Monday, April 30, 2007

குழலினிது யாழினிது என்பர்,வயலினிசை கேளாதவர்

தளபதி படத்தில் "ராக்கம்மா கையத்தட்டு" என்று ஒரு பாட்டு. பாடலோட ஆரம்பமே அசத்தலா இருக்கும். நம் மனதில் உள்ள சலிப்புத்தன்மையை கிழித்துவிட்டு உற்சாகத்தை ஊற்றி கொஞ்சம் கொஞ்சமாய் நம் முகத்தில் புன்னகையை வரவழைத்துவிடும். தீபாவளி சிறப்பு ஒலியும் ஒளியும் பார்க்க உட்கார்ந்த நான் அந்த பாடலை முதன் முதலில் கேட்டு விட்டு திக்குமுக்காடி விட்டேன். அப்படிப்பட்ட அட்டகாசமான ஒரு தொடக்கம் அந்த பாடலுக்கு அமைய ஏதுவாக இருந்த வயலின் இசை கருவி மேல் எனக்கு அன்று ஏற்பட்ட பிரமிப்பு இன்று வரை தீரவில்லை.


Thalapathy_Rakkamma_initial_violin_piece
Thalapathy_Rakkamm...
Hosted by eSnips
அதற்கு பின் பல பாடல்கள் ,பல விதமான இசை வகைகள்.ஆனால் எங்கு சென்றாலும் இந்த வயலினின் ராஜ்ஜியம் தொடர்ந்துகொண்டே இருந்தது . நம் உள்ளத்தில் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்க கூடியதுமாய், கர்நாடக சங்கீதம்,மேற்கத்திய இசை,சினிமா பாடல்கள் என எல்லா இசை துறையிலும் பெரிதும் உபயோகப்படுத்தப்படுவதாய் விளங்கும் வயலினை பற்றி தான் நாம் இன்று காண உள்ளோம்.

வரலாறு:

இந்த வயலின் எப்போது உருவாக்கப்பட்டது?? எங்கு கண்டுபிடிக்கப்பட்டது??.
வடக்கு இத்தாலியில், பதினாராம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த கருவி கண்டுப்பிடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இது ரெபெக் (Rebec) எனப்படும் ஒரு பழம்பெறும் இசைக்கருவியில் இருந்து மறுவியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.வயலினை பற்றிய குறிப்பும் அதை வாசிக்க தேவையான வழிமுறைகளும் "Epitome Musical” எனப்படும் ஒரு இசை கையேட்டில் 1556-லேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் வயலின் இசைக்கருவியின் பிரசித்தம் இத்தாலியில் இருந்து ஐரோப்பா கண்டம் முழுவதிலும் பரவி விட்டிருந்தது.ரோட்டில் வாசிக்கும் சாதாரண இசைக்கலைஞரில் இருந்து மன்னரின் சபையில் வாசிக்கும் வித்துவான்கள் வரை எல்லோரின் கையிலும் வயலின் இடம் பெற்றிருந்தது. வரலாற்று குறிப்புகளில் கூட பிரென்சு மன்னன் ஒன்பதாவது சார்லஸ் 1560-இல் 24 வயலின்கள் செயவதற்கு ஆணையிட்டதாக உள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டில் தான் வயலினின் வடிவமைப்பில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. வயலினின் கழுத்துப்பகுதி நீட்டமாகவும்,அதன் கோணத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இன்றளவிலும் இந்த கால நேரத்தில் செய்யப்பட்ட வயலின்கள்தான் கலைக்கூடங்களிலிலும் ,கலை பொருட்கள் சேகரிப்பாளர்களிடமும் பெரும் மதிப்பை பெற்றவையாக இருக்கின்றன.
நம் இந்தியாவில் இந்த இசைக்கருவி பாலுச்சாமி தீஷிதர் என்பவரால் தென்னிந்திய இசைத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது.


வயலினின் அமைப்பு:

படத்தை பார்த்தாலே தெரியும் என்று நினைக்கிறேன். வயலினின் முக்கியப்பகுதி மேபில் (maple) எனப்படும் மரத்தால் செய்யப்படுகிறது. அதற்கு மேல் கழுத்து போல் ஒர் அமைப்பு பொருத்தப்பட்டிருக்கும். அதன் முன்பகுதி கருங்காலி மரத்தால் (ebony) செய்யப்படுகிறது. அந்த மரத்தின் கடினமான அமைப்பும், சுலபமாக தேய்ந்து போகாத திறனுமே இந்த பகுதி செய்ய உபயோகப்படுத்தப்படுவதற்கு காரணம். இந்த பகுதியில்தான் கலைஞர்கள் தன் விரல்களை தந்தியின் மீது அழுத்தி வித விதமான ஓசைகளை எழுப்புவார்கள். இந்த கழுத்துபகுதியின் மற்றொரு விளிம்பில் தந்திகளின் அழுத்தத்தை கூட்ட குறைக்க குமிழ்கள் பொருத்தப்பட்டிருக்கும். வயலினின் எல்லா பகுதியும் ஒருவித கோந்து பொருளால் ஒட்டப்பட்டிருக்கும்.
வயலினின் மேல் பகுதியில் தந்திகளை நன்றாக இழுத்து பிடித்த படியான அமைப்பு இருக்கும் இதில் தந்திகளின் அழுத்தத்தை லேசாக சரி செய்து கொள்ளலாம்.
அதற்கு நடுவில் தந்திகளை தாங்கி பிடிக்க பாலம் என்ற ஒரு அமைப்பும் உண்டு.
மேல் பகுதியில் தாடையை தாங்கி கொள்வதற்கான ஒரு பகுதியை (chin rest) வேண்டிபவர்கள் பொருத்திக்கொள்ளலாம். சிலர் வாசிக்கும் போது வேர்வை படாமல் இருக்க வயலினின் மேல் பகுதியில் துண்டு ஒன்றை போட்டு அதற்கு மேல் தன் தாடையை வைத்துக்கொள்வார்கள்.
வயலினில் உபயோகிக்கப்படும் நான்கு வெவேறு தடிமனான தந்திகள் முன்னொரு காலத்தில் ஆட்டின் உடலில் இருந்து தயாரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது,இப்பொழுதெல்லாம் எஃகு கொண்டு உருவாக்கப்படுகிறது.தந்திகள் அவ்வப்போது அறுந்துவிடும் என்பதால் கலைஞர்கள் தங்களுடன் எப்போழுதும் உபரியாக சில தந்திகளை எடுத்து செல்வார்கள்.

வயலினின் இன்னொரு முக்கியமான பகுதி "போ"(bow) எனப்படும் வில். இதை கொண்டு தந்திகளை தேய்த்த வாரே விரல்களால் அழுத்தத்தை கூட்டி குறைத்து இசை உருவாக்கப்படுகிறது.
சராசரியாக ஒரு வில் 29 இன்ச்கள் அல்லது (74.5 cms) வரை நீலம் இருக்கும். இந்த குச்சியின் ஊடே ஒருவிதமான பட்டை காணப்படும். இது வெள்ளை அல்லது சாம்பல் நிற ஆண் குதிரையின் வாலில் உள்ள முடியினால் செய்யப்படுகிறது. வில்லின் ஒரு முனையில் இந்த முடிக்கற்றை ஒட்டப்பட்டிருக்கும்,மறு முனையில் அதன் இறுக்கத்தை மாற்றிக்கொள்ள குமிழ்கள் உண்டு.

வயலின் வாசிக்கும் முறை:

மேற்கத்திய நாடுகளில் இந்த வயலினை நின்றபடி தான் வாசிப்பார்கள் ஆனால் நம் கர்நாடக இசை முறைப்படி தரையில் உட்கார்ந்துகொண்டு வாசிப்பார்கள். இடது தொடையில் வயலினின் கீழ்பகுதியை இருத்திக்கொண்டு,மேல் பகுதியை இடது தோள் மேல் சார்த்திக்கொண்டு,அதை தன் தாடையால் தக்க வைத்துக்கொள்வார்கள். பின் இடது கையின் விரல்களால் கழுத்துபகுதியில் வெவ்வேறு இடத்தில் த்ந்திகளுக்கு அழுத்தம் கொடுத்தவாரு வில்லினை பாலத்தின் மேற்புரம் தேய்ப்பார்கள். வில்லில் கொடுக்கும் அழுத்தம்,தேய்க்கும் வேகம், இடது விரல்கள் மீட்டும் இடங்கள் என பல விஷயங்களாலும் இசை மாறலாம். இவை எல்லாவற்றையும் சரியாக செய்தால்தான் நல்லிசை வரும். இல்லையேல் அபஸ்வரம் தான்!! :-)


கர்நாடக சங்கீதம் ,மேற்கத்திய இசை இரண்டிலும் இந்த வயலின் வெகு பரவலாக உபயோகப்படுத்த படுகிறது. கர்நாடக இசையில் பொதுவாக பக்க வாத்தியமாகவே உபயோகப்பட்டிருந்தாலும் குன்னக்குடி_வைத்தியநாதன்,டி.என்.கிருஷ்ணன்,லால்குடி_ஜயராமன்,டாக்டர்.எல்.சுப்ரமணியம் என பல கலைஞர்களால் இது தனி ஆவர்த்தனமாகவும் செய்யப்பட்டு வருகிறது. தமிழ் திரை இசையை பொருத்த வரை நம் இசைஞானி இளையராஜா இந்த கருவியை மிகவும் உபயோகப்படுத்துவார். அவரின் பல பாடல்களில் வயலின் மிக நேர்த்தியாக உபயோகப்படுத்தி இருப்பார். அதிலும் இந்த கருவியை கொண்டு சந்தோஷம்,சோகம்,ஹாஸ்யம்,கோபம் என பல உணர்வுகளையும் வெளிக்கொணற முடியும் என்பதால் இது பிண்ணனி இசையில் மிகவும் பரவலாக உபயோகப்படுத்தப்படும் கருவி.

மேற்கத்திய இசையை பொருத்த வரை பாப்,ராக் போன்ற இசை அமைப்புகளில் வயலினை அவ்வளவாக கேட்க முடியாது, ஆனால் பாரம்பரியம் மிக்க இசைகளிலும்(western classical) மற்றும் கிராமபுற இசையிலும் (western folk) இதை கேட்கலாம். மேற்கத்திய இசையில் வயலின் என்று சொல்லும் போது “Corrs” எனப்படும் இசைக்குழுவின் "Runaway” எனும் பாடல்தான் நியாபகம் வருகிறது. மிக அழகான பாடல்,நேரம் கிடைக்கும் போது கேட்டு பாருங்கள். ஆனால் பாடலை கேட்டு விட்டு "காதல் கொண்டேன்" படத்தில் வரும் "நெஞ்சோடு கலந்திடு"பாடல் போன்று உள்ளதே என்று உங்களுக்கு தோன்றினால் அதற்கு நான் பொறுப்பு அல்ல!! :-)


வயலின் இசை குடும்பத்தின் முக்கியமான இரு வேறு இசை கருவிகள் உண்டு. ஒன்று வயோலா (Viola) , இன்னொன்று செல்லோ (Cello)
வயோலா எனப்படும் கருவி வயலினை விட சற்றே பெரியதாக இருக்கும். வயலினில் நான்கு தந்திகள் இருக்கும் ஆனால் இதில் மூன்று தந்திகள் மட்டுமே.இந்த கருவியையயும் வயலினை பயன் படுத்துவதை போன்றே பயன் படுத்துவார்கள்.இந்த கருவியை இப்பொழுதெல்லாம் யாரும் அவ்வளவாக உபயோகப்படுத்தப்படுவதில்லை.

வயலினை விட சற்றே பாஸ் (bass) தூக்கலான ஒலி இந்த கருவியில் இருந்து வெளி வரும்.


செல்லோ எனப்படுவது வயலின் மற்றும் வயோலாவை விட பெரியது. இதை வயலினை போன்று பயன் படுத்தாமல் திருப்பி போட்டு வாசிப்பார்கள். இந்த கருவி சற்றே பெரியது என்பதால் இதை ஒரு சிறு நாற்காலியில் அமர்ந்து கொண்டு தான் வாசிக்க முடியும். இது குறிப்பாக ஒரு பாஸ்(bass) இசை கருவி என்றே சொல்லலாம். அதாவது பாஸ் எனப்படும் ஒலி அமைப்பை ஏற்படுத்த இந்த கருவி உபயோகப்படும்.
"திருடா திருடா" திரைப்படத்தில் "ராசாத்தி என் உசுரு என்னதில்ல" என்று ஒரு பாட்டு வரும்.அந்த பாட்டு முழுக்க ஒரு இசை கருவியை கூட உபயோகப்படுத்தவில்லை என்பது போல்தான் இருக்கும்!! ஆனால் அந்த பாடலில் அவ்வப்போது வரும் பாஸ் ஒலியை கொண்டு வர இந்த செல்லோ உபயோகப்படுத்தியிருப்பார்களோ என்று எனக்கு என்றுமே ஒரு பலத்த சந்தேகம் உண்டு. விஷயம் தெரிந்தவர்கள் விளக்கினால் நல்லது.

வயலினை பற்றி விஷயம் தெரிந்திருந்தால் இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம் ஆனால் நமக்கு இசையை ரசிக்க மட்டுமே தெரியும் அதனால் இந்த பதிவை இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.
பின்னர் வேறு ஒரு சமயம் ,வேறு ஒரு இசைகருவியோடு உங்களை சந்திக்கிறேன். போறதுக்கு முன்னாடி குன்னக்குடி வைத்தியனாதன் வளையப்பட்டி சுப்ரமணியம் அவர்கள் தவிலோட சேர்ந்து பட்டையை கிளப்பி இருக்கற ஒரு பாட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.
அதை சொடுக்கிட்டு வயலின் இசை இன்ப வெள்ளத்தில் நனைஞ்சிட்டு போங்க!!

வரட்டா?? :-)


Kunnakudi_Valayapa...

நன்றி:Violin. (2007, April 30). In Wikipedia, The Free Encyclopedia. Retrieved 02:36, May 1, 2007, from http://en.wikipedia.org/w/index.php?title=Violin&oldid=126985449

Sunday, April 29, 2007

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடிய தியாகராஜ கீர்த்தனை!

சத்குரு ஸ்ரீ தியாகராஜருக்கும் புரட்சிக்கவிஞர் பாராதிதாசனுக்கும் என்ன தொடர்பு என்று பார்க்கிறீர்களா? - "மருகேலரா ஓ ராகவா" - அதான் தொடர்பு!
இன்று பாவேந்தர் பாரதிதாசனாரின் பிறந்த நாள் என்று நண்பர் சிவபாலனின் பதிவில் கண்டேன் (Apr 29)
பாவேந்தர் தமிழிசைக்கு ஆற்றிய ஆரம்ப கால நற்பணிகள் பல.
அதான் இன்று, இந்த பாரதிதாசன் சிறப்புப் பதிவு!
சரி, இதில் தியாகராஜர் எங்கிருந்து வந்தார்?

நானும் இப்படித் தான் முதலில் திருதிரு என்று முழித்தேன்.
நண்பர் ஒருவர் மின்னஞ்சலில், ஒரு தமிழ்ப் பாட்டை அனுப்பி இருந்தார்.
படித்துக் கொண்டே சென்றால்,
"தியாகராஜ" என்று கடைசி வரியில் முத்திரை வருகிறது!
அட, இது என்ன, தியாகராஜ கீர்த்தனையின் மொழி பெயர்ப்பு அச்சு அசலாக, அப்படியே உள்ளதே என்று வியந்து போனேன்.
ஆனால் இன்னும் அதிசயம் காத்து இருந்தது.....

அது பாவேந்தர் பாராதிதாசன் எழுதியது என்றார்.
ச்சே...இருக்கவே முடியாது;
பாரதிதாசன் தனித்தமிழ் ஆர்வலர், புரட்சிக்கவி, தந்தை பெரியாரின் கொள்கைகள் கொண்டவர் - அவர் இராமபிரான் மேல் பாட்டு எழுதுவாரா?
அட போங்கப்பா, ஜோக் பண்ணாதீங்க என்று சொன்னால்....

அட, அது பாரதிதாசன் எழுதியது தானாம்!
இளைஞர்கள் எல்லாம் சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம் என்று ஒரு அமைப்பு தொடங்கினார்கள் பாரதியார் காலத்திலேயே!
அதில் இருந்த இளைஞர் தான்
பாரதிதாசன் - அப்போது கனக சுப்புரத்தினம்.

முருகப் பெருமான் மேல் பாடல்கள் எல்லாம் கூட புனைந்துள்ளார் நம் பாவேந்தர்.
ஆனால் அதெல்லாம் இளமையில்; இள மயில் மேல் இளமையில் பாட்டு!
அப்போது கூட தமிழார்வமும் துடிப்பும் உள்ளவராம் கவிஞர்.
தமிழால் எதுவும் செய்ய முடியும் என்கிற துடிப்பு!

தமிழிசை பற்றி ஒரு முறை விவாதிக்கும் போது, இதெல்லாம் தமிழிலே செய்ய முடியுமா என்று ஒரு கேள்வி வந்ததாம். பாரதிதாசனுக்குப் பொத்துக் கொண்டு வந்து விட்டது!
சரி, அனைவரும் போற்றி வணங்கும் தியாகராஜரின் கீர்த்தனைகளை,
மெட்டு மாறாமல், கட்டு குலையாமல், அதே மதிப்புடன்,
அப்படியே தமிழில் பாடினால் என்ன என்று அவருக்குத் தோன்றியது.

உடனே யாரிடமோ பாட்டும், அதன் பொருளும் கேட்டு உணர்ந்து கொண்டார்.
அப்படியே சில பிரபலமான கீர்த்தனைகளையும் தமிழில் மொழிபெயர்த்தாராம்.
அடடா, தியாகராஜ கீர்த்தனையின் சிறப்பே அதன் சொல் எளிமையும், ஆழ்ந்த பக்தியும் தானே!
சுகமான ராகத்தை அதனுடன் கூட்டிப் பாடினால், எவ்வளவு சுகம்!
அதை அப்படியே பாரதிதாசன் தமிழில் கொணர்கிறார் என்றால்! அச்சோ!மின்னஞ்சல் படித்து விட்டு, நண்பருக்கு உடனே தொலைபேசினேன்!
"அட , எங்க புடிச்சப்பா இந்தப் பாட்டை?
இதே போல வேறு ஏதாச்சும் இருக்கா தெரியுமா?", என்று கேட்டேன்!
அவரோ, இது fwdஇல் வந்ததாகவும், பாரதிதாசன் கவிதைகளிலோ, இல்லை அவர் கட்டுரை எழுதிய பத்திரிகைகளிலோ, தேடிப் பார்த்தால் கிடைக்கும் என்று சொன்னார்.

இது போல் ஒரு மூன்று நான்கு கீர்த்தனையாவது மொழி பெயர்த்து எழுதியிருக்க மாட்டாரா என்று எனக்கு ஒரு நப்பாசை வந்து விட்டது!
உடனே பாரதிதாசன் கவிதைப் புத்தகத்தில் தேடிப் பார்த்தேன்... காணோம்!
சரி, சென்னையில் யாரிடமாச்சும் சொல்லித் தேடச் சொல்ல வேண்டும்!

சிந்து பைரவி படம் என்று நினைக்கிறேன்.
சிவகுமார் தமிழிசையில் ஆர்வம் காட்ட, சுகாசினி சில தியாகராஜ கீர்த்தனைகளைத் தமிழில் பாடிக் காட்டுவார். உடனே, "நீ தய ராது" என்ற பாடலை
"உன் தயவில்லையா" என்று ஒலிபரப்புவார்கள்.
ஆனால் பாடல் முழுக்கவும் இருக்காது. சில வரிகளில் சினிமாவுக்காக, உடனே முடிந்து விடும்!

இந்தப் பாடலைப் பாருங்க!
"மருகேலரா ஓ ராகவா" என்ற பாடல்! என்னிடம் இருந்து ஏன் மறைந்து கொள்கிறாய் ராமா? - இதான் தியாகராஜரின் கேள்வி!
மிகப் பிரபலமான பாடல்! நிறைய கச்சேரிகளில் இதைப் பாடுவார்கள்; கல்யாண வீடுகளில் கூட பாடப்படும் என்றும் நினைக்கிறேன்.

ஆனா பாருங்க, நமக்கும் இசைக்கும் ஏணி வச்சா கூட எட்டாது!
எல்லாமே சுகமாக ரசிக்கும் எண்ணத்தோட சரி. அதிலும் கர்நாடக,தமிழ் இசைகளின் மீது ஒரு விதமான காதல்....
ஆனா இலக்கணம் எல்லாம் ஒரு மண்ணும் எனக்குத் தெரியாது! தெரிஞ்சுக்கனும்னு ஆவல் மட்டும் தான் இருக்கு!

ஆனா உறுதியாகச் சொல்ல முடியும், யார் வேண்டுமானாலும் இந்தப் பாடலைக் கேட்டு ரசிக்கலாம்! அப்படி ஒரு துடிப்பான மெட்டில் அமைந்த பாடல்.
நீங்களே கேட்டுப் பாருங்களேன்....
முக்கியமாகப் படித்தும் பாருங்க....
அழகுத் தமிழ், சுந்தரத் தெலுங்கு இரண்டிலும்!!!

பாவேந்தர் அவ்வளவு அழகாக தமிழ் பெயர்த்துள்ளார்!
இது மொழி பெயர்ப்பு என்று சொல்லவே மனம் வரவில்லை. அதனால் தமிழ் பெயர்ப்பு என்றேன்!


பாவேந்தரின் பாரதிதாசன் கைவண்ணத்தில்...
இதன் மூலப் பாடலைத் தெரிந்தவர்கள், அதே மெட்டில் பாடிக் கொண்டே,
தமிழில் வாய் விட்டுப் படிக்கலாமே....
தமிழில் இதை பாடித் தர யாராச்சும் உதவி செய்தால் இன்னும் சிறப்பு:-)
பல்லவி (எடுப்பு)
மறைவென்ன காண் ஓ ராகவா?
மறைவென்ன காண் ஓ ராகவா?

அனுபல்லவி (தொடுப்பு)
மறையும் அனைத்தின் உருவான மேலோய்!
மதியோடு கதிரும் விழியாகக் கொண்டோய்!
(மறைவென்ன காண் ஓ ராகவா)

சரணம் (முடிப்பு)
யாவும் நீயே என்றன்.. அந்-தரங்கம் -அதில்
தீவிரத்தில் தேடித், தெரிந்து கொண்டேன் - ஐயா!
தேவரீரை அன்றிச், சிந்தை ஒன்றும் இல்லேன்;
காக்க வேண்டும் என்னை, தியாகராச வேளே!
(மறைவென்ன காண் ஓ ராகவா)


இது சத்குரு ஸ்ரீதியாகராஜர் பாடிய மூலப் பாடல்
(சொற்களின் பொருள் வருமாறு அடைப்புக்குறிகளில் தந்துள்ளேன் - பிழையிருந்தால் அன்புடனே சுட்டிக் காட்டவும்)
* சுதா ரகுநாதன் பாடுவதை இங்கு கேட்கலாம்
** மகராஜாபுரம் சந்தானம் பாடுவது இங்கே!
*** எஸ். ஜானகி - K.V.மகாதேவன் இசையில் - "சப்தபதி" தெலுங்குத் திரைப்படம்
பல்லவி
மருகேலரா ஓ ராகவா
(ஓ ராகவனே, ஏன் என்னிடம் இருந்து மறைந்து கொள்கிறாய்?)

அனுபல்லவி
மருகேலர சரா சர ரூபா
(மறையும் பொருட்கள் நிறைந்த உலகிலும் ரூபமாக உள்ளவனே)
பராத்பர சூர்ய சுதாகர லோசன
(பரம்பொருளே, சூர்ய சந்திரர்களை விழிகளாகக் கொண்டவனே)

சரணம்
அன்னி நீவனுசு அந்த ரங்க முன
(எல்லாப் பொருளிலும் நீதான் என்று என் அந்தரங்கத்துக்கு உள்ளே)
தின்னக வேடகி தெலிசி கொண்டே னய்ய
(நன்றாக வேட்கைப்பட்டு தெரிந்து கொண்டேன் ஐயனே)
நின்னே கானி மடி நென்ன ஜால நொருல
(உன்னை அன்றி வேறு என் சிந்தனை வேறு இல்லை)
நன்னு ப்ரோவ வய்ய தியாக ராஜ னுத
(என்னைக் காத்து ரட்சி, தியாகராஜன் வணங்கும் தெய்வமே!)

ராகம்: ஜெயந்தஸ்ரீ
தாளம்: தேசாதி


குரல்:
* உன்னி கிருஷ்ணன் - தொகுப்பிசை(Fusion)
** உன்னி கிருஷ்ணன் - ஸ்ரீ குமரன் தம்பி இசையில் - "பந்துக்கள் சத்ருக்கள்", மலையாளத் திரைப்படம்

வாத்தியம்:
* துர்கா பிரசாத் - கோட்டு வாத்தியம்


என்ன நண்பர்களே, பாட்டு படிச்சீங்களா? புடிச்சு இருந்துச்சா?? :-)

Tuesday, April 24, 2007

நாட்டுப்புறப் பாடல்-ன்னா என்ன சார் அத்தனை இளக்காரம்?

"நாட்டுப்புறப் பாடல்-ன்னா என்ன சார் அத்தனை இளக்காரம்? நையாண்டி உங்களுக்கு??"
- எந்தப் படம்? நினைவுக்கு வருகிறதா? ...... சிந்து பைரவியில் நம்ம சிந்து, ஜேகேபி கிட்ட பொங்கி எழுவாங்க! :-)

நாட்டுப் பாடல்களில் என்ன சார் இல்ல? அதுல சொல்லப் படாத கருத்துக்களா? வெளிப்படுத்தாத உணர்ச்சிகளா?
வீரம், விவேகம், கோபம், ஹாஸ்யம் எது சார் இல்ல?
-இதுவும் அதே படத்து டயலாக் தான்!

அண்மையில் ஒரு அருமையான நாட்டுப் பாடல் கிடைத்தது!
அது காவடிச் சிந்து மெட்டில் அமைந்திருந்தது!
பொதுவா காவடி-ன்னாலே அது முருகனுக்குத் தான்!
ஆனா பாருங்க, இங்குக் கண்ணனுக்குக் காவடிச் சிந்து!
"மாடு மேய்க்கும் கண்ணே - போக வேண்டாம் சொன்னேன்" என்ற பாட்டு.
கண்ணபிரானுக்கு காவடி டோய்! :-)அதாச்சும் சிந்து என்பது நடைப்பாடல்.
பயணத்தின் போதோ, பயணத்துக்கு முன்னரோ உற்சாகம் பற்றிக் கொள்வதற்காகப் பாடுவது! தாளம் எல்லாம் தனியா எதுவும் போட வேண்டாம்! பாட்டில் தானா வந்து விடும்!
காவடி எடுத்துப் பயணம் போகும் போது பாடுவது காவடிச் சிந்து!

பெரும்பாலும் செஞ்சுருட்டி ராகத்தில் பாடுவார்கள். நாட்டக்குறிஞ்சி ராகமும் உண்டு! காவடிச் சிந்து, அதைப் பற்றிய குறிப்புகள், அண்ணாமலை ரெட்டியார் போன்ற தகவல்களை எல்லாம் அடுத்த பதிவில் பார்க்கலாம்.
இன்று, நேரடியா செவிக்கு விருந்து!

ஒரு தாய்க்கும், குட்டி மகனுக்கும் டிஸ்கஷன் நடக்கிறது. (உரையாடல்)
டேய் மவனே...வெளியில போவாதடா...எத்தனை வாட்டிடா சொல்லறது!
போம்மா...நீ எப்பவும் இப்படித் தான்! வெளியில ஒண்ணும் ஆவாது! எல்லாம் நான் பாத்துக்கறேன். ஆனா அப்பா கேட்டா மட்டும் சமாளிச்சுக்கோ! :-)

அருணா சாய்ராம், மார்கழி மகோற்சவத்தில் அதைப் பாடினார். நீங்களே கேளுங்கள்! உங்களுக்கும் மிகவும் பிடிக்கும்!


பல்லவி:

யசோதை:
மாடு மேய்க்கும் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன்


அனுபல்லவி:

கண்ணன்:
போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே


சரணம்:

காய்ச்சின பாலு தரேன்; கல்கண்டுச் சீனி தரேன்
கை நிறைய வெண்ணைய் தரேன்; வெய்யிலிலே போக வேண்டாம்

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

காய்ச்சின பாலும் வேண்டாம்; கல்கண்டுச் சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து, ஒரு நொடியில் திரும்பிடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

யமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ? கண்டதுண்டோ சொல்லும் அம்மா?
கள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

காட்டு மிருகமெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டங் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------
ராகம்=குறிஞ்சி
தாளம்=?
வரிகள்=அனானிமஸ் :-)
குரல்=அருணா சாயிராம்
வீடியோவிற்கு நன்றி=adomac


இந்தப் பதிவைக், காலஞ்சென்ற என் பாட்டி (ஆயா என்று அழைப்போம்)
திருமதி ஜனகவல்லி அம்மாள் நினைவுக்கு அர்ப்பணம் செய்கிறேன்.


அவர் வாழைப்பந்தல் கிராமத்தில் பாடாத நாட்டுப் பாடல்களா?

இராமாயாணக் கதையை முழுக்கவும் நாட்டுப் பாடலில் பாடி விடுவாரே!
அதுவும் பொங்கல் கும்மியின் போது, மொத்த உரே முற்றத்துக்கு வந்து கும்மிப் பாட்டுக்கு ஆடுமே! சிறு வயதில் அவரைப் பாடச் சொல்லி, TDK-90 காசெட் டேப்பில் பதிந்தவற்றை எல்லாம் சிடியாக்கணும்!

Tuesday, April 17, 2007

உங்களால் "நாதஸ்"(அ) ஒத்து ஊத முடியுமா?

பிறந்த நாள் பார்ட்டிகளில் பத்து பலூன்கள் ஊதவே, முழி பிதுங்குது! நாதசுரத்தில் அவ்வளவு நேரம் காற்றை விட்டு எப்படித் தான் ஊதுகிறார்களோ? அதுவும் அவ்வளவு வாசித்தும், கடைசியில் மக்கள் கண்டு கொள்ளவே இல்லை என்றால்?
இருந்தும் நமக்கு மங்கலம் தங்குவதற்காகவே வாசிக்கும் அனைத்து நாதசுரக் கலைஞர்களுக்கும் நமது வந்தனங்கள்!

இசை குறித்த வலைப்பூ என்பதால் மங்கல இசையான, நாதசுரத்தில் இருந்தே தொடங்குவோம்! சென்ற பதிவில் திராச ஐயா, ஷேக் சின்ன மெளலானா அவர்களின் வாத்திய இசையைத் தந்திருந்தார்!

"நாதஸ்" என்று செல்லமாக அழைக்கப்பட்டது ஒரு திரைப்படத்தில்.
நாதஸ்வரம் "நாதஸ்" ஆனால், தவில் என்ன ஆகும்? :-)
இதிலிருந்தே தெரியவில்லையா, தவிலை அவ்வளவு சீக்கிரம் யாரும் அசைத்துப் பார்க்க முடியாது என்று! :-)

மற்ற பல வாத்தியம், இசைக் கருவிகளை, சூழ்நிலைக்கு ஏற்றவாறு எப்படியும் பயன்படுத்தலாம். ஆனால் நாதசுரமும், தவிலும் மட்டும், எப்போதும் மங்கல இசைக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்!
இது ஒன்றே போதும், இவ்விரு கருவிகளின் பெருமையைச் சொல்ல!

நாதசுரம் என்றால் என்ன? ஒத்து ஊதுதல்-ன்னா என்ன?
நான் சொல்வதைக் காட்டிலும், கீழே வீடியோவைப் பாருங்க!
மெளலியின் பிளைட்-172 என்ற நாடகம். அதில் என்னமாய் விளையாட்டா விளக்கறார் பாருங்க! :-)

நாதசுரத்தின் பலமே, இப்போது அதற்குப் பலவீனம்! - என்ன தெரியுமா?

1. இட நெருக்கடி அதிகமாகி வரும் இந்தக் காலத்தில், இதை எடுத்தேன் கவிழ்த்தேன் என்றெல்லாம் வாசிக்க முடியாது.
ஒலி பெருக்கி இல்லாமலேயே அரங்கத்தின் கோடியில் உள்ளவரும் கேட்கக் கூடிய வாத்தியம் இது.
இதுவே அதன் பலவீனமாகிப் போய் விட்டது இப்போது.
ஒரு சின்ன அறைக்குள் வாசித்தால், அவ்வளவு தான்! வந்தது வினை!
உடனே Noise Pollution என்று யாருச்சும் வழக்கு போட்டாலும் போட்டு விடுவார்கள்!

2. இதன் பயிற்சி மிகவும் கடினமானது. தனிமையில் கூடப் பயில முடியாது. சத்தமே ஊரைக் கூட்டி விடும். தப்பும் தவறுமாக பயிற்சியில் வாசித்தாலும், ஊருக்கே தெரிந்து விடும்! :-(

3. இது போதாதென்று பயிலும் மாணவ/மாணவிகள் விடும் மூச்சுக் காற்றை எண்ணிப் பாருங்கள்!
தில்லானா மோகனாம்பாள் படத்தில், சிக்கல் சண்முகசுந்தரம் சொல்வது போல், நாபிக் கமலத்தில் (தொப்புள்) இருந்து காற்றை இழுத்து, மேலே ஏற்றி, இழுத்துப் பிடித்து, ஊத வேண்டும். பல நாயனக்காரர்களின் கழுத்தைப் பாருங்கள். வீங்கி இருக்கும்!


நாதசுரத்துக்குப் போட்டியாக அண்மைக் காலங்களில் வந்தவை இரண்டு வாத்தியங்கள்
1. க்ளாரினெட்
2. சாக்ஸ் என்னும் சாக்ஸபோன்
இருப்பினும் மங்கல இசை என்ற இடத்தை, அவற்றால் இன்னும் பிடிக்க முடியவில்லை!
3. இன்னொரு வாத்தியம் - முகவீணை என்று பெயர். இது உருவில் சிறிய, குட்டி நாதசுரம்.

நாதசுரம் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியதா?
இல்லை ஆந்திரா, கர்னாடகம், இன்னும் கேரளத்தில் கூட வாசிக்கிறார்கள்!உலகில் தமிழர் இருக்கும் இடமெல்லாம் வாசிக்கிறார்கள்.

கோவில், கல்யாணம் - இதற்கு மட்டுமே நாதசுரம் என்று இருந்த நிலை மாறிவிட்டது! பல கச்சேரிகளில் வாசிப்பு காண முடிகிறது!
இந்தக் காலத் திரைப்படங்களில் கூட, இசை அமைப்பாளர்கள், இதைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.
பழனியில் தமிழக அரசின், ஒரு நாதசுரக் கல்லூரியே உள்ளது.
இன்னும் கீபோர்டில், நாதசுரம் வரவில்லை. அவ்வளவு தான்! :-)

நான் இந்த முறை சென்னை சென்றிருந்த போது, ஆழ்வார்கள் ஆராய்ச்சி மையத்தின் நண்பர் ஒருவர், ஒரு குட்டி எலெக்ட்ரானிக் (மின்னணு) கருவியைக் காண்பித்தார். பார்ப்பதற்கு ஏதோ பொம்மைக் கப்&சாசர் போல் இருந்தது. அதை எடுத்து நாதசுரத்தின் அடிப்பாகத்தில் பொருத்தினார் மனுசன்.

இப்ப ஊதினா, ஏதோ புல்லாங்குழல் ஊதுவது போல் மெல்லிதாய் வருகிறது நாத சப்தம்! ஆகா...அறிவியல் முன்னேற்றங்களை இது போன்று தொன்மையான இசை வளரப் பயன்படுத்தினால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்! முயற்சிகள் அங்கொன்று இங்கொன்றுமாக நடந்து வருவதாகச் சொன்னர் நண்பர்!


ஒரு காலத்தில், நாதசுரம்-தவில், சாதியின் பாற்பட்டும் இருந்தது.
சமூகத்தில் அதன் இசைக்கு மயங்கியவர்கள், அதனை இசைக்கும் கலைஞர்களுக்கு மதிப்பு அளிக்காமல் இருந்தார்கள்.
ஆனால் இந்தப் போக்கை வெட்டி வீழ்த்தி, நாதசுரக் கலைஞன் ஒரு ராஜாவைப் போல் உலா வர முடியும், அவனுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர்
TN ராஜரத்தினம் பிள்ளை.
அவரைப் போலவே நாதசுர இசையில் பெரும் புகழ் அடைந்தவர்கள் வெகு சிலரே! காருக்குறிச்சி அருணாச்சலம் இன்னொரு பெரும் மேதை.
இசுலாமிய மதத்தினரான ஷேக் சின்ன மெளலானா, இதைக் கற்க மிகவும் பாடுபட்டார். ஆனால் எவ்வளவுக்கு எவ்வளவு இடையூறுகளோ, அவ்வளவுக்கு அவ்வளவு வெற்றிகள்! இப்படி மதங்களை கடந்தது நாதசுர இசை!

பெண்களால், இப்படி "தம்" பிடித்து ஊத முடியுமா?
சேலும் பொன்னுத்தாயி செய்து காட்டினார். உலகமே வியந்தது!

நாதசுரம்-தவில் காம்பினேஷன் களை கட்டத் தொடங்கியது!
நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்-வலையப்பட்டி சுப்ரமணியம்,
MPN சேதுராமன்-பொன்னுசாமி,
AKC நடராஜன்,
ஹரித்வாரமங்கலம் பழனிவேல்,
திருவிழா ஜெய்சங்கர்,
மாம்பலம் சிவா என்று கலைஞர்கள் எல்லாம் புகழ் பெறத் துவங்கினார்கள்!
இலங்கை மற்றும் சிங்கையிலும் பெரும் கலைஞர்கள் உள்ளனர். அவர்கள் பெயர்களையும் சொல்லி உதவுங்களேன்!

தில்லானா மோகனாம்பாள் திரைப்படம், மக்களிடையே நாதசுரத்திற்கு ஒரு sensation-ஐ உருவாக்கித் தந்தது. நாதசுரக் கலைஞர்கள் மற்ற எந்தக் கலைஞர்களுக்கும் குறைவானவர்கள் அல்ல என்ற ஒரு நல்ல நிலை உருவாகவும் தொடங்கியது.

சரி, முக்கியமான ஒரு கேள்விக்கு வருவோம்!
நம்மில் எத்தனை பேர், கல்யாணத்துக்குப் போனால், இந்த நாதசுர இசையைக் காது கொடுத்துக் கேட்போம்?

இப்போதெல்லாம் நல்ல சினிமாப் பாடல்களையும் நாதசுரத்தில் வாசிக்கிறார்கள். அப்போது கூட நாம் காது கொடுத்துக் கேட்கிறோமா?
சரி, இனி மேலாவது கேட்க, முயற்சி செய்யலாமா?
வாசிப்பு நன்றாக இருந்தால், ஒரு எட்டு போய், "நல்லா வாசிச்சீங்க" என்று சொல்லி விட்டு வரலாமா?

அண்மையில் சென்னையில், நாதசுரத்துக்கு என்றே தனி விழா ஒன்று நடைபெற்றது! ஈழத்து நாதசுரக் கலைஞர் முருகதாஸ் என்பவர், இதற்கு முயற்சிகள் மேற்கொண்டார்.
அது பற்றிய யோகன் அண்ணா/BBC பதிவு
இங்கே!

Monday, April 16, 2007

இசை இன்பம் - ஷேக் சின்ன மௌலானா

இசை இன்பத்தை தாம் மட்டும் அனுபவிக்காமல் அதை மற்றவரிடமும் பகிர்ந்து கொண்டால்தான் அந்த இசை நன்கு பரிமளிக்கும்.

நண்பர் திரு. ரவி அவர்கள் இசையைப் பற்றி சேர்ந்து எழுதாலாம் என்று அன்புடன் அழைப்பு விடுத்திருந்தார்.
அதனை ஏற்று இந்தப்பதிவை மங்கல இசையுடன் ஆரம்பிக்கலாம் என்று கருதி சமீபத்தில் மறைந்த என் குருநாதரான திரு. சுப்புடு அவர்களை வணங்கி ஆரம்பிக்கிறேன்.

இசை உலகில் எத்தனையோ மஹான்கள் அவதரித்து அந்த இசையை அனைவரும் கேட்டு அனுபவிக்கும் வண்ணம் அதை மெருகூட்டியிருக்கிறார்கள்.
அவர்கள் அனைவருக்கும் வணக்கம் செலுத்தும் முறையில் மதம், ஜாதி,மொழி என்ற குறுகிய மனப்பான்மையைக் கடந்த இசையை
இந்த மிலாடி நபித் திருநாளில் மறைந்த திரு. ஷேக் சின்ன மௌலானா அவர்களின் நாதஸ்வர இசையுடன் ஆரம்பிக்கலாமா!

இசையை இங்கே கேட்டு அனுபவியுங்கள்

முதல் வணக்கம் - இசை மணக்கும்!

இசை பூக்குமா? பூக்குமே....
எங்கு? வலைப்பூவில்!

"இன்னிசையாய், செந்தமிழாய் இருப்பவனே!" என்று
இறைவன் இசையாய் இருப்பதாகத் தான் பாடியுள்ளார்கள்.
ஆதியிலே தேவன் வார்த்தையாய் இருந்தார் என்பது பைபிள்.
தமிழிசை இயக்கத்தின் இரு கண்கள் - சைவமும் வைணவமும்!

சிவபிரானிடம் உடுக்கை என்றால், பெருமாளிடம் சங்கு!
நந்தியிடம் மிருதங்கம், நாரதரோ வீணை!

இப்படி, இசையும் இறையும் இரண்டறக் கலந்து தான் உள்ளது!இசை என்பதைப் பாடல்கள் மட்டும் என்றும் நிறுத்திக் கொள்ளாது,
  • இசைக் கருவிகள்
  • நடனம்
  • நாட்டுப்புறப் பாடல்
  • திரைப்படம்
  • தொகுப்பிசை-Fusion-Album
  • இவற்றின் பின்னணியில் சுவையான தகவல்கள்
  • புதுப் பாடல்கள், பதிவுலக முயற்சிகள்
என்று ஒரு கதம்ப மாலையாகத் தொடுக்க சிந்தனை.

இசை, மொழிக்கு அப்பாற்பட்டது தான் என்றாலும், முதலில்
தெய்வத் தமிழ் இசையில் இருந்து தொடங்கலாம் என்பதே எண்ணம்.
முதலில் நம் வீட்டுப் பலகாரங்களைச் சிறிது சுவைத்து விட்டு,
பின்னர் ஒவ்வொன்றாக மற்ற விருந்துகளையும் சுவைக்கலாம்.
எதையும் தள்ளி விடப் போவதில்லை!
எல்லாவற்றையும் அள்ளி சுவைக்கத் தான் போகிறோம்!!
nalvar

trinity

Aalwars

கணபதியானை வணங்கி,
ஆடல் வல்லானையும், ஆழி மாயனையும் வணங்கி,
நால்வரையும் ஆழ்வார்களையும் வணங்கி,
சங்கீத மும்மூர்த்திகளை வணங்கி,
வலைப்பூ மலரட்டும், வாசங்கள் வீசட்டும்!

எந்தரோ மகானுபாவுலு! அந்தரிகி வந்தனமுலு!!
எத்தனையோ மகான்கள் பூமியிலே! அத்தனை பேருக்கும் வந்தனமே!!

ஞான சம்பந்தப் பெருமான் தந்த இசையில், மூடிய கதவுகள் திறந்தன!
அதே போல், இசையால், நம் அகக் கதவுகளும் திறக்கட்டும்!

என்றும் போல, உங்கள் ஆதரவும், ஆசியும் அள்ளி வழங்க வேண்டுகிறேன்!
வலைப்பூவில், இசைப்பூ தொடுக்க ஆசைப்படும் நண்பர்கள்,
சொல்லுங்கள்! மகிழ்வுடன் அழைப்பு அனுப்புகிறோம்!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP