குழலினிது யாழினிது என்பர்,வயலினிசை கேளாதவர்
தளபதி படத்தில் "ராக்கம்மா கையத்தட்டு" என்று ஒரு பாட்டு. பாடலோட ஆரம்பமே அசத்தலா இருக்கும். நம் மனதில் உள்ள சலிப்புத்தன்மையை கிழித்துவிட்டு உற்சாகத்தை ஊற்றி கொஞ்சம் கொஞ்சமாய் நம் முகத்தில் புன்னகையை வரவழைத்துவிடும். தீபாவளி சிறப்பு ஒலியும் ஒளியும் பார்க்க உட்கார்ந்த நான் அந்த பாடலை முதன் முதலில் கேட்டு விட்டு திக்குமுக்காடி விட்டேன். அப்படிப்பட்ட அட்டகாசமான ஒரு தொடக்கம் அந்த பாடலுக்கு அமைய ஏதுவாக இருந்த வயலின் இசை கருவி மேல் எனக்கு அன்று ஏற்பட்ட பிரமிப்பு இன்று வரை தீரவில்லை.
Thalapathy_Rakkamm... |
Hosted by eSnips |
அதற்கு பின் பல பாடல்கள் ,பல விதமான இசை வகைகள்.ஆனால் எங்கு சென்றாலும் இந்த வயலினின் ராஜ்ஜியம் தொடர்ந்துகொண்டே இருந்தது . நம் உள்ளத்தில் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்க கூடியதுமாய், கர்நாடக சங்கீதம்,மேற்கத்திய இசை,சினிமா பாடல்கள் என எல்லா இசை துறையிலும் பெரிதும் உபயோகப்படுத்தப்படுவதாய் விளங்கும் வயலினை பற்றி தான் நாம் இன்று காண உள்ளோம்.
வரலாறு:
இந்த வயலின் எப்போது உருவாக்கப்பட்டது?? எங்கு கண்டுபிடிக்கப்பட்டது??.
வடக்கு இத்தாலியில், பதினாராம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த கருவி கண்டுப்பிடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இது ரெபெக் (Rebec) எனப்படும் ஒரு பழம்பெறும் இசைக்கருவியில் இருந்து மறுவியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.வயலினை பற்றிய குறிப்பும் அதை வாசிக்க தேவையான வழிமுறைகளும் "Epitome Musical” எனப்படும் ஒரு இசை கையேட்டில் 1556-லேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் வயலின் இசைக்கருவியின் பிரசித்தம் இத்தாலியில் இருந்து ஐரோப்பா கண்டம் முழுவதிலும் பரவி விட்டிருந்தது.ரோட்டில் வாசிக்கும் சாதாரண இசைக்கலைஞரில் இருந்து மன்னரின் சபையில் வாசிக்கும் வித்துவான்கள் வரை எல்லோரின் கையிலும் வயலின் இடம் பெற்றிருந்தது. வரலாற்று குறிப்புகளில் கூட பிரென்சு மன்னன் ஒன்பதாவது சார்லஸ் 1560-இல் 24 வயலின்கள் செயவதற்கு ஆணையிட்டதாக உள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டில் தான் வயலினின் வடிவமைப்பில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. வயலினின் கழுத்துப்பகுதி நீட்டமாகவும்,அதன் கோணத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இன்றளவிலும் இந்த கால நேரத்தில் செய்யப்பட்ட வயலின்கள்தான் கலைக்கூடங்களிலிலும் ,கலை பொருட்கள் சேகரிப்பாளர்களிடமும் பெரும் மதிப்பை பெற்றவையாக இருக்கின்றன.
நம் இந்தியாவில் இந்த இசைக்கருவி பாலுச்சாமி தீஷிதர் என்பவரால் தென்னிந்திய இசைத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது.
வயலினின் அமைப்பு:
படத்தை பார்த்தாலே தெரியும் என்று நினைக்கிறேன். வயலினின் முக்கியப்பகுதி மேபில் (maple) எனப்படும் மரத்தால் செய்யப்படுகிறது. அதற்கு மேல் கழுத்து போல் ஒர் அமைப்பு பொருத்தப்பட்டிருக்கும். அதன் முன்பகுதி கருங்காலி மரத்தால் (ebony) செய்யப்படுகிறது. அந்த மரத்தின் கடினமான அமைப்பும், சுலபமாக தேய்ந்து போகாத திறனுமே இந்த பகுதி செய்ய உபயோகப்படுத்தப்படுவதற்கு காரணம். இந்த பகுதியில்தான் கலைஞர்கள் தன் விரல்களை தந்தியின் மீது அழுத்தி வித விதமான ஓசைகளை எழுப்புவார்கள். இந்த கழுத்துபகுதியின் மற்றொரு விளிம்பில் தந்திகளின் அழுத்தத்தை கூட்ட குறைக்க குமிழ்கள் பொருத்தப்பட்டிருக்கும். வயலினின் எல்லா பகுதியும் ஒருவித கோந்து பொருளால் ஒட்டப்பட்டிருக்கும்.
வயலினின் மேல் பகுதியில் தந்திகளை நன்றாக இழுத்து பிடித்த படியான அமைப்பு இருக்கும் இதில் தந்திகளின் அழுத்தத்தை லேசாக சரி செய்து கொள்ளலாம்.
அதற்கு நடுவில் தந்திகளை தாங்கி பிடிக்க பாலம் என்ற ஒரு அமைப்பும் உண்டு.
மேல் பகுதியில் தாடையை தாங்கி கொள்வதற்கான ஒரு பகுதியை (chin rest) வேண்டிபவர்கள் பொருத்திக்கொள்ளலாம். சிலர் வாசிக்கும் போது வேர்வை படாமல் இருக்க வயலினின் மேல் பகுதியில் துண்டு ஒன்றை போட்டு அதற்கு மேல் தன் தாடையை வைத்துக்கொள்வார்கள்.
வயலினில் உபயோகிக்கப்படும் நான்கு வெவேறு தடிமனான தந்திகள் முன்னொரு காலத்தில் ஆட்டின் உடலில் இருந்து தயாரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது,இப்பொழுதெல்லாம் எஃகு கொண்டு உருவாக்கப்படுகிறது.தந்திகள் அவ்வப்போது அறுந்துவிடும் என்பதால் கலைஞர்கள் தங்களுடன் எப்போழுதும் உபரியாக சில தந்திகளை எடுத்து செல்வார்கள்.
வயலினின் இன்னொரு முக்கியமான பகுதி "போ"(bow) எனப்படும் வில். இதை கொண்டு தந்திகளை தேய்த்த வாரே விரல்களால் அழுத்தத்தை கூட்டி குறைத்து இசை உருவாக்கப்படுகிறது.
சராசரியாக ஒரு வில் 29 இன்ச்கள் அல்லது (74.5 cms) வரை நீலம் இருக்கும். இந்த குச்சியின் ஊடே ஒருவிதமான பட்டை காணப்படும். இது வெள்ளை அல்லது சாம்பல் நிற ஆண் குதிரையின் வாலில் உள்ள முடியினால் செய்யப்படுகிறது. வில்லின் ஒரு முனையில் இந்த முடிக்கற்றை ஒட்டப்பட்டிருக்கும்,மறு முனையில் அதன் இறுக்கத்தை மாற்றிக்கொள்ள குமிழ்கள் உண்டு.
வயலின் வாசிக்கும் முறை:
மேற்கத்திய நாடுகளில் இந்த வயலினை நின்றபடி தான் வாசிப்பார்கள் ஆனால் நம் கர்நாடக இசை முறைப்படி தரையில் உட்கார்ந்துகொண்டு வாசிப்பார்கள். இடது தொடையில் வயலினின் கீழ்பகுதியை இருத்திக்கொண்டு,மேல் பகுதியை இடது தோள் மேல் சார்த்திக்கொண்டு,அதை தன் தாடையால் தக்க வைத்துக்கொள்வார்கள். பின் இடது கையின் விரல்களால் கழுத்துபகுதியில் வெவ்வேறு இடத்தில் த்ந்திகளுக்கு அழுத்தம் கொடுத்தவாரு வில்லினை பாலத்தின் மேற்புரம் தேய்ப்பார்கள். வில்லில் கொடுக்கும் அழுத்தம்,தேய்க்கும் வேகம், இடது விரல்கள் மீட்டும் இடங்கள் என பல விஷயங்களாலும் இசை மாறலாம். இவை எல்லாவற்றையும் சரியாக செய்தால்தான் நல்லிசை வரும். இல்லையேல் அபஸ்வரம் தான்!! :-)
கர்நாடக சங்கீதம் ,மேற்கத்திய இசை இரண்டிலும் இந்த வயலின் வெகு பரவலாக உபயோகப்படுத்த படுகிறது. கர்நாடக இசையில் பொதுவாக பக்க வாத்தியமாகவே உபயோகப்பட்டிருந்தாலும் குன்னக்குடி_வைத்தியநாதன்,டி.என்.கிருஷ்ணன்,லால்குடி_ஜயராமன்,டாக்டர்.எல்.சுப்ரமணியம் என பல கலைஞர்களால் இது தனி ஆவர்த்தனமாகவும் செய்யப்பட்டு வருகிறது. தமிழ் திரை இசையை பொருத்த வரை நம் இசைஞானி இளையராஜா இந்த கருவியை மிகவும் உபயோகப்படுத்துவார். அவரின் பல பாடல்களில் வயலின் மிக நேர்த்தியாக உபயோகப்படுத்தி இருப்பார். அதிலும் இந்த கருவியை கொண்டு சந்தோஷம்,சோகம்,ஹாஸ்யம்,கோபம் என பல உணர்வுகளையும் வெளிக்கொணற முடியும் என்பதால் இது பிண்ணனி இசையில் மிகவும் பரவலாக உபயோகப்படுத்தப்படும் கருவி.
மேற்கத்திய இசையை பொருத்த வரை பாப்,ராக் போன்ற இசை அமைப்புகளில் வயலினை அவ்வளவாக கேட்க முடியாது, ஆனால் பாரம்பரியம் மிக்க இசைகளிலும்(western classical) மற்றும் கிராமபுற இசையிலும் (western folk) இதை கேட்கலாம். மேற்கத்திய இசையில் வயலின் என்று சொல்லும் போது “Corrs” எனப்படும் இசைக்குழுவின் "Runaway” எனும் பாடல்தான் நியாபகம் வருகிறது. மிக அழகான பாடல்,நேரம் கிடைக்கும் போது கேட்டு பாருங்கள். ஆனால் பாடலை கேட்டு விட்டு "காதல் கொண்டேன்" படத்தில் வரும் "நெஞ்சோடு கலந்திடு"பாடல் போன்று உள்ளதே என்று உங்களுக்கு தோன்றினால் அதற்கு நான் பொறுப்பு அல்ல!! :-)
வயலின் இசை குடும்பத்தின் முக்கியமான இரு வேறு இசை கருவிகள் உண்டு. ஒன்று வயோலா (Viola) , இன்னொன்று செல்லோ (Cello)
வயோலா எனப்படும் கருவி வயலினை விட சற்றே பெரியதாக இருக்கும். வயலினில் நான்கு தந்திகள் இருக்கும் ஆனால் இதில் மூன்று தந்திகள் மட்டுமே.இந்த கருவியையயும் வயலினை பயன் படுத்துவதை போன்றே பயன் படுத்துவார்கள்.இந்த கருவியை இப்பொழுதெல்லாம் யாரும் அவ்வளவாக உபயோகப்படுத்தப்படுவதில்லை.
வயலினை விட சற்றே பாஸ் (bass) தூக்கலான ஒலி இந்த கருவியில் இருந்து வெளி வரும்.
செல்லோ எனப்படுவது வயலின் மற்றும் வயோலாவை விட பெரியது. இதை வயலினை போன்று பயன் படுத்தாமல் திருப்பி போட்டு வாசிப்பார்கள். இந்த கருவி சற்றே பெரியது என்பதால் இதை ஒரு சிறு நாற்காலியில் அமர்ந்து கொண்டு தான் வாசிக்க முடியும். இது குறிப்பாக ஒரு பாஸ்(bass) இசை கருவி என்றே சொல்லலாம். அதாவது பாஸ் எனப்படும் ஒலி அமைப்பை ஏற்படுத்த இந்த கருவி உபயோகப்படும்.
"திருடா திருடா" திரைப்படத்தில் "ராசாத்தி என் உசுரு என்னதில்ல" என்று ஒரு பாட்டு வரும்.அந்த பாட்டு முழுக்க ஒரு இசை கருவியை கூட உபயோகப்படுத்தவில்லை என்பது போல்தான் இருக்கும்!! ஆனால் அந்த பாடலில் அவ்வப்போது வரும் பாஸ் ஒலியை கொண்டு வர இந்த செல்லோ உபயோகப்படுத்தியிருப்பார்களோ என்று எனக்கு என்றுமே ஒரு பலத்த சந்தேகம் உண்டு. விஷயம் தெரிந்தவர்கள் விளக்கினால் நல்லது.
வயலினை பற்றி விஷயம் தெரிந்திருந்தால் இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம் ஆனால் நமக்கு இசையை ரசிக்க மட்டுமே தெரியும் அதனால் இந்த பதிவை இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.
பின்னர் வேறு ஒரு சமயம் ,வேறு ஒரு இசைகருவியோடு உங்களை சந்திக்கிறேன். போறதுக்கு முன்னாடி குன்னக்குடி வைத்தியனாதன் வளையப்பட்டி சுப்ரமணியம் அவர்கள் தவிலோட சேர்ந்து பட்டையை கிளப்பி இருக்கற ஒரு பாட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.
அதை சொடுக்கிட்டு வயலின் இசை இன்ப வெள்ளத்தில் நனைஞ்சிட்டு போங்க!!
வரட்டா?? :-)
Kunnakudi_Valayapa... |
நன்றி:Violin. (2007, April 30). In Wikipedia, The Free Encyclopedia. Retrieved 02:36, May 1, 2007, from http://en.wikipedia.org/w/index.php?title=Violin&oldid=126985449
11 comments:
ராக்கம்மா கையத்தட்டு - சூப்பர் !
இருங்க, நானும் கையைத் தட்டி விடுகிறேன்!
அருமையான தகவல்கள் கொண்ட பதிவு CVR!
வயலினில் பிச்சு உதறியுள்ளார் ராஜா!
முழுப் பதிவையும் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!
நல்ல வயலின் பதிவு. ஒரு மேற்கித்ய வாத்யத்தை நம்ம மக்கள் எவ்வளவு நல்லா adopt & adapt பண்ணிகிட்டாங்க
இல்லையா?
இளையராஜா நீங்க சொன்ன மாத்ரி வயலின நிறைய உபயோகிச்சிருக்கார்."ராக்கம்ம கைய்யதட்டு" one of the best. எனக்கு இன்னொணும் புடிக்கும், "பொத்தி வச்ச மல்லிகை மொட்டு" பாட்டுல முதல்ல வர வயலின் இசை.
அடுத்தது மேண்டலினா??(mandolin)
@KRS
அவரு ராக்கம்மாவைத்தானே கையை தட்டசொன்னாரு,நீங்க ஏன் தட்டினீங்க?? :-) ஹா ஹா!!
முழுவதுமாய் பாடித்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் கண்ணன் சார்!! :-)
@ராதா ஸ்ரீராம்
ஆமாம் ராதா அக்கா!! ராஜா சார் இசை அமைப்பில் பல பாடல்களில் வயலின் மிக அழகாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கும். தமிழ் திரை இசையில் வயலினை எப்படி எல்லாம் பயன்படுத்த முடியும் என்று காட்டியவர் இளையராஜா.
"நிழல்கள்" படத்தில் வரும் "பூங்கதவே தாள்திரவாய்" பாட்டிலும் முதலில் வரும் வயலின் இசை மிக அற்புதமாக இருக்கும்.வாழ்த்துக்களுக்கு நன்றி!! :-)
//நம் இந்தியாவில் இந்த இசைக்கருவி பாலுச்சாமி தீஷிதர் என்பவரால் தென்னிந்திய இசைத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது//
இது பற்றி நீங்க இன்னும் அறியத் தந்தால் நன்றாக இருக்கும் CVR.
எப்படி ஒரு வேற்று நாட்டு இசைக் கருவி, பொதுவாக எதிலும் கட்டுக் கோப்பாக இருக்க விரும்பும் நம் இசைவாணர்களிடையே ஏற்றுக் கொள்ளப் பட்டது பாருங்கள்!
ஆக, உண்மையான கலைக்கு நம் மக்கள் எந்த பேதங்களும் பார்க்காமல் ஆதரவு தந்து வந்துள்ளதைத் தான் இது காட்டுகிறது...இந்த வளமான சிந்தனை இனியும் தொடர வேண்டும், அடுத்த தலைமுறைக்கும் பயன்படும் வண்ணமாக!
// "Runaway” எனும் பாடல்தான் நியாபகம் வருகிறது...ஆனால் பாடலை கேட்டு விட்டு "காதல் கொண்டேன்" படத்தில் வரும் "நெஞ்சோடு கலந்திடு"பாடல்//
ஆகா...அடுத்த பதிவுக்கு ஐடியா கொடுக்கறீங்களே!
செல்லோ பற்றிய தகவல்கள் புதிது. நன்றி CVR,
அழைப்பை ஏற்று, குழுவில் வந்தமைக்கும் நன்றி
பதிவு தந்தமைக்கும் நன்றி!!
தொடர்ந்து கலக்குங்க!
@KRS
திருவாங்கூர் சமஸ்தானத்தில்,"சுவாதித்திருநாள்" (அது ஒரு ஆளோட பேராம் :-)) ராஜாவா இருந்த போது அவருடைய அவைக்கலைஞர் வடிவேலு அவர்களிடம் ,பிரென்சு பாதிரியார் ஒருவர் இந்த வயலினை பரிசளித்ததாக சொல்லப்படுகிறது.அவரே அப்பொழுது அந்த வயலினை வாசிப்பதற்கு கற்றும் கொடுத்தாராம்!!
பிறகு முத்துசுவாமி தீட்சிதரின் சகோதரரான பாலுச்சுவாமி தீட்சிதர் அவர்களால் பரவலாக உபயோகப்படுத்தப்பட்டு இந்த கருவி இந்திய இசை உலகில் பிரபலப்படுத்தப்பட்டது.
திப்பு சுல்தான் காலத்தில் வயலின் பயன்படுத்தப்பட்டதற்கு சான்றாக ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள அவரின் அரண்மனையில் உள்ள ஓவியங்களே சான்றுகளாக இன்றும் உள்ளன.
நீங்கள் கேள்வி கேட்ட பின் ,அர்வம் மேலிட்டு நான் இணையத்தில் தேடியதில் கிடைத்த தகவல்கள் இவை.
எந்த அளவுக்கு உண்மை என்று விஷயம் தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாக் இருக்கும்!! :-)
நல்ல பதிவிற்கு ஒரு நன்றி.
ஆம்! ஸ்வாதி திருநாள் மகாராஜா என்பவர் திருவநந்தபுர அரசர், மிகப் பெரிய வாக்கேயக்காரர். மேலும் நீங்கள் சொல்லியிருக்கும் (பரிசு, கற்றுக் கொடுத்தல்) தகவல்களும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
மெளலி...
நன்றி மௌலி!
அப்போ இணையத்துல எனக்கு கிடைத்த செய்தி உண்மையாகத்தான் இருக்கும் போல.
பதிவுக்கு அப்பப்போ வந்துட்டு போங்க!! :-)
பிகவும் பயனுள்ள சேகரிக்கப்பட வேண்டிய பதிவு. நேற்று நீங்கள் சொல்லவில்லை என்றால் தவறவிட்டிருப்பேன். நன்றி.
CVR என்னுடைய பின்னூட்டம் தவறான புரிதல்களை ஏற்படுத்தி இருந்தால் மன்னிக்க. நல்லதொரு பதிவை தவற விட்டிருப்போமே என்ற ஆதங்கமே அவ்வாறு எழுதியதற்கான காரனம்.
@சத்தியப்பிரியன்
ஆகா!!
எதுக்கு தலைவா மன்னிப்பு அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு!!
பதிவு தங்களுக்கு பிடித்தமையில் மகிழ்ச்சி!! :-)
"""பி கு : ஒரு சுவாரஸ்யமான விஷயம் "தம்பிக்கு எந்த ஊரு" படத்தில் வரும் "என் வாழ்விலே" பாடலின் நடுவில் வரும் இசையும் "மூன்றாம் பிறை" படத்தில் "பூங்காற்று புதிரானது" பாடலின் நடுவில் வரும் இசையும் (ஸ்ரீதேவி ரயில் தடத்தில் மாட்டிகொள்லும் காட்சியில் வரும் இசை) ஒரே மாதிரி இருக்கும். இப்படி அச்சு அசலாக ஏன் இளையராஜா இசை அமைத்தார் என்று நான் பல சமயங்களில் யோசித்ததுண்டு.""
மூன்றாம் பிறை(1982) திரைப்படம் ஹிந்தியில் எடுத்தார் பாலுமகேந்திரா. அந்த படம் சத்மா(1983). அதற்கும் இசை இளையராஜா தான். அதில் எல்லா பாடல்களும் மூன்றாம் பிறை பாடல்கள் தான், ஆனால் "பூங்காற்று புதிரானது" பாடலுக்கு பதிலாக அதே இசையுடன் (interlude/prelude music), ஆனால் டியூனை மாற்றியிருப்பார். (Yeh zindagi gale lagale ) அதே பாடலை மீண்டும் "தம்பிக்கு எந்த ஊரு" படத்தில் பயன்படுத்தினார்.
Post a Comment