Sunday, June 22, 2008

தீராத விளையாட்டுப் பிள்ளை

மகாகவி பாரதியின் இந்தப் பாடலை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

இந்தப் பாடல் இராகமாலிகையில் அமைந்துள்ளது. இராகமாலிகை என்றால், இராகங்களின் மாலை - அதாவது ஒன்றுக்கும் மேற்பட்ட இராகங்களால் கோர்க்கப்பட்ட கீதமாலை! இங்கே, சிந்துபைரவி, கமாஸ், சண்முகப்பிரியா, மாண்டு ஆகிய இராகங்களால் அமைந்துள்ளது.

இந்தக் கண்ணன் பாடலை எத்தனையோ முறை எத்தனையோ பேர் பாடிக் கேட்டிருப்போம். இந்த எளிய பாடலை, ஒரு எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டு, வெவ்வேறு இசைக்கருவிகளில் வாசிக்கக் கேட்போமா?

முதலில் நமது பழம்பெரும் இசைக்கருவியான வீணையில், முதுபெரும் இசைக்கலைஞர் வீணை எஸ்.பாலச்சந்தர் அவர்கள் வாசித்திடக் கேட்கலாமா? (இந்தப் பாடலை பதிவு செய்தது 1965இல் - HMV Shellac LP கிராமபோன் இசைத்தட்டில்)

வீணை


தொடர்ந்து, புல்லாங்குழலில் நம்மை குழைத்தெடுப்பார், Dr.S.ரமணி அவர்கள்:

புல்லாங்குழல்


அடுத்து, திரு.T.N.கிருஷ்ணன் வாசிக்க வயலின் இசையில் நனையலாமா?

வயலின்


தொடர்ந்து, மாண்டலின் U.ஸ்ரீநிவாஸ் வாசித்துக் கேட்கலாமா?
மாண்டலின்


அடுத்து, ஷேக் சின்ன மௌலானா சாஹிப் அவர்கள் நாயன வாசிப்பில் கேட்கலாம் இந்த சுட்டியில்.

இறுதியாக, பிரசன்னா அவர்களின் கிடார் வாசிப்பிலும் கேட்டு மகிழலாம். சுட்டி இங்கே.

பல இசைக்கருவிகளில் கேட்டாயிற்று, பாடியும் கேட்டுவிடலாமா, திருமதி. நித்யஸ்ரீ மஹாதேவன் பாடிட:
வாய்ப்பாட்டு


இன்னும் எப்படி எல்லாம் இந்த இசை இன்பத்தினை பருகலாம்?
ம்ம்ம்ம்ம், நடனத்திலே! - ராஜஸ்ரீ கிருஷ்ணன் அவர்கள் ஆடும் ப(ர)தத்தில் தான் எத்தனை சக்தி! - பிரம்மிக்க வைக்கிறது! "கண்ணன் - விளையாட்டுப்பிள்ளை" என்ற தலைப்பிட்டு கவி எழுதிய பாரதி இந்த பரதத்தைப் பார்த்தால் நிச்சயம் பெருமிதம் அடைவான். குறிப்பாக "வன்னப்புதுச் சேலை தனிலே..." என்ற இடத்தில் பார்க்க வேண்டும்!ஆகா, நமது இசையில்தான் எத்தனை பரிணாமங்கள், எத்தனை உயர் பாரம்பரியங்கள்!

வாழ்க நமது இசை, வளர்க நமது இசை!

Sunday, June 01, 2008

ஆனந்த விகடனில் இசை இன்பம் பதிவு!

ஆனந்த விகடனில் இசை இன்பம் பதிவினை அறிமுகப்படுத்தியதோடு, முத்தாய்ப்பாய் இரண்டொரு வரிகளிலும் சொல்லி இருக்கிறார்கள், விகடனுக்கு நன்றி!:

"இசைப் பிரியர்களுக்கு விருந்து படைத்திருக்கிறது இந்த வலைப்பூ. இசை ரசிகர்கள் சேர்ந்து உருவாக்கியிருக்கும் இந்த வலைப்பூ, கர்னாடக சங்கீத ராகங்கள் குறித்து எளிமையான அறிமுகம் தருகிறது. கூடவே,நாம் கேட்டு ரசித்த சினிமா பாடல்களில் உள்ள ராகம் பற்றிய சுவாரஸ்யமான குறிப்போடு, அந்தப் பாடல்களை மீண்டும் கேட்கவும் முடிகிறது!"

இந்தச் செய்தினை முதன்முதலில் இவ்வலைப்பூவிற்கு பின்னூட்டமாக தந்த திரு.ஜீவி அவர்களுக்கு நன்றி. அடுத்து விகடன் தளத்தில் இருந்த இந்தச் செய்தி வந்த பக்கத்தினை படமாகத் தருவித்திருந்தார் கே.ஆர்.எஸ். இதோ அந்தப் படம் உங்களுக்காக:(படத்தை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்)

இசை இன்பம் - இந்த வலைப்பதிவினை தொடங்கிய கே.ஆர்.எஸ் அவர்களுக்கும், உறுதுணையாய் பல இசை இடுகைகளைத் தந்துள்ள இதர வலைப்பதிவர்களான - தி.ரா.ச, சி.வி.ஆர், சுதா பிரசன்னா ஆகியோருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் உரித்தாகுக.

அதுமட்டுமல்லாமல், அவ்வப்போது பல இடுகைகளில் தங்கள் கருத்துக்களையும், திருத்தங்களையும், மேலதிக செய்திகளையும் மறுமொழிகளாகத் தந்து வழிநடத்திய திரு.சிமுலேஷன், திரு.டுபுக்கு, திரு.சுப்புரத்தினம், திரு.ஓகை மற்றும் ஏனைய பலருக்கும் நன்றிகள். எல்லாவற்றுக்கும் மேலாக, தொடர்ந்து இந்த வலைப்பதிவிற்கு வந்து படித்து வரும் அனைத்து வாசகர்களுக்கும் நன்றிகள்.

இசை என்பது ஒரு பெருங்கடல். அதைப்பற்றி என்றென்றைக்கும் எழுதிக் கொண்டே இருக்கலாம். எழுத எத்தனையோ தலைப்புகள் உள்ளன. எனக்குத் தோன்றியவற்றில் சில:
* தமிழிசை : வரலாறு, பண்கள் மற்றும் அவற்றிற்கும் ராகத்திற்கும் உள்ள தொடர்பு, பண்டைய தமிழிலக்கியங்களில் இசைக் குறிப்புகள்
* தமிழிசை வல்லுனர்கள் : சமயக் குரவர் நால்வர், தமிழ் மூவர், ஆழ்வார்கள், ஏன் இன்றைய திரை இசை அமைப்பாளர்கள் வரையிலும்.
* மரபிசை : பலநூறு இராகம், பல்வேறு தாளம், பலரச பாவம்.
தியாகராஜரின் மின்னும் ராக ரத்தினங்கள் பலப்பல கொட்டிக்கிடக்கு. இன்னும் எத்தனை எத்தனை கவிகள், எத்தனை எத்தனை உன்னத படைப்புகள்!
* இசைக்கருவிகள்
* இசை நாடகம், இசை நாட்டியம், வில்லுப்பாட்டு, ஹரிகதை காலட்சேபம் இன்னும் பல.
* பல வகைப் பாடல்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள்
* மேலை நாட்டிசைத் தாக்கங்கள், தொகுப்பிசை
* சுவையான இசை நிகழ்வுகள்

வாசகர் உங்களுக்குத் தோன்றுபவற்றையும் சீட்டில் எழுதிச் சேர்த்து விடுங்கள்!

வாசகராக மட்டுமே நீங்கள் இருக்க வேண்டியதும் இல்லை.
நீங்களும் இசை இன்பத்திலோ உங்கள் பதிவிலோ எழுதலாம். இதற்கு ஏதோ பெரிய இசை அறிவெல்லாம் தேவையே இல்லை. சாதாரண இசை ரசனை போதும். எனக்குப் பிடித்த இசை, ஏன் பிடிக்குது என எழுதிப்போட எவ்வளவு நேரம் பிடிக்கும்? என்ன, இசைக்க இறங்கிட்டீங்களா?

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP