Showing posts with label வயலின். Show all posts
Showing posts with label வயலின். Show all posts

Monday, May 28, 2007

கர்னாடக இசை, 100 வயலின், ஒரு வெஸ்டர்ன் பீட்!

மதுரையில் கைவண்டி இழுப்பவர்கள்/மிதிப்பவர்கள் (ரிக்ஷாகாரர்கள்) எல்லாரும் சேர்ந்து, ஒரு கர்னாடக இசைப் பாடகரிடம்,
எங்களுக்காக இதைப் பாடுங்களேன் என்று கேட்டார்கள்.
வியப்பாக உள்ளதா?
குத்திசைப் பாட்டுக்குத் துள்ளாட்டம் போடுவோர், இதற்கும் துள்ளாட்டம் போட்டபடிக் கேட்டு ரசித்தனர் என்றால் நம்ப முடிகிறதா?

அப்படி என்ன பாட்டு? யாரிடம் கேட்டார்கள்??
பாட்டு ஒரு வெஸ்டர்ன் பீட்.
கேட்டது மதுரை மணி ஐயர் என்ற புகழ் பெற்ற கலைஞரிடம்.
பொதுவாக இது Madurai Mani Note என்று பிரபலம் ஆகியது.
ஆனாலும் இந்த நோட் அவரே புனைந்தது கிடையாது!

முத்தையா பாகவதர் என்பவர் தாம் அதை உருவாக்கியது.
இருப்பினும் பிரபலப்படுத்தியதால் மதுரை மணி நோட் என்றே ஆகி விட்டது! இதோ நீங்களும் கேளுங்கள் - எதில் வேண்டுமானாலும்!

* SAXOPHONE
** CLARINET
*** VIOLIN
**** GUITAR

* மதுரை மணி அவர்களே பாடுவது
** நித்ய ஸ்ரீ பாடுவது

இதே பாடலை, தில்லானா மோகனாம்பாள் படத்தில், சிவாஜி வாசிப்பார்.
ஆங்கிலேயர் ஆடும் நடனப் பார்ட்டியில் கலந்து கொள்ளாது, மக்களுக்காக வெளியில் நின்று நாதசுரம் வாசிப்பார்.
அதில் மயங்கும் வெளிநாட்டுக்காரர்கள், அவர்கள் இசையை நாதசுரத்தில் வாசிக்க முடியுமா என்று கேட்க,
அப்போது இந்த மதுரை மணி நேட்டைத் தான் சிவாஜி வாசிப்பார்.


இப்படிப் பல நாட்டு இசைக் குறிப்புகளையும் தன்னகத்தே கொண்டு திகழ்வது தான் நம் இசை!
என்ன... இது ஒரு நுண்கலை என்பதால், சற்று புரிந்து கொள்ள முற்பட வேண்டும்!
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை - அது ஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு

என்ற குறளைப் போல், அன்பு இருந்தால் ஆர்வம் வந்து விடும்!

முன்பு போல், அதிகமாக இலக்கணம் எல்லாம் பேசாமல், ரசிகர்களைக் கருத்தில் கொண்டும் இப்போதெல்லாம், பல கர்னாடக/தமிழிசைக் கச்சேரிகள் நடக்கின்றன.
சினிமாவிலும் இதன் சாயல்கள் நிறைய வருகின்றன. ராஜா கையாளாத ராகங்களா?
வரும் பதிவுகளில், இது போல் நிறைய இசை ஆர்வம் / இசை உந்துதல் பதிவுகளை எல்லாம் பார்க்கலாம்.
ரசிக்கத் துவங்கி விட்டால், ருசிக்கத் துவங்கி விடலாம்! :-)


சரி, இதை எதற்கு இப்போது சொல்கிறாய் என்று கேட்கிறீர்களா?
விடயம் இருக்கிறது!
வயதான பின்பு கூட, திடீர் என்று இசையில் ஆசை முளைக்கிறது அல்லவா? எங்கு போய் கற்றுக் கொண்டால், கொஞ்சம் புரிகிற மாதிரி சொல்லித் தருவார்கள் என்று ஒரு கேள்வி எழும்!

சென்னையில் ஒருவர்... பலதரப்பட்ட வயதினரையும் வைத்துக் கொண்டு, சுமார் 150-200 பேர்.....சிறுவர், பொடியர், பெரியவர் எல்லாரும் தான்...வயலின் கச்சேரிகள் செய்கிறார்.
தனிக் கச்சேரி எதுவும் கிடையாது!
எல்லாமே குழுவோடு இணைந்து ஒரு Ensemble தான்!

அயல்நாட்டு வாத்தியம் வயலின்! இது எப்படி நம் இசைக்குள் வந்தது?
நண்பர் CVR இது பற்றி முன்னரே ஒரு பதிவு போட்டிருந்தார்...
பார்க்காதவங்க ஒரு எட்டு போய் பாத்துட்டு வாங்க!

ஒரு 100 வயலின்களை ஒரு சேர மீட்டினால் எப்படி இருக்கும்?
அதுவும் அதை வாசிப்பதில் பாதி பேர் பொடிசுகள்!
நீங்களே பாருங்க!
எல்லாரும் மேற் சொன்ன மதுரை மணியின் வெஸ்டர்ன் நோட்டைத் தான் வாசிக்கறாங்க!


சென்னையில், CARVA என்கிற ஒரு அமைப்பு.
CA Rajasekar Violin Academy என்பதே CARVA. அங்கு தான் இந்தப் பயிற்சி!
இதோ அவர்கள் வலைதளம்: http://www.carvatrust.org/

பயிலும் எந்த மாணவரையும் திறமையை வைத்துக் கூட பேதம் பார்ப்பதில்லை!
சீனியர், ஜூனியர் எல்லாரும் ஒன்றாகவே வாசிக்கிறார்கள் இந்த Ensemble-இல்.
மார்கழியில், கூட்டமாக இருக்கும் என்ற காரணத்தால்,
வைகாசி மாதத்தில் எல்லா மாணவர்களுடனும் திருவையாறு சென்று, அங்கே தியாகராஜர் நினைவிடத்தில் இசை அஞ்சலியும் செய்கிறார்கள்!

பீத்தோவன் தீம் இசை ஒன்றையும் வாசிக்கது பாருங்க அந்தக் குழு!


என்ன, இப்ப சொல்லுங்க, இசை இன்பம் தானே?

(Video Courtesy: KS Balachandran, CARVA)

Monday, April 30, 2007

குழலினிது யாழினிது என்பர்,வயலினிசை கேளாதவர்

தளபதி படத்தில் "ராக்கம்மா கையத்தட்டு" என்று ஒரு பாட்டு. பாடலோட ஆரம்பமே அசத்தலா இருக்கும். நம் மனதில் உள்ள சலிப்புத்தன்மையை கிழித்துவிட்டு உற்சாகத்தை ஊற்றி கொஞ்சம் கொஞ்சமாய் நம் முகத்தில் புன்னகையை வரவழைத்துவிடும். தீபாவளி சிறப்பு ஒலியும் ஒளியும் பார்க்க உட்கார்ந்த நான் அந்த பாடலை முதன் முதலில் கேட்டு விட்டு திக்குமுக்காடி விட்டேன். அப்படிப்பட்ட அட்டகாசமான ஒரு தொடக்கம் அந்த பாடலுக்கு அமைய ஏதுவாக இருந்த வயலின் இசை கருவி மேல் எனக்கு அன்று ஏற்பட்ட பிரமிப்பு இன்று வரை தீரவில்லை.


Thalapathy_Rakkamma_initial_violin_piece
Thalapathy_Rakkamm...
Hosted by eSnips




அதற்கு பின் பல பாடல்கள் ,பல விதமான இசை வகைகள்.ஆனால் எங்கு சென்றாலும் இந்த வயலினின் ராஜ்ஜியம் தொடர்ந்துகொண்டே இருந்தது . நம் உள்ளத்தில் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்க கூடியதுமாய், கர்நாடக சங்கீதம்,மேற்கத்திய இசை,சினிமா பாடல்கள் என எல்லா இசை துறையிலும் பெரிதும் உபயோகப்படுத்தப்படுவதாய் விளங்கும் வயலினை பற்றி தான் நாம் இன்று காண உள்ளோம்.

வரலாறு:

இந்த வயலின் எப்போது உருவாக்கப்பட்டது?? எங்கு கண்டுபிடிக்கப்பட்டது??.
வடக்கு இத்தாலியில், பதினாராம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த கருவி கண்டுப்பிடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இது ரெபெக் (Rebec) எனப்படும் ஒரு பழம்பெறும் இசைக்கருவியில் இருந்து மறுவியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.வயலினை பற்றிய குறிப்பும் அதை வாசிக்க தேவையான வழிமுறைகளும் "Epitome Musical” எனப்படும் ஒரு இசை கையேட்டில் 1556-லேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் வயலின் இசைக்கருவியின் பிரசித்தம் இத்தாலியில் இருந்து ஐரோப்பா கண்டம் முழுவதிலும் பரவி விட்டிருந்தது.ரோட்டில் வாசிக்கும் சாதாரண இசைக்கலைஞரில் இருந்து மன்னரின் சபையில் வாசிக்கும் வித்துவான்கள் வரை எல்லோரின் கையிலும் வயலின் இடம் பெற்றிருந்தது. வரலாற்று குறிப்புகளில் கூட பிரென்சு மன்னன் ஒன்பதாவது சார்லஸ் 1560-இல் 24 வயலின்கள் செயவதற்கு ஆணையிட்டதாக உள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டில் தான் வயலினின் வடிவமைப்பில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. வயலினின் கழுத்துப்பகுதி நீட்டமாகவும்,அதன் கோணத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இன்றளவிலும் இந்த கால நேரத்தில் செய்யப்பட்ட வயலின்கள்தான் கலைக்கூடங்களிலிலும் ,கலை பொருட்கள் சேகரிப்பாளர்களிடமும் பெரும் மதிப்பை பெற்றவையாக இருக்கின்றன.
நம் இந்தியாவில் இந்த இசைக்கருவி பாலுச்சாமி தீஷிதர் என்பவரால் தென்னிந்திய இசைத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது.


வயலினின் அமைப்பு:

படத்தை பார்த்தாலே தெரியும் என்று நினைக்கிறேன். வயலினின் முக்கியப்பகுதி மேபில் (maple) எனப்படும் மரத்தால் செய்யப்படுகிறது. அதற்கு மேல் கழுத்து போல் ஒர் அமைப்பு பொருத்தப்பட்டிருக்கும். அதன் முன்பகுதி கருங்காலி மரத்தால் (ebony) செய்யப்படுகிறது. அந்த மரத்தின் கடினமான அமைப்பும், சுலபமாக தேய்ந்து போகாத திறனுமே இந்த பகுதி செய்ய உபயோகப்படுத்தப்படுவதற்கு காரணம். இந்த பகுதியில்தான் கலைஞர்கள் தன் விரல்களை தந்தியின் மீது அழுத்தி வித விதமான ஓசைகளை எழுப்புவார்கள். இந்த கழுத்துபகுதியின் மற்றொரு விளிம்பில் தந்திகளின் அழுத்தத்தை கூட்ட குறைக்க குமிழ்கள் பொருத்தப்பட்டிருக்கும். வயலினின் எல்லா பகுதியும் ஒருவித கோந்து பொருளால் ஒட்டப்பட்டிருக்கும்.
வயலினின் மேல் பகுதியில் தந்திகளை நன்றாக இழுத்து பிடித்த படியான அமைப்பு இருக்கும் இதில் தந்திகளின் அழுத்தத்தை லேசாக சரி செய்து கொள்ளலாம்.
அதற்கு நடுவில் தந்திகளை தாங்கி பிடிக்க பாலம் என்ற ஒரு அமைப்பும் உண்டு.
மேல் பகுதியில் தாடையை தாங்கி கொள்வதற்கான ஒரு பகுதியை (chin rest) வேண்டிபவர்கள் பொருத்திக்கொள்ளலாம். சிலர் வாசிக்கும் போது வேர்வை படாமல் இருக்க வயலினின் மேல் பகுதியில் துண்டு ஒன்றை போட்டு அதற்கு மேல் தன் தாடையை வைத்துக்கொள்வார்கள்.
வயலினில் உபயோகிக்கப்படும் நான்கு வெவேறு தடிமனான தந்திகள் முன்னொரு காலத்தில் ஆட்டின் உடலில் இருந்து தயாரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது,இப்பொழுதெல்லாம் எஃகு கொண்டு உருவாக்கப்படுகிறது.தந்திகள் அவ்வப்போது அறுந்துவிடும் என்பதால் கலைஞர்கள் தங்களுடன் எப்போழுதும் உபரியாக சில தந்திகளை எடுத்து செல்வார்கள்.

வயலினின் இன்னொரு முக்கியமான பகுதி "போ"(bow) எனப்படும் வில். இதை கொண்டு தந்திகளை தேய்த்த வாரே விரல்களால் அழுத்தத்தை கூட்டி குறைத்து இசை உருவாக்கப்படுகிறது.
சராசரியாக ஒரு வில் 29 இன்ச்கள் அல்லது (74.5 cms) வரை நீலம் இருக்கும். இந்த குச்சியின் ஊடே ஒருவிதமான பட்டை காணப்படும். இது வெள்ளை அல்லது சாம்பல் நிற ஆண் குதிரையின் வாலில் உள்ள முடியினால் செய்யப்படுகிறது. வில்லின் ஒரு முனையில் இந்த முடிக்கற்றை ஒட்டப்பட்டிருக்கும்,மறு முனையில் அதன் இறுக்கத்தை மாற்றிக்கொள்ள குமிழ்கள் உண்டு.

வயலின் வாசிக்கும் முறை:

மேற்கத்திய நாடுகளில் இந்த வயலினை நின்றபடி தான் வாசிப்பார்கள் ஆனால் நம் கர்நாடக இசை முறைப்படி தரையில் உட்கார்ந்துகொண்டு வாசிப்பார்கள். இடது தொடையில் வயலினின் கீழ்பகுதியை இருத்திக்கொண்டு,மேல் பகுதியை இடது தோள் மேல் சார்த்திக்கொண்டு,அதை தன் தாடையால் தக்க வைத்துக்கொள்வார்கள். பின் இடது கையின் விரல்களால் கழுத்துபகுதியில் வெவ்வேறு இடத்தில் த்ந்திகளுக்கு அழுத்தம் கொடுத்தவாரு வில்லினை பாலத்தின் மேற்புரம் தேய்ப்பார்கள். வில்லில் கொடுக்கும் அழுத்தம்,தேய்க்கும் வேகம், இடது விரல்கள் மீட்டும் இடங்கள் என பல விஷயங்களாலும் இசை மாறலாம். இவை எல்லாவற்றையும் சரியாக செய்தால்தான் நல்லிசை வரும். இல்லையேல் அபஸ்வரம் தான்!! :-)


கர்நாடக சங்கீதம் ,மேற்கத்திய இசை இரண்டிலும் இந்த வயலின் வெகு பரவலாக உபயோகப்படுத்த படுகிறது. கர்நாடக இசையில் பொதுவாக பக்க வாத்தியமாகவே உபயோகப்பட்டிருந்தாலும் குன்னக்குடி_வைத்தியநாதன்,டி.என்.கிருஷ்ணன்,லால்குடி_ஜயராமன்,டாக்டர்.எல்.சுப்ரமணியம் என பல கலைஞர்களால் இது தனி ஆவர்த்தனமாகவும் செய்யப்பட்டு வருகிறது. தமிழ் திரை இசையை பொருத்த வரை நம் இசைஞானி இளையராஜா இந்த கருவியை மிகவும் உபயோகப்படுத்துவார். அவரின் பல பாடல்களில் வயலின் மிக நேர்த்தியாக உபயோகப்படுத்தி இருப்பார். அதிலும் இந்த கருவியை கொண்டு சந்தோஷம்,சோகம்,ஹாஸ்யம்,கோபம் என பல உணர்வுகளையும் வெளிக்கொணற முடியும் என்பதால் இது பிண்ணனி இசையில் மிகவும் பரவலாக உபயோகப்படுத்தப்படும் கருவி.

மேற்கத்திய இசையை பொருத்த வரை பாப்,ராக் போன்ற இசை அமைப்புகளில் வயலினை அவ்வளவாக கேட்க முடியாது, ஆனால் பாரம்பரியம் மிக்க இசைகளிலும்(western classical) மற்றும் கிராமபுற இசையிலும் (western folk) இதை கேட்கலாம். மேற்கத்திய இசையில் வயலின் என்று சொல்லும் போது “Corrs” எனப்படும் இசைக்குழுவின் "Runaway” எனும் பாடல்தான் நியாபகம் வருகிறது. மிக அழகான பாடல்,நேரம் கிடைக்கும் போது கேட்டு பாருங்கள். ஆனால் பாடலை கேட்டு விட்டு "காதல் கொண்டேன்" படத்தில் வரும் "நெஞ்சோடு கலந்திடு"பாடல் போன்று உள்ளதே என்று உங்களுக்கு தோன்றினால் அதற்கு நான் பொறுப்பு அல்ல!! :-)


வயலின் இசை குடும்பத்தின் முக்கியமான இரு வேறு இசை கருவிகள் உண்டு. ஒன்று வயோலா (Viola) , இன்னொன்று செல்லோ (Cello)
வயோலா எனப்படும் கருவி வயலினை விட சற்றே பெரியதாக இருக்கும். வயலினில் நான்கு தந்திகள் இருக்கும் ஆனால் இதில் மூன்று தந்திகள் மட்டுமே.இந்த கருவியையயும் வயலினை பயன் படுத்துவதை போன்றே பயன் படுத்துவார்கள்.இந்த கருவியை இப்பொழுதெல்லாம் யாரும் அவ்வளவாக உபயோகப்படுத்தப்படுவதில்லை.

வயலினை விட சற்றே பாஸ் (bass) தூக்கலான ஒலி இந்த கருவியில் இருந்து வெளி வரும்.


செல்லோ எனப்படுவது வயலின் மற்றும் வயோலாவை விட பெரியது. இதை வயலினை போன்று பயன் படுத்தாமல் திருப்பி போட்டு வாசிப்பார்கள். இந்த கருவி சற்றே பெரியது என்பதால் இதை ஒரு சிறு நாற்காலியில் அமர்ந்து கொண்டு தான் வாசிக்க முடியும். இது குறிப்பாக ஒரு பாஸ்(bass) இசை கருவி என்றே சொல்லலாம். அதாவது பாஸ் எனப்படும் ஒலி அமைப்பை ஏற்படுத்த இந்த கருவி உபயோகப்படும்.
"திருடா திருடா" திரைப்படத்தில் "ராசாத்தி என் உசுரு என்னதில்ல" என்று ஒரு பாட்டு வரும்.அந்த பாட்டு முழுக்க ஒரு இசை கருவியை கூட உபயோகப்படுத்தவில்லை என்பது போல்தான் இருக்கும்!! ஆனால் அந்த பாடலில் அவ்வப்போது வரும் பாஸ் ஒலியை கொண்டு வர இந்த செல்லோ உபயோகப்படுத்தியிருப்பார்களோ என்று எனக்கு என்றுமே ஒரு பலத்த சந்தேகம் உண்டு. விஷயம் தெரிந்தவர்கள் விளக்கினால் நல்லது.

வயலினை பற்றி விஷயம் தெரிந்திருந்தால் இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம் ஆனால் நமக்கு இசையை ரசிக்க மட்டுமே தெரியும் அதனால் இந்த பதிவை இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.
பின்னர் வேறு ஒரு சமயம் ,வேறு ஒரு இசைகருவியோடு உங்களை சந்திக்கிறேன். போறதுக்கு முன்னாடி குன்னக்குடி வைத்தியனாதன் வளையப்பட்டி சுப்ரமணியம் அவர்கள் தவிலோட சேர்ந்து பட்டையை கிளப்பி இருக்கற ஒரு பாட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.
அதை சொடுக்கிட்டு வயலின் இசை இன்ப வெள்ளத்தில் நனைஞ்சிட்டு போங்க!!

வரட்டா?? :-)


Kunnakudi_Valayapa...

நன்றி:Violin. (2007, April 30). In Wikipedia, The Free Encyclopedia. Retrieved 02:36, May 1, 2007, from http://en.wikipedia.org/w/index.php?title=Violin&oldid=126985449

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP