Monday, May 28, 2007

கர்னாடக இசை, 100 வயலின், ஒரு வெஸ்டர்ன் பீட்!

மதுரையில் கைவண்டி இழுப்பவர்கள்/மிதிப்பவர்கள் (ரிக்ஷாகாரர்கள்) எல்லாரும் சேர்ந்து, ஒரு கர்னாடக இசைப் பாடகரிடம்,
எங்களுக்காக இதைப் பாடுங்களேன் என்று கேட்டார்கள்.
வியப்பாக உள்ளதா?
குத்திசைப் பாட்டுக்குத் துள்ளாட்டம் போடுவோர், இதற்கும் துள்ளாட்டம் போட்டபடிக் கேட்டு ரசித்தனர் என்றால் நம்ப முடிகிறதா?

அப்படி என்ன பாட்டு? யாரிடம் கேட்டார்கள்??
பாட்டு ஒரு வெஸ்டர்ன் பீட்.
கேட்டது மதுரை மணி ஐயர் என்ற புகழ் பெற்ற கலைஞரிடம்.
பொதுவாக இது Madurai Mani Note என்று பிரபலம் ஆகியது.
ஆனாலும் இந்த நோட் அவரே புனைந்தது கிடையாது!

முத்தையா பாகவதர் என்பவர் தாம் அதை உருவாக்கியது.
இருப்பினும் பிரபலப்படுத்தியதால் மதுரை மணி நோட் என்றே ஆகி விட்டது! இதோ நீங்களும் கேளுங்கள் - எதில் வேண்டுமானாலும்!

* SAXOPHONE
** CLARINET
*** VIOLIN
**** GUITAR

* மதுரை மணி அவர்களே பாடுவது
** நித்ய ஸ்ரீ பாடுவது

இதே பாடலை, தில்லானா மோகனாம்பாள் படத்தில், சிவாஜி வாசிப்பார்.
ஆங்கிலேயர் ஆடும் நடனப் பார்ட்டியில் கலந்து கொள்ளாது, மக்களுக்காக வெளியில் நின்று நாதசுரம் வாசிப்பார்.
அதில் மயங்கும் வெளிநாட்டுக்காரர்கள், அவர்கள் இசையை நாதசுரத்தில் வாசிக்க முடியுமா என்று கேட்க,
அப்போது இந்த மதுரை மணி நேட்டைத் தான் சிவாஜி வாசிப்பார்.


இப்படிப் பல நாட்டு இசைக் குறிப்புகளையும் தன்னகத்தே கொண்டு திகழ்வது தான் நம் இசை!
என்ன... இது ஒரு நுண்கலை என்பதால், சற்று புரிந்து கொள்ள முற்பட வேண்டும்!
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை - அது ஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு

என்ற குறளைப் போல், அன்பு இருந்தால் ஆர்வம் வந்து விடும்!

முன்பு போல், அதிகமாக இலக்கணம் எல்லாம் பேசாமல், ரசிகர்களைக் கருத்தில் கொண்டும் இப்போதெல்லாம், பல கர்னாடக/தமிழிசைக் கச்சேரிகள் நடக்கின்றன.
சினிமாவிலும் இதன் சாயல்கள் நிறைய வருகின்றன. ராஜா கையாளாத ராகங்களா?
வரும் பதிவுகளில், இது போல் நிறைய இசை ஆர்வம் / இசை உந்துதல் பதிவுகளை எல்லாம் பார்க்கலாம்.
ரசிக்கத் துவங்கி விட்டால், ருசிக்கத் துவங்கி விடலாம்! :-)


சரி, இதை எதற்கு இப்போது சொல்கிறாய் என்று கேட்கிறீர்களா?
விடயம் இருக்கிறது!
வயதான பின்பு கூட, திடீர் என்று இசையில் ஆசை முளைக்கிறது அல்லவா? எங்கு போய் கற்றுக் கொண்டால், கொஞ்சம் புரிகிற மாதிரி சொல்லித் தருவார்கள் என்று ஒரு கேள்வி எழும்!

சென்னையில் ஒருவர்... பலதரப்பட்ட வயதினரையும் வைத்துக் கொண்டு, சுமார் 150-200 பேர்.....சிறுவர், பொடியர், பெரியவர் எல்லாரும் தான்...வயலின் கச்சேரிகள் செய்கிறார்.
தனிக் கச்சேரி எதுவும் கிடையாது!
எல்லாமே குழுவோடு இணைந்து ஒரு Ensemble தான்!

அயல்நாட்டு வாத்தியம் வயலின்! இது எப்படி நம் இசைக்குள் வந்தது?
நண்பர் CVR இது பற்றி முன்னரே ஒரு பதிவு போட்டிருந்தார்...
பார்க்காதவங்க ஒரு எட்டு போய் பாத்துட்டு வாங்க!

ஒரு 100 வயலின்களை ஒரு சேர மீட்டினால் எப்படி இருக்கும்?
அதுவும் அதை வாசிப்பதில் பாதி பேர் பொடிசுகள்!
நீங்களே பாருங்க!
எல்லாரும் மேற் சொன்ன மதுரை மணியின் வெஸ்டர்ன் நோட்டைத் தான் வாசிக்கறாங்க!


சென்னையில், CARVA என்கிற ஒரு அமைப்பு.
CA Rajasekar Violin Academy என்பதே CARVA. அங்கு தான் இந்தப் பயிற்சி!
இதோ அவர்கள் வலைதளம்: http://www.carvatrust.org/

பயிலும் எந்த மாணவரையும் திறமையை வைத்துக் கூட பேதம் பார்ப்பதில்லை!
சீனியர், ஜூனியர் எல்லாரும் ஒன்றாகவே வாசிக்கிறார்கள் இந்த Ensemble-இல்.
மார்கழியில், கூட்டமாக இருக்கும் என்ற காரணத்தால்,
வைகாசி மாதத்தில் எல்லா மாணவர்களுடனும் திருவையாறு சென்று, அங்கே தியாகராஜர் நினைவிடத்தில் இசை அஞ்சலியும் செய்கிறார்கள்!

பீத்தோவன் தீம் இசை ஒன்றையும் வாசிக்கது பாருங்க அந்தக் குழு!


என்ன, இப்ப சொல்லுங்க, இசை இன்பம் தானே?

(Video Courtesy: KS Balachandran, CARVA)

25 comments:

இலவசக்கொத்தனார் said...

இசை இன்பம்தான்.

மணி ஐயர் நோட் என் மகனின் பேவரேட்டும் கூட.

மலைநாடான் said...

ரவி!

தேடலுக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்.

எங்கள் ஊரில் கோவில் திருவிழாக்காலங்களில், சுவாமி வெளிவீதி உலாவரும்போது பாடல்களை நாதஸ்வரத்தில் வாசிக்கச் சொல்லிக் கேட்டு மகிழ்வார்கள். ஒரு வயதான விவசாயி. எந்தவொரு இசைப் பரிட்சயமும் இல்லாதவர். இந்த நோட்டை வாசிக்கச் சொல்லிக்கேட்டு, தாளம்போட்டு ரசிப்பார். அவரைப் பொறுத்த வரைக்கும், இந்த நோட்டையும், புன்னாகவராளி ராகத்தில் வரும் மகுடிப்பாடலையும், அவருக்குப் பிடித்தமாக வாசிக்காத எவரும் பெரிய வித்தகர் இல்லை. :)) அவ்வளவு தூரத்திற்கு அவை ஒரு பாமரனின் மனதிலும் பதிந்து போய்விட்ட இசை.

ஏன்? துன்பத்திலும் இசை இன்பம்தான்

வல்லிசிம்ஹன் said...

எப்போதோ கேட்டதை இப்போது மீண்டும் கேட்கக் கொடுத்தற்கு மிக நன்றி ரவி.
காதுகளுக்குக் குளிர்ச்சி.
இனிமை.
மலைநாடன் சொல்வது போல் இன்பத்தில் கேட்கும் இசையை விட துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்க்க வைத்துவிட்டீர்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவி சங்கர்!
எங்கள் ஈழத்தில் கோவில் திருவிழாவில் குறிப்பாக வேட்டைத் திருவிழாவில் சுவாமி வேட்டையாடும் போது; நாதஸ்வரக் கலைஞர்கள் வாசிப்பார்கள். சிலசமயம் வீதியுலாவிலும் நேயர் விருப்பமாக அமைவதுண்டு. வாய்பாட்டில் கேட்டதேயில்லை; தில்லானா மோகனாம்பாளின் பின் தான் இது மேற்கத்தைய இசைத் தழுவல் என்பதே தெரியும்.
ஆனாலும் இதை வாசித்து அப்படியே தொடர்ந்து மகுடி (மலைநாடர் குறிப்பிடும்-புன்னாகவராளி) வாசிப்பார்கள்.அற்புதமான காலங்கள்.
சிறுவர்கள் பிசிறின்றி ஒருங்கிசைத்துள்ளார்கள். பாராட்டுவோம்.
நல்ல தேடலும் பகிர்வும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
இசை இன்பம்தான்.//

வாங்க மீன்....ஐ மீன் தமிழ்மண விண்மீன்!

//மணி ஐயர் நோட் என் மகனின் பேவரேட்டும் கூட//

ஓகோ! இளைய கொத்தனாரும் இசை வித்தகரா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மலைநாடான் said...
அவரைப் பொறுத்த வரைக்கும், இந்த நோட்டையும், புன்னாகவராளி ராகத்தில் வரும் மகுடிப்பாடலையும், அவருக்குப் பிடித்தமாக வாசிக்காத எவரும் பெரிய வித்தகர் இல்லை. :))//

உண்மை தான் மலைநாடான் ஐயா!
இது போன்ற ரசிகர்களையும் கவர்ந்து, அரவணைத்துச் செல்வது தான் நம் இசை.

திருவையாற்றுப் பக்கம் கிராமங்களில், பாமரர் கூட சீதம்மா, மாயம்மாவும், எந்தரோ மகானுபாவலுவும் மிகவும் ரசித்து வாய் விட்டுப் பாட கேட்டிருக்கேன்.
ஒரே பிரமிப்பா இருக்கும்...

//ஏன்? துன்பத்திலும் இசை இன்பம்தான்//

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ, இன்பம் சேர்க்க மாட்டாயா :-)

jeevagv said...

நன்றாக இருந்தது ரவி, குழந்தைகளின் வாசிப்பு அருமை.

நான் வயலின் பயின்றபோது, முதல் முறையாக ஆராதனையில் இந்த நிகழ்ச்சி போலவே குழுவில் மதுரை மணி ஐயர் நோட்ஸை வாசித்தோம்!

//ஒரு 100 வயலின்களை ஒரு சேர மீட்டினால் எப்படி இருக்கும்?//
வயலின் மீட்டுதல் என்று சொல்வதற்கு பதிலாக, வாசித்தல் என்று சொல்வதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன்!
(வீணைக்கோ மீட்டுதல் சரி)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
எப்போதோ கேட்டதை இப்போது மீண்டும் கேட்கக் கொடுத்தற்கு மிக நன்றி ரவி.
காதுகளுக்குக் குளிர்ச்சி.இனிமை.
//

வல்லியம்மா, உங்களுக்கு இன்பமாக இருந்ததே இன்பம் தான்!
இதைப் பல முறை கேட்கலாம்...அலுப்பே தட்டாது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
குறிப்பாக வேட்டைத் திருவிழாவில் சுவாமி வேட்டையாடும் போது; நாதஸ்வரக் கலைஞர்கள் வாசிப்பார்கள்//

ஆகா...வேடுபறி உற்சவத்தின் போதா யோகன் அண்ணா?
இந்த மெட்டில் சுவாமி வேட்டைக்குப் போவது கம்பீரமாக இருக்குமே!

மல்லாரி வாசிக்கக் கேட்டிருக்கிறேன்.
நோட்ஸ் வாசிப்பார்கள் என்பது புதிய செய்தி தான்!

மல்லாரி பற்றி விரைவில் ஒரு பதிவிடுகிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சிறுவர்கள் பிசிறின்றி ஒருங்கிசைத்துள்ளார்கள். பாராட்டுவோம்.
நல்ல தேடலும் பகிர்வும்.//

நன்றி யோகன் அண்ணா.
சிறுவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
ஆராதனையில் பெரிய வித்வான்கள் பாடும் போதே பிசிறு தட்டி விடுகிறது!
இங்கே சிறுவர் சிறுமியர் இடையே நல்ல ஒருங்கிணைப்பு!

Geetha Sambasivam said...

ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரால் எழுதப்பட்டது அந்த "நோட்"னு கேள்விப்பட்டிருக்கேன். நீங்க சொல்ற இசைக்கச்சேரி "பொதிகை"யில் பலமுறை போடப் பட்டுள்ளது. அருமையா இருக்கும். வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததுக்கு நன்றிகள்.

G.Ragavan said...

இசை இன்பந்தான். என்ன ஐயம். இசையில் ஏது உயர்வு தாழ்வு. இசையால் வசமாகா இதயம் எது? நாதமயமான இறைவன் என்று புகழும் பொழுது....இசைதான் உலக இயக்கம்.

இலவசக்கொத்தனார் said...

//ஓகோ! இளைய கொத்தனாரும் இசை வித்தகரா?//

எவ்வளவு பைசா குடுத்து சிடி எல்லாம் வாங்கறோம் நீங்க என்ன அவரை 'வித்த'கரான்னு கேட்கறீங்க. :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கீதா சாம்பசிவம் said...
நீங்க சொல்ற இசைக்கச்சேரி "பொதிகை"யில் பலமுறை போடப் பட்டுள்ளது. அருமையா இருக்கும்.//

கீதாம்மா...இப்பல்லாம் சன் டிவி மற்ற தனியார் சேனல்களை விட பொதிகையே சூப்பரா இருக்குன்னு சொல்லறாங்களே! மெய்யாலுமா?

//வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததுக்கு நன்றிகள்.//

அதுக்குத் தானே இசை இன்பம் என்கிற இந்த வலைப்பூ!
நன்றி கீதாம்மா!

Geetha Sambasivam said...

என்னோட வாக்கு எப்போவுமே "பொதிகை"த் தொலைக்காட்சிக்குத் தான். அருமையான நிகழ்ச்சிகள். ஆனால் விளம்பரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//G.Ragavan said...
இசை இன்பந்தான். என்ன ஐயம். இசையில் ஏது உயர்வு தாழ்வு. இசையால் வசமாகா இதயம் எது?//

:-)
ஜிரா...
கர்னாடக இசைப் பாடல்களை ரசிக்க (அது தமிழில் இருந்தாலும் கூட)
சில பேருக்கு சற்றுக் கடினம்!
நுண்கலை ஆதலால், சற்று லைட்டாக்கிக் கொடுத்தால் நிச்சயம் ரசிப்பார்கள்!

அதான் அது தொடர்பாகப் பதிவை இட்டு, அவர்களிடமே இன்பமா, இதே போல் தொடரலாமா என்று கேட்டேன்! :-))

Unknown said...

Good post .Keep it up .

Anonymous said...

மிக மிக அருமை.
தொடருங்கள்.
மிக்க நன்றி.

CVR said...

இந்த பதிவை இதுவரை முழுமையாக படிக்காததற்கு என்னை எதனால் அடித்துக்கொள்வதென்று தெரியவில்லை!!
முன்பு ஒரு முறை பதிவை மேலோட்டமாக ஒரு முறை பார்த்துவிட்டு விட்டுவிட்டேன்.
இன்று தான் எல்லா சுட்டியையும் சொடுக்கி,குறும்படங்கள் எல்லவற்றையும் பார்த்து இசை இன்பத்தில் முழுமையாக நனைந்தேன்!!
மிக அற்புதமான பதிவு தலைவரே!! வாழ்த்துக்கள்!! :-)

CVR said...

வாண்டுகளின் திறமை மலைக்க வைக்கிறது தலைவரே!!
தமிழ்நாட்டு இசையின் வருங்காலத்தை பற்றி இனிமே நான் கவலை பட மாட்டேன்!! :-)

SurveySan said...

இசை சூப்பர்.
ஆனா, பசங்க பாவம்.
எந்தக் குழந்தையும் அனுபவிச்சு வாசிக்கரம்மாதிரி தெரியல.
அப்பா அம்மா கிட்ட காசிருக்கு, அந்த்த க்ளாஸ், இந்த க்ளாஸ்னு எல்லா க்ளாஸும் சேத்துவிடராங்க.

ஏதோ ஒரு ப்ரெஷரோட வாசிக்கரமாதீரி தெரியுது :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Madhusoodhanan said...
Good post .Keep it up//

நன்றி மதுசூதனன்.

//Anonymous said...
மிக மிக அருமை.
தொடருங்கள்//

நன்றி அனானி. நேயர் விருப்பம் இருந்தால், கேளுங்கள். தர முயல்கிறோம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//CVR said...
இந்த பதிவை இதுவரை முழுமையாக படிக்காததற்கு என்னை எதனால் அடித்துக் கொள்வதென்று தெரியவில்லை!!//

CVR...கவலையே படாதீங்க.
துர்கா...it's all your choice now. இது போல ஒரு சான்ஸ் மீண்டும் வராது!
யாருப்பா அது எங்க CVR மேலேயே கை வைக்கறது? :-)

//இன்று தான் எல்லா சுட்டியையும் சொடுக்கி//

எது மிகவும் பிடித்திருந்தது CVR? Guitar??

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//CVR said...
வாண்டுகளின் திறமை மலைக்க வைக்கிறது தலைவரே!!
தமிழ்நாட்டு இசையின் வருங்காலத்தை பற்றி இனிமே நான் கவலை பட மாட்டேன்!! :-)//

நீங்களே கவலைப்பட மாட்டேன்னு சொல்லலாமா?
பசங்கள அப்படியே விட்டா, அப்புறம் பச்சக் கலரு ஜிங்கு ஜாங்னு இறங்கிடுவாங்க...நீங்க தான் தொடர்ந்து பதிவு போட்டு, அவுங்களை எல்லாம் வ்ழி நடத்தணும், தல! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//SurveySan said...
இசை சூப்பர்.
ஆனா, பசங்க பாவம்.
எந்தக் குழந்தையும் அனுபவிச்சு வாசிக்கர மாதிரி தெரியல.
அப்பா அம்மா கிட்ட காசிருக்கு, அந்த்த க்ளாஸ், இந்த க்ளாஸ்னு எல்லா க்ளாஸும் சேத்துவிடராங்க//

வாங்க சர்வேசன்.
நீங்க சொல்றது ஒரு விதத்துல உண்மை தான். அம்மா அப்பாவின் ஆசைகளைப் பசங்க மேல் ஏத்துறாங்க...

ஆனா இங்கு...குழந்தைகள் அனுபவிச்சு வாசிக்கர மாதிரி தெரியாததுக்குக் காரணம் அதுவல்ல...மேடைப் பயம் தான்!
ஒரு அபஸ்வரம்/குழப்பம் கூட வராம வாசிக்குதுங்க பாருங்க!
எனக்கென்னவோ அப்படித் தான் தோன்றுகிறது!

இதே பசங்க, திருவையாற்றில் வாசிக்கவும் கேட்டுள்ளேன்...அப்போ ஒரே லூட்டி தான் :-)

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP