ப வன வாசினி - என்கிற வரிகளில் வரும். இதில் பாவ மோசனி - என்ற வரிகளை அழுத்தமாக பல சங்கதிகளில் பாடிக்கொண்டு இருக்கும்போது, ஓர் அதிசயம் நிகழ்ந்தது. மீனாட்சியின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. உடனே தீக்ஷிதர், "அம்மா, உன்னை மனம் நோகச் செய்துவிட்ட பாவியாகி விட்டேனா நான்" என்று கண்ணீர் மல்கக் கேட்டார். உடனே அன்னையின் கண்ணீர் நின்றது, சிரித்த முகமாக மாறியது. அருகே இருந்த குருக்கள், "சுவாமி, இப்படி அம்பாளின் ஆனந்தக் கண்ணீரையும், பின்னர் சிரித்த முகமாய் மாறியதையும்ன நான் என்றும் கண்டதில்லை. நீர் பெரும் பாக்கியசாலி" என்றார். பின்னர், தன் இறுதி நாட்களில் தீக்ஷிதர் தனது சிஷ்யர்களை அழைத்து இந்தப் பாடலை பாடச்சொல்லிக் கேட்டவாறே, அதுவும் 'மீன லோசனி - பாவ மோசனி' எனற வரிகள் வரும்போது உயிர் நீர்த்தார்.

மீனாட்சி அம்மனையே மகிழ்வித்த பூர்விகல்யாணியின் ராக வலிமை அதன் மகத்துவத்தைக் காட்டுகிறது. எத்தனை மனக்கவலை நிலையிலும் மனசாந்தி அளித்து மங்களம் தரும் குணம் கொண்டது பூர்விகல்யாணி எனலாம். இது போன்ற மகத்துவங்கள் பல நிறைந்த நம் சங்கீதத்தை 'நாத உபாசனை' என்று சொல்வது சாலப் பொருந்தும்.

இந்தக் கிருதியை எஸ்.சௌம்யா அவர்கள் பாடிடக் கேட்கலாம். முதலில் ஆலாபனையும், பின்பு வயலினில் வாசிப்பதையும், தொடர்ந்து கிருதியைப் பாடுவதையும் கீழே கேட்கலாம்.

02_MeenakshiMemudh...



பிரியா சிஸ்டர்ஸ் (ஹரிப்பிரியா, ஷண்முகப்பிரியா) அவர்கள் இந்தக் கிருதியைப் பாடுவது யூட்யூபில்:

பகுதி 1:



பகுதி 2:



(அடுத்த பகுதியில் தொடரும்...)
உசாத்துணை:
* சுதாமா அவர்களின் சங்கீத அலைகள்

* கர்நாடிகா.நெட் - பூர்விகல்யாணி

நன்றி:
* சிவலோகநாத சுவாமி ஆலய நுழைவாயில் படம் - ஃபிளிக்கரில் ரமேஷ்

* Music India online மற்றும் Raaga தளங்கள்

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP