Sunday, July 08, 2007

ராகம் என்ன ராகம்?

கொஞ்சம் நீட்டி இழுத்துப் பாடினால் போதும்... ராகமா பாடறாங்கன்னு சொல்வதைப் பார்க்கலாம்! அப்பறம் இந்த பாட்டு, இந்த ராகம், அந்தப் பாட்டு, அந்த ராகம் ஏதேதோ சொல்லறாங்க! அனேக பேருக்கு இது புரியாத விளையாட்டு போல இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

ராகம் என்றால் என்ன? எப்படிக் கண்டு பிடிப்பது?

எளிமையா சொல்லணும்னா, ஸ,ரி,க,ம,ப,த,நி போன்ற ஸ்வரங்களை எந்த வரிசையில் ஒரு பாட்டின் இசை அமைப்பில் இருக்கிறதோ அதைப்பொறுத்து அதன் ராகம் அமைகிறது.

உதாரணத்திற்கு: ஸ ரி க ப நி ஸ என்றால் ஹம்சத்வனி,
ஸ ரி ம ப த ஸ என்றால் சுத்த சாவேரி
என்பதுபோல வருமென சொல்லலாம்!

தொடக்கத்தில் ஸ்வர வரிசைகளைக் கொண்டு இந்த ராகம் இதுவென்று சொல்வது கடினமானதுதான்.

எளிதான வழி ஏதும் இல்லையா?


எளிதான வழி, பல பாடல்களைக் கேட்பதுதான்... ஒரு ராகம் தெரிந்த பாடலை கேட்டுவிட்டு, பின்னர் அதே சாயலில் இன்னொரு பாடல் கேட்கும்போது, இந்தப் பாடலும் அந்த பாடலின் ராகம்தான் என கண்டு கொள்வதுதான்!!!

இப்படி கண்டுபிடிப்பதுவே ஷெர்லாக் ஹோம்ஸ் கதை மாதிரி ஒரு அலாதி இன்பமான விஷயம். கண்டுபிடித்தை பின் கேட்பது அதிலும் ஆனந்தம்!

ஒரு சில ராகங்களை அவ்வளவு எளிதாக கண்டு பிடிக்க இயலாதென்றாலும், ஆரம்ப நிலையில் இந்த வழி நிச்சயம் கை கொடுக்கும்!

உதாரணத்திற்கு ஒரு சில பாடல்களைப் பார்ப்போமே!

முதலில் மனதை இளக வைக்கும் ஷ்யாமா(சாமா) ராகத்தில்

வருவரோ வரம் தருவாரோ....?
மனது சஞ்சலிக்குதையே....
எப்போது வருவரோ, வரம் தருவாரோ...?


என்ற கோபலகிருஷ்ண பாரதி பாடல், பாம்பே ஜெயஸ்ரீ பாடிட:

Varuvaaro - Sama_A...


இந்த பாடலை கேட்டுவிட்டு, பின்னர், முற்றிலும் வேறுபட்ட இன்னொரு பாடலை வயலினில் வாசிக்க கேளுங்கள்:

முதலில் பல்லவி :

Maanasa Sancharare...


பின்னர் அதே பாடலின் முதல் சரணம் :
Maanasa Sancharare...


இரண்டு பாடல்களும் ஒரே சாயலில் இருப்பது தெரிகிறதா?
குறிப்பாக சரணம் கேட்கும்போது,

முதல் கேட்ட பாடலின் (வருவரோ வரம் தருவாரோ) சரணம் -

திருவாரூர், தென்புலியூர், திருச்சிற்றம்பல நாதர்
குருநாதராக வந்து குறை தீர்க்க கனவு கண்டேன்


நினைவுக்கு வருகிறதா?

இதைக் கண்டுபிடிக்க முடிந்தால் போதும், உங்களுக்கு இசை ஞானம் இருக்கிறது என்று உங்கள் சட்டைக் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்!

இரண்டாவதாக கேட்ட பாடல் சதாசிவ பிரம்மேந்திரர் இயற்றிய,

மானச சஞ்சரரே
ப்ரஹ்மணீ மானச சஞ்சரரே


இரண்டாவது பாடலும் ஷ்யாமா ராகம்தான் என்று கண்டு கொள்ள இது போதாதா!

---------------------------------------------------------------------------------------------------

அடுத்ததாக, வராளி ராகத்தில்

கா வா வா கந்தா வா வா
என்னை கா வா வேலவா


என்ற பாபநாசம் சிவன் பாடலை தென்னிசைத் திலகம் சுதா ரகுநாதன் பாடக் கேட்கவும்:



இந்த பாடலின் சாயலில் இன்னொரு பாடல்:

மாமவ மீனாக்ஷி ராஜ மாதங்கி

என்று தொடங்கும் முத்துசாமி தீக்ஷிதர் பாடல்:

பாடலின் ஒரு பகுதியை வயலினில் லால்குடி ஜெயராமன் அவர்கள் வாசிக்கக் கேட்கலாம்:

MAMAVAMEENAKSHI-VA...


இந்தப் பாடலும் அமைந்திருப்பது வராளி ராகம் தான். வயலினில் மாமவ மீனாக்ஷி பாடலை வாசிக்க கேட்டாலும், உதடுகள் 'கா வா வா, கந்தா வா' என்று முணுமுணுக்கும் அதிசயம் இங்கே நடக்கப் பார்க்கலாம்!

---------------------------------------------------------------------------------------------------
மூன்றாவதாக, இன்னொரு ராகத்தையும் பார்ப்போம்:
இப்போது த்வஜாவந்தி ராகம்.

எங்கு நான் செல்வேன் அய்யா
நீர் தள்ளினால்...
எங்கு நான் செல்வேன் அய்யா?


என்ற பெரியசாமி தூரன் அவர்களின் பாடலில் ஒரு பகுதியை பாம்பே ஜெயஸ்ரீ பாடக் கேட்கலாம்:

Engu Naan - Dwijaw...


ஹிந்துஸ்தானியில் இருந்து கர்நாடக சங்கீதத்திற்கு வந்த இந்த ராகம், தமிழ் பாடல் வரிகளில் எப்படி மின்னுகிறது பாருங்கள்!

இந்த பாடலின் அதே சாயலில் அமைந்த இன்னொரு பாடல்:

அகிலாண்டேஸ்வரி ரக்க்ஷமாம்
ஆகம சம்பரதாய நிபுனே ஸ்ரீ
அகிலாண்டேஸ்வரி ரக்க்ஷமாம்


என்ற முத்துசாமி தீக்ஷிதர் பாடல், எம்.எஸ் அவர்களின் தெய்வீகக் குரலில்:





இந்த பாடலும் த்வஜாவந்தி ராகம்தான்!

இது வரை மூன்று ராகங்களும், ஒவ்வொன்றிலும் இரண்டு பாடல்களும் பார்த்தோம். ஆனால், இதை மட்டுமே வைத்துக்கொண்டு இந்த ராகங்களின் மொத்த அம்சங்களையும் இவ்வளவுதான் என்று சொல்லிவிட முடியாது. இது போல ஒரு சில பாடல்களில் தொடங்கி, அந்த ராகங்களில் ஏனைய பாடல்களையும் கேட்டு வந்தால், ராகங்களில் இதர குணங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

23 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஜீவா...

அருமையான பதிவு.
முந்தைய பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன்.
கீரவாணி போல் உள்ளது என்று சொல்கிறீ்ர்களே...எப்படிக் கண்டு பிடிப்பது?...
தமிழ் திரை இசைப் பாடல்களில் ராகங்கள் எப்படி வருகின்றன என்பது பற்றி ஒரு தொடர் தாருங்கள் ஜீவா என்று கேட்டிருந்தேன்!

அதற்கு அழகாப் பிள்ளையார் சுழி போட்டு இருக்கீர் ஜீவா! நன்றி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எளிதான வழி ஏதும் இல்லையா?
எளிதான வழி, பல பாடல்களைக் கேட்பதுதான்... ஒரு ராகம் தெரிந்த பாடலை கேட்டுவிட்டு, பின்னர் அதே சாயலில் இன்னொரு பாடல் கேட்கும்போது, இந்தப் பாடலும் அந்த பாடலின் ராகம்தான்//

சூப்பர்.
என்னைப் போல ஞான் சூன்யங்களுக்கு எல்லாம் இது தான் சூப்பரான வழி!

சச்சின் அங்க அவ்வளவு ரன் அடிச்சாரே, இங்க இப்ப கலக்கீட்டாரு மா என்பது போல்,
இந்த ராகம் கண்டுபிடிப்பதும், பின்பு அதை ஒப்பு நோக்குவதும் அலாதி இன்பமான விஷயம்!

ராகம் பற்றி அவ்வளவா ஒண்ணும் தெரியாதவர்கள் முதலில் நம்மைக் கண்டு பயப்படுவார்கள், இவன் என்னென்னமோ பேசறானே என்று!:-)
அப்பறம் தான் அவர்களுக்கும் அதில் இருக்கும் விஷயம்/இன்பம் புரியும்! அட இவனுக்குக் கூட ராகம் எல்லாம் ஒண்ணும் தெரியலப்பா, சும்மா அதோட இதை கம்பேர் செய்து அடிச்சு விடறான்-னு ஒரு "தெளிவு" வந்திடும்! :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இதைக் கண்டுபிடிக்க முடிந்தால் போதும், உங்களுக்கு இசை ஞானம் இருக்கிறது என்று உங்கள் சட்டைக் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்!//

வருவாரோ, வரம் தருவாரோ....
மானச சஞ்சரரே...
இரண்டையும் கேட்டேன் ஜீவா

கூடவே, கன கன ருசிரா என்ற தியாகராஜ பஞ்சரத்னமும் ஞாபகம் வந்தது....அட நம்ம வராளி!

சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக்கவா? :-)

jeevagv said...

//தமிழ் திரை இசைப் பாடல்களில் ராகங்கள் எப்படி வருகின்றன என்பது பற்றி ஒரு தொடர் தாருங்கள் ஜீவா என்று கேட்டிருந்தேன்!
//
நிச்சயமாக, எழுதிடலாம் ரவி!

//அதற்கு அழகாப் பிள்ளையார் சுழி போட்டு இருக்கீர் ஜீவா!//
சரிதான் ரவி!


//ஒண்ணும் தெரியலப்பா, சும்மா அதோட இதை கம்பேர் செய்து அடிச்சு விடறான்-னு ஒரு "தெளிவு" வந்திடும்! :-))
//
அவ்வளவுதான், ரவி!

jeevagv said...

//கூடவே, கன கன ருசிரா என்ற தியாகராஜ பஞ்சரத்னமும் ஞாபகம் வந்தது....அட நம்ம வராளி!

சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக்கவா? :-) //

சரியா சொல்லிட்டீங்க!
இரண்டு பக்க காலரையும் தூக்கி விட்டுக்கலாம்!:-)

Vassan said...

நல்ல முயற்சி; வாழ்த்துகள் ஜீவா.

CVR said...

அட
நீங்க சொல்லுறா மாதிரி ஒரு பாட்டு கேட்டுட்டு இன்னொரு பாட்டு கேட்டா ஒரே மாதிரி தான் இருக்கு!!!
பாடல்கள் எல்லாமே மிக அருமையா இருக்கு!!ராகங்களை கண்டு பிடிக்க வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தாலும் பாம்பே ஜெயஸ்ரீ,சுதா ரகுனாதன்,எம்.எஸ்,வயலின் இசை என இசை வெள்ளத்தில் சிறிது நேரத்திலேயே மயங்கி விட்டேன்!! :-)
வாழ்த்துக்கள் ஜீவா!
மேலும் இது போல பதிவிடுங்கள்! :-)

இலவசக்கொத்தனார் said...

நல்ல ஆரம்பம். வாழ்த்துக்கள் ஜீவா.

வடுவூர் குமார் said...

ஒரு பாடலை "இந்த " ராகம் என்று கண்டுபிடித்த பிறகு தான் அனுபவிக்க முடியுமா?
என்னவோ சினிமா பாடல்களை அனுபவிக்க முடிந்த அளவுக்கு இந்த சங்கீதத்தை என்னால் அனுபவிக்க தெரியவில்லை,ஆனால் ஒரே மெட்டில் அமைந்த சினிமா பாடல்களை இனம் காண முடிகிறது.
எனக்கு தெரியும் இதை வைத்துக்கொண்டு "காலரை" தூக்கிவிட முடியாது என்று. :-))
ஸ ரி க ப நி ஸ என்றால் ஹம்சத்வனி,
இது புரிந்தது. பார்ப்போம் இன்னும் என்ன புரிகிறது என்று.

jeevagv said...

வருகைக்கு நன்றி வாசன்!

jeevagv said...

//ராகங்களை கண்டு பிடிக்க வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தாலும் பாம்பே ஜெயஸ்ரீ,சுதா ரகுனாதன்,எம்.எஸ்,வயலின் இசை என இசை வெள்ளத்தில் சிறிது நேரத்திலேயே மயங்கி விட்டேன்!! :-)
//
அது தானே இழுக்க வைக்கும் இசையின் மாயம்!

jeevagv said...

//நல்ல ஆரம்பம். வாழ்த்துக்கள் ஜீவா//
நன்றி இலவசக்கொத்தனார்!

jeevagv said...

வடுவூர் குமார்:

//ஒரு பாடலை "இந்த " ராகம் என்று கண்டுபிடித்த பிறகு தான் அனுபவிக்க முடியுமா?
//
நிச்சயமாக இல்லை.

திரைப்பாடல்களைப்போல் அல்லாமல், கர்நாடக சங்கீதப் பாடல்களில், ராக ஆலாபனைகளும், கல்பனா ஸ்வரங்களும் நிறைந்து இருக்கும்.

திரைப்பாடல் ஒரு பலாச்சுளை என்றால், முழுநீள கர்நாடக சங்கீதப் பாடல் ஒரு பலாப்பழம்.

பலாப்பழத்தின் சுளைகளை தனியாக பிரித்தெடுப்பது போலத்தான் இவற்றை புரிந்து கொள்வதும்...!:-)

முழுவதையும் கேட்டுவிட்டு அடுத்த மறுமொழி பகருங்கள் நண்பரே!

Anonymous said...

'வருவாரோ வரம் தருவாரோ' பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல், கேட்பதற்கு நன்றாக இருந்தது!
-வருண்

தி. ரா. ச.(T.R.C.) said...

ஜீவா நீங்கள் சொன்ன ராகங்களில் மாமவ மீனாக்ஷி, அன்னபூர்னே விசலாக்ஷி மற்றும் சேதஸ்ரீ பாலகிருஷ்னம் என்ற தீகஷதர் பாடல்களில் ராக பாவம் மிகுதி.ராகம் கண்டுபிடிக்க உதவும்

ஜீவி said...

கீர்த்தனைகள் எழுதுவதற்குத்தான் ராகம் தெரிந்து இருக்க
வேண்டுமே தவிர, ரசிப்பதற்கு இன்ன ராகம் என்று தெரிந்திருத்தல் தேவையில்லை என்பது என் கட்சி.
வெளியுலகத்தொடர்புகளிலிருந்து உங்களைத் துண்டித்துக்
கொண்டு கண்ணை மூடிகொண்டு பாடலைக் கேளுங்கள்:
'காற்றிலினே வரும் அந்த கீதம்' உங்களை எங்கேயோ
இழுத்துக்கொண்டு போவது போலிருப்பது நிச்சயம்.
;இன்ன ராகத்தில் இந்தப் பாட்டு' என்று இந்த நேரத்தில்
தெரியாமலிருப்பது முக்கியமாகப் படாது. என்னளவுக்கு மீறி
என்னிலை தாண்டி இதற்கும் மேல் ரசிப்பதற்கு 'ராகம்'
தெரிந்திருந்தல் தேவையோ என்னவோ, அறியேன்.
இருந்தும், இலக்கியத்திற்கு இலக்கணம் வகுப்பது போல்
'ராகம்' கண்டுபிடிப்பதும், 'ராகம்' தெரிந்து ரசிப்பதமான
உங்கள் முயற்சிகள், மிகவும் பாராட்டப்படவேண்டியவை
மட்டுமல்ல, மனம் வெதும்பி இருக்கும் இந்த நேரத்தில் இந்தப் பதிவும், அதற்கான பின்னூட்டங்களும்
தமிழ்மணத்தின் தரத்தைக் கூட்டவே செய்கிறது என்பது
நிச்சயம்.

jeevagv said...

தி.ரா.ச சார்,
தங்கள் மறுமொழிக்கு நன்றி.
'சேதஸ்ரீ பாலகிருஷ்ணம்' பாடலை இது வரை கேட்டதில்லை. கேட்டுப் பார்க்கணும்!
தீக்ஷிதர் கிருதிகள், விஸ்தாரமாக ராக பாவத்தை வெளிச்சமிட ஏதுவாக இருப்பதால் இன்றளவும் அதிகமாக கச்சேரிகளில் பாடப்பட்டு வருகின்றன அல்லவா!

jeevagv said...

//ரசிப்பதற்கு இன்ன ராகம் என்று தெரிந்திருத்தல் தேவையில்லை என்பது என் கட்சி.
//
தெரிந்திருந்தால் மேலும் அதிகமாக ரசிக்கலாமே!
இது சாதாரண பாடல்களுக்கு பொருந்தாவிட்டாலும், கர்நாடக சங்கீத கச்சேரிகளில், ராக பாவத்தை வெளிப்படுத்தும் ஸ்வரப் பிரயோகங்களை ரசிப்பதற்கு ராகத்தைப் பற்றிய அறிவு உதவியாய் இருக்கும். சாகித்யத்தை (பாடல் வரிகளை) தாண்டி, கீர்த்தனையின் அழகுக்கு மெருகூட்டும் இசையை ரசிக்க உதவிடும்.

தங்கள் பாராட்டுகளுக்கு நன்றிகள் பலப்பல!

jeevagv said...
This comment has been removed by the author.
Avial said...

great post ..Good work .

Avial said...

Shyama la oru famous ana movie song..
"Brindavanum Nanda Kumaranum " Misiamma .

Ippadi corresponding cinema songayum add pannalame..

jeevagv said...

மறுமொழிக்கு நன்றி மதுசூதனன்!

//Ippadi corresponding cinema songayum add pannalame..//

திரைப்பாடல்களின் ராகங்களையும் சேர்ப்பது நல்ல உத்திதான் என்றாலும், கவனத்தை சிதறடிப்பதாகவும் இருக்கிறது!

Blogeswari said...

ரொம்ப informative. ஏ ஆர் ரகுமான் இசையமைத்த World space Satellite radio jingle எந்த ராகம் என்று தெரியுமா? பல பேரைக் கேட்டு விட்டேன் யாருக்குமே தெரியவில்லை.

http://esnips.com/doc/0f567f14-a138-4749-8369-f272a0dd77e0/World-space
அந்த விளம்பர பாடலை இங்கு கேட்கலாம்

நன்றி

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP