பிரம்மத்தை தேடுவதெங்கணம்.
இப்பெரும் கேள்விக்கு விடைகாண இந்த ஜென்மம் போதுமோ, இல்லை நம்மாழ்வார்
“பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவிமலரென்றும் காண்தோறும் – பாவியேன்
மெல் ஆவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று”
(பூவைப்பூ, காயாம்பூ, கருநெய்தல், செங்கழுநீர்ப்பூ, ஆகிய மலர்களைக் காணும்பொழுது அவை பெருமான் திருவடிவை நினைவு படுத்துகின்ரன். அவற்றை அவன் வடிவமாகவே எண்ணி பேறுடைய அடியேனின் உயிரும் உடம்பும் பூரித்துப்போகின்றன) என்றுணர்ந்து
கூறியதுபோல் நம்மால் உணர்ந்து கூறத்தான் முடியுமோ.
இந்த கலியுகத்தில் நாம் நம்மாழ்வாரும் அல்ல, நால் வகை வேதங்கள் காட்டும் வழிச்சென்றடையும் ஸ்ததியுள்ளோரும் அல்ல பின் உய்யும் வழி எதென்று அலைபாயும் அனைவருக்கும் உபாயத்தை காட்டித்தருவது ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் வரிகள். காணும் பொருள்களிலெல்லாம் கண்ணனை, அந்த பிரம்ம ரூபத்தை காண்பது தானே உண்மையான உணர்தலாய் இருக்க முடியும். அது நீலக்கடலோ, நீள் வானமோ, இல்லை பாடித்திரியும் குயிலோ, கதிரோ, மதியோ… அனைத்தும் நீயென சொல்லும் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்பது கூட பிரம்மத்தை உணரும் வழியாகக்கொள்ளலாம் என்றால் மிகையாகதன்றோ.
பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம்
பரவசமிகவாகுதே - கண்ணா
(பால் வடியும்)
நீலக்கடல் போலும் நிறத்தழகா - எந்தன்
நெஞ்சம் குடிகொண்ட அன்று முதல் இன்றும்
எந்த பொருள் கண்டும் சிந்தனை செலாதொழிய
(பால் வடியும்)
வான முகட்டில் சற்றே மனம் வந்து நோக்கினும்
மோன முகம் வந்து தோன்றுதே
தெளிவான தண்ணீர் தடத்தில் சிந்தனை மாறினும்
சிரித்த முகம் காணுதே
கானக்குயில் குரலில் கருத்தமைந்திடினும் உன்
கானக்குழலோசை மயக்குதே
கருத்த குழலொடு நிறுத்த மயில் சிறகினை இறுக்கி அமைத்த திரத்திலே
கான மயிலாடும் மோனக்குயில் பாடும் நீல நதியோடும் வனத்திலே
குழல்முதல் எழிலிசை குழைய வரும் இசையில் குழலொடு மிளிரிள ம் கரத்திலே
கதிரும் மதியும் என நயன விழிகளிரு நளினமான சலனத்திலே (2)
காளிங்கன் சிரத்திலே கதித்த பதத்திலே
கனவு நனவினொடு பிறவி பிறவி தொரும்
கனிந்துருக வரம் தருக பரங்கருணை
(பால் வடியும்)
paalvadiyummugam.m... |
15 comments:
ஆகா, அருமையான பாடல். இதற்குமுன் சுதா ரகுநாதன் அவர்கள் பாடித்தான் கேட்டிருக்கிறேன். இப்போது ஜேசுதாஸ் அவர்கள் பாடிக் கேட்க வைத்தமைக்கு மிக்க நன்றிகள்.
இந்தப் பாடலை பார்க்கும் போது, இதுதான் பாரதியின் கண்ணன் பாடல்களுக்கெல்லாம் முன்னோடியோ எனத் தோன்றுகிறது! இராகம் நாட்டைக்குறிஞ்சி என நினைக்கிறேன்.
//அனைத்தும் நீயென சொல்லும் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்பது கூட பிரம்மத்தை உணரும் வழியாகக்கொள்ளலாம் //
அவன் திருவடி சேர
அவனியிலே ஒரு வழி = அதை
அற்புதமாகக் காட்டியதும்
அவன் அருளோ ?
பால் வடியும் நின் முகம் தேடித் தேடியென்
கால்களும் கடுத்தனவே !
வாழ் நாள் இனி பெரிதுமிலை கண்ணா ! நின்
தாள் சேரா செயலுமினி பொருளுமிலை.
யான் இரைந்து நினைந்ததும்
வான் கரைய விம்மியதும்
நீல வர்ணா, என் கண்ணா !
நீ அறிந்தே, அனுப்பிய
அழைப்பு மடலோ !
சுப்பு தாத்தா.
பின் குறிப்பு: அழைப்பு மடலை அருள் கூர்ந்து
http://movieraghas.blogspot.com
ல் பதிவு செய்ய அனுமதி அளிக்கவும்.
Jeeva Venkataraman said:
//இராகம் நாட்டைக்குறிஞ்சி என நினைக்கிறேன்.//
Delete
"என நினைக்கிறேன்."
சுப்பு தாத்தா.
http://movieraghas.blogspot.com
அப்படியே அருவியில் இருந்து வந்து கொட்டுவன போல் சொற்கள்!
அருமையான ராகத்தில் அருமையானதொரு தமிழிசைப் பாடலுக்கு நன்றி கிருத்திகா!
இந்தப் பாட்டு இன்னும் கண்ணன் பாட்டு வலைப்பூவில் வரலையே என்று எண்ணினேன்! நீங்க வந்து "இன்னுமா போடலை? உடனே போடுடா", என்று அதட்டி ஞாபகப்படுத்துவது போல் இருக்கு! :-)
நித்யஸ்ரீ பாடியதும் நன்றாக இருக்கும்!
அனைத்து பாடகர்கள் சுட்டிகளும் அங்கு தருகிறேன்!
நல்ல பாடல்.
ஜேசுதாஸின் குரலில் இப்போதுதான் கேட்கிறேன்.
எனக்கென்னவோ சுதா'தான் கலக்குகிறார் எனப்படுகிறது.
பாடலின் 'பரவசம்' அவர் பாடுகையில்தான் வெளிப்படுகிறது.
//பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரானுருவே என்று//
காணும் பொருளில் எல்லாம்
பிரான் உருவா?
கொஞ்சம் உற்று நோக்கினால்... காலையில் செக்கர் வானம், உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் முதல், பறவைகளின் பாட்டு, குழாய் பம்ப்பில் தண்ணீர் அடிக்கும் சத்தம், காலையில் அம்மா/மனைவியின் எழுந்திருடா கூக்குரல், பைக்கில் பக்கத்தே வளைய வரும் ஆசாமிகள், ஆபிசில் வரவேற்பாளினியின் புன்னகை, ஆபிஸ் பாய் மதியம் நம்முடன் உட்கார்ந்து வீட்டுச் சாப்பாட்டைச் சாப்பிடும் போது அவன் முகச் சிரிப்பு, வீடு, பெற்றோர், மனைவி, குழந்தைகள், நண்பர்கள் எல்லாமே மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை!
"பார்வை" என்பதில் தான் படரும் ஆன்மீகம்! "பார்வையை" புரிந்து கொண்டால் ஆன்மீகம் வெல்லக்கட்டி தான்! அதைத் தான் நம்மாழ்வார் "பார்க்கக்" கற்றுக் கொடுக்கிறார்.
காயிலே புளிப்பதென்ன
கனியிலே இனிப்பதென்ன
என்றெலாம் பாரதியும் பின்னாளில் அடுக்கினான்!
தெளிவான தண்ணீர் தடத்தில் சிந்தனை மாறினும்
சிரித்த முகம் வந்து காணுதே! :-)
//அழைப்பு மடலை அருள் கூர்ந்து
http://movieraghas.blogspot.com
ல் பதிவு செய்ய அனுமதி அளிக்கவும்.
//
சூரி சார்,
உங்களுக்கு தனியாக அனுமதி என்ற ஒன்றும் வேண்டுமோ?
இசை இன்பத்தில், http://movieraghas.blogspot.com என்ற உங்கள் சுட்டியும் கொடுத்துள்ளோமே! உங்கள் மனம் கவர்ந்த பதிவுகளை நீங்கள் தாராளமாக இணைக்கலாம்! :-)
ஆஹா இந்தப்பாடலை கேட்பது ஒரு அனுபவம் என்றால் இதை இத்தனை பேர் அனுபவித்துக்கேட்பது மற்றொரு வகை இன்பமாகவல்லவா இருக்கிறது. ஆம் ஜீவா இந்தப்பாடல் தொகுப்பை கேட்கும் போது எனக்கும் இப்படித்தான் தோன்றியது.
சூரிசார், ஒவ்வொருவர் தவிப்பையும் உங்கள் வார்த்தையில் வடித்தெடுத்து விட்டீர்கள்.
கே.ஆர்.எஸ். பார்வை பற்றிய தங்கள் பார்வை அருமை. உள்ளே ஓர் மிகப்பெரும் வெளிச்சம் தோன்றுகிறது. இத்தனை எளிதான அன்பை பகிர்ந்து கொல்ளுதலன்றி வேறென்ன செய்து கொண்டிருக்கிறோம் நாம் என்ற கேள்வி எழுவதை தவிர்க்கமுடிவதில்லை.
ஆம் அறிவன் நாம் தொடர்ந்து கேட்டு காதுக்களுக்கும் நிரப்பிக்கொள்ளும் இசை நம்மை தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்.
//Delete
"என நினைக்கிறேன்." //
சரீங்க ஐயா, இனிமே நினைக்கலை.
நாட்டைக்குறிஞ்சி தான்!
கேட்டு மகிழ்ந்தேன்.... ஜேசுதாஸின் குரல் எத்தனை கம்பீரம்... இனிமை...
நம்மாழ்வாரின் பாசுரத்தோடு தொடங்கும் முன்னுரை மிக நன்றாக இருக்கிறது கிருத்திகா. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று இது.
'பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்தும்', 'தீக்குள் விரலை வைத்தால், நந்தலாலா'வும் நினைவில் பளீரிட்டன...
இரண்டாவதின் வேகம் ஜாஸ்திதான்..
நினைவுகளை சுகமாக மீட்ட உதவியமைக்கு மிக்க நன்றி.
வாழ்த்துக்கள்..
ஆஹா. என்ன இனிமை! சொல்லினிமையும் குரலினிமையும் ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன, சந்தோஷமாய்.. பார்க்கும் பொருளிலெல்லாம் அவனைக் காண என்ன பாக்கியம் செய்திருத்தல் வேண்டும்!
//கனவு நனவினொடு பிறவி பிறவி தொரும் கனிந்துருக வரம் தருக//
அனைத்து வேண்டுதல்களும் இந்த வரிகளுக்குள் அடக்கம். அதனையே அடியேனும் வேண்டிக் கொண்டு.. மிகப் பிடித்தமான பாடலை இட்டமைக்கு கிருத்திகாவிற்கு நன்றிகளுடன்..
athi aruputhamana blog isai inbam. Naanum intha isai inba vellathai paurga virumbigiren. Anumathi unda?
ungal anban
ramkumar
ramkumarsm@gmail.com
A video about S/w Engineers Life
Enjoy
TamilNenjam
Post a Comment