அவளுக்கு இன்னொரு பெயர்... சிவரஞ்சனி!
ஒவ்வொருவருக்கு ஒரு விதமாக அவள் காட்சியளிப்பாள்.
தாயாக, சகோதரியாக, மனைவியாக, காதலியாக, மனைவியாக, அல்லது வழிப்பாதையில் கடந்து போகிற ஒர் அழகியாக, இப்படி அவளுக்குப் பல வடிவங்களுண்டு.
என்னைப் பொறுத்தவரை அவள் என் காதலி.
அதே போல அவளுக்குப் பல பெயர்களுமுண்டு.
அத்தனையையும் எழுதத் நினைத்தால் அவை முடிவில்லாது நீளும்.
அவற்றில் எனக்கு மிகப் பிடித்த பெயர் சிவரஞ்சனி.
பெயரைச் சொல்லிப் பார்த்தாலே,
நாவில் தேன் சொட்டி,
ஒரு பெயர் தெரியாத இனிய பூவின் வாசம் வந்து முகத்தில் மோதும்.
ஒரு முறை கடுமையான ஜுரம் வந்து, ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகிக் குணமாகி வந்த போது,
உடனிருந்து என்னைக் கவனித்துக் கொண்ட அண்ணன் பிள்ளைகள் சேவியரும், சின்னக்குட்டியும், கண்சிமிட்டியபடிக் கேட்டார்கள்.
"எப்பாவ், யாருப்பா அது சிவரஞ்சனி?
நீ லவ் பண்ற ஆண்ட்டியா?"
வெட்கத்தில் என் முகம் சிவந்தாலும், ஜுர வேகத்திலும் அந்தப் பெயரை அரற்றிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது,
அப்போதுதான் உறைத்தது.
அந்த சமயம், "சின்னக் குஷ்பூ" என்றழைக்கப்பட்ட, "சிவரஞ்சனி" என்றொரு நடிகை, மார்க்கெட் இழந்து கொண்டிருந்த நேரம்.
இது அவரல்ல என்று புரிய வைக்க நான் பெரும் பாடுபட வேண்டியிருந்தது.
சரி! என் சிவரஞ்சனியின் அழகையும், குணத்தையும், உங்களுக்கு வர்ணித்துக் காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.
மொத்தம் ஐந்தே ஸ்வரங்கள்தான்.
//ஷட்ஜமம், "ஸ"
சதுஸ்ருதி ரிஷபம், "ரி1"
சாதாரண காந்தாரம், "க"
பஞ்சமம், "ப"
சதுஸ்ருதி தைவதம். "த"//
ஸ, ரி, க, ப, த, ஸ
ஸ, த, ப, க, ரி, ஸ
சோகம், சுகம், இரண்டுக்குமே பொருத்தமானவள்.
முன்பெல்லாம் என் கீபோர்டில் மனம் போன போக்கில், இலக்கின்றி, ஒரு தனிக் குயில் பாடுவதைப்போல இந்த குறிப்பிட்ட ஸ்வரங்களைத் தடவிக் கொண்டிருப்பேன்.
ஐயோ! அந்த சமயங்களில் அவள் அழகு இருக்கிறதே....
சர்வாலங்காரத்துடன், ஜெக, ஜெகவென்று....
கண்மூடினால் இரண்டு மைதீட்டிய விழிகள்...
என்னை உள்ளுக்குள் துளைத்துக் கொண்டிருப்பதாய் உணர்ந்திருக்கிறேன்.
என் உயிர் அப்போது கிறு கிறுத்துப் போய், மெழுகாய் உருகிக் கொண்டிருக்கும்.
நான் மனம் நொந்து அழுத வேளைகளில் இந்த ஸ்வரங்களால்,
"உனக்கு நானிருக்கேண்டா என் செல்லமே!" என்று
இறுக அணைத்து, தலைதடவி, உச்சிமோந்து, ஆறுதலளித்திருக்கிறாள்.
சந்தோஷமாயிருந்த வேளைகளில்,அதை என்னுடன் பகிர்ந்து கொண்டு, என் மனத்தினுள்,
என்னுடன் கைகோர்த்து ஆடிப் பாடி மகிழ்ந்திருக்கிறாள்.
இப்போது அவளைக் குறித்து நீங்கள் அறிந்த திரை இசை உதாரணங்களுடன்...
ஒருமுறை இப்படி கீபோர்டில் வாசித்துக் கொண்டிருக்கையில், என் மாமா
கேட்டார்.
"என்னப்பா! 'வசந்த மாளிகை-ல வர்ற, 'கலைமகள் கைப்பொருளே' பாட்டு மாதிரி இருக்கு?"
அவருக்கு இசைபற்றி ஏதும் தெரியாவிட்டாலும், மிக நல்ல ரசிகர்.
ஆம்....
என்னையே அறியாமல் நான் அந்தப் பாடலின் முதல் வரியைப் பிரயோகித்திருக்கிறேன்.
அதற்குப் பிறகுதான் நான் அடிக்கடி ரசிக்கும் அந்தப் பாடலும் சிவரஞ்சனியினால், இழைக்கப் பட்ட தங்க விக்ரகம் என்பதை உணர்ந்தேன்.
பி. சுசீலாவின் குரலில்...
ஏதோ ஒரு சொல்ல முடியாத ஏக்கத்தையும், சோகத்தையும் அந்தப் பாடல் பிரதிபலிக்கும்.
கேட்டுப் பாருங்கள்.
|
பாடலை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்
அடுத்தது "நட்சத்திரம், படத்தில் 'அவள் ஒரு மேனகை' பாடல்."
எஸ். பி. பி-.... சிவரஞ்சனீ....ஈ... என்று மேல் ஸ்தாயிக்குப் போகும் போது
அம்மாடீ... எங்கொ ஒரு மேகக் குவியலின் மேல் தூக்கிக் கொண்டு போய் விடுவதைப் போல உணர்வேன். இந்தப் பாடல் பக்திரசத்தையும், சந்தோஷத்தை தரும்.
|
பாடலை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்
அடுத்து, "மைதிலி என்னைக் காதலி படத்தில், நானும் உந்தன் உறவை"
பாடலும் அப்படியே...
அவளுடைய தனித்தன்மையே இதுதான்.
தார அதிதார ஸ்தாயி என்று உச்சத்துக்கு உச்சத்தில் வாசிக்கப் பட்டாலும் சரி,
மந்திர அதி மந்திர என்று வெகு வெகு கீழே, இசைக்கப் பட்டாலும் சரி, அவள் அழகு, மின்னல் வெட்டுகிற அழகுதான்.
|
பாடலை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்
"நான் அடிமை இல்லை, படத்தில் 'ஒரு ஜீவன் தான்' பாடலை சந்தோஷமாக ஒரு முறை பாடுவார்கள்.
அப்போது இவள் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் பேரின்ப நாயகி.
|
பாடலை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்
அதே பாடலைச் சோகமாக பாடுவார் எஸ். பி. பி.
அப்போது, "சீதையைப் பிரிந்த் ராமனின் சொல்லொணாச் சோகமும், அசோகவனத்துச் சீதையின் ஆற்ற முடியாத் துயரும்," வெளிப்படும் பாருங்கள்...
|
பாடலை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்
இசைஞானி இளையராஜா இசையமைத்த "என் ராசாவின் மனசிலே" படத்தில் "குயில் பாட்டு" பாடலிலும் ஒரு முறை சந்தோஷ ரசத்தையும், மறு முறை சோக ரசத்தையும் மிக அழகாக சிவரஞ்சனி மூலம் வெளிப்படுத்துவார்.
அதில் பல்லவியில் ஒரே ஒரு முறை பிரதி மத்யமத்தை தொட்டுச் செல்லுவார் பாருங்கள்.
ஆஹா இவளலல்லவோ அழகி என்று சொல்லத் தோன்றும்.
இவ்விதம் அன்னிய ஸ்வரங்களைத் தொட்டு, அதே சமயம் அந்த ராகத்தின் இயல்பு கெடாமல், இனிமைக்கு இனிமை சேர்க்கும் வல்லமை இசைஞானிக்கு இறைவன் தந்த வரம்.
குயில் பாட்டை சந்தோஷ ரசம் ததும்பும் ஸ்வர்ணலதா-வின் குயில் குரலில் இங்கே க்ளிக் செய்து கேளுங்கள்.
அதே குயில் பாட்டை சோக ரசம் ததும்ப இசைஞானியின் கம்பீரக் குரலில் இங்கே க்ளிக் செய்து கேளுங்கள்.
ஸ்வர்ணலதாவின் குயில் பாடலை டவுன் லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
இன்னும் சிவரஞ்சனியில் வெளிவந்த இங்கு குறிப்பிட மறந்த பாடல்கள் நிறைய உண்டு.
நினைவிருக்கும் அன்பர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்.
இத்தனை அழகான, அன்பானவளையும், நான் மறந்து...
இல்லை..., மறந்ததாக நினைத்துக் கொண்டு...
சில காலம் என் குரல்வளையை நானே நெறித்துக்கொண்டு...
அவளுடன் பேசாதிருந்தேன்.
தொடர்புடைய பதிவின் சுட்டி இதோ...
இப்போதுதான் பேசத்துவங்கியிருக்கிறேன்.
பார்க்கலாம்.
43 comments:
இனிமையான பாடல் தொகுப்பிற்கு நன்றி. புகைப்பட பேழைக்கு தங்கள் வருகைகு நன்றி
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com/
சிவரஞ்சனியுடன் சஞ்சரிக்க வந்த அந்தோணி அண்ணே, வாங்க! வாங்க! நல்வரவு!
சிவரஞ்சனி போலவே பல இனிமையான பதிவுகளை இசை இன்பத்தில் தர வாழ்த்துக்கள்! :)
//எப்பாவ், யாருப்பா அது சிவரஞ்சனி?
நீ லவ் பண்ற ஆண்ட்டியா//
எனக்கும் அதே சந்தேகம் தான்....இப்போதும்! :)))
//எஸ். பி. பி-.... சிவரஞ்சனீ....ஈ... என்று மேல் ஸ்தாயிக்குப் போகும் போது//
காவிய பாதம் ஆயிரம் பேதம்
அவளது நாதம் தமிழ்ச்சங்க கீதம்
பார்வையில் குளிரும் மார்கழி மாதம்
அதி காலையில் வரும் பூபாள நாதம்
அவள் சிங்காரப் பூங்குழல் ஆவணி மேகம்
தேனுலாவிடம் கல்யாணி ராகம்
அவள் சங்கீத பாவம் கங்கையின் தேகம்
தாமரைப் பூவின் சூரிய தாகம்
-ம், ம், ம் ன்னு
தொம் தொம் ன்னு சிவரஞ்சனி அப்படியே நடந்து வராப் போலவே இருக்கும்...
சங்கர் கணேஷ் இசையில் SPB பாட...கவியரசர் கண்ணதாசன் வைர வரிகள்!
அபிமான தாஆஆஆ-ர-கை-ன்னு ஆலாபனை ரொம்ப சூப்பரா இருக்கும்!
இந்தப் பாடல் தெலுங்கில் தான் முதலில் வந்தது. பின்னரே தமிழில் நட்சத்திரம் படத்தில் வந்தது!
சோகம்+சுகம் இரண்டிற்கும் சிவரஞ்சனியை விட்டா வேற ஆளில்லை என்பது, குயில்பாட்டு..ஓ...வந்ததென்ன இள மானே பாடலில் தெரிந்து விடும்!
இன்று வந்த இன்பம் என்ன-வோ
சரி-கப-சரி-கப-த
என்று சுகத்தில் கிறங்கும் போதே
குயிலேஏஏஏஏஏ ன்னு உச்ச ஸ்தாயியில் சோகமும் கூடவே கலந்து விடும்!
ராஜ்கிரண் படம் தானே! கடைசியா ராஜ்கிரண் மனசு மாறி பூ வாங்கிக்கிட்டு வரப் போகும் போது, கர்ப்பிணிப் பெண் மீனா தவறி விழுந்து இறந்துடுவாங்க!
:(
தேரே மீரே பீச்சு மே - இந்திப் பாடல் கூட சிவரஞ்சனி தான்!
பூவானம், போல நெஞ்சம்...
பட்டு வண்ண ரோசாவாம், பாத்த கண்ணு மூடாதாம்!
-இவையும் சிவரஞ்சனியே
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணாவில் வரும் சரணம்...
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா...சிவரஞ்சனி!
சிவரஞ்சனியில் இத்தனை விஷயங்களா??? சங்கீதம் படிக்கவில்லையே என்ற ஏக்கம் ஆழமாக எழுந்தது படித்து முடித்தவுடன்……அருமையான பதிவு அந்தோணிமுத்து…
அன்புடன் அருணா
//தேரே மீரே பீச்சு மே - இந்திப் பாடல் கூட சிவரஞ்சனி தான்!
பூவானம், போல நெஞ்சம்...
பட்டு வண்ண ரோசாவாம், பாத்த கண்ணு மூடாதாம்!
-இவையும் சிவரஞ்சனியே
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணாவில் வரும் சரணம்...
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா...சிவரஞ்சனி!//
இந்தப் பாட்டுக்கள் எல்லாம் ரொம்பப் பிடிக்கும்.....அப்படின்னா நான் கூட இன்றுமுதல் சிவரஞ்சனி ரசிகைன்னு சொல்லிக் கொள்ளலாமா?
அன்புடன் அருணா
திரு. அந்தோணி, மிக அருமையான பதிவு! மிகவும் ரசித்தேன். அற்புதமாக எழுதுகிறீர்கள்! தான் ரசிப்பதை, உணர்வதை அப்படியே எழுத்தில் கொண்டு வருதல் அத்தனை சுலபமில்லை. அந்தக் கை வண்ணம் உங்களுக்கு அற்புதமாக அமைந்திருக்கிறது. எடுத்துக் காட்டியிருக்கும் பாடல்களும் அருமை. இதே போல மேலும் பல இனிமையான பதிவுகளுக்குக் காத்திருக்கிறோம் :))
அற்புதம், அருமை. ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா கலக்கறீங்க. தொடர்ந்து பதிவிடுங்க அந்தோணி.
இசையின் ராகங்கள் குறித்து புது விஷயம் நாங்க தெரிஞ்சுக்கிறோம்.
இங்கே குறிப்பிடப்பட்ட எல்லா பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். ராகம் இன்றுதான் தெரியும்.
அது
பூவண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம்
பாடலா
பூவானம் என்று வேறு பாடலா ரவி.
மெனே நஹி ஜானா
து நே நஹி ஜானா
//இப்போதுதான் பேசத்துவங்கியிருக்கிறேன்.//
நல்ல துவக்கம், மெகா சீரியல் ரேஞ்சுக்கு இல்லாவிட்டாலும், பல பகுதிகள் காண வாழ்த்துக்கள்!
என் பங்குக்கு ஒன்றைச் சேர்க்கிறேன் - நல்லவனுக்கு நல்லவன் படத்தில் - 'உன்னைத் தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன்...'
//பூவானம் என்று வேறு பாடலா ரவி//
யெக்கா, மீ தி சாரி!
அது பூவண்ணம் போல நெஞ்சம் தான்!
நாங்க தான் இழுத்து இழுத்து அதைப் பூவானம் போல நெஞ்சம்-னு ஆக்கிட்டோம்! :)
வாங்க அந்தோணி ஆரம்பமே அசத்திட்டீங்க நல்ல இசையார்வத்தோடு இசைஞானமும் கலந்த தங்கள் பதிவு இனியொதொரு இசை விருந்து.. தொடர்ந்து வர வாழ்த்துக்கள்.
\\நான் மனம் நொந்து அழுத வேளைகளில் இந்த ஸ்வரங்களால்,
"உனக்கு நானிருக்கேண்டா என் செல்லமே!" என்று
இறுக அணைத்து, தலைதடவி, உச்சிமோந்து, ஆறுதலளித்திருக்கிறாள்.\\ இசையின் அற்புதமே அதுதானே. சிவரஞ்சனி ராகத்தில அமைந்த திரைப்பட பாடல்கள் லிங்க் கொடுத்தது கேட்க உதவியாக இருந்தது
//என் உயிர் அப்போது கிறு கிறுத்துப் போய், மெழுகாய் உருகிக் கொண்டிருக்கும்.
நான் மனம் நொந்து அழுத வேளைகளில் இந்த ஸ்வரங்களால்,
"உனக்கு நானிருக்கேண்டா என் செல்லமே!" என்று
இறுக அணைத்து, தலைதடவி, உச்சிமோந்து, ஆறுதலளித்திருக்கிறாள்.//
கண்ணில் நீர் வர வைத்த வரிகள் அந்தோணி, அருமையான ஒப்பீடு, அருமையான ரசனை! இறைவன் உங்களை ஆசீர்வதிப்பான், வாழ்த்துகளும், ஆசிகளும்.
\நான் மனம் நொந்து அழுத வேளைகளில் இந்த ஸ்வரங்களால்,
"உனக்கு நானிருக்கேண்டா என் செல்லமே!" என்று
இறுக அணைத்து, தலைதடவி, உச்சிமோந்து, ஆறுதலளித்திருக்கிறாள்.\\
என்றுமே இசை மன ஆறுதலைக் கொடுக்கும், இந்தளவுக்கு உங்கள் இசைஞானம் இருப்பதும், சந்தோஷமாக இருக்கின்றது, மேலும் தொடரவும் வாழ்த்துகள்.
விஜய் said...
//இனிமையான பாடல் தொகுப்பிற்கு நன்றி.//
மிக்க நன்றி விஜய்.! :-)
விஜய் said...
//இனிமையான பாடல் தொகுப்பிற்கு நன்றி.//
மிக்க நன்றி விஜய்.! :-)
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//சிவரஞ்சனியுடன் சஞ்சரிக்க வந்த அந்தோணி அண்ணே, வாங்க! வாங்க! நல்வரவு!
சிவரஞ்சனி போலவே பல இனிமையான பதிவுகளை இசை இன்பத்தில் தர வாழ்த்துக்கள்! :) //
தர முயற்சி செய்கிறேன் மஹா விஷ்ணு.
இது அதனைக்கும் அம்மாவும்...
மஹாவிஷ்ணுவும்தான் காரணம்.
மனம் நிறைந்த நன்றிகள்.
kannabiran, RAVI SHANKAR said...
//அபிமான தாஆஆஆ-ர-கை-ன்னு ஆலாபனை ரொம்ப சூப்பரா இருக்கும்!
இந்தப் பாடல் தெலுங்கில் தான் முதலில் வந்தது. பின்னரே தமிழில் நட்சத்திரம் படத்தில் வந்தது!//
ஆஹா..! இசையில் நான்
கடுகென்றால் நீங்கள் மலையளவு ஞானம் கொண்டவர் என்பது உண்மை மஹாவிஷ்ணு.
இதை நான் உளமாறச் சொல்கிறேன்.
நீங்கள் நேரில் பாடும்போது உங்கள் குரலில் இருந்த குழைவு,
சங்கதிகளை பிரயோகித்த நெளிவு சுளிவு,
அம்மாடி...
உள்ளுக்குள் கொஞ்சம் பயத்துடன் தான், எழுதத் துவங்கினேன்.
அதோடு நிறைய தகக்வல்களும் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.
பிரமிப்பாயிருக்கிறது.
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//சோகம்+சுகம் இரண்டிற்கும் சிவரஞ்சனியை விட்டா வேற ஆளில்லை என்பது, குயில்பாட்டு..ஓ...வந்ததென்ன இள மானே பாடலில் தெரிந்து விடும்!//
ஆமாம். ஆமாம்.
அழவும்,
பின் இறையைத் தொழவும்...
அதன் பின் அவளோடு
சந்தோஷமாய் ஆடிப் பாடவும் துணையிருப்பது தானே அவளது இயற்கை.
//இன்று வந்த இன்பம் என்ன-வோ
சரி-கப-சரி-கப-த
என்று சுகத்தில் கிறங்கும் போதே
குயிலேஏஏஏஏஏ ன்னு உச்ச ஸ்தாயியில் சோகமும் கூடவே கலந்து விடும்!
ராஜ்கிரண் படம் தானே! கடைசியா ராஜ்கிரண் மனசு மாறி பூ வாங்கிக்கிட்டு வரப் போகும் போது, கர்ப்பிணிப் பெண் மீனா தவறி விழுந்து இறந்துடுவாங்க!
:(//
ஆமாம்... ராஜ்கிரண் படமேதான்.
kannabiran, RAVI SHANKAR said...
//தேரே மீரே பீச்சு மே - இந்திப் பாடல் கூட சிவரஞ்சனி தான்!
பூவானம், போல நெஞ்சம்...
பட்டு வண்ண ரோசாவாம், பாத்த கண்ணு மூடாதாம்!
-இவையும் சிவரஞ்சனியே
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணாவில் வரும் சரணம்...
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா...சிவரஞ்சனி!///
ஆஹா.. தகவலுக்கு நன்றி.
குறையொன்றுமில்லை....
அனைத்தும் நிறையே...
வாழ்க்கையை Positive- ஆக பார்க்க மறைமூர்த்திக் கண்ணன் உதவுகிறார். (பாடல் வரிகள் அத்தனை அருமை)
மதுமிதா said...
//அற்புதம், அருமை. ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா கலக்கறீங்க. தொடர்ந்து பதிவிடுங்க அந்தோணி.
இசையின் ராகங்கள் குறித்து புது விஷயம் நாங்க தெரிஞ்சுக்கிறோம்.//
நன்றி அம்மா.
என் சிற்றவுக்கு எட்டிய வரை எழுத முயற்சி செய்கிறேன்.
அனைத்தும் உங்களின் ஆசீர்.
ஜீவா (Jeeva Venkataraman) said...
//
நல்ல துவக்கம், மெகா சீரியல் ரேஞ்சுக்கு இல்லாவிட்டாலும், பல பகுதிகள் காண வாழ்த்துக்கள்!
என் பங்குக்கு ஒன்றைச் சேர்க்கிறேன் - நல்லவனுக்கு நல்லவன் படத்தில் - 'உன்னைத் தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன்...'//
நன்றி ஜீவா அண்ணா...!
இந்தப் பாடலை ஜேசுதாசும்,
உமாரமணனும்
என்னமாய்
பாடியிருக்கிறார்கள்.
சோகம்= சிவரஞ்சனி.
Aruna said...
//சங்கீதம் படிக்கவில்லையே என்ற ஏக்கம் ஆழமாக எழுந்தது படித்து முடித்தவுடன்……//
ஐயோ...
சங்கீதத்தை ரசிக்க சங்கீதம் படிச்சுத்தான் ஆகணுமா என்ன?
எனக்குத் தெரியுமே...
நீங்கள் எத்தனை பெரிய சங்கீத வித்வான் என்று/
கவிநயா said...
//தான் ரசிப்பதை, உணர்வதை அப்படியே எழுத்தில் கொண்டு வருதல் அத்தனை சுலபமில்லை. அந்தக் கை வண்ணம் உங்களுக்கு அற்புதமாக அமைந்திருக்கிறது.//
நிஜமாகவா?
மிக்க நன்றி சகோதரி.
இருப்பினும் இந்த விஷயத்தில் நீங்கள்தான் எனக்கு சீனியர்.
கிருத்திகா said...
//வாங்க அந்தோணி ஆரம்பமே அசத்திட்டீங்க நல்ல இசையார்வத்தோடு இசைஞானமும் கலந்த தங்கள் பதிவு இனியொதொரு இசை விருந்து..//
நன்றி சகோதரி.
என்ன சொல்ல???
எல்லாம் இறைவன் செயல்.
சின்ன அம்மிணி said...
// இசையின் அற்புதமே அதுதானே.//
ஆம் சகோதரி.
இசையும், நகைச்சுவையும்
மட்டுமே மனிதனை மனிதனாகவே காட்டுகின்றன்ற மூலப் பொருட்கள்.
geethasmbsvm6 said...
//கண்ணில் நீர் வர வைத்த வரிகள் அந்தோணி, அருமையான ஒப்பீடு, அருமையான ரசனை! இறைவன் உங்களை ஆசீர்வதிப்பான், வாழ்த்துகளும், ஆசிகளும்.
இந்த வாழ்த்துக்ளும் ஆசிகளும் போதும் அம்மா.
வேறென்ன வேண்டும் ஒரு மனிதனுக்கு.
geethasmbsvm6 said...
\\என்றுமே இசை மன ஆறுதலைக் கொடுக்கும், இந்தளவுக்கு உங்கள் இசைஞானம் இருப்பதும், சந்தோஷமாக இருக்கின்றது, மேலும் தொடரவும் வாழ்த்துகள்.//
நன்றி அம்மா.
பதிவிட ஆசியிட்டு என்னைப் பணித்த
மதுமிதா அம்மாவுக்கும்,
அழைப்பு விடுத்த KRS-ற்கும் மீண்டும் என் மனம் நிறைந்த நன்றிகள்.
ஆயினும் இந்த ஒரு பதிவிற்கே A.R.RAHMAAN ரேஞ்சுக்கு தாமதப் படுத்திவிட்டேன் என்பது எனக்கு மிகவும் வருத்தமே.
இதற்காக அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள்.
இனி அடிக்கடிப் பதிவிட முயற்சி செய்கிறேன்.
அருமையான பதிவு. நீங்கள் சொல்ல மறந்த ஒரு பாடல் நல்லவனுக்கு நல்லவன் படத்தில் வரும் " உன்னைத்தானே தஞ்ஜம் என்று நம்பி வந்தேன் மானே". பாட்டின் ஒவ்வொரு வரிகளும் என் நெஞ்ஜில் ஆழமாக பதிந்தவை. என்னை மிகவும் கவர்ந்த சிவரஞ்ஜினி அவள்தான்.
இதோ இன்னுமொரு சிவரஞ்ஜனி - மீனவ நண்பன் படத்தில் வரும் பாடல் - "தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து". என் சில இசை நண்பர்கள் இதை மிஸ்ர சிவரஞ்ஜனி என்பார்கள்.
வணக்கம்
இன்னும் நிறைய எதிர் பார்த்து
http://loosupaya.blogspot.com
அந்தோணி முத்து சிவரஞ்சனியில் லயிக்க வைத்துவிட்டீர்..
அவள் ஒரு மேனகை பாடல் நான் சிறுவனாக இருக்கும்போது தினமும் மாலை 5 மணிவாக்கில் சிலோன் ரேடியோவில் ஒளிபரப்பாகும். ஒரு நாள்கூட நான் தவறவிட்டதில்லை. அவ்வளவு அருமையான ராகம்.. உடன் சேர்ந்து பாடுவதற்கு ஏற்றாற்போல் அமைக்கப்பட்டிருக்கிறது.. சிறு வயதிலிருந்து இப்போதுவரையிலும் அந்தப் பாடல் என்னுடைய பேவரைட்டாகவே இருந்து வருகிறது.. கூடவே அப்பாடல் எனது ஆசான் கண்ணதாசனின் பாடல் என்கிறபோது பாடலின் சிறப்பு பற்றிச் சொல்லவும் வேண்டுமா?
பின்னூட்டத்தில் பல அன்பர்கள் சொல்லியிருக்கும் சிவரஞ்சனி ராகத்தில் அமைந்த பாடல்கள் அனைத்துமே அருமையானவை. அதிலும் அந்த 'நல்லவனுக்கு நல்லவன்' படத்தின் பாடல்.. ம்.. அந்தப் படத்தின் வெற்றியில் அந்தப் பாடலுக்கும் பெரும் பங்குண்டு என்னும்போது ராகத்தின் சிறப்பைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?
மிக, மிக நல்ல பதிவு அந்தோணி.. வாழ்த்துகிறேன்..
வாழ்க வளமுடன்..
manipayal said...
//அருமையான பதிவு. நீங்கள் சொல்ல மறந்த ஒரு பாடல் நல்லவனுக்கு நல்லவன் படத்தில் வரும் " உன்னைத்தானே தஞ்ஜம் என்று நம்பி வந்தேன் மானே". பாட்டின் ஒவ்வொரு வரிகளும் என் நெஞ்ஜில் ஆழமாக பதிந்தவை. என்னை மிகவும் கவர்ந்த சிவரஞ்ஜினி அவள்தான்.//
ஆகா...
நான் கீபோர்ட் பழகத் துவங்கிய ஆரம்ப நாட்களில் இந்தப் பாடல் மிகச் சரளமாக வாசிக்க வரும்.
அப்போது இன்ன ராகம் எனத் தெரியாது ரசித்து வாசிப்பேன்.
கொஞ்சம் கொஞ்சமாக இசை ஞானம் கைகூடிய பிறகு ராகம் அறிந்து...
அப்பா...
எத்தனை சந்தோஷப் பட்டேன் தெரியுமா?
நினைவு படுத்தியமைக்கு நன்றி சகோதரரே.
manipayal said...
//இதோ இன்னுமொரு சிவரஞ்ஜனி - மீனவ நண்பன் படத்தில் வரும் பாடல் - "தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து". என் சில இசை நண்பர்கள் இதை மிஸ்ர சிவரஞ்ஜனி என்பார்கள்.//
ஆம். இந்த ராகத்தில் சில இடங்களில் வேறு ஸ்வரங்கள் வரும்.
நன்றி சகோதரரே.
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
//அந்தோணி முத்து சிவரஞ்சனியில் லயிக்க வைத்துவிட்டீர்..
அவள் ஒரு மேனகை பாடல் நான் சிறுவனாக இருக்கும்போது தினமும் மாலை 5 மணிவாக்கில் சிலோன் ரேடியோவில் ஒளிபரப்பாகும். ஒரு நாள்கூட நான் தவறவிட்டதில்லை. அவ்வளவு அருமையான ராகம்.. உடன் சேர்ந்து பாடுவதற்கு ஏற்றாற்போல் அமைக்கப்பட்டிருக்கிறது.. சிறு வயதிலிருந்து இப்போதுவரையிலும் அந்தப் பாடல் என்னுடைய பேவரைட்டாகவே இருந்து வருகிறது.. கூடவே அப்பாடல் எனது ஆசான் கண்ணதாசனின் பாடல் என்கிறபோது பாடலின் சிறப்பு பற்றிச் சொல்லவும் வேண்டுமா?
பின்னூட்டத்தில் பல அன்பர்கள் சொல்லியிருக்கும் சிவரஞ்சனி ராகத்தில் அமைந்த பாடல்கள் அனைத்துமே அருமையானவை. அதிலும் அந்த 'நல்லவனுக்கு நல்லவன்' படத்தின் பாடல்.. ம்.. அந்தப் படத்தின் வெற்றியில் அந்தப் பாடலுக்கும் பெரும் பங்குண்டு என்னும்போது ராகத்தின் சிறப்பைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?
மிக, மிக நல்ல பதிவு அந்தோணி.. வாழ்த்துகிறேன்..//
அட..!
நானும் இந்தப் பாடலை அதே சிலோன் ரேடியோவில், "அவளொரு மேனகை" யை, இளவயதில் அடிக்கடிக் கேட்டு ரசித்து ரசித்து, உடன் பாடியிருக்கிறேன்.
எங்கள் ஊரில் சிலோன் ரேடியோ சரியாக வராது.
இதற்கென நானே ரேடியோவைக் கழற்றி ஆன்டெனா காயிலை சற்றே நகர்த்தி... கொஞ்சம் சுமாராக வருமாறு செய்திருக்கிறேன்.
பின்னாளில் நான் ரேடியோ ரிப்பேரிங் செய்ய ஆரம்பித்தபோது, வரும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் கேட்காமலேயே, இந்த வசதியை செய்து கொடுத்திருக்கிறேன்.
வாழ்க வளமுடன்..
இசையை சிரமப்பட்டு புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்கற என்னைப்போல ஆளுங்களுக்கு எளிமையா சொல்லி இருக்கீங்க..
கலைமகள் கைப்பொருளே பாடல் சிவரஞ்சனி அல்ல. தயவு செய்து சரி பார்க்கவும். அது விஜயநாகரி என்ற ராகம் என்று நினைக்கிறேன். சரி யாக நினைவில்லை. அன்ப சுமந்து சுமந்து என்ற பாட்டு விஜயநாகரியில் அமைந்தது என்றும் நினைவு.
-ராம்
/ anonymous said...
கலைமகள் கைப்பொருளே பாடல் சிவரஞ்சனி அல்ல. தயவு செய்து சரி பார்க்கவும். அது விஜயநாகரி என்ற ராகம் என்று நினைக்கிறேன். சரி யாக நினைவில்லை. அன்ப சுமந்து சுமந்து என்ற பாட்டு விஜயநாகரியில் அமைந்தது என்றும் நினைவு.
-ராம்//
மிக்க நன்றி ராம். குறைகளைச் சுட்டியதற்கு மிக மிக நன்றி.
நான் இசையில் வல்லுனன் அல்ல.
ஏதோ கொஞ்சம் ராக ஞானம் உண்டு.
அவ்வளவே.
கீ போர்டில் ஒரு பாடலை வாசித்துப் பார்ப்பேன்.
அப்படி வாசிக்கையில், குறிப்பிட்ட ராகத்திற்குரிய ஸ்வரங்கள் மட்டுமே வந்தால், அது அந்த ராகம் என முடிவுக்கு வருவேன்.
இங்கே குறிப்பிட்டுள்ள பாடல்கள், பலமுறை ரேடியோவில், நல்ல சங்கீத ஞானமுள்ளவர்களால்,
அந்த ராகம் என உறுதி செய்யப்பட்டவை.
நமது இந்திய இசையின், குறிப்பாக கர்னாட இசையின் சிறப்பு இதுதான்.
அதாவது, இன்ன ராகத்திற்கு, இன்னின்ன ஸ்வரங்கள்தாமென நிர்ணயிக்கப் பட்டிருக்கும்.
இப்படிப்பட்ட விதி முறைகளுடனான ஒரு ராகத்தில், அதற்குச் சம்மந்தமில்லாத,
ஒரே ஒரு குறிப்பிட்ட ஸ்வரம் இடையில் நுழைக்கப்பட்டாலே,
அது , வேறு சுவையைத் தரக்கூடிய,வேறு ராகம் ஆகிவிடும்.
இப்படி உருவான ராகங்கள் எண்ணிலடங்கா.
பின்னூட்டிய அனைவருக்கும்,
மனம் நிறைந்த நன்றிகள்.
Post a Comment